Sunday, June 23, 2024

கோவா பயணம் - 3

(3)

காலை சுமார் 6;30 மணி அளவில் பயணத்தை தொடங்கினோம். 7;30 மணிக்கு சற்று முன்பு ஹளபீடு ஹொய்சாலேஸ்வரா கோவிலுக்கு சென்று சேர்ந்தோம். காலை உணவுக்கு பிறகு கோவிலுக்குள் சென்றோம். இது இரண்டு கருவறைகளை கொண்ட கோவில். ஒரு கருவறையில் சிவலிங்கம் உள்ளது. மற்றதில் உள்ள சிலை, பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில், ஐரோப்பாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஹொய்சால கோவில்களிலிருந்து எடுத்து செல்லப்பட்ட கலை பொக்கிஷங்கள், கோபன்ஹேகன் மியூசியத்தில் இருப்பதாக வாசித்த நினைவு இருக்கிறது.

இந்த கோவில் பற்றி விவரிப்பு இங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு மேலே இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.. பின்னர் அருகிலிருக்கும் கத்ரீஸ்வரா கோவில், இரு சமணர்களின் கோவில்களை ரசித்து விட்டு சுமார் 11;00 மணி அளவில் பேலூர் சென்றோம். இருபது நிமிட பயணம். செல்லும் வழியில் கார் Fuse பிரச்சனையை சரிசெய்து விட்டோம்.

பேலூர் வீரநாராயணர் கோவில், இன்றும் முழுமையான வழிபாட்டுடன் இருக்கிறது. எனவே கோவிலில் மக்கள் திரளும் மிக அதிகம். இந்த கோவிலும், சோமநாதபுரா, ஹளபீடு கோவில்கள் போலவே, அலங்காரங்களுடனும், இடைவெளி இல்லாமல் சிற்பங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினால் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது..

மதியம் 1;30 மணி அளவில் ஸ்ருங்கேரி நோக்கி பயணித்தோம். ஒரு கவனக்குறைவின் காரணமாக சுமார் ஒரு மணி நேர விரயமும் 45 கிமீ தேவையற்ற பயணமும் ஏற்பட்டது. கர்நாடகத்தில் இரண்டு ஸ்ருங்கேரிகள் உள்ளன. ஒன்று ஸ்ருங்கேரி தட்சிண கன்னடம் என்றும் மற்றது ஸ்ருங்கேரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விபரங்கள் தெரியாததால் கூகுள் மேப்-இல் தவறான ஸ்ருங்கேரியை தேர்வு செய்து அதை நோக்கி பயணித்தோம். ஒரு சாலை சந்திப்பில் கூகுள் மேப் சற்றே தடுமாற, நானும் தடுமாறினேன். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர் தன்னிச்சையாக எங்களிடம் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு எங்கள் தவறை சுட்டிக்காட்டினார்இந்த தகவல் பரிமாற்றம் ஒரு புறம் கன்னடத்திலும் மறுபுறம் தமிழிலும் நிகழ்ந்து, திராவிட மொழிகளின் ஒற்றுமையை பறைசாற்றியது.

ஒரு சிறு மனக்கிலேசத்திற்கு பிறகு, உற்சாகத்தை மீட்டுக்கொண்டு, ஸ்ருங்கேரி நோக்கி பயணித்தோம். எங்கள் பயணத்திட்டத்தில், நேரம் இருந்தால் மட்டுமே ஸ்ருங்கேரி செல்லவதாக நினைத்திருந்ததால், ஸ்ருங்கேரியில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக திட்டமிடவில்லை. ஸ்ருங்கேரியில், செல்வதாக இருந்தால், விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க வித்யாசங்கர கோவில் மட்டுமே எங்கள் விருப்பமாக இருந்தது. திட்டமிடலில் உள்ள குறைபாட்டால் கோவில் பெயரை எங்கும் குறித்து வைக்கவில்லை. அத்துடன் கோவிலின் பெயரும் மறந்து விட்டது. எனவே மாலை சுமார் 5;30 மணிக்கு ஸ்ருங்கேரி வந்து சேர்ந்தாலும், ஒரு மணி நேரம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தோம். இறுதியில் இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை பார்க்க வேண்டியவற்றை பார்த்து விட்டு கிளம்பலாம் என முடிவு செய்து, தங்கும் இடத்தை தேட ஆரம்பித்தோம். இந்தத் தேடலில், ஸ்ருங்கேரி சாரதா மடம் கோவிலின் கோபுரம் சற்று தூரத்தில் தெரிந்த்து. சரி, அங்கு சென்று பார்த்துவிட்டு தங்குமிடம் தேடலாம் என அந்த கோவிலுக்குள் சென்றோம். நாங்கள் பெயர்தெரியாமல் தேடிக்கொண்டிருந்த வித்யாசங்கர கோவில், அதே வளாகத்தினுள் இருந்தது.. ஓரே மனக்குறை, இந்தக் கோவிலை இரவில் பார்க்க வேண்டி வந்தது.  அதன் அழகை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. எனினும் குறையொன்றும் இல்லை. கோவிலை விட்டு வெளியே வரும் வழியில், அனைவருக்கும் மிகப்பெரிய வளாகத்தில் உணவளித்துக்கொண்டிருந்தார்கள். அங்கேயே இரவுணவை முடித்து விட்டு, தங்கும் இடம் தேடி அன்றைய நாளை முடித்துக்கொண்டோம்.

 

(4)

 

ஸ்ருங்கேரியில் பார்க்க விரும்பியதை பார்த்து விட்டதால், காலை 6;00 மணிக்கே அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தோம். கிழக்குத்தொடர்ச்சி மலை வழியாக தக்காணபீடபூமியில் நுழைந்த நாங்கள், மேற்குத்தொடர்ச்சி மலை வழியாக வெளியேறினோம். சுமார் 08;00 மணி அளவில் உடுப்பி சென்றடைந்தோம்.

உடுப்பி கோவில் கர்ப்பகிரஹம், கிட்டத்தட்ட கேரள கோவில்கள் போலவே இருந்த்து. நாங்கள் சென்ற நேரத்தில், இங்கு கூட்டம் பெரியதாக இல்லை. சுமார் 15 மீ தூரத்துக்கு மட்டும்தான் வரிசை இருந்தது. இந்தக் கோவிலில் என்னைக் கவர்ந்தது, கர்ப்பகிரஹத்தின் முன்பிருக்கும் சிறு  மண்டபத்தில், தரிசிக்க வருபவர்கள் அமர்ந்திருக்க அனுமதி உண்டு. எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் கர்ப்பகிரஹத்தின் அருகில் தங்கள் பக்தியை செலுத்திவிட்டு, கேட்பவற்றை கேட்டுவிட்டு சென்றுகொண்டே இருந்தார்கள். ஒரு வயதான தம்பதியினர் அங்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். ஒருசிலர் மட்டுமே கோவிலில் அமர்ந்திருக்கும் உணர்வுடன் இருந்தனர். நாங்கள் சுமார் 15 நிமிடம் அங்கு அமர்ந்துவிட்டுச் சென்றோம்.

இத்துடன் வேதாந்தத்தின் மூன்று முக்கியமான கிளைகளான, அத்வைதம். (வித்யாசங்கர) விசிஷ்டாத்வைதம் (சென்னகேசவா), த்வைதம் (உடுப்பி பாலகிருஷ்ணா) சார்ந்த கோவில்களுக்கும் சென்று விட்டோம்.



உடுப்பியிலிருந்து சுமார் 10;00 மணி அளவில், முர்தேஷ்வர் நோக்கி பயணத்தை மேற்கு கடற்கரைச் சாலை வழியாக தொடங்கினோம். மதியம் 12 மணிக்கு முர்தேஷ்வர் வந்து சேர்ந்தோம். முர்தேஷ்வரா கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வரும்போது, கோவிலின் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தில் அனைவருக்கும் உணவளிக்க தொடங்கியிருந்தார்கள். எங்கள் மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம்.

அடுத்ததாக மதியம் 3;00 மணி அளவிற்கு, கோகர்ணா நோக்கி, மீண்டும் மேற்கு கடற்கரை சாலை வழியாக பயணத்தை தொடர்ந்து நான்கு மணிக்கு கோகர்ணா வந்து சேர்ந்தோம். கோகர்ணாவை நெருங்கும்போதே அது ஒரு முக்கியமான சுற்றுலாவுக்கான இடம் எனத் தெரிந்தது.. அழகிய கடற்கரைகளும். கடற்கரை விளையாட்டுகளுக்குமான இடம். இந்த வயதில் கடற்கரைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாததாலும், சற்று முன் பெய்து முடிந்திருந்த மழை, கடற்கரைகளை ஈரப்படுத்தியிருந்ததாலும், கடற்கரைகளுக்கு செல்வதை  தவிர்த்தோம். ஆனாலும், மஹாபலீஸ்வர் கோவில் அந்த நேரத்தில் மூடப்பட்டிருந்த்தால் கோவில் அருகில் இருக்கும் கடற்கரையில் சற்று நேரம் செலவிட்டோம்.

கோவிலுக்கு அருகே, ஒரு நீரோடை கடலுடன் கலந்து கொண்டிருந்தது. அது கோகர்ணா நகரின் சாக்கடையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் மழைபெய்திருந்ததால், பாதி சாக்கடை நீரும் மீதி பிளாஸ்டிக் குப்பைகளுமாக, பெரும்பாலும் PET தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் Packing பைகள் கடலில் கலந்து கொண்டிருந்தன. இந்தக் காட்சி கடற்கரைகளின் மேல் மேலும் ஒவ்வாமையை உருவாக்கியது.

நாமிருக்கும் இந்த பூமியில், ஒவ்வொரு உயிரினமும் உருவாக்கும் கழிவுகளும் வேறு ஏதேனும் உயிரினத்துக்கு உணவாக மாறிக்கொண்டிருக்கும். மனிதர்களாகிய நாமும், ஒரு நூறாண்டுக்கு முன்புவரை வேறு உயிரினங்களுக்கு உணவாகும் கழிவுகளையே உருவாக்கிக்கொண்டிருந்தோம். ஆனால் இன்று, தொழில்நுட்பம், நாகரீகம், வசதி என்னும் பலபெயர்களில் எவற்றுக்கும் உணவாகாத, ஆனால் விஷமாக மாறும் கழிவுகளை தொடர்ந்து உருவாக்கி பூமியில் நிறைத்து, பூமியின் காற்று மண்டலத்திலும் நிறைத்து, கடலிலும் நிறைத்துக்கொண்டிருக்கிறோம்எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல்! நாம் செய்வது தவறு என்று அறிந்தால்தானே குற்ற உணர்ச்சி வருவதற்கான வாய்ப்பு உண்டு! இன்றைய பொருளாதார எஞ்சின்அத்தகைய அறிவு நம்மை எட்டாமல் பார்த்துக்கொள்கிறது. வேறு என்ன சொல்ல? இந்தக் கழிவுகளின் ஊற்றுமுகமான Oil & Gas சார்ந்த தொழில்தான் இன்று நான் அடைந்திருக்கும் அனைத்து வசதிகளையும் எனக்கு அளித்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறேன் என்னும் நிதர்சனம் சிறு மனநிறைவையும் அளிக்கிறது.

மாலை 5;00 மணிக்கு பிறகு, கோவிலுக்கு சென்று வரிசையில் காத்திருந்தோம். சுமார் 45 நிமிட நகர்வுக்குப்பிறகு கர்ப்பகிரஹத்தை அடைந்தோம். இங்கிருக்கும் லிங்கத்தை தொட்டுவணங்க அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தக்கோவிலின் அமைப்பைப் பற்றி அறியாமல் சென்றால், என்ன செய்கிறோம் எனத்தெரியாமல், அனைவரையும் போல, எதையோ தொட்டுவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அதைத்தான் செய்தோம்.

அப்போதிருந்த மனநிலையில், வேறு கடற்கரைகளுக்கு செல்ல தோன்றவில்லை. நேராக தங்குமிடம் தேர்வுசெய்து அறையெடுத்து தங்கினோம். நல்லதொரு உறக்கம்!

No comments: