Sunday, June 23, 2024

கோவா பயணம் - 1

(1)

மார்ச் மாதத்தில் நண்பன் ரகுராமனிடமிருந்து ஒரு அழைப்பு. ஜூன் மாதத்தில் கோவாவில் ஒரு நண்பர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாகவும் எனது வரவை எதிர்பார்பதாகவும் கூறினான். ஒரு நாள் எடுத்துக்கொண்டு எனது வருகையை உறுதி செய்தேன். அந்த ஒருநாள் தயக்கத்துக்கான இரண்டு காரணங்களையும் இங்கு கூறிவிடலாம்.

முதலாவதாக என் அம்மாவுடன் தான் நாங்கள் வசிக்கிறோம். அவர் நல்ல உடல் நிலையில் இருந்தாலும், இந்த வயதில் அவரை தனியாக விட்டு வருவது எங்களுக்கு உவப்பானதாக இல்லை. எனவே அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்பதை ஆலோசிக்க வேண்டியிருந்த்து. இரண்டாவதாக தமிழ்/மலையாள இலக்கிய எழுத்தாளர், தமிழ்/மலையாள திரைக்கதை எழுத்தாளர், விமர்சகர், அறிவுஜீவி என பன்முகத்தன்மைகள் கொண்ட ஜெயமோகன் அவர்கள் தொடங்கியிருக்கும் அறிவியக்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்திய தத்துவங்கள் குறித்து நடைபெறும் தொடர் வகுப்புகளில் கலந்து வருகிறேன். இதன் நான்காம் நிலை, நண்பர்கள் சந்திப்பு நடைபெறும் நாட்களில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகிருந்ததது. அதிர்ஷ்டவசமாக, இந்த வகுப்பு இன்னும் இரண்டு முறை நிகழ வாய்ப்பிருந்தது. (இந்த வகுப்பின் ஒரு நிலையில் கலந்து கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து வரும் அடுத்த நிலைகளில் கலந்து கொள்ள முடியாது) எனவே அடுத்த நாள் ரகுராமனிடம் எனது வருகையை உறுதி செய்தேன்.

ஒருவேளை தத்துவகுப்புக்கான வாய்ப்பை இழக்கவேண்டியிருக்கும் என்றால். நிச்சயமாக நண்பர்கள் கூடுகையை நான் தவிர்த்திருப்பேன். இதற்கு அர்த்தம் நண்பர்கள் எனக்கு முக்கியமல்ல என்பதோ அல்லது, கூடுகை எனக்கு எதையும் அளிக்கப்போவதில்லை என்பதோ இல்லை. இந்த நண்பர்களுடன் மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்திருக்கிறேன். அந்த காலத்தில் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நண்பர்களுடன் மகிழ்ந்திருந்திருக்கிறேன். கல்லூரி வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் அனைத்திலும், எனது எல்லைக்குட்பட்டு மகிழ்ந்திருக்கிறேன். கல்லூரி வாழ்க்கையின் எந்த அம்சத்தையும் இழந்து விட்டேன் என்னும் கவலை இல்லை. (marijuana/கஞ்சா ஒரு முறை அனுபவித்து பார்த்திருக்கலாம் என்னும் ஒரு ஏக்கம் மட்டும் அவ்வப்போது வரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் எனக்கு அமையவில்லை. எனவே ஏமாற்றம் இல்லை) Nostalgia – க்களில் எனக்கு நம்பிக்கையும் விருப்பமும் இல்லை.

இன்று திரும்பிப்பார்க்கையில், வாழ்வின் எந்தந்த அனுபவங்கள் என்னை கூர்மைப்படுத்துமோ அவற்றுக்கான வாய்ப்புகள் மட்டுமே எனக்கு அமைந்திருக்கின்றன. என்னை மழுங்க வைப்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் எனக்கு அமையவில்லை என்றே நினைக்கிறேன். அமைந்த எதிர்மறையான வாய்ப்புகளையும் என்னை அழிப்பதற்கு அனுமதிக்கவில்லை என்றுதான் நம்புகிறேன். எனக்குள் இருக்கும்நான்”, என்னை மிகச்சரியாக வழிநடத்தியிருக்கிறது என்றுதான் இன்று நினைக்கத்தோன்றுகிறது.

கூடுகையில் கலந்து கொள்வதாக முடிவு செய்தபிறகு எவ்வாறு பயணம் செய்வது என்று யோசித்தேன்.. விமானத்தில் பயணம் செய்வது எனக்கான தெரிவாக இல்லை. சென்னை நகரத்துக்குள் வசிக்கும் ஒருவர், சென்னை விமானநிலையம் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரத்தில் என்னால் வீட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைய முடியும். இருந்தாலும் அது என் தெரிவுகளில் ஒன்றாக இல்லை. என்னிடம் இருந்த இரு தெரிவுகள், திருவனந்தபுரத்திலிருந்து கோவாவிற்கு கொங்கன் இரயில்வேயின் 2nd class – sleeper coach பயணம் அல்லது எனது காரில் பயணம்.

நான் இந்த உலகத்தில் இருக்கும் மிகமிக குறுகிய காலத்தில், அடையும் அனுபவங்களே என் வாழ்க்கை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே அனுபவங்களை முடிந்தவரையில் செறிவாக்கிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். செறிவான வாழ்க்கையே மரணப்படுக்கையில் என்னை சந்தோஷமாக இருக்கச் செய்யும். அந்த வகையில் எனக்கு எந்த ஏமாற்றங்களும் இல்லை. எனது வாழ்க்கை, எனது எல்லைக்குட்பட்டு, மிகச் செறிவாகவே இருந்திருக்கிறது. இன்று மரணப்படுக்கை எனக்கு வாய்த்தாலும், மகிழ்வுடன் அதை எதிர்கொள்ள முடியும் என்றுதான் நான் நம்புகிறேன். எனது தத்துவார்த்தமான பார்வை. மரணத்தை எதிர்மறையானதாக பார்க்கவில்லை. ஒவ்வொருவரின் வாழ்வின் இயல்பான ஒன்றாகவே பார்க்கிறது. அதனால் என்னுடைய மரணத்தின் மீதோ, பிற எவரின் மரணத்தின் மீதோ எனக்கு எந்த எதிர்மறையான பார்வைகளும் இல்லை. சில மரணங்கள், அவர்களை சார்ந்திருக்கும் சிலரின் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அவ்வாறிருந்தாலும் அது மிக இயல்பான ஒன்றுதான். இருப்பவர்கள் விரும்பினால், புரட்டிப்போடப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்.ஆகவே எவரின் மரணத்தின்போதும் துக்கம் விசாரிப்பதோ, அதற்கிணையான Social media Messages அனுப்புவதோ இல்லை. அதற்கு எதிர்புறமாக எவரிடமிருந்தும் பிறந்த நாள் வாழ்த்துக்களை பெறுவதோ அல்லது பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்வதோ இல்லை.(சில சூழ்நிலைகளில், தவிர்க்க முடியாமல், இவற்றை செய்வதும் உண்டு. ஆனால் அது மனமார்ந்த ஒன்று இல்லை). மிக அரிதான, இந்த மனிதவாழ்க்கை எனக்கு அருளப்பட்டிருக்கிறது. அதற்கு நான் அறியாத நோக்கங்கள் இருக்கலாம். அந்த வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாக வாழ்வதே, அந்த பேரியற்கைக்கு நான் செய்யும் நன்றிக்கடனாக இருக்க முடியும். அதைத்தவிர்த்து விட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் என்னும் பெயரில், நுகர்வியத்தில் திளைப்பதும், அதன் நிலைகுலைவுகளை என் உடலுக்கும் உயிருக்கும் அளிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை. எனக்கு அருளப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் அதற்கான நன்றியுடன் இருக்க வேண்டிய நாளே!  

கொங்கன் ரயில்வேயில் வருவது சிறந்த அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அதில் flexibility இல்லை. நேரடியாக கோவா வருவது, இரண்டு நாட்கள் நண்பர்களுடன் இருந்து விட்டு திரும்பி விடுவது. அவ்வளவுதான். எனவே காரில் செல்லலாம் என நினைத்தேன். கன்னியாகுமரியிலிருந்து கோவா, மேற்கு கடற்கரை சாலை வழியாக  சுமார் 1000 கிமீ தூரம்தான் இருந்தது. எனவே கோவா வரும்போது மேற்கு கடற்கரை வழியாகவும் திரும்பி வரும்போது ஹம்பி, பெங்களூர் வழியாகவும் வரலாம் என Rev-0 திட்டத்தில் முடிவு செய்தேன். இதில் நடுக்கேரளம்வரையான இடங்களில் பெரும்பாலும் சென்றிருக்கிறேன். அது தவிரவும் மலைகளும், காடுகளும் மலைச்சாலைகளும் எனக்கு அளிக்கும் மகிழ்வை கடற்கரைகள் அளிப்பதில்லை. இந்த வழியில் கடற்கரைகளை தவிர்த்தால், ஒருசில புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமே இருந்தன.

கடவுள்களிடம் கேட்பதற்கும் எனக்கு ஒன்றும் இல்லை. மக்கள்திரள் அதிகமாக இருக்கும் கோவில்களில் நான் விரும்பும் சூழல்களும் இருப்பதில்லை. எனவே புகழ்பெற்ற வழிபாட்டிடங்களான கோவில்கள் எனக்கு உவப்பானவை இல்லை. ஆனால் அவற்றில் செல்ல நேர்ந்தாலும் அங்கு செல்வதற்கு மனத்தடைகளும் இல்லை. ஹொய்சால மன்னர் பரம்பரையினர் அமைத்த கோவில்களின் தனித்துவம் பற்றி முன்னர் கேள்விப்பட்டிருந்தேன். பேலூர், ஹளபீடு ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் பற்றியும் அறிந்திருந்தேன். கோவா வரும் வழியில் அவற்றை பார்க்க முடியுமா என்று பார்த்த்தில், கேரள கடற்கரையை தவிர்த்து விட்டு மைசூர் வழியாக வந்தால் அது முடியம் என்று தோன்றியது. தூரம் சுமார் 300 கிமீ அதிகம். அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகள் வழியாகவும் வரலாம். எனவே Rev-1 திட்டத்தில் மைசூர், பேலூர் ஹளபீடு, உடுப்பி, முர்தேஷ்வர், கோகர்ணா வழியாக கோவா வரலாம் என முடிவு செய்தேன். திரும்பி வரும் வழியில் மாற்றம் இல்லை.

ஜெயமோகன், ஆலயக்கலை என்னும் வகுப்பையும் ஒருங்கிணைக்கிறார். கோவில்களுக்கு செல்வது என்று முடிவு செய்தாகி விட்டது. அங்கு சென்று என்ன செய்வது? இந்த நேரத்தில் அடுத்த ஆலயக்கலை ரசனை குறித்தான பயிற்சி வகுப்பு அறிவிப்பு வந்தது.. அந்த மூன்று நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். சில புரிதல்கள் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக Tamil Heritage trust என்னும் Youtube பக்கம் என்னுடைய Browser-இல் Bookmark செய்யப்பட்டிருந்தது.. அங்கு இந்த கோவில்களின் சிறப்புகள் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். ஆலயக்கலை ரசனை பயிற்சி, இந்த வீடியோக்களை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இந்த தளத்தின் மூலம், சோமநாதபுரா கோவில், ஸ்ருங்கேரி விஜயசங்கரா கோவில் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றையும் சேர்த்து Rev-2 திட்டத்தில் பயண வழியை இறுதி செய்தேன்.

Rev-2 பயணத்திட்டத்தின் படி, மார்த்தாண்டம், சோமநாதபுரா, ஹளபீடு, பேலூர், ஸ்ருங்கேரி(நேரம் அனுமதித்தால் மட்டும்), உடுப்பி, முர்தேஷ்வர், கோகர்ணா, கோவா, ஹம்பி, பெங்களூர், மார்த்தாண்டம் என முடிவு செய்தேன். எங்குமே தங்குமிடம் முன்பதிவு செய்யவில்லை. திட்டத்தை பிரதிபாவிடம் கூறினேன். எதிர்பாராத வகையில், எந்த எதிர்ப்பும் இல்லாமல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

No comments: