Saturday, July 2, 2016

குமரி மாவட்டத்தில் இன்றைய கல்வி

சிறகு இணையப்பத்திரிகையில் 25-06-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

கடந்த 2011-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்களின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மொத்த மக்கள்தொகையில் 91.6% ஆகும். இது சென்னையை விட அதிகமாகும். சென்னையில் இது 90.18% ஆக உள்ளது. உண்மையில் குமரிமாவட்ட மக்கள் பெருமைப்படும் செய்தி. குமரி மாவட்டத்திற்கு இது வரமா சாபமா? பல தளங்களில் இது வரமாகவே இருக்கக் கூடும். ஆனாலும் தற்போது கல்வி பயிலும் மாணவர் சமூகத்திற்கு இது சாபமாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை வெறும் காட்சிப்பிழையோ?

சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலேயே, குமரி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் வெற்றி பெறும் பெரும்பாலான அனைவரும், பெண்கள் உட்பட, மேல்நிலைப் பள்ளிப்படிப்புக்கு செல்வார்கள். மேல்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கு செல்வார்கள். இடையில் கல்வியை விட்டுவிடுபவர்கள் மிகக் குறைவானவர்களே. அன்று இங்கு இருந்த பெரும்பாலான பள்ளிகளும்  கல்லூரிகளும் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளும் கல்லூரிகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில தனியார் பள்ளிகள் மட்டும்தான் இருந்தன.

இன்று ஒவ்வொரு குறுநகரங்களுக்கும் சில தனியார் பள்ளிகள் கடைவிரித்திருக்கின்றன. தனியார் பள்ளிகள் இல்லாத கிராமங்களும் இங்கு இல்லை என்றே சொல்லலாம். பள்ளி தொடங்கும் மாதங்களில் ஒவ்வொரு பள்ளி வாசல்களிலும், அங்கு படித்த(!) மாணவர்களின் படங்களுடனும், இறுதித் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடனும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வரவேற்கின்றன.
சில வருடங்களுக்கு முன் தமிழக கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்ட பின், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.ஸி.எஸ்.இ. என அடைமொழி இடப்பட்ட பள்ளிகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இன்னும் அந்தக் குழுமங்களிலிருந்து அனுமதியைப் பெறவில்லை. இருந்தாலும் முதல் தொகுதி மாணவர்கள் பத்தாம் வகுப்பை தொடுவதற்கு முன் அனுமதி பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையுடன் இவற்றைத் தொடங்கியிருக்கின்றனர். இவை தவிர "இன்டர் நேஷனல்", "குளோபல்" என்னும் அடைமொழிகளுடனும் சில பள்ளிகள் தோன்றியிருக்கின்றன. அவை எந்த குழுமத்தைப் (Board) பின்பற்றுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தெரியவில்லை. இந்த வகை பள்ளிகளில் பொதுவான ஒன்று, முதல் வகுப்பில் சேருவதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் அவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.

இதில் பிரச்சினை ஒன்றும் இல்லைதான். வருமானம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகள் மேல் இடப்படும் முதலீடுதான் சிறந்த முதலீடு என கருதுபவர்கள் குழந்தைகளை அங்கு சேர்த்துவிடலாம். முதலீடு லாபத்தையும் ஈட்டலாம், இழப்பையும் ஏற்படுத்தலாம் - கச்சாப் பொருளின் தன்மையைப் பொறுத்தது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதமான காலநிலையை கொண்டிருக்கும் குமரிமாவட்டத்திலேயே குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் கொண்ட பள்ளி என்னும் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. வியாபாரத்தில் தங்கள் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என விளம்பரப்படுத்துகிறார்கள். வியாபாரப் போட்டி!

இந்த வியாபாரப்போட்டி, அதில் தங்கள் குழந்தைகளை முதலீடு செய்யும் பெற்றோர்கள், அந்தப் போட்டிகளிலும் முதலீடுகளிலும் அவர்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வி ஆகியவலை குறித்து கவலை ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம்! ஆனால் அங்கு முதலீடாக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் நிலைதான் கவலையளிக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்பதால் மட்டுமல்லாமல் நாளைய சமூகம் என்பதாலும்.

ஒரு மனிதனின் ஆளுமை, அவன் பிறந்தது முதல் சேகரிக்கும் தகவல்களாலும், பெறும் அனுபங்களாலும், அந்த தகவல்களையும் அனுபங்களையும் பயன்படுத்தும் நுண்ணறிவாலும் உருவாக்கப்படுகிறது. ஆக மனித ஆளுமை உருவாக்கத்தில் இந்த மூன்று காரணிகளும் முக்கியமானவை. இவற்றில் ஒன்றை ஏதேனும் திசையில் கட்டுப்படுத்தினாலோ அல்லது தூண்டினாலோ, அந்த மனிதனின் ஆளுமை அந்த குறிப்பிட்ட திசையில் அழிவோ ஆக்கமோ அடையலாம். ஆனால் ஒரே தகவல் கூட வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது அனுபவம், ஒரு தனிமனிதனிடம் எத்தகைய ஆளுமை விளைவை ஏற்படுத்தும் என்பதை எளிதில் வரையறுக்க முடியாது - அது அந்த மனிதனின் உருவாகிவிட்ட ஆளுமையைப் பொறுத்தது.

இந்த நிலையில் வியாபாரப் போட்டிக்காக, ஒரே தொனியில் ஒரே திசையில் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வி, அவர்கள் ஆளுமையில் எந்த ஆக்கப்பூர்வமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. கல்வி ஈசல்கள் தோன்றுவதற்கு முன் இருந்த கல்வி முறை, கல்விக்கு வெளியே அவர்களுக்கு பிற தகவல்களையும் அனுபங்களையும் பெற ஏராளமான நேரத்தை அனுமதித்தது. இன்றைய கல்வியின் முழுமுதற் பிரச்சினை இந்த நேரமின்மைதான். ஒருவேளை நேரமிருந்தாலும், தொலைக்காட்சி ஊடகங்கள், அவற்றின் மேல் கட்டுப்பாடு இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளின் முழுநேரத்தையும் எடுத்து விடுகிறது. ஆக தொலைக்காட்சி ஊடகங்களின் மேல் சுயகட்டுப்பாடு இல்லாத பெற்றோரை தங்கள் தீவினையாகப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நேரமும் அவர்கள் ஆளுமையை அழிக்கவே செய்யும். ஆக, அந்தக் குழந்தைகளையும் இந்தக் கட்டுரை பொருட்படுத்தவில்லை.

முதலாவதாக இந்தப் பள்ளிகளின் சீருடைகளும், ஷூ. கழுத்துப் பட்டை (Tie), ஓவர் கோட்  போன்ற உடைகள் மாணவர்களின் சுதந்திரத்தையும் எளிமையையும் பறித்து உடலளவில் இறுக்கமாக மாற்றிவிடுகிறது. உடல் அடையும் எதுவும் மனதிற்கும் உடனடியாக கடத்தப்படும். இது முதல் நிலையிலேய அவர்களின் ஆளுமை இறுக்கமாக்கப்பட்டு பன்முகத் தன்மையை இழக்க வைக்கிறது. அந்தச் சூழல், அந்த இளவயதிலேயே ஒரு முனைப்படுத்தப்படுகிறது. இயல்பாக அந்த திசையில் ஆளுமையை வளர்க்க முடிந்த குழந்தைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் பிறழ்வு பட்ட ஆளுமையின் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியதுதான் -  ஏதேனும் ஒரு நிலையில் அதை முறித்து விட்டு தங்கள் திசையை தாங்களே தீர்மானிக்கும் துணிவு உள்ளவர்களைத் தவிர!

எட்டாம் வகுப்புவரை, பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையில்லை. அவை வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் எட்டாம் வகுப்பு முடித்தபின் குமரிமாவட்டத்தில் உள்ள எந்த தனியார் பள்ளி மாணவர்களும் தினம்தோறும் குறைந்த பட்டசம் இரண்டு மணி நேரம் அதிகமாக பள்ளியில் இருக்க வேண்டும் - காலையில் ஒரு மணிநேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பிந்தியும். ஒருசில புகழ்பெற்ற(?!) பள்ளிகளில் தினம்தோறும் காலை ஆறு மணிமுதல் இரவு எட்டுமணிவரை பள்ளியில் இருக்க வேண்டும். வெகு சில பள்ளிகள் தவிர மற்ற அனைத்துப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாதி நாட்களுக்குப் பின் பத்தாம் வகுப்பு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். அதன் பின் ஒன்றரை வருடம் அதையே மீண்டும் மீண்டும், வெறும் தகவல்களாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிலும் இதே போல. இன்னும் சில பள்ளிகளில் வெறும் மூன்று மாதங்கள் மட்டும்தான் பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் போதிக்கப்படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பதினெட்டு மாதங்கள் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டும். இவை அனைத்தின் உச்சமாக, அறுதி பெரும்பான்மையான பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பதில்லை. வெயில் எவ்வளவு சுட்டெரித்தாலும், மின் தடைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் பெரும்பாலான பள்ளிகளில் எட்டு மணிநேரமும் சில பள்ளிகளில் பத்து மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் அரசாணைகள் பள்ளிகளால் பொருட்படுத்தப் படுவதில்லை.  அரசாங்கத்தின் கல்வித் துறை அதிகாரிகளாலும் பொருட்படுத்தப் படுவதில்லை. இவ்வாறு வேட்டையாடப்படும் மாணவர்களால், அவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், என்ன உயர்கல்விகள் கற்றாலும், சமூகத்திற்கு என்ன பயன்?

தனியார் பள்ளிகளால் பரவலாக்கப்பட்ட இந்த முறை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரவி விட்டது. ஆக எந்த பெற்றோராவது அல்லது மாணவர்களாவது இயல்பான கல்விதான் தேவை என்றால் குமரி மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. வெகு சில அரசுப் பள்ளிகள் தவிர மற்றவை அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன. ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் எளிதில் நிரப்பப் படுவதில்லை. ஆசிரியர்களுக்கும்,  சில விதிவிலக்குகளைத் தவிர, தாங்கள் ஆசிரியர்கள் என்னும் உணர்வு இல்லை. இந்த நிலையில் எவ்வாறு அரசுப் பள்ளிகளை நம்புவது?

சுதந்திரமான, இயல்பான கல்வியை விரும்பும் மாணவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் இயல்பாக வளர வேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கும் இன்று குமரி மாவட்டத்தில் வாய்ப்புகள் இல்லை. இதை கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் புறந்தள்ளினால், தமிழகம் முழுவதும் மிக விரைவில் இது பரவி விடும்.


இந்த நிலைக்கு வியாபார முனைப்புடன் இருக்கும் தனியார் பள்ளிகளை குறைகூறுவது சரியென்று தோன்றவில்லை. அவை தனியார் நிறுவனங்கள், அவற்றுக்கான நோக்கத்தை அவை நிறைவேற்றுகின்றன. அவற்றின் வியாபார யுக்திகளுக்கு அடிபணியும் சுய சிந்தனை இல்லாத சமூகம்தான் இந்த நிலைக்கு காரணம் என்று தோன்றுகிறது. அந்த சமூகத்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளும் பிழைப்புக்கு பயனில்லை என்று நிலைநிறுத்திய கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும்தான் காரணம் என்று தோன்றுகிறது. எந்தத் தொழிலுக்காவது திறமை பெற்றவர்கள், தேவைப்படும்போது ஆங்கிலம் கற்றுக்கொள்வது ஒன்றும் அத்தனை கடினமானது இல்லை என்பதை சமூகத்துக்கு உணர்த்தத் தவறிய கற்றவர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. சமூகத்தின் மேல் ஏற்றப்படும் இத்தகைய கருத்தாக்கங்களை அரைகுறையாக புரிந்து கொள்ளும் படிப்பறிவு அதிகம் உள்ள சமூகம் கூட காரணமாக இருக்கலாம்.

blog.change@gmail.com

No comments: