Saturday, July 2, 2016

குமரி மாவட்டத்தில் இன்றைய கல்வி

சிறகு இணையப்பத்திரிகையில் 25-06-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

கடந்த 2011-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்களின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மொத்த மக்கள்தொகையில் 91.6% ஆகும். இது சென்னையை விட அதிகமாகும். சென்னையில் இது 90.18% ஆக உள்ளது. உண்மையில் குமரிமாவட்ட மக்கள் பெருமைப்படும் செய்தி. குமரி மாவட்டத்திற்கு இது வரமா சாபமா? பல தளங்களில் இது வரமாகவே இருக்கக் கூடும். ஆனாலும் தற்போது கல்வி பயிலும் மாணவர் சமூகத்திற்கு இது சாபமாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை வெறும் காட்சிப்பிழையோ?

சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலேயே, குமரி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் வெற்றி பெறும் பெரும்பாலான அனைவரும், பெண்கள் உட்பட, மேல்நிலைப் பள்ளிப்படிப்புக்கு செல்வார்கள். மேல்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கு செல்வார்கள். இடையில் கல்வியை விட்டுவிடுபவர்கள் மிகக் குறைவானவர்களே. அன்று இங்கு இருந்த பெரும்பாலான பள்ளிகளும்  கல்லூரிகளும் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளும் கல்லூரிகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில தனியார் பள்ளிகள் மட்டும்தான் இருந்தன.

இன்று ஒவ்வொரு குறுநகரங்களுக்கும் சில தனியார் பள்ளிகள் கடைவிரித்திருக்கின்றன. தனியார் பள்ளிகள் இல்லாத கிராமங்களும் இங்கு இல்லை என்றே சொல்லலாம். பள்ளி தொடங்கும் மாதங்களில் ஒவ்வொரு பள்ளி வாசல்களிலும், அங்கு படித்த(!) மாணவர்களின் படங்களுடனும், இறுதித் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடனும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வரவேற்கின்றன.
சில வருடங்களுக்கு முன் தமிழக கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்ட பின், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.ஸி.எஸ்.இ. என அடைமொழி இடப்பட்ட பள்ளிகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இன்னும் அந்தக் குழுமங்களிலிருந்து அனுமதியைப் பெறவில்லை. இருந்தாலும் முதல் தொகுதி மாணவர்கள் பத்தாம் வகுப்பை தொடுவதற்கு முன் அனுமதி பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையுடன் இவற்றைத் தொடங்கியிருக்கின்றனர். இவை தவிர "இன்டர் நேஷனல்", "குளோபல்" என்னும் அடைமொழிகளுடனும் சில பள்ளிகள் தோன்றியிருக்கின்றன. அவை எந்த குழுமத்தைப் (Board) பின்பற்றுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தெரியவில்லை. இந்த வகை பள்ளிகளில் பொதுவான ஒன்று, முதல் வகுப்பில் சேருவதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் அவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.

இதில் பிரச்சினை ஒன்றும் இல்லைதான். வருமானம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகள் மேல் இடப்படும் முதலீடுதான் சிறந்த முதலீடு என கருதுபவர்கள் குழந்தைகளை அங்கு சேர்த்துவிடலாம். முதலீடு லாபத்தையும் ஈட்டலாம், இழப்பையும் ஏற்படுத்தலாம் - கச்சாப் பொருளின் தன்மையைப் பொறுத்தது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதமான காலநிலையை கொண்டிருக்கும் குமரிமாவட்டத்திலேயே குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் கொண்ட பள்ளி என்னும் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. வியாபாரத்தில் தங்கள் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என விளம்பரப்படுத்துகிறார்கள். வியாபாரப் போட்டி!

இந்த வியாபாரப்போட்டி, அதில் தங்கள் குழந்தைகளை முதலீடு செய்யும் பெற்றோர்கள், அந்தப் போட்டிகளிலும் முதலீடுகளிலும் அவர்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வி ஆகியவலை குறித்து கவலை ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம்! ஆனால் அங்கு முதலீடாக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் நிலைதான் கவலையளிக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்பதால் மட்டுமல்லாமல் நாளைய சமூகம் என்பதாலும்.

ஒரு மனிதனின் ஆளுமை, அவன் பிறந்தது முதல் சேகரிக்கும் தகவல்களாலும், பெறும் அனுபங்களாலும், அந்த தகவல்களையும் அனுபங்களையும் பயன்படுத்தும் நுண்ணறிவாலும் உருவாக்கப்படுகிறது. ஆக மனித ஆளுமை உருவாக்கத்தில் இந்த மூன்று காரணிகளும் முக்கியமானவை. இவற்றில் ஒன்றை ஏதேனும் திசையில் கட்டுப்படுத்தினாலோ அல்லது தூண்டினாலோ, அந்த மனிதனின் ஆளுமை அந்த குறிப்பிட்ட திசையில் அழிவோ ஆக்கமோ அடையலாம். ஆனால் ஒரே தகவல் கூட வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது அனுபவம், ஒரு தனிமனிதனிடம் எத்தகைய ஆளுமை விளைவை ஏற்படுத்தும் என்பதை எளிதில் வரையறுக்க முடியாது - அது அந்த மனிதனின் உருவாகிவிட்ட ஆளுமையைப் பொறுத்தது.

இந்த நிலையில் வியாபாரப் போட்டிக்காக, ஒரே தொனியில் ஒரே திசையில் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வி, அவர்கள் ஆளுமையில் எந்த ஆக்கப்பூர்வமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. கல்வி ஈசல்கள் தோன்றுவதற்கு முன் இருந்த கல்வி முறை, கல்விக்கு வெளியே அவர்களுக்கு பிற தகவல்களையும் அனுபங்களையும் பெற ஏராளமான நேரத்தை அனுமதித்தது. இன்றைய கல்வியின் முழுமுதற் பிரச்சினை இந்த நேரமின்மைதான். ஒருவேளை நேரமிருந்தாலும், தொலைக்காட்சி ஊடகங்கள், அவற்றின் மேல் கட்டுப்பாடு இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளின் முழுநேரத்தையும் எடுத்து விடுகிறது. ஆக தொலைக்காட்சி ஊடகங்களின் மேல் சுயகட்டுப்பாடு இல்லாத பெற்றோரை தங்கள் தீவினையாகப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நேரமும் அவர்கள் ஆளுமையை அழிக்கவே செய்யும். ஆக, அந்தக் குழந்தைகளையும் இந்தக் கட்டுரை பொருட்படுத்தவில்லை.

முதலாவதாக இந்தப் பள்ளிகளின் சீருடைகளும், ஷூ. கழுத்துப் பட்டை (Tie), ஓவர் கோட்  போன்ற உடைகள் மாணவர்களின் சுதந்திரத்தையும் எளிமையையும் பறித்து உடலளவில் இறுக்கமாக மாற்றிவிடுகிறது. உடல் அடையும் எதுவும் மனதிற்கும் உடனடியாக கடத்தப்படும். இது முதல் நிலையிலேய அவர்களின் ஆளுமை இறுக்கமாக்கப்பட்டு பன்முகத் தன்மையை இழக்க வைக்கிறது. அந்தச் சூழல், அந்த இளவயதிலேயே ஒரு முனைப்படுத்தப்படுகிறது. இயல்பாக அந்த திசையில் ஆளுமையை வளர்க்க முடிந்த குழந்தைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் பிறழ்வு பட்ட ஆளுமையின் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியதுதான் -  ஏதேனும் ஒரு நிலையில் அதை முறித்து விட்டு தங்கள் திசையை தாங்களே தீர்மானிக்கும் துணிவு உள்ளவர்களைத் தவிர!

எட்டாம் வகுப்புவரை, பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையில்லை. அவை வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் எட்டாம் வகுப்பு முடித்தபின் குமரிமாவட்டத்தில் உள்ள எந்த தனியார் பள்ளி மாணவர்களும் தினம்தோறும் குறைந்த பட்டசம் இரண்டு மணி நேரம் அதிகமாக பள்ளியில் இருக்க வேண்டும் - காலையில் ஒரு மணிநேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பிந்தியும். ஒருசில புகழ்பெற்ற(?!) பள்ளிகளில் தினம்தோறும் காலை ஆறு மணிமுதல் இரவு எட்டுமணிவரை பள்ளியில் இருக்க வேண்டும். வெகு சில பள்ளிகள் தவிர மற்ற அனைத்துப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாதி நாட்களுக்குப் பின் பத்தாம் வகுப்பு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். அதன் பின் ஒன்றரை வருடம் அதையே மீண்டும் மீண்டும், வெறும் தகவல்களாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிலும் இதே போல. இன்னும் சில பள்ளிகளில் வெறும் மூன்று மாதங்கள் மட்டும்தான் பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் போதிக்கப்படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பதினெட்டு மாதங்கள் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டும். இவை அனைத்தின் உச்சமாக, அறுதி பெரும்பான்மையான பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பதில்லை. வெயில் எவ்வளவு சுட்டெரித்தாலும், மின் தடைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் பெரும்பாலான பள்ளிகளில் எட்டு மணிநேரமும் சில பள்ளிகளில் பத்து மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் அரசாணைகள் பள்ளிகளால் பொருட்படுத்தப் படுவதில்லை.  அரசாங்கத்தின் கல்வித் துறை அதிகாரிகளாலும் பொருட்படுத்தப் படுவதில்லை. இவ்வாறு வேட்டையாடப்படும் மாணவர்களால், அவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், என்ன உயர்கல்விகள் கற்றாலும், சமூகத்திற்கு என்ன பயன்?

தனியார் பள்ளிகளால் பரவலாக்கப்பட்ட இந்த முறை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரவி விட்டது. ஆக எந்த பெற்றோராவது அல்லது மாணவர்களாவது இயல்பான கல்விதான் தேவை என்றால் குமரி மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. வெகு சில அரசுப் பள்ளிகள் தவிர மற்றவை அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன. ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் எளிதில் நிரப்பப் படுவதில்லை. ஆசிரியர்களுக்கும்,  சில விதிவிலக்குகளைத் தவிர, தாங்கள் ஆசிரியர்கள் என்னும் உணர்வு இல்லை. இந்த நிலையில் எவ்வாறு அரசுப் பள்ளிகளை நம்புவது?

சுதந்திரமான, இயல்பான கல்வியை விரும்பும் மாணவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் இயல்பாக வளர வேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கும் இன்று குமரி மாவட்டத்தில் வாய்ப்புகள் இல்லை. இதை கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் புறந்தள்ளினால், தமிழகம் முழுவதும் மிக விரைவில் இது பரவி விடும்.


இந்த நிலைக்கு வியாபார முனைப்புடன் இருக்கும் தனியார் பள்ளிகளை குறைகூறுவது சரியென்று தோன்றவில்லை. அவை தனியார் நிறுவனங்கள், அவற்றுக்கான நோக்கத்தை அவை நிறைவேற்றுகின்றன. அவற்றின் வியாபார யுக்திகளுக்கு அடிபணியும் சுய சிந்தனை இல்லாத சமூகம்தான் இந்த நிலைக்கு காரணம் என்று தோன்றுகிறது. அந்த சமூகத்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளும் பிழைப்புக்கு பயனில்லை என்று நிலைநிறுத்திய கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும்தான் காரணம் என்று தோன்றுகிறது. எந்தத் தொழிலுக்காவது திறமை பெற்றவர்கள், தேவைப்படும்போது ஆங்கிலம் கற்றுக்கொள்வது ஒன்றும் அத்தனை கடினமானது இல்லை என்பதை சமூகத்துக்கு உணர்த்தத் தவறிய கற்றவர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. சமூகத்தின் மேல் ஏற்றப்படும் இத்தகைய கருத்தாக்கங்களை அரைகுறையாக புரிந்து கொள்ளும் படிப்பறிவு அதிகம் உள்ள சமூகம் கூட காரணமாக இருக்கலாம்.

blog.change@gmail.com

Saturday, June 18, 2016

எதற்காக எழுதுகிறேன்?

பதாகை இணையப் பத்திரிகையில் 22-05-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

இதற்கு என்ன பதில் எழுதுவது? எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல..... எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக, எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!

எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன்.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து 2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில் சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும் அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது செயல்பட்டுக்கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது மனக்கிலேசம் அடைந்தால், ''ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம் நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது. மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்''  என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின் மீண்டும் உறைந்திருத்தல்..

இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக் குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ''குழுமத்தில் நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக, என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்'' என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச் சென்று விட்டது.

ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது. எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொருபுறத்திலிருந்தும் நுண்மையாக மாற்றத் தொடங்கியது.

இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என் சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான பொறுப்புணர்வையும் ஆர்வத்தைதையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம்(Blog) ஒன்றைத் தொடங்கி எழுதியவற்றை அவ்வப்போது  அதில் பதித்து வந்தேன். எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது. அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?


சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக அனுப்பி வைத்தேன். 'சிறகு' இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர் வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் 'சொல்வனம்' சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர வைக்கப் பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான் எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.

blog.change@gmail.com

Monday, May 9, 2016

நுழைவுத் தேர்வுகள்

07-05-2016 அன்று சிறகு இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் - GMAT, GATE SAT போன்ற தேர்வுகளைப் போல.  பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.

அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம் பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள் இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்தமற்ற கூச்சல்களை எழுப்பி பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது? கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா? அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

நகரத்தை போலிச்செய்ய முயலும் சில கிராமத்து உயர்\நடுத்தர குடும்பங்களில் உள்ள மாணவர்களைத் தவிர்த்து விட்டு ஒரே மதிப்பெண் வாங்கும் ஒரு கிராமத்து மாணவனையும் நகரத்து மாணவனையும் ஒப்பிட்டால், கிராமத்து மாணவன் அதிக நுண்ணறிவுடன் இருப்பான். காரணம் எளிமையானதுதான். சூழலை அவதானிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் நகரத்து மாணவனை விட கிராமத்து மாணவனுக்கு அதிகமாக இருக்கும். கல்வி என்பது சூழலை அறிந்து கொள்ளும் இயக்கம்தானே!

நுழைவுத்தேர்வுகள் இல்லாமல் ஆகிவிட்ட கடந்த பத்து ஆண்டுகளில், மதிப்பெண்களை வாங்க வைப்பதற்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் நுண்ணறிவையும் இல்லாமல் செய்து விடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வெளிவரும் மாணவர்களில் 70% பேர் பொறியியல் துறையில் வேலை செய்வதற்கு தகுதியில்லாதவர்களாக வருகிறார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மீதி 30% பேர் கூட, அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் வேலைக்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்களா அல்லது பள்ளிக் கல்வி முறையின் நுண்ணறிவை அழிக்கும் இயக்கத்தில் தங்கள் நுண்ணறிவின் சிறுபகுதியையாவது இழக்காமல் பாதுகாத்ததன் மூலம் தகுதி பெறுகிறார்களா? மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் இத்தகைய புள்ளிவிபரங்கள் இன்னும் வரவில்லை.

பல பள்ளிகளில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள், வகுப்புத் தொடங்கிய பின் சில மாதங்கள் மட்டும்தான் நடத்தப்படும். அதன் பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 12-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள். அறிவியல் பாடங்களைப் புரிந்துக் கொள்வதற்கு அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். 11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படிக்காமல் செல்லும் மாணவன், 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒன்றரை வருடங்களில் அவற்றைத் தகவல்களாக பெரும்பாலான மாணவர்களால் மனனம் செய்துவிட முடியலாம். மனனம் செய்விக்கப்படுகிறார்கள். அதாவது மாணவர்களின் நினைவு சக்தியையும், நினைவிலிருந்து எடுத்து வார்த்தை பிறழாமல் விடைத்தாளில் எழுதும் திறனையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மருத்துவர்களும் பொறியாளர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12-ம் வகுப்பில் அடிப்படைகளைப் பயிலாமல் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புகளில் எவற்றையும் புரிந்துக் கொள்ள முடியாது. மனனம் செய்யும் பயிற்சியில் நுண்ணுணர்வை முழுவதும் இழக்காத வெகு சில மாணவர்களால் மட்டும்தான், மேற்கல்வியை கல்வியாக அணுக முடியும்.

சரியாக வடிவமைக்கப்படும் நுழைவுத் தேர்வுகள், கற்பவற்றிலிருந்து மாணவர்கள் எவ்வளவு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மேற்கல்விக்கு பள்ளிகளில் படித்தவைதான் அடிப்படையாக அமைகின்றன. நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில் புரிந்து கொண்டவைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மனனம் செய்யும் திறமை மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும் நினைவு சக்தி குறைவாக உள்ள, ஆனால் நுண்ணறிவு மிகுந்த, கற்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் முழு மதிப்பெண்கள் வாங்க முடியாமல் மேற்படிப்பு சேரமுடியாமல் இருக்கிறார்கள். பல புகழ் பெற்ற அறிவியலாளர்கள் நினைவாற்றல் குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்வுத்தாள்கள் மதிப்பிடும் முறையும் விசித்திரமானது. கேள்விகளுக்கான விடைகள், Key Words எனப்படும் முக்கியமான வார்த்தைகளுடன் தேர்வுத்துறையால், மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதுவே மதிப்பெண் வழங்குவதற்கான அளவுகோல். அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்களின் விடைத்தாள் ஒப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வார்த்தை பிசகாமல், அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்கள் எழுதியிருக்கும் விடைகள் ஒத்திருக்குமானால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். சரியான விடைகளை வேறு வாக்கியங்களில், வேறு வார்த்தைகளில், வேறு விதமாக எழுதியிருந்தால், சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இது விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறக்கேட்ட தகவல். மற்ற மாநிலங்களில் இவ்வாறா என்பது தெரியவில்லை.

இங்கு சோதிக்கப்படுவது மாணவர்களின் அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? மேற்கல்விக்குத் தேவை அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? கிராமப்புற மாணவர்களுக்கு அறிவுத் திறன் குறைவு என்று எவ்வாறு இவர்கள் முடிவு செய்தார்கள்?. கிராமப்புற மாணவர்கள் என்று இவர்கள் கூறுவது உண்மையில் கிராமப்புற மாணவர்களையா இல்லை அரசுப்பள்ளி மாணவர்களையா? அரசுப்பள்ளி மாணவர்களை என்றால், அரசுப்பள்ளிகள் தரமற்றவை எனக்கூறுகிறார்களா?

பொது நுழைவத்தேர்வு நடத்தினால் முதன்மையாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மொழி. கேள்விகள் பிராந்திய மொழிகளிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பவர்கள் இழப்புக்கு ஆளாகலாம். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. நாம் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய நமது பிரதிநிதிகளால் எளிதாக எதிர்கொள்ள முடியும் பிரச்சினை.

அடுத்ததாக கூறப்படுவது, நுழைவுத்தேர்வுகள் சி.பி.எஸ்.இ.  தரத்தில் இருக்கும். வெவ்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் வெவ்வேறாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் ஒரே அளவீட்டில் அளிவிடுவது சரியாக இருக்காது என்பது. இதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மேற்படிப்புக்கான இடங்கள் அந்த மாநிலத்து மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மாணவர்களால் வர முடியாது. ஆனால் அதே மாநிலத்தில்  சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை விட முன்னே வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிகக்குறைவாகவே உள்ளன. எனவே அது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப்பள்ளிகள் தமிழகமெங்கும் உடனே முளைக்கலாம். தமிழக உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரத்தை சி.பி.எஸ்.இ. க்கு இணையாகவோ அதைவிட சிறந்ததாகவோ உயர்த்துவதன் மூலம் இந்தப்பிரச்சினையையும் எதிர்கொள்ளலாம்.

கல்வித்தரத்தை உயர்த்தியாக வேண்டும். வேறு வழியில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும். இதிலும் சமரசத்திற்கு இடமில்லை. இன்று நுழைவுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கிறார்கள் என சத்தம் எழுப்புவது அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும் மட்டுமே. ஆசிரியர்களும் இங்கு இருப்பதால் இந்தக் கூச்சல் கருத்தியல் தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மக்கள் அவர்கள் கூச்சலிடுவதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். யார் அவர்கள்? மாற்றத்தை ஒரு பெரிய தரப்பிற்குள் கொண்டு வரவேண்டிய, அந்தத் தரப்புடன் மோத அச்சப்படுகின்ற அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்களும், அந்தப் பெரிய தரப்பாகிய, மாறுதலுக்குள்ளாக வேண்டிய ஆசிரியர்களும்தான்.


பொதுமக்களாகிய நாம், நம் சந்ததிகளின் திறனை இந்த இரு தரப்புகளின் சுயலாபத்திற்காக, அவர்களுடன் சேர்ந்து கொல்ல வேண்டுமா? அல்லது நமக்காகவே அந்த இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும் ஆசிரியர்களிடமும், எங்களுக்குத் தேவை உங்கள் திசைதிருப்பும் கூச்சல்களும் எங்கள் சந்ததியினர் மேல் தொடர்ந்து செய்யப்படும் அறிவொழிப்பும் அல்ல, எங்கள் சந்ததியினரின் அறிவொளிதான் என உரக்கச் சொல்ல வேண்டுமா?

blog.change@gmail.com

Wednesday, May 4, 2016

மாநில மின்வாரியங்களின் சுமை

28-04-2014 அன்று சொல்வனம் இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டுது.

மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத) பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக்கொள்ள,  மாநில மின்வாரியங்களின்\மின் பகிர்மான நிறுவனங்களின் தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.

மின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்குத் தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக் குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாததாகி விட்டது. மின் ஓட்டம் அளவின்றி தடைப்பட்டால் அரசாங்கங்களையே மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை சூழ்ச்சியாகக் கையாள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\மின்பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள் மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் பண நுட்பங்களின் படி (Technicaly) மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.

2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள், தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருத்தல் போன்றவையே இத்தகையச் சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும் நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தச் சுமையை அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்களின் கடமையை நோக்கி திசைத்திரும்ப வைக்கலாம்.

மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான் பெறப்படுகிறது. தடையில்லாத மின்சாரம் எவ்வகையிலும் தவிர்க்க முடியாமல் தேவைப்படும் தொடர் இயக்க (Continuous Processing) தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, தேவையான மின்சக்தியை தாமே உற்பத்திச் செய்தாலும் பிற தொழிற்சாலைகளும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின் நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் பொருளாதார இழப்பிலும் கடன் சுமையின் அழுத்தத்திலும் தொடர்ந்து இருந்து வந்தால், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும், வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. கடன்கொடுத்த வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின் கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய மனிதர்களின் அடிப்படை நுகர்வுகளும் நாட்டின் பொருளாதாரமும் தடையின்றி இயங்க முடியும்.

இந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு "மாநில மின்பகிர்மான நிறுவனங்களின் நிதி மறு கட்டமைப்புத் திட்டம்'' (Scheme for Financial Restructuring of state Distribution Companies) என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம், இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக, எனவே குறைவான வட்டியுடன் மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள் சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு சில நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்தால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும்.

மாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில் கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவுப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3% அளவுக்குள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 50% கடனை  மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும் மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில் ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின் பங்குதாரர்களை இழப்புக்குள்ளாக்குவதும் தவிர்க்கப்படுகிறது.

மின்வாரியங்கள் இந்தச் சலுகையை 25% ஊக்கத்தொகையுடன் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில....

·         சராசரி வழங்கும் செலவுக்கும் (Average Cost of Supply - ACS) சராசரி பெற்றுக்கொள்ளும் விலைக்கும் (Average Realised Rate - ARR) ஆன இடைவெளியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியங்கள் இல்லாமல் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
·         செயல்பாட்டு இழப்புக்களை (Operational Losses) ஈடுகட்டுவதற்காக மாநில அரசுகளும் மின்வாரியங்களும் மீண்டும் குறுகியக்காலக் கடன்களை வாங்கக் கூடாது.
·         மின்பகிர்மானத்தில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை ஒருவருடத்திற்குள் மத்திய அரசின் அனுமதிக்காக அளிக்க வேண்டும்.
·         ACS மற்றும் ARR க்கான இடைவெளியை குறைப்பதற்காக, வருடாவருடம் மின் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
·         விவசாயத்திற்கான மின்சார மானியம், அளவிடும் கருவிகள் மூலம் அளவிட்டு, மாநில அரசுகள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு அறிவித்த இந்த நிதி நிலையைச் சரி செய்துக் கொள்ளும் வாய்ப்பைப்  பயன்படுத்தின என்பதற்கானத் தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.

ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த 25% ஊக்கத்தொகையும் அதற்கான நிபந்தனைகளும் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\வேண்டியிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் (Indicator) கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்திர இழப்பு தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில் 76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர் 2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த இழப்பு 60000 கோடி ரூபாயாக இருக்கும்.

நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'உதே' (UDAY - Ujwal DISCOM Assurance Yojana), முந்தையத் திட்டத்தின் இயல்பான நீட்சியாகவும், விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது - மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.

  • ·   உதே திட்டத்தின் படி, மின் வாரியங்களின் மொத்தக் கடன்களில் 75% அளவை, இரண்டுத் தவணைகளாக மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • ·         இவ்வாறு மாநில அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கடன்கள், முதல் இரண்டு வருடங்களில் மொத்த உற்பத்தியில் பட்ஜட் பற்றாக்குறையின்  அதிகப்பட்ச அளவான 3% என்னும் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
  • ·         கடன் வழங்கிய வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை மாநில அரசு நேரடியாக வழங்கும்.
  • ·         மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத மின் பகிர்மான நிறுவனங்களின் கடன்கள், வட்டி குறைக்கப்பட்ட மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட்ட (Guarenteed) மின் வாரியங்களின் கடன் பத்திரங்களாக வங்கிகளுக்கு அளிக்கப்படும்.
  • ·         மின்வாரியங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ளும் வணிக இழப்புக்களை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
  • ·         இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதோ தவிர்ப்பதோ மாநில அரசின் சுய முடிவு
  • ·         ஏற்றுக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு, வேறு சில திட்டங்களின் மூலமாக மின்வாரியங்களை வலிமைப்படுத்துவதற்கான பண உதவிகள் மத்திய அரசால் செய்யப்படும்.
  • ·         இவ்வாறு செய்யப்படும் உதவிகள், மாநில அரசும் மின்வாரியங்களும் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை ஒப்புகொண்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதன் அடிப்படையில் இருக்கும்.
  • ·         அவ்வாறு நிறைவேற்றாத மாநில அரசுகளிடமிருந்து கொடுக்கப்பட்ட உதவி\ஊக்க தொகைகள் திரும்பப் பெறப்படும்.

முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில் வரும்.

மின் பகிர்மானத்தில் முக்கியமான ஒரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (Average Technical & Commercial Loss - AT & C). இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ் அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் (Transformers) ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பதன் மூலம் சற்றுக் குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும் இல்லாமல் செய்து விடலாம்.
இதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது. உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில் அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திச் செய்யலாம். இதன் மூலம் மின்திருட்டுக்கள் நடைபெறும் இடங்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஒவ்வொரு பகிர்மான மின்மாற்றிகளிலும் குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் அளவிடும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பதும் உதே திட்டத்தின் ஒரு நிபந்தனை. உதே திட்டத்தின் முக்கியமான ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT & C  இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 68% ம் கோவாவில் குறைந்தப்பட்சமாக 11% ம் உள்ளது.

இது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப் பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை (Efficiency) அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும் திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இவற்றால் குறிப்பிடத்தக்க பயன்களையும் அடைந்துள்ளது. இந்த பயன்கள் மாநில அரசுகளின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் முழுமையாகச் சென்று சேர அவை உதே திட்டத்தில் சேர்வது நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திரா, ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது சேர்வதாக உறுதி அளித்து விட்டன. கவனிக்கவும் - தமிழகத்துடன் சேர்ந்து மிக அதிகமாக கடன்சுமையை வைத்திருக்கும் மற்ற மூன்று மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

மத்திய மின்துறை அமைச்சரால் தமிழக அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரமையத்தைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில் இது குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும் மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில் சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்தால் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். தமிழக மின்வாரியத்திதன் தற்போதைய நிதிநிலையில் கடன்களைத் திருப்பிச் செலுத்து வாய்ப்பில்லை. மாநில அரசின் நிதி நிலையும் மின்வாரியத்துக்கு உதவும் வகையில் சாதகமாக இல்லை. இதன் மூலம் Credit Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும் செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாகச் செல்லக்கூடும். இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக் கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில் துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து 3% அளவிற்கு அதிகரிக்கும்.


தமிழக அரசு "உதவி செய்யுங்கள்" என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது, தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடைகளில் முழங்கலாம். அதன் தொடர்ச்சியாக 'தமிழ் தேசியம்' என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் அதை பின்பாட்டாகப் பாடலாம்! இன்று நம் தேவையை உறுதியாக அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால், இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில!

blog.change@gmail.com

Sunday, April 10, 2016

பொருளாதார விளையாடல்கள்

சிறகு இணையப் பத்திரிகையில் 02-04-2016 மற்றும் 09-04-16 ஆகிய நாட்களில் பதிப்பிக்கப்பட்டது.   
                                 
                                           (1)
லகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையை சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும் செயலியக்கமும் முடிவும் பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிற உயிரினங்களையோ அல்லது பிற உயிரினங்களால் இயற்கையாக உருவாக்கப்பட்டவற்றையோதான் உணவாக நுகர்கின்றன. அதேபோல ஒவ்வோரு உயிரினமும் உருவாக்கும் கழிவுகளை நுகர்வதற்கு வேறு ஒரு உயிரினம் காத்துக் கொண்டிருக்கும். உயிரில்லாத ஜடப் பொருளான பாறை மழையையும் ஒளியையும் வெப்பத்தையும் காற்றையும் பெற்று, அவற்றால் மாற்றமடைந்து தாதுக்களாக கரைந்து சென்று தாவர இனங்களுக்கு உணவாகிறது. மண்ணாக மாறி தாவரங்கள் வாழும் இடமாகிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிறிதொன்றை நுகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பிறிதொன்றுக்காக தன்னை அழித்து அளித்துக்கொண்டும் இருக்கும்.

மனிதர்களும் மிக சமீப காலம்வரை, கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இந்தத் தொடர்சங்கிலியில் ஒரு கண்ணியாகவே இருந்துவந்திருக்கிறார்கள். தாங்களும் அலகிலா இயற்கை இயக்கங்களில் சிறு கண்ணி என்பதை அறிந்து அதற்கேற்ற முறையில் தங்கள் வாழ்வின் இயல்பை அமைத்திருந்தார்கள். அந்த நாட்களில் வேறு வழியும் இல்லை. உயிர்ச் சங்கிலியை பொருட்படுத்தாது வாழும் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது பரவலாக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

சில ஆ       யிரம் வருடங்களுக்கு முன்பே உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சாத்தியமான உணர்வுநிலைகளை மனிதர்கள் அடைந்திருக்கிறார்கள். ரசவாதம் போன்ற தொழில்நுட்பங்கள், குறைந்தப்பட்சம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமூகத்தில் இருந்திருக்கின்றன. மறைஞானத் தளத்தில் (Mystical Dimension) பல தொழில்நுட்பங்கள் (Technologies) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தகுதியுடையவர்களால் மட்டுமே அடைய முடிந்தது. இவற்றை அறிந்துக்கொள்வதற்கு அறஉணர்வு அடிப்படையான தகுதியாக இருந்ததை இன்று நாம் கதைகளாக அறியும் வரலாற்றிலிருந்து ஊகிக்கலாம். நம் மன இயல்பு அவ்வாறு இருந்தால், இன்றைய அரசியல் நிலைகளுக்கேற்ற ஊகங்களுக்கும் நாம் வரவும் நேரிடலாம்! ஒன்றும் செய்வதற்கில்லை! அக்காலங்களில் அடைந்த அறிவியல் அறிவு, சமூகங்களை அழிக்கும் ஆயுதமாக எப்போதும் மாறவில்லை. விதிவிலக்குகள் எங்கும் சாத்தியமே! அத்தகைய விதிவிலக்குகள் சமூகங்களை அழிக்கும் அளவுக்கு வீரியத்தைப் பெற முடியவில்லை. எனவே மனிதர்கள் உலக இயக்கமாகிய வலைப்பின்னலில், தொடர்ந்து ஒரு கண்ணியாக இருந்து வந்திருக்கிறார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் அறிதலின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. குறிப்பாக மேலை நாடுகளில். அதுவும் பௌதீக அறிவியலில். இந்த அறிதல்களை அந்தக் காலத்து ஒற்றைப்படையான மத நம்பிக்கைகள் தடைச் செய்ய முயன்றன. மதங்கள் உண்மையில் மனிதனில் உன்னதங்களை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டியவை. அறிதல் என்பது மனிதனின் உன்னதங்களில் ஒன்று. மதங்கள் அந்த அறிதலை தடை செய்ய முயன்றதன் விளைவுதான், அறிவியல் மதங்கள் போதிக்கும் உன்னதங்களை உதறிச் செல்ல வைத்து விட்டதாகத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க ஒன்று; மேலை நாடுகளில், மதங்களால் மனிதனின் அறிதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் கீழை நாடுகளில் தகுதியுடைவர்களுக்கு மட்டுமே அறிதலுக்கான சாத்தியங்கள் அளிக்கப்பட்டு அறிதல் என்னும் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கவும் செய்தது.  மேலை நாடுகளில் அறிதலுக்கான தடைகளை மதங்களிலிருந்து விலக்கிய பிறகுதான் அங்கு அறிவியல் வளரத்தொடங்கி பின்னர் தொழில்நுட்பமாக அனைவரையும் அடைந்தது. அந்தத் தொழில் நுட்பம் கீழை நாடுகளை  அடைந்தபோது, இங்கு  இருந்த அறிவியல் திரைக்குப் பின் சென்று மேலை நாடுகளிலிருந்து வருவது மட்டும்தான் அறிவியல் என்னும் மாயை உருவாகியது.

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது. அது மனிதன் அடைந்த பௌதீக அறிவை தொழில்நுட்பமாக மாற்றி அவற்றை சமூக இயக்கங்களுக்காக, மனிதத் தேவைகளை எளிதில் பெறுவதற்கான, எனவே செயல்களை எளிதாக்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தது. அந்த முயற்சி வெற்றியும் பெற்று விட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கையின் இயக்கங்கள் மேல் இருந்த ஒத்திசைந்த உணர்வை இல்லாமல் செய்யத் தொடங்கியது. அதாவது அறிவின் பயன்கள், அந்த அறிவை ஒத்திசைவுடன் அணுகும் மனநிலை இல்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தபோது அவர்கள் இயற்கையை புறந்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு அளித்த அறிதல்கள், அறிவியலாளர்களைக் கடந்து ராணுவத்தை அடைந்தபோது அது அணுக்குண்டாக மாறி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை சில நிமிடங்களில் கொன்றழித்ததுடன், அந்த இடங்களில் பிறந்த அடுத்த தலைமுறையினரில் கணிசமானவர்களை பிறவிக் குறைபாடுள்ளவர்களாகப் பிறக்க வைத்து, அறிவியலின் இருண்ட முகத்தை உணர வைத்தது. 

இந்த நிலையில் இயற்கை உயிர் வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லும் பெருங்கருணை என்னும் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு, மனிதர்களுக்கு உதவும் ஒரு பெரும் கருவியாக அல்லது மனிதர்களுக்குத் தேவையானதை எல்லாம் உருவாக்கி அளிக்கும் இயந்திரமாக மனித மனங்களில் மாற்றியமைக்கப்பட்டது. இது ஒரு அனுமானம்தான். கடந்த காலத்தின் பாதையை திரும்பிப் பார்த்து, கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை காட்சியின் புலத்திலிருந்து சற்றே நீட்டித்துப் பார்ப்பது.

ஆனால் தொழில்புரட்சியால் அடைந்தவை அனைத்துத் தரப்பினருக்கும் புற வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அன்று வழ்ந்தவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. புற வாழ்க்கையை மட்டும்தான்! புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத் தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல் அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும் அதிகப்படியான துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில் நிகழ்ந்திருக்கிறதா? ஆனால் நாம் கொண்டிருக்கும் அளவுகோல் எளிமையாக்கிவிட்டது என்றுதான் தெரிவிக்கிறது. எனில் அளவுகோலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இங்கு அகவாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்பதும் அனுபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுமானமே!

ஒரு மாபெரும் கருவியாக அல்லது இயந்திரமாக மனித மனதால் உருவகிக்கப்பட்ட உலகம், அந்த நிலையில், மனிதனுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கானது மட்டும்தான் என்று பெரும்பான்மையான மனிதர்களால் கருதப்படுகிறது. மனிதனின் உணர்வுகளில் அது ஒரு இயந்திரம் மட்டுமே. அந்த மனநிலையில், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் உலகிலிருந்து திகட்டத் திகட்ட நுகர்ந்துக் கொண்டிருப்பது நியாயமானதே. அதில் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம் இல்லை. இன்றைய நிலையில் பொருளாதார இயக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதனுக்கும் உலகுக்குமான இந்த உறவினை புரிந்துக் கொள்வது அவசியம்.

எல்லா நாடுகளும் எப்போதும் பொருளாதார வல்லமையையே விழைகின்றன. அதை அடைந்தால் பெரும்பாலான மற்ற வல்லமைகளையும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். தற்போதைய நிலையில் பொருளாதார வல்லமை என்பது முதலாளித்துவ அமைப்பின் வல்லமை. எனவே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முதலாளித்துவம்(Capitalism)  சார்ந்த பொருளாதார விளையாடல்களையே தங்கள் முதன்மை இயக்கங்களாகக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகளான சைனா போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிகப் பட்சமாக பிற நாடுகிளில் முதலாளித்துவம் என்னும் பெயரில் செய்யப்படும் அதே பொருளாதார இயக்கங்களுக்கு வேறு சில சித்தாந்தம் சார்ந்த பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.

முதலில் கூறியது போல பொருளாதாரம் என்பது நுகர்வின் மறு பெயர். மக்கள் நுகர்வதற்கு உலகின் சக்திகள் பொருள்களாக மாற்றப்பட வேண்டும். நுகர்வதற்கு பொருட்கள் தேவையென்றால், தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தேவையானப் பொருட்களை அடைய வேண்டும். கொடுப்பதற்கு வேறு பொருட்கள் இல்லையெனில், உழைப்பின் மூலம் பொருட்களை உருவாக்கி, பண்டமாற்று செய்யப்பட வேண்டும். அதுவே மனித சமூகம் நுகர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை விதி. மனிதர்களுள் இருக்கும் எல்லா அற உணர்வுகளும், இந்த விதியை சமனமாக பயன்படுத்தத் தேவையான, இதுவரை மனித சமூகம் அடைந்த அறிதல்களின் வழியாக உருவாக்கிய விதிகளே. அந்த விதிகளை பாதுகாப்பதற்காக சமூக அளவில் சட்டத்திட்டங்களும், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளும் இயக்கப்படுகின்றன.

முதலாளித்துவ இயக்கத்தின் நோக்கம் பொருளாதார நிறைவுத்தன்மை அல்லது சமநிலையில் தன்னை நிறைவு செய்துக்கொள்வது அல்ல. அதாவது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சமநிலையை அடைய வைப்பது அதன் நோக்கம் இல்லை. இதுவே முதலாளித்துவத்தின் எதிர்மறை இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கலாம். மாறாக தேவை எப்போதும் உற்பத்தியை விட அதிகமாக இருக்குமாறு அது பார்த்துக்கொள்கிறது. அவ்வாறு உயிர்ப்புடன் இருக்க பொருளாதார வளர்ச்சி என்னும் அளவீடும் அதன் இயக்கத்தினுள் வந்து சேர்ந்து விட்டது. விளைவாக தனிமனித அளவிலும் பொருளாதார நிறைவு என்பது வந்து சேரவே இல்லை. மீண்டும் மீண்டும் நுகர்வுப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருக்கவே தனிமனித விழைவு முயல்கிறது. தற்போதைய வாழ்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்த பின், எதிர்கால நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கான சேமிப்பில் அது ஈடுபடுகிறது. மரணத்தின் மீதான மனிதர்களின் பயம், மரணத்தைப்பற்றி நினைக்காமல் என்றும் இருப்பவர்களாக அவர்களை கற்பனைச் செய்ய வைத்து, விளைவாக எதிர்காலத்திற்கான சேமிப்பை எல்லை இல்லாததாகவும் மாற்றி விட்டது.

இதன் மறு எல்லையாக, இன்றைய உலகின் மக்கள் தொகையில் தோராயமாக இருபது சதவீதம் மக்கள், மிக அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முழு உழைப்பும் உணவுக்காக மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அல்லது தேவையான உணவை அடைவதற்கான அளவு உழைப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை. அறம் கருணை என்றெல்லாம் மனித உன்னதங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தில்தான் அன்றாட உணவுக்கே திண்டாடும் மனிதர்களும், ஒரு நேரத்தில் தான் உண்ணும் உணவுடன் பலருக்குப் போதுமான உணவை குப்பைக்கு அனுப்பும் மனிதர்களும் வாழ்கிறார்கள். தன் மிக எளிய தினசரித் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களை பெற முடியாமல் உடலாலும் மனதாலும் துன்புறும் மனிதர்கள் வாழும் அதே மனித சமூகத்தில்தான்  நுகர்வுத்தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னும், தானும் மரணிப்பேன் என்பதை அறியாத, வாழமுடியாத அந்த எதிர்காலத்திற்கான சேமிப்பில் மனதாலும் பின் உடலாலும் துன்புற்று உழல்கின்றவர்களும் இருக்கிறார்கள். புரிந்துக்கொள்ள இயலாத முரண்கள்தான்!

இதற்குக் காரணம் திறமையின்மையா இல்லை வாய்ப்பின்மையா? இல்லையெனில் சக மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா? அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா? தனிப்பட்ட முறையில் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஒரு புறமிருக்க, அந்த சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியத்துவம் உடையது. சமூகத்தை நாம் விரும்புமாறு மாற்ற விரும்பினால் அது இன்று இருக்கும் யதார்த்தத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மாறாக எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் விருப்பத்திலிருந்துத் தொடங்கினால் அது பேரழிவையும் துணைக்கு அழைத்து வரும். அந்தத் துணை ஒருவேளை விருப்பத்தை நிறைவேறாமலும் தடுக்கலாம்.

(2)

முதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத் தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள். அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல. அது  அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிக்கரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.

பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில்,  பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தொழில்களுக்குத் தேவையான மனித உழைப்பு இன்னும் குறைக்கப்படுகிறது. எனவே பணத்தின் பரவலாக்கமும் குறைக்கப்படுகிறது. தோராயமாக வருமானத்தில் 5% முதல் 30% வரை உழைப்புக்கான செலவாக பரவலாக்கப்படுகிறது. ஆனால் வருமானத்தில் 10% முதல் 50% வரை அந்த முதலாளித்துவ அமைப்பு பணப்புழக்கத்தை தன்னுள் குவிக்கிறது. மீதி கச்சாப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்பட்ட பணம், அந்த முதலாளித்துவ அமைப்பின் மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிரப்படுகிறது. மேலும் வருடம்தோறும் அந்த குவிதலின் அளவை அதிகரிப்பதே எந்த ஒரு முதலாளித்துவ அமைப்பின் நோக்கமும். எனில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்காக நுகர்வும் அதிகரிக்க வேண்டும்.

முன்பே கூறியபடி இன்னும் இருபது சதவீதம் மக்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எனில் நுகர்வுப் பொருட்களுக்கானத் தேவை இன்னும் இருந்துக்கொண்டிருக்கிறது என்ற ஊகம் சரியாவே இருக்கும். எனில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். அதற்குத் தேவை இருக்கும் மக்கள் திரளுக்கு தேவையை அடையும் வழியான உழைப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவுதான். ஆனால் முதலாளித்துவத்தினால் அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக உலகப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் உள்ளது. பொருளாதாரம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் நுகர்வுப் பொருட்கள் இதற்கு மேலும் மக்களுக்குத் தேவை இல்லை அல்லது அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணப்புழக்கம் மக்களிடம் இல்லை. எனில் உணவுக்கும் வழி இல்லாமல் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இருக்கும் போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக இருக்க முடியும். அவ்வாறெனில் இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் மனித சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது? அதன் பணப்பரவலாக்கம் 20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை? அது நுகர்வுப் பொருட்களாக மாற்றியமைத்த, முழு மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமையுள்ள இயற்கையின் வளங்கள்\சக்திகள்\ஆதாரங்கள் எங்கு சென்று ஒளிந்திருக்கின்றன?

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், முதலாளித்துவம் புற வாழ்க்கையை மிகமிக எளிமையாக்கியிருக்கிறது. இன்று நாம் இத்தனை வசதிகளை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் மனிதர்களை, அதிகாரத்தின் எச்சிலைக் கூட தொட இயலாத சமூகத்தை, அது முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. புறக்கணிப்பது மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்துகிறது. அதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுக்கிறது. வருங்காலத்தில் அதிகாரம் முற்றிலும் முதலாளித்துவத்தின் கைக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன் மனித இனம் உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றையும் இவற்றை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளையும் மட்டுமே நுகர்ந்து வந்துள்ளன. மேலதிகமாக சமூகக் கட்டுமானத்தின் பாதுகாப்பு அம்சமான ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களும். காரணம் எளிமையானதுதான். மனித உழைப்பின் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். தொழில் புரட்சியின் காரணமாக, அடிப்படைத்தேவைகள் மிகஎளிதாக அடையப்பட்டன. அதன்பின் மனிதனின் நுகர்வு பொழுதுப்போக்கு மற்றும் ஆடம்பரம் சார்ந்ததாக மாறிவிட்டது. தற்போதைய சமூக நிலையில் எல்லாப் பொருளாதாரங்களின் பெரும்பகுதியும், பொழுதுபோக்கு நுகர்வையும் ஆடம்பர நுகர்வையும் நம்பியே இருக்கின்றன. அதன் மறுபக்கமாக மக்களும் இவற்றை அடைவதையே தங்கள் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டுள்ளனர். அதாவது மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களை விட பொருளாதாரத்தில் அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை அடைந்தபின்னும், தங்கள் உழைப்பின் போதாமையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாழ்க்கை முழுவதையும் இந்தப் போராட்டத்திலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது மனித சமூகத்தை தீராத செயல்களின் வலைப்பின்னலில் வைத்து, சமூகத்திற்கு இயங்கு விசையை அளிக்கிறது. மறுபுறத்தில் மனிதர்கள் தங்கள் சுயமதிப்பை அறியாமல், நுகர்வுகளின் மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கருதி, நுகர்தலையும் அனுபவிக்காமல், பொருளாதாரத்திற்கான போராட்டத்திலேயே நுகர்தலையும் ஒரு போராட்டமாக செய்து முடிக்கிறார்கள். ஒருவேளை நுகர்வுப் பொருட்களை அடைவதற்கான இந்தப் போராட்டம் அவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கலாம். இல்லையெனில் சகமனிதர்களுடன் அவர்கள் போர்தொடுத்து சமூக நிலையின்மைக்குக் காரணமாகி விடலாம். அவ்வகையில், முதலாளித்துவப் பொருளாதாரம் சமூக அமைதியை வழங்கியுள்ளதோ?

நுகர்வுக்கும் எனவே பொருளாதாரத்துக்கும் இன்னொருக் காரணி மக்கள் தொகை. இந்தியாவின்  மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வரும் காலங்களில் மிக வேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடையும் என்று கூறப்படுகிறது.. தற்போதும் நெருங்கிய எதிர்காலத்திலும் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் உழைப்பு சக்தியும் நுகர்வு சக்தியும் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாக இருக்கும். பொருளாதாரமும் முன்னேறும் என்று கருதப்படுகிறது. அதாவது இயற்கை வளங்களை நுகர்வுப் பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் குவியும் பணத்தின் ஒரு பகுதியை உழைப்புக்காக பரவலாக்கி, அந்தப் பரவலாக்குதல் மேலும் நுகர்வைத் தூண்டி உற்பத்தியை தொடர்ந்து வளரச் செய்வது. ஆனால் அந்தப் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் கொடுக்கப்போகும் விலை, இயற்கை வளங்களின் பெரும்பகுதியை அழித்தொழிப்பதுதான். இந்தப் பொருளாதார வளர்ச்சி மேலோட்டமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அதே நேரத்தில் மறைமுகமாக அவர்களை தீராத பொருளாதாரப் போராட்டத்தில் தள்ளி, அகவாழ்க்கையின் தரத்தை அழிக்கும். ஆனால் நம் பொருளாதார மேதைகள், இந்தியாவின் மக்கள் தொகை, பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறது, எனவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது என்று விதந்தோந்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு இதுதான் சரியான வழியா?

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி, இன்று கண்கூடாகத் தெரிகிறது. அதன் வீழ்ச்சி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தொடங்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றபின் தொண்ணூறுகளின் நடுப்பாகம்வரை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக இருந்துவந்தது. கொரியா சீனா போன்ற நாடுகள் இந்த காலக்கட்டத்தில் உலகுக்காக உற்பத்தியைத் தொடங்கின. அதன் பின் ஜப்பானின் பொருளாதாரம் மெல்லமெல்ல கீழே விழுந்து விட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நிலைகுலைவுக்குப் பின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கடன்களுக்கான மிகமிகக் குறைந்த வட்டிவிகிதம் (அல்லது வட்டியே இல்லாத கடன்), முதன் முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. மக்களிடம் பணப்புழக்கத்தை உருவாக்கவும், எனவே அவர்களை மேலும் நுகர்வுப் பொருட்களுக்காக செலவிட வைப்பதுமே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பினார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஜப்பானின் பொருளாதாரம் அப்படியேதான் உள்ளது. தற்போது ஜப்பானில், சேமிப்பிற்கு பூஜ்யத்திற்கும் குறைவான வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க வங்கிகளுக்குப் பணம் தர வேண்டும். அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது! இதன் மூலம் மக்கள் பணத்தை சேமிப்பதைத் தடைச் செய்கிறார்கள். சேமிக்காமல் இருப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின், மிக சமீபத்தில்தான் அமெரிக்கா கடன்களுக்கான வட்டியை சற்றே அதிகரித்தது. இந்த நிலையில் அவர்களும் ஜப்பானின் பொருளாதார முயற்சியை பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு வேறு வழிகள் இல்லை என்றே தோன்றுகிறது. எனில் அது இறப்பின் மிக அருகில் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறெனில் பொருளாதார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய இயக்கம் மிக அவசரமாக தோன்றியாக வேண்டும். அவ்வாறுத் தோன்றாவிடில் பெரும் பொருளாதார அழிவுகளுக்கும் எனவே சமூகங்களின் அழிவுகளுக்கும் பிறகுதான் புதிய பொருளாதார இயக்கம் உருவாக முடியும். மனித சமூகம் உண்மையில் நாகரீகத்தை அடைந்திருக்கிறதென்றால், அத்தகைய அழிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. உலகின் பொருளாதார நிபுணர்கள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். அதற்கு பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத்தை மட்டும் அறிந்திருப்பது போதாது. முழுமையை அறிந்திருக்க வேண்டும். முழுமையின் அறிவிலிருந்துதான் முழுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரம் வர முடியும். முழுமையை அறியும் பார்வையுள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகங்களில் தோன்ற வேண்டும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் குறித்து எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும், இன்று புறவாழ்க்கையில் மனித சமூகம் அடைந்திருக்கும் வசதிகளின் பெரும்பகுதி, முதலாளித்துவத்தால்தான் சாத்தியமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முதாலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும், அது அளித்திருக்கும் வசதிகளின் மேல், தொழில்நுட்பங்களின் மேல் இருந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள். முதலாளித்துவம் வசதிகளை அளிக்கிறது என்பதால் அதை முழுமையாக, அதன் எதிர்மறை இயக்கங்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. முதலாளித்துவம் அதன் ஆதிக்கத்தைத் தொடங்கியதிலிருந்து அதன் எதிர் விசையாக கம்யூனிஸம் இருந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிஸம் அடைந்த அதிகாரம் ஐனநாயகத் தன்மையை முற்றிலும் இல்லாமல் செய்ததால், கிட்டத்தட்ட எங்கும் அது இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கும் இடங்களிலும் அதுவும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பின்பற்றும் இயக்கமாக மாறிவிட்டது. தற்போது உலகெங்கும் முதலாளித்துவத்தை எதிர்ப்வர்கள், அதிகாரம் கையில் இல்லாத கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். கூடவே சில சூழலியலாளர்களும் இருக்கலாம். எனவே முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்விசைகள் எங்கும் இல்லை. எதிர்விசை இல்லாத முதலாளித்துவம் அழிவு சக்தியாக மாறிவிடவும் கூடும்.


முதலாளித்துவத்தின் நிறைப்பண்புகளை தன்னுள் எடுத்துக் கொண்டும், குறைப்பண்புகளை களைந்து கொண்டும் ஒரு புதிய பொருளாதார இயக்கத்தை முன்னெடுக்கும் சாத்தியம் உள்ளதா? உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும் அதனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில் முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல், அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா? தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. தற்போது இருக்கும் எல்லாப் பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவத்துக்காக முதலாளித்துவமே உற்பத்திச் செய்த\செய்யும் பொருளாதார நிபுணர்கள். அவர்களால் முதலாளித்துவத்துக்கு மாற்றான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க முடியாது. சமூகமும் முதலாளித்துவம் வழங்கிய வசதிகளிலும், அளவற்ற நுகர்வுப் பொருட்களை அடையும் போராட்டத்திலும், நுகர்வு அளிக்கும் பொழுதுபோக்குகளிலும் அதன் எதிர்மறைத்தன்மைகளை மறந்து விடுகிறது. எனவே பொது சமூகத்திலிருந்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள் வர சாத்தியம் இல்லை. ஆனால் இயற்கை பெரும்கருணை உடையது. எங்கெல்லாம் தேவை எழுகிறதோ அங்கெல்லாம் தேவையை நிறைவேற்றும் இயக்கத்தையும் இயற்கை வழங்குகிறது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுப் பொருளாதார இயக்கங்கள் தோன்றலாம். இல்லையெனில் பூமியின் உயிர்ப்பன்மைத் தன்மையை தங்கள் நுகர்வுக்காக அழிக்கத் தலைப்படும், எனவே பூமியின் இருப்பையை கேள்விக்குள்ளாக்கும் மனித சமூகத்தை, பூமியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் இயக்கம் அழித்துவிடக் கூடும். ஏனெனில் இயற்கை உணர்ச்சிகள் (Emotions) இல்லாதது.

blog.change@gmail.com