Sunday, December 20, 2015

அரசியல் உணர்வு

சிறகு இணைய இதழில்  19-12-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது. சிறகு தமிழில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை தமிழின் அழுக்குகளாகப் பார்க்கிறது. எனக்கோ அது தமிழின் அணிகலன்களாகத் தெரிகிறது. நான் 'ஜனநாயகம்' என்று எழுதியிருந்ததை 'சனநாயகம்' என்று அவர்களின்  தொகுப்பின்போது மாற்றிவிட்டார்கள்.  நான் அவர்களையும், அவர்கள் என்னையும் சார்ந்திருக்க வேண்டியிருகிறது. இந்த சார்பு இருக்கும்வரை சமரசங்கள் தேவைதான் - இருபக்கங்களிலும். கீழே நான் எழுதியவாறே!


சென்னையில் மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப் பலிகளுடனும் பெரும் பொருட் சேதங்களுடனும், பல மனிதர்களின் வாழ்க்கையின் மேல் இருந்த நம்பிக்கைளுடனும். இத்தகைய சேதங்களுக்குப் பின்னும் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வந்தாக வேண்டும். அதுதான் நியதி. அது மனிதர்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும்போது அடையாளங் காட்டுவதைப் போல. அங்கு நாம் கண்ட மேன்மைகளும் கீழ்மைகளும் எத்தனை நாள் நம்முடன் இருக்கப் போகிறது என்பதே நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் அளவுகோல். பேரழிவுகள் வரும் இடங்களில் எல்லாம் மனிதர்களின் உன்னதமும் இழிவுகளும் சேர்ந்து வெளிப்படுவது இயல்பானதுதான். அதுதான் மனிதகுலத்தைத் தொடர்ந்து இருக்க வைக்கிறது. ஆனால் அவற்றின் மூலம் மனிதர்கள் அடைவதுதான், அந்தந்த நாகரீகங்கள் தொட்டிருக்கும் அல்லது தொடப்போகும் உச்சங்களை அடையாளம் காட்டுபவை.

இந்தப் பேரழிவு, நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் உச்சத்தை நமக்குக் காட்டுமா? அழிவின் தருணத்தில் வெளிப்படும் உன்னதங்கள் மிக இயல்பானவை. பேரழிவின் தாண்டவம் மனித உணர்வுகளைத் தூண்டுவதால், இயல்பாக அந்த உன்னதங்கள் அந்தந்த மனிதர்களின் இயல்பிற்கேற்ப வெளிப்படும். இங்கு அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். இவர் எதுவுமே செய்யவில்லை போன்ற புலம்பல்கள் அர்த்தமில்லாதவை. களத்தில் இறங்காதவர்கள் இவற்றைப்பார்த்துக் கவலையற்று இருந்தார்கள் என்பது சரியானதல்ல. அவரவர் இயல்பிற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இயல்பிற்கேற்ற களப்பணிகளை செய்திருப்பார்கள். இவை பற்றி பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் களப்பணி செய்தவர்கள் அல்ல. அவ்வாறு செய்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அனைவரும் பேரிழப்பின் உணர்வெழுச்சிகளை அடைந்திருப்பார்கள்.

இங்கிருந்து நாம் எங்கு சென்று சேரப்போகிறோம் என்பதுதான் பேரிழப்பின் மூலம் பெற்ற உணர்வெழுச்சிகளின் வீரியத்தைக் காட்டுபவை. உண்மையில் நாம் அடைந்த உணர்வெழுச்சிகள் வீரியமுடையவையா அல்லது அந்த நேரத்தில், அந்த நேரத்திற்காக மட்டும் ஏற்பட்ட உணர்வெழுச்சிகளா? அவை எவ்வகையானவைகளாக இருந்த போதும், அப்போதைய இடரில் இருந்தவர்களுக்கு உதவியது. அந்த வகையில் அங்கு உருவாகிய உணர்வெழுச்சிகள் மகத்தானவை.

அந்த இடர் அப்போதைய இயற்கை நிலையால் மட்டும் உருவானதா? இந்தக் கேள்வியும் பேரிடரிலிருந்து மீண்டு கொண்டுருக்கும்போதே மிகப் பரவராக விவாதிக்கவும் பட்டது. மழை ஒரு நிமித்தமாக இருந்த போதிலும் அழிவின் உண்மையான காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் சிந்தனைகளையும் சகமனிதர்கள் அதிகாரத்தின் துணை கொண்டு தங்கள் பேராசைக்காக சுரண்டியதுதான். இது பேரிடரின்போது நிகழ்ந்த தொடர் விவாதங்களின் மூலம் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்துள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?

ஐனநாயகம் மக்களின் சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சமூகமாகத் தங்கள் தேவை என்ன? அவற்றை நிறைவேற்றும் தகுதி படைத்தவர் யார்? தகுதிபடைத்தவர் எனத் தங்களை முன்நிறுத்துபவர்கள் உண்மையில் சமூகத்தின் தேவைக்காக தங்களை முன்நிறுத்துகிறார்களா அல்லது தங்கள் சுயதேவைகளுக்காக அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறார்களா? இவை ஒரு சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் ஜனநாயக இயக்கத்தில் எழும்பும் அடிப்படைக் கேள்விகள். துரதிர்ஷ்டவசமாக நம் சமூகம் ஜனநாயகக் கடமையாற்றும்போது மிக அடிப்படையான சிந்திக்கும் திறனையும் ஒதுக்கி வைத்துக் கொள்கிறது. அப்போதைய அவர்கள் உணர்வுகளை தட்டியெழுப்பும் திறன் வாய்ந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள். ஜாதி மதம் போன்ற எளிதில் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் பிரிவினை உத்திகளுக்கு சமூகம் தன்னை இழக்கிறது. சமீப காலங்களில் சில இலவங்கள் கொடுக்கப்படும் என்னும் அறிவிப்பே சமூகத்தின் சுரணைத் தன்மையை இழக்க வைக்கப் போதுமானதாக இருக்கிறது.

இந்தப் பேரிடரின்போது இத்தகைய சமூக நிலைகளுக்கு எதிரான கூக்குரல்களை மிகப்பரவராகப் பார்க்க முடிந்தது. இப்போதையத் தேவை இவற்றை அடங்காமல் சிலகாலம் வைத்திருப்பதற்கான முயற்சிகள். பேரிடரின்போது சமூகம் அடைந்த உணர்வெழுச்சிகளை சற்றுகாலம் தொடர்ந்து இருக்கச் செய்வதற்கான முயற்சிகள். அது நம்மால் முடியுமா? முடிய வேண்டும்.

பேரிடரின்போது உண்மையான மக்கள் தலைவர்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உருவாகி வந்தார்கள். தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள். இழந்தவர்களுக்குத் தேவையானதை வழங்குகிறார்கள். இவர்களுக்கு அரசியல் உணர்வு இருந்தால், உண்மையான பேரிடர் சில நாட்கள் பெய்த மழையும் அடித்துச் சென்ற வெள்ளமும் அல்ல என்பதை உணர்வார்கள். உண்மையானப் பேரிடர் நம்மையும் இயற்கையையும் சுரண்டும் அதிகாரத்தை கைக்கொண்டவர்கள் கையில் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை அழிப்பதுதான் என்பதை உணர்வார்கள். அந்தப் பேரிடலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க தங்கள் தலைமைப் பண்பை முழுவதும் பயன்படுத்துவார்கள். இங்கு தலைமைப்பண்பு என்பது அரசியலில் அவர்கள் ஈடுபட்டு அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என்பதல்ல. மாறாக தங்கள் தேவைகளையும் பாதுகாப்பையும் இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு, கையறு நிலையில் இருப்பவர்களுக்காகத் தங்கள் செயலூக்கத்தை அளிப்பது.

சென்னையைப் புரட்டிப்போட்டுச் சென்ற இந்த மழை இன்னும் இரண்டு வாரங்கள் தாமதித்திருந்தால், நிர்வாகம் செய்ய வேண்டிய அரசாங்கமே மழை வேண்டி யாகங்களை  செய்திருக்கும். தேடிப்பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் கலங்கடிக்கின்றன. ஏரிகளும் குளங்களும் காணாமல் சென்றிருக்கின்றன. இருப்பவை வருடத்திற்கு வருடம் தேய்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் எல்லா அண்டை மாநிலங்களுடனும் நீருக்காக (அல்லது வோட்டுகளுக்காக) நீர் அரசியலில் ஈடுபடுகிறோம். சமூகத்தில் அண்டைமாநிலத்து மக்கள் மேல் வெறுப்பை உருவாக்குகிறோம். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கடல் உள்ளது. இல்லை எனில், அவர்களிடமும் நீருக்காக கையேந்தியிருப்போம். அதன் மூலம் மக்களிடம் வெறுப்பை உருவாக்கி இந்த இழிமக்கள் வோட்டுகளை அள்ள முற்பட்டிருப்பார்கள்.

இது ஏதோ சில அரசியல்வாதிகளால் மட்டும் உருவான நிலையல்ல. இத்தகைய அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கும் மேலாக அரசாளும் பொறுப்பை மாற்றி மாற்றி கையளித்த நம் ஒவ்வொருவரின் தவறுகளால் உருவான நிலை. நம் தவறுகளுக்கு என்ன பிராயசித்தம் செய்யப் போகிறோம். அல்லது இவ்வாறே இயற்கை வழங்கும் தண்டனைகளான வெள்ளங்களையும் பஞ்சங்களையும் எதிர்கொள்ள சித்தமாகி விட்டோமா? மதுவை அள்ளித் தெளிக்கும் அரசாங்கங்களை நடத்தும் இவர்களிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, மதுவில் மயங்கி உணர்விழந்து கிடப்பதே போதுமானதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் என்பது தனிப்பட்ட நானோ நீங்களோ அல்ல. ஒரு சமூகமாக நாம் அனைவரும். சமூகம் எடுக்கும் முடிவுக்கு தனிப்பட்ட நம் விருப்பு வெறுப்பு எவ்வாறாக இருந்தாலும், தனிப்பட்ட ஒவ்வொருவாரும் பொறுப்பானவர்கள் - நாம் விரும்பும் மாற்றத்தை சமூகம் ஏற்றுக் கொள்வதற்கான உழைப்பை அளிக்காததன் மூலம்.

இன்னும் சில மாதங்களில் பிராயசித்தம் செய்ய ஒரு வாய்ப்பு நம் சமூகத்துக்கு அளிக்கப்படும். சமூக மாற்றத்தை நாம் விரும்பினால், நம் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள விரும்பினால், நம்மை அரவணத்துச் செல்லும் இயற்கையை சீண்டாமல் இருக்க விரும்பினால் நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு சமூகமாக நாம் செய்து வரும் தவறை திருத்தியாக வேண்டும். கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு, இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடித்து வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாற்றியவர்களை ஒட்டுமொத்தமாக நம்மை ஆளும் பொறுப்பிலிருந்து விடுவித்தாக வேண்டும். நீராதாரங்களைச் சுரண்ட அனுமதித்தவர்களை ஒட்டு மொத்தமாக அரசியலை விட்டு விரட்டியாக வேண்டும். பொதுச் சொத்துக்களை தங்கள் சொத்துக்களாக மாற்றியவர்களையும் மாற்ற அனுமதித்தவர்களையும் மீண்டும் நம்முன் வராமல் துரத்தியாக வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்னும் சிலமாதங்களில் நமக்குக் கொடுக்கப்படவிருக்கிறது.

இங்கு தனிப்பட்ட முறையில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒரு சமூகமாக அந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு சமூகமாக நாம்  அரசியல்உணர்வை அடைந்தாக வேண்டும். சமூகத்தில் அரசியல் உணர்வை பரவச் செய்யவேண்டும். அரசியல் என்னும் வார்த்தை எப்போதும் எதிர்மறை அர்த்தத்தில்தான் இங்கு சாதாரண மக்களால்  உபயோகப்படுத்தப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும். அரசியல் என்னும் கருத்தின் மேல் புரிதலை உருவாக்க வேண்டும்.

பொதுவானவற்றின் மேல் அதிகாரத்தை அடைவதையும், அந்த அதிகாரத்தை வெளிப்படுத்துவதையும் அதை அடைவதற்கான இயக்கங்களையும் அரசியல் என்னும் பொது வார்த்தையில் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்புறும் எல்லா இடங்களிலும்  பொதுவானவை இருக்கக்கூடும். அது உறவாடும் ஏதேனும் இருவருக்கிடையில் உள்ளதாக இருக்கலாம், ஒரு குடும்பத்தினுள் உள்ளதாக இருக்கலாம், ஒரு அலுவலகத்தினுள் உள்ளதாக இருக்கலாம், ஒரு இடம் அல்லது பகுதியை சார்ந்ததாக இருக்கலாம், ஓரு சமூகத்தினுள் உள்ளதாக இருக்கலாம் அல்லது நாட்டிற்குள் உள்ளவையாக இருக்கலாம், அதற்கும் மேல் தளத்தில் உலகம் முழுவதுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம். ஆக, அரசியலின் குறைந்தப்பட்ச அலகு, ஏதேனும் இருமனிதர்கள் உறவாடும் தளங்களிலேயே தொடங்கி விடுகிறது.

அரசியல் உணர்வுடன் சேர்ந்து இருக்க வேண்டிய இன்னொன்று அற உணர்வு. அற உணர்வு இல்லாத அரசியல், வெறும் அகங்காரத்தின் இயக்கமாக மாறி விடும். துரதிர்ஷ்டவசமாக இன்று அரசியல் உணர்விலிருந்து அற உணர்வு விலக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் அரசியல்  என்றாலே எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அற உணர்வில்லாமல் அரசியல் இல்லை. ஆக இன்று நாம் அரசியல் என்று கூறுவது உண்மையில் அரசியல் அல்ல. அது அற உணர்வை விலக்கி விட்டு, துஷ்ட உணர்வை ஏற்றி வைத்திருக்கும் 'துரசியல்'. இன்று நாம் 'துரசியலை' துரத்திவிட்டு அரசியலை அதன் இடத்தில் அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு சமூகமாக நாகரீகத்தின் அடுத்த உயர் தளத்திற்குச் செல்ல விரும்பினால் இது தவிர்க்க முடியாதது. இல்லையனில் வெகு வேகமாக நாகரீகத்தின் கீழ் தளங்களுக்குத் தள்ளப்படுவோம்.

அரசியல் உணர்வு அதன் அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். அதாவது தனிநபர் உறவுகளிலிருந்து. எங்கெல்லாம் இன்னொரு மனிதருடன் தொடர்பில் வருகிறோமோ அங்கெல்லாம் 'துரசியலை' துரத்திவிட்டு அரசியல் உணர்வைக் கொண்டுவர வேண்டும். எனில் இயல்பாகவே முழுசமூக அளவிலும் 'துரசியல்' விலகிவிடும். ஒரு சமூகமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  தொடர்ந்து அடைந்து வந்த நாகரீகம் நிலைத்திருக்க, உயர்தளங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த அரசியல் உணர்வை நாம் அடைந்தாக வேண்டும். அதுவும் மிக அவசரமாக. இன்னும் சில மாதங்களுக்குள்! வரும் தேர்தலுக்கு முன். சென்னையில் வெள்ளம் கொண்டுவந்த அரசியல் உணர்வு முழுவதும் வடிந்து உலர்வதற்கு முன்!

நாற்பது வருடங்களாக 'துரசிலை' நடத்தியவர்கள் அனைவரையும் அதைக் கைவிட வைக்க வேண்டும். இவர்களின் தொடர் ஆட்சி அதிகாரங்கள் ஏற்படுத்திய அழிவை விட அதிகமாக, ஒரு கூட்டணியாட்சி அதிக அழிவுகளைக் கொண்டு வந்துவிட முடியாது. அதிகப்பட்சமாக அது சமூக முன்னேற்றத்தை தற்காலிகமாகத் தாமதப் படுத்தலாம். ஆனால் கூட்டணியாட்சி சமூக மாற்றம் நிகழ்வதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துத் தரக்கூடும்.  அதுவருங்காலத்தில் துரசியலை விலக்கி வைக்கத் தேவையான சிந்தனைகளை உருவாக்கித் தரக்கூடும்.


பின் குறிப்பு; இதை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது 'தி ஹிந்து' தமிழ் நாளிதழில் அரசியல் உணர்வு குறித்து சமஸ் (http://writersamas.blogspot.in) அவர்கள் எழுதி வரும் தொடர் கட்டுரைகள். அவருக்கு நன்றிகள்.

Wednesday, December 16, 2015

கடவுள்

சிறகு இணைய இதழில் 07-12-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது.

மனித அறிவு புதிய பரிணாமங்களை எட்டிப்பிடிக்கும்தோறும் நாத்திகவாதம் அதன் எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. மனிதனின் லௌகீக வாழ்வின் பாதுகாப்பு உறுதியாகும்தோறும், கடவுளின் தேவையும் குறைந்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு முரண்இயக்கம் என்றோ அல்லது இயற்கையான நேர்இயக்கம் என்றோ அவரவர் பார்வைக்கேற்ற வியாக்கியானங்களை செய்து கொள்ளலாம்.

கடவுள் என்பது ஒரு இருப்பா அல்லது ஒன்றும் இல்லாததா? அது ஒரு கருத்தா அல்லது நம்பிக்கையா? கடவுளை உள்ளவாறே விளக்க முடியுமா? கடவுள் என்றாலே பதிலளிக்க முடியாத கேள்விகள்தான். இல்லையெனில் நம்பிக்கைகள். சிலரை கேள்விகளும் இன்னும் சிலரை நம்பிக்கைகளும் முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறு முன்நகர்த்தாத கேள்விகளாலும் நம்பிக்கைகளாலும் மனிதர்களுக்கோ கடவுள்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.

மனிதப் பரிணாம வளர்ச்சியில், எண்ணங்கள் தோன்றிய காலத்திலேயே கடவுள் அல்லது அதற்கு இணையான கருத்து தோன்றியிருக்கக் கூடும். எண்ணங்களே தேடுதலுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அவையே அறிதல்களைத் தூண்டுகின்றன. அறியமுடியாதவற்றின் மேல் அச்சத்தையும் தோற்றுவிக்கின்றன. எனில் இன்று நாம் அறியும் கடவுள்களை தோற்றுவித்தது சந்தேகமே இல்லாமல் மனித எண்ணங்களும் சிந்தனைகளும்தான். அது மனித இனத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருந்திருக்கலாம் மனம் என்னும் புயலில் தாக்குண்டு சிதறாமல் இருப்பதற்கான பற்றுகோலாக இருந்திருக்கலாம்.

பிரபஞ்சம் எண்ணிலடங்கா இயக்கங்களின் கூட்டு இயக்கம். அதில் மனித இயக்கம் சிறு துளி மட்டும்தான். ஆனால் மனித மனம் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகக் கற்பனை செய்துக்கொள்கிறது. அதாவது மனிதனுக்குத் தெரிபவை, தன்னைச் சுற்றி இயங்கும் இயக்கங்கள் மட்டும்தான். அந்த இயக்கங்களில், மனிதன் தன்னை நடுநாயகமாக உணர்வது இயல்பானதுதான். பார்வையின் விரிவை அடையும் மனிதன், பிரபஞ்ச இயக்கத்தில் தன் இடம் எதுவும் இல்லை என்பதையும் தான் அதன் சிறு துளி கூட இல்லை என்பதையும் அறியலாம். இந்த அறிதல் நிகழ்ந்தால் அவனின் பாதுகாப்பான நடுநாயக இருக்கையிலிருந்து தூக்கி வீசப்படுகிறான். தன்னைத் தாக்கும் பிரபஞ்ச இயக்கங்களில் பார்வைக்கு எட்டியவற்றின் பிரம்மாண்டம் மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதில் பாதுகாப்பின்மையை உணர்கிறான். அதுவே கடவுள் என்னும் பிடிகொம்பை மனிதனுக்குத் தேவையாக்குகிறது.

கடவுள் என்னும் உருவகம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிய சாத்தியங்கள் இல்லை. ஆனால் வரலாற்றின் பெரும்பகுதியை கற்பனையிலிருந்து உருவாக்குவது போல, கடவுள் எவ்வாறு மனித மனதில் உயிர் பெற்றிருக்க முடியும் என்பதையும் அனுமானிக்க முடியலாம். வரலாற்றை முழுமுற்றான உண்மை என ஏற்றுக் கொள்ள முடியுமானால், இந்த அனுமானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியலாம்.
இவ்வுலகில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் இயற்கை என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. மனிதன் இயற்கையிலிருந்து உருவாகி, இயற்கையால் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாலே அழிக்கவும் படுகிறான். எண்ணங்களும் அதன்காரணமான அறிதல்களும் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. இயற்கையின் போக்கில் பிறந்து வாழ்ந்து மறையலாம்.
இயற்கை மனதால் எட்ட முடியாத பல்வேறு விசைகளின் தொகுப்பு. மனித இருப்பும் அழிவும் அந்த விசைகளாலேயே நிகழ்கிறது. மனிதனுக்கு உணவூட்டும் இயற்கையே அழிக்கவும் செய்கிறது. எண்ணங்களை உருவாக்கத் தொடங்கிய மனம், இந்த எதிர்நிலைகளைக் கண்டு அஞ்சியிருக்க வேண்டும். இதமாக பெய்து உணவாகவும் உணவை உருவாக்கவும் உதவும் மழை, பேருருவம் எடுத்து அழிக்கவும் செய்கிறது. தன் இருப்பின் மூலம் மனிதனின் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் மூச்சுக் காற்று, புயலாக பேருரு கொள்ளும்போது அனைத்தையும் அழிக்கும் அழிவு சக்தியாகவும் மாறுகிறது.
இந்த இயற்கை சக்திகளை அஞ்சி, அவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனெனில் அவையே வாழ்வின் ஆதாரங்கள். இன்றியமையாதவை என அவற்றை முழுமையாக அணைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவையே அழிப்பு சக்திகள்.  ஆக மனிதனுக்கு இருந்த ஒரே வழி அவற்றின் முன் தன்னை சமர்ப்பணம் செய்து கொள்வதுதான். அதாவது, இயற்கை சக்திகள் ஆக்க சக்திகளாக இருக்கும்போது அவற்றை நுகர்ந்து, அவை அழிவு சக்திகளாக மாறும்போது அவற்றின் நுகர்வுக்குத் தன்னை அளிப்பது. இந்த சமர்ப்பண உணர்வே இயற்கை வழிபாடு என்னும் பரிணாமத்தை அடைந்திருக்கக் கூடும்.

மனித மனம் எல்லையற்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அந்த ஆற்றலின் எல்லையைத் தேடுவதே அதன் இயல்பு. தேடுதல் மனித வாழ்க்கையைப் பாதிக்கும் இயற்கை ஆற்றல்களின் தன்மையை மனித அறிவின் எல்லைக்குள் கொண்டு வந்தது. ஆனால் அதே தேடுதல், மனதின் போதாமையையும் அறிய வைத்தது. அதாவது மனிதன் அறிந்தவை அதிகரிக்குந்தோறும், இதுவரை அறியமுடியாதவையும் அவன் அறிதலுக்கு வெளியே அறிதலுக்காக காத்துக்கொண்டிருப்பவையும் அதிகரித்துக்கொண்டே வருவதை அறிய நேர்ந்திருக்கும்.

இன்று தனிமனித வாழ்க்கையில் நிகழும் தர்க்க மனதனால் வரையறுக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கும் பட்சத்தில், அது கடவுளின் செயல் என எளிதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடவுள் என்னும் கருத்தை அறிந்த அல்லது உணர்ந்த குறைந்தபட்ச எண்ணிக்கையிலுள்ள மனிதர்களைத் தவிர மற்ற அனைவரும்,  அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் இல்லை என்றாலும் கடவுள் என்னும் ஒரு பிம்பத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன, நம்புபவர்கள் அந்த பிம்பம் உண்டு என்றும் தன்னைப் பாதுகாக்கிறது என்றும் நம்புகிறார்கள். நம்பாதவர்கள் அந்த பிம்பம் யாருக்கும் எதுவும் செய்வதில்லை, அது தனக்குத் தேவையில்லை என்னும் கருத்துடன் இருப்பார்கள். இது மட்டும் இல்லை, கடவுள் என்னும் ஒரு பிம்பத்தை மனதுக்குள் உருவாக்கிவிட்டு, அவ்வாறு ஒரு பிம்பம் இல்லை என்றும் வாதிடுவார்கள்.  இந்த பிம்பத்தை எங்கிருந்து, எவ்வாறு பெற்றோம்?
கடவுளின் பிம்பம் அடிப்படையில் நாம் சார்ந்திருக்கும் சமூகம் உருவாக்கி அளிக்கிறது. சமூகம் அளிக்கும் அந்த பிம்பத்தை தனிமனித அறிதல்களும் கற்பனைகளும், அவரவர் இயல்பிற்கேற்ப மாற்றி தங்களின் பிம்பங்களாக வைத்துக் கொள்கிறார்கள். உலகத்தில் எந்த இரண்டு மனிதர்களும், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கடவுள் பிம்பத்தைக் கொண்டிருக்க சாத்தியமில்லை. அந்தக் கடவுளை ஒரே பெயரில் அழைத்தாலும், அது தனிமனிதர்களின் தனிப்பட்ட கடவுளே.

எனில் கடவுள் என்னும் கருத்து வெறும் கற்பனையா? அதில் பொருள் ஒன்றும் இல்லையா? அவ்வாறு இருக்கவும் சாத்தியம் இல்லை. இன்று நாம் அறியும் வரலாறு தொடங்கும் காலத்தில் இருந்தே கடவுள் என்னும் கருதுகோள் இருந்து கொண்டிருக்கிறது. உலகின் எல்லா சமூகங்களிலும் எல்லா காலங்களிலும் அது இருந்திருக்கிறது. முற்றிலும் பொருளற்ற ஒன்று அவ்வாறு கால தேச பேதம் இல்லாமல் வியாபித்திருக்க சாத்தியம் இல்லை. எனவே உண்மையான கேள்வி கடவுள் என்னும் கருதுகோளைக் குறித்து இல்லை. தனி மனிதர்கள் கொண்டிருக்கும் பிம்பத்தைக் குறித்துதான் இருக்க முடியும்.

பொதுவாக தனிமனித கடவுளின் பிம்பம், அவர்களால் அறிய முடியாத இயக்கங்களை செயல்படுத்தும் ஒரு இருப்பு. உதாரணமாக ஒருவர் சில வேண்டுதல்களை அவருடைய கடவுள் என்னும் பிம்பத்திடம் வைக்கிறார். பல உலகியல் இயக்கங்களின் விளைவாக அவர் வேண்டுதல் தன்னிச்சையாக நிறைவேறுகிறது. கடவுளிடம் வேண்டியது மட்டும்தான் அவருக்குத் தேவை என்றால், அது எவ்வாறு நிறைவேறியது என்பதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்றால், அவரைப் பொறுத்தவரை கடவுள் என்னும் பிம்பம் அவருடைய வேண்டுதலை முழுமையாக நிறைவேற்றியது. அவ்வாறு இல்லாமல் வேண்டிய செயல் நிறைவேறிய இயக்கங்களின் மேல் அவர் விழிப்புடன் இருந்தால், அந்த இயக்கத்தை முழுமையாக கடவுளால் நிறைவேற்றி அளிக்கப்பட்டது என நம்ப வேண்டியத் தேவை இல்லை. ஆனால் அந்த இயக்கங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்கான வழியில் நிகழ்வதற்கான காரணத்தை கடவுள் என்னும் பிம்பத்தின் மேல் ஏற்றக்கூடும். அதாவது தன் செயல்களின் மேல் இருக்கும் விழிப்புநிலைக்கேற்ப ஒருவரின் கடவுள் என்னும் பிம்பம் வேறு தளங்களுக்குச் சென்று கொண்டிருக்கும்.
ஆக, அடிப்படையில் கடவுள் என்னும் பிம்பம் தனிமனித அளவில், அவர்களின் அறிதலைச் சார்ந்தது. அதாவது ஒருவர் தன்னுடைய கடவுள் என்னும் பிம்பத்தை முழுமையாக வேறு எவருக்கும் அளிக்க முடியாது. வலுக்கட்டாயமாகவோ, சில ஆசைகளை உருவாக்குவதன் மூலமோ, சில வாக்குறுதிகளை அளிப்பதன் மூலமோ பிறருக்கு அளிக்கப்படும் கடவுளின் பிம்பம் வெறும் வெளித்தோற்ற பிம்பம் மட்டுமாகவே இருக்க முடியும். ஆனால் உலகெங்கிலும் நடந்த உயிர்ப்பலிகளில் குறிப்பிடத்தக்க பங்கு  சிலரின் கடவுள் பிம்பங்களை மற்றவர்களின் மேல் சுமத்தும் அர்த்தமற்ற, முற்றிலும் இயலாத, முட்டாள்த்தனமான காரணங்களுக்காகவே நிகழ்ந்துள்ளது. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்காகவே பண்பாடுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவை இன்றும் பண்பாடுகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

கடவுளை அறிவது, அதற்கு மேல் அறிய வேறு எதுவும் இல்லை என்னும் நிலையை அடைவதாகும். அது சாத்தியமா? சாத்தியம் என்றே கடவுளை அறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள், கூறுகிறார்கள். பெரும்பாலான மறைதத்துவங்கள், குறிப்பாக இந்திய மெய்ஞானத் தத்துவங்கள் அத்தகைய அறிதல் சாத்தியம் என்றே உரக்கக் கூறுகின்றன. பதஞ்சலி யோக சூத்திரங்கள் அதற்கான வழிமுறையை தர்க்கரீதியில் கூறும் இந்தியத் தத்துவங்களில் ஒன்று.

அறிதல் என ஒன்று உண்டென்றால் அது எங்காவது முற்று பெற்றாக வேண்டும். மூளையின் அதிகபட்ச அறிதலுக்கான சாத்தியம் இருந்தாக வேண்டும். ஒருவேளை அந்த எல்லைதான் அறிதலின் எல்லையாக இருக்கலாம். அல்லது கடவுளை அறிவதாக இருக்கலாம். எனில் அது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சாத்தியமானதே. நம் மனங்கள் அதன் உச்சக்கட்ட சாத்தியங்களை அடையட்டும்! கடவுள் என்பது வெறும் கருத்துக்களிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் நம் அறிதலாகவும் உணர்வாகவும் மலரட்டும்! கடவுளின் விஸ்வரூப தரிசனம் நம் அனைவருக்கும் சாத்தியமாகட்டும்!

Sunday, September 20, 2015

சு. வேணுகோபாலின் புது வாசகன்

சு. வேணுகோபால் சிறப்பிதழாக  07-09-2015 அன்று வெளியிடப்பட்ட பதாகை இணைய இதழில்  பதிப்பிக்கப் பட்ட கட்டுரை.

அனைத்துச் செயல்களுக்கும் எங்கோ நிகழும் சிறு தூண்டுதலை அவற்றின் தொடக்கப்புள்ளியாக வரையறுக்கலாம். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று இருப்பு ஒவ்வொரு மனிதனையும் அதன் மெல்லிய அழைப்புகளால் கணம்தோறும் தூண்டிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன் அவன் இயல்பிற்கேற்ப, தூண்டுதலை அறிந்து கொள்ளும் உணர்திறனின் வீரியத்திற்கேற்ப சில தூண்டுதல்களை மனதில் அடைகிறான். அவற்றிலும் மிகச் சிலவையே செயல்களாக தம்மை வெளிப்படுத்துகின்றன. மற்றவை அனைத்தும் அவன் மனதுக்குள்ளேயே அழிந்து விடுகின்றன. செயல்களின் அனுபவத்தில் வாழ்க்கை நிகழ்கிறது.

ஜூலை முதல் தேதியன்று மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுஎனக்கேயான ஒரு தூண்டுதல் காத்திருந்தது. அது என்ன என்பதில் முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. அப்போதிருந்த மனநிலை அத்தூண்டுதலை செயலாக மாற்றும் உத்வேகத்தையும் அளித்தது. ஒரு வேளை அந்நேரத்தில் வேறு மனநிலையில் இருந்திருந்தால் அது அப்போதே மரணத்தைக் கண்டிருக்கும். சு. வேணுகோபாலின் எழுத்துக்கள் குறித்து சில கட்டுரைகள் வழியாகக் கேள்விப்பட்டிருந்தவை, அந்தத் தூண்டுதலை உயிர்ப்புடன் வைத்திருந்து. அவருடைய சில புத்தகங்களை இணையம் வழியாக வாங்கினேன். தூண்டுதல் செயலாகத் தொடங்கி விட்டது. அதன் விளைவு எதுவாக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எல்லா அனுபவங்களும் கணநேர தூண்டுதல்களின் கண்ணிச்சரடுதானே!

இவ்வாறு மிகசமீபத்தில் நானும் சு. வேணுகோபாலின் வாசகன் ஆகி விட்டேன். முதலில் படிக்கத் தொடங்கியது, கூந்தப்பனை குறுநாவல் தொகுதி. கதைமாந்தர்களின் செயல்களும், அந்தச்செயல்களுக்குப்பின் இருக்கும் எண்ண ஓட்டங்களும், எண்ண ஓட்டங்களை வடிவமைத்த மனிதர்களின் இயல்புகளும், கதைமாந்தர்கள் வாழ்வில் ஆடும் ஆட்டத்தை இந்தக் கதைகள் விவரிக்கின்றன. நுண்ணிய மனஇயக்கங்களின் விவரிப்புகள், மனித மனதின் அழகுகளையும் முடிச்சுகளையும் வெளிப்படுத்துவதுடன் இவைகளைப்பற்ற வாசிப்புக்கு உதவுகின்றன..

'ஜக்கையன் அவர் முகத்தைப் பார்த்தான் இமைகளில் ஈரம் மினுமினுத்தது' என்று முடிகிறது கண்ணிகள் என்னும் கூந்தப்பனைத் தொகுதியின் முதல் கதை. விவசாயம் செய்து வரும் நிலத்தில், விவசாய ஆட்கள் பற்றாக்குறையால் வட்டிக்குக் கடன் வாங்கி, ஏற்கனவே இருக்கும் கிணற்றை விட்டுவிட்டு புது போர்வெல் வைத்து தென்னைகள் நடுகிறார் ரங்கராஜன். இந்த நிலையில் மகனை கல்லூரியில் சேர்க்க மாத வட்டியில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, வட்டிக்காரன் கெடுபிடியால் அது வாரவட்டிக் கடனாக மாறி, சில வாரங்களில் வட்டி அசலைத் தின்று விடுகிறது. வட்டி கொடுக்க முடியாததால் பொது இடத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, மரியாதையை இழந்து தோட்டத்தையும் இழக்கும் நிலைக்கு வருகிறார். ஒரே நம்பிக்கை அறுவடைக்கு வரப்போகும் திராட்சைத் தோட்டம். திராட்சை விளைச்சலை நல்ல விலைக்கு எடுப்பதாக ஆசை காட்டுகிறார், ஜார்ஜ் என்னும் வியாபாரியின் கணக்கப்பிள்ளை. ஆனால் இறுதியில் கிறிஸ்தவனாக மாறினால்தான் அவர்களால் திராட்சைகளை விலைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்னும் கண்ணியை வீசுகிறார்கள். மிக மென்மையாக அதைத்தவிர்த்து விட்டு ரங்கராஜன் வெளியே வருகிறார்.

பன்முகப்பண்பாட்டிலிருந்து ஒருமுகப்பண்பாட்டிற்கு அவர்களுக்கேயான காரணங்களால் நகர்ந்தவர்கள், அந்தப் பன்முகப்பண்பாட்டின் கூறுகளை இழந்து விடுவார்களா? அவர்கள் நோக்கமும் ஒருமுகத்தன்மையை அடைந்து விடுமா? அல்லது பன்முகத்தன்மையுடன் இருக்க இயலாதவர்கள்தான் அந்தப் பண்பாட்டை துறந்து விட்டு செல்கிறார்களா? அப்படி பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனாலும் அது ஒரு காரணமாகவும் இருக்கக் கூடும். கண்ணிகளின் இறுதி வரிகள் இந்தத் திசையையும் சற்றுத் திரும்பிப்பார்கத் தூண்டுகின்றன. அவர் கண்களில் கசிந்த ஈர மினுமினுப்பு இயலாமையினாலாபன்முகத்தன்மையின் மனவிரிவு அளிக்கும் இரக்கத்தினாலா அதுவும் இல்லையெனில் ஒருமுகத்தன்மையின் கூர்முனைத் தாக்குதலினாலா?

இந்தக் கதையில், துயரத்தை நோக்கி இட்டுச் சென்றாலும் மனம் ஆடும் விளையாட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரங்கராஜன் மகனை கல்லூரியில் சேர்க்க வட்டிக்கடன் வாங்க தானாகவே முடிவு செய்து விட்ட பின்னும் அவருக்கு ஜக்கையனின் ஆலோசனை தேவைப்படுகிறது. ஜக்கையன் அவரை யோசனை செய்யச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவருக்கேயான சாக்குபோக்குகள் வழியாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் ஆலோசனை தேவைப்படுகிறது. இது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் நடிக்கும் மனநாடகம்தானே? நாமே நடிக்கும்போது அது நாடகமாகத் தெரிவதில்லை. கதையில் அத்தகைய தருணத்தின் விவரிப்பு நம் இயல்பை உணரச் செய்து ரசிக்க வைக்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர், சிறு உதவிகளைச் செய்து அந்தச் செயல் அளிக்கும் மனநிறைவில் நிறைந்திருப்பது மிகவும் இயல்பானது. சமயங்களில் அதீத தன்முனைப்போ அல்லது தயக்கமோ அவற்றைச் செய்ய விடாமல் தடுக்கலாம். சு. வேணுகோபாலின் கதைகளில், தயக்கத்தின் மூலம் உதவிகளைத் தள்ளிப்போடுவதும், மற்றொருவர் தயக்கமின்றி அதே உதவியைச் செய்வதைக் கண்டு, தன் தயக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கண்டடைவதும் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விவரிப்புகள் இந்தக் கதைகளின் அழகுகள் எனத் தோன்றுகிறது. 'வேதாளம் ஒளிந்திருக்கும்' கதையில் இதைப்போன்ற இரண்டு தருணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பஸ்-ல் ஏறும் கால் ஊனமுற்றவர், ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருப்பவரை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டு அதில் அமர்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் இடுப்பில் கைக்குழந்தையுடன் ஏறி நெருக்கத்தில் அல்லாடுகிறார். சற்றுப் பின்னால் அமர்ந்திருக்கும் கதைச்சொல்லி, தன் அருகில் வந்தால் எழும்பி இருக்கையை அளிக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அந்த ஊனமுற்றவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அதில் அந்தப்பெண்ணை அமரச் செய்கிறார். இதே கதையில், இன்னொரு பஸ் பிரயாணத்தில் தன்னிடம் இருந்த பணம் திருடப்பட்ட நிலையில் ஒரு முதியவர் டிக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் கண்டக்டரிடம் இருந்து வசையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். கதைச்சொல்லி அவருக்கு உதவலாமா என எண்ணிக்கொண்டே, இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து போன ஒரு நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பள்ளி மாணவன் முதியவருக்கான டிக்கெட் வாங்கி விடுகிறான். மனதின் அழகுகளையும், அவற்றை வெளிப்படுத்தும் தயக்கங்களையும் இத்தகைய நிகழ்வுகளின் விவரிப்புகள் மூலம் சு. வேணுகோபால் அங்கிங்கு சித்தரிக்கிறார்.

'மெலிதாக கைகளில் படிந்திருக்கும்  ரோமங்களிலும், தோலிலும், எலும்பிலும்திசுவிலும், திசுவுக்குள் அணுவிலும், நகங்களிலும், உடலை முழுவதும் சுற்றி வரும் இரத்தத்திலும், இன்ன இடமென்று இல்லாமல் அவனுக்குள் அந்த வியாதி பதுங்கியிருந்தது'. 'அபாயச் சங்கு' கதையில் கதைநாயகனான சுரேந்திரனின் காமநோய் இப்படி விவரிக்கப்படுகிறது. காமம் மட்டும்தான் இப்படிப் பதுங்கியிருக்க வேண்டுமா? பொறாமை, பயம், பேராசை, வஞ்சகம் என எது வேண்டுமானாலும் உடலின் ஒவ்வொரு அணுவிலும் படர்ந்திருக்கும் வியாதியாகவும் இருக்கலாமே. அடுத்த வரியில் 'மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின் பிரதிபிம்பம் என்று சொல்லலாம்' என்று கூறி, நோயின் மூலமும் உணர்த்தபபடுகிறது.

சுரேந்திரன் கல்லூரியில் படிக்கும் வயதில் அந்த வீட்டிற்குக் குடிவருகிறார்கள். எதிர் வீட்டில் கோகிலா குடியிருக்கிறாள். அவளின் அம்மா ரத்னமணி. கோகிலா சுரேந்திரனை உசுப்பேற்ற, அவர்களுக்குள் காதல் வருகிறது. அரசாங்க வேலைக்கு லஞ்சம் கொடுத்து, அது தற்காலிக வேலை என்பது தெரியாமல், வேலையில் சேர்கிறான். அரசாங்க வேலை கிடைத்ததும், ரத்தனமணியும் அவர்கள் காதலை ஏற்பதுடன் ஊக்குவிக்கிறாள். ஆனால் தற்காலிக பணிக்காலம் முடிந்ததும் சுரேந்திரனுக்கு வேறு வேலைகள் கிடைக்கவில்லை. கோகிலாவுக்கு வேறு திருமணம் அவள் ஒப்புதலுடன் செய்து வைக்கப்படுகிறது. சுரேந்திரன் அவமானப்படுத்தப்படுகிறான், அவமானமடைகிறான். இதற்கு வடிகாலாக ரத்னமணியைக் காமத்தால் ஆள நினைக்கிறான்.. அவளும் உடன்படுகிறாள். காமம் அவனையே முழுமையாக ஆக்கிரமிக்கும் வியாதியாகப் பரவுகிறது. தன் நோயின் தீவிரத்தையும், அதன் காரணத்தையும் விளைவுகளையும் உணரும் தருணத்தில் நோயை அழிக்க, தற்கொலை செய்து கொள்கிறான்.

தன் இயலாமையை அறியும் சாதாரண மனிதன் அதை மறைக்கும் பாவனைகளை நடிப்பதும், அவை வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குவதையும்தான் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் காண்கிறோம். ஆனால் தன் இயலாமையை காலம் கடந்து அறியும் 'கூந்தப்பனை' கதையின் நாயகன் சதீஷ், அந்த இயலாமையை வெற்றி கொள்ள முயல்கிறான். அது இயலாமை மட்டும் அல்ல தன் உடலின் இயல்பும் அதுதான் என அறியும்போது அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தன்னிடமிருந்து மனமுவந்து விடுதலை அளிக்கிறான். அவன் பெருந்தன்மையை காண மறுக்கும் சமூகம் அதற்காக அவனை அவமதிக்கிறது. அதைவிட விடுதலை பெற்ற பெண்ணிடமிருந்தும் இயல்பாக வரும் அவமதிப்பு அவனைத் துரத்துகிறது. அவமதிப்பையும் இயலாமையும் சதீஷ் கடந்து சென்றடைந்த இடம், சற்றே நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு, எந்த சுயமுன்னேற்றம் குறித்த படைப்புகளும் அளிக்காத வாசிப்பனுபவத்தை அளிக்கும் சாத்தியமுள்ளது. கூந்தப்பனை என்னும் சொல், தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்துக் காய்க்கும் ஒரு வகையான பனை மரத்தின் பெயர் என்று இணையத் தேடுதல் மூலம் அறிந்தேன்.

சதீஷ், உடல் உறுதி உடையவன். அவன் உடல் பெண்களை மோகம் கொள்ள வைக்கிறது. ஹேமலதாவுடன் சதீஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளும் அவன் உடலைக்கண்டு மோகிக்கிறாள். திருமணத்திற்குப்பின்தான் சதீஷின் இயலாமை அவனுக்குத் தெரிய வருகிறது. அவனால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. ஏமாற்றத்தில் ஹேமலதா இடிந்து விட்டாலும் சமாளித்துக்கொள்கிறாள். அவனுடன் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சித்து, அவனையும் இயல்பாக்க முயற்சிக்கிறாள். ஆனால் சதீஷ் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தன் நண்பனுக்கும் ஹேமலதாவுக்கும் திருமணம் செய்வித்து அவர்களுடனே வாழ்கிறான். சமூகம் அவன் பெருந்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அவன் இயலாமையை மட்டும் அவனுடன் அடையாளப்படுத்துகிறது. தன்மனைவிக்கும் அவள் புதுக்கணவனுக்கும் தான் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவன் தன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். ஆனால் தன் இயல்பிற்கேற்ற வாழ்க்கையை அடைந்து, தன்னுள் இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் உச்ச கணத்தில்  கதை முடிகிறது. இந்த உச்சகணம்தான் அவனில் மலர்ந்த ஒரே மலர் என்பதைத்தான் கதை சொல்கிறது.

'வெண்ணிலை' சிறுகதைத் தொகுதி, முற்றிலும் வேறான வாசிப்பனுபவத்தை அளித்தது. என் பார்வையில், ஒவ்வொரு கதையும் மனிதனின் ஒரு சிறு தன்மையை, பெரும்பாலும் கவனிக்கப்படாத அல்லது எதிர்மறையாக பொதுபுத்தியில் விளங்கிக்கொள்ளப்படும் தன்மையின் அடிப்படையாக இருக்கும் அழகை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உதாரணமாக 'வெண்ணிலை' சிறுகதை. நண்பர்கள் சிலர் சினிமாவிற்கு மோட்டார் சைக்கிளில், மருத்துவமனை வாசல் வழியாகச் செல்கிறார்கள். 'சிக்னல்'-ல் கடந்து செல்லும்போது, ஒரு பெண் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்கிறார்கள். அந்தப்பெண் விபச்சாரியாக இருப்பாளோ, சினிமாவுக்குச் செல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு சுற்றலாமா என்னும் ரீதியில் இருவரும் பேசியவாறு தியேட்டருக்கும் சென்று சேர்ந்து விடுகிறார்கள். அந்தப் பெண், அவர்களுக்குத் தெரிந்தவள்தான் என்பதும் பின்னர் நினைவுக்கு வருகிறது. எதிர்பார்த்துச் சென்ற சினிமா மாற்றப்பட்டு விட்டதால், அதே வழியில் திரும்பி வருகிறார்கள். அந்தப்பெண் இன்னும் அங்கு நிற்கிறாள். இவர்களைக் கண்டதும், ஏதோ கேட்பதைப்போல பார்க்கிறாள். இவர்கள் சென்று விசாரிக்கும்போதுதான் அவள் இருக்கும் இக்கட்டு புரிந்து, அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். ஒரு செயலின் பின்னால் இருக்கும் நோக்கம் அறியப்படாமல் இருக்கும்வரை, அந்தச் செயல் மற்றவர் எண்ணங்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது, செயலின் பின் இருக்கும் உண்மை வெளிப்படும்போது, அது எவ்வாறு மற்றவர்களைத் தாக்குகிறது என்பது, கதையின் விவரிப்பில் இன்னும் அழகாக வாசகர்களைத் தொடுகிறது. அந்தத் தொடுதல் நிகழ்ந்தால், எண்ணங்களை உண்மையிலிருந்து பிரித்துப் பார்ப்பது சாத்தியமாகலாம்.

'வெண்ணிலை' தொகுதியில் வரும் 'சந்தர்ப்பம்' சிறுகதையை, அதைப் படிக்கும்போது இருந்த மனநிலை என்னை ரசிக்க வைத்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் வகுப்புத்தோழனின் அக்கா திருமணத்துக்காக பக்கத்து ஊருக்குச் சென்று, ஒரு இரவு அங்கு தங்குகிறார்கள். அங்கிருக்கும் நேரம் முழுவதும், அந்த வயதுக்கேயான கொண்டாட்டங்களை நிகழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவன் கதிரேசன். அவன் எல்லா எல்லைமீறல்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பதால் 'பிள்ளைப்பூச்சி' எனப்பெயர்பெற்றவன். கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, அடுத்தநாள் வீடு திரும்புகிறார்கள். கதிரேசனும் இன்னொருவனும் தவிர அனைவரும் வழியில் இறங்கிச் சென்று விடுகின்றனர். அவர்கள் இருவரும் பஸ்நிலையத்தில் இறங்கிச் செல்லும்போது, ஒரு இளைஞன் பெண் ஒருத்தியை மானபங்கப்படுத்துகிறான். கூட்டம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது. கொதிக்கும் ஒரு சிலரும் அவன் தன் கையில் வைத்திருக்கும், ஆயுதத்தைக் கண்டு பயந்து ஒதுங்குகிறார்கள். கதிரேசன் எதிர்பாராத ஒரு தருணத்தில், ஏதோ ஒரு தூண்டுதலில் பாய்ந்து அந்த இளைஞனை வீழ்த்துகிறான். அவன் நண்பனும் அவனுக்கு உதவுகிறான். அனைத்தும் முடிந்து விடுகிறது. ஆனால் அவன் இயல்பான பயம் மீண்டும் அவனிடம் ஒட்டிக்கொள்கிறது. தங்களை வீரர்களாக வரித்துக் கொள்பவர்கள், வீரம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதை ஒளித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் இயல்பிலேயே பயத்துடன் இருப்பவன், தேவையான நேரத்தில் பயத்தை மறந்து, வாழ்வின் தேவைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான்.

என் வாசிப்பும், ரசனையின் விரிவும் எல்லைக்குட்பட்டதுஅந்த எல்லைக்குள் அடைந்த வாசிப்பனுபவம், என்னளவில் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. என் ரசனை பெரும்பாலும் புறச்செயல்களை விட அக இயக்கங்களைப் புரிந்து கொள்ளும் நாட்டம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் காணும்போது இவ்வாசிப்பு ஒரு முழுமையான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். பெரும்பாலான கதைத்தருணங்கள் புற இயக்கங்களாக இருந்தாலும் அவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கும் எண்ண ஓட்டங்களை கற்பனை செய்வது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.

Saturday, August 15, 2015

போதையின் ஆட்சி

சிறகு இணைய இதழில் 01-08-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது.

தன் குடிமக்களை போதையில் ஆழ்த்தி, போதையின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து, அதில் வரும் வருமானத்தில் ஆட்சியை நடத்தும் அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக மீண்டும் மீண்டும் பெறும் துர்பாக்ய நிலையில் தமிழகம் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் சிந்திக்கும் திறனை போலிப்பிரச்சாரங்கள் மூலமும், மொண்ணைத்தனமான கல்வியின் மூலமும் திட்டமிட்டு அழித்து விட்டார்கள். தொடர்ந்து தங்களையே ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்கு அந்த மக்களாகிய நம் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் செய்யப்படும் சிறு வெறுப்புப் பிரச்சாரமும் சில இலவசங்களும் மட்டும் போதுமென்றாக்கி  விட்டார்கள். நாமும் சுபம் என்று அமைந்து விட்டோம். தன் வாலை உணவென உண்ண முயலும் பாம்பு போல, மக்களாட்சி சமூகத்தில் அரசியல்வாதிகள்  குடிமக்களை விழுங்கி தொடர்ந்து இந்த சமூகத்தை அதன் கீழ்மையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச சிந்தனையோட்டத்தை வளர்த்தெடுத்து, மது தமிழகத்தை முழுவதும் அழிக்கும்முன் பாதுகாத்தாக வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் முழு அழிவின் சாம்பலில் இருந்து புதிய சமூகம் எழுந்து வர காத்திருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தை பீடித்திருக்கும் கொலை நோய் போதை. தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் தினசரி மது அருந்துவதாகவும் இந்த  எண்ணிக்கை வருடத்திற்கு 8% கூடிக்கொண்டிருப்பதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்றால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு பத்து வருடங்களில், மது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர அனைவரும் இந்த அவலப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள்.

மது, ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் அவ்வப்போது வரும் கொண்டாட்டத் தருணங்களில் மட்டும் அருந்துவதை ஒரு பொழுதுபோக்கு அல்லது வாழ்க்கையைக் கொண்டாடுவது எனக் கருதலாம். ஆனால், வாழ்வதற்கே தினசரி மது அருந்தியாக வேண்டும் என்னும் நிலைக்கு வருவது போதைக்கு அடிமை ஆவது ஆகும். இது ஒரு நோய். அரசாங்கங்களே தன் குடிமக்களை வளர்ச்சி இலக்கு நிர்ணயித்து, இந்த நோய்க்குள் வலிந்து தள்ளுவது ஒரு முரண்நகை. ஆனால் அதுதான் நம் முன் நிதர்சனமாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் அரசாங்கத்தை நடத்தத் தேவையான வருமானத்தை உருவாக்கும் வழி எனத்தோன்றலாம். ஆனால் உண்மையில் அரசாங்கத்தை நடத்துபவர்களின், அவர்களைச் சார்ந்தவர்களின் சொந்த வருமானத்தை பெருக்கும் வழி இது. தமிழ் நாட்டில் மது தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், மது கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களோ நடத்தி வருபவை.

தமிழ்நாட்டில் மதுக் கொள்கைகள் குறித்த குறுகிய வரலாறு.
  1. 1938 - ம் வருடம் முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி அவர்கள்.
  2. 1948-ம் வருடம் மதராஸ் மாகாணம் முழுவதுக்கும்  மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல்வாராக இருந்தவர் ஒ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள்.
  3. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு 23 வருடங்களுக்குப்பின் 1971 - ம் வருடம் கள், சாராயம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL) ஆகியவை அனுமதிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர், தி.மு.. வின் கருணாநிதி.
  4. மதுக்கடைகள் திறப்பதற்கு அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக, 1973-ம் ஆண்டு கள்ளுக் கடைகளும் 1974-ம் ஆண்டு சாராயக்கடைகளும் IMFL கடைகளும் மூடப்பட்டன. தி.மு.. வின் கருணாநிதியே அப்போதும் முதலமைச்சராக இருந்தார். இந்த கால கட்டத்தில் மதுக்கடைகள் திறந்து மூடுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குஜராத், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆகவே மது விலக்கை ஊக்குவிப்பதற்காக, மதுவிலக்கு கொண்டு வரப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களுக்கு அந்த மானியம் வழங்க இயலாது  எனவும் அறிவித்தது. எனவே திராவிடக் கட்சிளுக்கே உரிய கிட்டப்பார்வை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தி.மு.. வும் மானியத்தைப் பெறுவதற்காக மதுவிலக்கை 1971-ம் ஆண்டு விலக்கிக்கொண்டு 1974-ம் ஆண்டு மீண்டும் அமல்படுத்தியது. காரணம் என்னவாக இருந்தாலும், அதன் பயனை தமிழகம் அனுபவிக்கத் தொடங்கி விட்டது.
  5. 1981-ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
  6. 1983-ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
  7. 1983-ம் ஆண்டு டாஸ்மாக் (TASMAC) எனப் பெரும்பாலான தமிழர்களால் தற்போது மந்திர உச்சாடனம் செய்யப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. இது சாராயம் மற்றும் IMFL ஆகியவற்றுக்கான மொத்த விற்பனைக்காக உருவாக்கப்பட்டது. அதாவது சாராய தயாரிப்பாளர்களுக்கும் சாராய விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்து அதன்மூலம் மாநிலத்தின் கருவூலத்துக்குப் பணம் சேர்ப்பதற்கு! அப்போதைய முதலமைச்சர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
  8. 1987-ம் ஆண்டு கள் மற்றும் சாரயம் மீண்டும் தடை செய்யப்பட்டது. ஆனால் IMFL-ன் ராஜாங்கம் தொடர்ந்தது. அப்போதும் எம்.ஜி. ராமச்சந்திரன் தான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் அவர் உடல் நலமில்லாத நிலையில் இருந்தார். அவர் சார்பில் ஆட்சி மற்றவர்களால் நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டது. ஒருவர் சார்பில், எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் வேறு சிலர் ஆட்சியை நடத்துவது. செய்யப்படும் எந்தத் தவறுகளுக்கும் யாரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை! இந்தப் பொறுப்பின்மையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள, தமிழக மக்கள் அப்போதே தயார் படுத்தப்பட்டிருந்தார்கள்!
  9. 1989 - ம் வருடம், தமிழ்நாடு எரிசாராய நிறுவனம் (TASCO - Tamilnadu Spirit Corporation Ltd.), வெளிநாட்டு மதுபானங்களை தயாரிப்பதற்காக தமிழக அரசால் நிறுவப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சர் தி.மு.. வின் கருணாநிதி.
  10. 1990 - ம் வருடம் TASCO மூலம் மீண்டும் சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது. இதுவும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது.
  11. 1991-ம் ஆண்டு சாராயம் மட்டும் மீண்டும் தடை செய்யப்பட்டது. IMFL தொடர்ந்து விற்பனையில் இருந்தது. இது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது.
  12. 2002 - ம் வருடம் டாஸ்கோ (TASCO) டாஸ்மாக் (TASMAC) உடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நிறுவனமாக மாற்றப்பட்டது. இதுவும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது.
  13.  2003-ம் ஆண்டு டாஸ்மாக் (TASMAC) IMFL - ன் சில்லறை விற்பனையையும் ஏற்றெடுத்தது. முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.

அதன் பின் டாஸ்மாக் - ம் மதுபான விற்பனையும் தமிழ்நாட்டு மக்களின் போதையின் அளவும் அதன் மூலம் உருவாகிய செயலின்மையும் நோய்களும் உற்பத்தி இழப்புகளும் வீறுநடை போட்டு தொடர்ந்து முன்னேறுகின்றன. அரசாங்கம் ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு விற்பனை இலக்கை நிர்ணயித்து அதன் மூலம் மக்களின் நோயின் பெருக்கத்துக்கும் சிந்தனைத் திறனை அழிப்பதற்கும் உற்பத்தி இழப்புக்கும் இலக்கு நிர்ணயிக்கின்றது. மக்களாட்சி அதன் கீழ்மையின் உச்சத்தை மீண்டும் மீண்டும் அடைந்து வருகிறது.

டாஸ்மாக் விற்பனையில் கிட்டத்தட்ட 88%, பல்வேறு வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு வருமானமாகச் செல்கிறது. மீதி 12% மட்டும்தான் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகளும், உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான செலவுகளும். 2014-15 -ம்  ஆண்டில் டாஸ்மாக்-ன் வருமானம் ரூ.26000 கோடிக்கு சற்றே அதிகம். இதில் கிட்டத்தட்ட ரூ. 22900 கோடி அரசாங்கத்திற்கு வருமானமாக வருகிறது. 2014-15 ம் ஆண்டில், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ. 1,33,188 கோடிகள். அதாவது தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 17% மது விற்பனையால் பெறப்படுகிறது. மக்களுக்கு போதையை அளித்துக் கறந்த இந்தப் பணம் அவர்களுக்கு இலவசங்களாக திருப்பி அளிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் வோட்டுகளாகவும் எதிர்கால ஊழலுக்கான ஊற்றுமுகமாகவும் மாற்றப்படுகிறது. கூடவே போனஸ் இலவசமாக மக்களுக்கு நோய்களும் அதன் விளைவான வாழ்க்கை பிரச்சினைகளும். தமிழக மக்களிடமிருந்து, இந்தத் தொடர்பை அறிந்து கொள்வதற்கான சிந்தனைத் திறன் நெடுங்காலமாக தொடர்ந்து திட்டமிட்டு தமிழகத்தின் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு விட்டது.

மீதி 12% வருமானத்தில் பெரும்பகுதி கூட அரசியல்வாதிகளுக்கே சென்று மீண்டும் அரசியல் விளையாட்டுகளுக்காகத் திருப்பி விடப்படுகிறது. அல்லது அரசியல் செய்வதன் இலாபமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக டாஸ்மாக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சித் தலைவர்களால் அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களால் நடத்தப்படுகிறது.

கீழ்கண்ட தகவல்கள் 11-01-2015 அன்றைய எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது. இவை டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து விற்பனைச் செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலானவையும் அவற்றின் அரசியல் தொடர்புகளும்.

1.    மிடாஸ் கோல்டன் (Midas Golden). இது சசிகலாவின் நெருங்கிய உறவினரால் நடத்தப்படுகிறது - சசிகலா யார் என்று தமிழகத்தில் இருப்பவர்களுக்குத் தனியாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
2.     எலைட் டிஸ்டில்லரீஸ் (Elite Distilleries). இது தி.மு.. வின் முன்னாள் எம்.பி. யும் தற்கால கல்வித்தந்தைகளில் ஒருவருமான ஜகத்ரட்சகனின் நிறுவனம்.
3.     எம்பீ குழுமம் (Empee Group) - முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் வயலார் ரவி-யின் மருமகளின் தந்தையின் நிறுவனம்
4.   கோல்டன் வாட்ஸ் (Golden Vats) -  தி.மு.-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு வின் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் நிறுவனம். எனில் அது எவரின் நிறுவனம் என்பதை உணரும் நிலையில் தமிழகம் உள்ளதா எனத் தெரியவில்லை.
5.   எஸ்.என்.ஜே. டிஸ்டில்லரீஸ் (SNJ Distilleries). தி.மு.. தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனம்.

மதுவை இவ்வாறு அள்ளித் தெளிக்கும் தமிழக அரசாங்கங்கள், இயற்கையில் கிடைக்கும் ஊட்டச்சத்துள்ள கள் என்னும் நேரடி விவசாயப் பொருளை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வேதிப் பொருட்களால் கலப்படம் செய்யாதது வரைக்கும் கள் ஒரு ஊட்டச்சத்து பானம் - அது போதையை அளித்தாலும். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் வறுமையில் இருக்கும் லட்சக்கணக்கானத் தொழிலாளர்களுக்கு ஒரு கௌரவமான சுயதொழிலாகவும் இருக்கத் தக்க ஒன்று. ஆனால் வறுமையில் இருப்பவர்களுக்குத் தொழில் வழங்கி அரசாங்கங்களுக்கு என்னக் கிடைக்கப்போகிறது? எங்கிருந்து இலவசங்களை வழங்குவார்கள்?

தமிழகம் எங்கும் மனிதர்கள் போதை தலைக்கேறி தெரு ஓரங்களிலும் குப்பை மேடுகளிலும் உறங்கி போதையை தணித்துக்கொண்டிருப்பதை காண்பது ஒன்றும் அதிசயமானது இல்லை. உண்மையில் அத்தகைய காட்சி காணக்கிடைக்காத நாள்தான் தமிழகத்தில் அதிசமான நாள்! அன்றாட கூலி வேலையில் வாழ்கையைக் கடத்தும் மக்கள் திரள்களில் தினம்தோறும் அரங்கேறும் போதை நாடகங்கள், அவல நாடகங்களாக முடிவடைகின்றன. அந்த சமூகத்தில் பெரும்பாலான ஆண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பவர்கள். அவர்கள் பெறும் கூலியில் பெரும்பகுதி டாஸ்மாக் நிறுவனத்திறகுச் செல்கிறது. அவர்கள் குடும்பங்கள் தொடர்ந்து வறுமையில்!

இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வர இருக்கும் இந்த நேரம், தமிழக மக்கள் விரும்பினால், எதிர்காலத்தில் மதுவுக்கான தடைகளைக் கொண்டு வருவதற்குத் தேவையான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான தருணம். உண்மையில் மதுவுக்கு எதிரான இயக்கங்கள் தொடங்கி விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் கட்சிகள் மதுவிலக்குக் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றன. மிச்சமிருப்பது ஒரு வருடம் மட்டும்தான். அதற்குள் மக்களின் எழுச்சி ஏற்பட்டாக வேண்டும். அந்த எண்ணங்களை சமூகத்தின் பொதுபுத்தியில் உருவாக்குவது, அதற்கான வாய்ப்புள்ள அனைவருக்கும் தவிர்க்க முடியாத கடமை.


மது இதுவரைக்கும் தமிழ்நாட்டில், நோய்கள் மூலமும் விபத்துக்கள் மூலமும் பலி வாங்கிய மனித உயிர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படிருக்காது. ஆனால் மதுவிலக்குக்காக முதல் உயிர் தமிழ்நாட்டில் பலி கொடுக்கப்பட்டு விட்டது. மதுவிலக்குக்காக தொடர்ந்து போராடிவந்த காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் 31-07-2015 அன்று போராட்டக் களத்தில் உயிரிழந்தார். பெரும் பொறுப்பு ஒன்றை தமிழக மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அவருக்கு அஞ்சலி.

blog.change@gmail.com


Sunday, July 12, 2015

விடுதலையுணர்வு

சொல்வனம் இணைய இதழில் 30-06-215 அன்று பதிப்பிக்கப் பட்டது........

முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்ந்தாலும், என் உடல் நலம் மீதான அக்கறை மீண்டும் ஒரு முறை எனக்கு வந்தது. கடந்த சில வாரங்களில், எதிர் கொள்ள நேரிட்டத் தொடர் உடல் நலம் சார்ந்த விசாரிப்புகள் அதை எனக்கு அளித்தன. அந்த விசாரிப்புகள் எரிச்சலைத் தூண்டினாலும், அவற்றை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு, ஒரு எளிய மருத்துவ சோதனையைச் செய்து கொண்டேன். எல்லா உடல் நல அளவீடுகளும் அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்குள்ளாகவே இருந்தது. நானே ஆச்சரியப்படும் அளவுக்கு, உடல் கொழுப்பின் அளவும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொழில் நிமித்தம் ஒவ்வொரு வருடமும் அடிப்படை மருத்துவ சோதனைகள் செய்து வந்திருந்தேன். இவ்வாறுச் செய்துகொண்ட சுமார் பத்து மருத்துவப் பரிசோதனைகளிலும் உடல் கொழுப்பின் அளவு, உணவுக் கட்டுப்பாடுகளையும் உடற்பயிற்சிகளையும் பொருட்படுத்தாமல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இப்போது உடல் ஆரோக்கியம் மிக நன்றாகவே இருக்கிறது. எனில், உடல் தோற்றம் என்னைப் பார்ப்பவர்களிடம் ஏன் அவ்வாறு கேட்கத்  தூண்டுகிறது?

என் தோற்றம் குறித்துப் பெரும்பாலும் நான் கவலைப்படுவதில்லை. அலங்கரித்துக்கொள்வதும் இல்லை. நடை உடை பாவனைகள் நெறிமுறைகளை (Protocol) பின்பற்றியாக வேண்டிய இடங்களையும் மனநிலைகளையும் கடந்து வந்துவிட்டேன். எனவே பெரும்பாலும் ஒரே 'ஜீன்ஸ்' மற்றும் ஒன்றிரண்டு 'டி-ஷர்ட்டு'கள் மட்டும்தான் என் உடையலங்காரம். முகத்தில் கறுப்பு வெள்ளையாக வளர்ந்துள்ள, இரண்டு வாரம்வரை வயதாகும் குறுமயிர்தான் முக அலங்காரம்! மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒட்ட வெட்டப்படும் தலைமயிர், முதலில் முள் போலவும், பின் கறுப்பு வெள்ளை நிறங்களில் சுதந்திரமாக வளர்ந்து அலைந்து கிடப்பதும் தலையலங்காரம். அத்துடன் செழிப்பை வெளிக்காட்டாத உடல் அளவுகள். இந்தத் தோற்றம் நோயில் இருந்து தற்போதுதான் மீண்டதான மனமயக்கத்தை அளிக்கும்தான். ஆனால், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே. அது பொய்யா? கண்களில் உயிரின் துள்ளல் தெரியவில்லையா? என் அகம் அழுக்குகளின் தொகுதியா? மனம் நோயுடன் உள்ளதா? ஊக்கத்துடன் மனம் உள்ளது என உணருவது, உண்மையில் கற்பனைதானா? உடல் என்னால் அறிந்து கொள்ள முடியாத நோயில் கிடக்கிறதா? என் முகத்தைப்பார்க்கும் பார்வைகளின் கோளாறா? இல்லை புற அலங்காரங்களால் தூண்டப்பட்ட வெறும் சம்பிரதாயக் கேள்வியா?

உயிர் தங்கும் உடல், எண்ணிலடங்காத தனிப்பட்ட இயக்கங்களின் ஒத்திசைவு. அந்த இயக்கங்கள் தடைப்பட்டால் அல்லது கட்டுப்பாடின்றி அதீத இயக்கத்தை அடைந்தால் அது நோய். மன இயக்கங்கள் தடை அல்லது அதீத நிலையை அடைந்தால் அது மன நோய். மனம் உடலின் பகுதி. எனவே உடலின் நோய் மனதிலும், மனதின் நோய் உடலிலும் மாறிமாறி வெளிப்படலாம்.  நோயை உணர்வுகளின் மூலம் அறியலாம். அதாவது உடலில் அல்லது மனதில் உள்ள நோயை ஆரம்ப நிலையிலேயே அறியமுடியுமா அல்லது நோய் முற்றிக் கனிந்த பின்தான் அறியமுடியுமா என்பது நம் உணரும் திறனுக்கான (Sensitivity) சவால். உணரும் திறன் மனக்குவியத்தைப் பொறுத்தது. உடலை அல்லது மனதை எத்தனை தீவிரத்துடன், எத்தனை ஆழத்துடன் நோக்க முடியும் என்னும் சவால். எந்த ஒன்றையும், அது பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தாலும், அதை ஊன்றிக் கவனிக்கும் செயலில்தான் உணரும் திறன் உள்ளது.

அனைவராலும் மிகவும் கொண்டாடப்படும் அறிவியலுக்கு அளவீடுகள்தான் (Measurement) அடிப்படை. உணர்வுகளை எண்ணிக்கையாகவும் அதனுடன் சேர்ந்த அலகாகவும் தெரிவிக்கும் ஒரு உத்தியே அளவீடு. அறிவியல், பெரும்பாலும் ஒரு புறநிகழ்வை கருதுகோள்கள் மூலம் சூத்திரங்களாக (Theorem) மாற்றி, கருவிகள் மூலம் அதை அளவிட்டு அந்த சூத்திரத்தை நிறுவுவது ஆகும். புலன்களால் உணர முடியாத புறநிகழ்வை, புலன்களால் அறியப்படுபவையாக மாற்றும் உபகரணங்கள்தான் அறிவியலின் கருவிகள். உதாரணமாக, கம்பியில் பாயும் மின்சாரம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால், அதைத் தொடுவதன் மூலம் உடல் பெறும் அதிர்வைக் கொண்டு அங்கு மின்சாரம் இருப்பதாக அறியலாம்ஆனால் உடல் அதிர்வை பெறும் அளவுக்குக் குறைவாகவோ அல்லது உடலை அழிக்கும் அளவுக்கு அதிக அதிர்வை அளிக்கும் மின்சாரத்தையோ அறிவதற்கு மின் அளவீட்டுக் கருவிகள் தேவைப்படுகின்றன. அவை ஓடும் மின்சாரத்தை எண்களாக மாற்றி நமக்குத் தெரிவிக்கின்றன. அந்த எண்களை எவ்வாறு மின் அளவீடாகக் கொள்ளவேண்டும் என்பதை அறிவியல் சூத்திரங்கள் விளக்குகின்றன.

கருவிகளின்உணர்திறன்தான் அவற்றை அறிவியலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றுகிறது. அளவிடும் கருவிகள் இல்லாத நாட்களில் அக உணர்வுகளே அறிவியலாக கொள்ளப்பட்டன. எனவே அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அந்தக் காலகட்டத்தில் வேறுபாடு இருந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்றும் இல்லைதான். ஆனாலும் அவற்றுக்கிடையே விரோதத்தை வளர்த்து விட்டிருக்கிறோம்! அளவிடப்படும் நிகழ்வில் ஏற்படும் எந்த குறைந்தபட்ச மாற்றத்தை ஒரு கருவியால் உணரமுடியுமோ, அது கருவியின் உணர்திறன் (Sensitivity) ஆகும். ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு உணர்திறனுடன் இருப்பது போல, கருவிகளும் அவற்றின் உணர்திறனில் மாறுபடும். அளவிடும் கருவிகளை, புலன்களால் உணரமுடியாத புற நிகழ்வுகளை உணர்ந்து நம் அகம் அறிய வைப்பவை என்பதால் அவற்றை உடலுக்கு வெளியே உள்ள புலன்கள் எனக் கூறலாமா?

அறிவுக்கு இன்றியமையாத தேவை உணரும் திறன். நம் உணரும் திறன் போதாமையை அடையும் இடங்களில் புற உலகக் கருவிகள் தேவையாகின்றன. இவை புற உணர்வுகளுக்கு மட்டுமே. அக உணர்வுகளை அடைய, திறனின் போதாமையுடன் இருந்தாலும், அதற்கான பௌதீகக் கருவிகள் எதுவும் இல்லை. நம் மனதையும் ஆர்வத்தையும், தீவிரத்தையுமே கருவிகளாகக் கொண்டு, அந்தப் போதாமைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. எனினும் புற உலகக் கருவிகள் அவற்றின் தேவையைக்கடந்து மனித வாழ்க்கையில் ஊடுருவும்போது, மனிதனின் இயற்கையான புலன்கள் அவற்றின் உணரும் திறனை இழந்து விடுகின்றனஇன்று மனிதர்கள், நம் உணரும் திறனை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம்! கருவிகள் நம்மை அடிமைப்படுத்தி வருகின்றன! இழக்கிறோம் என்பதைத் தெரியாமலே, கருவிகளிடம் சுதந்திரத்தை இழந்து வருகிறோம்.

ஒரு கருவி அளவிடும் அளவீட்டின் மாற்றத்திற்கு, கருவியின் அந்த அளவீட்டை உணரும் இயல்பு எவ்வாறு மாறுகிறது அல்லது தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் உணர்திறன் அமையும். கருவியின் இயல்பில் ஏற்படும் மாற்றமே அளவிடப்படும்  அளவீடு. மனிதர்களின் உணர்திறன் என்பது, குறுப்பிட்ட ஒரு உணர்விற்கு மூளை அல்லது மூளையின் நியூரான்கள் எவ்வாறு தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

கருவியின் அளவிடும் திறன், காலத்திற்கேற்ப மாறுபடாதது. குறைந்த பட்சம், அவற்றின் உபயோக காலத்தில் மாறுபடாதது. அதன் அளவிடும் திறன் மாறுபடத் தொடங்கினால், கருவி என்னும் தகுதியை இழந்து விடும். ஆனால் மனித மூளையின் திறன், மிகக் குறுகிய காலத்தில்  கூட மாறும். மனித மூளை அதன் செயல்பாட்டளவில்(Functionality) கோடானுகோடி நியூரான்கள் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்திருக்கும், ஒன்றை ஒன்று தூண்டும் அமைப்பை உடையது. அதன் உணர்திறனை இழப்பது, நியூரான்கள் செயல்படாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் உறையும்போது என்று தோன்றுகிறது. உதாரணமாக மனித நம்பிக்கைகள். நாம் அடையும் ஒரு நம்பிக்கை, ஒரு நியூரான் கூட்டத்தை, குறிப்பிட்ட ஒரு நிலையில் உறைந்து இருக்கச் செய்கிறதாக இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் அல்லது அந்த நம்பிக்கைகளுக்கான நியூரான் கூட்டம் அல்லது மூளையின் பகுதி, மனதின் எந்தத்திசையிலிருந்து தூண்டப்பட்டாலும் ஒரே விதமான எண்ணங்களை அல்லது முடிவுகளையே வெளியிட முடியும். அவை அந்த நம்பிக்கையை நம் எண்ணங்களாக, முடிவுகளாக வெளிப்படுத்துகிறதாக இருக்கலாம். அங்கு நுண்ணிய உணர்திறனுக்கு இடம் இல்லை. உறைதல் என்பது, மனதின் ஒருபகுதி நிகழ்காலத்தின் அறியப்படாத நிகழ்வுகளை அவை நிகழும்போது உள்ளவாறே அறியாமல், கடந்தகால அறிவான நம்பிக்கை போன்றவற்றின் மேல் ஏற்றி, அதற்கேற்ப நிகழ்வுகளை திரித்து அறிந்து கொள்வது என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது. அதாவது மனம் நிகழ்காலத்தை உள்ளவாறே அறிய முடியாமல், கடந்த கால அறிதல்களாகிய மனதின் உறைநிலைகளுக்கேற்ப மாற்றி அறிந்து கொள்வது.

நம்பிக்கைகளும் முன்முடிவுகளும் மரபணுக்கள் மூலமாகவும் மூளைக்குள் ஏற்றப்பட்டிருக்கலாம். சுற்றுச்சூழலும் வளரும் பண்பாட்டுப் புலமும் அளிக்கப்படும் கல்வியும் நம் மூளையின் எல்லா பக்கங்களிலும் இத்தகைய உறைதல்களை ஏற்படுத்தியிருக்கலாம். பிரக்ஞையின்றி மனதுக்குள் நுழையும் அன்றாட நிகழ்வுகளும் மூளையின் நியூரான்கள் தொகுதியை உறையவைத்துக்கொண்டே இருந்திருக்கலாம். ஜே.,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 'அறிந்ததிலிருந்து விடுதலை' என்று கூறியபோது, இந்த உறைதல்களை மீண்டும் உருக வைப்பதையே கூறியிருக்க வேண்டும்!

உடலிலும் மனதிலும் உருவாகும் நோயை அறிய நமக்கு அதீத உணர்திறன் தேவை. அத்தகைய உணர்திறன் இல்லாத பட்சத்தில், நோய் முற்றிக் கனிந்து உடலிலும் மனதிலும் வெளிப்பட்டப் பின்னர்தான் அறிய முடியும். அதையும் அறியும் திறன் இல்லையெனில், உடல் உயிரைத் தாங்கும் தகுதியை இழந்து விடும். அறியாமலே, கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை தொலைத்துச் சென்றுவிடுவோம். அவ்வாறு செல்வதற்கு விதியோ வேறு ஒன்றுமோ காரணம் இல்லை. நாமே தான் காரணமாக இருப்போம். உணர்திறனை இழக்க அனுமதித்ததன் மூலம்!

மனிதன் அவன் உணர்திறனை இழக்க முக்கியமான காரணங்களில் ஒன்று அவனிடம் சேரும் பணம்! உண்மையில் பணம் உணர்திறனை அழிப்பதில்லை. பணம் நிலையில்லாதது. பணத்தின் இயல்பே ஓடிக்கொண்டிருப்பதுதான். ஓட்டத்தை நிறுத்தி விட்டால், பணம் என்னும் மதிப்பை இழந்து விடுகிறது. காரல் மார்க்ஸ் அவர்கள், பணத்தின் இந்த இயல்பை மூலதனம் நூலில் மிக அழகாக விவரித்திருப்பார். ஆக ஓடி வந்து சேரும் பணத்தை எந்த திசையில் திருப்பி ஓட விடவேண்டும் என்பதை அறியாதபட்சத்தில், நம் உணர்திறனை அழிக்கும் திசைக்கு அது செல்வது மிக இயல்பாக நிகழ்ந்து விடும்.

வாழ்வின் ஒருகட்டத்தில் இந்த உண்மை (என நான் கருதுவது) எனக்கு உறைத்தது - இது என் மூளையின் ஒரு நியூரான் கூட்டம் உறைநிலைக்கு சென்றதனாலும் இருக்கலாம், அல்லது உருகியதனாலும் இருக்கலாம்! எனக்கு தொழில்நுட்பப் படிப்பு படிக்கவும் அதன் பின், தேவைக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலில் (கூலித் தொழில்தான்) ஈடுபடவும் வாய்ப்புகள் அமைந்தன. இதன் காரணமாக, ஒப்பு நோக்கையில், மிக வேகமாகவே என் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பொருளாதார ஆதாரங்களை நெருங்கி விட்டதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட 15 வருட தொழில் வாழ்க்கையிலேயே இந்த எண்ணத்தை அடைந்து விட்டேன்.

அரசாங்க நிர்வாக வேலைகளைத் தவிர, எல்லாத் தொழில்களும், நுகர்வாளர்களுக்கு தேவையானதை அளிப்பற்காகவே செய்யப்படுகின்றன. இன்றைய சந்தைப் பொருளாதார இயக்கத்தில், அரசாங்க நிர்வாக வேலைகளில் பெரும்பாலானவையும் நுகர்வுப் பெருட்களை நோக்கியே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டிருப்பது, மறைமுகமாக நுகர்வைத் தூண்டும் செயலே. இந்தப் பின்னணியில், நாட்டின் (அல்லது சார்ந்திருக்கும் சமூகத்தின்) பொருளாதார சுபிட்சத்திற்காக, சுய தேவையை அடைந்த பின்னும், வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இன்றைய சந்தைப்பொருளாதாரத்தில் உண்மையில் யாரும் சமூகத்தில் தேவைப்படுபவர்களுக்காக உழைக்கவில்லை. பெருமுதலாளிகளுக்காக மட்டுமே உழைக்கிறோம். அந்த முதலாளிகள் அளிக்கும் ஒரு சிறிய வரித்தொகை, சமூகத்தின் நலிந்தவர்களுக்காக, அரசாங்க நிர்வாகங்களின் எல்லாச் சுரண்டல்களையும் கடந்து, இன்னும் சிறியதாகிச் செல்கிறது. என் உழைப்பையும் பூமியின் இயற்கை ஆதாரங்களையும் சுரண்டும், என் கண் முன் இல்லாத முதலாளிகளுக்காக உழைப்பதை விட்டு விட்டு, என் சுபிட்சத்திற்காக எவரையும் சுரண்டாமல் ஏன் உழைக்கக் கூடாது என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது. இதுவும் இன்றைய நிலைக்கு என்னை திசை திருப்ப உதவியது.
மூன்று வருடங்களுக்கு முன், சாதாரணமாக வேலை ஒன்றும் செய்யத் தேவை இல்லாத, ஆனால் நல்ல வருமானத்தை அளித்த நிரந்தரத் தொழிலை விட்டு விட்டு, வாய்ப்பு கிடைத்தால் Freelancer - ஆக கொஞ்ச நாட்கள் வேலை செய்யலாம் என முடிவெடுத்தேன். தங்கள் நட்பு வட்டத்திற்குள் என்னை சேர்த்துக்கொள்ள பெருந்தன்மையுடன் அனுமதித்ததன்  காரணமாக, என் இயல்பை சற்று அறிந்த சிலரின் மூலம் அந்த வாய்ப்பும் கிடைத்தது. மூன்றாண்டுகள் அவ்வாறு ஓடியும் முடிந்து விட்டது. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் செய்வதை குறைத்துக்கொள்ளவும் தொடங்கினேன். (அல்லது அதுவாகவே குறைந்தது). தற்போது கிட்டத்தட்ட முழுவதும் நின்று விட்டது. ஒருவேளை மீண்டும் வாய்ப்புகள் வந்தால், இன்னும் குறைவாகவே, கொஞ்சநாட்கள் கூட அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்!

இந்த முடிவை எடுப்பதற்கு முன், சில பொருளாதார முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. அடிப்படையில் நான் கொஞ்சம் கஞ்சத்தனம் உடையவன். (உண்மையில் அது கஞ்சத்தனம் இல்லை என்றாலும், இன்றைய வாழ்க்கை முறையில் அவ்வாறே கருதப்படும்) எனவே இந்த முடிவுகளை எடுப்பது அத்தனை கடினமாக இல்லை.

முதலாவதாக, சேர்க்க வேண்டிய செல்வம் என் மற்றும் என் சகதர்மிணியின் வாழ்வின் இறுதிவரைக்கும் தேவையானதும், வாரிசுகள் அவர்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுவரையுமான தேவைகளுக்கானதும் மட்டுமே. அதற்கு மேல் எதுவும் சேர்த்து வைக்க வேண்டும் என்றோ, தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்றோ சற்றும் ஆர்வம் இல்லை. இரண்டாவதாக வாரிசுகளின் கல்விச் செலவு. அவர்களுக்கு ஆர்வமுடைய கல்வியில், திறமையிருக்கும் அளவிற்கு அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய சேமிப்பு. திறமை இருந்தால், இந்தியாவில் மேற்கல்வி ஒன்றும் அத்தனை செலவைக் கேட்பதில்லை. நம் ஆசைக்கு அவர்களை படிக்க வைக்க விரும்பினால்தான் கல்விக்கு இந்தியாவில் அதிகச் செலவாகும் (தற்போதைய நிலவரப்படி. சந்தைப்பொருளாதாரத்தின் ஓட்டத்தில் இது மாறலாம்). அவர்கள் ஏதேனும் கல்வியில் ஆர்வமுடன் இருந்தால் அதற்கான தகுதியை அவர்களே அடைந்து விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை அவர்களுடையது. அவர்கள் இங்கு அவதரிக்க நானும் காரணமாக இருந்ததுடன், அவர்களே அவர்களுக்கான பொறுப்பேற்பதுவரைக்கும் போஷிப்பது மட்டுமே என்னால் செய்ய முடிந்தவை. இவற்றை என் எல்லைக்குட்பட்டு முழுமையாக செய்ய முடிந்தால், அதன் பின் அவர்களைப்பற்றி, அவர்கள் எவ்வாறு வாழ்ந்தாலும், கவலைப்படுவதற்கான தேவையும் இல்லை. கவலைப்படுவதால் ஆகக்கூடியதும் இல்லை.

இந்த முடிவுகள் எனக்கு அளவிட முடியாத பொருளாதார சுதந்திரத்தை அளித்தன. இன்றைய சந்தைப்பொருளாதாரம், எனக்குத் தேவையான செல்வத்தை அளித்தது. நான் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருந்திருக்கக் கூடும். சமூகத்தில் பெரும்பான்மையினர் வாழ்க்கைத் தேவைகளுக்காக மரணிக்கும்வரைக்கும் உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தேவைகளின், எனவே உழைப்பின் எடையால் வாழ்க்கையை அதன் உண்மையான அர்த்தத்தில் வாழ முடியாத நிலையில் இருக்கிறார்கள். உழைப்புக்கான பொருளாதாரத் தேவை என்னை விட்டு அகன்ற பின்னும், அதிலிருந்து வெளிவர முடியாமல் அங்கே உழன்று வாழ்க்கையை வீணடிப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

கிட்டத்தட்ட அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். இன்னும் சில அடிகள்தான். முழுவதும் வந்து விடுவேன். மனித உடல் உழைப்புக்காகவே அதன் வடிவத்தை, இயல்பை, பரிணாம வளர்ச்சியின் மூலம் அடைந்திருக்கிறது. எனவே பொருளாதாரத் தேவை இல்லாவிட்டாலும் உடலுக்கு உழைப்பு மிக அவசியம். ஆனால் எப்போது எவ்வாறு உழைக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க என் கையில் வந்துவிட்டது! உடல், உழைப்பை வேண்டும்போது அதை உடலுக்கு அளிக்க எனக்கு காணி நிலமும்(?!) உள்ளது. அங்கு வியர்வை சிந்த உடல் கேட்கும் உழைப்பை அளிப்பதிலும் மனத்தடைகள் இல்லை. அந்த உழைப்பால் எந்த பொருளாதார குறிக்கோள்களும் இல்லை என்றாலும். கர்ம யோகி! உடல் ஓய்வைக் கேட்டால், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தேவையான ஓய்வை அளிக்க முடிகிறது. பொழுது போக்கு என்னும் கருதுகோளுக்கே இடம் இல்லை. உடலும் மனமும் கேட்பவற்றை அளிக்க முடியாமல் அவற்றை திசைதிருப்பி விடுவதால்தானே அவை சோம்பல் (Boredom) என்னும் எதிர்வினையை அளிக்கிறது. எனவே பொழுதுபோக்கையும் கேட்கிறது. எனக்குத்தேவையானது, தேவையான போது நிகழ்கிறது, நிகழ்த்த முடிகிறது - ஒரு எல்லைக்குள்! வாழ்க்கையில் இதைவிட என்ன வேண்டும்?

இத்தனை சுதந்திரமாக இருந்தாலும், என் முகத்தில் நோயிலிருந்து மீண்ட களைப்பு தெரிகிறதா? அகத்தின் துள்ளல் முகத்தில் தெரியவில்லையா? மனதுக்கும் உடலுக்கும் இடையில் உணரமுடியாத திரை உள்ளதா? அவ்வாறு இருக்கும் எனில், என் உணர்திறன் இன்னும் தேவையான குறைந்தபட்ச அளவைக்கூட   எட்டவில்லையோ? நான் உழைத்தாக வேண்டும். உணர்திறனை கூர்மைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கேள்வியை கேட்பவர்களுக்கு, முகத்தில் தெரியும் அக அழகைக் காண முடியவில்லையா? அவர்களை குறைகூற எனக்குத் தகுதியில்லை. தேவையும் இல்லை.


எனக்குத் தேவையான உழைப்பை அளித்தாக வேண்டும். அந்த உழைப்பு, இன்று என் முகம் நோக்கி கரிசனத்துடன் உடல் நலத்தை விசாரிப்பவர்கள், நாளை என் முகத்துக்குப் பின்னால் 'கிறுக்கன்' என்று விளிக்கவும் வைக்கலாம். அதைக் கேள்விப்பட நேர்ந்தால், அகம் நிறைந்த புன்னகையுடன் எதிர்கொள்ளும் மன நிலையை அடைந்தாக வேண்டும். அதற்கு இன்னும் உழைத்தாக வேண்டும். முதலாளிகளுக்காக உழைக்காமல் இருந்தாலும், எனக்கே அளித்தாக வேண்டிய பெரும் உழைப்பு காத்திருக்கிறது! வாழ்க்கையும்!

blog.change@gmail.com