Tuesday, May 31, 2011

தேவைக்கேற்ற நுகர்வு

சில தலைமுறைகளுக்கு முன்புவரை உலகமெங்கும் இருந்த சமூகங்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காகவே செலவிட வேண்டியிருந்திருக்கும். எனவே தேவைக்கு அதிகமான நுகர்வு என்பதற்கான வாய்ப்பு மனிதர்களில் பெரும்பான்மையினருக்கு இல்லாமலேயே இருந்திருக்கும். ஆனால் இன்றைய சமூக அமைப்புகளின் இயங்குமுறை முற்றிலும் வேறானதாக உள்ளது. பெரும்பாலான சமூக அமைப்புகளில் மக்களின் தேவைகளை எளிதில் அடைவதற்கு வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கென உள்ள நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது – இங்குதான் நுகர்வு என்பது, தேவைக்கேற்ற நுகர்வு என்பதிலிருந்து முடிந்தவரை நுகர்வு என்னும் பரிணாமத்தை அடைந்திருக்க கூடும். நமது நுகர்வு கலாச்சாரம் இரண்டு காரணிகளால் வழி நடத்தப்பட்டிருக்கலாம். முதலாவது காரணி நம் வாழ்க்கையில் மிச்சப்படுத்தப்படும் நேரம். சமூகங்களில் பாதுகாப்பு உருவாகாதவரை, நமது மனம் நம் வாழ்க்கையில் தப்பி பிழைப்பதற்காக எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தற்காலத்தில் சமுதாய அமைப்புகள் வழங்கும் பாதுகாப்பின் மூலம், மனம் பாதுகாப்பு சார்ந்த செயல்களிலிருந்து பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில செயல்களிலிருந்து விடுபட்ட மனம், காலம் என்னும் பொறியினுள் விழுந்து விடுகிறது.
நமது மனம் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போது, காலத்தைப்பற்றிய பிரக்ஞை அற்று இருக்கிறது. மனம் உணர்வதற்கு அல்லது ஈடுபடுவதற்கு எதுவும் இல்லாதபோது, அந்த தீவிர உணர்வுகள் அல்லது செயல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை காலமாக கற்பனை செய்து கொள்கிறது. நமது மனதினால் காலத்தினுள் இருக்க முடிவதில்லை – அதாவது நம் மனதினால் உணர்வு அல்லது செயல்பாடு இல்லாமல் இருக்க முடிவதில்லை. இவ்வாறு நம் மனதினுள் அடிப்படை செயல்பாடு தேவை இல்லாதபோது நம் மனத்திற்கு சாத்தியமானது – அது உள்நோக்கி திரும்பி தன்னையே உணர தொடங்கலாம் அல்லது வெளிநோக்கி திரும்பி புலன்களால் உணரப்படுவதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். அவ்வாறு மனம் காலத்தை இல்லாமல் செய்ய வெளி நோக்கி திரும்பினால் வெளியில் உள்ளவற்றை நுகர்வதன் மூலமே மனதால் காலத்தின் மேல் பயணிக்க முடியும். ஆக காலத்தை கடக்க வெளிநோக்கி திரும்பும் மனம் நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

நுகர்வு கலாச்சாரத்தின் இன்னொரு காரணி, சமூகத்தின் பொருளாதார தேவைகள். சமூக கட்டமைப்பின் மூலம் அந்த சமூகத்தினுள் செயலின் தேவையின்மையை உருவாக்கிய அதே நேரத்தில், சமூக கட்டமைப்பை உறுதி செய்ய பொருளாதார தேவைகளையும் சமூகம் உருவாக்கியுள்ளது. ஒரு சமூகத்தின பொருளாதார கட்டமைப்பு, அந்த சமூகத்தின் நுகர்வுக்கு ஏற்றவாறே அமையும். ஒரு சமூகத்தின் நுகர்வுத் தேவை சமன் நிலையில் இருக்கும்போது, அந்த சமூகத்தின் பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்கும், சமூகத்தின் நுகர்வும், பொருளாதார தேவைகளும் சமன் நிலையில் இருக்க, அந்த சமூகம் காலத்தை கடக்க புலன்களின் தேவை சமன் நிலையில் இருக்க வேண்டும். காலத்தை கடக்க புலன்களின் தேவையை சமன்நிலையில் வைத்து கொள்ள, மனம் உள்நோக்கி திரும்புவதை விட வேறு வழி இல்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், நுகர்வின் சமன்நிலையை அடைய ஆன்மீகம் மட்டுமே வழி!

ஆக, தேவையில்லாத நுகர்வு என ஒன்று இல்லை. காலத்தை கடக்க வேண்டியது மனதின் தேவை. காலத்தை கடக்க மனம் புலன்களை பயன்படுத்தும் எல்லை விரிவடையும்தோறும் நுகர்வின் தேவையும் விரிவடைந்தபடியே இருக்கும். அல்லது, தனிமனித மற்றும் சமூகத்தின் நுகர்வு சமன்நிலையை இழந்து விரிவடைந்தபடியே இருக்கும். நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் காலத்தை கடப்பதற்கு புலன்களின் தேவையற்று இருக்க வேண்டும். அதாவது, மனம் புலன்களிலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டியதன் தேவை என்ன? நம் சந்ததியினர் இந்த உலகில் வாழ்வதற்கான சாத்தியம், நம் தலைமுறையில் (பின் வரும் தலைமுறைகளிலும்) நுகர்வை சமன்நிலையில் வைத்திருப்பதை பொறுத்தே உள்ளது. 800 கோடி மக்கள் நுகர நுகர குறையாமல் இருக்க இந்த உலகம் ஒரு காமதேனுவோ அல்லது அட்சயபாத்திரமோ அல்ல. உலகம் அதன் தோற்ற காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட ஆதார சக்தியுடன், ஆதார இயல்புகளுடன், ஒரு சமன்ன்நிலையில் இருந்து வந்துள்ளது. நம் அல்லது நம் சந்ததியினரின் நுகர்வின் மூலம் அந்த சமன்நிலை குலைக்கபடாதவரைக்கும் இந்த உலகில் மனித இனமும் மற்ற உயிரினங்களும் வாழ முடியும். ஒருவேளை அந்த சமன்நிலை குலைக்கப்பட்டால், அதன் விளைவுகளை நாம் சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு ஒரு நிலைமை நமக்கு ஏற்படுமானால், அதன்பின் எந்த கடவுள்களாலும், யாகங்களாலும், பூஜைகளாலும், வேண்டுதல்களாலும் அந்த சமன்நிலை குலைவின் விளைவுகளை தவிர்க்க முடியாது.

ஆக, இந்த உலகம் நாமும், நம் சந்ததியினரும் வாழ உகந்ததாக இருக்க வேண்டுமென்றால், அதன் ஆதார இயல்புகள் சமன்நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு, இந்த உலகின் பெரும்பான்மை சக்தியை நுகர்பவர்களாகிய நாம், நமது நுகர்வை சமன்நிலையில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நமது நுகர்வு சமன்நிலையில் இருக்க வேண்டுமானால், மனம் அதன் காலத்தை கடப்பதற்கு, புலன்களை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும். அதாவது மனம் உள்நோக்கியும் திரும்ப வேண்டும் – ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே நமது நுகர்வை சமன் நிலையில் வைத்திருக்க முடியும். இங்கு ஆன்மீகம் என்பது கடவுள்களையோ, கோவில்களையோ, பூஜைகளையோ, வழிபாடுகளையோ, வேண்டுதல்களையோ குறிக்கவில்லை. மனம் உள்நோக்கி திரும்பி, தன்னில் தானே ஈடுபடுவதையே குறிக்கிறது – மேலே குறிப்பிட்ட பொருள்கள் அல்லது செயல்கள் அதற்கு காரணிகளாக இருந்தாலும், இல்லாவிடிலும்!

No comments: