Saturday, February 15, 2014

இச்சை

இச்சையின் இயக்கம் நம் மனதினுள் ஆசையையும் விருப்பங்களையும் தோற்றுவிக்கும் இயக்கம். ஒரு புறம் ஆசைகளை துறக்க வேண்டும் என்று நம் பண்பாடு போதித்துக்கொண்டிருக்கும்போது, அதே பண்பாடு ஆசைகளை உருவாக்கும் அடிப்படை சக்தியான இச்சா சக்தியை கடவுளாக வணங்கவும் செய்கிறது. இருமை மனநிலையில் இருக்கும்போது நிச்சயமாக இது ஒரு முரண்பாடுதான். ஆனால் அந்த முரண்பாட்டை ஒருங்கிணைத்து, புரிதலுடன் நம் இயக்கம் அமைந்தால், அங்கு இருமை மறைந்து ஒருமை தோன்றக்கூடும். அந்த ஒருமையை அடையவேண்டுமானால், இச்சை குறித்த முரண்பாட்டையும், அதனுள் அமைந்திருக்கும் ஒருமையையும் நம் மனம் உள்வாங்கியிருக்க வேண்டும்.

முந்தைய பதிவில் கூறியபடி, நாம் வாழ்வதற்கான அடிப்படை விருப்பம் இச்சா சக்தியால் நமக்கு அளிக்கப்படுகிறது. வாழ்வதற்கான பெருவிருப்பை நமக்கு அளிப்பதன் மூலம் இச்சா சக்தி, எந்த நிலையிலும் நம் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான இயக்கங்களுக்கான சக்தியை வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து திரட்டி நமக்களிக்கிறது. நம்மிடமிருந்து வெளிப்படும் எந்த செயல்களுக்கும் ஆதாரம், நம் வாழ்க்கையில் அந்த செயல்களுக்கான தேவைகளே ஆகும். அவை நம் அடிப்படையான தேவைகளாக இருக்கலாம், அல்லது மனதால் உருவாக்கப்பட்ட கற்பனையான தேவைகளாகவும் இருக்கலாம். தேவை உணர்விலிருந்து அந்த குறிப்பிட்ட செயலை செய்வதற்கான விருப்பம் நம்மிடம் தோன்றுகிறது. இதுவே இச்சை. தொடங்கப்பட்ட செயல் முடிவதற்கு, நம்மிடம் அதற்கான பெருவிருப்பு இருக்க வேண்டும். அல்லது, தொடங்கப்பட்ட செயல் நம் கட்டுப்பாடு இல்லாத பல்வேறு புறவிசைகளால் இயக்கப்படவேண்டும். புறவிசையால் அந்த செயல் இயக்கப்படுமானால், அந்த செயலில் நம் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்திருப்போம். செயலுக்கான வெறும் கருவியாக, இயந்திரமாக மட்டுமே நாம் செயலாற்றிக்கொண்டிருப்போம். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானவர்கள் எத்தகைய விருப்பத்தின்பேரில் செயல்களை தொடங்கினாலும், அந்த செயலுக்கான விருப்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம். புறவிசையின் உந்துதலால், செயலுக்கான வெறும் கருவியாக மாறும்போது வலுக்கட்டாயமாக பல்வேறு கற்பனையான மன இயக்கங்களின் மூலம் அந்த செயலின் பகுதியாக நம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்.

ஒரு செயல் முழுமையாக, விருப்பத்துடன் செய்யப்படும்போது மட்டுமே ஆனந்தத்துடன் அந்த செயலை நம்மால் செய்ய முடியும். வெறும் கருவியாக செயலில் ஈடுபடுத்தப்பட்டால், நம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல போலியான எண்ணங்களை உருவாக்க வேண்டியிருக்கும் - அந்த செயலில் நம்மை நிலைத்திருக்கச்செய்யும் விருப்பத்தை எண்ணங்களின் மூலம் உருவாக்குவதற்காக! ஆம், செயலில் கருவியாக நாம் இருந்தாலும், ஒரு கருவியாக இயங்குவதற்கும், நமக்குள் விருப்பம் முளைத்தாக வேண்டும். விருப்பத்தால் மட்டுமே நம்மை இயங்க செய்ய முடியும். ஆகவே அந்த விருப்பம் இயல்பாகவே நம்முள் உள்ளதா அல்லது வெறும் கருவியாக செயலாற்ற தேவையான விருப்பத்தை வலுக்கட்டாயமாக எண்ணங்களின் மூலம் நமக்குள் உருவாக்கிகொள்கிறோமா என்பதே அந்த செயலால் நாம் பெறும் பயனை நிர்ணயிக்கிறது. அந்த செயல் நம் இயல்பான பெருவிருப்பத்தால் நடைபெறுமானால், செயலின் ஒவ்வொரு இயக்கமும், செயல் நடைபெறும் ஒவ்வொரு கணமும் நாம் ஆனந்தத்தில் திளைத்திருப்போம் - அந்த செயல் எந்த அளவு உழைப்பை நம்மிடமிருந்து கோரினாலும்! அதே வேளையில், கற்பனையான விருப்பத்தின் மூலம் அந்த செயல் இயங்கிக்கொண்டிருந்தால், அதாவது புறவிசைகளை அந்த செயலுக்கு காரணிகளாக இருந்தால், ஒவ்வொரு கணமும் நாம் துன்பத்தில் உழல்வோம் - கற்பனையான விருப்பங்கள், கற்பனையான இன்பங்களை அளித்தாலும்!

ஆக, எந்த ஒரு செயலையும், ஒரு மனித உயிராக, நாம் செய்ய வேண்டுமானால், அந்த செயலுக்கான அழியாத பெரும் இச்சை நம்முள் இயல்பாகவே எழுந்தாக வேண்டும். அந்த இச்சையை ஆராதிப்பதன் மூலமே செயலுக்கான இச்சையை நம்முள் நிலையாக இருத்த முடியும். இச்சா சக்தியை வணங்குவதன் மூலம் செயலுக்கான இச்சையை ஆராதிக்கும் மனநிலையை நம் பண்பாடு நமக்கு அளிக்கிறது.

நமது எண்ணங்கள் மூளையின் ஒரு செயல்பாடு. வெறும் பொதீக இருப்பின் அடிப்படையில் கூறினால், இந்த எண்ணங்களின் இயக்கம் என்பது நம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களின் இடையாறா வேதிவினைகளின் விளைவு. அதாவது நம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களின் கூட்டு இயல்பு, ஒரு மனித இருப்பாக நம் இயல்பை தீர்மானிக்கிறது. அல்லது, நம் அனைவருக்கும் இயல்பாகவே சில ஆசைகளும், விருப்பங்களும், தேவைகளும், நம் இருப்பின் அடிப்படையாக, நம் மூளையின் கட்டுமானமாக, நம் இயல்பாக நமக்குள் புதைக்கப்பட்டுள்ளன. அவையே நம் அடிப்படை இயல்பு.  இந்த இயல்பை வெளிப்படுத்துவதற்கான இச்சையே நாம் வேண்டும் இச்சை! நாம் ஆராதிக்கும் இச்சை!

வெளி உலகின் நிகழ்வுகள், புலன்கள் மூலம் நம் மனதை வந்தடைகிறது. இந்த நிகழ்வுகள் நம் அறிவாகிய நிறப்பட்டகத்தால்(Prism) பிரிக்கப்பட்டு, எண்ணங்களாகவும் நினைவுகளாகவும் மாற்றப்படுகிறது. நம் அறிவின் பிரிக்கும் தன்மைக்கேற்ப, புலன் உணர்வுகள் மாற்றத்துக்குள்ளாகி, புற உலக நிகழ்வுகளாக மனதில் பதிகின்றன. இப்போது, புற உலகைப்பற்றி நாம் அறிந்திருப்பது நினைவுகளாக எஞ்சியிருக்கும் இந்த நினைவுகளும், அந்த நினைவுகளால் தோற்றுவிக்கப்படும் எண்ணங்களும், இடைவெளியில்லாமல் மனதுக்குள் புகுந்துகொண்டிருக்கும், அறிவால் நிறம்பிரிக்கப்பட்ட புலனுணர்வுகளின் பிம்பங்களும் மட்டுமே.

நம் மனம் புற உலகில் நிலை கொள்ளும்போது, மனதில் நிலைகொள்ளும் புற உலக பிம்பங்களே நம் தேவைகளையும் விருப்பங்களையும் வடிவமைக்கின்றன. உள்முகமாக நோக்கினால், பெரும்பாலும் புற உலக பிம்பங்களால் உருவாகும் தேவைகளும் விருப்பங்களும் நம் இயல்பாக இருப்பதில்லை. எனவே அந்த தேவைகளை அடைய உதவும் செயல்களுக்கான இச்சையும் நம் இயல்பில் இருப்பதில்லை. புற உலக இயக்கங்களினால் தற்காலிக உந்துதல் பெற்று அதற்கான இச்சையையும் நம்மில் உருவாக்கி விடுகிறோம். ஆனால் பரிதாபகரமாக அந்த இச்சையை அழியாமல் இறுதிவரை நம்மால் கொண்டு செல்லவும் இயல்வதில்லை. தற்காலிக உந்துதலால் தொடங்கப்பட்ட செயல், பின்னர் புற விசைகளால் இயக்கப்பட்டு, நாம் அந்த செயலுக்கான கருவியாக மட்டும் மாறிவிடுகிறோம்.


ஆம். நாம் துறக்கவேண்டியது நம் இயல்பில் இல்லாத ஆசைகளையே. சமூகத்தால், சமூகத்துக்காக வடிவமைக்கப்பட்ட நமக்கு, பெரும்பாலும் நம் இயல்புகள் என்னவென்பதே தெரிந்திருப்பதில்லை. எனவே நம் இயல்பான ஆசைகளும், விருப்பங்களும் என்ன என்பதும் தெரிந்திருப்பதில்லை. வாழ்க்கையை வாழ வேண்டுமானால், முதலில் நாம் அறிய வேண்டியது நம் இயல்புகளையே. நம்மால் மட்டுமே நம் இயல்புகளை அறிய முடியும். இச்சா சக்தியை ஆராதிப்போம்! நம் இயல்புகளை அறிவோம்! எல்லையில்லா ஆனந்தத்தில் திளைப்போம்! ஆம், அவ்வாறே ஆகட்டும்!

blog.change@gmail.com

Tuesday, February 11, 2014

சுதந்திரம்

சுதந்திரம் என்பது நாம் செய்ய தேவையானவற்றையும் விரும்புவதையும் செய்ய எந்த தடைகளும் இல்லாமல் இருப்பது எனலாம். தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் உள்ள வேறுபாடு தனிமனிதர்களுக்கிடையில் வேறுபடலாம். ஒரு மனிதனின் தேவை அல்லது விருப்பம் மற்றொரு மனிதருக்கு விருப்பம் அல்லது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கலாம். தேவைகளும் விருப்பங்களும் மனிதனின் அடிப்படை சக்தியான இச்சா சக்தியில் இருந்து உருவாகிறது. அதாவது தேவைகளும் விருப்பங்களும் நம் இச்சை என்னும் இயல்பிலிருந்து உருவாகிறது. நமது தேவைகளையும் விருப்பங்களையும் நம்மால் நிறைவேற்ற முடிகிறதா என்பதும், அந்த தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் தடைகள் நேர்ந்தால் அந்த தடைகளை உடைத்தெறிய தேவையான மன உறுதியை பெற்றிருக்கிறோமா என்பதுமே நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் அளவை தீர்மானிக்கிறது.

எனவே நாம் சுதந்திரமாக இருக்கிறோமா இல்லையா என்பதை அறிய வேண்டுமானால் நாம் முதலில் ஆராய வேண்டியது நம் தேவைகளையும் விருப்பங்களையும், மன இயல்பையும் குறித்துதான். நாம் விரும்பாதவரைக்கும் அல்லது நாம் ஏற்றுக்கொள்ளதவரைக்கும், நம் சுதந்திரத்தை நம்மால் இழக்க முடியாது. நாம் எதற்காவது சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோம் என்றால், அது முழுக்க முழுக்க நம் முழு விருப்பத்துடன் மட்டுமே - நம் மனதின் மேல் தளத்தில், சுதந்திரம் பிறரால் நம் விருப்பம் இன்றி பறிக்கப்பட்டது என்று எத்தனை சத்தமாக கதறினாலும்! உண்மையில் நாம் விரும்பும் அல்லது நமக்கு தேவைப்படும் வேறு ஏதோ ஒன்றுக்காக, மற்றொரு தளத்தில், நம் சுதந்திரத்தை முழு விருப்பத்துடன் விட்டிருப்போம்.

நம் உடலில், நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இயக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த இயக்கங்கள் அனைத்தும் நம் மூளையால் உருவாக்க அல்லது தொடங்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, உடலின் மொத்த இயக்கங்களும் சேர்ந்து நம் ஒற்றை இயக்கமாக வெளிப்படுகிறது. அந்த ஒவ்வொரு இயக்கமும் நம் உடலில் இயங்குவதற்கான விருப்பம் நம்மில் இருந்தாக வேண்டும். அந்த விருப்பத்தின் இருப்பை நாம் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அது இல்லாமல் இருந்தால் மூளையால் எந்த செயலையும் செய்ய முடியாது. நம் அனைத்து இயக்கங்களுக்கும் காரணமான அந்த இச்சையே நம் இருப்பின் அடிப்படை. இச்சா சக்தியை முழுவதுமாக இழக்கும் கணத்தில், நம் உடலில் உயிர் எஞ்சியிருக்காது.

நம் தேவைகளும் விருப்பங்களும், நம் மூளையின் இயக்கங்களால் நமக்குள் தோற்றுவிக்கப்படுகிறது. மூளையின் அந்த இயக்கங்களை நம் அடிப்படை சக்தியான இச்சா சக்தி தோற்றுவிக்கிறது. எனவே நம் தேவைகளும் விருப்பங்களும், நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் இச்சா சக்தியின் இயல்பை பொறுத்தது. ஆக நாம் சுதந்திரமாக இருக்கிறோமா என்பது நாம் கொண்டிருக்கும் இச்சா சக்தியின் இயல்பை பொறுத்தது. அதிர்ஷ்டவசமாக நம்மிடம் உறைந்திருக்கும் இச்சா சக்தியை நம்மால் மேலாண்மை செய்ய முடியும். குறைந்த பட்சம் நம் உளவியல் இயக்கங்களை உருவாக்கும் இச்சைகளையாவது - அதற்கான இச்சை நம்மில் தோன்றினால்!

மனம் நம் உள் இயல்பை நோக்கி திரும்பாததுவரை, நாம் அறிந்திருப்பது நம்மை சுற்றி நிகழும் இயக்கங்களின் மாயத்தோற்றங்களையே. (நம்மை சுற்றி நிகழும் இயக்கங்களின் உண்மைத்தோற்றத்தை அறிய அல்லது நெருங்க, மனம் உள்முகமாக திரும்பியிருக்க வேண்டும்). எனவே நம் தேவைகளும், விருப்பங்களும் அந்த வெளிஇயக்கங்களின் மாயத்தோற்றங்களை பொறுத்தே அமையும். ஒரே வெளிப்புற இயக்கம் வெவ்வேறு மனிதர்களிடம், வெவ்வேறு விதமான மாயத்தோற்றங்களை உருவாக்கியிருக்கும். அந்த தோற்றங்களின் இயல்பு, அந்த தனிமனிதர்கள் ஏற்கனவே அறிந்தவற்றை பொறுத்தும், அவர்களின் நினைவை பொறுத்தும், அவர்களின் எண்ண ஒட்டங்களின் இயல்பை பொறுத்தும் அமைந்திருக்கும். இந்த மாயத்தோற்றங்களால் தாக்குதலுக்குள்ளாகும் மனம், நம்மை குறித்து ஒரு கற்பனை உருவத்தை உருவாக்கி, அந்த கற்பனை உருவத்தை மாய உலகில் நடமாட வைக்கும். அந்த கற்பனை உருவத்தையை நம் இருப்பு என்றும் நம்ப தொடங்கும்.  எனவே நம் தேவைகளும் விருப்பங்களும், அந்த மாய உலகில், கற்பனையால் தோற்றுவிக்கப்பட்ட நம்மை உலவ வைப்பதற்காகவே இருக்கும்.

அதாவது, நாம் கொள்ளும் நமது தேவைகள் மற்றும் விருப்பங்களின் முக்கியத்துவம், சில மிக அடிப்படையான வாழ்க்கை தேவைகளை தவிர பெரும்பாலானவை, நம் கற்பனையால் பல மடங்கு  பெரிதாக்கப்பட்டவையே. அதற்கு காரணம், ஒரு கற்பனையான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதே. இதற்கு அர்த்தம், நம்மை சுற்றி இருக்கும், அல்லது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் கற்பனை என்பது அல்ல. ஆனால் இந்த உலகத்தை குறித்து நாம் அறிந்திருப்பது, புலன்களால் நம் மனதை அடையும் உணர்வுகள், எண்ணங்களால் மாற்றத்துக்குள்ளாகி நம் நினைவுகளில் பதிந்திருப்பவற்றையே. உதாரணமாக, புற உலகில் நடக்கும் ஒரே செயலை இரு நபர்கள் இருவேறு விதமாக புரிந்து கொண்டிருப்பார்கள். அதாவது அந்த நடைபெற்ற ஒரே உண்மையான செயலை இரு நபர்களும் அவர்கள் கொண்டிருக்கும் புற உலக மாய பார்வையின் மூலம் இருவேறு வித உண்மைகளாக தோன்றுகிறது - ஆனால் உண்மை ஒன்றாகவே இருக்க முடியும்.

சுதந்திரம் என்பது நமது இச்சைகளால் உருவாக்கப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் அடைவதற்கான செயலை, தடைகளின்றி செய்ய முடிவது. ஒரு சமூக அமைப்பினுள் வாழும்போது, நமது செயல்கள் அந்த சமூகத்தின் இயக்கங்களை குலைக்காதவாறு இருந்தாக வேண்டும். அல்லது சமூக இயக்கத்தை நமது செயல்கள் தாக்குதலுக்குள்ளாக்குமானால், அந்த சமூகத்தால் தொடுக்கப்படும் எதிர் தாக்குதலை நாம் எதிர் கொண்டாக வேண்டும். அதற்கான மன உறுதி நம்மிடம் இருந்தால், எத்தகைய செயலையும் செய்ய நாம் மிக மிக சுதந்திரமானவர்கள். ஆனால், சமூகத்தின் எதிர்தாக்குதல்களை எதிர் கொள்ளும் திடம் நம்மிடம் இல்லாத பட்சத்தில், நம்மால் செய்ய முடிந்தது, சமூகத்தின் இயக்கத்திற்கு ஒத்து செல்வதே. இங்கு, நாம் விரும்புவதை செய்ய நமக்கு சுதந்திரம் இல்லை என புலம்புவது அர்த்தமற்றது. உண்மையில் நாம் சுதந்திர வாழ்க்கையை அனுபவிப்பதற்கான மனதிடம் இல்லாமல் இருக்கிறோம், என்பதே உண்மை. அல்லது, சுதந்திரம் இல்லை என எவ்வாறு கற்பனை செய்தாலும், உண்மையில் நம்மிடம் இல்லாதது சுதந்திரத்திற்கான அடிப்பைடை இச்சையே.

இதற்கு மாறாக, நாம் உண்மையை நெருங்க நெருங்க, நமக்கான தேவைகளும் விருப்பங்களும் மிக இயல்பாகவே, நாம் வாழும் சமூக அமைப்பினுள் அடங்குவதாகவே இருக்கும் - நம் மாய உலகுக்கு தோதானதாக இல்லை என்றாலும்! அவ்வாறு இல்லாத பட்சத்திலும், சுதந்திரத்துடன் நம் தேவைகளையும் விருப்பங்களையும் அடையும் செயல்களை, எந்த வித தடைகளையையும் தாண்டி, செய்யும் மன உறுதியுடனும் தீராத இச்சையுடனும் இருப்போம். அங்கு எழும் எந்த தடைகளும் நமக்கு ஒரு பொருட்டாக இருக்க முடியாது. அந்த தடைகளின் மூலம் சமூகம் விதிக்கும் எந்த தடைகளும் அல்லது எத்தகைய எதிர் தாக்குதலும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது. ஏனெனில் நாம் உண்மைக்கு மிக அருகில் இருப்போம்! முழு சுதந்திரத்துடன் இருப்போம்! சுதந்திரத்துக்கான முழு இச்சையுடன் இருப்போம்! நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்! வாழ்க்கையின் ஆனந்தத்தில் திளைத்திருப்போம்!


blog.change@gmail.com