Sunday, August 18, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 2

இயற்கையிலிருந்து தேவையான ஆற்றலை வெளிக்கொணரும் மனிதனின் திறன் அதிகரிக்கும்தோறும், இயற்கையுடனான மனிதனின் போராட்டமும் அதிகரிக்கிறது. அந்த போராட்டங்களின் தற்போதைய நிலவரங்களில் சிலவற்றை இங்கு காண்போம்

உலக மக்கள் தொகை கடந்த நூறு ஆண்டுகளில் 2 பில்லியனிலிருந்து 7 பில்லியனாக உயர்ந்துள்ளது.

பூமியில் உள்ள நீரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவு நீரே நம்மாலும் பிற நிலம் வாழ் உயிரினங்களாலும் பயன் படுத்த தக்கதாக உள்ளது. அந்த நீரை பயன்படுத்தும் பயனாளிகளான எண்ணற்ற உயிரினங்களில் ஒரு இனமான மனித இனம் கட்டற்று பெருகி வருகிறது. இதன் மூலம் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுமே நீர் பற்றாக்குறை என்னும் மிகப்பெரிய பிரசிசினையை எதிர்நோக்கியிருக்கின்றன.

இரசாயனங்களை மூலப்பொருட்களாக கொண்டு செய்யும் விவசாயத்தினால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிவதன் மூலம் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த கட்டமாக மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் மூலம் செய்யப்படும் விவசாயத்தால் தாவரங்களை ஒட்டி வாழும் உயிரினங்களின் சமன் நிலையை குலைத்து அதன் மூலம் பூமியில் உயிரினங்களின் சமன் நிலையை குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இறைச்சிக்கோழிகளுக்கு ஹார்மோன் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும்) மற்றும் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, 50 நாட்களுக்குள் சிறு குஞ்சு, முழு கோழியாக மாற்றப்பட்டு, அந்த ஹார்மோன்களும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் உணவுடன் சேர்ந்து நமது உணவுப்பையை அடைகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழி குஞ்சுகள் முழு வளர்ச்சியை அடைய சுமார் 6 முதல் 8 மாதங்கள்வரை ஆகிறது.

பசுக்களுக்கு ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்பட்டு, பால் கறவை அதிகரிக்கப்படுகிறது. ஹார்மோன்கள் கலந்த அந்த பால் உணவுகளை உண்டே நமது குழந்தைகள் வளர்கின்றன.

எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி (GDP) ஒவ்வொரு வருஷமும் முடிந்த அளவுக்கு கூட்ட முயலுகின்றன. உற்பத்தி கூட வேண்டுமானால் நுகர்வு கூட வேண்டும். எனவே எல்லா உலக நாடுகளும், விதிவிலக்கில்லாமல், தங்கள் நாட்டு உற்பத்தியை நுகருமாறு எல்லா மக்களையும் தூண்டுகின்றன. உற்பத்தி பெருக வேண்டுமானால், இயற்கையை ஆற்றலாக மாற்ற வேண்டும். இயற்கை அதீத அளவில் ஆற்றலாக மாற்றப்படும்பொழுது, பூமியின் இயற்கை சமன் நிலை குலைக்கப்படுகிறது.

ஆற்றலுக்காக எல்லா நாடுகளும், பிற நாடுகளின் இயற்கை வளங்களையோ அல்லது தம் சொந்த நாட்டின் இயற்கை வளங்களையோ, மிக அதீத அளவில் சுரண்டுவதுடன் அந்த சூழலில் வாழும் மக்களையும் ஈவுஇரக்கமின்றி சுரண்டுகின்றன. இந்த சுரண்டலின் மூலம் சமூகங்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி சமூக மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. ஒருவேளை இந்த மோதல்கள் மனித இனத்தின் பெரும்பகுதியை அழித்து, உலகில் மனித இனத்தின் சமன் நிலையை கொண்டு வருவதற்கான எதிர்மறை ஆயுதமாகவும் இருக்கலாம்.

தற்போது ஆற்றலுக்காக சுரண்டும் நாடுகள், இன்னும் மிக குறுகிய காலத்தில் நீருக்காகவும் சுரண்ட தயாராகி வருகின்றன. உதாரணம் மக்கள் குழுக்களுக்கிடையேயான நதி நீர் பகிர்வு பிரச்சினைகள் - காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற ஒரே நாட்டுக்குள் உள்ள மக்களுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள், பிரம்மபுத்திரா போன்ற நதிகளுக்காக இரு நாடுகளுக்கிடையேயான நீர் பிரச்சினைகள், நைல் நதி போன்ற நதிகளுக்காக பல நாடுகளுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள்.

மேலே கூறப்பட்டவை நாம் அனைவரும் அறிந்தவற்றில் மிகச்சில உதாரணங்களே. இவை இந்த உலகின் சமன்நிலையை அதீத வேகத்தில் பாதித்து கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியாவிடில், மிக தெளிவாக தெரியும் உண்மையான, நாம் அனைவரும் ஒரு நாள் மரணிப்போம், என்பதையும் உணர முடியதவர்களாகவே இருக்க முடியும்.

நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த உலகமே நுகர்வுக்கு அடிமையாக இருக்கும்போது, தனிப்பட்ட நான் அல்லது தனிப்பட்ட ஒரு சிலரால் என்ன செய்ய முடியும்? சூழலியல் வரலாற்றாசிரியர்களின் பார்வையில், கடந்த சில பத்தாண்டுகளாக, இயற்கையை சுரண்டுதலின் வேகம் பலவிதங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணம் தனிப்பட்ட சிலரின் கூட்டுமுயற்சியும், இயற்கையை சுரண்டுவதால் பாதிக்கப்படும் மக்களின் போரட்டங்களுமே. ஒரு தனிமனிதனாக நம்மால் சூழல் அழிவை முழுமையாக தடுக்க எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் நுகர்வின் கோரப்பசி உலகின் வாழ்க்கை சூழலை அழிப்பதை நம்மால் உணர முடிந்தால், அத்தகைய நுகர்வுக்கு எதிராக நம்மால் முடிந்தவற்றை, நம்மை அறியாமலே நாம் செய்து கொண்டிருப்போம். அதன் முதல் கட்டமாக நமது நுகர்வின் தன்மையை யாரும் கோராமலே நாம் மாற்றியமைத்திருப்போம். ஆம், சமூகம் என்பது அதனளவில் ஒரு அசைக்க முடியாத தனித்த இருப்பு அல்ல. சமூகம் நம்மைப்போன்ற பல 'நான்' களின் தொகுப்பு. எனவே 'நான்' மாறினால் சமூகமும் மாறி விடுகிறது.  

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருத்து இரசாயன உரங்கள் விவசாயத்தின் பயன்பாட்டில் பெருமளவு வந்தன. அதன் பின்னரே மனிதர்களுக்கு கிருமிகள் மூலம் பரவாத, புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வர தொடங்கின. தற்போதைய நமது நுகர்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, இது போன்ற நோய்களுக்கான மருந்துகளாகவே இருக்கிறது.

நம் நுகர்வின் அழிக்கும் வீரியத்தை உணர வேண்டுமானால், நாம் நுகரும் ஒவ்வொரு சாதாரண பொருட்களும் இயற்கையின் சக்தியை எந்த அளவுக்கு கோருகின்றன என்பதையும் அதன் மூலம் இயற்கையின் சமன்பாடு எவ்வாறு குலைகிறது என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். இயற்கையின் சக்தி அதீத அளவில், இயற்கையின் ஒரு பாகமான மனிதனால் மட்டும் நுகரப்படும்போது, இயற்கையின் மற்ற பாகங்களான பிற உயிரினங்களின் சமன் நிலை இரண்டு வழிகளில் குலைகிறது. முதலாவது, நாம் நுகரும்போது இருக்கும் ஏதோ ஒன்று அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு அதன் மறு உருவாக்கத்துடன் சமநிலையை இழக்கும்போது, நம் நுகர்வு இயற்கையின் சமன் நிலையை குலைக்கிறது. இரண்டாவது, எந்த ஒன்று நுகரப்பட்டலும் அந்த நுகர்வின் பக்கவிளைவாக, நுகர்பொருளின் கழிவும் வெளியிடப்படுகிறது. அந்த நுகர்பொருளின் கழிவை நுகரும் இன்னொரு உயிரினம் இருந்தால் மட்டுமே கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கையின் சமன் நிலை பேணப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த கழிவுகள் உலகம் முழுவதும் பரவி, அவற்றை ஒவ்வாமையக கொண்டுள்ள உயிரினங்களை தொடர்ந்து அழிக்கும். அல்லது அந்த கழிவுகளில் வாழும் உயிரினங்கள் மிக அதிகமாக உருவாகி இயற்கையின் சமன் நிலையை குலைக்கலாம்.

 நம் நுகர்வு, எத்தகைய கழிவுகளை இந்த பூமியின் எல்லா இடங்களிலும் நிரப்புகிறது என்பதை உணரும்போது, நம் நுகர்வின் வீரியத்திதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியலாம். வளர்ந்த நாடுகள் தங்கள் கழிவுகளை பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றன. உதாரணம், இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் வழியாக வந்த வெளிநாட்டு கழிவுகள் - மிகச்சில தருணங்களில் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவுகள் அவற்றின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பல தருணங்களில் கண்டுபிடிக்கப்படாமல் இங்கு கொட்டப்படுகின்றன. மாநில எல்லைகளை தாண்டி இறைச்சிக்கழிவுகளை சாலையோரம் எறிந்து செல்லும் பல தருணங்கள் பிராந்திய செய்தித்தாள்களில் பல முறை வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. உச்சமாக, நம் நுகர்வுக்கு தேவையான சக்திக்காக அணுவை பிளந்து அதன் சக்தியை எடுத்துவிட்டு, வரும் கழிவுகளின் தீவிரத்தன்மையை அறிந்திருந்த போதிலும், அந்த கழிவுகளை  என்ன செய்வது என தெரியாத போதிலும், மீண்டும் மீண்டும் அணுவிலிருந்து பெறப்பட்ட சக்தியையும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நுகர்ந்து கொண்டிருக்கிறோம்.

[மேலும்]


தொடர்புடைய பதிவுகள்; நுகர்வெனும் பெரும்பசி - 1
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism& Consumerism
blog.change@gmail.com

Thursday, August 15, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 1

'நுகர்வெனும் பெரும் பசி' - இது ராமச்சந்திர குஹா என்னும் சூழலியலாளர் (Environmentalist) மற்றும் சமூகவியலாளரின் (Sociologist) சூழலியல் இயக்கங்களின் அறிமுகம் குறித்த நூலின், தமிழ் பதிப்பின் பெயர். அந்த பெயரை நன்றியுடன் இங்கு இரவல் வாங்கிக்கொள்கிறேன். மனித இனம், இன்னமும் வேண்டும் அதற்கு மேலும் வேண்டும் என நிறைவடையாது நுகர்வதை காணும்போது, ஆம் இது அடங்காத பெரும்பசிதான் என்ற எண்ணம் வருவதில் வியப்பில்லைதான். அதிலும் தங்கள் நுகர்வை குறித்த எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமல், தாங்கள் நுகர்ந்து அழிப்பது, தங்களின் வாழ்வாதாரத்தைதான், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைதான், மனித இனம் தன்னுள் முழுமை அடைவதை நோக்கி செல்லும் பரிணாம வளர்ச்சி என்னும் இயக்கத்தைதான் என்ற உணர்வுகள் சற்றும் இல்லாமல் நுகர்வு ஒன்றே தங்கள் பிறப்பின் பயன், வாழ்க்கையின் அடிப்படை எனக்கொண்ட பெரும் மக்கள் திரளை காணும்போது, ஒரு மனிதப்பிறவியாக துக்கம் மேலிடுகிறது.

நுகர்வு குறித்த எனது எளிய பார்வைகளை, நீண்ட ஆராய்சிகளை பின்புலமாக கொண்டிருக்காவிட்டாலும், எனக்கு வாய்த்த இந்த ஊடகத்தின் சிறு பகுதி முன் திறந்து வைக்கிறேன். இந்த பார்வைகள், அதைக்காணும் ஒருவரது மனதிலாவது ஒரு விவாதத்தை தொடங்கி வைக்குமானால், அவை இங்கு பதிந்ததன் நோக்கத்தை அடைந்து விடும்.

இங்கு முன் வைக்கப்படுபவை பெரும் நுகர்வுக்கு காரணமான எதோ சில காரணிகளை குறித்தவை அல்ல. ஆனால் பெரும் நுகர்வுக்கு அடிப்படையாக இருக்கும் நம் ஒவ்வொருவரின் போதாமை உணர்வை குறிப்பவை, நம் இயலாமை உணர்வை குறிப்பவை, நம் தூண்டுதல் உணர்வை குறிப்பவை. சுருங்கச் சொன்னால், எளியவர்கள் என தம்மை கருதிக்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும், நாம் அறியாமலே அல்லது அறிந்தும் அறியாமலே, வாழும் சூழலை நுகர்வின் மூலம் எவ்வாறு அழித்தொழிக்கிறோம் என பார்வையை நம்மீதே வைப்பது. ஆம் இந்த சுயநோக்கு நமக்கு ஒவ்வாததாக இருக்கலாம் - எனெனில் எவருக்கும் தாம் செய்வது சரியல்ல என அறிவது உவப்பானதாக இல்லாமல் போகலாம். அதற்காகவே தாம் செய்யும் தவறுகள் மேல் தங்களுடைய கூரிய பார்வை விழாமல் பார்வையை பிறர் பக்கம், நம்மில் பெரும்பாலானவர்களும், செலுத்த முயலுகிறோம். இது நம் பார்வையை பிறரிடமிருந்து நம்மேல் திருப்பி செலுத்துவதற்கான ஒரு சிறு முயற்சி.

நுகர்வு - இது எந்த உயிரினத்துக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை. இந்த உலகத்தில் முழுமுதல் இருப்பைத்தவிர வேறு எந்த ஒன்றும் தம்முள் முழுமையானவை அல்ல. இங்கு எந்த ஒன்றும் தன் இருப்பை உறுதி செய்ய மற்றொன்றை சார்ந்திருக்க வேண்டியது கட்டாயமானது. இந்த சார்ந்திருத்தலே அடிப்படையில் நுகர்வு எனப்படுவது. பூமியும் அதன் இருப்பை உறுதி செய்ய சூரியனை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதாவது பூமி இடைவிடாது சூரியனின் சக்தியை நுகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரினமும், மனிதர்கள் உட்பட, பிற உயிரினங்களை சார்ந்தே உயிர் வாழ முடியும். அடிப்படையில் உணவுதான் உயிர் வாழ்வதற்கான இன்றியமையாத தேவை. மிக மிக சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது பிற உயிரினங்களோ அல்லது பிற உயிரினங்களால் உருவாக்க பட்டவையோதான். அதாவது எல்லா உயிரினங்களும், தமது இருப்பை உறுதி செய்ய, பிற உயிரினங்களை தொடர்ச்சியாக நுகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக, இந்த பூமியில் உயிரினங்கள் நிலைத்திருக்க எல்லா உயிரினங்களின் சமநிலை பேணப்பட்டாக வேண்டும்.ஏனெனில் ஒரு உயிரினம் அழிந்தாலும் அதை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்துவிடும். மொத்த இருப்பு என்பது, (நாம் விரும்பினால் கடவுள் என்னும் வார்த்தையால் அதை குறிக்கலாம்) நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பெரும் நுண்ணறிவு உடையது. அது உயிரினங்களினிடையே, தனது நுண்ணறிவின் மூலம், ஒரு சமநிலையை பேணுகிறது. அந்த சமநிலையை அது எப்போதுமே பேணும். ஆம் மொத்த இருப்பு அல்லது கடவுள் சமநிலையை எப்போதுமே பேணும் - அந்த சமநிலையை பேண, தேவை ஏற்பட்டால், மனித இனத்தை அல்லது வேறு சிலவற்றை, முழுவதும் அல்லது தேவைப்படும் அளவுக்கு அழித்தாவது!

மனிதர்களை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் தங்கள் உணவுக்காகவும் இருத்தலின் அடிப்படை பாதுகாப்பிற்காகவும் மட்டுமே நுகர்தலில் ஈடுபடுகின்றன. எனவே மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களால், பூமியின் உயிர் இயக்கங்களில் பெரும்பாலும் சமன் நிலை குலைவதில்லை. மனிதர்களும், சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, உலக வாழ்வின் சமநிலையை குலைப்பதற்கான சக்தியை பெற்றிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, சீரான உந்து வேகத்தில் மனிதன் இயற்கை ஆற்றலை கையாளும் திறனை பெற்றுக்கொண்டுள்ளான், மேலும் பெற்றுக்கொண்டிருக்கிறான். சற்று மாற்றி கூறினால், சீரான உந்து வேகத்தில் (accelaration) இயற்கையை நுகரும் திறனை அதிகரித்து வருகிறான், அதிகமாக நுகர்ந்து வருகிறான்.

நாம் தனித்திறமைகள் எதுவும் இல்லாத சாதாரணர்களாக இருக்கும்போது அனைவரையும் போலவே நாமும் சாதாரணர்களாக இருந்து விடலாம். ஆனால் நாம் தனித்திறமைகளை பெற்றிருக்கும்போது, அந்த திறமையை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை பெற்றிருக்க வேண்டும். நம் உளவியல் சமநிலை குலைந்தால், நாம் பெற்றிருக்கும் தனித்திறமையே நம்மை அழிவுக்கு அழைத்து செல்லும். ஒரு உயிரினமாக நாம் தற்போது இயற்கை ஆற்றல்களை கையாள்வதற்கான திறனை சீரான வேகத்தில் பெற்று வருகிறோம். ஆனால் அதற்கு ஈடுகொடுக்கும் வேகத்தில், அந்த திறனை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை நாம பெற்றிருக்கவில்லை, பெற முயற்சிக்கவுமில்லை, பெற வேண்டும் என்று தெரியவுமில்லை. ஆக, நாம் பெற்ற இயற்கையை கையாளும் திறனே, நமது உளவியல் சமநிலையின்மையால், நம்மை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது. அந்த அழிவை நம்மால் உணர முடிந்நால், ஒருவேளை நம்மையும் பிற உயிரினங்களையும் அழிவின் விளிம்பிலிருந்து நம்மால் பாதுகாக்க முடியலாம். நாம் மிக வேகமாக அடைந்து வரும் அறிவு என்னும் திறனை நம்மால் கையாள முடியவில்லை என்றால் நாம் அறிவை அடையும் அதே வேகத்தில் அழிவையும் அடைந்து கொண்டிருப்போம். நாம் அழிந்தாலும், இயற்கை அல்லது உலகு அதன் சமநிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் - அவ்வறு நாம் அழிவது அதன் சமன் நிலையை பேணுவதற்காகவே இருக்கும்.

இங்கு அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க முடியலாம் என்பது, தற்போது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக தோன்றலாம். ஆனால் தற்போதைய உயிரினங்களின் நிலையை சற்று ஆராய்ந்தால், நாம் மிகவும் பாதுகாப்பான உலகில் வாழ்கிறோம் என்ற மாயையிலிருந்து வெளிவர உதவலாம்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்; தேவைக்கேற்றநுகர்வு: 

                                          Commercialismand Consumerism          
blog.change@gmail.com

Monday, July 22, 2013

கல்வி

மனிதன் தன் வாழ்க்கையை வாழ்வின் முழுவீரியத்துடன் வாழ்வதற்கான அறிவையும், அறிதலின் முறைகளையும் வழங்கும் இயக்கமே கல்வி என்பது. அறிவு ஒரு பெரும் இயக்கம். கல்வி அதன் ஒரு சிறு துளி - அறிவியக்கத்தின் வழிகளை குறித்த அறிதல். அறிவு தனிமனிதனால் அடையப்பட்டது இல்லை. அது ஒட்டு மொத்த மனித இனத்தால் அடையப்பட்டது. தனிமனிதனால் அந்த மனித அறிவை சிறிதளவு விரித்தெடுக்க மட்டுமே முடியும். எனவே அறிவு தனி மனிதனுக்கு சொந்தமானதாக இருக்க முடியாது - அது தனிமனிதர்களை சார்ந்து இருந்தாலும்! மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியே அறிவு. ஆம், நாம் அடைந்த அறிவுக்கு, அது எந்த தளத்தில் இருந்தாலும், ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் கடமைபட்டிருக்கிறோம்.

நாம் நமது அறிவு எனக்கூறி கொள்வது இதுவரை ஒட்டுமொத்த மனித இனத்தால் அடையப்பெற்ற பிரபஞ்ச இயக்கத்தின் சிறு துளியை குறித்த அறிவின் மிகமிக சிறிய ஒரு பாகத்தை மட்டுமே. நாம் கற்றவை என்பது நமக்குமுன் மனித இனம் அடைந்த அறிவில் ஆவணப்படுத்தப்பட்டவற்றில் சிலவற்றை மட்டுமே. ஆவணப்படுத்தப்படாத அறிவு அல்லது பிறருக்கு கற்றுக்கொடுக்காமல்  (ஒருவேளை கற்றுக்கொடுக்க தகுந்த மனித மனதை கண்டடைய முடியாத காரணத்தால்) அழிந்த அறிவு, இந்த உலகில் வாழும் மனித இனத்தின் தற்போதைய ஒட்டுமொத்த அறிவை விட அதிகமானதாக கூட இருக்கலாம். கல்வி என்பது அறிதலின் முறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அறிதல் நம் மனதை, நம்மை விரிவுபடுத்துகிறது. அதாவது அறிதலின் மூலம் மட்டுமே நம்மால் முழுமையை நோக்கி நகர முடியும். எனவே கல்வி நம்மை முழுமையை நோக்கி நகரச்செய்யும் உந்தி.

மனித இனத்தின் அறிவு, மனித உணர்வு எந்த திசைகளில் எல்லாம் செல்ல சாத்தியங்கள் உள்ளதோ அந்த திசைகளில் எல்லாம் பரந்து விரிந்து கிடக்கிறது. அளவற்று விரிந்து கிடக்கும் மனித அறிவின் துளியையாவது பருகவே கல்வி நமக்கு உதவலாம். நாம் அடையும் எல்லா விதமான இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும், இன்பதுன்பங்களை கடந்த நிலைகளுக்கும் அறிதலே அடிப்படை காரணம். நாம் லொகீகர்களாக இருந்தால், நாம் விரும்பியவற்றை அடைந்தோம் என்னும் அறிதலே நமக்கு இன்பத்தை அளிக்கிறது. அந்த அறிதல் நிகழ்ந்து விட்டால் நாம் அடைந்தவை அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. அதைப்போலவே நம்மிடம் இருந்தவற்றை இழந்து விட்டோம் என்னும் அறிதல் துன்பத்தை அளிக்கிறது. அந்த துன்பத்தை அடைந்த உடன் நாம் இழந்தவை அவற்றின் முக்கியத்துவத்தையும் இழந்து விடுகிறது.ஆக நம்  வாழ்க்கையில் முக்கியமானது நம் மனம் அடையும் உணர்வுகளே - அந்த உணர்வுகளை உருவாக்கும் காரணிகள் அல்ல. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனதால் உணர்வு நிலைகளில் நிலை பெற முடிந்தால், எந்த புற பொருளும் நம் மனதிற்கு முக்கியமானவை இல்லை.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம் தேடுதல், நாம் சமூக அமைப்பினுள் இருந்தால், அன்றாட தேவைகளை குறித்தே இருக்க முடியும். நம் சமூகம் உண்மையான கல்வியை நமக்கு அளித்திருந்தால் அல்லது உண்மையான கல்வியை நாம் பெற்றிருந்தால், அன்றாட தேவைகளை அடைந்தபின் நம் தேடுதல் ஆன்மீகத்தை நோக்கி திரும்பியிருக்கும். இங்கு ஆன்மீகம் என்பது நம் அக தேவைகளை, மனதின் உணர்வு நிலைகளை, அந்த உணர்வு நிலைக்கான மனதின் தேடல்களை குறிக்கிறது. ஆம், உண்மையில் நம் வாழ்க்கை மனம் என்னும் தளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் மனமே உணர்வின் தளம். நம் வாழ்க்கையை உள்ளபடி, முழு உணர்வு நிலையில் வாழ்வதே ஆன்மீகம்.

ஆனால் தலைமுறை தலைமுறையாக அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காகவே வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்த நம்மால், அன்றாட தேவைகளை அடைந்து விட்டாலும், அவற்றுக்கான இயக்கங்களை விட்டு விட்டு வர முடிவதில்லை. நமக்கு மிகவும் பழகிவிட்ட அன்றாட தேவைகளுக்கான இயக்கத்திலேயே தொடர, நம் தேவைகளை பெருக்கிக்கொண்டு, அன்றாட தேவைகளை இன்னும் அடையவில்லை என்னும் தோற்றத்தை மனம் உருவாக்குகிறது. அதாவது நாம் லொகீக சிறையினுள், அதன் சுவர்களை வலிமையாக்கிக்கொண்டே நம் வாழ்கையை வாழ்ந்து முடிக்கிறோம். நாம் உண்மையான கல்வி கற்றவர்களாக இருந்தால் நாம் விடுதலைக்கான, உணர்வு நிலையில் நிலைப்பதற்கான, நமக்கேயான வழிகளை நம் அன்றாட தேவைகளை கடந்த பின் தேட தொடங்குவோம். இங்கு விடுதலை என்பது சாதாரணர்களால் அடைய முடியாத ஏதோ ஒன்று அல்ல. நம் வாழ்க்கையை, நாம் வாழும் தளத்தில் உண்மையாக, உணர்வுடன் வாழ்ந்திருந்தால் நாம் எத்தகைய சாதாரணர்களாக இருந்தாலும் விடுதலையை நோக்கி பயணித்து கொண்டிருப்போம்.

ஆக கல்வி என்பது எவ்வாறு நம் வாழ்க்கையை, வாழும் உணர்வுடன் வாழ்வது என்பதை அறிய செய்யும் இயக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய கல்வி, இன்றைய சமூக சூழலில் நாமாகவே தேடி செல்லாதவரைக்கும் நமக்கு கிடைப்பதில்லை. இன்று நமக்கு சமூகத்தால் வழங்கப்படும் தொழில் கல்வியின் போதாமையை, வெறும் லொகீக வாழ்க்கையின் போதாமையை உணர நேர்ந்தால் மட்டுமே உண்மையான கல்வியை நோக்கி நம்மால் நகர முடியும்.

உண்மையான வாழ்க்கை என்பது நம் உணர்வு நிலைகளை ஒட்டி வாழ்வது. இத்தகைய வழ்க்கைக்கான அறிவை அளிப்பதே உண்மையான கல்வி. நாம் லொகீக வாழ்க்கையை சார்ந்தவர்களாக இருந்தாலும் கல்வியை அடைய முடிந்தால், லொகீக வாழ்க்கையையே நம்மால் உணர்வுநிலையுடன், உணர்வு நிலையின் விழிப்புடன் வாழ முடியும். அத்தகைய கல்விக்கான தேடுதலை அடைந்தால், அந்த தேடுதல் நமக்குள் நிகழ்ந்தால் அதை பெறுவது ஒன்றும் கடினமானதில்லை. மனித இனத்தின் ஒவ்வொரு சமூகத்திலும் அந்த சமூகத்திற்கேயான வாழ்க்கை அறிவு பரந்து விரிந்து கிடக்கிறது.  

blog.change@gmail.com

Sunday, June 30, 2013

சமூக கருத்தியல் இயக்கம்.

நமது தனிப்பட்ட அடிப்படை இயல்பை நாம் வாழும் சமூகத்தின் இயல்பே தீர்மானிக்கிறது. சமூகத்தின் இயல்பு, அதன் தனிப்பட்ட உறுப்பினர்களின் இயல்புகளின் தொகுப்பு. ஆக தனிமனிதர்களின் இயல்பும் சமூகத்தின் பொது இயல்பும் ஒன்றை ஒன்று தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாக்கி கொண்டே வருகிறது. நாம் வாழும் சமூகம் கடந்த சில வருஷங்களில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அந்த மாற்றம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, அந்த மாற்றத்தின் அடிப்படை எங்கிருந்து உருவானது என்பவற்றை நம்மால் அவதானிக்க முடிந்தால், தனிமனித மற்றும் சமூக மாற்றங்களில் ஒன்றுடன் ஒன்றான தொடர்பை நம்மால் அறிய முடியும்.

சமூக மாற்றம், தனிமனித உளவியல் மாற்றத்தில் தொடங்கி கருத்தாக உருபெற்று, அந்த கருத்து சமூக உறவுகளின் மூலம் வலிமைபெற்று சமூக மாற்றமாக உருவெடுக்கிறது. இங்கு கருத்தியல் இயக்கம் என்பது சில அறிவுஜீவிகளால் மட்டுமே சமூகத்தில் முன்னெடுக்கப்படும் என்று நாம் கருதினால் அது மிக மிக தவறான நம் முன்முடிவு. சுயசிந்தனை உடைய எல்லா தனிமனிதர்கள் மூலமும் கருத்தியல் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் சுயசிந்தனை உடைய, எந்த கருத்தியலையும் தன் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தும் தகுதியுடையவர்கள் பெரும்பாலும் எந்த சமூகத்திலும் மிகமிக குறைவானவர்களே இருப்பார்கள். இங்கு சுயசிந்தனை என்பது மிகமிக ஆழமான கருத்தாக்கம். எந்த கருத்தையும் நம் சிந்தனையின் மூலம் மட்டுமே நம்மால் விரிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த முடியும். ஆனால் அந்த சிந்தனைகள் நாம் ஏற்கனவே கொண்டுள்ள எண்ணற்ற முன்முடிவுகளை சார்ந்து இருக்கும். இத்தகைய முன்முடிவுகளாலான எண்ணங்கள் மூலம் நாம் அடையும் கருத்தாக்கம் எப்போதும் சுயசிந்தனையால் உருவானவை இல்லை. உண்மையில் நாம் சுயசிந்தனை உடையவர்கள் என்றால் நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட எந்த கருத்தையும், நம்பிக்கைகள் அல்லது முன்முடிவுகள் மூலம் நம்  கருத்துகளாக வெளிப்படுத்த மாட்டோம். உறுதியான அறிதல்கள் மூலம் நம்பிக்கைகளை கடந்து சென்றபின், அந்த அறிதலை அடிப்படையாக கொண்ட சிந்தனைகளே சுய சிந்தனைகளாக வெளிப்படும். இதுவே படைப்பூக்கம் (Creativity)!

நாம் உண்மையில் சமூக பிரக்ஞ்சை கொண்டவர்களாக இருந்தால் எந்த கருத்தையும் உருவாக்கியாக வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் முன் நமக்கேயான நம் சுய சிந்தனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சாதாரண மனிதர்களாகிய நாம் சமூகத்திற்கு அளிக்கும் பெரும் பங்களிப்பு. ஒரு சமூகத்தை சார்ந்த பெரும்பாலானோர் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் தங்கள் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தியபின் ஏற்றுக்கொள்ள தொடங்கினால் அந்த சமூகம் நாம் அனைவரும் சார்ந்திருக்க விரும்பும் நம் கனவுசமூகமாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக பொதுமனித மனம் அத்தகைய தகுதியுடையதாக இல்லை. ஒரு காரணம், பெரும்பாலானவர்கள் பெறும் கல்விமுறையாக இருக்கலாம். எல்லா மனித சமூகங்களிலும் பெரும்பாலும் தொழிலுக்கான கல்வியே அளிக்கப்படுகிறது. ஏனெனில் மனித சமூக அமைப்பில் தொழில் இன்றியமையாதது. லொகீக வாழ்க்கையின் தேவைகளை தொழில் புரிவதன் மூலமே எந்த ஒரு தனிமனிதனும் சமூகத்திலிருந்து பெறமுடியும். எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மை மக்களின் தேவைகள் லொகீக தேவைகளே. எனவே அளிக்கப்படும் கல்வியும் தொழில் சார்ந்ததாகவே இருக்கும்.

மிகச்சில மனிதர்களுக்கு மட்டுமே லொகீக வாழ்க்கையுடன் அதை கடந்த தேவையும் இருக்கிறது. மிகமிக குறைவானவர்களுக்கு லொகீக வாழ்க்கையே தேவை இல்லாமலும் இருக்கிறது. இந்த இரு சாரர்களால் மட்டுமே கருத்தியல் இயக்கங்களை முன்னெடுத்து செல்ல முடியும். இந்த மிக மிக குறைவான மனிதர்கள் தங்கள் உண்மையான கல்வியை வெகுஜன கல்விக்கு அப்பால்தான் பெற முடியும். ஒருவேளை தொழில் சார்ந்த கல்வியிலும் சுயசிந்தனையை ஊக்குவிக்கும் சமூகங்களில், லொகீக வாழ்க்கையை கடந்த தேவைகளுக்கான கல்வி, தொழில் கல்விக்கு ஊடேயும் பெற சாத்தியங்கள் இருக்கலாம். அந்த சாத்தியங்கள் இருந்தாலும் இந்த சிறுபான்மையினரால் மட்டுமே அந்த சாத்தியங்களின் உச்சத்தை எட்ட முடியலாம். அத்தகைய சாத்தியங்களை உள்ளடக்கிய கல்வி முறை இருந்தால் லொகீக மனிதர்கள் கூட, சிந்தனையின் சாத்தியங்களை குறித்த உணர்வுடன் இருக்க கூடும் - அவர்கள் அந்த சாத்தியங்ளை தங்களுக்காக தேர்ந்தெடுக்காவிடில் கூட! ஆக சமூகத்திற்கு நாம் அளிக்கும் பங்களிப்பு, லொகிக வாழ்க்கையை கடந்த நம் தேவைகளை, அவ்வாறு ஒரு தேவை இருந்தால், அறிவதிலிருந்தே தொடங்குகிறது. ஒருவேளை லொகீக வாழ்க்கை கடந்த தேவை நம் வாழ்வில் இல்லாவிடில், நாம் லொகீக வாழ்க்கையை வாழ்வதிலேயே முழுமை அடைவோம். அந்த வாழ்க்கையில் நமக்கென எந்த ஏமாற்றங்களும் அடையமுடியாதவைகளும் இல்லை. அந்த லொகீக வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே நம் ஆன்மீக சாதனையாகவும் இருக்கும்.

எந்த சமூகத்திலும் நேர்மறை மற்றும் எதிர்மறை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, அவற்றின் கலங்கிய இயக்கமே சமூக இயக்கமாக வெளிப்படுகிறது. ஒரு சமூகம் நேர்மறையான பாதையில் உள்ளதா அல்லது எதிர்மறையான பாதையில் உள்ளதா என்பதை அந்த சமூகத்தில் எத்தகைய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது முடிவு செய்கிறது. சமூகத்தில் எந்த ஒரு நேர்மறையான கருத்தியல் இயக்கம் முன்னெடுக்கப்படும்போதும், அதை இல்லாமல் செய்யும் ஒரு எதிர்மறை இயக்கமும் தோற்றுவிக்கப்படும். அந்த எதிர்மறை இயக்கம் பெரும்பாலும் சமூகத்திடம் ஆதரவை பெறும். அதற்கு முக்கியமான காரணம், ஒரு கருத்தியல் இயக்கம் என்பது சமூகத்தின் தற்போதைய இயங்குமுறையை மாற்றியமைக்க கோருவது. லொகீகத்தில் உழலும் சமூகம் சமூகத்தின் எந்த மாற்றத்தையும் லொகீக இருப்புக்கு சவாலாகவே எடுத்துக்கொள்ளும். எனவே சமூக மாற்றத்திற்கான நேர்மறையான கருத்தியல் இயக்கத்தை எதிர்த்து இல்லாமல் செய்யும் எதிர்மறை கருத்தியல் இயக்கத்தை, சுயசிந்தனை இல்லாத சமூகம் எளிய முன்முடிவுகள் மூலம் ஆதரித்து நேர்மறை கருத்தியல் இயக்கத்தை இல்லாமல் செய்து விடும். இதற்கு சமீபத்திய உதாரணம் அண்ணா ஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான கருத்தியல் இயக்கம்!

சுய சிந்தனையை இழந்த சமூகத்தில் இன்னொருவிதமான கருத்தியல் இயக்கமும் முன்னெடுக்கப்படுகிறது. பெருமளவு அதிகாரம் குவிந்திருக்கும் சமூகத்தின் பகுதி, தன் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக உருவாக்கும் கருத்தியல் இயக்கம். இங்கு அதிகாரமையம் நேரடியாக மேலதிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல், தன் அதிகாரத்தின் மூலம் புதிய அதிகாரத்தை நோக்கிய ஒரு கருத்தியல் இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்து சென்று, அந்த சமூகமே புதிய அதிகாரத்தை அந்த அதிகார மையத்திடம் வழங்குமாறு செய்வது. இந்த வகையில் வேறொரு சமூகத்திடம் அதிகாரத்தை பெறதுடிக்கும் ஒரு சமூகம், தான் வெற்றிபெற விரும்பும் சமூகத்தினுள் தனது பொருளாதார பலத்தின் மூலம் கருத்தியல் இயக்கங்களை உருவாக்கி, சுயசிந்தனை இல்லாத சமூகத்தை தன்னை நோக்கி வர வைப்பது. சமீபத்தில் வெளியான 'உடையும் இந்தியா' என்னும் நூல் இத்தகைய கருத்தியல் இயக்கங்களை விரிவாக பேசுகிறது.

blog.change@gmail.com

Saturday, June 22, 2013

சமூக இயக்கங்கள்.

சமூகம் என்பது உறவுகளின் வலைப்பின்னல். அது ஒரு நிலையான வலைப்பின்னல் அல்ல, கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கம் வலைப்பின்னல். சமூக இயக்கம் என்பது வலைப்பின்னலின் ஒவ்வொரு சந்திப்பு புள்ளிகளின் இயக்கங்களின் தொகுப்பு. நாம் ஒவ்வொருவரும் சமூக வலைப்பின்னலின் ஒரு சந்திப்பு புள்ளி. நாம் நிலையில்லாத தொடர் இயக்கத்தை உடையவர்கள் - அந்த இயக்கத்தை குறித்த விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்! நம் ஒவ்வொருவரின் இயக்கங்களின் தொகுப்பே நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயக்கம்.

நம் ஒவ்வொருவரின் வெளிப்படையான இயக்கங்களின் தொகுப்பு சமூகத்தின் வெளிப்படையான இயக்கமாகவும், நம் உளவியல் இயக்கங்களின் தொகுப்பு சமூக மனமாகவும் வெளிப்படுகிறது. நாம் வெளிப்படையாக எத்தகைய பகட்டுடன் அல்லது எளிமையுடன் இருந்தாலும் நம் உளவியல் இயக்கங்களே .உண்மையான நம் தரத்தை சுட்டுவது போல, ஒரு சமூகம் வெளிப்படையாக எத்தகைய முன்னேற்றத்துடன் அல்லது பழந்தன்மையுடன் இருந்தாலும், அந்த சமூக மனதின் இயல்பே அந்த சமூகத்தின் உண்மையான இயல்பை குறிக்கிறது. ஒரு சமூகத்தின் ஒவ்வொரு வெளிப்படையான இயக்கங்களுக்கும் காரணியான ஆழமான உளவியல் இயக்கம் ஒன்று நிச்சயமாக எப்போதும் இருக்கும். அந்த உளவியல் இயக்கத்தின் தன்மையே அந்த சமூகத்தின் உண்மையான தன்மையாகும். ஒரு உளவியல் இயக்கம் வெளிப்படையாக நல்லவிதமாக தோன்றும் இயக்கங்களை தோற்றுவித்தாலும், பல வெளிப்படையாக தெரியாத எதிர்மறை இயக்கங்களையும் தோற்றுவிக்க கூடும். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அளிக்கபடும் மருந்து அந்த நோயை குணப்படுத்தினாலும் பக்க விளைவுகள் மூலம் வேறு பல நோய்களுக்கும் காரணமாக இருப்பது போல.

ஒரு தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்கள் சமூகத்தில் வெளிப்படையான இயக்கங்களை உருவாக்க வேண்டுமென்றால், அந்த மனிதரின் சமூக உறவுகள் மிகவும் வலிமையாகவும் தீவிரமாகவும் இருந்தாக வேண்டும். அல்லது அந்த தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்களை உள்வாங்கிக்கொண்ட மற்றொருவர் அத்தகைய வலிமையான மற்றும் தீவிரமான சமூக உறவுகளுடன் இருப்பதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் எதிர்மறையான இயக்கங்கள் எளிதில் சமூகத்தில் தாக்கத்தை ஏறுபடுத்தும். ஏனெனில் எதிர்மறையான இயக்கங்கள் பெரும்பாலும் லொகீக தேவைகள் சார்ந்தே இருப்பதால் சமூகத்தின் பெரும்பான்மையினரான லொகீக மனிதர்கள் மூலம் எளிதில் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களான ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான உளவியல் இயல்புகளை உடையவர்கள். ஆனாலும் தங்கள் வெளிப்படையான இயக்கங்களை தங்கள் சமூக உறவுகளின் இயல்புகளின் படி ஒரு சமரச புள்ளியை நோக்கி அமைத்திருப்பார்கள். அந்த சமரச புள்ளியை நோக்கிய இயக்கமே சமூக இயக்கமாக தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உளவியல் இயக்கங்கள் சமரச புள்ளியை தொடர்ந்து மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கும். வலிமையான, தீவிரமான உறவுகளை உடைய ஒருவர் அத்தகைய முயற்சியை வெளிப்படுத்தும்போது சமரச புள்ளி இயல்பாகவே ஒரு புதிய இடத்தை நோக்கி நகர தொடங்கும். அதுவே சமூகத்தின் வெளிப்படையான மாறுதல். சாதாரண மனிதர்கள் போதுமான அளவு தீவிரம் இல்லாமல் சமரச புள்ளியை மாற்ற முயலும்போது பெரும்பாலும் ஏமாற்றத்தையே அடைவார்கள். இதுவே நம்மில் பெரும்பாலானவர்கள் நாம் வாழும் சமூகத்தின் மீது ஒருவகையான கசப்புணர்வை அடைந்திருப்பதன் காரணம்.

நாம் சமூக பிரக்ஞ்சை உடையவர்களாக இருந்தால், நேர்மறையன மாறுதல்களுக்காக, தேவைப்படும் இடங்களில், சமூகத்தின் வெளிப்படையான இயக்கங்களின் சமரச புள்ளியிலிருந்து விலக முயற்சிப்போம். அத்தகைய முயற்சி பெரும்பாலும் லொகீகம் சார்ந்த சமூகத்திலிருந்து நிராகரிப்பையே பெற்று தரும். இருந்தாலும், நம் செயல்பாடுகளில் தீவிரம் உடையவர்களாக நாம் இருந்தால், சமரசபுள்ளியிலிருந்தான நமது விலகல், அந்த சமரச புள்ளியையே நம் இயக்கத்தை நோக்கி வரச்செய்யும். அதுவே சமூகத்திற்கு நம்மால் செய்ய முடிந்த பெரும் பங்களிப்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் இயற்கையிலேயே அத்தனை தீவிரமானவர்கள் அல்ல. ஆனாலும் நமது குறைந்தபட்ச தீவிரம் தற்போதைய சமரசப்புள்ளியை நேர்மறையான இயக்கங்களுக்காக, அந்த சமரசபுள்ளியை அசைக்க முடியாவிட்டாலும், நிராகரிக்கும் அளவுக்காவது இருந்தால், அதுவே சாமானியமான மனிதர்களாக சமூகத்திற்கான நமது பங்களிப்பாக இருக்கும்.


செயலில் தீவிரம் உடைய, சமூகத்தை மாற்ற துடிக்கும் செயல்பாட்டாளர்களை பெரும்பாலும் நாம் எல்லா சமூகங்களிலும் காணலாம். துரதிர்ஷ்டவசமாக அந்த செயல்பாட்டாளர்கள் அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே அவர்களின் சமூகம் என்று வரையறுப்பதன் மூலம் முழுமையான சமூக பிரக்ஞ்சையை இழக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பாலும் அவர்களின் தீவிரமான செயல்பாடுகள் சமூகத்தில் எதிர்மறையாக வெளிப்பட்டு அவர்கள் தீவிரவாதிகள் என்னும் குறுகிய, எதிர்மறையான வட்டத்திற்குள் அகப்பட்டு கொள்கிறார்கள். ஏனெனில் சமூகம் என்பது அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் மட்டும் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்ல. சமூகத்தில் எண்ணற்ற உறுப்பினர்களும் எண்ணற்ற கொள்கைகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம் தீவிர இயக்கங்களை உடைய போராளிகள் மாற்ற வேண்டியது சமூகத்தின் வெளிப்படையான இயக்கத்தை அல்ல. அந்த வெளிப்படையான இயக்கத்திற்கு காரணமான உளவியல் இயக்கத்தையும் கருத்தியல் இயக்கத்தையுமே. தீவிரமான கருத்தியல் இயக்கத்தின் மூலம் உளவியல் இயக்கத்தையே மாற்றியமைக்க முடியலாம் - அதன் மூலம் வெளிப்படையான சமூக இயக்கத்தையும்!

blog.change@gmail.com

Saturday, June 15, 2013

சமூகத்தில் தனி மனித பங்களிப்பு

சமூகம் என்பது தனி மனிதர்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உறவுகளின் தொகுப்பு. தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ள பிற மனிதர்களுடன் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவம், கருத்தியல் ரீதியாகவும் உறவாட வேண்டியுள்ளது. இந்த உறவுகள், மிகவும் சிக்கலான வலைபின்னல் போல மற்ற மனிதர்களின் உறவுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த உறவுகளின் தொகுப்பே சமூகம். ஆகவே தனி மனித செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு, சமூகத்தின் செயல்பாடுகளாகவும் சிந்தனைகளாகவும் முழுமை கொள்கிறது. தனிமனிதன் மற்ற மனிதர்களுடன் கொண்டுள்ள உறவுகளின் உறுதிக்கேற்ப அந்த மனிதனின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் சிக்கலான வலைப்பின்னலில் ஒரு சந்திப்பு புள்ளி (knot). ஒரு வலைப்பின்னலில் ஒவ்வொரு சந்திப்பு புள்ளியின் தரமும், உறுதியும் அந்த வலைப்பின்னலின் தரத்தையும் உறுதியையும் முடிவு செய்கிறது. ஆக நம் வாழ்வின் தரமும், இயல்பும் நாம் வாழும் சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்கிறது. அதாவது, ஒரு சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்வது, நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களின் தரமும் இயல்புமே - சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் சாதாரண மனிதர்களே. அந்த சதாரண மனிதர்கள் தங்களின் செயல்களில் கொண்டுள்ள ஈடுபாடு, அந்த  செயல்கள் எத்தகையதாக இருந்தாலும், அவர்களை மற்றவர்களிலிருந்து பிரித்து காட்டுகிறது.

சமூக அமைப்பில் வாழும் நாம், நமது சிந்தனை முறைகளையும் அடிப்படை இயல்புகளையும், அந்த சமூக அமைப்பில் நாம் கொண்டுள்ள உறவுகளிடமிருந்து, அந்த உறவுகளின் இயல்பையும், சிந்தனை முறைகளையும் சார்ந்தே பெற்றுக்கொள்கிறோம். எனவே நமது அடிப்படை இயல்பு, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்பையே பெற்றிருக்கும் - நாம் பெற்ற அந்த சமூக இயல்பில், விழிப்புடன் நம்மால் நமக்குள் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை தவிர! நமது இயல்புகள், நம்மால் விழிப்புடன் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உட்பட, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்புகளாக, நாம் கொண்டுள்ள உறவுகள் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. ஆம், நமது சமூக உறவுகளின் வலிமைக்கேற்ப, நம்மால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இயல்புகள் சமூகத்தில் வெளிப்படையான மாறுதல்களை உருவாக்கலாம். ஒருவேளை நம் சமூக உறவுகள் வலிமையற்றவையாக இருந்தால், சமூகத்தின் இயல்பில் நம்மால் கொண்டு வரப்படும் மாற்றங்கள் வெளிப்படையான சமூக மாற்றங்களை உருவாக்காமல் போகலாம். ஆனாலும் அந்த சமூகத்தின் உள்இயல்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தி, இன்னொரு வலிமையான சமூக உறவுகளை உடைய தனிமனிதர் மூலம் வெளிப்படையான சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியலாம்.

ஏன் சமூகம் மாற வேண்டும்? உலகம் என்பது ஒரு நிலையான இருப்பு அல்ல. அது நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வு என்பதே மாற்றத்தின் அடிப்படை. நிகழ்வின் மூலம் ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அதாவது, உலகம் என்பது ஓயாது மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அந்த உலகின் சிறு பகுதியான மனிதர்களும், மனிதர்களின் உறவுகளால் ஆன சமூக அமைப்பும், உலக நிகழ்வுகளின் பகுதியான சிறு நிகழ்வாகவே இருக்கும். அல்லது, மனிதர்களும் அந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகமும் மாறிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். எனவே சமூகம் ஏன் மாற வேண்டும் என்னும் கேள்வி எழுவதற்கான சாத்தியங்களே இல்லை - மாறிக்கொண்டு இருப்பதே அதன் இயல்பு.

ஆம், தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொரு சிந்தனையும்,ஒவ்வொரு மன இயக்கங்களும், ஒவ்வொரு செயல்களும், நாம் எத்தகைய சமூக உறவுகளை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் ஓயாத சலனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பில், தனிமனிதர்களால் ஏற்படுத்தப்படும் இந்த சலனங்கள், அந்த சமூகத்தை அதன் அடுத்த உயர்ந்த கட்டத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கும். எனவே, நம் சமூகம் அதன் அடுத்த உயரிய நிலையை நோக்கி நகர்கிறதா இல்லையா என்பது, தனி மனதர்களாகிய நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. அல்லது தனி மனிதர்களாகிய நாம், செயல் ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் மனித பிறவிக்கு சாத்தியமான அடுத்த உயர்ந்த நிலையை நோக்கி செல்கிறோமா இல்லையா எனபதே, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை நமக்கு கூறுகிறது.

சமூக அமைப்பின் மூலமே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் முன்னோர் அடைந்த நாகரீகம் மற்றும் ஞானத்தின் சிறு துளியாவது இன்று நம்மை அடைந்திருக்கிறது. இன்று நாம் அடையும் நாகரீகம் அல்லது அநாகரீகம், ஞானம் அல்லது அஞ்ஞானம், நம் அடுத்த சந்ததியினரை மட்டுமல்லாது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கும் சென்று சேரும். உண்மையில் நம் குழந்தைகள் மீது அன்புடையவர்களாக இருந்தால், சமூகத்திலிருந்து எந்த எதிர்மறை இயல்புகளையும் நம் குழந்தைகள் அடைவதை விரும்ப மாட்டோம். அல்லது நமது எதிர்மறை இயல்புகள் சமூக இயல்புகளாக உருபெற்று நம் குழந்தைகளையும் அவர்கள் குழந்தைகளையும் அடைவதையும் விரும்ப மாட்டோம். மேலும் நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை உடையவர்களாக இருந்தால், நமது எண்ணங்களும் செயல்களும் எவ்வாறு சமூகத்தின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவை நாம் அடைந்தால், ஒரு சமூக பிரக்ஞ்சை உள்ள மனிதரை போலன்றி வேறு எந்த விதமாகவும் நம்மால் வாழ முடியாது.

இன்று நாம் அடைந்தவை என பெருமிதம் கொள்ளும் அனைத்தையும், நாம் வாழும் சமூகத்திலிருந்து பெற்ற அடிப்படைகளிலிருந்து மட்டுமே அடைந்துள்ளோம். அவற்றை அடைவதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம் உழைப்பு இருந்துள்ளது. ஆனாலும் அந்த உழைப்பும் சமூகத்திலிருந்து பெற்ற அறிவு, ஆர்வம், உந்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. நாம் நன்றியுயுணர்ச்சி உடையவர்களாக இருந்தால் நம் வாழ்க்கையை கட்டமைக்க உதவிய சமூகத்திற்கு மிகச்சில நேர்மறையான பங்களிப்பையாவது அளித்தாக வேண்டும். தனிமனித அளவில் நேர்மறை எதிர்மறை என ஒன்று இல்லாமல் இருந்தாலும், உறவுகளின் தொகுப்பு என்னும் தளத்தில் அந்த பிரிவினை இருந்தாக வேண்டும். அதாவது சமூகத்தை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துசெல்லும் எந்த பங்களிப்பும் நேர்மறையான பங்களிப்பே. உண்மையில் நாம் சமூகம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தால், சமூகத்திடமிருந்து நாம் பெற்றவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருந்தால், எத்தகைய செயல்கள் சமூகத்தை அடுத்த உயர் நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை யாரும் கூறாமலே நாம் அறிந்திருப்போம். அதற்கு தேவையான உணர்வு நிலையில் இருந்தால், நாம் அறிந்திருந்தாலும் இல்லாவிடிலும் உண்மையில் நாம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்

blog.change@gmail.com

Friday, April 5, 2013

நம்பிக்கை (Trust)


ஆன்மீக சாதகர்களின் கடைசி ஆயுதம், அவர்கள் எந்த வகையான ஆன்மீக சாதனைகளில் ஈடுட்டிருந்தாலும், பெரும்பாலும் நம்பிக்கையாகவே (Trust) இருக்க கூடும். அதே நேரத்தில் ஆன்மீக சாதகர்களை மாயையில்(Illusion), மாய மனத்தோற்றத்தில்(Hallucination) தங்கள் ஆன்மீகத்தை இழக்க செய்வதும் நம்பிக்கை என்னும் (Belief) இந்த ஆயுதமே. எனவே உண்மையில் நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், நம்பிக்கையின் இயல்பை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். பெரும்பாலும் நாம் கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையது என்பதையும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை ஓரளவுக்கு நம்மை உணர வைக்கலாம்

நம் தர்க்க புத்தியால் கடக்கக்கூடிய தூரம், நம் மன ஆழங்களுடனும், பிரபஞ்ச இயக்கத்தின் எல்லையின்மையுடனும் ஒப்பிடும்போது மிக மிக சிறிய தூரம் மட்டுமே. ஒப்பிடும்போது கணக்கில் கொள்ளதக்க அளவு கூட இல்லாத அந்த மிகசிறிய அறிதலுக்காக மட்டுமே நம் தர்க்க புத்தி நமக்கு தேவைப்படுகிறது. மறு பிறவி கோட்பாடு உண்மையாக இருந்தால், நாம் கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பிறவிகள், அந்த சிறு தூரத்தை நம் பிரக்ஞ்சையால் கடக்க இயலாத காரணத்தினால் மட்டுமே.

நம்பிக்கை எவ்வாறு நமக்குள் உருவெடுக்கிறது? ஒவ்வொரு மனிதப்பிறவியும் இங்கு தோன்றிய பின், புலன்களால் உலகத்தை அளக்கத்தொடங்குகிறது. உலகம் என்பது ஒரு தொடர் இயக்கம். இங்கு நிலையானது எதுவும் இல்லை. அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் நிலையின்மையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாது. எனவே நம் வாழ்வு இயங்கும் தளத்தில், நம் வாழ்க்கையை சார்ந்த(relatively) நிலையானதை புலன்கள் மூலம் மனித மனம் அடையத்தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வு இயங்கும் தளத்திலும் எண்ணற்ற நிலையற்ற இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது நிலையான இயக்கங்களையும் நிலையற்ற இயக்கங்களையும் தொடர்பு படுத்தி உணர வேண்டியது மனித மனதின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதாவது மனித மனம் வாழ்க்கை நிகழும் தளத்தில் நிலையானவற்றை கொண்டு, அந்த தளத்தில் நிலையற்றவற்றை அளவிட்டு, அந்த இயக்கங்களை வாழ்க்கையின் நிகழ்விற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக்குகிறது. இந்த அளவிடலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணமே நம்பிக்கை. இந்த நம்பிக்கை, நாம் முற்றிலும் அறிந்தவற்றிலிருந்து, அதற்கு தொடர்புடைய நம்மால் அறிய முடியாதவற்றை குறித்து அறியும் முயற்சி மட்டுமே.

மனித மனம் எல்லையற்றது. நம்பிக்கையின் மூலம் நம் வாழ்க்கைக்கு மிகத்தேவையான நிலையற்ற இயக்கங்களை அளவிட்ட நம் மனம், அதே அளவுகோலின் மூலம் நம் வாழ்க்கையை கடந்த அதீத இயக்கங்களையும் அளவிட முயல்கிறது. அவ்வாறு அளவிடமுடியாதவற்றை நம் மனதின் மூலம் அளவிட முயலும்போது நம்பிக்கை என்னும் இயக்கம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று விடுகிறது.

நம் மனம் எங்கெங்கு கேள்விகள் எழுப்புகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையின் மூலம் விடை பெற்று கேள்விகளை கடந்து செல்கிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் நம்பிக்கையின் மூலம் பெற்ற விடைகள், அன்றாட செயல் முறை தளத்தில் பெரும்பாலும் ஒத்திசைவுடன் செல்வதில்லை. இங்குதான் நம் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது. நம் நம்பிக்கை அன்றாட செயல் தளத்தில் தோல்வியுறும்போது, நம் நம்பிக்கையுடன் நம்மை நம் அகங்காரம் மூலம் பிணைத்திருந்தால், அந்த நம்பிக்கையே நம் அடையாளமாக மாறி இருந்தால், அந்த தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றாட செயல் தளத்தின இயக்கங்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ போராட தொடங்குவோம். அந்த நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட போராட்டம், அன்றாட செயல் தளத்தில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடும். நம் செயல்கள் சமூகத்தையும் பாதிக்கும் நிலையில் நாம் இருந்தால், அந்த நம்பிக்கையின் விளைவுகள் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது நம் இயங்கு தளத்தில், தனிமனித அளவிலோ அல்லது குடும்ப அளவிலோ அல்லது சிறு குழு அளவிலோ அந்த பாதிப்பு நிகழலாம். உலகில் நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் தனி மனித அல்லது மனித குழுக்களின் நம்பிக்கைகளே காரணம். நாமும் நம்பிக்கையை செயல் தளத்தில் அடிப்படையாக கொண்டவர்கள் என்றால் நமக்கும் அந்த பேரழிவுகளே ஏற்படுத்தியவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, செயல்திறனின் சமூகத்தை பாதிக்கும் அம்சம் மட்டும் - அவர்கள் அளவுக்கு செயல் தீவிரம் உடையவர்களாக இருந்தால், நாமும் தீவிரவாதிகளே!

தர்க்கத்தை, தத்துவத்தை இழந்த நம்பிக்கைகளே உலகின் பேரழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அழிவுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நம் நம்பிக்கைகளும் ஆன்மீக தளத்திலிருந்து விலகும்போது நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப அழிவுகளை நம்மைச்சுற்றிலும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய நம்பிக்கையுனுள் நாம் அமிழ்ந்திருக்கும்போது நமது மாய மனக்காட்சிகள், அந்த அழிவுகளையும் நம் முன்னேற்றமாகவே கண்டு கொண்டிருக்கும் - அறிந்து கொள்ள முடியாத மாய வலை! நம்பிக்கையின் முன்முடிவுகளையே தர்க்கமாக கொண்டிருக்கும் பேரழிவு!

ஆனால் நம்பிக்கையே ஆன்மீக சாதகனின் கடைசி ஆயுதம்! இந்த நம்பிக்கையே சரணாகதி. நம்மை விட பெரிய ஒன்றை, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம்பாமல் அத்தகைய ஒன்றிடம் நம்மால் சரணாகதி அடைய முடியாது. இங்கு சரணாகதி என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். நாம் ஒன்றிடம் சரண்டையும்போது, நம் அகங்காரத்தை, சுயத்தை முழுவதும் இழந்து விடுகிறோம். அந்த நிலையில் கடந்த காலத்தின் கவலைகளும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்து விடும். அதாவது எது நடந்தததோ அந்த செயலில் நம் பங்கை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் நடந்தது நமக்கு அப்பாற்பட்ட, நாம் சரணடைந்த ஒன்றினால் மட்டுமே நடந்தது. எது நடைபெறுமோ அவற்றில் நம் பங்களிப்பை மட்டும் வழங்குவோம். அந்த செயல் நமக்கு அப்பாற்பட்ட விதிகளின் அடிப்படையில் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறு நடை பெறும். இத்தகைய சரணாகதி மனநிலையை அளிக்கும் நம்பிக்கையே ஆன்மீக நம்பிக்கை. மற்ற எல்லா நம்பிக்கைகளும் நம் மனம் எழுப்பும் வினாக்களிலிருந்து தப்பிச்செல்வதற்கு நாம் பயன்படுத்தும் கருவி மட்டுமே. இந்த நம்பிக்கைகள் அன்றாட செயல்களின் அலைக்கழிப்பினால் மனநிலை பிறழ்வதிலிருந்து தப்பிப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆம், மிகவும் மெல்லிய, எளிதில் உடையக்கூடிய மனநிலையை உடையவர்களுக்கு இத்தகைய நம்பிக்கைகள் மிகவும் தேவை - மனப்பிறழ்வு நிலையை அடையாமல் நம் வாழ்க்கையை தொடர.

துரதிருக்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய மனதுடன் இருக்கிறோம் - புற உலகில் எத்தனை மன வலிமை படைத்தவர்களாக நம்மை காட்டிக்கொண்டிருந்தாலும்! அல்லது அத்தகைய மெல்லிய மனம் படைத்த சமூகம் அளித்த நம்பிக்கைகளை இழக்க இயலாமல் தடுமாறிகொண்டிருக்கிறோம். நம் மனம் தத்துவத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் மட்டுமே இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படாத தளத்தை அடைய முடியும். அந்த தளத்தில் சென்ற பின் மட்டுமே ஆன்மீக சரணாகதிக்கு தேவையான எளிய மனநிலையை அடையமுடியும். அந்த எளிய மனநிலையில் நம் அகங்காரத்தை, சுயத்தை இழந்து முழுமுதல் உண்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அந்த உண்மையிடம் சரணாகதி அடைய இயலக்கூடும். அதன் பின் நாம் அடைவதற்கு எதுவம் இல்லை!

blog.change@gmail.com