Wednesday, April 22, 2015

மாயத்தோற்ற ஊக்கிகள்

சொல்வனம் இணைய இதழில் 12-04-2015 அன்று பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.

ஒரு குறிப்பிட்ட மனநிலையில்புலன்களின் தூண்டுதல் இல்லாமல் மனம் உருவெளிக் காட்சிகளை தோற்றுவிப்பதை மாயத்தோற்றம் எனலாம். மரணத்தின் அருகாமையில் சென்று மீண்டு வந்தவர்கள்தாம் மரணத்தை எதிர்கொண்ட அனுபவங்களைக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த அனுபவங்கள் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. தியானப் பயிற்சிகளை கற்பவர்கள்அவர்கள் முதல் தியான அனுபவத்தைக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இந்த தியான அனுபவங்கள் பெரும்பாலும்அவர்கள் புருவமத்தியில் ஒரு ஒளி தோன்றி அவர்கள் தியானத்தை வழிநடத்தியது. அல்லது அவர்கள் மூலாதாரச் சக்கரத்தில் அசைவை உணர்ந்ததுஅல்லது இவற்றைப்போன்ற சில அனுபவங்களாக இருக்கும். இப்படி அனுபவங்களாகக் கூறப்படுபவையும் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. இவை அனைத்தும் மூளையினால்மூளைக்குள் உருவாக்கப்படும் இயக்கங்கள். அந்த இயக்கங்களின் உணர்வுகள் மாயத்தோற்றங்களாக உணரப்படுகின்றன.

psychedelic_smoke_art-1920x1200



சில வகையான வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது, அவை மூளையை அடைந்து கிட்டத்தட்ட இதேவகையான மாயத்தோற்றங்களை உருவாக்கும் இயக்கங்களை மூளையினுள் தூண்டுகின்றன. இவ்வகை வேதிப்பொருட்கள் மாயத்தோற்ற ஊக்கிகள் (Hallucinogen\ psychedelic) எனப்படுவன. 1960-களின் தொடக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், இவை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும், மனநோய் சிகிச்சைக்கு மருந்தாகவும் உபயோகப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாக, தொடங்கப்பட்ட விரிவான ஆராய்ச்சிகள், எழுதப்பட்ட கட்டுரைகள் போன்றவை இந்த வேதிப்பொருட்களை மக்களிடம் பரவலாக அறிமுகப்படுத்தின. இவை அளிக்கும் மாயத்தோற்ற அனுபவத்துக்காக, அக்காலகட்டத்து இளைஞர்களிடம் போதைப்பொருட்களைப்போல இவை பரவின.

இவை இரு வகையான மனவிளைவுகளை ஏற்படுத்துகின்றன எனக் கூறப்படுகிறது. முதல் வகை, மகிழ்ச்சி, அன்பு, கருணை, அழகிய காட்சிகள் போன்ற உணர்வுகளை உருவாக்கும் விளைவு. இதை உபயோகிப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்த நேரான விளைவுகளை நற்பயணம் (Good Trip) என்று அழைத்தார்கள். இன்னொரு வகை விளைவு, பயம், வெறுப்பு, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தியது. இந்த எதிர் விளைவுகளை பிழைப்பயணம் (Bad Trip) எனப் பெயரிட்டார்கள். இந்தஊக்கிகளால் ஒருவருக்கு ஏற்படும் விளைவுகள், பெரும்பாலும் அவற்றை உட்கொள்ளும்போது அவர் இருக்கும் மனநிலையைப் பொறுத்து அமையும். அவர் நேரான மனநிலையில் இருக்கும்போது உட்கொண்டிருந்தால் நற்பயணமாகவும், எதிர்மறை மனநிலையில் இருக்கும்போது உட்கோண்டிருந்தால் பிழைப்பயணமாகவும் அமையும் இவை அவற்றை உட்கொள்ளும்போது இருக்கும் மனநிலையைப் பூதாகரமாக ஆகத் தூண்டுகின்றன எனலாம்!

போதைப்பொருட்களைப் போலவே, இந்த ஊக்கிகளும் புற மனதை (Conscious Mind) மந்தமடையச் செய்கின்றன. பிற போதைப்பொருட்கள் பெரும்பாலும் புறமனதை மந்தமடைய செய்வதுடன் நின்று விடுகின்றன. மாயத்தோற்ற ஊக்கிகள், புறமனதை மந்தமடைய செய்வதுடன் அகமனதையும் (SubConscious \ UnConscious Mind) தூண்டுகின்றன. அகமனதின் தூண்டுதல்களே அவை அளிக்கும் மாயத்தோற்றங்கள். தொடக்க காலத்தில் இவற்றை உபயோகித்தவர்கள், அகமன அனுபங்களுக்காகவே இவற்றை உட்கொண்டிருக்கிறார்கள். இவற்றை உபயோகித்த சிலர், இவை அளித்த அகமன அனுபவங்களைப் பிடித்துக்கொண்டு ஆன்மீகப் பாதைக்குத் திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தப் பின்னணியில், மாயத்தோற்ற ஊக்கிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும எந்தியோஜென் (Entheogen) என்னும் பெயரும் குறிப்பிடத்தக்கது. இது தெய்வானுபவத்தை ஏற்படுத்துவதுஎனப் பொருள்படும்.

1960-களின் நடுப்பகுதியில், மாயத்தோற்ற ஊக்கிகள் மிக அதிகமாக உபயோகிக்கப்பட்டன. இவை இளைஞர்களை அடிமையாக்கவும் தொடங்கின. இவை வெறும்போதைப்பொருட்களை போன்று இல்லாமல், அகமன அனுபவத்தையும் அளித்தது உண்மைதான். ஆனால், புறமனதை மந்தமடையச்செய்ததன் மூலம் அவர்களின் புறவாழ்வு அல்லது லௌகீக வாழ்வை அழிக்கவும் முற்பட்டன.. ஒருவேளை, அகமன பயணத்தைத் தன்னறமாகக் (Path of Self) கொண்டவர்களுக்கு லௌகீக வாழ்வு தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொண்டு அகமன அனுபவங்களை அடைபவர்களுக்கு, அவற்றை விலை கொடுத்து வாங்கும் பொருளாதார தேவைகளுக்காகவாவது, லௌகீக வாழ்வில் இருந்தாக வேண்டும். லௌகீகத் தேவைகள் இருந்து, ஆனால் லௌகீக வாழ்வில் ஈடுபட முடியாதவர்களாக முற்றிலும் தம்மை மாற்றிக்கொள்பவர்கள், ஒரு சமூகத்தின் நோய்க்கிருமிகளாகி விடுகிறார்கள். இத்தகைய இளைஞர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியதும் விழித்துக்கொண்ட அரசாங்கங்கள், 1960-களின் இறுதியில் இந்த ஊக்கிகளின் விற்பனைக்கும் உபயோகிப்புக்கும் தடை விதித்தன. அத்துடன் அவை குறித்த ஆராய்ச்சிகளும் தற்காலிகமாக முடிவுக்கு வந்தன.

மறு எல்லையில், மாயத்தோற்ற ஊக்கிகள், வலிநிவாரணியாகவும், வலிமிகுந்த நோய்களால் மரணத்துக்கு அருகில் இருப்பவர்கள் மரணத்தை அமைதியுடன் எதிர்கொள்ள உதவும் ஊக்கிகளாகவும், மனநோய்களுக்கு மருந்தாகவும் அமையக்கூடிய சாத்தியங்களை உடையவை. முறையற்ற உபயோகத்தால் இந்த ஊக்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள், இந்த சாதகமான பயன்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும் தடையாக மாறிவிட்டன. ஆனால் மிகச் சமீபத்தில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பின், தேவையான அனுமதிகளுடன் மீண்டும் இவை குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

எல்எஸ்டி(LSD) என சுருக்கமாக அழைக்கப்படும் லைஸர்ஜிக் ஆசிட் டைஎத்தில்அமைட் (Lysergic Acid Diethylamdide), ஸிலோஸைபின்(Psilocybin), பெயோட்டி (Peyote), பிசிபி (PCP) போன்றவற்றைப் பொதுவாக மாயத்தோற்ற ஊக்கிகளாக, மேலைநாட்டு மருத்துவம் வகைப்படுத்தியுள்ளது. இவை தவிர மேலும் பல இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் மாயத்தோற்ற ஊக்கிகளாக பயன்படுவதாகத் தெரிகிறது. உதாரணமாக கஞ்சா செடியின் இலை மற்றும் காய்ந்த இலையிலிருந்து பெறப்படும் புகை போன்றவை வலிநிவாரணிகளாக இந்திய மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. சில ஆன்மீகக் குழுக்கள், கஞ்சாவை ஆழ்மனதுக்குள் ஊடுருவும் வாகனமாக பயன்படுத்துகின்றன. சிலோசைபின், சிலவகை காளான்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கஞ்சா போன்று, இந்த காளான்களும் நேரடியாக உட்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. எல்எஸ்டி, ஒரு வகை பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது செயற்கையாக, ஆய்வக வேதிவினைகள் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இப்படி, இயற்கையாகவும், செயற்கையாகவும் தற்காலத்து ஊக்கிகள் கிட்டுகின்றன.

இந்த ஊக்கிகளைக் குறித்துத் தெளிவு பெற, குறைந்தபட்சம் மூன்று திசைகளில் அறிதல் அவசியமாக இருக்கலாம். முதலாவதாக மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொள்ளுவாதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவதாக, மாயத்தோற்றங்கள் தியான அமர்வுகளின் அனுபவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுவதால் தியானம் குறித்த பொதுவான ஒரு அறிதல். மூன்றாவதாக, இந்த அனுபவங்களை நிகழ்த்தும் மூளையின் நியூரான்களின் பொதுவான கட்டமைப்பு.

அகமனதைத் தரிசிக்க விரும்புபவர்களுக்கு முதல் தடையாக இருப்பது, புறமனதில் கட்டற்று அலைபாயும் எண்ணங்கள். நம் வாழ்வுக்கும், செயல்களுக்கும் இந்த எண்ணங்கள் இன்றியமையாதவை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதும் இந்த புறமன நிகழ்வுகளான எண்ணங்களே. ஒவ்வொரு செயல்களும் நடைபெறுவதற்குப் புறமன எண்ணங்களே காரணம். சாதாரண நிலையில் பெரும்பாலும் நம்மால் இந்த எண்ணங்களின் மேல் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடிவதில்லை. நாம் இதுவரை அடைந்த அறிவிற்கேற்ப, இந்த எண்ணங்கள் தன்னிச்சையாக உருவாகி, பின் நம் இயல்பிற்கேற்ப தகுதியானவை செயல்வடிவம் பெறும். முன்பே கூறியபடி, மாயத்தோற்ற ஊக்கிகள் இந்த புறமன இயக்கங்களை மந்தமடையச் செய்து, எண்ணங்களை இல்லாமல் செய்கின்றன, அல்லது எண்ணங்களின் அடர்வை மிகவும் குறைத்து விடுகின்றன. அத்துடன் அகமன இயக்கங்களை தூண்டவும் செய்கின்றன. இப்போது புறமனம் இயங்காமல் இருப்பதால், மாயத்தோற்ற ஊக்கிகளை உட்கொண்டவர்களுக்கு அகமன இயக்கங்களை உணர முடிந்திருக்கலாம். அகமனம் தூண்டப்பட்ட திசைக்கேற்ப, அந்த அகப்பயணம் நற்பயணமாகவோ பிழைப்பயணமாகவோ உணரப்படலாம்.

தியானம், எந்த ஊக்கிகளின் துணையும் இல்லாமல் மனதின் அடிஆழம்வரை செல்லும் நிகழ்வு. இங்கு தியானம் பற்றி கூறும்போது, மிஸ்டிக் (Mystic) என்னும் மறைஞானத்தைச் சற்று ஒதுக்கி வைக்கலாம். எனில், அகமனம் தூண்டப்பட்டு, அதனால் மனதினுள் நிகழும் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளின் உணர்வுகளையும் தொகுத்துத் தியானம் எனலாம். அதாவது, தியானம் என்பது நம்மால் செய்யப்படுவதில்லை. ஒருவகையான மனநிலையை அடையும்போது, அறியாத ஒரு கணத்தில் அகமனம் தூண்டப்பட்டு, அங்கு தியானம் நிகழும். நாம் செய்யும் தியானப்பயிற்சிகள் என்பவை அனைத்தும், தியானம் நிகழ்வதற்கான மனநிலையை அடையும் பயிற்சிகளே. தியானத்தின் போதும், புறமனம் சற்றே ஓய்வில் இருக்கும், அல்லது முற்றிலும் இயக்கமற்று இருக்கலாம். ஆனால் மந்தமாக்கப்படுவதில்லை. அது பயிற்சியின் மூலம் புறமனதைக் கடந்து செல்லுதல். தேவையெனில் புறமனம், முன்பைவிட அதிகச் செயலூக்கத்துடன் இயங்க முடியும். தியானப்பயிற்சி எனக்கூறப்படுவது உண்மையில் புறமனதைக் கடந்து செல்வதற்கான பயிற்சி. புறமனதைக் கடந்து செல்லும்போது, அகமனதை உணர்வதற்கான தடைகள் அங்கு இல்லை.

நம் எண்ணங்களும் மனநிலைகளும் செயல்களும், மூளையில் உள்ள நியூரான்களால் முடிவு செய்யப்படுகின்றன. மனித மூளையில் சுமார் 14 பில்லியன் (1400 கோடி) நியூரான்கள் முதல் 100 பில்லியன் நியூரான்கள்வரை உள்ளதாக வெவ்வேறு தரவுகள் கூறுகின்றன. நியூரான்களில் டென்ட்ரைட் (Dendrite) என்னும் பகுதி அவற்றின் ஏற்பிகள (Input) ஆகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, அவற்றின் வெளியீட்டு (Output) உறுப்பாகும். ஒரு நியூரானில் ஏறத்தாழ 200,000 ஏற்பிகள் வரை உள்ளன. எல்லாவிதமான டிஜிட்டல் மின்னணு சாதனங்களும் ‘0’ மற்றும் ‘1’ என்னும் எண்களை மட்டும் கொண்ட பைனரிஎண்களின் அடிப்படையில் இயங்குவதை நாம் அறிவோம். இங்கு ‘0’ என்பது, மின்சாரத்தால் தூண்டப்படாத நிலை. ‘1’ என்பது தூண்டப்பட்ட நிலை. மூளையில் உள்ள நியூரான்களும் கிட்டத்தட்ட இதே அடிப்படையில்தான் இயங்குகின்றன. எல்லா நியூரான்களும் எப்போதும் தூண்டப்பட்ட நிலை அல்லது தூண்டப்படாத நிலை என்னும் இருநிலைகளில் ஒன்றில் இருக்கும். மின்னணு கருவிகளின் இயக்கம், மின்சார ஓட்டத்திற்கு காரணமான எலக்ட்ரான்களால் தூண்டப்படுகிறது. மூளையின் நியூரான்கள், அங்கு இருக்கும் மின்வேதி அணுக்களால் (Ions) தூண்டப்படுகின்றன.

ஒவ்வொரு நியூரானின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகள், பல ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நியூரானின் வெளியீட்டு உறுப்பு, வெவ்வேறு நீளங்களால் பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அந்த நீளத்திற்கேற்ப வெவ்வேறு நேரங்களில் அடுத்த நியூரான்கள், முதல் நியூரானிடமிருந்து தூண்டுதலை பெறுகின்றன. ஒரு நியூரான், அதன் ஏற்பிகளால் இணைக்கப்பட்டுள்ள பிற நியூரான்களிடமிருந்து பெறும் தூண்டுதலிற்கேற்ப மூளையின் அந்த நேரத்து செயல்பாடு இருக்கும். தூண்டப்படும் நியூரான், அதன் வெளியீட்டு உறுப்பு வழியாக மின்வேதி அணுக்களை வெளியிடுகிறது. நியூரான் ஒருமுறை மின்வேதி அணுக்களை வெளியிட்டுச் செலவிட்டால், அடுத்தமுறை தூண்டப்படுவதற்கு, மீண்டும் அந்த மின்வேதி அணுக்களை பெற்றாக வேண்டும் அல்லது உற்பத்தி செய்தாக வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட 1 மில்லிசெகன்ட் அளவுக்கு நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு வினாடியில் சுமார் 1000 முறைகள் ஒரு நியூரான் தூண்டப்படலாம்.

ஒவ்வொரு நியூரானின் ஆயிரக்கணக்கான ஏற்பிகளும், வேறு நியூரான்களின் வெளியீட்டு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நியூரான் பல ஆயிரக்கணக்கான வேறு நியூரான்களிடமிருந்து தூண்டுதலைப்பெறலாம். இந்த தூண்டுதல்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு நியூரான் பெறும் ஒட்டுமொத்தத் தூண்டுதல்களின் கூட்டுத்தொகை, ஒரு குறைந்தபட்ச அளவை விட (Threshold) அதிகமாக இருந்தால், அந்த நியூரான் தூண்டப்படும். மேலே கூறப்பட்ட எண்ணிக்கைகளும் சாத்தியங்களும், மனித மூளையும் அந்த மூளையால் இயக்கப்படும் மனிதர்களும் எத்தகைய அதிசயம் என்பதை உரக்கக் கூறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக நாம் அதிசயங்களை நமக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நியூரான்களின் இயக்கத்தைப் பொறுத்து, நம் மனதின் இயக்கம் இருக்கும். மாயத்தோற்ற ஊக்கிகளும், தியானமும் நியூரான்களின் இயக்கங்களை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பதைப் பொறுத்து, அவற்றால் பெறப்படும் அக உணர்வுகள் அமையும். மாயத்தோற்ற ஊக்கிகள், நம் உடலுக்கும் மூளைக்கும் அந்நியமான வேதிப்பொருட்கள். அவை மூளையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதை அளவிடுவதற்கான கருவிகள் இன்னும் மருத்துவத் துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலே கூறப்பட்ட மூளையின் சிக்கலான இயக்கங்களை ஒப்பிடுகையில், அவற்றின் ஒரு சிறிய அளவு இயக்கத்தை அளவிடும் கருவிகள் கூட உடனடி எதிர்காலத்திலும் உருவாகச் சாத்தியங்கள் இல்லை.


ஆனால் மருந்து என்னும் தகுதியில், மாயத்தோற்ற ஊக்கிகள், மனித இனத்துக்கு வரப்பிரசாதமாக அமையக்கூடும். அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தி, உயிரினங்கள் வாழும் சூழலை மிக வேகமாக அழித்துவரும் மனித இனம், எதிர்காலத்தில் எத்தகைய நோய்களுக்கு ஆட்படக்கூடும் என்பதைக் கண்கூடாக அறிந்து வருகிறோம். மாயத்தோற்ற ஊக்கிகள் வரைமுறைப் படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ உபயோகங்களும் வரைமுறை செய்யப்பட்டால், குறைந்த பட்சம், நோய்களால் அடையும் மரணத்தை மனதளவில் எளிதாக எதிர்கொள்வதாவது மனிதருக்குச் சாத்தியப்படலாம்!

blog.change@gmail.com

Sunday, March 29, 2015

தீ

28-03-2015 அன்று சிறகு இணையதளத்தில் வெளியான கட்டுரை.

இந்திய மரபில் நெருப்பு முதன்மையான தெய்வம். நெருப்பு எரிய, மூன்று இருப்புகள் அவசியம். விறகு எனப்படும் எரிபொருள். ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு, தேவையான வெப்பம். இவை மூன்றும் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவை (Thrush hold) விட அதிகமாக இருந்தால்தான் நெருப்பு எரிய முடியும். நெருப்பு எரிய அவசியமான இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து, நெருப்பு முக்கோணம் (Fire Triangle) என கூறப்படுகிறது. நெருப்பை அணைக்க உதவும் (Fire Fighting) எல்லா முறைகளும், இந்த மூன்று காரணிகளில் ஒன்றை, குறைந்த பட்ச அளவை விடை குறைவாக கொண்டுவருவதன் மூலமே நெருப்பை அணைக்க முயல்கின்றன.  எரியும் நெருப்பில் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அந்த நெருப்பு அணைந்து விடும். இன்றைய நம் நாகரீகமும், நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதப்படும் புற வாழ்க்கை வசதிகளும் நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. நெருப்பின் இருப்பே தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாகவும்!

நெருப்பு என்பது சக்தி. நாம் அன்றாடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. காற்றாலை, சூரிச சக்தி, நீர்மின் சக்திக்கு தேவையான மழை, இவை யாவையும் சூரியனின் வெப்பத்தால் (நெருப்பினால்) பூமியில் ஏற்படும் சலனங்களின் மூலமே பெறப்படுகிறது. எனவே நெருப்பிலேயே நம் இருப்பும் அமைந்துள்ளது. அந்த நெருப்பை வணங்குவோம்! நெருப்பு அதன் மேல் அமரும் எதையும் எரித்தழிக்கும் இயல்புடையது. நெருப்பிலிருந்து நம் இருப்பை பெறும்போது, அந்நெருப்பின் இயல்பை அறிந்து, அதன் வெம்மையை, நம்மை எரிக்கும் அளவுக்கு குறைவாகவே அதனை கையாளவும் அறிந்திருக்க வேண்டும்.

இன்று மனிதர்களின் இயக்கத்துக்கு தேவையான சக்தியின் பெரும்பகுதி பெட்ரோலியம் எண்ணையிலிருந்து கிடைக்கும் பொருட்களையும் இயற்கை வாயுவையும் நிலக்கரியையும் எரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம், இன்னும் 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பெரும்பலான உலகின் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது - ஆர்டிக் போன்ற துருவப்பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்காக நாடுகளுக்கிடையே நிகழும் போட்டிகளை கவனித்தால்! ஒருவேளை, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அளவுக்கே இன்னும் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்படுமானாலும், மேலும் ஒரு 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கலாம். அதாவது இன்னும் 80 வருடகாலங்களில், பல கோடி ஆண்டுகளின் இயக்கங்களால் உருவான எண்ணை வளத்தின் பெரும் பகுதி மனிதர்களால் நெருப்பாக மாற்றப்பட்டு சக்தியாக நுகர்ந்து முடிக்கப்பட்டு விடும். நிலக்கரி வளம் மேலும் ஒரு 100 வருடங்கள் வரை இருக்கலாம்.

பெட்ரோலியப்பொருட்களும் நிலக்கரியும் பூமி உருவாக்கி அளித்துள்ள சக்தி. பூமிக்குள் பல கோடி ஆண்டுகளுக்கு முன், நாம் அறியாத பூமியின் இயக்கத்தால், புதைந்த தாவரங்களும் மற்ற உயிரினங்களும், பூமியின் வெப்பத்தாலும், ஊடான வேதிமாற்றங்களாலும் பெட்ரோலியமாகவும் நிலக்கரியாகவும் மாற்றமடைந்துள்ளது. இன்னும் 100 அல்லது 200 வருடங்களில் பெட்ரோலியமும் நிலக்கரியும் முற்றிலும் நுகர்ந்து முடிந்து விட்டபின், மீண்டும் பூமியிலிருந்து அவை கிடைக்க வேண்டுமானால், இன்றைய பூமி முழுவதும் சிதைவுண்டு, அதன் காடுகள் மண்ணுக்குள் புதைந்து, பல கோடி ஆண்டுகளுக்கு பின்னால் மட்டுமே முடியும் - அப்போது புதிதாக தோன்றியிருக்கும், பெட்ரோலியத்தை கண்டறிய முடியும் உயிரினத்துக்காக!

தற்போது கிடைக்கும் தரவுகளின் படி, பெட்ரோலியம் முதன் முதலாக கி.மு. 450 ஆண்டுகள் வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அதன் பின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் பெட்ரோலியம் எடுக்கப்பட்டு பல்வேறு பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தற்செயலான நிகழ்வுகளாக இருந்திருக்கக்கூடும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, எண்ணை கிணறுகள் உருவாக்கப்பட்டு, பெட்ரோலியம் பொருளாதார பயன்பாட்டுக்கு தேவையான சக்திக்காக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 19 -ம் நூற்றாண்டின் இறுதியில், இன்று நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன்னோடியான பெட்ரோலியம் எண்ணையிலிருந்து பெறப்பட்ட எரிபொருட்களைக்கொண்டு இயங்கும் வாகனங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின் பெட்ரோலியம் எண்ணெயின் தேவை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பெட்ரோலிய எண்ணை வளங்களுக்காகவும் இயற்கை வாயுவுக்காகவும் அவற்றால் பெறும் பொருளாதார  ஆதாயங்களுக்காகவும் பல அதிகாரப்போட்டிகளும், யுத்தங்களும், உள்நாட்டு கலவரங்களும்........

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவிலிருந்து சக்தி இரண்டு வழிகளில் பெறப்படுகிறது. முதலாவதாக, பெட்ரோலிய பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தை இயந்திர சக்தியாக மாற்றுவதன் மூலம் பெறப்படுகிறது. வாகனங்களின் இயக்கம் இந்த வகையில் பெறப்படுகிறது. இரண்டாவது முறை, எரிப்பதன் மூலம் உருவாகும் இயந்திர சக்தி, மின் சக்தியாக மாற்றப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இயந்திர சக்தியாகவோ அல்லது வேறு தேவைப்படும் சக்திகளாகவோ மாற்றப்படுகிறது. நிலக்கரியிலிருந்து தற்காலத்தில் இரண்டாவது வழியில் மட்டுமே சக்தி பெறப்படுகிறது. இயந்திர புரட்சியின் ஆரம்ப காலத்தில், நிலக்கரியின் எரிசக்தி, நீராவி எஞ்சின்கள் மூலம் நேரடியாக இயந்திர சக்தியாக மாற்றப்பட்டது.

இன்று நாம் உபயோப்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி, வாகனங்களை இயக்கும் சக்தியை தவிர, மின் சக்தியே. மின்சக்தியின் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்தும் இயற்கை வாயுவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு சிறு பகுதி, சில தனிமங்களின் அணுக்களை, மிகவும் கட்டுப்பாடான நிலைகளில் பிளப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தால், நீரை ஆவியாக்கி, அந்த ஆவியின் அழுத்தத்தால் பெறப்படும் இயக்க சக்தியை மின் சக்தியாக மாற்றப்படுகிறது. இன்னொரு மிகச்சிறிய பகுதி, Green Energy அல்லது பசுமை சக்தி எனப்படும் சூரிய ஒளி, காற்று சக்தி, தேக்கி வைக்கப்பட்ட நீரின் இயக்கசக்தி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.
இவற்றில் இயற்கை வாயு இன்னும் அதிகபட்சம் 100 வருடங்களுக்கு மட்டுமே. நிலக்கரி அதிலிருந்து ஒரு 100 வருடங்களுக்கு கூட இருக்கலாம். மிச்சமிருப்பது அணு சக்தியும் பசுமை சக்தியும் மட்டுமே. அல்லது புதியதாக ஏதேனும் முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அணு சக்தி, தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானது. ஆனால் அவை மனித இனத்துக்கு தேவையும் கூட.

தற்போதைய நிலையில், தனிப்பட்ட முறையில் நான் அணு சக்திக்கு எதிரானவன். பல்வேறு காரணங்கள். முக்கியமாக அணுசக்தி மேலாண்மையில் உள்ள அசிங்கமான அரசியலின் காரணமாக, அதன் விளைவான ஆபத்துகளும், எளியோரை சுரண்டுதலும் என்னும் அரசியல் விளையாட்டுகளின் காரணமாக.  அறியாமையும் காரணமாக இருக்கலாம்! ஆனாலும், மனித இனம் வாழ, அடைந்த நாகரீகத்தை தக்க வைத்துக்கொள்ள, இன்றைய நிலையில் அணு சக்தி தேவையானதாகவே இருக்கக்கூடும். எனில் அதன் ஆபத்துகளை என்ன செய்வது? அரசியலுக்கு அப்பாற்பட்டு, குறுகியகால விருப்பு வெறுப்புகளை கைவிட்டு, அனைத்து தரப்புகளும் சேர்ந்து அணு சக்திக்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு கோணங்களில்! அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வர வேண்டும் - முக்கியமாக அணுக்கழிவுகள் குறித்தும்! இன்றைய அரசியல் நிலையில் இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் போல! குறுகிய கால விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கங்களினால்! செறிவூட்டப்பட்ட அணுக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. நம் சாதாரண அன்றாட வாழ்க்கைக் கழிவுகளையை அகற்ற தேவையான கொள்கைகளும் கட்டமைப்புகளும் இல்லாத மனித இனம், அணுக்கழிவுகளை கையாள இன்னும் அறிந்திருக்கவில்லை. தற்போதைய நிலையில் எத்தகைய சமாளித்தல்களை கையாண்டாலும்!        
       
                                              *      *      *      *      *      *       

நான் கடந்த சில வருடங்களாக சக்தியை உபயோகிப்பதில், வீணாக்காமல் இருப்பதில், விழிப்புடன் இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பவன். மிகவும் எளிய காரணம்தான். நான் இந்த பூமியின் ஒட்டுயிரி. அதன் தயவில் என் இருப்பை அடைந்தவன். அதன் தயவில் என் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருப்பவன். அந்த பூமியிலிருந்து என் தேவைக்கு அதிகமாக எடுப்பது, அதன் மூலம் அதன் இருப்பை, சமநிலை குலைவை, வாழும் மற்ற உயிரினங்களின் உரிமையை பறிப்பது போன்றவற்றிற்கு நானும் துணையாக செல்வது என்பது என் இருப்பை தாங்கும் மகாஇருப்புக்கு செய்யும் துரோகமாகும். எனவே இந்த முயற்சி.

உண்மையில், இது என் முயற்சி என்று சொந்தம் கொண்டாட முடியாது. என் 'அப்பா'விடமிருந்து நான் பெற்றுக்கொண்ட பலவற்றுள் இதுவும் ஒன்று. அவர் எதற்காக வீணாக்குதலை தவிர்த்தார் என்பதற்கு அவருக்கேயான காரணங்கள் இருக்கலாம் - ஆன்மீக காரணங்களோ, பொருளாதார காரணங்களோ அல்லது இரண்டுமோ!

அவர் பெரும்பாலும் நிர்ப்பந்தமாகவே எவற்றையும் வீணாக்கமல் இருக்கும் தன்மையை என்னுள் கொண்டுவந்தார் என்றே நினைக்கிறேன். பலமுறை அவரின் நிர்ப்பந்தங்கள் எதிர்மறையான எண்ணங்களை எனக்குள் உருவாக்கியிருக்கின்றன. சில வசதிகளுக்காக கூட வீணாக்காமல் இருப்பது பொருளாதார காரணத்தால் மட்டுமே என்னும் எண்ணம் என் மனதில் இருந்துவந்தது என்பது, ஒருவேளை அந்த எதிர்மறை எண்ணங்களுக்கான காரணமாக இருந்திருக்கலாம். அவற்றுக்கான வேறு காரணங்களையும் என்னால் அறிய முடிந்தபின், அவரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் - நேரடியாக அவரிடம் கூற என் மனம் இடம் கொடுக்காததால்!

இன்று நான் மேற்கொள்ளும் வீணாக்காமல் இருக்கும் கொள்கை, என்னை சார்ந்தவர்களையும் சில வசதிகளிலிருந்து விலக்குகிறது. பெரும்பாலும் அவர்கள் என்னை புரிந்து கொண்டாலும், சில நேரங்களில் உராய்வு ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. சில நேரங்களில் அது அவர்கள் மேல் நிர்ப்பந்தமாகவும் மாறுகின்றது. மற்றவர்களை எதற்காகவும் நிர்ப்பந்திப்பது தவறு என்பதை அறிவுபூர்வமாக நான் அறிந்திருந்தாலும், உணர்வு பூர்வமாக நிப்பந்தித்தலை தவிர்ப்பது எப்போதும் சாத்தியமாவதில்லை! நம் அறிவும் உணர்வுகளும் ஒன்றாகாதது வரை, அறிவுக்கும் உணர்வுக்குமான உரசல் நம்முள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

பின்குறிப்பு;

பெட்ரோலியம் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் http://www.geohelp.net/world.html இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Friday, March 13, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-3


சிறகு இணைய இதழில் 07-02-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

ஒரு பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக மந்த நிலையில் இருக்கும்போது, அந்த பொருளாதாரத்தின் அங்கங்களான மக்களும் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார தேக்க நிலையை அடைவார்கள். அதாவது, அவர்களிடம் தேவை எனக்கூறப்பட்ட நுகர்வுப் பொருட்களை வாங்க போதுமான பணம் இருக்காது. எனவே உற்பத்தியும் குறைக்கப்படும். இதன்மூலம் அந்த உற்பத்தியில் ஈடுபடும் உழைக்கும் வர்க்க்த்துக்கு, குறைவான வேலையே உற்பத்தித்துறையிலை இருக்கும். இதன்மூலம் அவர்கள் பண வருமானம் இன்னும் வீக்கமடையும். இது ஒரு சுழல் இயக்கமாக நிகழத்தொடங்கும் - பொது மக்களிடம் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேவைகள் அனைத்தும் இல்லாமல் ஆகும் வரை. அதன் பின் அவர்கள் அடிப்படைத்தேவைகள் மட்டுமே இருக்கும். அவற்றை குறைக்க முடியாது. எனவே அவற்றுக்கான உற்பத்தியும், தொழில்களும் அதற்கேற்ற வகையிலான பணப்புழக்கமும். இதுவே இயற்கை நிலையாக இருக்க முடியும்.

ஆனால், எந்த பொருளாதாரமும் அந்த நிலையை அடையும் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் மற்ற பொருளாதாரங்கள், அவற்றுக்கான சூறையாடும் களங்களை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும். இவ்வாறு வீக்கமடையும் பொருளாதாரங்கள், பொருளாதார சூறையடலுக்கான எளிய களங்கள். எனவே எல்லா பொருளாதாரங்களும், அவற்றின் உற்பத்தியையும், எனவே தேவையையும் உயர்த்துவதற்கான எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக தற்போது உலகெங்கும் பரவலாக அறியப்படும் Quantitative Easing என அழைக்கப்படும், அரசாங்கங்களின் பணப்புழக்கத்துக்கான வழிமுறைகள். ஜப்பான் பொருளாதாரம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மந்த நிலையை அடைந்தது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், அது உலகெங்கும் உள்ள மக்களின் ஆடம்பர நுகர்வு சாதனங்களின் உற்பத்தி தளமாக விளங்கியது. உலகெங்கும் உள்ள மக்களின் நுகர்வின் காரணமாக, அதுவரைக்கும், ஜப்பான் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியையும் அடைந்து வந்தது. ஆடம்பரப் பொருட்களின் நுகர்வுக்கான மனநிலை, அனைத்து மக்களிடமும் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், ஜப்பானின் உற்பத்தி மட்டும் அனைத்து உலகத்துக்கும் போதுமானதாக இல்லை. கொரியா, சைனா போன்ற பொருளாதாரங்கள், அந்த இடைவெளியை நிரப்பத்தொடங்கின. அத்துடன் அந்த புதிய பொருளாதாரங்களின் உற்பத்திச் செலவு ஜப்பானை விட குறைவாக இருந்ததால், அவற்றால் குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோருக்கு கொடுக்க முடிந்தது. அத்துடன் ஜப்பானின் பொருளாதாரம் தேக்க நிலையையும் அடைந்தது. இந்த தேக்க நிலையிலிருந்து விடுபட, கடந்த 20 வருடங்களாக ஜப்பான் முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் செயற்கையாக பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபடும் முயற்சி 20 ஆண்டுகளுக்குப்பின்னரும் பலன் அழிக்கவில்லை. இந்த செயற்கையான பண்புழக்கத்தை அதிகரிக்கும் முறை Quantitative Easing என அழைக்கப்படுகிறது.

2008-ம் ஆண்டுக்குப்பின் பொருளாதார மந்த நிலையை அடைந்த அமெரிக்கா, இதே வழியை, பணப்புழக்கத்துக்காக கையாண்டு வருகிறது. அமெரிக்காவுடன், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளும் கூட! ஜப்பானுக்கு கை கொடுக்காத செயற்கை பணப்புழக்கம், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கைகொடுக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் முதலாளித்துவ செயல்பாடுகள் எவ்வாறு 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார உடைவை கொண்டு வந்தது என்பதை அறிய வேண்டுமானால், 2010 -ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்தக்கான 'அகாடமி விருது' பெற்ற  INSIDE JOB என்னும் ஆவணப்படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

இந்த செயற்கை பணப்புழக்கத்தின் நோக்கம்தான் என்ன? நான் புரிந்து கொண்டவரையில் இங்கு கூற முயற்சிக்கிறேன். மேலதிக விபரங்களுக்கும், இங்கு கூறப்பட்டுள்ளவற்றின் நம்கத்தன்மையை உறுதி செய்யவும், (உண்மையான) பொருளாதார நிபுணர்களிடன் ஆலோசனையை பெறலாம்.
அரசாங்கங்கள், அவற்றின் பணத்தேவைகளுக்காக கடன்பத்திரங்களை வெளியிட்டிருக்கும். இந்த கடன்பத்திரங்கள், 'பென்ஷன்' நிதியங்கள், 'இன்ஷூரன்ஸ்' நிதியங்கள், வங்கிகள் ஆகியவை பெரும்பாலும் வாங்கியிருக்கும். இந்த கடன்பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வட்டி, அந்த நிறுவனங்களின் வருவாயாக இருக்கும். இதன் மூலம் அரசாங்கம் செய்வதென்னவென்றால், புழக்கத்தில் உள்ள பணத்தை தன் செலவுகளுக்காக கடன் வாங்கிக்கொள்கிறது.

செயற்கை பணப்புழக்கத்தில், இதன் எதிர் இயக்கம் நடைபெறுகிறது. பொருளாதார சரிவின் போது, வங்கிகளிடம் போதிய பணம் இல்லை. எனவே அவற்றால், உற்பத்தி செய்யும் முதலாளிகளுக்கு கடன் அளிக்க முடிவதில்லை. உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான பணத்தை அவர்கள் கடனாக பெற முடிவதில்லை. இதனால், அவர்களின் உற்பத்தி குறைகிறது. உற்பத்தி குறைவதனால், தொழிலாளர்களின் வேலை குறைகிறது. எனவே தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதனால் நுகர்வோர்களாகிய பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைகிறது. எனவே, அவர்களின் தேவையும் நுகர்வும் குறைக்கப்படுகிறது. இதன் எதிர்வினையாக உற்பத்திப்பொருட்களின் தேவையும் குறைகிறது. எனவே உற்பத்தி மீண்டும் குறைகிறது...... இது ஒரு சுற்றியக்கம் - ஒன்றை ஒன்று குறைத்துக்கொண்டே வரும் இயக்கம்.

செயற்கை பணப்புழக்கத்தில், அரசாங்கம், அது முன்பு விற்ற கடன்பத்திரங்களை, அதிக விலைக்கு திரும்ப வாங்கிக்கொள்கிறது. கடன் பத்திரங்களுக்கு, அது ஈட்டும் வட்டியை விட அதிக விலை கிடைப்பதால், அதை வைத்திருக்கும் வங்கி போன்ற நிறுவனங்கள், அந்த கடன்பத்திரங்களை அரசாங்கத்திடமே விற்று, அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றன. இப்போது வங்கிகளிடம் கடன் கொடுப்பதற்கான பணம் உள்ளது. அத்துடன் அரசாங்கம், கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் மிகவும் குறைவாக வைத்துக்கொள்ள தேவையான அரசாங்க ஆணைகளை அளிக்கிறது. அதாவது, முதலாளிகளுக்கு, மிகக்குறைந்த வட்டியில் உற்பத்திக்கான பணம் கிடைக்கிறது. இதன் மூலம், தொழிலாளர்களின் தேவை அதிகரிக்க வேண்டும், எனவே வேலையில்லா திண்டாட்டம் குறைய வேண்டும், பொது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும், எனவை தேவையும் நுகர்வும் அதிகரிக்க வேண்டும், அதன் மூலம் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் - சுற்றியக்கம் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும். இதுவே இந்த பணப்புழக்க அதிகரிப்பின் எதிர்பார்ப்பு!

ஆனால் உண்மையில், செயற்கை பணப்புழக்கம் தொடங்கி சுமார் ஆறு ஆண்டுகள் சென்ற பின்பும் எந்த தளர்வடைந்த பொருளாதாரங்களும், மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவில்லை. அதற்கு காரணம் என்ன? அதுவும் முதலாளித்துவம், தன் சுயலாபங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வழிமுறைகளே. அதற்கு முன்பாக, தன் செலவுகளுக்காக கடன்பத்திரங்கள் மூலம் கடன் பெற்ற அரசாங்கங்கள், இன்னும் பற்றாக்குறை நிலையிலேயே இருந்தாலும், அந்த கடன் பத்திரங்களை அதிக விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? இது ஒரு மிகப்பெரிய கேள்வி குறி! பொருளாதார நிபுணர்கள்தான் இதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதனாலாயே, செயற்கை பணப்புழக்கத்தை, அரசாங்கங்களின் 'பணத்தை அச்சிடும்' வேலை என, இந்த முறையை ஏற்க இயலாதவர்கள் கூறி வருகிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரங்கள், அவற்றின் லாப நோக்கங்களுக்களுக்காக, வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும், வெளி நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல வகையிலான சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சட்டங்களே தற்போதைய செயற்கை பணப்புழக்கம் நுகர்வையும் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கான காரணம்.
வங்கிகள் செயற்கை பணப்புழக்கத்தின் மூலம் பெற்ற பணத்தை தற்போது பல வழிகளில் செலவிடலாம். அதை தங்கள் பொருளாதாரத்தில் உள்ள உற்பத்தியாளர்களாகிய முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கலாம். இங்கு அவர்கள் கடனுக்கான வட்டியின் மூலம் பெறும் லாபம் மிகவும் குறைவானது. அல்லது அந்த பணத்தை இன்னும் பொருளாதாரத்தில் தேக்க நிலையை அடையாத பொருளாதாரங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், அந்த பொருளாதாரம் உறபத்தி செய்யும் லாபத்தில் பங்கு பெற முடியும். இவ்வாறு பெறும் லாபம், சொந்த பொருளாதாரத்தில் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து பெறும் லாபத்தை விட மிக அதிகமாக உள்ளதால், பெரும்பாலான வங்கிகள் அரசாங்கத்திடம் கடன்பத்திரங்களை அதிக விலைக்கு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பார்கின்றன. அதாவது அரசாங்கங்கள், அவை இயற்றிய முதலீடு சார்ந்த சட்டங்களின் மூலம் கட்டுண்டு இருக்கின்றன. அந்த நாட்டின் பொருளாதாரத்துக்குகாக அச்சிடப்பட்ட அந்த நாட்டுப்பணம், வெளிநாடுகளுக்கு முதலீடாக செல்வதை தடுக்க முடியாத நிலை. எனவே சொந்த பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலை.

இந்தியாவுக்கு தற்போது வெளி நாட்டு முதலீடுகள் அவசியமாகப்படுகிறது. எனவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சட்டங்கள், எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயற்றப்படுகின்றன. ஆனால், இந்தியா ஒரு பொருளாதார நிலைத்தன்மையை அடைந்த பின், இந்த சட்டங்களே அதற்கு எதிரியாகவும் மாறலாம்!

முதலாளித்துவம், வரைமுறையற்ற உற்பத்தியையும், எனவே வரைமுறையற்ற நுகர்வையுமே விரும்புகிறது. முன்பே கூறியபடி, மனித நுகர்வின் எல்லை, அந்த நுகர்வால் உருவாக்கப்படும் கழிவுகள் மற்ற உயிரினங்களால் நுகர்ந்து அழிக்கப்படும் அளவுக்குள் இருந்தால்தான், பூமியின் சமநிலை குலையாமல் இருக்கும். ஆனால் மனித நுகர்வு, அந்த எல்லைகளை பெருமளவு கடந்து, மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை செயற்கையாக அழிக்கும் அளவுக்கும், அந்த அழிப்பின் இயக்கத்தில், பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அளவுக்கும் சென்று விட்டது. உற்பத்திக்கான கச்சா பொருட்களை அடைவதற்கு, அளவின்றி பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து, மனித நுகர்வு பொருட்களாக மாற்றுகின்றது. பிற உயிரினங்கள் அவற்றின் வாழ்வாதாரங்களை இழக்கும்போது, அவை அழிந்து போகின்றன. இதனால் உணவுக் கண்ணியில் ஒரு கண்ணி விடுபட்டு விடுகிறது. பாதிப்புக்குள்ளாவது மனித இனமும்தான்.

இன்னொரு புறத்தில், மனிதனுக்கான உணவை அடையும் பதட்டத்தில், கட்டுப்பாடற்ற செயற்கை உரங்களின் உபயோகத்தின் மூலம் நிலங்களின் சமநிலைத்தன்மை குலைக்கப்பட்டுள்ளது. பூச்சி மருந்துகளின் உபயோகத்தால், பூச்சியினங்களுடன் சேர்த்து அந்த பூச்சிகளை உண்டு வாழும் உயிரினங்களையும் அழிவுக்கு உட்படுத்துகிறோம் - தேனீக்கள் உட்பட. உலகத்தில் தேனீக்களின் இனம் அழிந்தால், அது பூமியில் மிகப்பெரிய உயிரின அழிவுக்கு காரணமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

மனித இனம் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் கடந்து கொண்டே இருக்கிறது. அளவற்ற உற்பத்தியையும், எனவே கட்டுப்பாடற்ற நுகர்வையுமே அடிப்படையாக கொண்ட முதலாளித்துவத்தின் பங்களிப்பை முடித்து வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. முதலாளித்துவத்தால், மனித வாழ்க்கை வசதிகள் பெருமளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனித இனம் மட்டுமல்லாமல், பல உயிரினங்களின் அழிவையும் அது தொடங்கி வைத்துள்ளது - பூமியின் சமநிலையை குலைப்பதன் மூலம்! பூமியின் சராசரி வெப்பம் அதிகமாக தொடங்கி விட்டது. துருவ பனிபாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி விட்டது, அதன் மூலம் நிலப்பரப்பும் குறையத்தொடங்கி விட்டது. பல உயிரினங்கள், பூமியிலிருந்து முற்றாக அழியும் நிலையில் உள்ளன. புதிய பொருளாதார முயற்சிகளை மிக வேகமாக தொடங்கியாக வேண்டும்.

முதலாளித்துவம், அதன் தேவையான சமூக சமத்துவத்தை, ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக்குள் அடைந்து விட்டது. அது தேக்க நிலையையும் அடைந்து விட்டது. இந்த தேக்க நிலையிலிருந்து மீள வேண்டுமானால், பேரழிவு ஒன்றை சந்தித்தாக வேண்டும். அதுவே இயற்கை விதி. ஆனால் முதலாளித்துவம் அதன் அதிகப்பட்ச பரிசாக, மனித இனத்திற்கு சுதந்திரமான சிந்தனை என்னும் ஆயுதத்தை அளித்துள்ளது. மனித இனம் நிச்சயமாக அந்த ஆயுதத்தை உடனடியாக பயன்படுத்தியாக வேண்டும். அந்த ஆயுதம் முதலாளித்துவத்தை அழித்து விட்டாலும்! மனித இனம் அழிவதற்கு பதிலாக, முதலாளித்துவம் என்னும் பொருளாதார இயக்கத்தை பலி கொடுக்கலாம். இதன் மூலம் மனித இனம் பூமியில் தப்பிப்பிழைப்பதற்கான சாத்தியத்தை, முதலாளித்துவம் அளித்த சுதந்திர சிந்தனையே அளிக்கட்டும்.

எனில், அடுத்த பொருளாதார முயற்சி தொடங்கியாக வேண்டும். முதலாளித்துவம் விட்டு செல்லும் இடத்திலிருந்து தொடங்கி, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான பொருளாதார இயக்கம். இன்றைய பொருளாதார வல்லுனர்கள், முதலாளித்துவத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள். எனவே அவர்களால் புதிய பொருளாதார முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. விதிவிலக்காக, அவர்களுக்கிடையே சிந்தனையாளர்கள் இருந்தால் அது சாத்தியமாகலாம்.

எதிரெதிர் துருவங்களான, முதலாளித்துவத்தையும் கம்யூனிஸ பொருளாதாரத்தையும் கலந்து, ஒன்றின் குறைபாட்டை மற்றொன்றால் களைந்து, ஒன்றின் நிறைவை மற்றோன்றின் நிறைவால் மேலும் முழுமையாக்கி ஒரு புதிய பொருளாதார கொள்கையை கொண்டு வரலாம். காந்திய பொருளாதார கொள்கையான, முழுமையான, பரவலாக்கப்பட்ட சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளை ஆராயலாம். காந்திய பொருளாதார கொள்கை, மிகப்பரவலாக்கப்பட்ட நிலையிலேயே சமூகத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என்று தோன்றுகிறது. பொருளாதார அலகின் அளவு அதிகரிக்கும் தோறும், காந்திய பொருளாதாரக் கொள்கைகள் எதிர்மறை விளைவுகளையும் அளிக்கலாம். பரவலாக்கம் நிகழ்ந்தால், தனிமனித சுதந்திரம் அதன் எல்லையை மிக எளிதாக அடைய முடியலாம். ஆனால், சமூகம் தனிமனித சுதந்திரத்தை கையாளத்தக்க அளவில் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்திருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின், 1991-ம் ஆண்டு வரை இந்தியா பின்பற்றிய, முதலாளித்துவமும், அரசாங்கமும் இணைந்த பொருளாதாரக்கொள்கைகளை மீண்டும் பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் நுகர்வின் அளவையும் உற்பத்தியின் தேவையையும் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியலாம். 

இன்னும் எண்ணற்ற சாத்தியங்கள். மனிதனின் சிந்தனைக்குதான் எல்லை இல்லையே. எனில் ஏன் ஒரு அடுத்த தலைமுறை பொருளாதார கொள்கையை உருவாக்க முடியாது. அதன் மூலம், பூமியல் மனித இருப்பை தக்கவைத்துக் கொள்வதையும்!

Monday, February 9, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-2


சிறகு இணைய இதழில் 07-02-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

முதலாளித்துவம், அதன் சமநிலைப்புள்ளியை அடைந்த பின் போட்டியினால் மட்டுமே முன்னேற முடியும். சமநிலைப்புள்ளியை முதலாளித்துவம் கடந்து சுமார் 30 வருடங்களாவது ஆகி விட்டது. அதன் பின் பல்வேறு தரப்புகளின் போட்டிகளினால்தான் அதன் இருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒரே வகையான பொருட்களை உற்பத்தி செய்பவர்களிடையே, தேவையின் பெரும்பங்குக்கான உற்பத்தியின் போட்டி. தேவையை பூர்த்தி செய்தபின், நுகர்வோரிடம் செயற்கையாக ஒரு போதாமையை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் உற்பத்தியின் வளர்ச்சியை பேணுவதற்கான போட்டி. போதாமை மனப்பான்மையை நுகர்வோரிடம் உருவாக்க, அதற்கு தேவையான அதிகாரத்திற்கான போட்டி. உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை குறைந்த செலவில் கவர்வதற்கு தேவையான அதிகாரத்திற்கான போட்டி. எல்லா விதமான சமூக அறங்களையும், உற்பத்தியின் வளர்ச்சிக்காக, அதற்கு ஆதாரமான அதிகாரத்திற்காக, தியாகம் செய்யும் மனப்பான்மை. தங்கள் உற்பத்திக்காக, சமூகத்தின் அதிகாரமற்ற வர்க்கத்தை, எவ்வித அற உணர்வும் இல்லாமல் சுரண்டும் போக்கு. முதலாளித்துவத்தின் சுரண்டலினால் பாதிக்கப்பட்ட அதிகாரமற்ற வர்க்கம், அதிகாரத்திற்காகவும், அதன் மூலம் பிறர் சுரண்டலிலுருந்து தம்மை பாதுகாக்கவும், பிற வர்க்கங்களின் அதிகாரத்தை பறித்து அதன்மூலம் அவர்களை சுரண்டவும் முயலும் முயற்சிகள். உற்பத்தியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், இயற்கை பொருட்களை அளவுக்கதிகமாக நுகரச் செய்து, அதன் மூலம் இயற்கையின் சமன் நிலையை குலைத்து, இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாக இருத்தல். ஆம்! ஒற்றைப்பேரியக்கமாக முன்னேறி செல்லும் முதலாளித்துவ பொருளாதாரத்தின், எதிர்மறை உள் இயக்கங்களிலும் வெளிப்புற பாதிப்புகளிலும், இவை மிகச்சிலவை மட்டுமே.

இன்றைய உலகில் எல்லா அரசாங்கங்களும், அவை எத்தகைய கொள்கை போர்வையினுள் இருந்தாலும், அவை அனைத்தும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே. எனவே அவற்றில் ஒன்றை மட்டும் சாடி, மற்றொன்றை தூக்கிப்பிடிப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஏனெனில், எந்த அரசாங்கமும் இயங்க முழுமுதல் தேவை ஆரோக்கியமான பொருளாதாரம். இங்கு ஆரோக்கியம் எனக்குறிப்பிடப்படுவது, வெளிப்புறமான தோற்றத்தை மட்டுமே. அம் பொருளாதாரத்தினால் மட்டுமே, அந்த நாட்டின் சமூக்கங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதாவது அதிகாரமும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதிகாரம் இல்லையெனில், அது இல்லாத தரப்பின் பொருளாதாரம் அழிந்து விடும். பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லாவிடில், அந்த பொருளாதாரத்தின் ஆதிக்க சக்தியான அதிகாரமும் அழிந்து விடும். நாடுகளுக்கிடையேயான பொருளாதார போட்டிகளை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவற்றுக்கான காரணமும் தேவையும் மிக எளிதாக புரியலாம்.

அதே வேளையில், அதிகாரம் எப்போதும், பண்படாத மனதில், அகங்காரத்தையும் சேர்த்தே கொண்டு வரும். அதிகாரம் அகங்காரத்துடன் சேரும்போது அது எப்போதும் அழிவையும் கூட கொண்டு வரும். அதிகாரம் எப்போதும், எல்லா இடங்களிலும் சுரண்டலில் ஈடுபடுவது இதனாலேயே. சுரண்டலுக்கு தகுதியான கொள்கை விளக்கங்களையும் மிக எளிதாக அதிகார தரப்பினால் முன் வைக்கப்பட்டு, அந்த விளக்கங்கள் அந்த அதிகாரத்துக்குட்பட்ட சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வைக்கப்படும். அத்தகைய சுரண்டல்களின் தன்மை, அதை எதிர்கொள்ளும் சமூகத்தின் எதிர்ப்பு சக்கதியை பொறுத்தது. எதிர்ப்புசக்தி அறவே இல்லாத சமூகங்கள், அதிகார வர்க்கத்தால், அது எந்த கொள்கை போர்வையில் இருந்தாலும், முழுமையாக சுரண்டி அழிக்கப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலின் தாக்கமும் குறையும். ஆனால் இரு பக்கங்களிலும் அதற்கான களப்பலிகளுடன். மிகத்தன்முனைப்புள்ள தலைமையை கொண்டிருக்கும் சமூகங்கள், அந்த எதிர்ப்பை வெற்றிக்கரமாக எதிர்த்து நின்று, அதிகார வர்க்கத்தின் சுரண்டலை இல்லாமல் செய்யும். அதேநேரத்தில், தலைமையின் முனைப்பின் காரணமாக, அதிகாரவர்க்கத்தையே சுரண்ட ஆரம்பிக்கலாம். அதிகார வர்க்கமும், அதன் நன்மைக்காக ஒரு சமன்நிலையை அடையும்வரைக்கும் அத்தகைய சுரண்டலை அனுமதிக்கவும் செய்யலாம்.

தன் முனைப்பின் காரணமாக, சமூகத்தின் தலைமையை அடையும் தனிமனிதன் அல்லது, தலைமைக்குழு, அந்த சமூகத்துக்கு அதிகார மையத்தின் சுரண்டலிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் அதே நேரத்தில், பண்படாத மனதை உடைய, முழுமை நோக்கில்லாத தலைமையினாலும் புதிதாக கிடைத்த அதிகாரத்தினாலும், அந்த சமூகத்தையே சுரண்டத் தொடங்கும். இதனை அறிவதற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் அதிகார மையத்தை எதிர்த்து சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த எந்த இயக்கங்களும், அதன் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தபின், தான் சார்ந்த, தன் போராட்டத்துக்கு அடித்தளமான சமூகத்தையே சுரண்டவதை கண்கூடாகவே நாம் தினம்தோறும் அறிந்து வருகிறோம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விட வேண்டும் என்னும் காந்தியின் விருப்பத்தை, இந்த பின்னணியில் பார்க்கலாம்.

முதலாளித்துவம் உலகின் மேல் தொடுக்கும் எதிர்மறை விளைவுகளை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், பூமியின் இயக்கத்தை குறித்தும், பூமியில் நிகழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை இயக்கத்தை குறித்தும் ஒரு குறைந்த பட்ச புரிதல் தேவைப்படலாம். மனிதர்களாகிய நாம், நம்மை குறித்து எத்தகைய உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், மனிதர்கள் பூமியில் வாழும் ஒட்டுண்ணிகளே. அதுவே உண்மை. பூமியில் இருந்து உருவாகி, பூமியை நுகர்ந்து, பூமியினுள் அழிந்து செல்லும் எளிய உயிரினம். பூமியின் ஒரு அங்கம்!

பூமியில் நிகழும் எண்ணற்ற வகையிலான வாழ்க்கைகளில், மனித வாழ்க்கை ஒரு சிறு துளி மட்டுமே - அந்த எண்ணற்ற வாழ்க்கைகளில், மனித வாழ்க்கை சற்று உயர் தளத்தில் இருந்தாலும்! பூமி என்பது அதில் நிகழும் அந்த எண்ணற்ற வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுதி. மிகவும் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், பூமியில் நிகழும் ஒவ்வொரு வாழ்க்கையும், பூமியை நுகர்ந்து, அந்த நுகர்வின் வெளிப்பாடாகவும், கழிவாகவும், அது நுகர்ந்த அதே அளவு பொருட்களை பூமிக்கு திரும்ப அளிக்கும். மனித வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல. ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வும், பூமியை நுகர்ந்து திரும்ப அளிக்கும் பொருட்கள், மற்றொரு உயிர் நிகழ்வுக்கு நுகர்வுப்பொருளாக இருக்கும். இதன் மூலம் பூமியின் இயக்கம் சமன்நிலையுடன் நிலை நிறுத்தப்படுகிறது. அதாவது, பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும், இயற்கை விதிப்படி நிகழும்போது, மற்ற சில உயிரினங்களுக்கு தேவையானவற்றை அளிப்பதாக இருக்கும். இதையே இன்று உணவுக்கண்ணி (Food Chain) என்று நாம் மாணவர்களுக்கு பயில்விக்கிறோம். (உணவுக்கண்ணி என்பதை உணர்வு பூர்வமாக பயிலும் எந்த மாணவர்களும், அவர்கள் வாழ்நாளில் எந்த உயிரினங்களுக்கும் எதிராக எதையும் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய உணர்வு பூர்வமான கல்வி அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அளிக்கும் கல்வி முறையும் தற்காலத்தில் இல்லை. எனவே அதை வெறும் ஒரு தகவலாகவே, மற்ற அனைத்தையும் போல, மாணவர்கள் படித்து மறந்து விடுகிறார்கள்)

மனித வாழ்க்கையின் நுகர்வும், தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அதாவது பிற உயிரினங்களின் நுகர்வின் வெளிப்பாடுகளையும் கழிவுகளையும் தமது நுகர்வாக கொண்டும், மனித வாழ்க்கை நிகழ்வுகளின் கழிவுகள், பிற உயிரினங்களின் நுகர்வாகவும் இருந்து வந்தது. தொழில் புரட்சியும், அதன் விழைவாக உருவாகி வந்த முதலாளித்துவமும், அதன் எதிர்மறை விளைவாக, மனித உயிர் நிகழ்வை உணவுக்கண்ணியிலிருந்து சற்று பிறழ வைத்தது. அதாவது, மனிதன் உருவாக்கும் கழிவுகள், பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் பயன்படாத வெறும் கழிவுப்பொருட்களாக தங்கவும், மனிதனுக்கான நுகர்வுக்காக, பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அளவின்றி அழிப்பதன் மூலமும், உணவுக்கண்ணியில் மனித உயிரினத்தால் பிளவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த பிளவு பூமியின் உயிர் நிகழ்வுகளின் சமன் நிலையையும் குலைக்கத்தொடங்கி விட்டது.

முன்பே பார்த்தபடி, முதலாளித்துவத்தின் குறிக்கோள், முதலீட்டிலிருந்து உபரி பணத்தை உருவாக்குவது. அது உபரி உற்பத்தியின் மூலம் நிகழ்கிறது. உற்பத்தி நிகழ வேண்டுமானால், அதற்கேற்ற நுகர்வு இருந்தாக வேண்டும். நுகர்வு தேக்க நிலையை அடையும்போது, முதலாளித்துவம், அதன் சுய லாபத்துக்காக நுகர்வை பல்வேறு வழிகளில் தூண்டுகிறது. நுகர்வை தூண்டுவதன் முதல் வழி விளம்பரம். மனதை தூண்டும் விளம்பரங்களின் மூலம், எளிய மனித மனங்களின் உள் மனதில் தாக்குதலை தொடுத்து, அதன் மூலம் நுகர்வை உருவாக்கி, அந்த நுகர்வின் வழியாக பிற உயிரினங்களுக்கு பயன் இல்லாத கழிவுகளை உருவாக்குகிறது. கழிவுகள் எந்த உயிரினங்களாலும் உபயோகப்படுத்தாமல் சேரும்போது, அவை நச்சுப்பொருட்களாக உருமாறி, பூமியின் உயிர்ப்புத்தன்மைக்கு எதிரான செயல்களை விளைவிக்கின்றன. அதன் மூலம் பூமியை சார்ந்து வாழும் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாகின்றன.


நுகர்வுக்கு, மனிதர்களின் நுகர்வு விழைவு மட்டும் போதுமானது அல்ல. அந்த நுகர்வு பொருட்களை பெறுவதற்கான பணமும் அவசியம். அதாவது, மனித மனங்களில் நுகர்வின் விழைவு உருவாக்கப்படும்தோறும் அந்த நுகர்வுக்கு அவசியமான பணத்திற்கான விழைவும் மறைமுகமாக உருவாக்கப்படுகிறது. எளிய மனங்களில், பணத்திற்கான விழைவின் நேர்மறை பாதிப்பாக, மனிதர்களிடம் ஒரு தன்முனைப்பு உருவாகிறது. அத்தகைய தன்முனைப்பு அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிப்படையான நோக்கத்தை அளித்து, அந்த நோக்கத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கச் செய்கிறது. அதேநேரத்தில், பணத்திற்கான விழைவின் எதிர்மறை விளைவாக, தன்முனைப்பை அடைய முடியாத மனங்கள், குறுக்கு வழியை எதிர்நோக்குகின்றன. அதன் மூலம் சமூகத்தின் அறப்பிறழ்வுகளும், ஒருவரை ஒருவர் சுரண்டுவது போன்ற அவலங்களும் மற்றும் இவை போன்ற சமூக வியாதிகளும், அவை எப்போதுமே ஓரளவுக்கு இருந்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் பரவுகின்றன. விளைவாக சமூகங்களின் சமநிலை குலைவுகளும்!

Monday, February 2, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-1

சிறகு இணைய இதழில் 31-01-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

இந்த கட்டுரை, உலகப் பொருளாதாரத்தின் எல்லா தன்மைகளையும், எல்லாவிதமான பொருளாதார கொள்கைகளையும் ஐயம் திரிபற அறிந்த அறிஞரால், அத்தகைய அறிஞரின் பார்வையில் எழுதப்படவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் தற்போதைய பொருளாதார கொள்கைகள் எத்தகைய நிழலாக விழுகிறது என்பதும் அந்த நிழல்கள் சுட்டும், எதிர்கால, எதிர்மறை விளைவுகள் குறித்தது மட்டுமே. எல்லா கொள்கைகளிலும் நேர்மைறை விளைவுகளும் எதிர்மறை விளைவுகளும் கலந்தே இருக்கும். நேர்மறை விளைவுகள் நமக்கு மகிழ்ச்சியை, நன்மையை கொடுப்பவை. எனவே அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் எதிர்மறை விளைவுகள் நமக்கு  அல்லது நம் சந்ததியினருக்குத் துன்பத்தை அளிப்பவை. அவற்றை விவாதித்து, துன்பத்தை தவிர்க்க முயல வேண்டியது நம் கடமை.

இன்று உலக பொருளாதாரம், முதலாளித்துவ (Capitalism) பொருளாதாரத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகின் சில பொருளாதாரங்கள், முதலாளித்தவத்துக்கு முந்தைய அல்லது இடைப்பட்ட பொருளாதார முயற்சிகளிலேயே தங்கி  இருந்தாலும், அவை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சீனா போன்ற நாடுகள், இடைபட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் வந்த ஆட்சிஅமைப்பின் பெயரில் இருந்தாலும், அவையும் பொருளாதர கொள்கைகளில், முதளித்துவத்தை தழுவி விட்டன. எனவே ஒட்டு மொத்தத்தில் உலகத்தின் தற்போதைய பொருளாதார இயக்கத்தை முதலாளித்துவம் எனக்கூறலாம்.

மனித நாகரீகத்தின் முன்னோக்கிய பாய்ச்சலில்,  முதலாளித்துவமும் ஒரு முயற்சியே. மனித சமூகம், சமஉரிமையை பெறுவதற்கான ஒரு முயற்சி. மனிதர்களில் வல்லவர்கள் மற்றவர்களை வென்று வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவுகட்டி, மனிதர்கள் அனைவரும் ஒரே சமூகமாக வாழ்வதற்கான ஒரு முயற்சி. இன்று திரும்பிப்பார்த்தால், அந்த முயற்சி முழுமையான வெற்றியை அடையாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த முயற்சியின் தொடக்கத்தில் சமூகத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும்! தற்போது பூமியில் மனித இருப்புக்கே அச்சுறுத்தலாக இருந்தாலும்!    1800 - ம் வருடங்களில் தொடங்கி, ஏறத்தாழ அதன் இறுதி ஆண்டுகளில், அதுவரை இருந்த பொருளாதார அமைப்பை முற்றிலும் குலைத்து, அதன் மூலம் சமூக அமைப்பையும் குலைத்து, 1900 ம் வருடங்களில் நிலைபெற்று, அதன் மூலம் சமூக அமைப்பையும் இன்னொரு தளத்தில் நிறுவி விட்டது. 1900 - ம் ஆண்டுகளின் இறுதியில், சற்றேறக்குறைய எல்லா நாடுகளும் முதலாளித்துவத்தை தழுவி விட்டன.

முதலாளித்துவத்தின் அடிப்படை முதலீடு. அந்த முதலீட்டின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து, உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பிலிருந்து உபரி உழைப்பை பெற்று, அதன் மூலம் உபரி உற்பத்தியை அடைந்து, முதலீட்டை விட அதிக பணத்தை திரும்ப பெறுவது, முதலாளித்துவத்தின் சுழற்சி முறையாகும். முதலீட்டின் மூலம் பெற்ற உபரி பணம் வருமானம் ஆகும். முதலாளித்துவத்தின் சுழற்சி முறையில், அடைந்த வருமானத்தின் பெரும்பகுதி முதலீடாக மறு சுழற்சி செய்யப்படும். அதன் மூலம் அந்த சுழற்சி இயக்கத்தின் இறுதியில், வருமானம் அதற்கேற்ற விகிதத்தில் அதிகரித்திருக்கும். இந்த வளர்ச்சி விகிதம், முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆகும்.
முதலீட்டின் வளர்ச்சி விகிதம், பூஜ்யத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த முதலீட்டைக் கொண்டிருக்கும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது எனப்படுகிறது. வளர்ச்சி விகிதம் பூஜ்யமோ அல்லது அதற்கு மிக அருகிலோ இருந்தால், பொருளாதாரம் வளர்ச்சியின்றி நிலையாக இருக்கிறது எனப்படுகிறது. பூஜ்யத்தை விட குறைவாக இருந்தால், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை சற்று மாற்றி, முதலீடு செய்பவரின் பார்வையில் அல்லாமல், பொதுமக்களின் அல்லது நுகர்வோரின் பார்வையில் கூறினால், உற்பத்திப் பொருட்களின் தேவை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விட அதிகமாக இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி. தேவை, உற்பத்தியின் அதே அளவில் இருந்தால் அது பொருளாதார நிலைத்தன்மை. தேவை உற்பத்தியை விட குறைவாக இருந்தால் அது பொருளாதார மந்த நிலை.

எல்லா முதலாளித்துவ பொருளாதாரங்களின் அடிப்படை நோக்கமும் பொருளாதார வளர்ச்சியை அடைவதே. இன்னும் குறிப்பாக கூறினால், நாடுகள் அளவில், மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை விட அதிக விகித வளர்ச்சியை அடைவது. அல்லது பொதுவாக கூறினால், ஒரு முதலாளியை விட இன்னொரு முதலாளி அதிக விகிதத்தில் வளர்ச்சியை அடைவது. சற்று மாற்றிக்கூறும்போது, ஒவ்வொரு நாடும் அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களின் தேவை, அந்த நாடு வணிக தொடர்பு கொண்டுள்ள இடங்களில் தொடர்ந்து பெருக்குவதும், புதிய வணிக தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம், உற்பத்தி பொருட்களின் தேவை மேலும் அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. ஒவ்வொரு முதலாளிக்கும், தன் உற்பத்திப்பொருட்களின் தேவை, பிற முதலாளிகளின் உற்பத்திப்பொருட்களின் தேவையை விட அதிகமாக இருக்க வைப்பதே நோக்கம்.
இந்த உற்பத்தி போட்டியின் மூலம், ஒரு தனி இருப்பாக, நுகர்வோர்கள் அடைந்த இலாபம் மிகப்பெரியது. நுகர்வோருக்கு, முதலாளித்துவ போட்டிகளின் மூலம், அதிக தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தன. அதன் மூலம், வாங்கும் வசதியுடைய நுகர்வோரின் வாழ்க்கைத்தரமும், குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நுகர்வோரின் வாழ்க்கையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல நல்விளைவுகள். அவற்றைப்பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், நம் கண்முன் நிதர்சனமாக அவை உள்ளன.

ஆனால், இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் எதிர்மறை விளைவுகளும் எண்ணிலடங்காதவை. முதலாளித்துவ நேர்மறை விளைவுகளின் பயன்களில் மயக்கத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு, அதன் எதிர்மறை விளைவுகள் அத்தனை நிதர்சனமாக தெரிவதில்லை. எதிர்மறைவிளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதனை ஓரளவுக்காகவாவது அறிந்திருப்பார்கள்.  அதுவும் பாதிக்கப்படும் அந்த நேரத்தில் மட்டும், பாதிப்பிலிருந்து தற்காலிகமாக வெளிவரும்வரைக்கும் மட்டும். அந்நேரத்தில் அவர்கள் இடும் கூக்குரலும், முதலாளித்துவத்தின் பயன்களில் திளைத்திருக்கும் பொதுமக்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. மேலும் முதலளித்துவத்தின் பெரும்பாலான எதிர்மறை விளைவுகள், நிகழ் காலத்தில், அத்தனை வெளிப்படையானவையும் அல்ல.

இதற்கு காரணம், மனிதனின் தன்முனைப்பாக இருக்கக்கூடும். வாழ்க்கைப்போராட்டத்தில் நிலைத்து நின்று வாழவேண்டும் என்னும் உயிரின் துடிப்பாக இருக்கக்கூடும். ஆனால், மனித இனம், அதன் சமூக முறைகளின் மூலம், அறிவின் மூலம் வாழ்க்கைப்போராட்டத்தை, மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக்கி விட்டது. ஆனால், உணர்வு நிலையில், மனிதனால் அந்த எளிமையை இன்னும் உணர முடியவில்லை. மனிதனின் உயிர் நாளங்களில், அவன் மூதாதையர் வாழ்விற்காக நிகழ்த்திய போராட்டங்கள், இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடும். உணர்வு நிலையில் அடையும் மாற்றத்தின் மூலம் மட்டமே, இன்றைய எளிய வாழ்க்கைக்கு மனிதனால் முழுமையாக தன்னை தகவமைத்துக்கொள்ள முடியலாம். இந்த உணர்வு நிலை குறைபாட்டால், மனிதனால் தன்னை ஒரு முழு இருப்பின் பகுதியாக காணமுடிவதில்லை. எனவே மனிதனின் தன்முனைப்பும் தன் தனியிருப்பை நோக்கியே இருக்கிறது. பூமி என்னும் முழுஇருப்பை பார்க்க முடியாததால், முதலாளித்துவத்தின் விளைவுகள், அந்த முழு இருப்பில் நிகழ்த்தும் பாதிப்புகளை காண முடியவில்லை. அதன் மூலம் தான் அடையும் பாதிப்புகளையும்! அதே நேரத்தில், முதலாளித்துவம் மனிதனின் தனியிருப்புக்கு அளித்த பங்களிப்பு, மிக எளிதாக மனிதனால் உணரப்படுகிறது. அவை பெரும்பாலும் நன்மையாகவே இருப்பதால், மனித மனம் முதலாளித்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.

முன்பே கூறியவாறு, முதலாளித்துவம் நுகர்வின் வளர்ச்சி மூலம் மட்டுமே, தன் வளர்ச்சி நிலையை அடைய முடியும். வளர்ச்சி இல்லாத பட்சத்தில், முதலாளித்துவம் அதன் தன்முனைப்பை இழந்து விடும். அதன் மூலம் முதலாளித்துவம் என்னும் பொருளாதார இயக்கமும் அழிந்து விடும். முதலாளித்துவத்தை பற்றி மேலும் பேசுவதற்கு முன்னால், மனித இனத்தின் வளர்ச்சி வரலாற்றை சற்று ஆராய வேண்டும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், நாடுகளுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயுமான போர் பெரும்பாலும் இல்லாமல் ஆகி விட்டது. ருவாண்டா படுகொலை போன்ற சில நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தாலும், உலகம் பெரும்பாலும் பேரழிவுகள் இல்லாமலே தற்காலத்தில் நிகழ்கிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், மனித நாகரீகம் உருவான காலகட்டம் முதல் பெரும்போர்கள் மூலமும், சமூகக்கலவரங்கள் மூலமும் மனித இனம் தொடர்ந்து அழிவுக்கு உட்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் இந்த அழிவுகளுக்கு, பொருளாதார போட்டியும் அதிகாரப்  போட்டியுமே காரணமாக இருந்துள்ளன. பொருளாதார போட்டியின் மூலம் போரில் ஈடுபடும் இரண்டு பொருளாதார தரப்புகளும், பெரும் பொருளாதார இழப்புகளையும் மனித உயிர் இழப்புகளையும் சந்திக்க நேரிடும். ஆனால், அதில் வெற்றி பெறும் பொருளாதார தரப்பு, தோல்வியடைந்த பொருளாதார தரப்பை முழுமையாக சூறையிடுவதன் மூலம், தன் தரப்பு பொருளாதார இழப்பை ஒரளவுக்கு சரி செய்ய முடிந்திருக்கலாம். மேலும் அந்த பேரழிவின் மூலம், தேவைகள் பெருமளவு உயர்வதால், அந்த அழிவிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்ல தொடங்கும். அதாவது, ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு, அந்த வளர்ச்சியை உந்தும் அளவுக்கு ஒரு அழிவு மிக அவசியமானது.

கடந்த இரு நூற்றாண்டுகளில், மருத்துவ முன்னேற்றத்தின் மூலம், தொற்று நோய்களால் நேர்ந்த உயிர் இழப்புகள் தற்போது முழுமையாக இல்லாமல் ஆகிவிட்டன. தொற்று நோய்கள் மூலம் உயிர் இழப்புகள் ஏற்படும்போது, அவை நிகழும் சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார இழப்புகளும் நேரிட்டிருக்கும். அந்த அழிவிலிருந்து மீண்டு வரும்போது, அழிவிலிருந்து மீளும்  முனைப்பு, பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவந்திருக்கும்.

தற்போதைய நம் காலகட்டத்தில், போர் மற்றும் தொற்று நோய்களினால் ஏற்படும் அழிவுகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டன. இதன் மூலம் உலக மக்கள் தொகை 700 கோடியை கடத்து விட்டது. உலகப்போருக்குப்பின் இத்தனை காலம், உலக மக்கள் தொகை வளர்ச்சியின் மூலம் அடிப்படை நுகர்வின் தேவை, உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியும், தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தின் திணற வைக்கும் வளர்ச்சியை கண்டு சமூகங்கள் ஓரளவுக்கு விழித்துக்கொண்டன. இதன் மூலம், மக்கள் தொகை பெருக்கமும் பெருமளவுக்கு கட்டப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பு நோக்கையில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும், இப்போது உள்ள வளர்ச்சி விகிதமும் எச்சரிக்கை தேவையான, அபாயகரமான நிலையிலேயே உள்ளது.

போர்களின் மூலமும் தொற்று நோய்களின் மூலமும் ஏற்பட்ட அழிவுகளாலும், அந்த அழிவுகளை ஈடு செய்யும் மக்கள் தொகை பெருக்கத்தாலும், உற்பத்தியின் தேவை வளரும் விகிதத்தில் இருந்து வந்துள்ளது. இந்த மூன்று காரணிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பொருளாதாரம் வளர வேண்டுமானால், தனிமனித தேவைகளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடந்த சுமார் முப்பதாண்டுகளில், தனிமனித தேவைகளின், அல்லது தேவை எனக்கூறப்பட்டவைகளின், வளர்ச்சியினாலேயே உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் இருந்துள்ளது.

தனி மனித தேவைகளின் வளர்ச்சி, அவர்களின் வருமானத்துக்கு இணையாக இருக்கும். முதலாளித்துவத்துக்கு, அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு தேவை இருக்க வேண்டும். அல்லது தேவை எங்கு இருக்கிறதோ அங்கே அவற்றின் உற்பத்தியை தொடங்கும். எனவே தனிமனித வருமானமும், உற்பத்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமநிலைப்புள்ளியை (Break even) அடையும்வரை தொடர்ந்து வளர்க்கவோ அல்லது அழிக்கவோ செய்யும்.

இதைப்போலவே முதலாளித்துவத்தின் வரம்பற்ற உற்பத்தியால், தனிமனித வருமானத்தை அதிகரிப்பதற்கான போட்டியும், தனி மனிதர்களுக்கிடையே ஏற்படுகிறது. இந்தப் போட்டி, உற்பத்திக்கு தேவையான, தனிமனித தொழில்நுட்ப திறமையிலும் போட்டியை உருவாக்கி, அந்த போட்டியின் மூலம் தனிமனிதர்களின் தன்முனைப்பையும் அவர்கள் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் உற்பத்திக்கு தேவையான உழைப்பு, மிக எளிதாக முதலாளித்துவத்துக்கு கிடைக்கிறது. அதன் மூலம் உபரி உற்பத்தியும்.

ஆக மொத்தத்தில் முதலாளித்துவம் எல்லா திசைகளிலும் போட்டியை உருவாக்கி, சமூகத்தின் அங்கங்களை ஒன்றுடன் ஒன்று மோத வைத்து, விளைவாக உருவாகும் விசையால் சமூகத்தை முன்நகர்த்தி செல்கிறது. மனித சமூகத்தை ஒற்றை பெரும் இயக்கமாக காணும்போது, முதலாளித்துவம், அதன் பல்வேறை விசைகளால் மனித சமூகத்தை, பொருளாதார நிலையில், முன்நகர்த்தும் இயக்கமே. இந்த வகையில், முதலாளித்துவம் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளது.


அந்த மனித சமூகத்தின் பொருளாதார முன்னேற்றம், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத, பல சிறிய மற்றும் பெரிய, தனி மனித மற்றும் சமூக அளவிலான, மனித இனம் மற்றும் பிற உயிரினங்கள் சார்ந்த, பல பிரச்சனைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், தற்போது அடைந்துள்ள வசதிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், அந்த வசதிகளை அவை இன்னும் சென்றடைந்திடாத மனிதத்திரளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கைகளில், ஒரு சமூகமாக திருத்தங்களை கொண்டு வந்தாக வேண்டும். அந்த சீர்திருத்தம், முதலாளித்துவத்தின் முன்னேற்ற பண்புகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், அழிவுப்பண்புகளை இல்லாமல் செய்வதாகவும் இருக்க வேண்டும். அது முதலாளித்துவத்திலிருந்து முற்றிலும் புதிதான ஒரு பொருளாதார கொள்கையாகவும் இருக்க்கலாம். இது ஒரு அடையமுடியாத இலட்சியமாக தோன்றலாம். ஆனால் ஒரு முழுமை நோக்குடன் அதை நாம் நெருங்கியாக வேண்டும் - மனித இருப்பை தக்க வைத்துக்கொள்ள!

Monday, January 12, 2015

சாலை விபத்துகள்

03-01-2015 அன்று சிறகு இணைய இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை

என் வீட்டுக்கு அருகில் சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்து. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் இரும்பு மின்கம்பத்தில் மோதி, கபாலம் கீறல் விழுந்திருக்கிறது. நான்கு நாட்களுக்கு பிறகும் இடது கண் வழியாக இரத்தம் கசிவதாக கூறினார்கள். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். எனவே ஒட்டுனர் உரிமமும் இல்லை. பொருளாதாரத்தில், மிகவும் சாதாரணமான குடும்பத்தில் உள்ளவன். ஒரு அவசர அறுவை சிகிட்சைக்காக சில லட்சங்கள் மருத்துவமனையில் முன்பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். சில நலம் விரும்பிகள், ஊர்மக்களிடம் சிறிதளவு பணம் நன்கொடையாக பெற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கு நான் கூற முயல்வது, இந்த ஒரு சிறுவனைப்பற்றியல்ல. இத்தகைய நிகழ்வுகளை! இவை தற்போதைய நம் சமூகத்தில் அன்றாட நிகழ்வுகள். நமக்கு நிகழாதவரை யாருக்கும் கவலை இல்லை. அல்லது இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்படும்போது, அவரவர் மனநிலைக்கேற்ற ஒரு குற்றச்சாட்டும், சற்றே உணர்ச்சி வசப்படுதலும். அந்த நிகழ்வின் தாக்கம் அத்துடன் முடிந்து விடும்.

இந்தியா ஒரு பெரும் நாடு. உலக மக்கள் தொகையில் ஏழில் ஒருபங்கை விட அதிகமான மக்களை கொண்ட, அந்த (பெரும்பான்மை) மக்களின் விருப்பப்படியே ஆளப்படும் நாடு. பல்வேறு முரண்களுக்கு இடையிலும், இன்னும் சிதறி அழியாமல் ஒற்றை இருப்பாக இருக்கும் நாடு. இது ஒரு சாதாரணமாக கடந்து செல்லக்கூடய விஷயம் அல்ல. எல்லா முரண்களுக்கு நடுவிலும், ஒற்றை ஆன்மீக நோக்கமே அதன் காரணமாக இருக்கக்கூடும். ஆம், எல்லா நாற்றங்களுக்கிடையேயும், இந்த நறுமணத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். பெருமைப்பட்டாக வேண்டும் அதன் மூலம் நாம் அடையவேண்டிய பொறுப்புணர்வையும்!

இன்றைய உலகம் தேர்ந்தெடுத்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தில், நுகர்வே அடிப்படை விதி. நாம் விரும்பும் ஒவ்வொரு பொருளையும் நுகர்ந்தாக வேண்டிய, மனநிலையால் உருவாக்கப்பட்ட, கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். முதலாளித்துவம், எல்லா மனிதர்களையும் கட்டுப்பாடற்ற நுகர்வின் மந்தைகளாக ஆக்குவதில் வெற்றிபெற்று விட்டது! எனவே, அனைவரின் தன்முனைப்பும் நுகர்வுக்குத் தேவையான பணத்தை அடைவதிலேயே குவிந்துள்ளது. அத்துடன், அந்த தன்முனைப்புடன் சேர்ந்து வரும் அவசரங்களும், போட்டிகளும் இன்னும் இதுபோன்றவையும். இத்தகைய மனநிலையில் வேகம் தவிர்க்க முடியாதது. செய்யும் செயல்களை வேகத்துடன் செய்தால்தான் போட்டி மிகுந்த சமூகத்தில் நிலைத்திருக்க முடியும். அதன்விளைவாக வேகத்துடன் செல்ல தேவையான மோட்டார் வாகனங்களும், இன்றைய அவசரகதி வாழ்க்கைக்கும், நுகர்வை பறைசாற்றும் ஆசைக்கும், மிக அவசியமாகிறது.

துரதிர்ஷ்டவசமாக, வேகத்துக்கு மிக மிக அவசியமான தன்னுணர்வையும், வேகம் அதிகரிக்கும்தோறும் இழந்து விடுகிறோம். ஆம், இதுவே நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்க முடியும். இழக்கும் தன்னுணர்வு, சாலை விதிகளை அறியும் சாத்தியத்தை அழித்து விடுகிறது. ஒருவேளை அறிந்திருந்தாலும், அந்த விதிகளை கடைபிடிக்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்து விடுகிறது. விதிவிலக்காக, ஓருவேளை சாலை விதிகளை கடைபிடித்தாலும், வேகத்தால் இழக்கப்படும் தன்னுணர்வு, எல்லா வித சுய கட்டுப்பாடுகளையும் இழக்க வைத்து, நம் இருப்பை முழுமையாக பொதீக விதிகளின் செயல்களுக்கு அர்ப்பணித்து விடுகிறது. பொதீக விதியின் படி, கம்பத்தில் தலை மோதினால், மோதலின் வேகத்திற்கேற்பவும், விசைக்கேற்பவும் தலை உடைந்தாக வேண்டும். இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம், அத்தகைய விபத்துகளால் பாதிக்கப்படும் அப்பாவிகள். அந்த விபத்துக்கான அடிப்படை இயக்கங்களுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல், ஆனாலும் பாதிக்கப்படும் அப்பாவிகள்!

பெண்கள், அதிகபட்சம் 30 முதல் 40 KMPH வேகத்திற்குள் செல்ல வேண்டிய ஸ்கூட்டி போன்ற வாகனங்களில் 50 KMPH -க்கும் அதிகமான வேகத்தில், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் துணையும் இல்லாமல், வாகனத்தில் தங்கள் சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு செல்லும் நிகழ்வு மிக சாதாரணம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களை ஒட்டும் விதத்திலேயே, ஒரு அவசர தேவை வந்தால் வாகனத்தின் மேல் எந்த கட்டுப்பாடும் இல்லாத வகையில் ஓட்டுவதை அறியலாம். இதை பொது வெளியில் கூறினால், ஆண்கள் அவ்வளவு வேகமாக செல்லும்போது, நாங்கள் ஏன் செல்லக்கூடாது என்னும் கேளவி!

இந்த நிகழ்வுகளுக்கு யாரைத்தான் பொறுப்பேற்க சொல்வது?  அரசாங்கத்தையா, அதிகாரிகளையா, விபத்துகளை ஏற்படுத்துபவர்களையா, அல்லது சமூகத்தையா? இவர்கள் அனைவருமே இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள். அரசாங்கம் சரியான மோட்டார் வாகன கொள்கைகளை உருவாக்கவில்லை. இருக்கும் சட்டங்களை முழுமையாக செயல்படுத்தவில்லை, அதிகாரிகளை கண்காணிக்கவில்லை. அதிகாரிகள் பொறுப்பற்ற தனத்துடன், தங்கள் சுயலாபங்களுக்காக அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் தங்களுக்கேற்றவாறு வளைத்துக்கொள்கின்றனர். விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் சாலை விதிகளையும் சட்டங்களையும் மதிக்காமல் அல்லது தெரிந்து கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சமூகம் இந்த எல்லா அவலங்களையும் வெறுமனே பார்த்துக்கொண்டு, அதற்கு காரணமான அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தத்தையும் அளிக்காமல், அதிகாரிகளிடம் தங்கள் உரிமைகளை கேட்காமல், விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு எவ்வித சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமல், இந்த நிகழ்வில் தன் பங்கையும் அளிக்கிறது.

சமூகமே இங்கு அரசாங்கத்தை இயக்குகிறது. எனவே பொறுப்பின் பெரும்பகுதியை சமூகத்தின் மேலேயே செலுத்தியாக வேண்டும். சாலை விதிகளை, மோட்டார் வாகன விதிகளை அறிந்தும் அவற்றை கடைபிடிக்காதவர்களை குற்றவாளிகளாக கருதலாம். தண்டிக்கலாம். ஆனால், வாகனங்களை பயன்படுத்துபவர்களில் ஒரு பெரும்பங்கினருக்கு அந்த விதிகளே அறியாமல் ஒட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால் யாரை குறை சொல்வது. அதிகாரிகளை கைகாட்டிவிட்டு நாம் எளிதில் கடந்து விடுகிறோம். அதிகாரிகளை ஏன் கண்காணிக்கவில்லை என அரசாங்கத்தை நோக்கியும் கைகாட்டலாம். ஆனால் நம் மீது நாமே ஏன் இந்த அவலத்துக்காக குற்றம்சாட்டாமல் தப்பித்து விடுகிறோம்? அரசாங்கத்திடம் இந்த அவலத்தை எடுத்து கூறும் சமூகத்தின் அறிவு இயக்கம் எங்கே சென்றது. சமூகத்தால் ஏன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை? சமூகத்தால் ஏன் தங்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளை கண்காணிக்க முடியவில்லை?

சமூகம் அதன் உயிர்ப்பை இழந்து விட்டதா? நம் சமூகத்துக்கு இன்னும் பல டி.என்.சேஷன் -களும், வினோத் ராய் -களும், சகாயம்-களும் அன்னா ஹசாரே -களும், டிராபிக் ராமசாமி-களும், சுப்ரமணியன் சாமி-களும் தேவைப்படுகிறார்கள். ஆம், சமூக நலத்தை நாடும்  அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் நம் சமூகத்துக்குள்ளிருந்து உருவாகி வர வேண்டும். அந்த தங்கள் அதிகாரத்தை முற்றும் உணர்ந்த அதிகாரிகள், அந்த அதிகாரத்தை சமூகநலத்துக்காக திருப்பி விடும் உறுதி படைத்த அதிகாரிகள், நம்மிடமிருந்து தோன்றி அதிகார வர்க்கத்தில் தங்கள் இடங்களில் அமர வேண்டும். அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் வெளியில் உள்ள சமூகத்தில் இருந்து உண்மையான சமூக போராளிகள் தோன்றி வர வேண்டும். சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சமூக போராளிகள் சமூகத்தில் தங்கள் இடத்தில் அமர்ந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய மனிதர்களை உருவாக்கும் அறிவியக்கம், நம் சமூகத்தினுள் நிகழ வேண்டும். 

சமூகத்தின் மந்தைகள், அந்த அறிவியக்கங்களை அதன் மூலம் உருவாகி வரும் சமூகத்தின் தலைவர்களை கீழ்மைப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள், அவர்களின் இயல்பால் அந்த மந்தைகளை மன்னித்து அவர்களுக்காக உழைப்பார்கள். பிரயாகை நாவலில் வரும் இந்த வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை!


'.......அவன் புன்னகை எப்படி இருக்கும் இத்தருணத்தில்? வெளியே கொந்தளிக்கும் இந்த மூட மக்கள்திரளை அவன் முழுமையாக மன்னிப்பான். அவர்களை நோக்கி கனிந்து நகைப்பான். உள்ளிருந்து அவர்களை ஆட்டிவைக்கும் சதிகாரர்களை? அவர்களையும்தான். ஆனால் அகம் கனிந்து, புன்னகை விரிந்து, அவர்களின் தலைகளை வெட்டி வீசுவான். விதுரர் புன்னகை செய்தார்..........'

Wednesday, December 31, 2014

ரசனை

சிறகு இணைய இதழில் 27-12-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை


ரசனை என்பதை வார்த்தைகளில் பிடித்துவிட முடியுமா? முயற்சித்துதான் பார்க்கலாமே! ரசனை, உணர்வின் பிரதிபலிப்பு. உணர்வு மனதினுள்தான் பிரதிபலிக்க முடியும். மனதினுள் பிரதிபலிப்பது என்பது, அடைந்த உணர்வை மீண்டும் மனம் உணர்வது ஆகும். அதாவது, ஒரு உணர்வை அடையும் மனம், அந்த உணர்வை உணர்வதை தன்னுள் உணர்வது ஆகும். உதாரணமாக இசையை கேட்கும்போது, செவியின் மூலம் மனம் அதை உணர்கிறது. அந்த உணர்வுடன் மனம் அதன் செயல்பாட்டை முடித்து விட்டால், அங்கு இசை கேட்பது மட்டும்தான் இருக்கும். இசை ரசனை இல்லை. ஆனால், அந்த இசையை கேட்கும்போது மனம் அடையும் உணர்வை, அதே மனம் உணரும்போது அங்கு இசை ரசனை பிறக்கிறது. அந்த உணர்வின் அனுபவத்தை ரசனை எனலாம்.

மனதின் உணர்வுகளை மனமே அறியும்போது அடையும் உணர்வை நுண்ணுணர்வு என்றும் கூறலாம். எனவே ரசனைக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. நுண்ணுணர்வின் அனுபவம் ரசனை. நுண்ணுணர்வு, புலன் உணர்வுகள் சார்ந்தோ அல்லது புலன்களை கடந்த உணர்வுகள் சார்ந்தோ இருக்கலாம். பெரும்பாலனவர்களுக்கு நுண்ணுணர்வு ஏதேனும் ஒரு புலன் சார்ந்து அல்லது எண்ணங்கள் சார்ந்து இருக்கும். இது, மற்ற புலன்கள் சார்ந்த நுண்ணறிவு அவர்களுக்கு இருக்காது என்பதல்ல. அவையும் இருக்கவோ இல்லாமலோ போகலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட புலன் சார்ந்த நுண்ணறிவு சற்று அதிகமாக இருக்கலாம். அதன் மூலம் அந்த புலன் சார்ந்த ரசனை உடையவர்களாக இருப்பார்கள். புலன் நுண்ணுர்வு அல்லாமல் எண்ணங்களின் மேல் நுண்ணறிவுடைவர்கள், தத்துவம், எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலோ நுண்ணறிவுடன் இருக்க கூடும். நுண்ணறிவு எந்த தளம் சார்ந்து இருக்கிறதோ, அதுவே ஒருவரின் வாழ்க்கைத் தளம். அந்த தளத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நல்விதி பெற்றவர்கள், வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்கள். ரசனையோடு முழு வாழ்க்கையையும் வாழும் நல்விதி, வாழ்க்கைப் போரட்டங்களின் காரணமாக, மிகச்சிறுபான்மையினரால் மட்டுமே பெற முடிகிறது. ஆனாலும் தங்கள் ரசனையை அழியாமல் பேணுபவர்களால், வாழ்க்கையின் சில அம்சங்களையாவது ரசனையுடன், முழுமையுடன் கழிக்க முடியலாம்.

இன்றைய உலகில் ரசனை அனுபவம், பெரும்பாலானவர்கள், பெரும்பாலும் பெறுவதில்லை என்றே தோன்றுகிறது. ரசனைக்கு அடிப்படையான புலனுணர்வுகளைப் பெற்றாலும், அவற்றை பெரும்பாலானவர்களால் ரசனை அனுபவமாக மாற்ற முடிவதில்லை என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அனைவரும் இசை கேட்கலாம். ஆனால், அதை இசையனுபவமாக மாற்ற அனைவராலும் முடிவதில்லை. நுண்ணுணர்வின் இயல்பு, அதன் இயக்கத்தில் அது உணரும்தோறும், உணர்வு தொடர்ந்து அதிநுண்தளங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரே உணர்வையே மீண்டும் மீண்டும் அடைந்தால், அந்த நுண்ணுணர்வு ஒரு இயந்திரத்தனமான இயக்கமாக மாறியிருக்கும். அதாவது நுண்ணுணர்வு இழக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் ரசனையும் அழிந்திருக்கும். எப்போதோ பெற்றிருந்த நுண்ணுணர்வு அல்லது ரசனை, வெறும் இயந்திரத்தனமான இயக்கமாக மட்டும் எஞ்சியிருக்கும்.

மனித மனதினுள் ரசனை அனுபவத்தை உருவாக்கும் எதையும் அழகு எனக்கூறலாம். அழகை அளிப்பது கலை. அதாவது ரசனை, அழகுணர்வு, கலையுணர்வு ஆகிய சொற்கள் அனைத்தும் மனதின் ஒரே உணர்வையே குறிக்கிறது. நுண்ணுணர்வை இழந்த ஒருவருக்கு அழகு என ஒன்று உண்மையில் இருப்பதில்லை. அத்தகையவர் அழகு எனக்கூறுவது, எண்ணங்கள் உருவாக்கும் வெறும் மனப்பிரமையே. அதாவது, ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் தோன்ற வைக்கும் சிலவற்றையே அழகு என்னும் பெயரில் இன்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.

மனதின் பெரும்பகுதியை எதிர்காலம் என்னும் கவலை மூடியிருக்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எதிர்காலத்திற்காகவே செலவிடும்போது ரசனை மனதிலிருந்து மறைந்து விடுகிறது. நுண்ணுணர்வுடன் இருக்கும் குழந்தைகளை, எதிர்காலம் என்னும் ஒரே நோக்கத்தை நோக்கி துரத்தினால், அவர்களும் நுண்ணுணர்வு அல்லது ரசனை என்னும் ஒன்றை அனுபவிக்காமலே, வாழ்க்கை என்பது எதிர்காலம் என்ற ஒன்று மட்டுமே என அதைத்தேடி ஓடத்தொடங்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலம் என கருதியது, நிகழ்காலமாக நிகழ்ந்து கடந்தகாலமாக மாறும்போதும், அதை அறியாமல், எதிர்காலம் என்ற நோக்கத்திற்கான ஓட்டம் மட்டுமே இருக்கிறது. அதாவது, எந்த நோக்கத்துக்காக வாழ்க்கை சக்தியின் பெரும் பகுதி செலவிடப்படுகிறதோ, அந்த நோக்கம் அடையப்படும்போது, அதை முழுமையாக அனுபவிக்க, ரசிக்க முடியாத வகையில், மனதை புது நோக்கங்கள் ஆக்ரமித்திருக்கும்.

ரசனையை அடைய வேண்டுமானால், மனதில் ரசனை அனுபவத்துக்குப் போதுமான இடம் இருக்க வேண்டும். நுண்ணறிவின் செயல்பாட்டுக்கு மனம் குறைந்தபட்ச அமைதியுடன் இருந்தாக வேண்டும். மனம் வெறும் எண்ணங்களால் பொங்கி வழியும்போது, மன உணர்வுகளை அறிவதற்கான இடைவெளியோ, சக்தியோ மனதில் இருப்பதில்லை. நோக்கங்களும் குறிக்கோள்களும், மனதில் பயத்தை உருவாக்குகின்றன. மனதில் எண்ணங்களின் அணிவகுப்புக்கு, வேறு எந்த காரணங்களும் தேவையில்லை. எண்ணங்கள் அணிவகுத்து ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் செல்லும்போது, அவற்றுக்கிடையில் நுழைய நுண்ணறிவுக்கோ, ரசனைக்கோ முடிவதில்லை.

ஒருவருக்கு எந்த புலனுணர்வு சார்ந்த நுண்ணுணர்வு ஆதிக்கத்துடன் உள்ளதோ, அந்த உணர்வு சார்ந்த கலைகள் அவர் மனதை அமைதிப்படுத்தலாம், ஒருமுகப்படுத்தலாம். ஆம், எல்லா கலைகளின் ஆதாரமும், ஆன்மீகத்தேடலே. எந்த நிகழ்வு ஒரு மனிதனிடமாவது மன ஒருமையை, அமைதியை தூண்டுகிறதோ, நுண்ணுர்வை தூண்டுகிறதோ, அழகுணர்ச்சியை தூண்டுகிறதோ, அந்த நிகழ்வை கலை என சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். குறைந்த பட்சம் அந்நிகழ்வு, அந்த ஒரு மனிதனுக்காகவாவது கலையாக இருக்கும். கலை, அதன் இயல்பிலேயே, அதனால் தூண்டப்படுபவர்களை, அதைக்கடந்து செல்வதற்குமான நுண்ணறிவையும் அளிக்கும்.

ரசனை கடந்து செல்லும்தோறும், கலையும் அதற்கேற்ற வகையில் தன்னை மறுஆக்கம் செய்தாக வேண்டும். அவ்வாறு மறுஆக்கம் செய்யமுடியமல் தேங்கிநிற்குமானால், அதை கலை என்னும் சொல்லால் குறிக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், கலையும் ரசனையும் ஓயாத இயக்கங்கள். அவை இரண்டுமே, தேங்கி நின்றால் அவற்றின் இயல்பை இழந்து இயந்திரத்தனமானதாக மாறி விடும் - அதாவது மூளையின், மனதின் இயந்திரத்தனமான இயக்கம்.
ஒரு சமூகம் நாகரீக வளர்ச்சியோ, சிந்தனை வளர்ச்சியோ அல்லது அறிவியல் வளர்ச்சியோ அடைய வேண்டுமானால், அந்த சமூகத்தில் கலையும் ரசனையும் இருந்தாக வேண்டும். கலையும் ரசனையும் இருக்கும் சமூகங்களில் மட்டுமே நுண்ணுணர்வு இருக்க முடியும். சமூக வளர்ச்சிக்கு, அந்த சமூக குடிமக்களுக்கு நுண்ணுர்வு அவசியம். துரதிர்ஷ்டவசமாக, நாம் வாழும் சமூகத்தில், கல்வி என வழங்கப்படும் ஒன்றில் கலையும் ரசனையும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. சமூகப் பொதுவெளியில் கலை என கூறப்படுவது பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காகவே இயங்குவதால், அவை முழுவதும் இயந்திரத்தனமாகி விட்டன. எனவே வணிக நோக்கங்களால் ஆன கலைகளின் ரசனையும்! உண்மையான ரசனையும் கலையும், பொதுக்கல்விக்கு வெளியே, தம் சுயமுயற்சியால் அடைந்த ரசனை உணர்வுடன் இருக்கும் சிறுபான்மையினரிடம் மட்டுமே, பொதுக்கல்வியின் அன்றாட அழுத்தத்திற்கு தங்களை முழுவதும் இழந்து விடாத வெகு சிலரிடம் மட்டுமே, சற்றேனும் எஞ்சியிருக்கிறது.


ரசனையையும் கலையையும் இழக்கும் சமூகம், நாகரீகத்தில் தேக்கமடைவதை தவிர வேறு வழியில்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நம் நாகரீகம் கூறப்படுகிறது. அதாவது நாம் வாழும் சமூகம் நெடுங்காலமாகவே கலையையும் ரசனையையும் ஒரு இயக்கமாக தன்னுள் இணைத்துள்ளது. ஆனால் நாம் வெறும் பழம்பெருமை மட்டும் பேசிக்கொண்டு, அந்த பெருமைக்கு எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதன் மூலம் அந்த நாகரீகத்தை தேக்கமடையச் செய்து, அழிவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். ரசனையையும் கலையையும் இழப்பதன் மூலம் நம் நாகரீகத்தை தேக்கமடைய செய்கிறோம். இங்கு நாம் செய்யக்கூடியதெல்லாம், ஓரளவேனும் ரசனையும் கலையுணர்வு உடையவர்களாவது, அதை இழக்காமல், தங்கள் ரசனையையும் கலையுணர்வையும் மேலும் உயர்ந்த தளங்களுக்கு எடுத்துச்செல்வது மட்டுமே. அதன் மூலம், நம் பழமை வாய்ந்த நாகரீகம், சமூகத்தின் இருட்டறைகளிலாவது, தகுந்த தருணத்தை எதிர்பார்த்து, தன் உயிர்ப்பை வைத்திருக்க செய்வது. அது மட்டுமே நம்மை உருவாக்கிய சமூகத்துக்கு, நாகரீகத்துக்கு, நம்மால் அளிக்க முடியும் குறைந்த பட்ச பங்களிப்பு!

blog.change@gmail.com