Sunday, June 23, 2024

கோவா பயணம் - 2

(2)

எனது கார், 16 வருடம் வயதுடையது.  A/c repair, Oil change, Wheel alignment  போன்ற அடிப்படை பராமரிப்பு பணிகளை முடித்து விட்டு பயணத்திற்காக காத்திருந்தோம்.வாகனத்தின் வயதை கருத்தில் கொண்டு, எந்த வகையான break-down – க்கும் தயாராகவே இருந்தோம். அவ்வாறு ஏற்பட்டால் எந்தவித ஏமாற்றங்களும் இல்லாமல், பயணத்தை முடித்துக்கொள்ள தயாராக இருந்தோம்.

இந்த வகையில் முன்அனுபவம் உண்டு. ஒரு முறை பயணம் தொடங்கி சுமார் 20 கிமீ தூரத்துக்குள், break oil tube, ஓட்டை விழுந்து, break பிடிக்காமல் ஆனது. அதிர்ஷ்டவசமாக, மிகவும் மெதுவாக செல்லும்போது, Break வேலை செய்யாமல் ஆனதை உணர்ந்து, மிக மெதுவாக சுமார் 10 கிமீ தூரம் ஓட்டிச் சென்று, ஓட்டை விழுந்த break oil tune – மாற்றி விட்டு பயணத்தை தொடர்ந்தோம். அந்த முறை வழக்கத்திற்கு மாறாக, காலை எட்டுமணிக்கு பிறகு பயணத்தை தொடங்கியிருந்தோம். எனவே கார் பழுதுபார்க்கும் இடத்தை கண்டடைந்து., சமார் இரண்டு மணி நேரத்திற்குள் பயணத்தை தொடர முடிந்தது. Windshield Wiper motor, சில வருடங்களுக்கு முன் பழுதாகி, ஒரு வழியாக பழுதுபார்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் செயல்பாட்டிலும் பிரச்சனைகள் இருந்த்து. மேற்கு கடற்கரைப் பகுதியில் மழைக்காலத்தில் பயணம் இருந்ததால் அதன் செயல்பாடு குறித்தும் சற்றே பயம் இருந்தது. சமாளித்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன்.

ஜூன் 12-ம் தேதி அதிகாலை 4;00 மணி என திட்டமிட்டு 4;15 – க்கு பயணத்தை தொடங்கினோம், நாகர்கோவில், மதுரை, ஒட்டன்சத்திரம், பல்லடம், அவினாசி, பவானிசாகர், திம்பம், சாமராஜாநகர், வழியாக சுமார் 15;30 மணியளவில் சோமநாதபுரா சென்றடைந்தோம். பயண தூரம், சுமார் 600 கிமீ. இதில் முதல் 275 கிமீ தூரம் நான்கு வழிச்சாலை. மீத தூரம் இருவழிச்சாலை.

இந்த பயணத்தில்தான் முதன்முறையாக தக்காண பீடபூமியின் (Deccan Plateau) இருப்பை உணர்ந்தேன். பவானிசாகர் கடந்த உடன் மலைப்பாதை தொடங்கியது. அங்கிருந்து திம்பம்  சுமார் 15 கிமீ தூரம். இந்த தூரத்திற்குள் 27 கொண்டைஊசி வளைவுகள். அவற்றில் பெரும்பாலானவை அகலம் மிகக்குறைந்தவை. சில வளைவுகள் முந்தையதிலிருந்து 200 மீ தூரத்திற்குள்ளாகவே இருந்தது.  A very exciting ride. திம்பம் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு கிராமம். இந்த மலைச்சாலையில் ஏறிய பிறகு, எங்குமே குறிப்பிடத்தக்க அளவில் சாலை இறங்கவில்லை. அங்கிருந்து சோமநாதபுரா வரை சமவெளி போலவே இருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன்நாங்கள் அப்போது இருந்தது தக்காண பீடபூமியில்!

சோமநாதபுரா, ஹொய்சால மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமான ஒன்று. இது மாலிக் கபூர் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டது.. மீதமிருந்தவை முகம்மதுபின் துக்ளக் படையெடுப்பின்போது முழுவதுமாக சிதைக்கப்பட்டது. அதன்பிறகு விஜயநகர பேரரசாலும் மைசூர் உடையார்களாலும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு 19-ம் நூற்றாண்டில் மீண்டும் சிதைக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் மீண்டும் மீட்கப்பட்டது. ஆனால் கர்ப்பகிரஹங்களில் மூர்த்தங்கள் இல்லை. எனவே தற்போது வழிபாடு நடைபெறுவதில்லை. வெறும் கலை பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.



இங்குள்ள சிற்பங்கள், மிக நுணுக்கமானவை. மரத்தில் செதுக்கப்பட்டுள்ளது போல நுண்ணிய வேலைப்படுகளுடன், இடைவெளிகள் இல்லாமல் செதுக்கப்பட்டுள்ளது. கல்லில் இத்தகைய வேலைப்பாடுகள் செய்ய முடியுமா என ஆச்சரியம் அளிப்பவை. பெரும்பாலான ஹொய்சால கோவில்கள் Soap stone என்னும் கற்களால் கட்டப்பட்டவை. இவற்றை நீரில் ஊறவைத்தால் கடினத்தன்மையை இழந்து விடும். கலை வேலைப்பாடுகளை முடித்துவிட்டு ஈரப்பதத்தை குறைத்தால் மீண்டும் கடினமாகி விடும். இத்தகைய கற்களின் கனம் தாங்கும் திறன், கிரானைட் கற்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. எனவே ஹௌய்சால கோவில்களில் உயரமான கோபுரங்களோ விமானங்களோ இருப்பதில்லை.

ஹொய்சால சிற்பக்கலை, ஐரோப்பாவின் பரோக் கலை எனப்படும் கலை மரபுடன் ஒப்பிடத்தக்கது. இது மிகவும் விரிவான அலங்காரங்களுடனும் வேலைப்பாடுகளுடனும் இருப்பவை.

சுமார் இரண்டு மணி நேரம் சோமநாதபுரத்தில் செலவிட்டோம். அன்றிரவு எங்கு தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியிருந்தது. ஹளபீடு, சோமநாதபுரத்திலிருந்து சுமார் 3;30 மணி நேர பயண தூரத்தில் இருந்தது. அதன் அருகில் உள்ள நகரம் ஹசன் (Hassan), சுமார் 3 மணி நேர பயணம். எனவே அங்கு சென்று இரவை கழித்து விட்டு செல்லலாம் என முடிவு செய்தோம்.

கூகுள் மேப்தான் எங்கள் வழிகாட்டி. பயணத்தை தொடங்கும்போதுதான் கவனித்தோம். எங்கள் இருவரின்மொபைல் போன்’- லும் Charge, மிகக்குறைவாகவே இருந்தது. கார் சார்ஜர் உபயோகிக்க முயன்றதில் ஏதோ தவறு நடந்தது. சார்ஜர்க்கான Fuse, எரிந்து விட்டது. அப்போதுதான், அடிப்படை கருவியான Player எடுத்துவர மறந்தது நினைவில் வந்தது. வெறுங்கையால் Fuse – களை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை. செல்லும் வழியில் ஒரு car Mechanic – பார்த்து, சரி செய்ய முயன்றோம். முடியவில்லை. சுமார் 20 நிமிடங்கள் செலவானது. Car Electrical mechanic –   பார்க்க பரிந்துரை செய்யப்பட்டு, செல்லும் வழியும் கூறப்பட்டது. கன்னடத்தில் கூறப்பட்டதில் நான் புரிந்து கொண்டவற்றால், வழியை கண்டு சரி செய்ய முடியவில்லை. தாமதமாகிக் கொண்டிருப்பதால் மேலும் நேரத்தை செலவிட விரும்பவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு பயணம் செய்த முறை நினைவுக்கு வந்தது. கூகுள் மேப் திறந்து வழியில் வரும் சில இடங்களை குறித்துக் கொண்டோம். பெரும்பாலான இடங்களில் வழிகாட்டிப் பலகைகள் கன்னடத்தில் மட்டுமே இருந்தது.. எனவே அங்கங்கு வழி கேட்டு செல்வது மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது.

சற்று நேரத்தில் முழு இரவு வந்து விட்டது. எங்குமே தெருவிளக்குகள் இல்லை. முழு இருட்டு. அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்கள் வந்து சென்றன. சாலையும் அத்த்தனை அகலமானதாக இல்லை. இத்தகைய இடங்களில் நான் பொதுவாக கார் ஓட்டும் முறையை இங்கும் பயன் படுத்தினேன். வேகமாக முந்தி செல்ல விரும்பும் ஒரு வண்டியை முன்னே செல்ல விடுவது. கவனத்தின் பெரும்பகுதியை முன் செல்லும் அந்த வண்டியின் talil Lamp – இல் வைத்து விட்டு, மீதமிருக்கும் கவனத்தை சாலையில் இருக்கும் குழிகள், இருபக்கங்களிலும் இருக்கும் அபாயங்கள் ஆகியவற்றில் வைத்து விட்டு, முன் செல்லும் வாகனத்தின் அதே வேகத்தில் செல்வது. ஒருவேளை அந்த வாகனத்தை தவற விட்டுவிட்டால் அதே போல வேகமாக வரும் இன்னொரு வாகனத்துக்காக காத்திருந்து அதன் பின்னே செல்வது. இங்கு மிக முக்கியமானது, இரு வாகனங்களுக்குமிடையேயான இடைவெளி. அது மிகக் குறைவாகவும் இருக்கக் கூடாது, மிக அதிகமாகவும் இருக்கக் கூடாது.

இத்தகைய பயணம் பெரும்பாலும் சாகசம் நிறைந்ததாக இருக்கும். முழுக்கவனமும் வாகனம் ஓட்டுவதில்தான் இருக்கும். முக்கியமாக வாகனத்தில் இருப்பவர்கள் பயப்படாமல் இருக்க வேண்டும். பிரதிபா  என்னுடன் 15 வருடங்களுக்கும் மேலாக பயணிப்பதால், பெரும்பாலும் அந்த பயம் இல்லை. ஒருவேளை பயம் இருந்தாலும், இத்தகைய தருணங்களில் அதை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடிய நுண்ணுணர்வு கொண்டவள். மிகவும் நிறைவூட்டிய, சாகச பயணம். நடுவில் கிருஷ்ணராஜபேட்டை என்னும் இடத்துக்கு அருகில் இரவு உணவு முடித்து விட்டு இரவு சுமார் 10 மணி அளவில் ஹசன் சென்று சேர்ந்தோம். கண்ணில் பட்ட ஒரு விடுதியில் அறை எடுத்து, அன்றைய இரவு கழிந்தது.

No comments: