சிறகு இணைய இதழில் 19-12-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது. சிறகு தமிழில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை தமிழின் அழுக்குகளாகப் பார்க்கிறது. எனக்கோ அது தமிழின் அணிகலன்களாகத் தெரிகிறது. நான் 'ஜனநாயகம்' என்று எழுதியிருந்ததை 'சனநாயகம்' என்று அவர்களின் தொகுப்பின்போது மாற்றிவிட்டார்கள். நான் அவர்களையும், அவர்கள் என்னையும் சார்ந்திருக்க வேண்டியிருகிறது. இந்த சார்பு இருக்கும்வரை சமரசங்கள் தேவைதான் - இருபக்கங்களிலும். கீழே நான் எழுதியவாறே!
சென்னையில் மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப்
பலிகளுடனும் பெரும் பொருட் சேதங்களுடனும், பல மனிதர்களின் வாழ்க்கையின் மேல் இருந்த
நம்பிக்கைளுடனும். இத்தகைய சேதங்களுக்குப் பின்னும் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது.
வந்தாக வேண்டும். அதுதான் நியதி. அது மனிதர்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் அடையாளம்
காட்டிச் சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும்போது அடையாளங் காட்டுவதைப்
போல. அங்கு நாம் கண்ட மேன்மைகளும் கீழ்மைகளும் எத்தனை நாள் நம்முடன் இருக்கப் போகிறது
என்பதே நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் அளவுகோல். பேரழிவுகள் வரும் இடங்களில் எல்லாம்
மனிதர்களின் உன்னதமும் இழிவுகளும் சேர்ந்து வெளிப்படுவது இயல்பானதுதான். அதுதான் மனிதகுலத்தைத்
தொடர்ந்து இருக்க வைக்கிறது. ஆனால் அவற்றின் மூலம் மனிதர்கள் அடைவதுதான், அந்தந்த நாகரீகங்கள்
தொட்டிருக்கும் அல்லது தொடப்போகும் உச்சங்களை அடையாளம் காட்டுபவை.
இந்தப் பேரழிவு, நாம் அடைந்திருக்கும் நாகரீகத்தின் உச்சத்தை நமக்குக் காட்டுமா?
அழிவின் தருணத்தில் வெளிப்படும் உன்னதங்கள் மிக இயல்பானவை. பேரழிவின் தாண்டவம் மனித
உணர்வுகளைத் தூண்டுவதால், இயல்பாக அந்த உன்னதங்கள் அந்தந்த மனிதர்களின் இயல்பிற்கேற்ப
வெளிப்படும். இங்கு அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். இவர் எதுவுமே செய்யவில்லை
போன்ற புலம்பல்கள் அர்த்தமில்லாதவை. களத்தில் இறங்காதவர்கள் இவற்றைப்பார்த்துக் கவலையற்று
இருந்தார்கள் என்பது சரியானதல்ல. அவரவர் இயல்பிற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள்.
இயல்பிற்கேற்ற களப்பணிகளை செய்திருப்பார்கள். இவை பற்றி பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள்
எல்லாம் களப்பணி செய்தவர்கள் அல்ல. அவ்வாறு செய்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அனைவரும்
பேரிழப்பின் உணர்வெழுச்சிகளை அடைந்திருப்பார்கள்.
இங்கிருந்து நாம் எங்கு சென்று சேரப்போகிறோம் என்பதுதான் பேரிழப்பின் மூலம் பெற்ற
உணர்வெழுச்சிகளின் வீரியத்தைக் காட்டுபவை. உண்மையில் நாம் அடைந்த உணர்வெழுச்சிகள் வீரியமுடையவையா
அல்லது அந்த நேரத்தில், அந்த நேரத்திற்காக மட்டும் ஏற்பட்ட உணர்வெழுச்சிகளா? அவை எவ்வகையானவைகளாக
இருந்த போதும், அப்போதைய இடரில் இருந்தவர்களுக்கு உதவியது. அந்த வகையில் அங்கு உருவாகிய
உணர்வெழுச்சிகள் மகத்தானவை.
அந்த இடர் அப்போதைய இயற்கை நிலையால் மட்டும் உருவானதா? இந்தக் கேள்வியும் பேரிடரிலிருந்து
மீண்டு கொண்டுருக்கும்போதே மிகப் பரவராக விவாதிக்கவும் பட்டது. மழை ஒரு நிமித்தமாக
இருந்த போதிலும் அழிவின் உண்மையான காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் அவர்களின்
வாழ்வாதாரங்களையும் சிந்தனைகளையும் சகமனிதர்கள் அதிகாரத்தின் துணை கொண்டு தங்கள் பேராசைக்காக
சுரண்டியதுதான். இது பேரிடரின்போது நிகழ்ந்த தொடர் விவாதங்களின் மூலம் பெரும்பான்மையான
மக்களைச் சென்றடைந்துள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?
ஐனநாயகம் மக்களின் சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சமூகமாகத் தங்கள்
தேவை என்ன? அவற்றை நிறைவேற்றும் தகுதி படைத்தவர் யார்? தகுதிபடைத்தவர் எனத் தங்களை
முன்நிறுத்துபவர்கள் உண்மையில் சமூகத்தின் தேவைக்காக தங்களை முன்நிறுத்துகிறார்களா
அல்லது தங்கள் சுயதேவைகளுக்காக அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறார்களா? இவை ஒரு சிந்திக்கத்
தெரிந்த சமூகத்தின் ஜனநாயக இயக்கத்தில் எழும்பும் அடிப்படைக் கேள்விகள். துரதிர்ஷ்டவசமாக
நம் சமூகம் ஜனநாயகக் கடமையாற்றும்போது மிக அடிப்படையான சிந்திக்கும் திறனையும் ஒதுக்கி
வைத்துக் கொள்கிறது. அப்போதைய அவர்கள் உணர்வுகளை தட்டியெழுப்பும் திறன் வாய்ந்தவர்கள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள். ஜாதி மதம் போன்ற எளிதில் உணர்வுகளைத் தட்டியெழுப்பும்
பிரிவினை உத்திகளுக்கு சமூகம் தன்னை இழக்கிறது. சமீப காலங்களில் சில இலவங்கள் கொடுக்கப்படும்
என்னும் அறிவிப்பே சமூகத்தின் சுரணைத் தன்மையை இழக்க வைக்கப் போதுமானதாக இருக்கிறது.
இந்தப் பேரிடரின்போது இத்தகைய சமூக நிலைகளுக்கு எதிரான கூக்குரல்களை மிகப்பரவராகப்
பார்க்க முடிந்தது. இப்போதையத் தேவை இவற்றை அடங்காமல் சிலகாலம் வைத்திருப்பதற்கான முயற்சிகள்.
பேரிடரின்போது சமூகம் அடைந்த உணர்வெழுச்சிகளை சற்றுகாலம் தொடர்ந்து இருக்கச் செய்வதற்கான
முயற்சிகள். அது நம்மால் முடியுமா? முடிய வேண்டும்.
பேரிடரின்போது உண்மையான மக்கள் தலைவர்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உருவாகி
வந்தார்கள். தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள். இழந்தவர்களுக்குத் தேவையானதை வழங்குகிறார்கள்.
இவர்களுக்கு அரசியல் உணர்வு இருந்தால், உண்மையான பேரிடர் சில நாட்கள் பெய்த மழையும்
அடித்துச் சென்ற வெள்ளமும் அல்ல என்பதை உணர்வார்கள். உண்மையானப் பேரிடர் நம்மையும்
இயற்கையையும் சுரண்டும் அதிகாரத்தை கைக்கொண்டவர்கள் கையில் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை
அழிப்பதுதான் என்பதை உணர்வார்கள். அந்தப் பேரிடலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க தங்கள்
தலைமைப் பண்பை முழுவதும் பயன்படுத்துவார்கள். இங்கு தலைமைப்பண்பு என்பது அரசியலில்
அவர்கள் ஈடுபட்டு அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என்பதல்ல. மாறாக தங்கள் தேவைகளையும்
பாதுகாப்பையும் இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு, கையறு நிலையில் இருப்பவர்களுக்காகத்
தங்கள் செயலூக்கத்தை அளிப்பது.
சென்னையைப் புரட்டிப்போட்டுச் சென்ற இந்த மழை இன்னும் இரண்டு வாரங்கள் தாமதித்திருந்தால்,
நிர்வாகம் செய்ய வேண்டிய அரசாங்கமே மழை வேண்டி யாகங்களை செய்திருக்கும். தேடிப்பார்த்தால் கிடைக்கும் தகவல்கள்
கலங்கடிக்கின்றன. ஏரிகளும் குளங்களும் காணாமல் சென்றிருக்கின்றன. இருப்பவை வருடத்திற்கு
வருடம் தேய்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் எல்லா அண்டை மாநிலங்களுடனும் நீருக்காக
(அல்லது வோட்டுகளுக்காக) நீர் அரசியலில் ஈடுபடுகிறோம். சமூகத்தில் அண்டைமாநிலத்து மக்கள்
மேல் வெறுப்பை உருவாக்குகிறோம். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கடல் உள்ளது.
இல்லை எனில், அவர்களிடமும் நீருக்காக கையேந்தியிருப்போம். அதன் மூலம் மக்களிடம் வெறுப்பை
உருவாக்கி இந்த இழிமக்கள் வோட்டுகளை அள்ள முற்பட்டிருப்பார்கள்.
இது ஏதோ சில அரசியல்வாதிகளால் மட்டும் உருவான நிலையல்ல. இத்தகைய அரசியல்வாதிகளிடம்
தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கும் மேலாக அரசாளும் பொறுப்பை மாற்றி மாற்றி கையளித்த
நம் ஒவ்வொருவரின் தவறுகளால் உருவான நிலை. நம் தவறுகளுக்கு என்ன பிராயசித்தம் செய்யப்
போகிறோம். அல்லது இவ்வாறே இயற்கை வழங்கும் தண்டனைகளான வெள்ளங்களையும் பஞ்சங்களையும்
எதிர்கொள்ள சித்தமாகி விட்டோமா? மதுவை அள்ளித் தெளிக்கும் அரசாங்கங்களை நடத்தும் இவர்களிடம்
மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, மதுவில் மயங்கி உணர்விழந்து கிடப்பதே
போதுமானதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் என்பது தனிப்பட்ட நானோ நீங்களோ அல்ல.
ஒரு சமூகமாக நாம் அனைவரும். சமூகம் எடுக்கும் முடிவுக்கு தனிப்பட்ட நம் விருப்பு வெறுப்பு
எவ்வாறாக இருந்தாலும், தனிப்பட்ட ஒவ்வொருவாரும் பொறுப்பானவர்கள் - நாம் விரும்பும்
மாற்றத்தை சமூகம் ஏற்றுக் கொள்வதற்கான உழைப்பை அளிக்காததன் மூலம்.
இன்னும் சில மாதங்களில் பிராயசித்தம் செய்ய ஒரு வாய்ப்பு நம் சமூகத்துக்கு அளிக்கப்படும்.
சமூக மாற்றத்தை நாம் விரும்பினால், நம் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள விரும்பினால்,
நம்மை அரவணத்துச் செல்லும் இயற்கையை சீண்டாமல் இருக்க விரும்பினால் நாற்பது வருடங்களுக்கும்
மேலாக ஒரு சமூகமாக நாம் செய்து வரும் தவறை திருத்தியாக வேண்டும். கல்வியை தனியாருக்கு
தாரைவார்த்து விட்டு, இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடித்து வெறும் மதிப்பெண் வாங்கும்
இயந்திரங்களாக மாற்றியவர்களை ஒட்டுமொத்தமாக நம்மை ஆளும் பொறுப்பிலிருந்து விடுவித்தாக
வேண்டும். நீராதாரங்களைச் சுரண்ட அனுமதித்தவர்களை ஒட்டு மொத்தமாக அரசியலை விட்டு விரட்டியாக
வேண்டும். பொதுச் சொத்துக்களை தங்கள் சொத்துக்களாக மாற்றியவர்களையும் மாற்ற அனுமதித்தவர்களையும்
மீண்டும் நம்முன் வராமல் துரத்தியாக வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்னும் சிலமாதங்களில்
நமக்குக் கொடுக்கப்படவிருக்கிறது.
இங்கு தனிப்பட்ட முறையில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை.
ஒரு சமூகமாக அந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு சமூகமாக நாம் அரசியல்உணர்வை அடைந்தாக வேண்டும். சமூகத்தில் அரசியல்
உணர்வை பரவச் செய்யவேண்டும். அரசியல் என்னும் வார்த்தை எப்போதும் எதிர்மறை அர்த்தத்தில்தான்
இங்கு சாதாரண மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.
அது மாற்றப்பட வேண்டும். அரசியல் என்னும் கருத்தின் மேல் புரிதலை உருவாக்க வேண்டும்.
பொதுவானவற்றின் மேல் அதிகாரத்தை அடைவதையும், அந்த அதிகாரத்தை வெளிப்படுத்துவதையும்
அதை அடைவதற்கான இயக்கங்களையும் அரசியல் என்னும் பொது வார்த்தையில் குறிப்பிடலாம். ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள் தொடர்புறும் எல்லா இடங்களிலும்
பொதுவானவை இருக்கக்கூடும். அது உறவாடும் ஏதேனும் இருவருக்கிடையில் உள்ளதாக இருக்கலாம்,
ஒரு குடும்பத்தினுள் உள்ளதாக இருக்கலாம், ஒரு அலுவலகத்தினுள் உள்ளதாக இருக்கலாம், ஒரு
இடம் அல்லது பகுதியை சார்ந்ததாக இருக்கலாம், ஓரு சமூகத்தினுள் உள்ளதாக இருக்கலாம் அல்லது
நாட்டிற்குள் உள்ளவையாக இருக்கலாம், அதற்கும் மேல் தளத்தில் உலகம் முழுவதுக்கும் பொதுவானதாகவும்
இருக்கலாம். ஆக, அரசியலின் குறைந்தப்பட்ச அலகு, ஏதேனும் இருமனிதர்கள் உறவாடும் தளங்களிலேயே
தொடங்கி விடுகிறது.
அரசியல் உணர்வுடன் சேர்ந்து இருக்க வேண்டிய இன்னொன்று அற உணர்வு. அற உணர்வு இல்லாத
அரசியல், வெறும் அகங்காரத்தின் இயக்கமாக மாறி விடும். துரதிர்ஷ்டவசமாக இன்று அரசியல்
உணர்விலிருந்து அற உணர்வு விலக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் அரசியல் என்றாலே எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அற
உணர்வில்லாமல் அரசியல் இல்லை. ஆக இன்று நாம் அரசியல் என்று கூறுவது உண்மையில் அரசியல்
அல்ல. அது அற உணர்வை விலக்கி விட்டு, துஷ்ட உணர்வை ஏற்றி வைத்திருக்கும் 'துரசியல்'.
இன்று நாம் 'துரசியலை' துரத்திவிட்டு அரசியலை அதன் இடத்தில் அமர்த்த வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். ஒரு சமூகமாக நாகரீகத்தின் அடுத்த உயர் தளத்திற்குச் செல்ல விரும்பினால்
இது தவிர்க்க முடியாதது. இல்லையனில் வெகு வேகமாக நாகரீகத்தின் கீழ் தளங்களுக்குத் தள்ளப்படுவோம்.
அரசியல் உணர்வு அதன் அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். அதாவது தனிநபர்
உறவுகளிலிருந்து. எங்கெல்லாம் இன்னொரு மனிதருடன் தொடர்பில் வருகிறோமோ அங்கெல்லாம் 'துரசியலை'
துரத்திவிட்டு அரசியல் உணர்வைக் கொண்டுவர வேண்டும். எனில் இயல்பாகவே முழுசமூக அளவிலும்
'துரசியல்' விலகிவிடும். ஒரு சமூகமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து அடைந்து வந்த நாகரீகம் நிலைத்திருக்க,
உயர்தளங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த அரசியல் உணர்வை நாம் அடைந்தாக வேண்டும். அதுவும்
மிக அவசரமாக. இன்னும் சில மாதங்களுக்குள்! வரும் தேர்தலுக்கு முன். சென்னையில் வெள்ளம்
கொண்டுவந்த அரசியல் உணர்வு முழுவதும் வடிந்து உலர்வதற்கு முன்!
நாற்பது வருடங்களாக 'துரசிலை' நடத்தியவர்கள் அனைவரையும் அதைக் கைவிட வைக்க வேண்டும்.
இவர்களின் தொடர் ஆட்சி அதிகாரங்கள் ஏற்படுத்திய அழிவை விட அதிகமாக, ஒரு கூட்டணியாட்சி
அதிக அழிவுகளைக் கொண்டு வந்துவிட முடியாது. அதிகப்பட்சமாக அது சமூக முன்னேற்றத்தை தற்காலிகமாகத்
தாமதப் படுத்தலாம். ஆனால் கூட்டணியாட்சி சமூக மாற்றம் நிகழ்வதற்கு ஒரு அடித்தளத்தை
அமைத்துத் தரக்கூடும். அதுவருங்காலத்தில் துரசியலை
விலக்கி வைக்கத் தேவையான சிந்தனைகளை உருவாக்கித் தரக்கூடும்.
பின் குறிப்பு; இதை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது 'தி ஹிந்து' தமிழ் நாளிதழில்
அரசியல் உணர்வு குறித்து சமஸ் (http://writersamas.blogspot.in) அவர்கள் எழுதி வரும்
தொடர் கட்டுரைகள். அவருக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment