சிறகு இணைய இதழில் 27-12-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை
ரசனை என்பதை வார்த்தைகளில்
பிடித்துவிட முடியுமா? முயற்சித்துதான் பார்க்கலாமே! ரசனை, உணர்வின் பிரதிபலிப்பு.
உணர்வு மனதினுள்தான் பிரதிபலிக்க முடியும். மனதினுள் பிரதிபலிப்பது என்பது, அடைந்த
உணர்வை மீண்டும் மனம் உணர்வது ஆகும். அதாவது, ஒரு உணர்வை அடையும் மனம், அந்த உணர்வை
உணர்வதை தன்னுள் உணர்வது ஆகும். உதாரணமாக இசையை கேட்கும்போது, செவியின் மூலம் மனம்
அதை உணர்கிறது. அந்த உணர்வுடன் மனம் அதன் செயல்பாட்டை முடித்து விட்டால், அங்கு இசை
கேட்பது மட்டும்தான் இருக்கும். இசை ரசனை இல்லை. ஆனால், அந்த இசையை கேட்கும்போது மனம்
அடையும் உணர்வை, அதே மனம் உணரும்போது அங்கு இசை ரசனை பிறக்கிறது. அந்த உணர்வின் அனுபவத்தை
ரசனை எனலாம்.
மனதின் உணர்வுகளை மனமே அறியும்போது
அடையும் உணர்வை நுண்ணுணர்வு என்றும் கூறலாம். எனவே ரசனைக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு.
நுண்ணுணர்வின் அனுபவம் ரசனை. நுண்ணுணர்வு, புலன் உணர்வுகள் சார்ந்தோ அல்லது புலன்களை
கடந்த உணர்வுகள் சார்ந்தோ இருக்கலாம். பெரும்பாலனவர்களுக்கு நுண்ணுணர்வு ஏதேனும் ஒரு
புலன் சார்ந்து அல்லது எண்ணங்கள் சார்ந்து இருக்கும். இது, மற்ற புலன்கள் சார்ந்த நுண்ணறிவு
அவர்களுக்கு இருக்காது என்பதல்ல. அவையும் இருக்கவோ இல்லாமலோ போகலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட
புலன் சார்ந்த நுண்ணறிவு சற்று அதிகமாக இருக்கலாம். அதன் மூலம் அந்த புலன் சார்ந்த
ரசனை உடையவர்களாக இருப்பார்கள். புலன் நுண்ணுர்வு அல்லாமல் எண்ணங்களின் மேல் நுண்ணறிவுடைவர்கள்,
தத்துவம், எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலோ
நுண்ணறிவுடன் இருக்க கூடும். நுண்ணறிவு எந்த தளம் சார்ந்து இருக்கிறதோ, அதுவே ஒருவரின்
வாழ்க்கைத் தளம். அந்த தளத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நல்விதி பெற்றவர்கள்,
வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்கள். ரசனையோடு முழு வாழ்க்கையையும் வாழும் நல்விதி, வாழ்க்கைப்
போரட்டங்களின் காரணமாக, மிகச்சிறுபான்மையினரால் மட்டுமே பெற முடிகிறது. ஆனாலும் தங்கள்
ரசனையை அழியாமல் பேணுபவர்களால், வாழ்க்கையின் சில அம்சங்களையாவது ரசனையுடன், முழுமையுடன்
கழிக்க முடியலாம்.
இன்றைய உலகில் ரசனை அனுபவம்,
பெரும்பாலானவர்கள், பெரும்பாலும் பெறுவதில்லை என்றே தோன்றுகிறது. ரசனைக்கு அடிப்படையான
புலனுணர்வுகளைப் பெற்றாலும், அவற்றை பெரும்பாலானவர்களால் ரசனை அனுபவமாக மாற்ற முடிவதில்லை
என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அனைவரும் இசை கேட்கலாம். ஆனால், அதை இசையனுபவமாக மாற்ற
அனைவராலும் முடிவதில்லை. நுண்ணுணர்வின் இயல்பு, அதன் இயக்கத்தில் அது உணரும்தோறும்,
உணர்வு தொடர்ந்து அதிநுண்தளங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரே
உணர்வையே மீண்டும் மீண்டும் அடைந்தால், அந்த நுண்ணுணர்வு ஒரு இயந்திரத்தனமான இயக்கமாக
மாறியிருக்கும். அதாவது நுண்ணுணர்வு இழக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் ரசனையும் அழிந்திருக்கும்.
எப்போதோ பெற்றிருந்த நுண்ணுணர்வு அல்லது ரசனை, வெறும் இயந்திரத்தனமான இயக்கமாக மட்டும்
எஞ்சியிருக்கும்.
மனித மனதினுள் ரசனை அனுபவத்தை
உருவாக்கும் எதையும் அழகு எனக்கூறலாம். அழகை அளிப்பது கலை. அதாவது ரசனை, அழகுணர்வு,
கலையுணர்வு ஆகிய சொற்கள் அனைத்தும் மனதின் ஒரே உணர்வையே குறிக்கிறது. நுண்ணுணர்வை இழந்த
ஒருவருக்கு அழகு என ஒன்று உண்மையில் இருப்பதில்லை. அத்தகையவர் அழகு எனக்கூறுவது, எண்ணங்கள்
உருவாக்கும் வெறும் மனப்பிரமையே. அதாவது, ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் தோன்ற வைக்கும்
சிலவற்றையே அழகு என்னும் பெயரில் இன்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.
மனதின் பெரும்பகுதியை எதிர்காலம்
என்னும் கவலை மூடியிருக்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எதிர்காலத்திற்காகவே
செலவிடும்போது ரசனை மனதிலிருந்து மறைந்து விடுகிறது. நுண்ணுணர்வுடன் இருக்கும் குழந்தைகளை,
எதிர்காலம் என்னும் ஒரே நோக்கத்தை நோக்கி துரத்தினால், அவர்களும் நுண்ணுணர்வு அல்லது
ரசனை என்னும் ஒன்றை அனுபவிக்காமலே, வாழ்க்கை என்பது எதிர்காலம் என்ற ஒன்று மட்டுமே
என அதைத்தேடி ஓடத்தொடங்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலம் என கருதியது, நிகழ்காலமாக
நிகழ்ந்து கடந்தகாலமாக மாறும்போதும், அதை அறியாமல், எதிர்காலம் என்ற நோக்கத்திற்கான
ஓட்டம் மட்டுமே இருக்கிறது. அதாவது, எந்த நோக்கத்துக்காக வாழ்க்கை சக்தியின் பெரும்
பகுதி செலவிடப்படுகிறதோ, அந்த நோக்கம் அடையப்படும்போது, அதை முழுமையாக அனுபவிக்க, ரசிக்க
முடியாத வகையில், மனதை புது நோக்கங்கள் ஆக்ரமித்திருக்கும்.
ரசனையை அடைய வேண்டுமானால்,
மனதில் ரசனை அனுபவத்துக்குப் போதுமான இடம் இருக்க வேண்டும். நுண்ணறிவின் செயல்பாட்டுக்கு
மனம் குறைந்தபட்ச அமைதியுடன் இருந்தாக வேண்டும். மனம் வெறும் எண்ணங்களால் பொங்கி வழியும்போது,
மன உணர்வுகளை அறிவதற்கான இடைவெளியோ, சக்தியோ மனதில் இருப்பதில்லை. நோக்கங்களும் குறிக்கோள்களும்,
மனதில் பயத்தை உருவாக்குகின்றன. மனதில் எண்ணங்களின் அணிவகுப்புக்கு, வேறு எந்த காரணங்களும்
தேவையில்லை. எண்ணங்கள் அணிவகுத்து ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் செல்லும்போது, அவற்றுக்கிடையில்
நுழைய நுண்ணறிவுக்கோ, ரசனைக்கோ முடிவதில்லை.
ஒருவருக்கு எந்த புலனுணர்வு
சார்ந்த நுண்ணுணர்வு ஆதிக்கத்துடன் உள்ளதோ, அந்த உணர்வு சார்ந்த கலைகள் அவர் மனதை அமைதிப்படுத்தலாம்,
ஒருமுகப்படுத்தலாம். ஆம், எல்லா கலைகளின் ஆதாரமும், ஆன்மீகத்தேடலே. எந்த நிகழ்வு ஒரு
மனிதனிடமாவது மன ஒருமையை, அமைதியை தூண்டுகிறதோ, நுண்ணுர்வை தூண்டுகிறதோ, அழகுணர்ச்சியை
தூண்டுகிறதோ, அந்த நிகழ்வை கலை என சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். குறைந்த பட்சம்
அந்நிகழ்வு, அந்த ஒரு மனிதனுக்காகவாவது கலையாக இருக்கும். கலை, அதன் இயல்பிலேயே, அதனால்
தூண்டப்படுபவர்களை, அதைக்கடந்து செல்வதற்குமான நுண்ணறிவையும் அளிக்கும்.
ரசனை கடந்து செல்லும்தோறும்,
கலையும் அதற்கேற்ற வகையில் தன்னை மறுஆக்கம் செய்தாக வேண்டும். அவ்வாறு மறுஆக்கம் செய்யமுடியமல்
தேங்கிநிற்குமானால், அதை கலை என்னும் சொல்லால் குறிக்க முடியாது. வேறு வார்த்தைகளில்
கூறினால், கலையும் ரசனையும் ஓயாத இயக்கங்கள். அவை இரண்டுமே, தேங்கி நின்றால் அவற்றின்
இயல்பை இழந்து இயந்திரத்தனமானதாக மாறி விடும் - அதாவது மூளையின், மனதின் இயந்திரத்தனமான
இயக்கம்.
ஒரு சமூகம் நாகரீக வளர்ச்சியோ,
சிந்தனை வளர்ச்சியோ அல்லது அறிவியல் வளர்ச்சியோ அடைய வேண்டுமானால், அந்த சமூகத்தில்
கலையும் ரசனையும் இருந்தாக வேண்டும். கலையும் ரசனையும் இருக்கும் சமூகங்களில் மட்டுமே
நுண்ணுணர்வு இருக்க முடியும். சமூக வளர்ச்சிக்கு, அந்த சமூக குடிமக்களுக்கு நுண்ணுர்வு
அவசியம். துரதிர்ஷ்டவசமாக, நாம் வாழும் சமூகத்தில், கல்வி என வழங்கப்படும் ஒன்றில்
கலையும் ரசனையும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. சமூகப் பொதுவெளியில் கலை என கூறப்படுவது
பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காகவே இயங்குவதால், அவை முழுவதும் இயந்திரத்தனமாகி விட்டன.
எனவே வணிக நோக்கங்களால் ஆன கலைகளின் ரசனையும்! உண்மையான ரசனையும் கலையும், பொதுக்கல்விக்கு
வெளியே, தம் சுயமுயற்சியால் அடைந்த ரசனை உணர்வுடன் இருக்கும் சிறுபான்மையினரிடம் மட்டுமே,
பொதுக்கல்வியின் அன்றாட அழுத்தத்திற்கு தங்களை முழுவதும் இழந்து விடாத வெகு சிலரிடம்
மட்டுமே, சற்றேனும் எஞ்சியிருக்கிறது.
ரசனையையும் கலையையும் இழக்கும்
சமூகம், நாகரீகத்தில் தேக்கமடைவதை தவிர வேறு வழியில்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
என நம் நாகரீகம் கூறப்படுகிறது. அதாவது நாம் வாழும் சமூகம் நெடுங்காலமாகவே கலையையும்
ரசனையையும் ஒரு இயக்கமாக தன்னுள் இணைத்துள்ளது. ஆனால் நாம் வெறும் பழம்பெருமை மட்டும்
பேசிக்கொண்டு, அந்த பெருமைக்கு எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதன் மூலம் அந்த நாகரீகத்தை
தேக்கமடையச் செய்து, அழிவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். ரசனையையும் கலையையும்
இழப்பதன் மூலம் நம் நாகரீகத்தை தேக்கமடைய செய்கிறோம். இங்கு நாம் செய்யக்கூடியதெல்லாம்,
ஓரளவேனும் ரசனையும் கலையுணர்வு உடையவர்களாவது, அதை இழக்காமல், தங்கள் ரசனையையும் கலையுணர்வையும்
மேலும் உயர்ந்த தளங்களுக்கு எடுத்துச்செல்வது மட்டுமே. அதன் மூலம், நம் பழமை வாய்ந்த
நாகரீகம், சமூகத்தின் இருட்டறைகளிலாவது, தகுந்த தருணத்தை எதிர்பார்த்து, தன் உயிர்ப்பை
வைத்திருக்க செய்வது. அது மட்டுமே நம்மை உருவாக்கிய சமூகத்துக்கு, நாகரீகத்துக்கு,
நம்மால் அளிக்க முடியும் குறைந்த பட்ச பங்களிப்பு!
blog.change@gmail.com
No comments:
Post a Comment