சிறகு இணைய இதழில் 31-01-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.
இந்த கட்டுரை, உலகப் பொருளாதாரத்தின்
எல்லா தன்மைகளையும், எல்லாவிதமான பொருளாதார கொள்கைகளையும் ஐயம் திரிபற அறிந்த அறிஞரால்,
அத்தகைய அறிஞரின் பார்வையில் எழுதப்படவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் பார்வையில்
தற்போதைய பொருளாதார கொள்கைகள் எத்தகைய நிழலாக விழுகிறது என்பதும் அந்த நிழல்கள் சுட்டும்,
எதிர்கால, எதிர்மறை விளைவுகள் குறித்தது மட்டுமே. எல்லா கொள்கைகளிலும் நேர்மைறை விளைவுகளும்
எதிர்மறை விளைவுகளும் கலந்தே இருக்கும். நேர்மறை விளைவுகள் நமக்கு மகிழ்ச்சியை, நன்மையை
கொடுப்பவை. எனவே அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் எதிர்மறை விளைவுகள் நமக்கு அல்லது நம் சந்ததியினருக்குத் துன்பத்தை அளிப்பவை.
அவற்றை விவாதித்து, துன்பத்தை தவிர்க்க முயல வேண்டியது நம் கடமை.
இன்று உலக பொருளாதாரம்,
முதலாளித்துவ (Capitalism) பொருளாதாரத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அங்கொன்றும்
இங்கொன்றுமாக உலகின் சில பொருளாதாரங்கள், முதலாளித்தவத்துக்கு முந்தைய அல்லது இடைப்பட்ட
பொருளாதார முயற்சிகளிலேயே தங்கி இருந்தாலும்,
அவை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சீனா போன்ற நாடுகள், இடைபட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில்
வந்த ஆட்சிஅமைப்பின் பெயரில் இருந்தாலும், அவையும் பொருளாதர கொள்கைகளில், முதளித்துவத்தை
தழுவி விட்டன. எனவே ஒட்டு மொத்தத்தில் உலகத்தின் தற்போதைய பொருளாதார இயக்கத்தை முதலாளித்துவம்
எனக்கூறலாம்.
மனித நாகரீகத்தின் முன்னோக்கிய
பாய்ச்சலில், முதலாளித்துவமும் ஒரு முயற்சியே.
மனித சமூகம், சமஉரிமையை பெறுவதற்கான ஒரு முயற்சி. மனிதர்களில் வல்லவர்கள் மற்றவர்களை
வென்று வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவுகட்டி, மனிதர்கள் அனைவரும் ஒரே சமூகமாக வாழ்வதற்கான
ஒரு முயற்சி. இன்று திரும்பிப்பார்த்தால், அந்த முயற்சி முழுமையான வெற்றியை அடையாவிட்டாலும்,
குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த முயற்சியின் தொடக்கத்தில்
சமூகத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும்! தற்போது பூமியில் மனித இருப்புக்கே
அச்சுறுத்தலாக இருந்தாலும்! 1800 - ம் வருடங்களில் தொடங்கி, ஏறத்தாழ அதன் இறுதி
ஆண்டுகளில், அதுவரை இருந்த பொருளாதார அமைப்பை முற்றிலும் குலைத்து, அதன் மூலம் சமூக
அமைப்பையும் குலைத்து, 1900 ம் வருடங்களில் நிலைபெற்று, அதன் மூலம் சமூக அமைப்பையும்
இன்னொரு தளத்தில் நிறுவி விட்டது. 1900 - ம் ஆண்டுகளின் இறுதியில், சற்றேறக்குறைய எல்லா
நாடுகளும் முதலாளித்துவத்தை தழுவி விட்டன.
முதலாளித்துவத்தின் அடிப்படை
முதலீடு. அந்த முதலீட்டின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து, உற்பத்தியில் ஈடுபடும்
உழைப்பிலிருந்து உபரி உழைப்பை பெற்று, அதன் மூலம் உபரி உற்பத்தியை அடைந்து, முதலீட்டை
விட அதிக பணத்தை திரும்ப பெறுவது, முதலாளித்துவத்தின் சுழற்சி முறையாகும். முதலீட்டின்
மூலம் பெற்ற உபரி பணம் வருமானம் ஆகும். முதலாளித்துவத்தின் சுழற்சி முறையில், அடைந்த
வருமானத்தின் பெரும்பகுதி முதலீடாக மறு சுழற்சி செய்யப்படும். அதன் மூலம் அந்த சுழற்சி
இயக்கத்தின் இறுதியில், வருமானம் அதற்கேற்ற விகிதத்தில் அதிகரித்திருக்கும். இந்த வளர்ச்சி
விகிதம், முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆகும்.
முதலீட்டின் வளர்ச்சி விகிதம்,
பூஜ்யத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த முதலீட்டைக் கொண்டிருக்கும் பொருளாதாரம் வளர்ச்சிப்
பாதையில் இருக்கிறது எனப்படுகிறது. வளர்ச்சி விகிதம் பூஜ்யமோ அல்லது அதற்கு மிக அருகிலோ
இருந்தால், பொருளாதாரம் வளர்ச்சியின்றி நிலையாக இருக்கிறது எனப்படுகிறது. பூஜ்யத்தை
விட குறைவாக இருந்தால், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதை சற்று மாற்றி, முதலீடு
செய்பவரின் பார்வையில் அல்லாமல், பொதுமக்களின் அல்லது நுகர்வோரின் பார்வையில் கூறினால்,
உற்பத்திப் பொருட்களின் தேவை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விட அதிகமாக இருந்தால்
அது பொருளாதார வளர்ச்சி. தேவை, உற்பத்தியின் அதே அளவில் இருந்தால் அது பொருளாதார நிலைத்தன்மை.
தேவை உற்பத்தியை விட குறைவாக இருந்தால் அது பொருளாதார மந்த நிலை.
எல்லா முதலாளித்துவ பொருளாதாரங்களின்
அடிப்படை நோக்கமும் பொருளாதார வளர்ச்சியை அடைவதே. இன்னும் குறிப்பாக கூறினால், நாடுகள்
அளவில், மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை விட அதிக விகித வளர்ச்சியை அடைவது. அல்லது பொதுவாக
கூறினால், ஒரு முதலாளியை விட இன்னொரு முதலாளி அதிக விகிதத்தில் வளர்ச்சியை அடைவது.
சற்று மாற்றிக்கூறும்போது, ஒவ்வொரு நாடும் அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களின்
தேவை, அந்த நாடு வணிக தொடர்பு கொண்டுள்ள இடங்களில் தொடர்ந்து பெருக்குவதும், புதிய
வணிக தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம், உற்பத்தி பொருட்களின் தேவை மேலும் அதிகரிப்பதையும்
நோக்கமாக கொண்டுள்ளன. ஒவ்வொரு முதலாளிக்கும், தன் உற்பத்திப்பொருட்களின் தேவை, பிற
முதலாளிகளின் உற்பத்திப்பொருட்களின் தேவையை விட அதிகமாக இருக்க வைப்பதே நோக்கம்.
இந்த உற்பத்தி போட்டியின்
மூலம், ஒரு தனி இருப்பாக, நுகர்வோர்கள் அடைந்த இலாபம் மிகப்பெரியது. நுகர்வோருக்கு,
முதலாளித்துவ போட்டிகளின் மூலம், அதிக தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தன.
அதன் மூலம், வாங்கும் வசதியுடைய நுகர்வோரின் வாழ்க்கைத்தரமும், குறிப்பிடத்தக்க அளவில்
உயர்ந்துள்ளது. நுகர்வோரின் வாழ்க்கையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இது போன்ற
இன்னும் பல நல்விளைவுகள். அவற்றைப்பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், நம்
கண்முன் நிதர்சனமாக அவை உள்ளன.
ஆனால், இந்த முதலாளித்துவ
உற்பத்தி முறையின் எதிர்மறை விளைவுகளும் எண்ணிலடங்காதவை. முதலாளித்துவ நேர்மறை விளைவுகளின்
பயன்களில் மயக்கத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு, அதன் எதிர்மறை விளைவுகள் அத்தனை நிதர்சனமாக
தெரிவதில்லை. எதிர்மறைவிளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதனை ஓரளவுக்காகவாவது
அறிந்திருப்பார்கள். அதுவும் பாதிக்கப்படும்
அந்த நேரத்தில் மட்டும், பாதிப்பிலிருந்து தற்காலிகமாக வெளிவரும்வரைக்கும் மட்டும்.
அந்நேரத்தில் அவர்கள் இடும் கூக்குரலும், முதலாளித்துவத்தின் பயன்களில் திளைத்திருக்கும்
பொதுமக்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. மேலும் முதலளித்துவத்தின் பெரும்பாலான எதிர்மறை
விளைவுகள், நிகழ் காலத்தில், அத்தனை வெளிப்படையானவையும் அல்ல.
இதற்கு காரணம், மனிதனின்
தன்முனைப்பாக இருக்கக்கூடும். வாழ்க்கைப்போராட்டத்தில் நிலைத்து நின்று வாழவேண்டும்
என்னும் உயிரின் துடிப்பாக இருக்கக்கூடும். ஆனால், மனித இனம், அதன் சமூக முறைகளின்
மூலம், அறிவின் மூலம் வாழ்க்கைப்போராட்டத்தை, மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மிக
எளிதாக்கி விட்டது. ஆனால், உணர்வு நிலையில், மனிதனால் அந்த எளிமையை இன்னும் உணர முடியவில்லை.
மனிதனின் உயிர் நாளங்களில், அவன் மூதாதையர் வாழ்விற்காக நிகழ்த்திய போராட்டங்கள், இன்னும்
உயிர்ப்புடன் இருக்கக்கூடும். உணர்வு நிலையில் அடையும் மாற்றத்தின் மூலம் மட்டமே, இன்றைய
எளிய வாழ்க்கைக்கு மனிதனால் முழுமையாக தன்னை தகவமைத்துக்கொள்ள முடியலாம். இந்த உணர்வு
நிலை குறைபாட்டால், மனிதனால் தன்னை ஒரு முழு இருப்பின் பகுதியாக காணமுடிவதில்லை. எனவே
மனிதனின் தன்முனைப்பும் தன் தனியிருப்பை நோக்கியே இருக்கிறது. பூமி என்னும் முழுஇருப்பை
பார்க்க முடியாததால், முதலாளித்துவத்தின் விளைவுகள், அந்த முழு இருப்பில் நிகழ்த்தும்
பாதிப்புகளை காண முடியவில்லை. அதன் மூலம் தான் அடையும் பாதிப்புகளையும்! அதே நேரத்தில்,
முதலாளித்துவம் மனிதனின் தனியிருப்புக்கு அளித்த பங்களிப்பு, மிக எளிதாக மனிதனால் உணரப்படுகிறது.
அவை பெரும்பாலும் நன்மையாகவே இருப்பதால், மனித மனம் முதலாளித்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.
முன்பே கூறியவாறு, முதலாளித்துவம்
நுகர்வின் வளர்ச்சி மூலம் மட்டுமே, தன் வளர்ச்சி நிலையை அடைய முடியும். வளர்ச்சி இல்லாத
பட்சத்தில், முதலாளித்துவம் அதன் தன்முனைப்பை இழந்து விடும். அதன் மூலம் முதலாளித்துவம்
என்னும் பொருளாதார இயக்கமும் அழிந்து விடும். முதலாளித்துவத்தை பற்றி மேலும் பேசுவதற்கு
முன்னால், மனித இனத்தின் வளர்ச்சி வரலாற்றை சற்று ஆராய வேண்டும்.
இரண்டாம் உலகப்போருக்குப்
பின், நாடுகளுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயுமான போர் பெரும்பாலும் இல்லாமல் ஆகி
விட்டது. ருவாண்டா படுகொலை போன்ற சில நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தாலும்,
உலகம் பெரும்பாலும் பேரழிவுகள் இல்லாமலே தற்காலத்தில் நிகழ்கிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தில்,
மனித நாகரீகம் உருவான காலகட்டம் முதல் பெரும்போர்கள் மூலமும், சமூகக்கலவரங்கள் மூலமும்
மனித இனம் தொடர்ந்து அழிவுக்கு உட்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் இந்த அழிவுகளுக்கு,
பொருளாதார போட்டியும் அதிகாரப் போட்டியுமே
காரணமாக இருந்துள்ளன. பொருளாதார போட்டியின் மூலம் போரில் ஈடுபடும் இரண்டு பொருளாதார
தரப்புகளும், பெரும் பொருளாதார இழப்புகளையும் மனித உயிர் இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.
ஆனால், அதில் வெற்றி பெறும் பொருளாதார தரப்பு, தோல்வியடைந்த பொருளாதார தரப்பை முழுமையாக
சூறையிடுவதன் மூலம், தன் தரப்பு பொருளாதார இழப்பை ஒரளவுக்கு சரி செய்ய முடிந்திருக்கலாம்.
மேலும் அந்த பேரழிவின் மூலம், தேவைகள் பெருமளவு உயர்வதால், அந்த அழிவிலிருந்து பொருளாதாரம்
மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்ல தொடங்கும். அதாவது, ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு,
அந்த வளர்ச்சியை உந்தும் அளவுக்கு ஒரு அழிவு மிக அவசியமானது.
கடந்த இரு நூற்றாண்டுகளில்,
மருத்துவ முன்னேற்றத்தின் மூலம், தொற்று நோய்களால் நேர்ந்த உயிர் இழப்புகள் தற்போது
முழுமையாக இல்லாமல் ஆகிவிட்டன. தொற்று நோய்கள் மூலம் உயிர் இழப்புகள் ஏற்படும்போது,
அவை நிகழும் சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார இழப்புகளும் நேரிட்டிருக்கும்.
அந்த அழிவிலிருந்து மீண்டு வரும்போது, அழிவிலிருந்து மீளும் முனைப்பு, பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு
கொண்டுவந்திருக்கும்.
தற்போதைய நம் காலகட்டத்தில்,
போர் மற்றும் தொற்று நோய்களினால் ஏற்படும் அழிவுகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டன.
இதன் மூலம் உலக மக்கள் தொகை 700 கோடியை கடத்து விட்டது. உலகப்போருக்குப்பின் இத்தனை
காலம், உலக மக்கள் தொகை வளர்ச்சியின் மூலம் அடிப்படை நுகர்வின் தேவை, உற்பத்தியை விட
அதிகமாக இருந்தது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியும், தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.
ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தின் திணற வைக்கும் வளர்ச்சியை கண்டு சமூகங்கள் ஓரளவுக்கு
விழித்துக்கொண்டன. இதன் மூலம், மக்கள் தொகை பெருக்கமும் பெருமளவுக்கு கட்டப்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்பு நோக்கையில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும், இப்போது உள்ள வளர்ச்சி
விகிதமும் எச்சரிக்கை தேவையான, அபாயகரமான நிலையிலேயே உள்ளது.
போர்களின் மூலமும் தொற்று
நோய்களின் மூலமும் ஏற்பட்ட அழிவுகளாலும், அந்த அழிவுகளை ஈடு செய்யும் மக்கள் தொகை பெருக்கத்தாலும்,
உற்பத்தியின் தேவை வளரும் விகிதத்தில் இருந்து வந்துள்ளது. இந்த மூன்று காரணிகளும்
கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பொருளாதாரம் வளர வேண்டுமானால், தனிமனித தேவைகளும் வளர்ந்து
கொண்டே இருக்க வேண்டும். கடந்த சுமார் முப்பதாண்டுகளில், தனிமனித தேவைகளின், அல்லது
தேவை எனக்கூறப்பட்டவைகளின், வளர்ச்சியினாலேயே உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில்
இருந்துள்ளது.
தனி மனித தேவைகளின் வளர்ச்சி,
அவர்களின் வருமானத்துக்கு இணையாக இருக்கும். முதலாளித்துவத்துக்கு, அவற்றின் உற்பத்தி
பொருட்களுக்கு தேவை இருக்க வேண்டும். அல்லது தேவை எங்கு இருக்கிறதோ அங்கே அவற்றின்
உற்பத்தியை தொடங்கும். எனவே தனிமனித வருமானமும், உற்பத்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
ஒன்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமநிலைப்புள்ளியை (Break even) அடையும்வரை தொடர்ந்து
வளர்க்கவோ அல்லது அழிக்கவோ செய்யும்.
இதைப்போலவே முதலாளித்துவத்தின்
வரம்பற்ற உற்பத்தியால், தனிமனித வருமானத்தை அதிகரிப்பதற்கான போட்டியும், தனி மனிதர்களுக்கிடையே
ஏற்படுகிறது. இந்தப் போட்டி, உற்பத்திக்கு தேவையான, தனிமனித தொழில்நுட்ப திறமையிலும்
போட்டியை உருவாக்கி, அந்த போட்டியின் மூலம் தனிமனிதர்களின் தன்முனைப்பையும் அவர்கள்
செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் உற்பத்திக்கு தேவையான உழைப்பு, மிக எளிதாக முதலாளித்துவத்துக்கு
கிடைக்கிறது. அதன் மூலம் உபரி உற்பத்தியும்.
ஆக மொத்தத்தில் முதலாளித்துவம்
எல்லா திசைகளிலும் போட்டியை உருவாக்கி, சமூகத்தின் அங்கங்களை ஒன்றுடன் ஒன்று மோத வைத்து,
விளைவாக உருவாகும் விசையால் சமூகத்தை முன்நகர்த்தி செல்கிறது. மனித சமூகத்தை ஒற்றை
பெரும் இயக்கமாக காணும்போது, முதலாளித்துவம், அதன் பல்வேறை விசைகளால் மனித சமூகத்தை,
பொருளாதார நிலையில், முன்நகர்த்தும் இயக்கமே. இந்த வகையில், முதலாளித்துவம் மனித சமூகத்துக்கு
மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளது.
அந்த மனித சமூகத்தின் பொருளாதார
முன்னேற்றம், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத, பல சிறிய மற்றும் பெரிய, தனி மனித
மற்றும் சமூக அளவிலான, மனித இனம் மற்றும் பிற உயிரினங்கள் சார்ந்த, பல பிரச்சனைகளையும்
தன்னுள் கொண்டுள்ளது. மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், தற்போது அடைந்துள்ள வசதிகளை
தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், அந்த வசதிகளை அவை இன்னும் சென்றடைந்திடாத மனிதத்திரளிடம்
கொண்டு சேர்க்க வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கைகளில், ஒரு சமூகமாக திருத்தங்களை கொண்டு
வந்தாக வேண்டும். அந்த சீர்திருத்தம், முதலாளித்துவத்தின் முன்னேற்ற பண்புகளை முன்னெடுத்துச்
செல்வதாகவும், அழிவுப்பண்புகளை இல்லாமல் செய்வதாகவும் இருக்க வேண்டும். அது முதலாளித்துவத்திலிருந்து
முற்றிலும் புதிதான ஒரு பொருளாதார கொள்கையாகவும் இருக்க்கலாம். இது ஒரு அடையமுடியாத
இலட்சியமாக தோன்றலாம். ஆனால் ஒரு முழுமை நோக்குடன் அதை நாம் நெருங்கியாக வேண்டும்
- மனித இருப்பை தக்க வைத்துக்கொள்ள!
No comments:
Post a Comment