Thursday, August 15, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 1

'நுகர்வெனும் பெரும் பசி' - இது ராமச்சந்திர குஹா என்னும் சூழலியலாளர் (Environmentalist) மற்றும் சமூகவியலாளரின் (Sociologist) சூழலியல் இயக்கங்களின் அறிமுகம் குறித்த நூலின், தமிழ் பதிப்பின் பெயர். அந்த பெயரை நன்றியுடன் இங்கு இரவல் வாங்கிக்கொள்கிறேன். மனித இனம், இன்னமும் வேண்டும் அதற்கு மேலும் வேண்டும் என நிறைவடையாது நுகர்வதை காணும்போது, ஆம் இது அடங்காத பெரும்பசிதான் என்ற எண்ணம் வருவதில் வியப்பில்லைதான். அதிலும் தங்கள் நுகர்வை குறித்த எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமல், தாங்கள் நுகர்ந்து அழிப்பது, தங்களின் வாழ்வாதாரத்தைதான், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைதான், மனித இனம் தன்னுள் முழுமை அடைவதை நோக்கி செல்லும் பரிணாம வளர்ச்சி என்னும் இயக்கத்தைதான் என்ற உணர்வுகள் சற்றும் இல்லாமல் நுகர்வு ஒன்றே தங்கள் பிறப்பின் பயன், வாழ்க்கையின் அடிப்படை எனக்கொண்ட பெரும் மக்கள் திரளை காணும்போது, ஒரு மனிதப்பிறவியாக துக்கம் மேலிடுகிறது.

நுகர்வு குறித்த எனது எளிய பார்வைகளை, நீண்ட ஆராய்சிகளை பின்புலமாக கொண்டிருக்காவிட்டாலும், எனக்கு வாய்த்த இந்த ஊடகத்தின் சிறு பகுதி முன் திறந்து வைக்கிறேன். இந்த பார்வைகள், அதைக்காணும் ஒருவரது மனதிலாவது ஒரு விவாதத்தை தொடங்கி வைக்குமானால், அவை இங்கு பதிந்ததன் நோக்கத்தை அடைந்து விடும்.

இங்கு முன் வைக்கப்படுபவை பெரும் நுகர்வுக்கு காரணமான எதோ சில காரணிகளை குறித்தவை அல்ல. ஆனால் பெரும் நுகர்வுக்கு அடிப்படையாக இருக்கும் நம் ஒவ்வொருவரின் போதாமை உணர்வை குறிப்பவை, நம் இயலாமை உணர்வை குறிப்பவை, நம் தூண்டுதல் உணர்வை குறிப்பவை. சுருங்கச் சொன்னால், எளியவர்கள் என தம்மை கருதிக்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும், நாம் அறியாமலே அல்லது அறிந்தும் அறியாமலே, வாழும் சூழலை நுகர்வின் மூலம் எவ்வாறு அழித்தொழிக்கிறோம் என பார்வையை நம்மீதே வைப்பது. ஆம் இந்த சுயநோக்கு நமக்கு ஒவ்வாததாக இருக்கலாம் - எனெனில் எவருக்கும் தாம் செய்வது சரியல்ல என அறிவது உவப்பானதாக இல்லாமல் போகலாம். அதற்காகவே தாம் செய்யும் தவறுகள் மேல் தங்களுடைய கூரிய பார்வை விழாமல் பார்வையை பிறர் பக்கம், நம்மில் பெரும்பாலானவர்களும், செலுத்த முயலுகிறோம். இது நம் பார்வையை பிறரிடமிருந்து நம்மேல் திருப்பி செலுத்துவதற்கான ஒரு சிறு முயற்சி.

நுகர்வு - இது எந்த உயிரினத்துக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை. இந்த உலகத்தில் முழுமுதல் இருப்பைத்தவிர வேறு எந்த ஒன்றும் தம்முள் முழுமையானவை அல்ல. இங்கு எந்த ஒன்றும் தன் இருப்பை உறுதி செய்ய மற்றொன்றை சார்ந்திருக்க வேண்டியது கட்டாயமானது. இந்த சார்ந்திருத்தலே அடிப்படையில் நுகர்வு எனப்படுவது. பூமியும் அதன் இருப்பை உறுதி செய்ய சூரியனை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதாவது பூமி இடைவிடாது சூரியனின் சக்தியை நுகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரினமும், மனிதர்கள் உட்பட, பிற உயிரினங்களை சார்ந்தே உயிர் வாழ முடியும். அடிப்படையில் உணவுதான் உயிர் வாழ்வதற்கான இன்றியமையாத தேவை. மிக மிக சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது பிற உயிரினங்களோ அல்லது பிற உயிரினங்களால் உருவாக்க பட்டவையோதான். அதாவது எல்லா உயிரினங்களும், தமது இருப்பை உறுதி செய்ய, பிற உயிரினங்களை தொடர்ச்சியாக நுகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக, இந்த பூமியில் உயிரினங்கள் நிலைத்திருக்க எல்லா உயிரினங்களின் சமநிலை பேணப்பட்டாக வேண்டும்.ஏனெனில் ஒரு உயிரினம் அழிந்தாலும் அதை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்துவிடும். மொத்த இருப்பு என்பது, (நாம் விரும்பினால் கடவுள் என்னும் வார்த்தையால் அதை குறிக்கலாம்) நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பெரும் நுண்ணறிவு உடையது. அது உயிரினங்களினிடையே, தனது நுண்ணறிவின் மூலம், ஒரு சமநிலையை பேணுகிறது. அந்த சமநிலையை அது எப்போதுமே பேணும். ஆம் மொத்த இருப்பு அல்லது கடவுள் சமநிலையை எப்போதுமே பேணும் - அந்த சமநிலையை பேண, தேவை ஏற்பட்டால், மனித இனத்தை அல்லது வேறு சிலவற்றை, முழுவதும் அல்லது தேவைப்படும் அளவுக்கு அழித்தாவது!

மனிதர்களை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் தங்கள் உணவுக்காகவும் இருத்தலின் அடிப்படை பாதுகாப்பிற்காகவும் மட்டுமே நுகர்தலில் ஈடுபடுகின்றன. எனவே மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களால், பூமியின் உயிர் இயக்கங்களில் பெரும்பாலும் சமன் நிலை குலைவதில்லை. மனிதர்களும், சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, உலக வாழ்வின் சமநிலையை குலைப்பதற்கான சக்தியை பெற்றிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, சீரான உந்து வேகத்தில் மனிதன் இயற்கை ஆற்றலை கையாளும் திறனை பெற்றுக்கொண்டுள்ளான், மேலும் பெற்றுக்கொண்டிருக்கிறான். சற்று மாற்றி கூறினால், சீரான உந்து வேகத்தில் (accelaration) இயற்கையை நுகரும் திறனை அதிகரித்து வருகிறான், அதிகமாக நுகர்ந்து வருகிறான்.

நாம் தனித்திறமைகள் எதுவும் இல்லாத சாதாரணர்களாக இருக்கும்போது அனைவரையும் போலவே நாமும் சாதாரணர்களாக இருந்து விடலாம். ஆனால் நாம் தனித்திறமைகளை பெற்றிருக்கும்போது, அந்த திறமையை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை பெற்றிருக்க வேண்டும். நம் உளவியல் சமநிலை குலைந்தால், நாம் பெற்றிருக்கும் தனித்திறமையே நம்மை அழிவுக்கு அழைத்து செல்லும். ஒரு உயிரினமாக நாம் தற்போது இயற்கை ஆற்றல்களை கையாள்வதற்கான திறனை சீரான வேகத்தில் பெற்று வருகிறோம். ஆனால் அதற்கு ஈடுகொடுக்கும் வேகத்தில், அந்த திறனை கையாள்வதற்கான உளவியல் சமநிலையை நாம பெற்றிருக்கவில்லை, பெற முயற்சிக்கவுமில்லை, பெற வேண்டும் என்று தெரியவுமில்லை. ஆக, நாம் பெற்ற இயற்கையை கையாளும் திறனே, நமது உளவியல் சமநிலையின்மையால், நம்மை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது. அந்த அழிவை நம்மால் உணர முடிந்நால், ஒருவேளை நம்மையும் பிற உயிரினங்களையும் அழிவின் விளிம்பிலிருந்து நம்மால் பாதுகாக்க முடியலாம். நாம் மிக வேகமாக அடைந்து வரும் அறிவு என்னும் திறனை நம்மால் கையாள முடியவில்லை என்றால் நாம் அறிவை அடையும் அதே வேகத்தில் அழிவையும் அடைந்து கொண்டிருப்போம். நாம் அழிந்தாலும், இயற்கை அல்லது உலகு அதன் சமநிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் - அவ்வறு நாம் அழிவது அதன் சமன் நிலையை பேணுவதற்காகவே இருக்கும்.

இங்கு அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க முடியலாம் என்பது, தற்போது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக தோன்றலாம். ஆனால் தற்போதைய உயிரினங்களின் நிலையை சற்று ஆராய்ந்தால், நாம் மிகவும் பாதுகாப்பான உலகில் வாழ்கிறோம் என்ற மாயையிலிருந்து வெளிவர உதவலாம்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்; தேவைக்கேற்றநுகர்வு: 

                                          Commercialismand Consumerism          
blog.change@gmail.com

No comments: