Sunday, July 27, 2014

பொறுப்பேற்றல்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் காரணம்(Cause) நிச்சயமாக இருக்கும். காரணம் இல்லாமல் எந்த நிகழ்வுகளும் நடைபெற முடியாது. எந்த இயக்கமும் அல்லது நிகழ்வுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களின் விளைவுகளே (Effect). அதாவது பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களும், நிகழ்வுகளும் காரண-காரிய (Cause & Effect) விதிகளுக்கு உட்பட்டது. மனித வாழ்க்கைக்கும் இதுவே அடிப்படை - அகவயமான வாழ்க்கைக்கும் கூட!

மனித மனதுக்கு ஆர்வமுடைய நிகழ்வுகள் பெரும்பாலும் மனித சமூகத்தை ஏதேனும் வகையில் பாதிப்பவற்றை சார்ந்து மட்டுமே இருக்கும். மனித மனம் அதைப்பாதிக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணங்களைத்தேடுகிறது. ஆனால் எளிய மனங்களால் எல்லா நிகழ்வுகளுக்குமான காரணங்களை கண்டடைய முடிவதில்லை. ஏனெனில், மனித வாழ்வின் காரண காரிய இயக்கம் மிகப்பெரிய வலைப்பின்னலை போன்றது. நிகழ்வுகளின் காரணங்களைத்தேட, அந்த வலையின் இழைகளை தொடர்ந்து செல்ல வேண்டும். எளிய மனங்களால் அத்தகைய பின்தொடர்தலை நிகழ்த்த முடிவதில்லை. வாழ்வில் நிகழும் மிக எளிய நிகழ்வுகள் கூட, அதன் காரணங்களின் தோற்றுவாயை அறிய முனைந்தால், மிகமிக சிக்கலான வலைப்பின்னலுடன் முற்றிலும் வேறு தளத்தில் உள்ள காரணத்துடன் இணைந்திருக்கலாம். ஆக, எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாக மனித மனம் கண்டடைந்த மூல காரணமே 'விதி'. விதி என்பது காரணங்கள் அனைத்தும் மொத்தமாக பொதிந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் 'கறுப்புப் பெட்டி'. அந்த கறுப்புப் பெட்டியை அறிந்து கொள்ளும் தீவிரம் உள்ளவர்கள் விதியை வெல்லலாம். மற்றவர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் காரணம் விதியே என்னும் காரணத்தை அடைந்து, அந்த காரணத்தை நொந்து, தங்கள் வாழ்க்கையையும் ஒரு அழியா துயரமாக மாற்றிக்கொள்ளலாம்.

விதியை வெல்ல துணிபவர்கள், விதி என்னும் கறுப்புப்பெட்டியை ஆராய்ந்தறிய வேண்டும். அத்தகைய ஆராய்ச்சியின் முதல் சட்டகம், விதி என்பது காரணங்களின் தொகுப்பு என்னும் அறிதல். விதியை வெல்வதற்கான ஆயுதம் பொறுப்பேற்றல்(Assuming Responsibility). ஆம், ஒருவர் தாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் முழுமையாக, தான் மட்டுமே பொறுப்பேற்கும் மன உறுதி உடையவராக இருந்தால், விதி என்னும் கறுப்புப்பெட்டியின் ஒவ்வொரு வலைப்பின்னலையும் வசப்படுத்தலாம். தன் விதியை தாமே கட்டமைப்பவராக உருவெடுக்கலாம்.

நிகழ்வுகள் அல்லது விளைவுகள், ஒற்றைப்படையான காரணங்களாலோ அல்லது பல காரண காரியங்களுடன் பிணைந்த எண்ணற்ற காரணங்களாலோ நடைபெறுகிறது. உதாரணமாக, கல்லால் மரத்தில் இருக்கும் மாங்காயை அடித்தால், மாங்காய் மரத்திலிருந்து விழுகிறது. மாங்காய் விழுவதற்கு கல்லால் அடிபட்டது ஒற்றைப்படையான காரணம். இதை வேறு கோணத்தில் பார்த்தால், மாங்காயை கல்லால் அடித்தவருக்கு, அதற்கான இச்சை மனதில் தோன்ற வேண்டும். அந்த இச்சையை செயலாக மாற்றும் சக்தி அவரிடம் அமைந்திருக்க வேண்டும். அவர் அருகில் மாங்காய் அடிப்பதற்கு தோதான கல் இருக்கவேண்டும். கல்லை சரியான திசையில் எறிய தேவையான சக்தியும் அறிவும் அவருக்கு இருந்தாக வேண்டும். கல் கையிலிருந்து விடுபட்ட பிறகு, மாங்காய் மரத்தில் அசைவற்று இருக்க வேண்டும் - இதில் ஒவ்வொரு 'வேண்டும்' -ம் அந்த நிலையில் இருப்பதற்கு வேறு பல தொடர்புடைய காரணங்களும்! ஒரு மாங்காயை கல்லால் அடிப்பதற்கே இத்தனை காரிய காரண வலைப்பின்னல்!

விதியை வசப்படுத்த துணிபவர்களுக்கு சில தத்துவப் பிரச்சனைகளையும் கடக்க வேண்டியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட விளைவுக்காக செய்யப்படும் செயலில், செயல்புரிபவரின் பங்களிப்பும், அவர் கட்டுக்குள் இல்லாத பிற காரணிககளின் பங்களிப்பும் கலந்திருக்கையில், விளைவுக்கான முழு பொறுப்பையும் எவ்வாறு ஏற்பது? எல்லா கலாச்சாரங்களிலும் இவற்றை விளக்க தோதான தத்துவங்கள் காணக்கிடைக்கலாம். நமது இந்திய கலாச்சாரத்தில், காரண காரிய தத்துவமான சாங்கிய தரிசனம் முதல் மகாதர்மம் என்னும் பௌத்த தரிசனம் வழியாக கடவுள் என்னும் எளிய கருத்துவரை பலவகையான தத்துவங்கள் இந்த பிரச்சனைக்கான தீர்வை நமக்கு அளிக்கலாம். நமது நம்பிக்கை அல்லது அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப இவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தத்துவங்களோ, இந்த 'விதி' என்னும்கறுப்புப் பெட்டியை வெல்ல நமக்கு உதவலாம்.

இந்த தத்துவப் பிரச்சனைகள் நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. நாணயத்தின் மறுபக்கம் செயல்களுக்கு பொறுப்பேற்றல். கல்லால் மாங்காயை அடிக்கும்போது, வேகமான காற்று மாங்காயை அசைத்து, கல்லெறிதலை பயனற்றதாக்கலாம். இப்போது காற்று வீசியதை 'விதி' என்னும் கறுப்புப் பெட்டியின் இயக்கமாக காண்பவர், அந்த மாங்காயை உரிமை கொள்ள இயலாதவராகலாம். ஆனால், கல் குறிதவறியதற்கு காற்றின் வேகத்தை கணிக்கத் தவறிய தானே பொறுப்பு என உணர்பவர், மீண்டும் கவனத்துடன் கல்லெறிந்து மாங்காயை தன்வசப்படுத்தலாம்.

துரதிர்ஷ்டவசமாக மனித சமூகத்தில் பொறுப்பேற்றலை விட பொறுப்பின்மை அல்லது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமே பெரும்பான்மையாக காணக்கிடைக்கிறது. மிகமிக குறைந்தபட்ச மனிதர்களே தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறார்கள். அவர்களாலேயே மனித சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித சமூகம் இன்றுவரை அடைந்த அனைத்து வகையான முன்நகர்தல்களும் தம் செயல்களுக்கு பொறுப்பேற்பவர்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மற்றவர்கள், தங்கள் பொறுப்பின்மையால் எல்லா விதமான முன்நகர்தல்களையும் அழிவை நோக்கிய நகர்தலாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக நன்மையை மட்டும் தரும் எந்த அறிவியல் சாதனைகளும் மனித இனத்தால் இதுவரை எட்டப்படவில்லை. பொறுப்புணர்வுடன் அறிவியல் சாதனைகளை கையாள்வதே அவற்றை நன்மை தரும் சாதனைகளாக மாற்றுகிறது. பெரும்பான்மையான மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையால், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தை ஆகாயத்திற்கு உயர்த்துவதான பாவனையுடன் அதால பாதாளத்திற்கு வழி அமைக்கின்றன - உதாரணம், சுற்று சூழல் பாதிப்புகளை காரணமாக கொண்ட இயற்கை பேரழிவுகள், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களின் மூலம் அதிகரிக்கும் உயிரிழப்புகள், மருத்துவ உலகின் ஒப்பற்ற கண்டுபிடிப்பான எதிர் உயிரி (Anti Biotic) நமது பொறுப்பற்ற உபயோகத்தின் காரணமாக எதிர் உயிரிகளையும் தோற்கடிக்கும் கிருமிகளை தோற்றுவிப்பது...........     

மனித இனம் இதுவரை அடைந்த ஞானத்தின் உச்சத்தை கருத்து வடிவில் தெரிவிக்கும் 'கடவுள்' என்னும் கருத்தையும் இழிவு படுத்தி, நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் நிலையை நியாயப்படுத்துவதற்கான நியாயமாக முன்வைக்கும் அளவுக்கு பொறுப்பின்மை நம்மை கொண்டு வந்து விட்டது. காரண காரிய உறவை புரிந்து கொள்ள இயலாத சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வாழக்கையின் துன்பங்களை கடந்து செல்வதற்கு கடவுள் என்னும் கருத்து எளிமையான வாகனமாக இருக்கலாம். ஆனால் கற்றவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்களும், பொறுப்பேற்றுக் கொள்வதில் இருந்து நழுவுவதற்கு கடவுள் என்னும் கருத்தை காரணமாக கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆம், நம் செயல்களுக்கு நாமே முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளாததுவரை, கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்வது (பிறர் கூறுவதை ஆமோதிப்பதும்) உண்மையில் அவமானகரமான ஒன்று!


மனித வாழ்க்கையின் காரண - காரிய உறவை புரிந்து கொள்ள முடிந்தால், அதன் பின் மனித வாழ்வில் துன்ப உணர்வு என ஒன்று இருக்க வாய்பே இல்லை. காரண காரிய உறவை புரிந்து கொள்ள முடியாத இடைவெளிகளை தத்துவங்களின் தர்க்கத்தாலோ, கடவுள் என்னும் கருத்தின் பெருங்கருணையின் மூலமோ, விதி என்னும் கறுப்புப்பெட்டியின் நுண்ணிய வலைப்பின்னலாலோ நிரப்பிக்கொள்ளலாம் - இடைவெளிகளை அறியமுடியாமையின் புரிதலோடு. அத்தகைய புரிதல், நம் பொறுப்பேற்றலின் எல்லையையும் விரிவாக்கும். 'நான்' என்பதன் எல்லையையும்!

blog.change@gmail.com

No comments: