Friday, August 12, 2011

தர்க்க புத்தியும்(Logical Mind), ஆன்மீகமும்.

தர்க்க புத்தி ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கருவி, ஆனால் அதன் எல்லைகளை மீறினால், ஆன்மீக வளர்ச்சிக்கு தடைகல்லாகவும் மாறக்கூடும். தர்க்க புத்தி என்பது, நாம் பெற்ற வாழ்வியல் அறிவை நம் பொருளியல் மற்றும் தத்துவ சிக்கல்களிலிருந்து விடுபட உபயோகிப்பதாகும். ஆன்மீகம், நம் உணர்வின் உச்சத்தை, வாழ்வின் எல்லையை நோக்கி பயணிப்பதாகும். ஒரு எல்லைக்கு மேல் தர்க்க புத்தியும், உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டு நம் சமநிலையை குலையச் செய்யலாம் – அந்த எல்லை தனிமனித இயல்பை பொறுத்த்து. ஆக நம் வாழ்வின் சமநிலையை உறுதி செய்ய, நம் இயல்பில், தர்க்க புத்தி மற்றும் உணர்வுகளின் இடத்தை அறிந்து, அதற்கான இடத்தை உறுதி செய்வது மிக அவசியம்.

நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.

நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.

நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.

இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.

வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.

ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.


நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!

No comments: