Sunday, June 23, 2024

கோவா பயணம் - 5

 

(6)


நண்பர்களின் கூடுகை மூன்றாம் நாளும் தொடர்ந்தது. ஆனால் நாங்கள் இருவரும் காலை ஏழு மணிக்கு முன்பாகவே ஹம்பி நோக்கிய பயணத்தை தொடங்கினோம். மீண்டும் மேற்குத்தொடர்ச்சி மலை வழியாக தக்காண பீடபூமிக்குள் நுழைந்தோம். சுமார் ஏழு மணி நேர பயணம்.

இரண்டு மணிக்கு முன்பாகவே ஹம்பி வந்தடைந்தோம். மதிய உணவுக்குப் பிறகு, விஜய விட்டலா கோவில் மற்றும் விருபாக்க்ஷா கோவில் ஆகியவற்றை பார்த்தோம்.

விஜயநகர பேரரசு, ஸ்ருங்கேரி மடத்தின் பதிநான்காவுது குருவான வித்யாரண்யரின் வழிகாட்டுதலின் படி ஹரிஹர, புக்க ராயா என்னும் இரு சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. இந்த அரசு உருவாக்கத்தின் முக்கியமான நோக்கம், முஸ்ஸிம் சுல்தான்களின் தக்காணபீடபூமி ஆக்கிரமிப்பையும், :அதன் விளைவான மதமாற்றத்தையும் கட்டுப்படுத்துவது. வலிமையான விஜயநகர பேரரசின் காரணமாகத்தான், தென்னிந்தியாவின் கோவில்கள், பெருமளவில் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஹம்பி நகரம் முழுமையாக                      அழிக்கப்பட்டிருக்கிறது. விட்டலா கோவில் சூறையாடப்பட்டு, சிலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவிலில் கருவறை மூர்த்தங்கள் இப்போது இல்லை. கோவில் முடிந்த அளவு மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, கலை பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலின் முன் இருக்கும் ஒற்றைக்கல்லால் ஆன தேர்வடிவில் செய்யப்பட்டிருக்கும் கருடன் கோவில், இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. இந்த கோவில் 50 ரூபாய் தாள்களில் பதிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு விருபாக்ஷா கோவிலுக்கு சென்றோம். இது இப்போதும் வழிபாட்டில் இருக்கும் கோவில்

ஹம்பி நகரில் பெரும்பாலான கோவில்களின் மூர்த்தங்கள் இல்லாமல் கைவிடப்பட்டிருக்கின்றன். இங்கிருக்கும் ஒற்றைக்கல்லால் ஆன மிகப்பெரிய லக்ஷ்மி நரசிம்ஹர் சிலை முழுவதும் உடைக்கப்பட்டு பாறைத்துண்டுகளாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில், ASI, கிடைத்த பாறைத்துண்டுகளை இணைத்து சிலையை மறுஉருவாக்கம் செய்திருக்கிறது. சிலையின் நான்கு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது.

ஒரு மதத்தின் புனித புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை காரணம் காட்டி, பல நூறு சிற்பக்கலைஞர்கள் சேர்ந்து, தலைமுறைகளாக உருவாக்கிய சிற்பங்களை எவ்வித கலையுணர்வும் இல்லாமல் எவ்வாறு அழித்து செல்ல முடிந்திருக்கிறது? விஜய நகர கோவில்கள் நானூறு வருடங்களுக்கு முன்பே அழிக்கப்பட்டு விட்டது. அந்த காலத்தில் அம்மதத்தில் இருந்தவர்களை காட்டுமிராண்டிகள் என மன்னித்து விடுவோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில், மிகப்பெரிய புத்தர் சிலைகளை டைனமைட் வெடிகள் மூலம் உடைத்தவர்களை என்னவென்று சொல்வது? இதையும் விடுவோம், அவர்கள் அந்த மதத்தினுள் உள்ள களைகள் என்று கொள்ளலாம். ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மதமான அதனுள், இத்தகைய காட்டுமிராண்டிச் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க ஒரு தலைவர் கூட இல்லையா? அப்படி என்றால் அந்த மதத்தை எதற்கான மதம் என்று கூறுவது? அந்த மதத்தில் இருப்பவர்களை என்னால் எவ்வாறு மதிக்க முடியும்?

ஆனால் எங்குமே சில விதிவிலக்குகள் இருக்கும் அல்லவா? ASI –ன் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற K K முகம்மது, அத்தகையவர்களில் ஒருவர். அவர்  ASI – இல் பணியாற்றிய காலத்தில் பல கோவில்களை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார். பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் மீண்டும் வருவதற்கு, அவருடைய ஆய்வறிக்கையும் ஒரு காரணம்.

முந்தைய இரவு, 11-30 மணிக்கே நண்பர்களிடம் விடைபெற்று உறங்கச்சென்றாலும், இரண்டு மணிவரை, முதல்மாடி அறையில் நண்பர்களின் உற்சாக சத்தம், மூன்றாவது மாடி அறையில் இருந்த என்னையும் உறங்க விடவில்லை. நிச்சயமாக, அந்த சர்வீஸ் அப்பார்டமென்ட்இல் தங்கியிருந்த, எங்கள் குழுவை சாரதவர்கள், மிகவும் எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எனவே இரவு மூன்று மணிநேரம் மட்டுமே உறங்க முடிந்தது. இத்துடன் ஏழு மணிநேர டிரைவிங் - ம் சேர்ந்து, களைப்புடன் இருந்தேன். ஹம்பியின் அழிந்த கோலம் இன்னும் சோர்வை கூட்டியது.  அன்றிரவு ஹம்பியில் அறை எடுத்து தங்கினோம்..

 

(7)

 

காலை ஆறு மணிக்கு கிளம்பி, அரை மணிநேர பயணத்தில் அஞ்ஜனாத்ரி மலைக்கு சென்றோம். அங்குள்ள நாட்டார் தொன்மங்களின் படி, இந்த மலை ஹனுமான் பிறந்து வளர்ந்த கிஹ்கிந்தை என்று கூறப்படுகிறது. காலையில் 575 படிகள் ஏறி மலையின் உச்சியல் ஏறி ஹம்பியை நோட்டமிட்டோம். துங்கபத்திரா அற்றின் மறுகரையில் இருந்த ஹம்பியின் சிறுசிறு சிதைந்த கட்டுமானங்கள் தூரத்தில் தெரிந்தது.

இங்கு ஆச்சரியம் அளித்த்து, இங்கிருந்த சிறு குன்றுகளின் அமைப்பு, பாறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போல இருந்த்து. பாறைகளின் வெவ்வேறு வடிவங்கள் ஒன்றன் மேல் ஒன்று அமர்ந்திருந்தது, ஒரு வகை ஒருமையை உருவாக்கியது. மலை ஏறி இறங்குவது உட்பட சுமார் இரண்டு மணி  நேரம் அங்கு செலவிட்டோம்


 

துங்கபத்திராவின் மறுகரைக்கு வந்து, முந்தைய நாள் பார்க்காமல் விட்ட, கைவிடப்பட்ட சில கோவில்களைப் பார்த்து விட்டு,சுமார் 11 மணி அளவில், பெங்களூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். பெங்களூருக்கு கிட்டத்தட்ட 300 கிமீ தூரம் இருந்தது.. முழுவதும் ஆறு/நான்குவழிச்சாலை.

வரும் வழியில் சித்ரதுர்கா என்னும் நகரம் வருவதாக வழிகாட்டி கூறியது. சில மாதங்களுக்கு முன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சித்ரதுர்கா பற்றி பேச்சு வந்தது. அழகிய கோட்டை ஒன்று இருப்பதாக கூறியிருந்தான். சித்ரதுர்கா பெயரைப்பார்த்த உடன், செல்லும் வழியிலிருந்து கோட்டை எவ்வளவு தூரம் என்று பார்த்தோம். மூன்று கிமீ தான் இருந்தது. மதியம் ஒரு மணி அளவில் அங்கு சென்று, மதிய உணவை முடித்து விட்டு கோட்டைக்குள் நுழைந்தோம்.

அழகிய கோட்டை. பல கோவில்கள். சுமார் ஒருமணி நேரம் கோட்டையில் சுற்றிக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில், ஒரு பாறையின் மேல் இருக்கும் ஒரு பார்வைப்பகுதிக்கு சில ஆண்களும் பெண்களும் உயிரைப் பணயம் வைத்து, மிகவும் சரிவான பாறையில் வெட்டப்பட்டிருந்த மிகச்சிறிய கால்தடங்கள் வழியாக ஏறிக்கொண்டிருந்ததை கவனித்தோம். அந்தப் பாறை மேல் ஏறி இறங்கினால், சித்திரதுர்கா வந்ததன் பயன் நிறைவுற்று விடும் என்னும் எண்ணத்துடன், அந்த சாகசத்தில் ஈடுபட்டோம். சுமார் 300 காலடித்தடங்கள் வைத்து அந்தப் பாறையின் உச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. பாறையின் உச்சியில், சுமார் 10 நிமிடங்கள் இருந்து, சித்திரதுர்கா நகரின் காட்சியை ரசித்து விட்டு அதே வழியில் இறங்கினோம். இறங்குவது, ஏறியதை விட சாகசமானதாக இருந்தது. குரங்கு ஒன்று ஒரு பெண்ணின் கைப்பையை பறித்து, பாறையின் விளிம்புக்கு சென்று அமர்ந்து,ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் போட்டு பையை ஆராய்ந்து கொண்டிருந்தது, இறங்கும்போது பிரதிபாவின் கைப்பையையும் இன்னொரு குரங்கு பறிக்க முயன்றது.  கார் சாவி, மொபைல் ஃபோன் அனைத்தும் அந்த கைப்பையிலேயே இருந்தது!

சித்திரதுர்கா கோட்டையை விட்டு இறங்கி, வாகனத்தில் ஏறிய உடன், பயணம் முழுமை பெற்ற நிறைவு ஏற்பட்டது. இறுதியாக ஓகனேகல் சென்று விட்டு, வீடு நோக்கி பயணிக்கலாம் என முடிவு செய்தோம். ஓகனேகல்லில், வெள்ள வரத்து உண்டா என்று தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. இரவு எங்கேயாவது தங்கியாக வேண்டும். எனவே ஓகனோகல்லை தேர்வு செய்து பயணிக்க தொடங்கினோம்.

பெங்களூரில் இருக்கும் ராமசாமி, சுபா தம்பதியினரின் நினைவு வந்தது. நான் சென்னை ஹனிவெல் அலுவலகத்தில் பணியாற்றிய போதே உடன் பணியாற்றியவர். மத்திய கிழக்கில் சென்றபோது, ஐந்து வருடங்கள் என்னுடைய Boss ஆக இருந்தவர். மத்திய கிழக்கில், UAE மற்றும் கத்தார் நாடுகளில் இருந்த போது அங்கிருந்த நண்பர்கள் குழுவில், நாங்களும் அவர்களும் உறுப்பினர்களாஇருந்திருந்தோம். தற்போது அந்த நண்பர்களின் Whatapp குழுமத்தில் பிரதிபா உறுப்பினராக இருக்கிறாள்.

அன்று அவர்கள் பெங்களூரில் இருக்கிறார்களா என்றும், அவர்கள் இடம் சென்று சேர எவ்வளவு நேரம் ஆகும் என்றும் விசாரித்தோம். இரவு 8;00 மணிக்குள் சென்று விடலாம் என்று கூகுள் மேப் சொன்னது. எனவே அவர்கள் இடம் நோக்கி பயணித்தோம்.

சித்திரதுர்காவிலிருந்து பயணத்தை தொடங்கிய சற்று நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.. கார் Wiper இழுத்து இழுத்து வேலை செய்து, சிறிது நேரத்தில் தன் உயிரை விட்டது. நல்ல வேளையாக மழை குறைந்து விட்டது. கார் கண்ணாடியில் நிறைந்திருந்த நீர்த்துளிகளின் வழியாக புலப்பட்ட கலைடாஸ்கோப் சாலையின் வழியாக பயணத்தை தொடர்ந்தோம். அப்போதும் இரவு ஆகவில்லை என்பதால், வண்டி ஓட்ட முடிந்தது.. இரண்டு மூன்று இடங்களில் இறங்கி, கார் கண்ணாடியை துடைத்து விட்டு பயணித்தோம். சற்று நேரத்தில் மழை நின்றுவிட்டது.

இரவு சுமார் 08;15 மணி அளவில் ராமசாமி, சுபா தங்கியிருக்கும் அப்பார்ட்மென்ட் சென்று சேர்ந்தோம். அந்த அப்பார்ட்மென்ட் வளாகத்தில் இருந்த விருந்தினர் அறை ஒன்றை எங்களுக்காக ராமசாமி வாடகைக்கு எடுத்து கொடுத்தார். இரவு பத்துமணிவரை அவர்களுடன் அளவளாவி விட்டு உறங்கச் சென்றோம். அவர்களை அதற்கு முன்பாக 2019-ம் வருடம், நண்பர்கள் குழுவில் நடந்த ஒரு திருமண விழாவில் சந்தித்திருந்தோம்.

No comments: