(8)
காலை 6;30 மணிக்கு மீண்டும் ராமாசாமி, சுபா வீடு சென்று, ஒரு அருமையான காபி அருந்தி விட்டு, 7;00 மணிக்கு பயணத்தை தொடங்கினோம். காலை 10 மணி அளவில் ஓகனேகல் சென்று சேர்ந்தோம்
. அங்கு ஆற்றில் நீர் ஓரு ஓடை போல சென்றுகொண்டிருந்தது. அதுவும் சாக்கடை போல் பார்வைக்கு தோற்றமளித்தது. (ஓருவேளை என் கண்ணுக்கு அனைத்தும் சாக்கடையாக தோற்றமளிக்கிறதோ என்னவோ?) அங்கு வேறு எதுவும் செய்யவில்லை. கொஞ்ச நேரம் அங்கு சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.சேலம் நகரை கடந்த உடன் ஓரு A2B உணவகம் இருந்தது.
இந்த பயணத்தின் இறுதி உணவை அங்கே முடித்து விட்டோம். சில இனிப்புப்பொட்டலங்களையும் வாங்கினோம் (இனிப்புகளை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தர முயன்றார்கள். அதைத் தவிர்த்து காகித பொட்டலங்களில் – உள்ளே அலுமினியம்
Foil இருந்தது, அவற்றை வாங்கினோம்.
நாகர்கோவில்வரைக்கும் பயணம், நடுவில் இரு
சிறு நிறுத்தங்களுடன் தொடர்ந்தது.. நாகர்கோவிலை நெருங்கும்போது
மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.
நான் மிகவும் வெறுக்கும் சாலைகளில் ஒன்று, நாகர்கோவில் திருவனந்த புரம் சாலை. மார்த்தாண்டம்
இந்த சாலையில், நாகர்கோவிலிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது. சாதாரண நேரங்களில் இந்த தூரத்தை
கடக்க ஒரு மணி நேரம் ஆகும். நெரிசல் உள்ள நேரங்களில் ஒன்றரை மணி
நேரத்திற்கும் அதிகம். பெரும்பாலும் இந்த சாலை குண்டும் குழியுமாக
இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது,
கடும் வாகன நெரிசல், இரண்டாவது இங்குள்ள தொடர்
மழைக்காலம். இவை இரண்டுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில்
பொதுவாக அமைக்கப்படும் தரமற்ற சாலைகள்.
1999-ம் வருடம் இங்கு நடந்த மக்களவை தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன்
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வாஜ்பாயி அவர்கள் தலைமையிலான
அரசாங்கத்தில் துணை அமைச்சராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார். முன்பு நாகர்கோவில் தொகுதி என்றும் இப்போது கன்னியாகுமரி தொகுதி என்றும் அழைக்கப்படும்
இத்தொகுதியின் உறுப்பினர்களில் ஒருவர், இந்தத் தொகுதிக்காக எதையாவது செய்திருந்தால்,
அது பொன்.
ராதாகிருஷ்ண்ன அவர்கள் மட்டும்தான். அந்த நேரத்தில்
தொடங்கப்பட்ட தங்க நாற்கரை சாலை திட்டத்தில், கன்னியாகுமரி,
திருவனந்த புரம் சாலையையும் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டமான கன்னியாகுமரியில், சாலைக்கான நிலம் ஒதுக்குவதில் வந்த இடர்பாடுகளால் அப்போது அந்த திட்டம் நிறைவேறவில்லை.
அடுத்த இரண்டு தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். 2014 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, நரேந்திர மோடி அவர்கள்
தலைமையிலான அரசாங்கத்தில் நெடுசஞ்சாலைத் துறை துணை அமைச்சராகவும் பின்னர் மேலதிகமாக
நிதித் துணை துணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்த காலத்தில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு முக்கியமான மேம்பாலங்கள் அமைக்க வைத்தார்.
கன்னியாகுமரி திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்து,
சாலை அமைப்பதில் சுமார் 50% பணியும் முடிக்க வைத்தார்.
ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் அவர் வெற்றி பெறவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சாலை பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
ஐனநாயகம் குறித்து நான் மிகவும் ஆச்சரியப்படும் ஒன்று இதுதான். அவர்கள் தொகுதியிலி,ருந்து
ஒருவர் முதல்முறையாக அமைச்சராகி, முதன்முறையாக தொகுதிக்காக பலவற்றை
செய்திருக்கிறார்.. ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை.
பத்து வருடங்கள் சென்ற பிறகு மீண்டும் ஒருமுறை அமைச்சராகி இன்னும் பலவற்றை
செய்திருக்கிறார். ஆனால் அதன் பிறகும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இத்தனைக்கும் இடைக்காலத்திலும் அதற்கு முன்பும் MP ஆக இருந்தவர்கள் வெறும் பெயரளவில்தான் இருந்திருக்கிறார்கள். எனில் ஜனநாயகத்தில் மக்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? தங்கள் MP – க்கள் எதுவும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லையா?
வெறும் ஜாதி, மதம் ஆகிய தூண்டுதல்கள் மட்டும் அவர்களுக்கு
போதுமானதா?
என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்தத் தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும்
மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தவறாமல்
அளித்து வந்த ஒரு வாக்குறுதி உண்டு. ‘நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைத்துத் தருவேன்.’
குளச்சல் ஒரு கடற்கரை கிராமம். திருவிதாங்கூர் அரசர் காலத்தில் அவர்களின்
துறைமுகமாக இருந்தது.. பொன். ராதாகிருஷ்ணன்
அவர்கள் முயற்சியில் குளச்சல் துறைமுகம் கட்டுவதற்கான இறுதி திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு
பட்ஜெட் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால், முன்பு இங்கு துறைமுகம் அமைத்துத் தருவோம் என்று உறுதியளித்த அனைவரும் சேர்ந்து
துறைமுகத்துக்கு எதிராக போராடினார்கள். திட்டம் கைவிடப்பட்டது.
உண்மையில் இங்கு ஜனநாயகம் வர, இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம். அதற்கும் மக்களுக்கு ஜனநாயகம்
என்றால் என்ன என்னும் அறிதலை உருவாஈக்கவேண்டியிருக்கும். அதற்கு
முதல் தடை பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரத்தை கைப்பற்றும்
கனவுடன் இருப்பவர்கள்! தடைகள் எப்போதாவது உடையட்டும்!
நல்ல வேளையாக தூறல் மட்டும் தான் இருந்தது. ஆனால் இது இரவு நேரம். கண்டாடியில் ஒளிச்சிதறல்கள்
ஏற்பட்டு, சாலை தெரியவே இல்லை. 25 கிமீ
தூர சாகச பயணம். முன் செல்லும் வாகனத்தின் Tail lamp
– ஐ மட்டும் Reference
-ஆக கொண்டு பயணம். இங்கு முன்னே செல்வதற்கு வாகனங்களுக்கு
குறைவில்லை. சாலையின் அகலம் காரணமாக, நான்
வழிவிட்டால்தான் அவை முன்னே செல்ல முடியும். ஒரு வாகனத்தை தொடர
முடியவில்லை என்றால், அடுத்த வாகனத்துக்கு வழிவிட்டு தொடர்ந்து
கொண்டிருந்தேன். ஒரு வழியாக மார்த்தாண்டம்
வந்தடைந்து அங்கிருந்து 3 கிமீ பயணித்து வீட்டை அடைந்தோம்.
ஒரு நீண்ட பயணம் இனிதாக முடிந்தது.
இந்த பயணத்தில் சுமார் 2800 கிமீ தூரம்
பயணித்திருக்கிறோம். வெறும் இரண்டுபேருக்காக 210 லி டீசல் எரித்திருக்கிறோம். இடையில் பூமியின் சூழலை
மனிதர்கள் தங்கள் நுகர்வுக்காக அழிக்கிறார்கள் என்று எல்லாம் பேசியிருக்கிறோம்.
இது Hypoicrisy இல்லையா?
ஒரு கோணத்தில் பார்த்தால் இது
hypiocrisy தான். இன்னொரு கோணத்தில் அது எனக்கான
தேவை. என் வாழ்க்கைக்கான தேவை. என் அனுபங்களுக்கான
தேவை. உண்மையிலே என் இருத்தலுக்கான அர்த்தமேற்றலின் தேவை.
அவ்வாறு எதை நான் அடைந்தேன்? எந்த அரிதான அனுபவங்களை
அடைந்து அதை என் வாழ்க்கையாக்கிக் கொண்டேன்? அதை என்னால் விளக்க
முடியும் என்று தோன்றவில்லை. இந்த பயணத்தில் புறவயமான கவனம்,
அதை சிதறவிடாமல் தொடர்ந்து பலமணி நேரங்கள் வைத்திருந்த்து ஆகியவை என்
வாழ்வின் முக்கியமான அனுபவங்கள். ஒரு வேளை இந்த புறவயமான கவனத்தை
அகவயமாக என்னால் எப்போதாவது திருப்பி விட முயன்றால் அப்போது நான் முற்றிலும் இன்னொருவனாக
மாறியிருப்பேன்!
No comments:
Post a Comment