இந்திய ஞான தரிசனங்களில்
ஒன்றான 'யோகம்' பதாஞ்லி முனிவர் அவர்களால் தொகுக்கப்பட்டு, பதாஞ்சலி யோக சூத்திரமாக
அறியப்படுகிறது. இந்த யோக சூத்திரம், நான்கு பாகங்களையும், ஒவ்வொரு பாகத்திலும் கிட்டத்தட்ட
ஐம்பது சூத்திரங்களையும் கொண்டது. ' 'விக்கி பீடியா' மற்றும் சில இணைய பக்கங்கள் வழியாக
செய்த ஆராய்ச்சியின்(!!??) விளைவாக, பதாஞ்சலி முனிவரின் காலம் சுமார் 2400 ஆண்டுகளுக்கு முந்தையதாக
இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரத்தின் மூலம், மனிதன் அவன் இருப்பின்
உச்ச நிலையான கைவல்ய (முழுமையான விடுதலை) நிலையை அடைவதற்கான வழிமுறைகள் உலகுக்கு தொகுத்து
அளித்தவர் பதாஞ்சலி.
யோக சூத்திரத்தின் முதல்
பாகம் 'சமாதி பாதம்' எனப்படுகிறது. அதன் ஐந்தாவது மற்றும் ஆறாவது சூத்திரங்களில் இவ்வாறு
கூறப்பட்டுள்ளது..
'வருத்யஹ பஞ்சத்யஹ க்லிஷ்ட அக்லிஷ்ட'
- மனமயக்கங்கள் ஐந்து வகைப்படும்.
அவை மன சஞ்சலங்களை\துயரங்களை அளிப்பவையாகவோ,
அல்லாதவையாகவோ இருக்கலாம்.
'ப்ரம்மாண, விபர்யாய, விகல்ப,
நித்ரா, ஸ்ம்ருத்யஹ'
- அவை உறுதி செய்யப்பட்டு
நம்பிக்கைகளாக ஆனவை (அல்லது முன்னறிவு), தவறான அறிதல்கள், கருத்துகள், விழிப்பின்மை
மற்றும் நினைவுகள் என்பவை ஆகும்.
இங்குதான் ஒரு இடைச்சொருகல்
அவசியப்படலாம். பதாஞ்சலி முனி, 2400 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் அடைந்திருக்கும்
தொழில் நுட்பத்தை பற்றி எவ்விதமான ஞானத்தையும் அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்
தொழில்நுட்பம் என்பதே கடந்த 200 ஆண்டுகளில்தான் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. அவர்
காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கணக்கிட்டாலும்,
இன்று மனிதன் அடைந்திருக்கும் தொழில்நுட்பத்தை அவரால் அனுமானம் செய்திருக்க முடியாதுதான்.
எனவே அவர் தொழில்நுட்பம் உருவாக்கும் மனமயக்கங்களை இங்கு கருத்தில் கொண்டிருக்க சாத்தியமில்லை.
ஆம், தொழில் நுட்பம் இன்று,
அதை உபயோகப்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்களை மன மயக்கத்தில் தள்ளுகிறது என்றே தோன்றுகிறது.
மனிதர்களில் பெரும்பாலானவர்கள், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பீடு
செய்தால், மிகவும் வசதியான, எளிதான, அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதில் எந்த
சந்தேகங்களும் வர வாய்ப்பில்லை. இந்த வாழ்க்கை வசதிகளும் அமைதியும், ஒரு முழுமை நோக்கில்,
மனித வாழ்க்கையை எளிமையாக்கியிருக்க வேண்டும், ஆனந்தமயமானதாக மாற்றியிருக்க வேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வாழ்ந்து அனுபவிக்கும் எளிமையை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடந்ததாக தோன்றவில்லை. முழுமை நோக்கில், பல தளங்களில் எளிமையும் அமைதியும்
மனித சமூகத்திற்கு தொழில் நுட்பம் வழங்கியிருந்தாலும், முற்றிலும் வேறு தளங்களில் வாழ்க்கை
மிகமிக கடினமானதாகவும், அமைதியற்றதாகவும் மாறியுள்ளது, மாறிக்கொண்டிருக்கிறது என்றே
தோன்றுகிறது. ஒருவேளை இதுவும் ஒரு தோற்றப்பிழையோ?
என் பார்வையில், தொழில்நுட்பம்
பல தளங்களில் மனித வாழ்வின் பல்வேறு சிடுக்குகளை அவிழ்க்க உதவிக்கொண்டிருந்தாலும்,
அன்றாட தளத்தில், அதை நுகர்பவர்களின் அறிவுக்கு
எட்டாமலே, வாழ்க்கையை கடினமாக்கியிருக்கிறது, உணர்திறனை மழுங்கடித்திருக்கிறது. இன்றைய
நிலையில், புலன்களுக்கு மிக கூரிய உணர்வு தேவை இல்லைதான். புலன்களின் நுண்ணுணர்வுகளை
தொழில்நுட்பம் சாதாரணமாகவே உணரும்தன்மையுடையதாக மாற்றி நமக்களிக்கிறது. எனவே புலன்களின்
நுண்ணுணர்வு இல்லாமையை ஒரு குறையாக கருத தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், புலன்களின்
நுண்ணுணர்வின் இழப்பினுடன், மனம் சார்ந்த நுண்ணுணர்வுகளும் மழுங்கி விடுகின்றன. மனம்
சார்ந்த நுண்ணுணர்வை இழந்த ஒருவரால், வாழ்க்கை அளிக்கும் அளவற்ற இன்பங்களின் துளியை
கூட அனுபவிக்க முடியாது. மனம் சார்ந்த நுண்ணுர்வை இழந்த ஒருவருக்கு வாழ்க்கை என்பது
பிறத்தலில் தொடங்கி, விலங்கு போல உண்ணவும், புணரவும் செய்து, தலை முறைகளை உருவாக்கி
பின்னர் இறத்தலில் முடிந்து விடுகிறது. பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் நடுவில் உள்ள
இன்பங்களை, நுண்ணுர்வை இழந்ததன் மூலம், என்னவென்றே அறியாமல் தொழில்நுட்பம் அளிக்கும்
நுகர்வையே இன்பம் என மயங்கி, அந்த மயக்கம் தெளிவதற்கு முன் இறத்தலையும் அடைந்து விடுகிறார்.
இங்கு இன்பம் என்றிருப்பது
எது என்பதை மிகப்பொதுவாக கூற முடியாதுதான். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது.
தன் இயல்பை அறியும் நுண்ணுணர்வினால் மட்டுமே தனக்கான இன்பம் என்ன என்பதை ஒருவரால் அறிய
முடியலாம் - மனித இயல்பை அறிவதற்கான தொழில்நுட்பம் இன்னும் சந்தைக்கு வரவில்லை!
தொழில்நுட்பம் உருவாக்கும்
மனமயக்கங்கள் எல்லை இல்லாமல் விரிந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாக தகவல் தொழில்நுட்பம்.
இதன் மூலம், உலகின் எந்த பகுதியில் உள்ள தகவல்களும் நம் மூளையினுள், நாம் விரும்பினாலும்
இல்லாவிட்டாலும், வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. மேம்போக்காக பார்த்தால் இது ஒரு
நல்ல விஷயம்தான். தகவல்கள் சாதாரண மக்களுக்கும் உடனடியாக கிடைப்பதன் மூலம், பல எதிர்மறை
விஷயங்களை நம்மைவிட்டு விலக்கவும் முடிகிறது. அதன் மறுபக்கத்தில், இத்தகைய தகவல்களின்
குவிப்பில் நமக்கு தேவையானது எது தேவையற்றது எது என்னும் தெரிதல் மிக அவசியமானது. அத்தகைய
தெரிதல் இல்லாத பட்சத்தில் மனித மூளையே ஒரு தகவல்களின் குப்பைக் கிடங்காகும் வாய்ப்புள்ளது.
ஆம் இன்றைய நிலையில் நம் மனம் தகவல்களின் குப்பைகளால் நிறைக்கப்பட்டுள்ளது. எனில் மனமயக்கத்திற்கு
வேறு காரணங்களும் தேட வேண்டுமோ? இந்த குப்பைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளே கூறவே, யோக
சூத்திரத்தில் இன்னொரு பாகம் (பாதம்) சேர்க்க வேண்டியிருக்கலாம்.
போதுமான அளவு சமஸ்கிருத
மொழி அறிவும், கவி மனமும் உடைய ஒருவர் யோக சூத்திரத்தின் இடைச்சொருகலுக்காக முயலலாம்.
இங்கு இடைச்சொருகல் என்று கூறுவது, யோக சூத்திரத்தின் மேன்மையை எந்த வகையிலும் குறைத்து
மதிப்பிட்டதன் காரணத்தால் அல்ல. மாறாக அதன் மேன்மைத் தன்மையை உணர்ந்ததன் காரணமாகவே
இந்த எண்ணம்! யோக சூத்திரம் என்பதே 'யோகம்' என்னும் ஞானதரிசனத்தின் தொகுப்பு மட்டுமே.
ஆனால் தொழில்நுட்பம் ஏற்படுத்தும்
மனமயக்கங்களும், பதாஞ்சலி முனி கூறிய ஐந்து மனமயக்கங்களுக்குள்ளாகவே அடங்கி விடுமோ?
இருக்கலாம், ஆனாலும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
blog.change@gmail.com
No comments:
Post a Comment