Saturday, September 13, 2014

கனவு

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலிருந்து, குழித்துறை நிலையத்தில் ஷக்தியும் அவள் அக்காவும் பெற்றோரின் துணையுடன், ஒரு குழந்தைக்கனவு நிகழ்வுகளாக நிகழ்ந்ததன் சுவடுகளுடனும், அது நிகழ்வாக மாறிய அனுபவத்தின் சுமையுடனும் இறங்கினர். சுமை சற்று அதிகம் போலும்! அவர்களால் சுமக்க முடியவில்லை. கனவின் இனிமையையும், நிகழ்வில் இல்லாமல் செய்துவிட்டது அந்த சுமை. ஆனாலும் அனுபவம்தானே கல்வி! சுமை சில நாட்களில் இறங்கி விடும். அனுபவத்தின் நினைவுகளை காலம் முழுவதும் முயன்றாலும் இல்லாமல் செய்துவிட முடியுமா?

இந்த கனவு முதன்முதல் தோன்றியது சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால். 'நாம டூர் போய் ரொம்ப நாள் ஆயாச்சு. ஆறு வருஷமா கேரளா மலை மேல ஏறி எறங்கிட்டு இருக்கோம். இந்த வருஷம் கொஞ்ச தூரமா டெல்லிவரைக்கும் போயிட்டு வரலாமா?' அப்பாவின் இந்த கேள்வி, ஷக்தியின், அவள் அக்காவின் பயணக்கனவுகளை தொடங்கி வைத்தது. கனவுகள்தானே வாழ்க்கையை வாழவைக்கின்றன. அகாலத்திலிருந்து காலத்திற்கு வாழ்க்கயை உந்தி தள்ளுகிறது. பயணம் கல்வியின் தவிர்க்க முடியாத கிளை. ஷக்தியின், அக்காவின் மனம் சரியான திசையில்தான்  அதன் கற்பனையை விரித்தெடுக்கிறது.

பயணக்கனவை நிகழ்வாக்கும் முயற்சிகளும், திட்டமிடலும் தொடங்கிவிட்டன. பயணம், கல்வியின் நடைமுறையாக இருக்கவேண்டுமானால், அதன் மூலம் பெறும் அனுபவங்களும் எதார்த்தத்தை நோக்கி இருந்தாக வேண்டும். விரும்பினால், ஷக்தி பள்ளி விடுமுறை நாட்களில், விமான பயணத்தின் மூலம் விரும்பிய இடங்களை பார்த்து வரலாம்.. அத்தகைய பயணத்தில் பெறும் அனுபவம் வெறும் மேட்டுமைத்தனத்துடன் மட்டுமே இருக்க முடியும். அந்த அனுபவத்திற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. பயணம் அதிகபட்ச உலக அனுபவத்தை அளித்தாக வேண்டும். பரந்த அனுபவத்தை, நீண்ட பயணத்தின் நிலத்தோற்றத்தை, இடத்திற்கு இடம் உள்ள வேறுபாடுகளை ..........

அவர்களை சாதாரண ரயில் பயணத்திற்கு தயாராக்க வேண்டும்

'ஒங்க ரண்டுபேருக்கும் வெளையாடுறது பிடிக்குமா? வெளையாட்ட பாக்கிறது பிடிக்குமா?'
'வெளையாடதான் பிடிக்கும். ஏன்?'

'வெளையாடினா ஒடம்பு வலிக்குமே, செரியா வெளையாடலைன்னா தோத்து போகவும் வேண்டிவருமே? தோத்தாலும் பரவாயில்லையா?'

'நாங்க தோக்க மாட்டோம். ஒங்களதான் தோக்க வைப்போம்'

அவர்கள் நம்பிக்கை வாழ்க! நம்பிக்கை அழியாமல் இருக்க வேண்டும். தோற்றாலும், நம்பிக்கை மீண்டும் துளிர்க்க வேண்டும். வெற்றி தோல்வி என எதுவும் இல்லை, அனுபவம் மட்டுமே உண்டு என்னும் தெளிவு பிறக்க வேண்டும். எல்லா அழிவுகளின் எச்சங்களும், புதிய துளிர்ப்புக்கான உரங்களே என்பதை அவர்கள் அறியவும் வேண்டும். அவர்களை உயிர்ப்புடன் இருக்க அவர்கள் சுற்றம் அனுமதித்தால், அல்லது சுற்றங்களின் அழுத்தங்களில் தங்கள் உயிர்ப்பை இழக்காமல் இருந்தால், இந்த நம்பிக்கை எப்போதும் அழியாது. அறிதல் அந்த நம்பிக்கையின் தன்மையை உண்மைக்கு அருகில் எடுத்துச் சென்றுகொண்டேயிருக்கும்.

'அப்ப டூர் நாம ட்ரெயின்லேயே, ஸ்லிப்பர் கோச்சுல போவோம். அதுதான் வெளையாடுறது. நெறைய நாள் ஸ்கூல் லீவு போடலாம். ஃபிளைட்ல போய் சுத்துறது வெளையாட்ட தூர இருந்து பாக்கிறது போலதான். ஸ்கூல் லீவு எடுக்கவும் தேவை வராது.'

'ட்ரெயின்லேயே போலாம்பா. ஸ்கூல் லீவு எடுக்காம போனா, போன மாதிரி இருக்காதே. ரண்டு வாரம் கூட லீவ் போடலாம் தேவிஷா எனக்காக நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருப்பா. அக்காக்க ஃப்ரெண்டும் அவளுக்கு நோட்ஸ் எடுத்து வச்சிருப்பா. நாங்க வந்து படிச்சிடுவோம்'

'ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். பகல்ல ரெம்ப சூடா இருக்கும். முடியுமா'?'

'போலாம்பா', 'போலாம்பா' கற்பனையின் போதையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இருவருக்கும் தெரியவில்லை.

ஷக்தியும் அவள் அக்காவும் படிக்கும் பள்ளியின் நிர்வாகம், ஒரு மலையாள அமைப்பால் நிர்வகிக்கப்படுவது. ஒவ்வோரு வருடமும், ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். தோராயமாக, அந்த விடுமுறையில் வருமாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. அதுவும் பயணத்தேதிகள் முடிந்த பின்னால்! எவ்வாறாயினும் பயணம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆறு நாட்கள் பள்ளிக்கு போகமுடியாது. அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஆறு நாட்கள் பள்ளிக்கு போக வேண்டியதில்லை. எவ்வளவு பெரிய விஷயம். மகிழ்ச்சி இருமடங்காகியது!

'ஒங்க லக்கேஜ, நானோ அம்மாவோ தூக்க மாட்டோம். ஒங்க பிரச்சன ஒங்களோடது. அதுக்கேத்த மாதிரி ஒங்களுக்கு தேவையான, தூக்க முடிஞ்ச துணிகள மட்டும் எடுத்து வைங்க'
'ட்ரெயின்ல ஏறுனா, ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். படிக்க புத்தகம் எதாவது வேணும்னா எடுத்து வச்சிடுங்க. அதையும் நீங்கதான் தூக்கணும்.'
'பத்து நாளுக்கு வீட்டு சாப்பாடு மாதிரி எதுவும் கெடைக்காது. கெடைக்கிறத சாப்பிடணும். இல்லைன்ன வெளையாட்டுல தோத்துப்போக வேண்டியதுதான். எங்களையும் தோத்துப்போக வச்சிடுவீங்க'

'நாம எடம் பாக்க சுத்துறது எல்லாம், பஸ், மெட்ரோட்ரெயின், ஆட்டோ-விலதான். அழுக்கா இருக்கும், நாற்றமாவும், நெருக்கமாவும், புழுக்கமாவும் இருக்கும். அழகு எல்லா எடத்திலேயும் அழுக்குக்கு பக்கத்திலதான் இருக்கும். அழுக்க விட்டுட்டு அழக மட்டும் பாக்கிறதும், வெளையாடாம வெளையாட்ட பாக்கிறதுதான்.'

பயண விதிகள் அவர்களுக்கு விளக்கப்பட்டன. எதிர் கொள்ள சாத்தியமான பிரச்சனைகளும் அறிய வைக்கப்பட்டன. கனவின் சுவையில் விதிகளின் யதார்த்தம் முழுமையாக மனதுக்குள் நுழையவில்லை. எனினும் ஒரு சந்தேகம் மனதின் ஒரத்தில் வெளிப்பட, அதன் எதிரொளி, முகத்திலும் சற்றே விரிந்தது.

'ஒங்களால முடியுமா'

'பாக்கலாம். நீங்கதான் கூட வாரீங்களே' - ஒரு முழுமையான பதிலை கூறி எந்த ஒரு பொறியிலும் மாட்டி விடக்கூடாது என்னும் தெளிவும், பிரச்சனையை அடுத்தவர்கள் மேல் தள்ளி விடும் சாதுர்யமும்(?)  இருவரிடமும் இருந்தது.

குதிரை வண்டியில் கட்டப்பட்டிருக்கும் குதிரைக்கு முன்னால் புல்கட்டு ஒன்றை கட்டி விடுவார்களாம். புல்லை கடிக்க குதிரை நடக்க, அத்துடன் வண்டியும் இழுபட, புல்கட்டும் முன்னால் செல்ல....ஷக்திக்கும், அவள் அக்காவுக்கும் முன்னால் ஒரு புல்கட்டு தெரிகிறது. என்ன, இன்னும் மூன்று வாரங்களில் புல்கட்டு அவர்கள் வாய்க்குள் இருக்கும். கிட்டத்தட்ட சுமார் மூன்று வாரங்களுக்கு, முழுமையாக அவர்களுக்கு கசப்பையளிக்கும் செயல்களையும், 'புல்கட்டை' காட்டியே செய்ய வைக்கப்பட்டனர்.

 'ஷக்தி டெல்லயில நடந்து நடந்து எடம் பாக்க ஹெல்த் வேணும். இன்னைக்கு வீட சுற்றி நீயும் அக்காவம் அம்பது ரவுண்ட் ஓடுங்க, 700 தடவை ஸ்கிப்பிங் பண்ணணுங்க'

 தினமும் இருபத்தைந்து ரவுண்ட் ஒடுவதற்கே சிணுங்கும் ஷக்தியும் அக்காவும், முகத்தில் தோன்றிய சிணுங்கலை மறைக்கவும் முடியாமல் காட்டவும் முடியாமல், 'ஓகே அப்பா' என்ற வார்த்தையுடன் ஓடவும் தொடங்கி விட்டார்கள். ஆச்சரியம்! ஆச்சரியம்!

'ஷக்தி ஸ்கூலுக்கு  ஆறு நாள் மட்டம் போடப்போற. வந்த உடனேயே டெஸ்ட் இருக்கு, இன்னிக்கு டெஸ்ட்டுக்கு படிச்சுட்டு தூங்க போ'

'இன்னிக்கு நெறய படிச்சாச்சு. டெஸ்ட்டுக்கு வந்து படிக்கலாம்'

'டெஸ்ட்டுக்கு படிக்கலைன்னா டிக்கட் கேன்சல் பண்ணிடலாம். டூர் போகண்டாம்'

'செரி, கொஞ்சம் இன்னிக்கு படிக்கிறன். மீதி நாளை படிக்கவா?'

இன்னும் எத்தனையோ மிரட்டல்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் காரணம் ஒரு கனவு. அதன் சுவை. மூளையின், மனதின் ஒவ்வொரு பகுதியும் கனவுகளை தோற்றுவிக்க வல்லது. அவர்களுக்கான கனவுகள் தோன்ற வேண்டும். பிறர் கனவுகளை காண்பதை தவிர்க்க வேண்டும். எனில் அவர்களுக்கான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

அந்த பயண நாளும் வந்தது. கனவு நிகழ்வாக மாற தொடங்கியது. நிகழ்வுகளின் யதார்த்தம் சிறிது சிறிதாக உருவேற தொடங்கியது. அகாலத்தில் இருந்து காலத்தில் அதன் லீலையை தொடங்கிவிட்டது. அவர்களுக்கான துணிமணிகள் அம்மாவால், அவர்களின் முழு அனுமதியுடன், எடுத்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் அவர்களுக்காக அவர்களே வாங்கிய அல்லது வாங்க வைக்கப்பட்ட புத்தகங்களும் எடுக்கப்பட்டன. இருவருக்குமான பயணப்பை தயாராகி விட்டது. அதுவும் அவர்களால் கையாளப்படும் அளவுக்கே, பள்ளி புத்தகச்சுமையில் பாதிக்கும் குறைந்த அளவுக்கே இருந்தது. திருவனந்தபுரம் சென்று, பெற்றோருடன், கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஏறி விட்டார்கள்.

48 மணி நேர பயணம், ஆக்ரா வரை. பல் வேறு கால நிலைகள், நில அமைப்புகள், மக்கள், மொழிகள், அனுபவங்கள்! உறக்கம், விழிப்பு, வேடிக்கை, படிப்பு, உணர்வு, சிந்தனை, அனுபவம்! ஆக்ரா சென்று சேர்ந்தது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை தாஜ்மஹால் மூடி இருப்பார்களாம். யதார்த்தம் ஒன்று மனதில் உதைத்தது. தாஜ்மஹால் அடுத்த நாள்தான் பார்க்க முடியும். ஆக்ரா கோட்டையில் சுமார் இரண்டு மணி நேரம் நடை. ஒரத்தில் பாயும் யமுனை நதியும், அதன் கரையோரமாக தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலும் மூளையில் அதுஅதற்கான இடத்தையும் பிடித்து விட்டன. கனவு நிகழ்வாகும்போது, கனவு இல்லாமல் ஆகிறது. நிகழ்வு நினைவாகிறது. நினைவுகள், புதிய கனவுகளின் கருவாகிறது.

நிகழ்வின் யதார்த்தம் ஷக்தியையும் அவள் அக்காவையும் சற்று நிலைகுலையவும் வைத்து விட்டது. மதிய வெயிலில், ஆக்ரா கோட்டையும், நாறும் ஆக்ரா வீதிகளின் வழியாக பேருந்து நிலையத்திற்கு சென்ற நிகழ்வுகளும், அங்கிருந்து மதுரா செல்லும் பேருந்தின் அவல நிலையும், 'குட்கா' வாசனையில் மூழ்கியிருந்த பேருந்து இருக்கைகளும் கற்பனை கோட்டைகளின் மேல் தாக்குதல்களை தொடர்ந்தன. கிருஷ்ணனை குறித்து அவர்கள் அறிந்திருந்தவை, புதிய கனவுகளாக வந்து 90 நிமிட மதுரா பயணத்தையும் சற்றே எளிமையாக்கின. பின் ஆக்ராவிற்கான 90 நிமிட பயணமும் முடிந்து விட்டது. அடுத்த சில நாட்கள் ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி என கழிந்தது.

டெல்லி சென்று சேர்ந்த அடுத்த நாள், மனகோட்டை முழுமையாக கலையும் நிலைக்கு மிக அருகில் வந்தது.

'அம்மா முடியல, ஹோட்டல்லேயே இருக்கலாம்' கனவுகள் கலையும் வேகத்தில், நிகழ்வுகளின் யதார்த்தம் முதலில் ஷக்தியின் அக்காவை தாக்கியது. எட்டிப்பார்த்த காய்ச்சலை, கையுடன் கொண்டு வந்திருந்த மருந்துகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சற்றே குறைவான தீவிரத்துடன் அன்றைய பொழுது கழிந்தது. இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பின் தீவிரம் நிகழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மூன்று நாட்கள் டெல்லியிலும் நல்ல படியாக கழிந்து, சென்னைக்கு ரயிலும் ஏறி விட்டார்கள். பின், சென்னையிலிருந்து வீடு நோக்கியும்.
குழித்துறை நிலையத்தில் இறங்கிய போது, கனவு முழுமையாக முடிந்து விட்டது. நினைவகளாக எஞ்சிய அனுபங்களுடன்.

'ஷக்தி, அடுத்த டூர் எங்க போலாம்'

'இனி எங்கயும் போகண்டாம்' கனவு நிகழ்ந்ததில் ஏற்பட்ட சலனங்களும், நிகழ்வுகளின் யதார்த்தமும் குழந்தைகளை பாதித்திருக்க கூடும். சில நாட்களுக்கு யதார்த்தத்தின் சுமை அவர்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும். சுமை இறங்கியபின், நினைவுகள் கனவின் சுவையை மீட்டளிக்க கூடும்.


அவர்கள் குழந்தைகள். நிகழ்வுகளின் நினைவுகள் அவர்கள் மனதின் மேல் பரப்புக்கு எழுந்து வரும். நினைவுகள் சூல் கொண்ட கனவுகள் முளைத்துக்கொண்டே இருக்கும். அதனால் உந்தப்பட்ட வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் கனவுகளின் கருப்பை மலடாக்கப்படாமல் இருக்க வேண்டும்

பின் குறிப்பு;

எழுதும் முறையை சற்று மாற்றி ஒரு முயற்சி. இதை சிறுகதை என்று கூற முடியுமா? வடிவ அமைப்புக்கு தன் கருத்துகளை அளித்து உதவிய ரகுநாத் -க்கு நன்றிகள்.

blog.change@gmail.com

Saturday, August 23, 2014

பதாஞ்சலி யோக சூத்திரம் - ஒரு இடைச்சொருகலுக்கான தேவையின் தருணம்.

இந்திய ஞான தரிசனங்களில் ஒன்றான 'யோகம்' பதாஞ்லி முனிவர் அவர்களால் தொகுக்கப்பட்டு, பதாஞ்சலி யோக சூத்திரமாக அறியப்படுகிறது. இந்த யோக சூத்திரம், நான்கு பாகங்களையும், ஒவ்வொரு பாகத்திலும் கிட்டத்தட்ட ஐம்பது சூத்திரங்களையும் கொண்டது. ' 'விக்கி பீடியா' மற்றும் சில இணைய பக்கங்கள் வழியாக செய்த ஆராய்ச்சியின்(!!??) விளைவாக, பதாஞ்சலி முனிவரின் காலம் சுமார் 2400 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரத்தின் மூலம், மனிதன் அவன் இருப்பின் உச்ச நிலையான கைவல்ய (முழுமையான விடுதலை) நிலையை அடைவதற்கான வழிமுறைகள் உலகுக்கு தொகுத்து அளித்தவர் பதாஞ்சலி.

யோக சூத்திரத்தின் முதல் பாகம் 'சமாதி பாதம்' எனப்படுகிறது. அதன் ஐந்தாவது மற்றும் ஆறாவது சூத்திரங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது..

 'வருத்யஹ பஞ்சத்யஹ க்லிஷ்ட அக்லிஷ்ட'
- மனமயக்கங்கள் ஐந்து வகைப்படும். அவை மன சஞ்சலங்களை\துயரங்களை    அளிப்பவையாகவோ, அல்லாதவையாகவோ இருக்கலாம்.

'ப்ரம்மாண, விபர்யாய, விகல்ப, நித்ரா, ஸ்ம்ருத்யஹ'
- அவை உறுதி செய்யப்பட்டு நம்பிக்கைகளாக ஆனவை (அல்லது முன்னறிவு), தவறான அறிதல்கள், கருத்துகள், விழிப்பின்மை மற்றும் நினைவுகள் என்பவை ஆகும்.

இங்குதான் ஒரு இடைச்சொருகல் அவசியப்படலாம். பதாஞ்சலி முனி, 2400 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் அடைந்திருக்கும் தொழில் நுட்பத்தை பற்றி எவ்விதமான ஞானத்தையும் அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தொழில்நுட்பம் என்பதே கடந்த 200 ஆண்டுகளில்தான் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. அவர் காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கணக்கிட்டாலும், இன்று மனிதன் அடைந்திருக்கும் தொழில்நுட்பத்தை அவரால் அனுமானம் செய்திருக்க முடியாதுதான். எனவே அவர் தொழில்நுட்பம் உருவாக்கும் மனமயக்கங்களை  இங்கு கருத்தில் கொண்டிருக்க சாத்தியமில்லை.

ஆம், தொழில் நுட்பம் இன்று, அதை உபயோகப்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்களை மன மயக்கத்தில் தள்ளுகிறது என்றே தோன்றுகிறது. மனிதர்களில் பெரும்பாலானவர்கள், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பீடு செய்தால், மிகவும் வசதியான, எளிதான, அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதில் எந்த சந்தேகங்களும் வர வாய்ப்பில்லை. இந்த வாழ்க்கை வசதிகளும் அமைதியும், ஒரு முழுமை நோக்கில், மனித வாழ்க்கையை எளிமையாக்கியிருக்க வேண்டும், ஆனந்தமயமானதாக மாற்றியிருக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வாழ்ந்து அனுபவிக்கும் எளிமையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடந்ததாக தோன்றவில்லை. முழுமை நோக்கில், பல தளங்களில் எளிமையும் அமைதியும் மனித சமூகத்திற்கு தொழில் நுட்பம் வழங்கியிருந்தாலும், முற்றிலும் வேறு தளங்களில் வாழ்க்கை மிகமிக கடினமானதாகவும், அமைதியற்றதாகவும் மாறியுள்ளது, மாறிக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஒருவேளை இதுவும் ஒரு தோற்றப்பிழையோ?

என் பார்வையில், தொழில்நுட்பம் பல தளங்களில் மனித வாழ்வின் பல்வேறு சிடுக்குகளை அவிழ்க்க உதவிக்கொண்டிருந்தாலும்,  அன்றாட தளத்தில், அதை நுகர்பவர்களின் அறிவுக்கு எட்டாமலே, வாழ்க்கையை கடினமாக்கியிருக்கிறது, உணர்திறனை மழுங்கடித்திருக்கிறது. இன்றைய நிலையில், புலன்களுக்கு மிக கூரிய உணர்வு தேவை இல்லைதான். புலன்களின் நுண்ணுணர்வுகளை தொழில்நுட்பம் சாதாரணமாகவே உணரும்தன்மையுடையதாக மாற்றி நமக்களிக்கிறது. எனவே புலன்களின் நுண்ணுணர்வு இல்லாமையை ஒரு குறையாக கருத தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், புலன்களின் நுண்ணுணர்வின் இழப்பினுடன், மனம் சார்ந்த நுண்ணுணர்வுகளும் மழுங்கி விடுகின்றன. மனம் சார்ந்த நுண்ணுணர்வை இழந்த ஒருவரால், வாழ்க்கை அளிக்கும் அளவற்ற இன்பங்களின் துளியை கூட அனுபவிக்க முடியாது. மனம் சார்ந்த நுண்ணுர்வை இழந்த ஒருவருக்கு வாழ்க்கை என்பது பிறத்தலில் தொடங்கி, விலங்கு போல உண்ணவும், புணரவும் செய்து, தலை முறைகளை உருவாக்கி பின்னர் இறத்தலில் முடிந்து விடுகிறது. பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் நடுவில் உள்ள இன்பங்களை, நுண்ணுர்வை இழந்ததன் மூலம், என்னவென்றே அறியாமல் தொழில்நுட்பம் அளிக்கும் நுகர்வையே இன்பம் என மயங்கி, அந்த மயக்கம் தெளிவதற்கு முன் இறத்தலையும் அடைந்து விடுகிறார்.

இங்கு இன்பம் என்றிருப்பது எது என்பதை மிகப்பொதுவாக கூற முடியாதுதான். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. தன் இயல்பை அறியும் நுண்ணுணர்வினால் மட்டுமே தனக்கான இன்பம் என்ன என்பதை ஒருவரால் அறிய முடியலாம் - மனித இயல்பை அறிவதற்கான தொழில்நுட்பம் இன்னும் சந்தைக்கு வரவில்லை!

தொழில்நுட்பம் உருவாக்கும் மனமயக்கங்கள் எல்லை இல்லாமல் விரிந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாக தகவல் தொழில்நுட்பம். இதன் மூலம், உலகின் எந்த பகுதியில் உள்ள தகவல்களும் நம் மூளையினுள், நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும், வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. மேம்போக்காக பார்த்தால் இது ஒரு நல்ல விஷயம்தான். தகவல்கள் சாதாரண மக்களுக்கும் உடனடியாக கிடைப்பதன் மூலம், பல எதிர்மறை விஷயங்களை நம்மைவிட்டு விலக்கவும் முடிகிறது. அதன் மறுபக்கத்தில், இத்தகைய தகவல்களின் குவிப்பில் நமக்கு தேவையானது எது தேவையற்றது எது என்னும் தெரிதல் மிக அவசியமானது. அத்தகைய தெரிதல் இல்லாத பட்சத்தில் மனித மூளையே ஒரு தகவல்களின் குப்பைக் கிடங்காகும் வாய்ப்புள்ளது. ஆம் இன்றைய நிலையில் நம் மனம் தகவல்களின் குப்பைகளால் நிறைக்கப்பட்டுள்ளது. எனில் மனமயக்கத்திற்கு வேறு காரணங்களும் தேட வேண்டுமோ? இந்த குப்பைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளே கூறவே, யோக சூத்திரத்தில் இன்னொரு பாகம் (பாதம்) சேர்க்க வேண்டியிருக்கலாம்.

போதுமான அளவு சமஸ்கிருத மொழி அறிவும், கவி மனமும் உடைய ஒருவர் யோக சூத்திரத்தின் இடைச்சொருகலுக்காக முயலலாம். இங்கு இடைச்சொருகல் என்று கூறுவது, யோக சூத்திரத்தின் மேன்மையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட்டதன் காரணத்தால் அல்ல. மாறாக அதன் மேன்மைத் தன்மையை உணர்ந்ததன் காரணமாகவே இந்த எண்ணம்! யோக சூத்திரம் என்பதே 'யோகம்' என்னும் ஞானதரிசனத்தின் தொகுப்பு மட்டுமே.


ஆனால் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மனமயக்கங்களும், பதாஞ்சலி முனி கூறிய ஐந்து மனமயக்கங்களுக்குள்ளாகவே அடங்கி விடுமோ? இருக்கலாம், ஆனாலும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

blog.change@gmail.com

Monday, August 4, 2014

என் முதல் பொதுப்போராட்ட அனுபவம்

நானும் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டேன். என் ஜனநாயக கடமையை செய்து விட்டேன். அல்லது தொடங்கி விட்டேனாக இருக்கலாம். ஜனநாயகம் என்றால் வெறும் வாக்களித்து, சிலரை பதவியில் அமர்த்த நாட்டின் எளிய மக்களும் ஒரு காரணமாக இருப்பது மட்டும்தானா? அவ்வாறு பதவியில் அமர்ந்தவர்களிடம், எவ்வாறு தான் ஆளப்படப்படவேண்டும் என்று கோருவதும்தானே? அவ்வாறு அனைவரும் அனைத்து திசைகளிலும் கோரும்போது, கோரல்களின் குரல்கள் முட்டி மோதி, ஒரு பொதுக் குரலை முன்வைப்பதும், அதை ஐனநாயகத்தின் குரலாக முன்னிலைப்படுத்துவதும் ஜனநாயக கடமைதானே? வெறும் வாக்களித்து விட்டு என் ஜனநாயக கடமையை முடித்துவிட்டேன் என எவ்வாறு பெருமை அடைய முடியும். நானும் ஜனநாயக கடமையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று பல வருடங்களாக, என் மனதுக்குள் மட்டும், முயற்சித்து கொண்டிருக்கிறேன். கடைசியாக, 2014-ம் வருடம் ஜூலை 31-ம் நாள்  எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பு, போராட்டத்திற்கு முந்தைய நாள், ஒரு துண்டுப்பிரசுரத்தின் வழியாக என் வீட்டிற்கு வந்தது. 'மேற்கு தொடர்ச்சி மலை, விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்' என்னும் அமைப்பு, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாலுகா அலுவலகம் முன்பாக, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டம். அந்த நான்கு அம்சங்களுமே எனக்கும் முக்கியமான கோரிக்கைகளாகப்பட்டன. அவற்றை உங்களுக்கும் நான் தெரிவித்தாக வேண்டும்.

1. குமரி மாவட்டத்தில் திணிக்கப்பட்டுள்ள தனியார் காடுகள் சட்டத்தை ரத்து செய்ய(அல்லது விலக்களிக்க) வேண்டும்.
2. குமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பாறைகள் உடைப்பதற்கு அமலாக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நிரந்தரமாக்க வேண்டும்
3. சமவெளி பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்
4. ரப்பர் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவற்றில் கோரிக்கை (1) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானதாகவும், கோரிக்கைகள் (2) மற்றும் (3) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவானதாகவும், கோரிக்கை (4) உங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றாகவும் தோன்றலாம். ஆனால் நானோ (1) மற்றும் (4) -ஆல் நேரடியாக பாதிக்கப்பட்டவனாகவும், (2) மற்றும் (3) -ல் சுற்றுச்சூழல் மூலம் பாதிக்கப்பட்டவனாகவும் உள்ளேன். ஆகவே என் உணர்வுகள், உங்கள் பார்வைகளிலிருந்து விலகியிருக்கலாம். நமது கொள்கைகளும் நோக்கங்களும், நம் புலன்கள் வெளிஉலகத்தை எவ்வாறு உணர்கின்றன என்றும், அந்த உணர்வை நம் மனம் எவ்வாறு எதிர்கொள்கிறது எனபதையும் பொறுத்துதானே அமைகின்றன!

நான் போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டேன். போராட்ட கோரிக்கைகளில் ஒன்று, பொது புத்திக்கு, சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக தோன்றக்கூடும். ஆனால் நான் அதை ஆதரிக்கிறேன். ஏன் என்று கூறுவது என் கடமைதானே. என் கடமையை நிறைவேற்ற முயல்கிறேன். சற்று பொறுமையாக வாசியுங்களேன்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் அடர்த்தி அதிகமான மாவட்டம். இதற்கு இங்கு நிகழும் தட்பவெப்ப நிலையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளை பெறுவதால் நடைபெறும் (நடைபெற்ற!?) விவசாயமுமே காரணமாக இருக்க முடியும். விவசாயத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக ரப்பர் விவசாயம் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியின் பொருளாதாரம், முழுமையாக ரப்பர் விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியிலும், அடிவாரத்தை ஒட்டிய மலைச்சரிவுகளிலும் ரப்பர் விவசாயம் பெருமளவில் செய்யப்படுகிறது.

1979-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரையான காலகட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் பல்வேறு அறிவிப்புகளின் மூலம் சுமார் 75000 ஏக்கர் பரப்புள்ள, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள, பட்டா நிலம் தனியார் காடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த அறிவிப்புகளும் 2010-ம் ஆண்டுவரை ரப்பர் விவசாயிகளின் கவனத்திற்கு வரவே இல்லை. தனியார் காடுகள் சட்டப்படி, அதன் எல்லைக்குள் வரும் நிலப்பகுதி உரிமை மாற்றம் செய்ய தடைசெய்யப்பட்டதாகும் (முறையான அனுமதி இல்லாமல்). ஆனாலும் 2010-ம் ஆண்டுவரை எந்த வித அனுமதிகளும் இல்லாமல், பத்திரப் பதிவுகளும், பட்டா உரிமை மாற்றங்களும் சார்பதிவாளர்களால் முறையாக நடத்தப்பட்டன.

2001 முதல் 2005-ம் ஆண்டின் நடுப்பகுதிவரை, வெளிநாட்டில் நான் சேர்ந்திருந்த வேலையின் மூலம் (வெளிநாட்டில் வாழ்ந்திருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவு மாறாத வாழ்க்கை முறையாலும்) சட்டப்படி வருமான வரி கட்டத்தேவையற்றதன் காரணமாக, சேமித்தவற்றில் பெரும் பகுதியையும், அதன் பின் 2007-ம் ஆண்டு இறுதிவரை சேமிக்கப்போகின்றவற்றை முழுமையாகவும் முதலீடாக கொண்டு, சுமார் 15 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை, முறையான வில்லங்க சான்றிதழ்களை பரிசீலித்து,  முறைப்படி என் உரிமையாக்கிக்கொண்டேன் (பட்டா மாற்றம் உட்பட) - உரிமை மாற்றம் செய்ய தடைசெய்யப்பட்டது என்னும் அறிதல் கடுகளவும் இல்லாமல், அறிவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல்!

2010-ம் ஆண்டு, மாவட்ட ஆட்சியரால் இந்த பகுதி உரிமைமாற்றம் செய்யும் தடை, அதிகாரபூர்வமாக சார்பதிவாளர்கள் அறிவுறுத்தப்படுவதற்கு சில மாதங்கள் முன்னால், நான் உரிமைகொண்டுள்ள இந்த நிலப்பகுதி, தரகர்களால், சுமார் ஒன்றரை மடங்கு அதிக விலை பேசப்பட்டது. எனது எதிர்கால குறிக்கோள்களாக நான் கொண்டிருந்தவற்றின் காரணமாக, எச்சில் ஊறவைக்கும் அந்த இலாபத்தை பெற நான் விரும்பவில்லை. 

(இதன் மூலம், ஒரு அற உணர்வு சார்ந்த பெருங்குற்றத்தை செய்த மன உளைச்சலில் விழுவதிலிருந்து தப்பித்தும் விட்டேன்) 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என நினைக்கிறேன். தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை குறித்து முதன் முறையாக நான் கேள்விப்பட நேரிட்டது. என் அதுவரையிரான சம்பாத்யத்தின் பெரும்பகுதியிலியிருந்து, என் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக செய்யப்பட்ட முதலீடு அதன் பணமதிப்பின் பெரும்பகுதியை இழந்து என்னிடம் எஞ்சியது. 2008-க்கு பிந்தைய காலகட்டத்தில், என் மனநிலையில், நான் விரும்பிய விரும்புகின்ற மாற்றங்கள் நிகழத்தொடங்கியது எனக்கருதுகிறேன். எனவே இந்த அறிவிப்பை, என் தனிப்பட்ட வாழ்க்கையில் அதன் விளைவுகளை, எந்த சலனமும் இல்லாமல் என்னால் கடந்து செல்ல முடிந்தது. ஆனால், அதற்கும் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்த மனநிலையில் நான் இருந்திருந்தால், இந்த அறிவிப்புக்குப்பின் என் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் என்னால் உணர முடிந்தது. அதன் மூலம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளை மட்டுமே தங்கள் சொத்தாக கொண்டுள்ளவர்களின் (இந்த எண்ணிக்கை குறைவானது அல்ல) மனநிலைகளையும், ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

இந்த இடத்தில், எனது பார்வையில், அரசாங்கங்களின் செயல்பாடுகளின் முரண்நகை ஒன்றையும் கூறலாம் என நினைக்கிறேன்.  ரப்பர் மரத்தின் பயனுடை வாழ்நாள் சுமார் 25 வருடங்கள் மட்டுமே. அதன் பின் முதிர்ந்த மரங்களை அழித்து விட்டு புதுமரங்களை வளர்க்க வேண்டும். ரப்பருக்கு வணிக பலன்கள் இருப்பதால், புது மரங்களை உருவாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டப்படி, பழைய மரங்களை அழிக்க, வனதுறை உட்பட பல அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், வயதான மரங்களை அழிப்பதால், விவசாயிகள் பெறும் வருமானத்தில் கிட்டத்தட்ட சரிபாதியை லஞ்சமாக, இந்த துறை அதிகாரிகளுக்கு கொடுத்தாக வேண்டும். இதன் காரணமாகவே, இங்கு பல முதிர்ந்த தோட்டங்கள் புதிப்பிக்கப்படாமல் வீணாகின்றன. ஆனால் அரசாங்கமே, காடுகளின் அடியில் புதைந்திருக்கும் நிலக்கரிக்காக, அடர்காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் அழிக்க முனைகின்றன - தற்போது, மத்தியபிரதேசம், மாஹன் அடர்காடுகளை அரசாங்கமே அழிக்காமல் இருக்க போராட்டம் நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், தனியார் காடுகள் என்னும் பெயரில் அரசால் மக்களுக்கு பயனற்றதாக மாற்றப்படுகிறது. இதனுடன், பனைமரத்திலிருந்து மது ஒழிப்பு என்னும் பெயரால் கள் இறக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டு, பனையேற்றம் என்னும் ஒரு தொழிலையே இல்லாமல் செய்து அதன் மூலம் பெருந்தொகையான விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை எதிர்மறையாக மாற்றியமைத்த அரசாங்கமே, ஆலைகளின் மூலம் உருவாக்கப்பட்ட மதுவை விற்று அரசாங்கத்தை நடத்த தேவையான வருமானத்தை பெறும் இழி நிலையில் உள்ளதுடன் தொடர்பு படுத்தலாம்.

அடுத்ததாக கட்டுமானப்பணிகளுக்காக மேற்கு தொடர்ச்சி மலை உடைத்து தள்ளப்படுவது. குமரி மாவட்டத்தில் வேறு எந்த தொழில்கள் இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாகவே அது உள்ளது. இதற்கு காரணம், கல்வியில் அவர்கள் அடைந்த முன்னேற்றமும் அதனால் மாவட்டத்திற்கு வெளியிடங்களில் அவர்கள் பெற்ற வேலைவாய்ப்புகளுமே. எனவே குமரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலும் ஒரு முக்கியமான தொழிலே. இங்கு மற்றும் கேரளாவின் தென்மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளுக்கு ஆதாரம், குமரிமாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் உடைக்கப்படும் பாறைகளே. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் காடுகளின் வளத்தை பாதுகாக்க துணிந்த அரசு, அந்த காடுகளின் இருப்பிடமான மலைகளை உடைப்பதன் மூலம் கட்டுமான தொழிலையும் பாதுகாக்க முனைந்ததோ? எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத வகையில் மேற்குதொடர்ச்சி மலையின் கன்னியாகுமரி மாவட்ட பகுதியின் பாறைகள் இந்த மாவட்டத்தின் மற்றும் தென்கேரளாவின் கட்டுமானங்களாக மாறிக்கொண்டிருந்தன - 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை.

இயற்கை ஆர்வலர்கள், இந்த பாறைகள் உடைப்புக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தியும் அரசாங்கத்துக்கு தொடர் மனுக்கள் அளித்தும் தங்கள் எதிர்ப்புகளை நெடுங்காலமாக அறிவித்து வந்தனர். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தின் ஆளும் கட்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. சில நாட்களில், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை காரணம் காட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாறை குவாரிகளும், தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. (தேர்தலை குறித்து கூறும்போது, இங்கு போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், கட்சி மற்றும் கொள்கை வேறுபாடு இன்றி, தாங்கள் வெற்றிபெற்றால் தனியார் காடுகள் சட்டத்தை திரும்பப் பெற ஆவன செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததை சொல்லித்தான்  ஆக வேண்டும்).

மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் இரண்டாவது கோரிக்கை, இந்த தற்காலிக தடையை நிரந்தரமாக்குவது. இங்கு போராட்டத்தின் பகுதியாக விளக்க உரையை அளித்தவர்களின் உரைகளின் சில குறிப்பிட்ட பகுதிகளை கூறுவது, தற்காலிக பாறை உடைப்பு தடையின் காரணத்தை விளங்கிக்கொள்ள உபயோகமாக இருக்கலாம்.  இது ஒன்றும் இரகசியமானது அல்ல, குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிலாளர்கள் வட்டத்திலும் அன்றாடம் நிகழ்பெறும் உரையாடல்களின் பகுதியே.  உரையாளர்களின் கூற்றுப்படி, பாராளுமன்ற தேர்தலுக்காக, இந்த மாவட்டத்தில் உள்ள ஒற்றைத்தொகுதியில் செலவளித்த 60 கோடி ரூபாய் பணத்தை, குவாரி உரிமையாளர்கள் கூட்டாக திருப்பியளித்தால், உடனடியாக குவாரிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். இன்னும் சில வாரங்களில் இந்த குவாரிகள் திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பது உரையாளர்களுக்கு தெரிந்திருந்ததால், அதனை அறிவிக்கவும் செய்தார்கள். எனவே அதற்கு எதிராக போராடவும் துணிந்தார்கள்.

மூன்றாவது கோரிக்கையை விளக்க தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். நான்காவது கோரிக்கை ரப்பர் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது. 2008-ம் ஆண்டு முதல் கிடுகிடு உயரத்துக்கு சென்ற ரப்பர் விலை, அதனுடன் உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரப்பர் தொழிலாளிகளின் கூலி போன்றவற்றையும், ரப்பர் உற்பத்திக்கு தேவையான உபபொருட்களின் விலைகளையும், ரப்பரினால் உருவாக்கப்பட்ட டயர் போன்ற பொருட்களின் விலைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் கிடுகிடு பள்ளத்திற்கு வந்துவிட்டதால் பாதிக்கப்பட்டது, ரப்பர் உற்பத்தியாளர்கள் மட்டும் அல்ல. ரப்பர் உற்பத்தியாளர்கள், உற்பத்திக்கு ஆர்வம் காட்டாததால் தொழிலாளர்களும் பாதிப்படையும் நிலையை மெள்ள மெள்ள அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டத்தை அறிவிக்க, அந்த அறிவிப்பு என்னையும் வந்து சேர, முதன்முறையாக ஒரு பொதுப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இவ்வளவு கூறிய நான், அந்த போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது என்றும், அதில் என் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதையும் கூறியாக வேண்டும்.

போராட்டம், 31-07-2014 அன்று, காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாள், 10.25 மணிக்கு நானும் போராட்ட களத்தை சென்றடைந்தேன். போராட்ட களம், குழித்துறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் முகப்பு வாசல். முகப்பு வாசலுக்கு அருகில் பஸ் நிறுத்தத்தின் நிழல் குடையும் அதில் பயணிகள் அமர்வதற்கான முகப்பு வாசலும் அமைந்திருந்தன. நான் சென்ற நேரத்தில், சுமார் 15-பேர் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் வைத்திருந்த பேனர் ஒன்றும், வந்து செல்லும் வாகனங்களில் உள்ளவர்களுக்கு ஒருவர் போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரங்களை கையளித்துக்கொண்டிருந்ததாலும், அவர்களே போராட்ட குழுவினர் என்பதை என்னால் அறிய முடிந்தது.

நானும் பயணிகள் நிழல் குடையில் ஐக்கியமானேன். 11 மணிக்கு போராட்டம் தொடங்குவதற்கான பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. போராட்ட குழுவினர் நிழல் குடையிலிருந்து வெளிவந்து வளாகவாசலில் நிற்பதான பாவனையை செய்யத்தொடங்கினார்கள். சிலர் நிழல் குடையில் எஞ்சியருந்தவர்களை வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு என்னை போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவனாக அடையாளம் காண முடியவில்லை! எனவே எனக்கு வெளிவரும் அழைப்பும் இல்லை. நிழல்குடையின் ஓரமாக, போராட்ட குழுவின் அருகில் நானாக சேர்ந்து கொண்டேன்.

போராட்டம் தொடங்கி விட்டது. சுமார் 25 பேர் சேர்ந்து விட்டனர். வழக்கமான கோஷங்கள் எழுப்ப பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. இது நான் கலந்து கொள்ளும் முதல் பொதுப்போராட்டம். என்னால் கோஷம் எழுப்ப முடியவில்லை. ஆனாலும் போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

சுமார் 12 மணி அளவுக்கு போராட்டம் முடிவடைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. என் போராட்டத்தை நானாக முடித்துக்கொண்டு போராட்ட களத்திலிருந்து விலகினேன். இது ஒரு பெரிய போராட்டமாக, குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக நிகழவில்லை. ஆனாலும் போராட்டம் நிகழ்ந்தது. கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஒன்றை என்னாலும் கூட்ட முடிந்தது - போராட்ட கோஷத்தின் குரலை உயர்த்த முடியவில்லை என்றாலும். எது எவ்வாறாயினும், என்னால் முடிந்த ஜனநாயக கடமையை செய்து விட்டேன். முதல் அனுபவத்தை அடைந்து விட்டேன். அடுத்த அனுபவம், இன்னும் பெரியதாக இருக்க கூடும்!

நாளிதழ் செய்தி;  தினமணியில்

blog.change@gmail.com

Tuesday, July 29, 2014

நண்பர்களுடன் ஒரு சந்திப்பனுபவம்.

சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் 1991-ம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு, கருவியியல் துறையில் மிடுக்குடன் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர்களில், வகுப்புத்தோழர்களை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்திப்பதன் மூலம் ஜென்ம சாபல்யம் அடைய முடியும் என கருதிய வெகு சிலரின் முன்முயற்சியில் ஒரு நண்பர்கள் சங்கமம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதன் மூலம், 'உங்கள் நண்பன்தான்' என பறைசாற்றிக்கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தியதன் மூலம், 'நானும் உங்கள் நண்பனே' என  உரக்க கூறி, ஜென்ம சாபல்யமும் அடைந்து விட்டேன்.

எந்த ஒரு நிகழ்வு நடைபெற வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஒரு காரணமாவது இருக்க வேண்டும். (காரணகாரிய உறவு பற்றி நான் கொண்டிருக்கும் மனப்பதிவுகளுக்கு; இங்கு சொடுக்கவும்.) இந்த நண்பர்கள் சந்திப்பிற்கும் சில காரணங்கள் இருந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பொறியியல் படிப்பதற்கு தேவையான அறிவை வெளிப்படுத்தியவர்களாக (அறிவு\அறிதல் குறித்த என் பார்வைக்கு; இங்கு சொடுக்கவும்) இருந்திருக்கவில்லை. ஆனால் இளங்கலை அறிவியல் பயில்வதற்கான குறைந்த பட்ச அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் தோல்வியே வெற்றியின் படிக்கட்டு என்னும் பொன்மொழியையையும் அறிந்திருந்திருந்தார்கள். எனவே 12-ம் வகுப்பில் கிட்டத்தட்ட அடைந்த தோல்வியையே வெற்றியின் படிக்கட்டாக கொண்டு, முழுமையான தகுதி அடிப்படையில், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில், தங்கள் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்புத் தகுதியுடன் பொறியியல் படிக்கலாம் என்னும் ஆர்வத்துடன் 1991-ம் ஆண்டு சேர்ந்து விட்டார்கள். அடுத்ததாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், பொறியியல் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு ஏதேதோ கல்விகளையும் கற்று முடித்து விட்டார்கள். கல்வியின் ஒரு பகுதியாக, சென்னை தொழில் நுட்பக்கழகத்தை சுற்றியிருந்த, பலதரப்பட்ட சினிமா தியேட்டர்களின், மதுபான கடைகளின் வருமானத்தில், அவர்களின் பெற்றோரின் வருமானத்தின் ஒரு பகுதிக்கு தவிர்க்க முடியாத இடத்தையும் பெற்று வைத்திருந்தார்கள். (அன்றைய காலகட்டத்தில் செல்பேசிகள் புழக்கத்தில் இல்லை. எனவே செல்பேசி நிறுவனங்களின் பங்குதாரர்களின் டிவிடன்ட் வருமானத்தில் தங்கள் பெற்றோர் சம்மாதித்தவற்றை இடம் பெறவைக்கும் நல்வாய்பை இழந்தவர்களானார்கள்!!!)

இவ்வாறு ஒருவாறாக, தொழில்நுட்பக்கழகத்திலிருந்து வெளிவந்து, ஒரு தொழிலில் சேர்ந்து அல்லது செய்து, சில பல தொழில்கள் மாறி கிட்டத்தட்ட 19 வருடங்களை, மேட்டுக்குடித்தனத்துடன் (Elitism) கழித்தபின், முன்ஜென்ம (19-வருடங்களுக்கு முந்தைய) ஞாபகத்தைப் பெற்ற சிலர், ஒரு நண்பர்கள் சங்கமத்தை ஏற்பாடு செய்யலாமே என முன் மொழிய, மற்றும் சிலர் வழிமொழிய சங்கமத்திற்கு ஒருவாறாக நாள் குறிக்கப்பட்டது. சிலர் உண்மையாகவே சங்கமிக்கும் ஆர்வத்துடனும், சிலர் எவ்வாறாயினும் இவ்வாறு ஒரு சங்கமம் நடைபெறப்போவதில்லை, எனவே ஆர்வத்தை தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த வித்தியசமும் இருக்கப்போவதில்லை என்னும் எதிர்காலத்தில் பெரும்நம்பிக்கையுடனும் இதில் கலந்து கொள்வதாக உறுதிப்பத்திரம் வாசித்தனர். மற்றும் சிலருக்கு, நண்பர்களாவது நட்பாவது என்னும் உணர்வின் வெளிப்பாடான துறவு நிலையிலோ அல்லது நம்பிக்கை இழந்த நிலையிலோ, எத்தகைய ஆர்வத்தையும் காட்டாதவர்களாகவும் இருக்கும்படி அவர்கள் சுற்றுச்சூழல் அமைந்திருந்ததால் மௌனத்தையே பதிலாக வழங்கியிருந்தனர். ஒருசிலருக்கு இது குறித்த தகவல் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.  

ஒரு வழியாக 2014 - ம் வருடம், ஜூலை 25 மற்றும் 26 தியதிகளில் சங்கமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தொழில் நுட்பம் எவ்வாறு இந்த சந்திப்புக்கு உதவியாக இருந்தது என்று இங்கு கூறுவது தவிர்க்க முடியாததாகும். ஆரம்ப காலத்தில், மின்னஞ்சல் மற்றும் முகநூல்(Facebook) என்னும் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் இந்த சந்திப்புக்காக பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப கால தொழில் நுட்பத்திலேயே தங்கி விட்டவர்கள் மின்னஞ்சல் மூலமும், தொழில் நுட்பத்தில் சற்றே முன்னேறியவர்கள் முகநூல் மூலமும் சந்திப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை தன்முனைப்புடன் செய்துகொண்டிருந்தனர். இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்ப கட்டப்பணிகளை செய்த நண்பர்கள் மின்னஞ்சல் மூலமோ முகநூல் மூலமோ தெரிவித்த\கேட்ட கருத்துகளுக்கு\கேள்விகளுக்கு எவரேனும் பதில் அளித்தால் அது கிட்டத்தட்ட ஒரு குற்றமாகவே கருதப்பட்டது. மேலும் கருத்து கேட்டவர்கள் அல்லது சந்திப்பு குறித்து தகவல் கேட்டவர்கள், அதற்கு பதில் கிடைக்கப்பெற்றால், அதை ஒரு அவமதிப்பாகவே கருதினார்கள். இருந்தாலும், சில தவிர்க்க முடியாத இடங்களில் சில அவமதிப்பாளர்களால் சில பதில்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விதமான குற்றங்களையும் அவமதிப்புகளையும் கடந்து, நண்பர்கள் சங்கமத்துக்கான வேலைகள் தொடர்ந்தன.

சங்கமத்திற்கான அதிவேக(!!??) (அல்லது ஆமை வேக) பணிகளால் கலக்கமடைந்த நண்பன் ஒருவனால், அதை சமனப்படுத்துவதற்காக, புது தொழில் நுட்பம் தன்னிச்சையாக புகுத்தப்பட்டது. செல்பேசி தொழில் நுட்பமான வாட்ஸ்அப் (Whatsapp), சங்கம ஏற்பாடு பணிகளில் அதிரடியாக புகுத்தப்பட்டது. புதிதாக தோற்றத்தை அளிக்கும் எதுவுமே மனிதனுக்கு தற்காலிக ஆர்வத்தை அளித்து அதனுள் அவனை முழுமையாக இழுத்துக்கொள்ளும் என்னும் விளம்பர விதிக்கேற்ப, நண்பர்கள் அனைவரும் வாட்ஸ்அப் -ல் முழுமையாக சங்கமித்தார்கள். (வாட்ஸ்அப் அறிமுக நாளிலிருந்து, அதில் ஆர்வம் இழக்கும் நாளுக்கு முன்பாகவே சங்கமம் நடைபெற்றது, வாட்ஸ்அப் - ன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது) இங்கும் ஒருவன், வாட்ஸ்அப் - ஐ இயக்கும் 'ஸ்மார்ட் செல்பேசி'யை கைக்கொள்ள தான் 'ஸ்மார்ட்' இல்லை எனக்கூறி விலக (வாட்ஸ்அப்  - ல் இருந்து மட்டும்) புது தொழில் நுட்பம் முழுமையான வெற்றியை அடைய தவறி விட்டது!!! ஆனால் புது தொழில் நுட்பம், சங்கமத்தின் மேல் நம்பிகை இழந்து இருந்த சிலருக்கும் புது நம்பிக்கை அளித்து சங்கமத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வைத்தது. அதேநேரத்தில், நடைபெறாது என்னும் அதீத நம்பிக்கையில் இருந்த சிலர் விலகிக்கொள்ளவும் காரணமாக அமைந்தது எனக்கூறவும் வலுவான காரணங்கள் உள்ளதாக நம்பவும் வைத்தது.

ஓரு வழியாக சங்கமத்தின் முந்தைய நாளையும் அடைந்து விட்டோம். வாட்ஸ்அப், கலந்து கொண்ட அனைவரின் தூதுவனாகவும் மாறிவிட்டது - கேட்பதையும், கொடுத்ததையும் அறிவிப்பவனாக! துரதிர்ஷ்டவசமாக வாட்ஸ்அப் - ஐ பயன்படுத்தாமல் இருப்பதை மேட்டுக்குடித்தனமாக, தனக்குத்தானே கருதும் ஒருவனும் இதில் கலந்து கொள்ள நேரிட, அந்த மேட்டுக்குடிமகன், வாட்ஸ்அப்-ஐ புறக்கணிக்கும் பாவனைகளை இரண்டு நாட்களுக்கு வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகவும் நேரிட்டு விட்டது.

அதன் பின் நண்பர்கள் குழாம், சங்கமத்திற்கு புறப்பட்டது, தங்கள் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டது முதல் (அல்லது புறப்படுவதாக நினைத்தது முதல்) சங்கமிக்கும் இடத்தை அடைந்ததுவரை, தாங்கள் முக்கியமான நிகழ்வுகளாக கருதிய ஒவ்வொன்றையும் (உதாரணம்; புறப்பட்டு 10 நிமிடங்கள் ஆகி விட்டது, வந்து கொண்டிருக்கிறேன், 10 நிமிடத்தில் வந்து விடுவேன் (இந்த தகவல் வந்த சேர்வதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்பாக), வளாகத்தின் வாசலில் வந்து விட்டேன், வளாகத்தினுள் வந்து விட்டேன், ரூம் #; xxx -க்கு சென்று கொண்டிருக்கிறேன், இன்னும் பிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகள்.........) வாட்ஸ்அப் - ல் 'அப்டேட்' செய்யப்பட, நண்பர்கள் சங்கமம், அனைவரும் அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்தே தொடங்கி விட்டது.

அதன் பின், நேரடியாக நண்பர்கள் சந்தித்ததும், வாட்ஸ்அப்-ல் சந்தித்ததும், மின்னஞ்சலில் சந்திப்பை பகிர்ந்து கொண்டதும் வரலாற்று உண்மைகள். வாட்ஸ்அப் - லும், முகநூலிலும் பொன்னோவியங்களாலும் (புகைப்படங்கள்) பொன்னெழுத்துக்களாலும் (ஸ்டேட்டஸ் அப்டேட்) வரலாறுகள் பதிக்கப்பட்டன, பதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நண்பர்கள் உண்மையிலேயே சந்தித்தோமா என்பதை இனிதான் உறுதி செய்ய வேண்டும்!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


பின் குறிப்பு; சரியான குறள்பா எடுத்தளித்த நண்பன் ரகுநாத் - க்கு நன்றிகள்.

blog.change@gmail.com

Sunday, July 27, 2014

பொறுப்பேற்றல்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் காரணம்(Cause) நிச்சயமாக இருக்கும். காரணம் இல்லாமல் எந்த நிகழ்வுகளும் நடைபெற முடியாது. எந்த இயக்கமும் அல்லது நிகழ்வுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களின் விளைவுகளே (Effect). அதாவது பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களும், நிகழ்வுகளும் காரண-காரிய (Cause & Effect) விதிகளுக்கு உட்பட்டது. மனித வாழ்க்கைக்கும் இதுவே அடிப்படை - அகவயமான வாழ்க்கைக்கும் கூட!

மனித மனதுக்கு ஆர்வமுடைய நிகழ்வுகள் பெரும்பாலும் மனித சமூகத்தை ஏதேனும் வகையில் பாதிப்பவற்றை சார்ந்து மட்டுமே இருக்கும். மனித மனம் அதைப்பாதிக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணங்களைத்தேடுகிறது. ஆனால் எளிய மனங்களால் எல்லா நிகழ்வுகளுக்குமான காரணங்களை கண்டடைய முடிவதில்லை. ஏனெனில், மனித வாழ்வின் காரண காரிய இயக்கம் மிகப்பெரிய வலைப்பின்னலை போன்றது. நிகழ்வுகளின் காரணங்களைத்தேட, அந்த வலையின் இழைகளை தொடர்ந்து செல்ல வேண்டும். எளிய மனங்களால் அத்தகைய பின்தொடர்தலை நிகழ்த்த முடிவதில்லை. வாழ்வில் நிகழும் மிக எளிய நிகழ்வுகள் கூட, அதன் காரணங்களின் தோற்றுவாயை அறிய முனைந்தால், மிகமிக சிக்கலான வலைப்பின்னலுடன் முற்றிலும் வேறு தளத்தில் உள்ள காரணத்துடன் இணைந்திருக்கலாம். ஆக, எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாக மனித மனம் கண்டடைந்த மூல காரணமே 'விதி'. விதி என்பது காரணங்கள் அனைத்தும் மொத்தமாக பொதிந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் 'கறுப்புப் பெட்டி'. அந்த கறுப்புப் பெட்டியை அறிந்து கொள்ளும் தீவிரம் உள்ளவர்கள் விதியை வெல்லலாம். மற்றவர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் காரணம் விதியே என்னும் காரணத்தை அடைந்து, அந்த காரணத்தை நொந்து, தங்கள் வாழ்க்கையையும் ஒரு அழியா துயரமாக மாற்றிக்கொள்ளலாம்.

விதியை வெல்ல துணிபவர்கள், விதி என்னும் கறுப்புப்பெட்டியை ஆராய்ந்தறிய வேண்டும். அத்தகைய ஆராய்ச்சியின் முதல் சட்டகம், விதி என்பது காரணங்களின் தொகுப்பு என்னும் அறிதல். விதியை வெல்வதற்கான ஆயுதம் பொறுப்பேற்றல்(Assuming Responsibility). ஆம், ஒருவர் தாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் முழுமையாக, தான் மட்டுமே பொறுப்பேற்கும் மன உறுதி உடையவராக இருந்தால், விதி என்னும் கறுப்புப்பெட்டியின் ஒவ்வொரு வலைப்பின்னலையும் வசப்படுத்தலாம். தன் விதியை தாமே கட்டமைப்பவராக உருவெடுக்கலாம்.

நிகழ்வுகள் அல்லது விளைவுகள், ஒற்றைப்படையான காரணங்களாலோ அல்லது பல காரண காரியங்களுடன் பிணைந்த எண்ணற்ற காரணங்களாலோ நடைபெறுகிறது. உதாரணமாக, கல்லால் மரத்தில் இருக்கும் மாங்காயை அடித்தால், மாங்காய் மரத்திலிருந்து விழுகிறது. மாங்காய் விழுவதற்கு கல்லால் அடிபட்டது ஒற்றைப்படையான காரணம். இதை வேறு கோணத்தில் பார்த்தால், மாங்காயை கல்லால் அடித்தவருக்கு, அதற்கான இச்சை மனதில் தோன்ற வேண்டும். அந்த இச்சையை செயலாக மாற்றும் சக்தி அவரிடம் அமைந்திருக்க வேண்டும். அவர் அருகில் மாங்காய் அடிப்பதற்கு தோதான கல் இருக்கவேண்டும். கல்லை சரியான திசையில் எறிய தேவையான சக்தியும் அறிவும் அவருக்கு இருந்தாக வேண்டும். கல் கையிலிருந்து விடுபட்ட பிறகு, மாங்காய் மரத்தில் அசைவற்று இருக்க வேண்டும் - இதில் ஒவ்வொரு 'வேண்டும்' -ம் அந்த நிலையில் இருப்பதற்கு வேறு பல தொடர்புடைய காரணங்களும்! ஒரு மாங்காயை கல்லால் அடிப்பதற்கே இத்தனை காரிய காரண வலைப்பின்னல்!

விதியை வசப்படுத்த துணிபவர்களுக்கு சில தத்துவப் பிரச்சனைகளையும் கடக்க வேண்டியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட விளைவுக்காக செய்யப்படும் செயலில், செயல்புரிபவரின் பங்களிப்பும், அவர் கட்டுக்குள் இல்லாத பிற காரணிககளின் பங்களிப்பும் கலந்திருக்கையில், விளைவுக்கான முழு பொறுப்பையும் எவ்வாறு ஏற்பது? எல்லா கலாச்சாரங்களிலும் இவற்றை விளக்க தோதான தத்துவங்கள் காணக்கிடைக்கலாம். நமது இந்திய கலாச்சாரத்தில், காரண காரிய தத்துவமான சாங்கிய தரிசனம் முதல் மகாதர்மம் என்னும் பௌத்த தரிசனம் வழியாக கடவுள் என்னும் எளிய கருத்துவரை பலவகையான தத்துவங்கள் இந்த பிரச்சனைக்கான தீர்வை நமக்கு அளிக்கலாம். நமது நம்பிக்கை அல்லது அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப இவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தத்துவங்களோ, இந்த 'விதி' என்னும்கறுப்புப் பெட்டியை வெல்ல நமக்கு உதவலாம்.

இந்த தத்துவப் பிரச்சனைகள் நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. நாணயத்தின் மறுபக்கம் செயல்களுக்கு பொறுப்பேற்றல். கல்லால் மாங்காயை அடிக்கும்போது, வேகமான காற்று மாங்காயை அசைத்து, கல்லெறிதலை பயனற்றதாக்கலாம். இப்போது காற்று வீசியதை 'விதி' என்னும் கறுப்புப் பெட்டியின் இயக்கமாக காண்பவர், அந்த மாங்காயை உரிமை கொள்ள இயலாதவராகலாம். ஆனால், கல் குறிதவறியதற்கு காற்றின் வேகத்தை கணிக்கத் தவறிய தானே பொறுப்பு என உணர்பவர், மீண்டும் கவனத்துடன் கல்லெறிந்து மாங்காயை தன்வசப்படுத்தலாம்.

துரதிர்ஷ்டவசமாக மனித சமூகத்தில் பொறுப்பேற்றலை விட பொறுப்பின்மை அல்லது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமே பெரும்பான்மையாக காணக்கிடைக்கிறது. மிகமிக குறைந்தபட்ச மனிதர்களே தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறார்கள். அவர்களாலேயே மனித சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித சமூகம் இன்றுவரை அடைந்த அனைத்து வகையான முன்நகர்தல்களும் தம் செயல்களுக்கு பொறுப்பேற்பவர்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மற்றவர்கள், தங்கள் பொறுப்பின்மையால் எல்லா விதமான முன்நகர்தல்களையும் அழிவை நோக்கிய நகர்தலாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக நன்மையை மட்டும் தரும் எந்த அறிவியல் சாதனைகளும் மனித இனத்தால் இதுவரை எட்டப்படவில்லை. பொறுப்புணர்வுடன் அறிவியல் சாதனைகளை கையாள்வதே அவற்றை நன்மை தரும் சாதனைகளாக மாற்றுகிறது. பெரும்பான்மையான மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையால், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தை ஆகாயத்திற்கு உயர்த்துவதான பாவனையுடன் அதால பாதாளத்திற்கு வழி அமைக்கின்றன - உதாரணம், சுற்று சூழல் பாதிப்புகளை காரணமாக கொண்ட இயற்கை பேரழிவுகள், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களின் மூலம் அதிகரிக்கும் உயிரிழப்புகள், மருத்துவ உலகின் ஒப்பற்ற கண்டுபிடிப்பான எதிர் உயிரி (Anti Biotic) நமது பொறுப்பற்ற உபயோகத்தின் காரணமாக எதிர் உயிரிகளையும் தோற்கடிக்கும் கிருமிகளை தோற்றுவிப்பது...........     

மனித இனம் இதுவரை அடைந்த ஞானத்தின் உச்சத்தை கருத்து வடிவில் தெரிவிக்கும் 'கடவுள்' என்னும் கருத்தையும் இழிவு படுத்தி, நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் நிலையை நியாயப்படுத்துவதற்கான நியாயமாக முன்வைக்கும் அளவுக்கு பொறுப்பின்மை நம்மை கொண்டு வந்து விட்டது. காரண காரிய உறவை புரிந்து கொள்ள இயலாத சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வாழக்கையின் துன்பங்களை கடந்து செல்வதற்கு கடவுள் என்னும் கருத்து எளிமையான வாகனமாக இருக்கலாம். ஆனால் கற்றவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்களும், பொறுப்பேற்றுக் கொள்வதில் இருந்து நழுவுவதற்கு கடவுள் என்னும் கருத்தை காரணமாக கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆம், நம் செயல்களுக்கு நாமே முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளாததுவரை, கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்வது (பிறர் கூறுவதை ஆமோதிப்பதும்) உண்மையில் அவமானகரமான ஒன்று!


மனித வாழ்க்கையின் காரண - காரிய உறவை புரிந்து கொள்ள முடிந்தால், அதன் பின் மனித வாழ்வில் துன்ப உணர்வு என ஒன்று இருக்க வாய்பே இல்லை. காரண காரிய உறவை புரிந்து கொள்ள முடியாத இடைவெளிகளை தத்துவங்களின் தர்க்கத்தாலோ, கடவுள் என்னும் கருத்தின் பெருங்கருணையின் மூலமோ, விதி என்னும் கறுப்புப்பெட்டியின் நுண்ணிய வலைப்பின்னலாலோ நிரப்பிக்கொள்ளலாம் - இடைவெளிகளை அறியமுடியாமையின் புரிதலோடு. அத்தகைய புரிதல், நம் பொறுப்பேற்றலின் எல்லையையும் விரிவாக்கும். 'நான்' என்பதன் எல்லையையும்!

blog.change@gmail.com