Sunday, June 23, 2024

கோவா பயணம் - 4

 

(5)

காலை ஏழுமணிக்கு கோவா நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். சுமார் நான்கு மணிநேர பயணம். கோவா எல்லைக்குள் நுழைந்த உடன் கோவா போலீஸ், சிறப்பான வரவேற்பை (Warm Welcome) அளித்தது.

நான் கார் வாங்கும்போது, இந்தியாவில், கார் கண்ணாடி Lamination, சில வரையறைக்குள் (Specification) அனுமதிக்கப்பட்டிருந்தது.. அந்த வரையறைக்குள் இருக்கும் Lamination Sheet கண்ணாடிகளில் ஒட்டியிருந்தேன். நான்கைந்து வருடங்களுக்கு முன், கண்ணாடியில் lamination செய்வது, முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் ஓட்டியதை அகற்றவில்லை. எனவே கோவா போலீஸ் ஐநூறு ரூபாய் அபதாரத்துடன் எங்களை கோவாவிற்கு வரவேற்றது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு, பயணத்தை தொடர்ந்தோம்.

இந்த பயணத்தை தொடங்கியபிறகு, முதன்முறையாக வாகன நெரிசலில் பயணிக்க வேண்டியிருந்த்து. காலை 11;00 மணி அளவில் கோவா தங்குமிடம் வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்து சேர்வதற்கு முன்பே, பாலா & கோ அங்கு வந்து சேர்ந்து, ஒரு கடற்கரைவிசிட்அடித்துவிட்டு, ஒருஅப்பார்ட்மென்ட்யும் ஆக்கிரமித்திருந்தார்கள். நாங்களூம் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டோம். சம்பிரதாயமான அரை மணி நேர அளவளாவல்களக்குப்பிறகு சிறிய ஓய்வு. சுமார் ஒரு மணி அளவில் பெரும்பாலானவர்கள் வந்து விட்டிருந்தனர். நண்பர்கள் கூடல் தொடங்கியது. 

இதன் பிறகு தனியாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அனைத்தும் பொதுஅனுபவங்களே.  அவற்றில் நான் தனியாக உணர்ந்த ஒன்றிரண்டை மட்டும் விவரிக்க முயல்கிறேன்.

நான் இப்போது பொது இடங்களுக்கும் சுற்றுலா இடங்களுக்கும் செல்லும்போது கண்டு ஆச்சரியப்படும் ஒரு விஷயம், அங்கு வரும் பெரும்பாலானவர்களுக்கு, அந்த இடத்தின் காட்சியனுபவமோ, செயலனுபவமோ முக்கியமில்லை. வருகிறார்கள் சுற்றிலும் பார்வையை ஒருமுறை ஓட்டுகிறார்கள், கைபேசியை எடுத்து ஒளிப்படங்களை சுட்டுத்தள்ளுகிறார்கள். முக்கியமாக அந்தப் படங்களில் அவர்களோ அவர்களின் மிகநெருங்கிய உறவுகளோ இருந்தாக வேண்டும். அந்த இடத்திற்கான சில செயல்களைச் செய்தாலும் அதையும் ஓளிப்படங்களாக்கி விடுகிறார்கள். ஒளிப்படம் எடுத்து முடியும்போது அந்த இடத்தை விட்டுச் செல்லும் நேரமும் வந்துவிடும். பணமும் நேரமும் செலவழித்து வந்த இடத்தில், வெறும் ஒளிப்படத்துடன் திரும்புகிறார்கள். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, ஓளிப்படங்களின் அழகியல் (Aesthetics) குறித்து எதுவும் தெரியாது. ஒரு ஒளிப்பட ஃப்ரேம் அமைப்பதற்கான எந்த அடிப்படைகளும் தெரியாது. இருந்தாலும் சுட்டுத்தள்ளுகிறார்கள். அவற்றில் ஒன்றிரண்டை தவிர மற்றவற்றை அவர்கள் பிறகு எப்போதும் பார்க்கப்போவதில்லை. சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றுகிறார்கள். பார்ப்பவர்களும், இவர்கள் முகத்தை பார்த்த உடன், WOW, GREAT, SUPERB போன்ற Cliché வார்த்தைகளையும் சில எமோஜிக்களையும் தூவுகிறார்கள். (அந்த வார்த்தைகளும் எமோஜிக்களும் கிடைப்பதற்கு, இவர்களும் அவ்வாறு செய்திருக்க வேண்டும்!) அத்துடன் முடிந்தது. இதில் காட்சியனுபவமும் இல்லை செயல் அனுபவமும் பெரும்பாலும் இல்லை, ஒளிப்படம் எடுக்கும் அனுபவமும் இல்லை (ஏனெனில் ஒளிப்பட அழகியலின் அடிப்படைகள் தெரியாது) பணமும் நேரமும் விரயம் ஆகியிருக்கும்.

நான் 2006-ம் வருடம் ஒரு டிஜிட்டல் SLR கேமரா வாங்கினேன். குறைந்தப்பட்ச Photography கற்றுக்கொண்டு, சில நல்ல படங்களையும் எடுத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற ஒரு கேமராவுடன் அலையும்போது எவற்றை படம் பிடிக்கலாம் என்றுதான் மனம் போகும். வேறு ஈடுபாடு பெரும்பாலும் இருக்காது. நான் Photography – ன் அழகியலில் ஆழ்ந்தவனும் இல்லை. எனவே சில வருடங்களுக்குப்பிறகு அதைத் தொடுவதில்லை. இப்போது ஒளிப்படங்களை எடுப்பதிலும் Pose கொடுப்பதிலும் பெரும்பாலும் ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில இடங்களில் ஒளிப்படம் எடுக்கத் தோன்றும். அந்நேரங்களில் அவற்றை எடுப்பதிலும் தயக்கம் இல்லை.

நான் இங்கு கூறவருவது ஒளிப்படத்தின் Aesthetics தெரிந்தவர்கள் மட்டும்தான் ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்பதோ, அல்லது அனைவரும் என்னைப்போல மாறவேண்டும் என்பதோ அல்ல. மாறாக, இத்தகைய செயல்களின் மனநிலையையும் அந்த மனநிலை நமக்குள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் அறிந்திருக்கவேண்டும். மேலதிகமாக, இது தவிர்த்த ஆழமான அனுபவங்களை அடைவதற்கான திறனுடன் நாம் இருக்கிறோம். விரும்புபவர்கள் அதை அடைய முயற்சிக்கலாம் என்பதுதான். இல்லை, இவ்வாறு இருப்பதிலேயே நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். இது மட்டும்தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று ஒருவர் கருதினால், அதற்கும் மாற்றுக்கருத்து இல்லை. அவரால் அனுபவிக்க முடிந்தது அவ்வளவுதான். அவர் அதில் திளைத்து மகிழ்வுறட்டும். இறுதியில் நாம் அடையும் அந்த மகிழ்வுணர்வே முக்கியமானது..

மேலே எழுதியவற்றை நியாயப்படுத்த மேலும் இரு கருத்தாக்கங்களை இங்கு முன்வைக்கிறேன். முதலாவதாக நாம் செய்வதை பிறருக்கு தெரியப்படுத்துவதில் மகிழும் மனநிலை எங்கிருந்து வருகிறது? இன்றைய உலகின் பொருளாதாரக் கொள்கைகள் நம்மை ஒரு விஷச்சுழலில் சிக்க வைத்திருக்கிறது. தொடர்ந்த நுகர்வு (Consumption) இல்லாமல் இந்த பொருளாதார சுழற்சி நிலையாக இருக்க முடியாது. எனவே பெரும் தொகை செலவிடப்பட்டு, நுகர்வுப்பொருட்களுக்கான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்களும், உளவியல் வல்லுனர்களின் துணையுடன், சாதாரண மனிதர்களின் ஆசையை தூண்டும்வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய விளம்பரங்களை பெரும்பாலானவர்களால் விலக்கவோ, விலகி இருக்கவோ முடியாது. அத்துடன் peer Comparison என்னும் மனநிலை. நம்முடன் இருப்பவர்கள் எதையாவது செய்தால், நம்மை அறியாமலே நமக்குள்ளும் அந்த தூண்டுதல் நிகழும். ஒரு தலைமுறைக்கு முன்புவரை அன்றிருந்த தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களின் குறுகிய எல்லைகள் காரணமாக பெரும்பாலானவர்கள், இந்த விஷச்சுழலுக்குள் வராமல் இருந்தார்கள். இன்று அவ்வாறு இல்லை. அதற்குள் வராமல் இருக்கபிரம்மபிரயத்தனம்தேவைப்படும்.

இன்னொன்று, நமது மனதின் அமைப்பு. ’மாண்டூக்ய உபநிஷதம்நமது அகஇருப்பை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது.  அவை  ஜாக்ரதி, ஸ்வப்னம், சுஷூப்தி, துரியம் ஆகியவை. தமிழில் கூறினால் விழிப்பு மனம், கனவு மனம், ஆழ்ந்த உறக்க மனம், கூட்டு ஆழ்மனம். இந்நிலைகளை அறிந்தவர்களாக தங்களை கூறிக்கொள்பவர்களிடமிருந்து தெரிய வருவது, ஜாக்ரதி நிலையில் நாம் அடையும் அனுபவங்களை விட ஸ்வப்னம் நிலையில் அடையும் அனுபவங்கள் ஆழமானவை. சுஷூப்தி நிலையில் அடையும் அனுபவங்கள் இன்னும் ஆழமானவை.. இங்கு ஸ்வப்னம் எனக்கூறுவது, நாம் உறங்கும்போது அடையும் கனவு அனுபவங்கள் மட்டும் இல்லை. விழிப்புடன் இருக்கும்போது கூட அடையும் ஆழ்மன அனுபவங்கள். அத்தகைய அனுபவங்களை அடைய, நாம் மனம் எனக்கூறும் அந்த ஒன்று அமைதியாக வேண்டும். Pheripheral thoughts creation என்னும் நிலையிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

நம் மனம் குறியீடுகளை (Symbols)  அடிப்படையாக கொண்டு இயங்குகிறது என்று தற்போதைய உளவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த உலகம் குறியீடுகளாக நம் நினைவுகளில் சேமிக்கப்பட்டிருக்கிறது. நம் செயல்கள், நமது புலனுபவங்களை இந்த குறியீடுகளுடன் ஒப்பிட்டு, அதன்விளைவாக எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து இருக்கும்.

அதாவது நாம் அடையும் அனுபவங்கள் குறியீடுகளாக நம் மூளையில் பதிவாகின்றன. அனுபவத்தின் ஆழம் அதிகரிக்கும்தோறும், மூளையில் பதியும் குறியீடுகளின் ஆழமும் மனதினுள் இருக்கும் பிற குறியீடுகளுடனான பரிமாற்றங்களும் ஆழமாக, செறிவாக இருக்கும். அவ்வாறாகும்போது வாழ்வும் செறிவுடன் இருக்கும்.

x               x               x                     x          x

 


இரண்டு நாட்கள் நண்பர்களுடனான கூடுகை, மிக இயல்பாக நடந்தேறியது. வந்த அனைவரும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் இருந்தனர். அதிலும் இரண்டு நாள் இரவிலும் நண்பர்களுடனான தனிக்கூடுகை, Nostalgia – க்களில் அமிழ்ந்து, ஒருவித பின்னோக்கிய பயண அனுபவத்தை அளித்தது. கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் Pressure relief Valve – களை முழுமையாக திறந்து விட்டு, ஒருவித சமநிலையுடன் திரும்பியிருப்பார்கள்.

 

1 comment:

Anonymous said...

Good to know these points through this writing

நமது மனதின் அமைப்பு. ’மாண்டூக்ய உபநிஷதம்’ நமது அகஇருப்பை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது. அவை ஜாக்ரதி, ஸ்வப்னம், சுஷூப்தி, துரியம் ஆகியவை. தமிழில் கூறினால் விழிப்பு மனம், கனவு மனம், ஆழ்ந்த உறக்க மனம்.

Pommiraj
.