நமது தனிப்பட்ட அடிப்படை இயல்பை
நாம் வாழும் சமூகத்தின் இயல்பே தீர்மானிக்கிறது. சமூகத்தின் இயல்பு, அதன் தனிப்பட்ட
உறுப்பினர்களின் இயல்புகளின் தொகுப்பு. ஆக தனிமனிதர்களின் இயல்பும் சமூகத்தின் பொது
இயல்பும் ஒன்றை ஒன்று தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாக்கி கொண்டே வருகிறது. நாம் வாழும்
சமூகம் கடந்த சில வருஷங்களில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அந்த மாற்றம் நம் தனிப்பட்ட
வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, அந்த மாற்றத்தின் அடிப்படை எங்கிருந்து
உருவானது என்பவற்றை நம்மால் அவதானிக்க முடிந்தால், தனிமனித மற்றும் சமூக மாற்றங்களில்
ஒன்றுடன் ஒன்றான தொடர்பை நம்மால் அறிய முடியும்.
சமூக மாற்றம், தனிமனித உளவியல்
மாற்றத்தில் தொடங்கி கருத்தாக உருபெற்று, அந்த கருத்து சமூக உறவுகளின் மூலம் வலிமைபெற்று
சமூக மாற்றமாக உருவெடுக்கிறது. இங்கு கருத்தியல் இயக்கம் என்பது சில அறிவுஜீவிகளால்
மட்டுமே சமூகத்தில் முன்னெடுக்கப்படும் என்று நாம் கருதினால் அது மிக மிக தவறான நம்
முன்முடிவு. சுயசிந்தனை உடைய எல்லா தனிமனிதர்கள் மூலமும் கருத்தியல் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்.
ஆனால் சுயசிந்தனை உடைய, எந்த கருத்தியலையும் தன் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தும்
தகுதியுடையவர்கள் பெரும்பாலும் எந்த சமூகத்திலும் மிகமிக குறைவானவர்களே இருப்பார்கள்.
இங்கு சுயசிந்தனை என்பது மிகமிக ஆழமான கருத்தாக்கம். எந்த கருத்தையும் நம் சிந்தனையின்
மூலம் மட்டுமே நம்மால் விரிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த முடியும். ஆனால் அந்த சிந்தனைகள்
நாம் ஏற்கனவே கொண்டுள்ள எண்ணற்ற முன்முடிவுகளை சார்ந்து இருக்கும். இத்தகைய முன்முடிவுகளாலான
எண்ணங்கள் மூலம் நாம் அடையும் கருத்தாக்கம் எப்போதும் சுயசிந்தனையால் உருவானவை இல்லை.
உண்மையில் நாம் சுயசிந்தனை உடையவர்கள் என்றால் நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட எந்த கருத்தையும்,
நம்பிக்கைகள் அல்லது முன்முடிவுகள் மூலம் நம்
கருத்துகளாக வெளிப்படுத்த மாட்டோம். உறுதியான அறிதல்கள் மூலம் நம்பிக்கைகளை
கடந்து சென்றபின், அந்த அறிதலை அடிப்படையாக கொண்ட சிந்தனைகளே சுய சிந்தனைகளாக வெளிப்படும்.
இதுவே படைப்பூக்கம் (Creativity)!
நாம் உண்மையில் சமூக பிரக்ஞ்சை
கொண்டவர்களாக இருந்தால் எந்த கருத்தையும் உருவாக்கியாக வேண்டும் என்பது அவசியம் இல்லை.
ஆனால் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் முன் நமக்கேயான நம் சுய
சிந்தனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சாதாரண மனிதர்களாகிய நாம் சமூகத்திற்கு
அளிக்கும் பெரும் பங்களிப்பு. ஒரு சமூகத்தை சார்ந்த பெரும்பாலானோர் சமூகத்தில் புழங்கும்
எந்த கருத்தையும் தங்கள் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தியபின் ஏற்றுக்கொள்ள தொடங்கினால்
அந்த சமூகம் நாம் அனைவரும் சார்ந்திருக்க விரும்பும் நம் கனவுசமூகமாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக பொதுமனித மனம்
அத்தகைய தகுதியுடையதாக இல்லை. ஒரு காரணம், பெரும்பாலானவர்கள் பெறும் கல்விமுறையாக இருக்கலாம்.
எல்லா மனித சமூகங்களிலும் பெரும்பாலும் தொழிலுக்கான கல்வியே அளிக்கப்படுகிறது. ஏனெனில்
மனித சமூக அமைப்பில் தொழில் இன்றியமையாதது. லொகீக வாழ்க்கையின் தேவைகளை தொழில் புரிவதன்
மூலமே எந்த ஒரு தனிமனிதனும் சமூகத்திலிருந்து பெறமுடியும். எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மை
மக்களின் தேவைகள் லொகீக தேவைகளே. எனவே அளிக்கப்படும் கல்வியும் தொழில் சார்ந்ததாகவே
இருக்கும்.
மிகச்சில மனிதர்களுக்கு மட்டுமே
லொகீக வாழ்க்கையுடன் அதை கடந்த தேவையும் இருக்கிறது. மிகமிக குறைவானவர்களுக்கு லொகீக
வாழ்க்கையே தேவை இல்லாமலும் இருக்கிறது. இந்த இரு சாரர்களால் மட்டுமே கருத்தியல் இயக்கங்களை
முன்னெடுத்து செல்ல முடியும். இந்த மிக மிக குறைவான மனிதர்கள் தங்கள் உண்மையான கல்வியை
வெகுஜன கல்விக்கு அப்பால்தான் பெற முடியும். ஒருவேளை தொழில் சார்ந்த கல்வியிலும் சுயசிந்தனையை
ஊக்குவிக்கும் சமூகங்களில், லொகீக வாழ்க்கையை கடந்த தேவைகளுக்கான கல்வி, தொழில் கல்விக்கு
ஊடேயும் பெற சாத்தியங்கள் இருக்கலாம். அந்த சாத்தியங்கள் இருந்தாலும் இந்த சிறுபான்மையினரால்
மட்டுமே அந்த சாத்தியங்களின் உச்சத்தை எட்ட முடியலாம். அத்தகைய சாத்தியங்களை உள்ளடக்கிய
கல்வி முறை இருந்தால் லொகீக மனிதர்கள் கூட, சிந்தனையின் சாத்தியங்களை குறித்த உணர்வுடன்
இருக்க கூடும் - அவர்கள் அந்த சாத்தியங்ளை தங்களுக்காக தேர்ந்தெடுக்காவிடில் கூட! ஆக
சமூகத்திற்கு நாம் அளிக்கும் பங்களிப்பு, லொகிக வாழ்க்கையை கடந்த நம் தேவைகளை, அவ்வாறு
ஒரு தேவை இருந்தால், அறிவதிலிருந்தே தொடங்குகிறது. ஒருவேளை லொகீக வாழ்க்கை கடந்த தேவை
நம் வாழ்வில் இல்லாவிடில், நாம் லொகீக வாழ்க்கையை வாழ்வதிலேயே முழுமை அடைவோம். அந்த
வாழ்க்கையில் நமக்கென எந்த ஏமாற்றங்களும் அடையமுடியாதவைகளும் இல்லை. அந்த லொகீக வாழ்க்கையை
முழுமையாக வாழ்வதே நம் ஆன்மீக சாதனையாகவும் இருக்கும்.
எந்த சமூகத்திலும் நேர்மறை மற்றும்
எதிர்மறை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, அவற்றின் கலங்கிய இயக்கமே சமூக இயக்கமாக
வெளிப்படுகிறது. ஒரு சமூகம் நேர்மறையான பாதையில் உள்ளதா அல்லது எதிர்மறையான பாதையில்
உள்ளதா என்பதை அந்த சமூகத்தில் எத்தகைய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது முடிவு
செய்கிறது. சமூகத்தில் எந்த ஒரு நேர்மறையான கருத்தியல் இயக்கம் முன்னெடுக்கப்படும்போதும்,
அதை இல்லாமல் செய்யும் ஒரு எதிர்மறை இயக்கமும் தோற்றுவிக்கப்படும். அந்த எதிர்மறை இயக்கம்
பெரும்பாலும் சமூகத்திடம் ஆதரவை பெறும். அதற்கு முக்கியமான காரணம், ஒரு கருத்தியல்
இயக்கம் என்பது சமூகத்தின் தற்போதைய இயங்குமுறையை மாற்றியமைக்க கோருவது. லொகீகத்தில்
உழலும் சமூகம் சமூகத்தின் எந்த மாற்றத்தையும் லொகீக இருப்புக்கு சவாலாகவே எடுத்துக்கொள்ளும்.
எனவே சமூக மாற்றத்திற்கான நேர்மறையான கருத்தியல் இயக்கத்தை எதிர்த்து இல்லாமல் செய்யும்
எதிர்மறை கருத்தியல் இயக்கத்தை, சுயசிந்தனை இல்லாத சமூகம் எளிய முன்முடிவுகள் மூலம்
ஆதரித்து நேர்மறை கருத்தியல் இயக்கத்தை இல்லாமல் செய்து விடும். இதற்கு சமீபத்திய உதாரணம்
அண்ணா ஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான கருத்தியல் இயக்கம்!
blog.change@gmail.com
No comments:
Post a Comment