Tuesday, August 23, 2011

போராட்டம், ஆன்மீகம்

போராட்டம் – இந்த வார்த்தை கடந்த சில நாட்களில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், நாம் லொகீக வாழ்க்கை தளத்தில் இருப்பவர்களானால், நாம் சமூக அமைப்பினுள் வாழவே தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து – என் சிந்தனையின், உணர்வுகளின் அடிப்படையில்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.

ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.

லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.

நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.

நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!

Friday, August 12, 2011

தர்க்க புத்தியும்(Logical Mind), ஆன்மீகமும்.

தர்க்க புத்தி ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கருவி, ஆனால் அதன் எல்லைகளை மீறினால், ஆன்மீக வளர்ச்சிக்கு தடைகல்லாகவும் மாறக்கூடும். தர்க்க புத்தி என்பது, நாம் பெற்ற வாழ்வியல் அறிவை நம் பொருளியல் மற்றும் தத்துவ சிக்கல்களிலிருந்து விடுபட உபயோகிப்பதாகும். ஆன்மீகம், நம் உணர்வின் உச்சத்தை, வாழ்வின் எல்லையை நோக்கி பயணிப்பதாகும். ஒரு எல்லைக்கு மேல் தர்க்க புத்தியும், உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டு நம் சமநிலையை குலையச் செய்யலாம் – அந்த எல்லை தனிமனித இயல்பை பொறுத்த்து. ஆக நம் வாழ்வின் சமநிலையை உறுதி செய்ய, நம் இயல்பில், தர்க்க புத்தி மற்றும் உணர்வுகளின் இடத்தை அறிந்து, அதற்கான இடத்தை உறுதி செய்வது மிக அவசியம்.

நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.

நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.

நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.

இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.

வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.

ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.


நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!

Saturday, August 6, 2011

மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்

பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஒரு செல் உயிரினத்திலிருந்து, இன்றைய மனிதனாக நாம் உருவெடுத்திருக்கிறோம். பல ஆயிரம் (அல்லது சில லட்சம்) ஆண்டுகளாக உருவமும் சிந்தனையும் வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதனாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த பரிமாண வளர்ச்சியின் வேகத்தையும் திசையையும் ஒரளவேனும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நம்மால் உணர முடியலாம். அந்த விழிப்புணர்வு நமக்கு கிட்க்கப்பெற்றால், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக கூட நம்மால் மாற முடியலாம்.

ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.

பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.

உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.

மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.


பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.

Sunday, July 31, 2011

செல்வம், பணம்

சமுதாய அமைப்பினுள் வாழும்போது, நம் வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான, ஆனால் மிக மிக அதிகமாக நம் உளவியல் சக்தியை விரயம் செய்விக்கும் ஒரு கருத்து செல்வம் அல்லது பணம் என்னும் கருத்து ஆகும். ஆனால், அந்த இன்றியமையாத, அதேநேரத்தில் நம் உளவியல் சக்தியை விரயம் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை வாழ்வு என்பதன் உண்மையான அர்த்தத்தில் நாம் வாழ்வதிலிருந்து நம்மைப் பிறழச்செய்யும் பணத்தைக் குறித்த அறிவு, நம்மில் பெரும்பாலானவர்க்கு, மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது, இங்கு பணத்தைக் குறித்த அறிவு என்பது, சமூக அமைப்பில் பணத்தின் பங்கு, நம் வாழ்க்கையில் பணத்தின் சரியான பயன்பாடு, பணம் குறித்த நம் உளவியல் தேவைகள் என்பனவாகும்- மிக முக்கியமாக, உளவியல் தேவைகள். பணம் குறித்த இந்த அடிப்படை அறிவு நமக்கு கிடைக்கப்பெற்றால், ஒருவேளை பணத்தைக் குறித்த உளவியல் செயல் பாடுகள் மூலம் நம் உளவியல் சக்தி விரயமாவதை ஓரளவேனும் தடுக்க முடியலாம்.

முதலில் பணத்தின் பொருளியல் பயன்பாடு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் தேவைகளை முடிவு செய்வது நாமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களே நமது தேவைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் - நம் உளவியல் தேவைகளை தூண்டுவதன் மூலம். ஆக நமது தேவைகளை நாமே முடிவு செய்வதற்கான குறைந்த பட்ச அறிவும் விழிப்புணர்வும் கூட இல்லாமல் இருக்கிறோம். பொருளியல் தேவைகளைக் குறித்த அறிவை நாம் பிறரிடமிருந்து பெறலாம். ஆனால் அந்த தேவையை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு பிறரால் ஏற்படுத்தப் பட்ட உளவியல் தாக்கங்கள், நம் தேவையை முடிவு செய்யாத வகையில், நம் மனதின் செயல்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். பணத்தின் பொருளியல் பயன்பாடு என்பது, நமக்குத் தேவையென நம்மால் முடிவுச் செய்யப்பட்ட தேவைகளை அடைவதாக மட்டுமே இருக்க முடியும். இந்தத் தேவைகள் பொதுமைப் படுத்த முடியாதவை- தனி மனித இயல்பை சார்ந்தது. ஆக நமது தேவை என்பது நமது இயல்பு, நமது சூழலுடன் இயைந்து செல்வதற்கான பொருளியல் தன்மைகளை உருவாக்குவது அல்லது அடைவதாகும்.

ஒரு சமூகச் சூழலில், நமது பொருளியல் தேவைகளை நமது உழைப்பால் மட்டும் உருவாக்குவது என்பது இயலாதது. நமது தேவைகளை சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பலரின் உழைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும். நமது உழைப்பின் பகுதியை மற்றவர்களுக்கு வழங்கியும், மற்றவர்களின் உழைப்பின் பகுதியை பெற்றும் நம் பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். ஆக நாம் சமூகத்திற்கு அளிக்கும் உழைப்பையும், சமூகத்திலிருந்து பெறும் உழைப்பையும் அளவிட வேண்டியது அவசியமாகிறது. இந்த அளவீடே பணம் என்னும் கருத்தாகும். ஆக நாம், நமது உழைப்பையே பணமாக சேமிக்கிறோம் – நமது உழைப்பை சேமிக்கும்போது அது நேர்மையான சம்பாத்யம், பிறர் உழைப்பைச் சுரண்டி சேமிக்கும்போதி அநியாய சம்பாத்யம்.


நாம் எந்த அளவுக்கு நமது உழைப்பை சேமிக்க வேண்டும்? அது நமது தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. ஆனால், நம் உழைப்பின் தேவையை நாம் மதிப்பிட வேண்டுமானால், நம் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். விழிப்புணர்வு என்பது, நமது மற்றும் நமது சந்ததியின் தேவைகள் என நம் மனம் உருவாக்கும் கற்பனைகள் அல்ல – கற்பனை என்பது வெறும் மன பிம்பங்களே, அவை ஒருபோதும் நமது தேவைகளாக இருக்க முடியாது. நமது இயல்பு மற்றும் சமூகக் கடமைகளை மனம் உணரும்போது, மனதால் நமது தேவைகளையும் உணர முடியும். நமது தேவை என்பது நம் மனம் அதன் கற்பனைத் திறனால் உருவாக்கும் தேவைகள் அல்ல, ஆனால் மனம் உணரும் தேவைகள் – மனதின் கற்பனைக்கும், மனதின் உணர்வுக்கும் இடையான வித்தியாசத்தை நம்மால் அறிய முடிந்தால் மட்டுமே நம்மால் நமது உண்மையான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். ஆக நம் வாழ்வின் அடிப்படையை, வாழும் முறையை அறிந்து கொள்ளவே பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நாம் உழைப்பை சேமிப்பதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையை வாழ்வதற்காக உழைக்கவில்லை – வாழ்க்கையை, வாழும் முறையை, அறிந்தால் மட்டுமே நம்மால் நம் வாழ்க்கையை வாழ முடியும்.

ஆம், நம் உயிர்ப் பிழைத்தலுக்கு தேவையான உழைப்பைத் தவிர உள்ள உபரி உழைப்பினை மட்டுமே சேமிப்பு அல்லது வாழ்க்கையை அறிதலுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு நாம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது கற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், தங்கள் எளிய உழைப்பினால் மட்டுமே கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தகைய நாம், நமது உபரி உழைப்பின் சிறு பகுதியைக் கூட நமது சொந்த வாழ்க்கையைக் குறித்து கூட அறிந்து கொள்ளச் செலவிடாமல், மனதால் கற்பனை மூலம் உருவாக்கப் படும் தேவைகளுக்காக சேமித்துக் கொண்டே இருக்கிறோம். ஆக நம் உயிர் பிரியும் தருணம்வரை நம் தேவைகளும் பூர்த்தி ஆவதில்லை, நம் உழைப்பிலிருந்து நமக்கு விடுதலையும் இல்லை.

நாம் இறக்கும் தருணம்வரை நம் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளாமலே, எனவே நம் வாழ்க்கையை வாழாமலே நாம் இறந்து விட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆக நம் வாழ்க்கையை அறிந்து கொள்ளத் தேவையான உபரி உழைப்பையும் நம் கற்பனையில் உருவான தேவைகளை அடைவதற்காகவே சேமித்து, நம் வாழ்க்கையையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறோம். உபரி உழைப்பை நம் வாழ்விற்காக செலவிடாமல் பணமாக, செல்வமாக, பொருளாக, நம் இறுதிவரை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆக நம் மனம் உணரும் தேவைகளுக்காக செலவிடப்படும் பணம் அல்லது உழைப்பு, நம் பொருளியல் தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாகும். இந்த செலவிடுதல், தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது. நம் மனம் கற்பனைச் செய்யும் தேவைகளுக்காகச் செலவிடப் படும் பணம் அல்லது உழைப்பு, நம் உளவியல் தேவைகளுக்காக செலவிடப் படுவதாகும் – இதுவே வீணாக்கப்படும் உழைப்பு அல்லது சக்தி ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உபரி உழைப்பை நமது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவழிப்பது\சேமிப்பது அல்லது நம் உளவியல் தேவைகளுக்காக செலவழிப்பது\சேமிப்பது (வீணாக்குவது) என்பது, நமது உளவியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதாவது, நம் மனம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அது கற்பனையில் உழலாது, உணர்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்!

Friday, June 17, 2011

இயலாமை

நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாக காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை!

உலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்த பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்த பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்க கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்க கூடும்.

ஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்தி பார்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது, அவற்றின் தம்மைதாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும். அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியை பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கம். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும் – அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.

மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம்! அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழ தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது. ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்!

ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்க தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்க கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.
எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாக பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்க கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து! மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்க கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.

மனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளை கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.

மனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது!

இந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்க கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே! அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம்! அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.

Saturday, June 11, 2011

கலாச்சாரம், மனம்

நம் மனதின் தேவைகளே – உளவியல் மற்றும் பொருளியல் தேவைகள், நமது கலாச்சாரமாக வெளிப்படுகிறது. எனவே நமது கலாச்சாரத்தை முழுவதுமாக அறிந்து கொள்வது, நம் மனதை அறியும் முயற்சியின் திறவுகோலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகம் என்பது நம்மை நாமே அறிந்து கொள்வதாகும் – அதாவது நம் மனதை அறிந்து கொள்வது. நம் மனம் என்பது, தற்போதைய உணர்வு நிலையில், நாம் மனமென அறியும் மேலோட்டமான உணர்வுகள் மட்டும் அல்ல. மனதின் உண்மையான செயல்பாடு, தற்போதைய நம் உணர்வு நிலையில், பெரும்பாலும் உள்மனம் (subconscious) ஆழ்மனம்(unconscious) பொது ஆழ்மனம்(collective unconscious) ஆகிய நிலைகளிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும். இடைவிடாத இயக்கத்தில் இருக்கும் மனத்தின் வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து ஒரே அறியும் மனமாக உணரும் முயற்சியே ஆன்மீகம் ஆகும். எனவே மனதின் ஆழ்மன நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கலாச்சாரத்தை குறித்து அறிந்து கொள்வது, நம் மன இயக்கத்தை அறிந்து கொள்ளும் முயற்சிக்கு உதவக் கூடும்.

நம் மனதின் கலாச்சார கூறுகள் இரண்டு வழிகளில் மனதில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆழ்மனதின் கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் மரபணுக்கள் மூலமாக நாம் பெற்றிருக்க கூடும் – நமது வாழ்க்கையின் சூழல்கள் மூலம் நம் மனதினுள் நுழைந்து, நமது விழிப்புணர்வின்மையின் காரணமாக ஆழ்மனதினுள் சேர்ந்து விட்ட கூறுகள் தவிர. இரண்டாவதாக, நாம் வாழும் சூழலில் நாம் சார்ந்திருக்கும் மற்றும் நம்மை சார்ந்திருப்பவர்களிடம் கொண்டிருக்குமு உறவுகளின் இயக்கங்கள் மூலமாகவும் கலாச்சாரம் நம் மனதினுள் நுழைகிறது – இது மிகவும் வெளிப்படை. கலாச்சாரம் பெரும்பாலும் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகளும், நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் கட்டுப்பாடுகளும், மனதின் இயக்கத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நம்முடைய மனதின் செயல்களை ஒரு வரையறைக்குள் இருக்கச்செய்து, நாம் வாழும் சூழலின் சமன்நிலைத்தன்மை குலையாமல் இருக்க உதவுகிறது

ஆக, கலாச்சாரம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம் மனதின் இயங்கு சக்தியை கட்டுப்படுத்துகிறது. மனம் அதன் எல்லைகளை அடையவிடாமல் செய்கிறது. அதாவது, கலாச்சாரம் நம் விடுதலையை பறிக்கிறது. ஆனால், நம் சுதந்திரத்திற்காக கலாச்சாரத்தை புறந்தள்ளி நாம் சுதந்திரம் என கருதுவதை நிலைநாட்டினால், நாமே நமது சமுதாய அழிவிற்கு மூல காரணி ஆகி விடுவோம் அல்லது சமூகத்தால் அழிக்கப்பட்டு விடுவோம். இங்குதான் ஆன்மீகம் நமக்கு தேவைப்படுகிறது. நாம் கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே நேரத்தில் அந்த விடுதலை மற்றவர்களின் அல்லது நமது அழிவுக்கும் காரணமாகக் கூடாது. இங்கு விடுதலை என்பது கலாச்சாரத்திற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் அல்ல, நமக்கு தேவையானவற்றைச் செய்ய கலாச்சாரம் தடையாக இல்லாமல் இருப்பது மட்டுமே.

இதற்கு ஒரே வழி, கலாச்சாரத்தை நம் மனம் கடந்து செல்வதேயாகும் – கலாச்சாரத்தை ஒதுக்கி புறந்தள்ளுவதாக இருக்க முடியாது. கலாச்சாரத்தை அறிந்து கொள்வதன் மூலமே நம்மால் கலாச்சாரத்தைத் கடந்து செல்ல முடியும். அவ்வாறு, கலாச்சாரத்தை அறிந்து, அதை கடந்து செல்லும்போது நம் எந்த செயலும், அந்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமூகத்தினுள் எந்த விதமான எதிர்மறை சலனங்களையும் ஏற்ப்படுத்தாது. நமது வாழ்க்கையிலும் எதிர்மறை சலனங்களை உருவாக்காது. இத்தகைய வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை!

Wednesday, June 8, 2011

கலாச்சாரம்

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை இயங்கு சக்தி. இது அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களுடனும், தங்கள் தேவைகளுடனும் ஆன உறவு அல்லது தொடர்புகளின் வலைப்பின்னலே. பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது இல்லாமல் எந்த சமூகமும் இருக்க முடியாது. ஒரு கலாச்சாரத்தின் சில கூறுகள் மற்ற கலாச்சாரங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டவைகளாக இருக்கலாம். மற்ற சில கூறுகள் விலக்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த ஏற்றுகொள்ளப்பட்ட அல்லது விலக்கப்பட்ட கூறுகள், அந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் இயங்கும் சமூகத்தின் பொருளியல் மற்றும் உளவியல் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

ஆக, ஒரு பண்பாடு அல்லது கலாச்சாரத்தின் அடிப்படை இயங்கு முறை, அந்த சமூக உறுப்பினர்களின் பொருளியல், உளவியல் தேவைகளை பொறுத்தே அமையும். ஒரு கலாச்சாரத்தின் பொருளியல் கூறுகளை அறிந்து கொள்ள, அந்த சமூகத்தில் நிகழ்பெறும் வெளிப்படையான நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் குறைந்த பட்ச நுண்ணறிவே போதுமானது. ஆனால் உளவியல் தேவைகளை அவ்வாறு எளிதில் வரையறுத்து கொள்ள முடியாது. தனிமனித அளவிலும், சமூக அளவிலும் உளவியல் தேவைகள் மிக, மிக விரிவானவை. மேலும் இந்த உளவியல் தேவைகள் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்புடையது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உளவியல் தேவைகள், ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு மிக வேகமாக விரியும்போது அல்லது சுருங்கும்போது, அந்த சமூகம் அதன் கட்டுக்கோப்பை இழக்க நேரிடும். கட்டுக்கோப்பை இழந்த சமூகத்தின் அங்கத்தினர்களின் உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் முரண்பாடுகள் சமன்நிலையை இழந்து அந்த சமூகத்தை அழிவுக்கு எடுத்துச்செல்லும்.

ஆக ஒரு சமூகம் அதன் இருப்பை உறுதி செய்ய, அதன் அங்கத்தினர்களின் உளவியல் வீச்சின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. பண்பாடு அல்லது கலாச்சாரம் எனப்படுவது இந்த உளவியல் வீச்சின் வரையறைகளையே. அதாவது, கலாச்சாரம் என்பது சமூகத்தின் அங்கத்தினர் இடையே உள்ள உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் வரையறை. இந்த உளவியல் வரையறைகள் நம்பிக்கைகள், சடங்குகள், குடும்ப உறவுகள் போன்றவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூகத்தின் உளவியல் தேவைகள் பொருளியல் கூறுகளின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தின் மூலமே நிலை நிறுத்தப்படுகிறது. சமூக அங்கத்தினர்கள் கலாச்சாரத்தின் எல்லைகளை மீறும்போது கலாச்சாரம் அழிவதுடன் அந்த கலாச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்ட சமூகமும் அழியத்தொடங்கும். எனவே சமூக அமைப்புக்குள் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த கலாச்சாரத்தை குறித்த குறைந்த பட்ச அறிவு மிக மிக அவசியம். இது தனி மனித தேவை மட்டும் அல்ல, அந்த சமுதாயத்தின் தேவை – சமுதாயம் அதன் உளவியல் தேவைகளை சமன் நிலையில் வைத்துக்கொள்வதற்காக. ஆனால் கலாச்சாரம் மாறாத ஒன்று அல்ல. காலம் செல்லும்தோறும், காலத்தின் தேவைக்கேற்ப, இயற்கையான சுற்றுச்சூழல் மாறுதலுக்கேற்ப, கலாச்சாரம் விரிவடைந்து கொண்டே செல்லும். அந்த விரிவு, கலாச்சாரத்தின் நிறுவப்பட்டுள்ள வரையறைகளை ஒட்டியே இருக்க முடியும். மேலும் அந்த கலாச்சார விரிவு, அந்த சமூகத்தில் தோன்றும் சிந்தனையாளர்கள் மற்றும் சமூகப்போராளிகள் மூலமும் முன் எடுத்துச் செல்லப்படலாம்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, இந்த சிந்தனையாளர்களும் சமூகப்போராளிகளும், புதிய கலாச்சார விரிவுகளை, ஏற்றக்கொள்ளப்பட்ட கலாச்சார எல்லைகளை சார்ந்தே முன்னெடுத்து செல்ல முடியும். இவர்கள் அந்த கலாச்சாரத்தை குறித்த அதிகபட்ச அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்களாகவே இருக்க முடியும். ஒரு கலாச்சார கூறுகளை எற்றுக்கொள்ளாமல், அந்த கலாச்சார விரிவுகளை ஒருவர் முன்னெடுத்துச்செல்ல முடியாது. அவ்வாறு செல்ல நேர்ந்தால், அது அந்த கலாச்சார அழிவுக்கு வழிவகுக்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, கலாச்சாரம் பல பல தலைமுறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. அதன் அழிவையும் ஒரே தலைமுறைக் காலத்தில் காண முடியாது. ஆகவே கலாச்சாரத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் அக்கலாச்சாரத்தின் அழிவை அறிந்து கொள்ள முடியாது. எனவே கலாச்சார போராளிகள் என்னும் அறைகூவல் பெரும்பாலும் எவ்வாறு வெறும் மேலோட்டமாக இருக்குமோ, அதேபோல கலாச்சார அழிவு என்னும் கதறலும் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும்.

ஆனால், கலாச்சார விரிவுக்கான தூண்டுதல் எப்போது தோன்றுனாலும், அதற்கான எதிர்மறை இயக்கமும் உடனே தோன்றும். இந்த முரண்பாடுகள் ஒன்றாக சேர்ந்து இயங்கி, அந்த கலாச்சாரத்தை சமன்நிலையில் இருக்கச் செய்யும். ஆகவே, அந்த சமூகமும், கலாச்சார நகர்வை எடுத்துச் செல்லும் சிந்தனையாளர்களும், சமூகப் போராளிகளும் சில அடிப்படை தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, சமூகத்தின் சமன்நிலை குலையாமல் கலாச்சார முன் நகர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த அடிப்படை தகுதி, கலாச்சாரத்தை முன் எடுத்துச் செல்லும் முயற்சியினால் உருவாக்கப்படும் முரண்பாடுகளை நேர்மையுடன் எதிர்கொள்ளும் உறுதியே.

கலாச்சாரம் சமன்நிலையில் இருப்பது என்பது, ஒரு சமூகத்தினுள் நிகழும் பொருளியல் மற்றும் உளவியல் முரண்பாடுகள் அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காமல் இருப்பதாகும். கலாச்சார மாற்றங்கள் கூட அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காதவரைதான் அந்த கலாச்சார மாற்றத்தை கலாச்சார முன் நகர்வாக கருத முடியும். ஒருவேளை அந்த கலாச்சார மாற்றம், சமூக இயக்கத்தின் இயல்புத் தன்மையை குலைத்தால் அது கலாச்சார முன் நகர்வாக இருக்க முடியாது. மாறாக அது கலாச்சார அழிவின் அறிகுறியாகவே இருக்க முடியும்.