Saturday, December 29, 2012

முழுமை


ஒவ்வொரு உயிரினமும், அவற்றின் ஒவ்வொரு துடிப்பின் மூலமும் முழுமையை நோக்கிய பயணத்தையே நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒவ்வொரு போராட்டமும் முழுமைக்காகவே நிகழ்கின்றன. ஆம் மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் பல பரிமாணங்களை உடைய மனம் இல்லை. ஆகவே அவற்றால் முழுமையான வாழ்க்கையை தவிர வேறு எந்த வாழ்க்கையையும் வாழ முடியாது. ஏனெனில், அவற்றின் விருப்பு எதுவோ அதை நிறைவேற்றுகின்றன அல்லது விருப்பை நிறைவேற்றுவதற்கான செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றன. மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவற்றின் கடந்தகால அனுபவங்கள் நுண்ணறிவு சார்ந்தவையாக மட்டுமே இருக்க முடியும். கடந்த காலத்தை எதிர்காலமாக கற்பனை செய்யும் எந்த இயக்கங்களும் அவற்றில் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே அகம் சார்ந்த வாழ்க்கை என்றும் புறம் சார்ந்த வாழ்க்கை என்றும் இரட்டை வாழ்க்கை அவற்றிற்கு இல்லை. அவற்றின் அகம் எதுவோ அதுவே புறவாழ்க்கையாகவும் வெளிப்படுகிறது. அத்தகைய வாழ்க்கையே முழுமையான வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால் முழுமையான வாழ்க்கை வாழ்கிறோம் என்னும் அறிதல் இல்லாமல், அத்தகைய அறிதலின் ஆனந்தம் இல்லாமல்!

மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. ஆனால், அந்த அனுபவத்தை அடைவதற்கு இரட்டை வாழ்க்கை என்னும் கீழ்மையை தாண்ட வேண்டிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. எதுவும் நமக்கு மட்டும் அல்ல, எந்த உயிரினத்துக்கும் இலவசமாக கிடைப்பதில்லை. உலகின் மகா இயக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் அவை வாழ்வதற்கான விலையை எந்த வகையிலாவது கொடுத்தாக வேண்டும். நாமும் இந்த விதிக்கு விலக்கு உடையவர்கள் அல்ல!

நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனம் எவ்வாறு வாழ விரும்புகிறதோ அவ்வாறே வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையால், மனம் விரும்புவதன் மூலம் மனதினுள் மட்டும் வாழும் அகவாழ்க்கை ஒன்றும், புறவய இயலாமைகளால் கட்டுப்படுத்தப்பட்ட புறவயமான வாழ்க்கை ஒன்றும் என இரட்டை வாழ்க்கை இல்லாமல், அகமும் புறமும் ஒருமித்து வாழும் ஒரே வாழ்க்கையை நம்மால் வாழ முடியலாம். இந்த கருத்து, முழுமையான வாழ்வை அடைவது அத்தனை எளிதான காரியம் என்றோ அல்லது மனம் போல் நடந்து சமூக ஒழுக்கங்களை கைவிட்டு முழுமையை அடையவேண்டும் என்று வலியுறுத்தவோ நிச்சயமாக கூறப்படவில்லை. நம் மனம் விரும்பும் வாழ்க்கையையும் நாம் வாழும் வாழ்க்கையையும் நாம் பிரக்ஞ்சையுடன் எப்போதாவது பார்த்திருந்தால் அகமும் புறமும் ஒன்றாகும் அத்தகைய வாழ்வின் இயலாமையை நாம் அறிந்திருக்கலாம். அல்லது எப்போதாவது ஒழுக்கத்தை கைவிட்டு மனம் போன போக்கில் நடந்திருந்தால், அதன் விளைவுகளின் காரணத்தை ஆராய்ந்திருந்தால், அது எவ்வாறு நம் வாழ்க்கையை அழிக்கும் என்பதையும் அறிந்திருக்கலாம். ஆக, மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ, நம் மனம் ஒரு தகுதியை அடைந்திருக்க வேண்டும். அந்த தகுதியை அடைந்த மனதால் மட்டுமே முழுமையான வாழ்க்கையை வாழ முயல முடியும் –அகமும் புறமும் ஒன்றான வாழ்க்கையை!

முன்பு கூறிய படி எல்லா உயிரினங்களும் அவற்றின் முழுமையை நோக்கியே வாழ்கின்றன. அவற்றிற்கு மனம் இல்லாததால் அல்லது மனதின் மிகக்குறுகிய எல்லையினால், அவற்றின் முழுமை என்பது, வாழ்க்கையை முழுவீச்சில் வாழ்வது மட்டுமே. நமக்கும் அதுவே! ஆனால், நம் மனதின் தனித்தன்மையால், மனம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தை பிரிப்பதால், நாம் ஒவ்வொருவரும் நம் மனதின் தன்மைக்கேற்ப, ஒவ்வொரு முழுமையை கற்பனை செய்கிறோம். அந்த முழுமையை அடைவதற்காக வாழ்க்கை போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்து செல்கிறோம். இங்கு நாம் முழுமை என கருதுவது, தனிப்பட்ட மனித மனதால், அந்த மனதின் பல பரிமாணங்களில் இயங்கும் சக்தியால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்து மட்டுமே. நாம் கற்பனை செய்யும் முழுமை என்னும் கருத்து உண்மையிலிருந்து விலகியிருக்கும் தொலைவிற்கேற்ப, அந்த முழுமையை அடைய, நம் மனதிற்கு ஒவ்வாத அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள, நாம் தொடர்ந்து மனதிற்கு ஒவ்வாத அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை தொடரும் கட்டாயத்திற்குள்ளாகி விடுகிறோம். மொத்தத்தில் இரட்டை வாழ்வு என்னும் பொறிக்குள் அடைபட்டு விடுகிறோம். அத்தகைய செயல்ககளின் மூலம் வாழ்க்கையை வாழ்வதே இயல்பான வாழும் முறை என்னும் நம்பிக்கையையும் அடைந்து விடுகிறோம். அதன் பின் நாம் வாழ்வு, போராட்டத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க சாத்தியமில்லை. ஆக, நம் வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றி, போராட்டத்தையே நம் இயல்பாக கற்பனை செய்து விடுகிறோம். நம் சந்ததியினருக்கும் போராட்டத்திற்கான கல்வியையே அளிக்கிறோம்.

எனில் அகமும் புறமும் ஒன்றான ஆனமீக வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது அல்லது அடைவது? அதற்கு, அத்தகைய வாழ்வை வாழ்வதற்கான பெரு விருப்பு நமக்குள் நிகழ வேண்டும். அகமும் புறமும் ஒன்றான வாழ்க்கை முறை ஒன்று உள்ளது என்பதையும், அந்த வாழ்க்கையை நாமும் வாழ சாத்தியங்கள் உள்ளது என்பதையும், அவ்வாறு வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதல் நிகழ்ந்தால், நம் மனம் அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியங்களை நம்முன் தருவிக்கும். நாம் நுண்ணறிவுடன் இருந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவோம், இல்லையேல் இழந்து விடுவோம். அந்த சாத்தியங்கள் நம் தனிப்பட்ட மனதின் இயல்பிற்கேற்ப எந்த வழியிலும் இருக்கலாம் – நம்மால் கற்பனை செய்ய இயலாத வழிகளில் கூட!

அந்த வழிகள் எவ்வாறாயினும், அதன் அடிப்படை, நம் வாழ்க்கையிலிருந்து வாழ்க்கை இயக்கங்களிலிருந்து தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், வாழ்க்கையை முழுமையாக, அதன் ஏற்ற இறக்கங்களோடு எதிர்கொண்டாக வேண்டும் என்பதாகவே இருக்க கூடும். நுண்ணறிவுடன் வாழ்வதன் மூலம் வாழ்க்கை இயக்கங்களின் தன்மையை, முடிவின்மையை, பிரம்மாண்டத்தை அறிவதன் மூலம், அந்த பிரம்மாண்டத்தின் முன் நம் எளிமையை உணர்வதன் மூலம் அத்தகைய வாழ்க்கையை எதிர்கொள்ளல் சாத்தியமாகலாம். அல்லது, உலகின் இயக்கத்தின் பிரம்மாண்டத்தின் முன், அந்த பிரம்மாண்டத்தை கடவுள் என அழைத்தாலும் இல்லாவிட்டாலும், முழுமையாக சரணடைவதன் மூலம் சாத்தியமாகலாம். அல்லது நம் மனம் நம்மை ஈடுபடுத்தும் செயல்களை முழுமையான ஈடுபாட்டுடன் செய்து, அந்த செயல்களின் விளைவுகளை விருப்பு வெறுப்பு இன்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் சாத்தியமாகலாம், அல்லது இன்னும் பல வழிகள் கூட நம் முன் விரிந்து இருக்கலாம்.

முழுமையான வாழ்வு என ஒன்று உள்ளது என்பதை நாம் அறிய நேர்ந்தால், அகமும் புறமும் ஒன்றாகும் ஆன்மீக வாழ்வே அத்தகைய முழுமையான வாழ்வு என்பதை நாம் உணர்ந்தால், அத்தகைய வாழ்க்கைக்கான பெருவிருப்பு நம்மில் நிகழ்ந்தால், முழுமையான வாழ்விற்கான சாத்தியங்கள் நம் முன் விரிந்து கிடப்பதை கண்டடைவோம். அந்த சாத்தியங்களை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டடைவோம். அதன் பின், நம் வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் முழுமையை நோக்கியே இருக்க கூடும்.

blog.change@gmail.com

Tuesday, December 11, 2012

மன இயக்கம்


நாம் பெற்றிருக்கும் மனதாலும், அந்த மனிதின் இயங்கு சக்தியினாலும், நாம் மற்ற உயர்நிலை உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறோம் அல்லது ஒரு சமூகமாக மற்ற உயிரினங்களை விட உயர் நிலையை அடைந்து அனைத்தையும் ஆதிக்கம் செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறோம். ஆனால் அதே மனதின் இயக்கங்களால், சில சந்தர்ப்பங்களில், தனி மனித அளவிலோ அல்லது சமூக அளவிலோ பிற உயிரினங்களை விட மிக கீழ் நிலையையும் அடைகிறோம். ஆக மனித இனமாக நம் இருப்பை உறுதி செய்வது நம் மனமும் அதன் இயக்கங்களுமே. அத்தகைய மனதை பெற்றிருப்பதன் மூலம், இந்த உலகில் நம்மால் அறியப்படும் அனைத்திற்கும் நாம் பொறுப்பானவர்கள் ஆகிறோம் – மற்ற அனைத்து உயிரினங்களை விட உயர்வான நிலையை அடைந்ததன் மூலம்! அந்த பொறுப்பை நாம் ஏற்று, அதற்கேற்ப நடப்பதன் மூலமே உண்மையில் நாம் உயர் நிலையை அடைய முடியும், அடைந்த உயர்நிலையை நிலைநாட்ட முடியும். அந்த பொறுப்பை நம்மால் உணர முடியவில்லை என்றால், அந்த பொறுப்பை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், நம் மனதால் அடையக்கூடிய உயர்நிலைக்கான சாத்தியத்தையும் நம்மை அறியாமலே நாம் இழந்து விடுகிறோம்.

ஆக, ஒரு மனிதப்பிறவியாக நம் சாத்தியங்களை அடைய வேண்டுமானால், நம் தனித்துவமான மனதின் இயக்கங்களையும், அந்த மன இயக்கங்களின் மூலம் நாம் கொண்டிருக்கும் பொறுப்புகளையும் நாம் அறிந்திருப்பது அவசியம். நம் மன இயக்கங்களை அறிவதன் மூலம், மன இயக்கங்களின் திசைகளை அறிவதன் மூலம் மனிதனின் மன இயக்கங்கள், தனி மனிதனாகவோ, சமூகமாகவோ எவ்வாறு நம் சுற்றுச்சூழலை, பிற உயிரினங்களை பாதிக்கிறது என்பதை அறிய முடியும். அந்த அறிதலைஅடையும்போது நாம் ஒரு மனிதப்பிறவியாக நம் பொறுப்பை முழுமையாக அடைந்திருப்போம்.
நம் மனம், அதன் இயக்கங்களையும் அறியும் சாத்தியங்களுடனேயே உருவாகியிருக்கிறது. அந்த அறிதலை அடைய நமக்கு தேவையானது, அத்தகைய சாத்தியத்தை அடையும் பெருவிருப்பு மட்டுமே – நுண்ணுணர்வுடன் கூடிய பெருவிருப்பு! நாம் ஒன்றை முழுவிருப்புடன், முழு உணர்வுடன் அடைய விரும்பினால், நம் மனம் அதனை அடையும் எல்லா சாத்தியங்களையும் நம் முன் தருவிக்கும் மிகப்பெரிய சக்தியை உடையது. நம் விருப்பத்தின் ஆழத்திற்கேற்ப, நம் முன் தருவிக்கப்படும் சாத்தியங்களை உணரும் நுண்ணறிவிற்கேற்ப, விரும்பியவற்றை நாம் நெருங்குவோம் – நாம் விரும்பியவை நம் கற்பனையின் எல்லையில் இருப்பவையாக இருந்தாலும். ஆக, நம் மன இயக்கங்களை உண்மையிலேயே நாம் அறிய விரும்பினால், உண்மையில் நமக்கு தேவையானது அதற்கான பெருவிருப்பு மட்டுமே – நுண்ணறிவுடன் கூடிய பெருவிருப்பு!

மன இயக்கம் என்பது நம் மூளையின் நிகழ்வுகள். மூளையின் நிகழ்வுகள் நிகழ்காலத்தை சார்ந்திருக்கலாம் - அதாவது, நம் புலன்களின் உணர்வு, அந்த புலன்கள் உணர்ந்தவாறே மூளையினுள் நிகழ்வது. கடந்த காலத்தை சார்ந்திருக்கலாம் – அதாவது, நம் நினைவுகளில் சேமிக்கப்பட்டவை மூளையினால் மீட்டெடுக்கப்பட்டு, ஒரு நிகழ்வா்க வெளிப்படுவது. எதிர்காலத்தை சார்ந்திருக்கலாம்- அதாவது நினைவை மீட்டெடுத்து, அதைச்சார்ந்த நிகழ்வு எதிர்காலத்தில் நிகழ்வதாக கற்பனை செய்வது. இவற்றுள் எதிர்காலத்தை சார்ந்த நம் மன இயக்கங்கள் முற்றிலும் கற்பனை என்பது மிகவும் தெளிவானது. அத்தகைய எதிர்காலம் சார்ந்த மன இயக்கங்களில் உண்மை என்பது இல்லை. ஏனெனில் அது நடக்காத ஒன்றைப்பற்றிய நம் கற்பனை. அந்த எதிர்காலம் சார்ந்த மன இயக்கங்கள் உண்மையில் கடந்தகாலம் சார்ந்த இயக்கங்களே. அவை கடந்த காலத்தில் நிகழ்ந்த, மூளையில் சேமிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை கலந்து, அதில் மேலும் சில கற்பனைகளை ஏற்றி எதிர்காலமாக நீட்டுவிப்பது மட்டுமே. ஆக எதிர்காலம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. எதிர்காலம் என நாம் நினைப்பது உண்மையில் கடந்த காலமே – கடந்த கால நிகழ்வுகளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து எதிர்காலத்தில் நிகழ்வதாக கற்பனை செய்வது.
நம் கடந்த கால நினைவுகளிலும், உண்மையின் பங்கு மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். ஏனெனில் நம் நுண்ணறிவு அதன் முழு வீச்சில் செயல்படும்போது மட்டுமே நம் புலன்கள் உணர்வதை மனம் உள்ளவாறே  சேமிக்கும். நுண்ணறிவு செயல்படாத தருணங்களில், புலன்கள் உணர்வதை கடந்தகால நினைவுகளால் பொதிந்து அவற்றை புது நினைவுகளாக மனம் சேமிக்கும். ஆக நினைவுகள் பெரும்பாலும் உண்மையிலிருந்து வெகுதொலைவிலேயே இருக்கும் – நிகழ்காலத்தின் மேல் ஏற்றப்பட்ட கடந்தகால நினைவுகளின் உருவாக்கத்தில் நம் நுண்ணறிவின் பங்களிகப்பிற்கேற்ப!

நாம் உலகம் எனக்கூறுவதும் நம் மன இயக்கங்களை மட்டுமே. நாம் அறியும் உலகம், நம் புலன்களால் உணரப்பட்டு நம் மனதில் பிரதிபலிக்கும் வெறும் பிம்பம். நாம் அறியும் உலகம் வெறும் பிம்பம் என்றால், உண்மையில் உலகம் என ஒன்று இல்லையா? பல விளக்கங்கள் பல தத்துவ தரிசனங்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்கின்றன. நம் மன நிலைக்கேற்ப, நம் அறிதலின் ஆழத்திற்கேற்ப, அந்த விளக்கங்களை, தரிசனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ கூடும். ஆனால் உண்மை என்பது, நமது ஏற்புக்கோ அல்லது மறுப்புக்கோ மிகவும் அப்பாற்பட்டது, நமது ஏற்பினாலோ அல்லது மறுப்பினாலோ உண்மை எவ்விதத்திலும் பாதிப்பு அடைவதும் இல்லை.

நாம் அறியும் உலகம் என்பது வெறும் மன இயக்கங்கள் மட்டும்தான் என்பதையும், நாம் அறியும் உலகுக்கும் உண்மையான உலகுக்குமான தொடர்பு என்பது நம் மனதின் இருப்பு மட்டும்தான் என்பதையும் நம் மனம் உண்மையில் அறிய நேர்ந்தால், அந்த மனம் அடைவதற்கோ அல்லது இழப்பதற்கோ இங்கு எதுவும் இருப்பதில்லை என்பதையும் அறிந்திருக்கும். தான் அடைவதற்கோ அல்லது இழப்பதற்கோ எதுவும் இல்லை என அறியும் மனமே விடுதலை அடைந்த மனமாக இருக்க கூடும். அத்தகை மனதில் ஆசைகளோ அல்லது துயரங்களோ இருக்க வாய்ப்பில்லை. விடுதலை அடைந்த மனம் விழிப்புணர்வின் உச்சத்தில் இருப்பதற்கான சாத்தியங்கள் மட்டும்தான் இருக்ககூடும். ஏனெனில், அத்தகைய மனதை விழிப்பிலிருந்து எடுத்து செல்லும் அனைத்து இயக்கங்களிலிருந்தும் அது விடுதலையுடன் இருக்கும். அந்த மனதின் விழிப்புணர்வு, அதன் இயக்கங்களை, அந்தந்த தருணங்களின் நிகழ்வுகளின் தொகுப்பாக மாற்றக்கூடும். அதாவது, கடந்த காலம் மற்றும் எதிர்காலங்களாலான மன இயக்கங்களின் தொகுப்பிலிருந்து விடுபட்டு, அந்த மனம், நிகழ்கால நிகழ்வுகளாக நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்க கூடும். ஆக விடுதலை அடைந்த மனதில் எதிர்காலங்களோ கடந்த காலங்களோ இருக்க வாய்ப்பில்லை -  அவ்வாறு ஒரு மனம் சாத்தியம் என்றால் அது நிகழ்கால நிகழ்வுகளாக, நிகழ்வுகளின் அறிதல்களாக மட்டும் எஞ்சியிருக்க கூடும்.

கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும், மிகமிக அபூர்வமாக நம் பிரக்ஞ்சையில்லாமல் நிகழ்காலத்திலும் உழலும் நம் மனதிற்கு, முற்றிலும் நிகழ்கால நிகழ்வாக விளங்கும் மனதின் தன்மைகளும், அம்மனதின் அறிதல்களின் தன்மைகளும், நிகழ்கால நிகழ்வுகளின் அனுபவமாக விளங்கும் மனதின் தன்மையும் பற்றி எவ்விதமான கற்பனைகளாலும் அறிய முடியாததாக இருக்கலாம். ஆகவே, அத்தகைய நிகழ்கால நிகழ்வாகிய மனதை அடைந்தவர்கள், மற்றவர்களுக்காக, அந்த அனுபவத்தின் தன்மையை உவமைகளால் மட்டுமே விளக்க முடியலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம்மனம், அதன் மாயைகளாலான முன்னறிவின் மூலம், அந்த உவமைகளை உவமைகளாக ஏற்காமல், உவமைகளையே உண்மையாக கருதிக்கொள்கிறது. இதன் மூலம், அந்த மனம் அறியவரும் ஆன்மீகம் என்பதும் வெறும் உவமைகளை மட்டுமே. ஆக நாம் பெரும்பாலும் அறியும் ஆன்மீகம் என்பதும் மாயையே. ஆனால் ஆன்மீகத்தில் உண்மையில் நமக்கு ஈடுபாடு இருந்தால், நமக்கு வேறு வழிகளும் இல்லாமல் இருக்கலாம். ஆக நம் முன் உள்ள சாத்தியம் நம் அறிவில் கலந்திருக்கும் மாயையின் அம்சத்தையும் முழு பிரக்ஞ்சையுடன் ஏற்றுக்கொண்டு, முன்நகர்ந்து செல்வதாகவே இருக்கும்.

Tuesday, November 13, 2012

கவலை, பயம்


நம் உளவியல் இயக்கங்களுக்கும், வாழ்க்கை தரத்துக்கும் இடையேயான உறவை நாம் கவனித்திருந்தால், கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களே பெரும்பாலும் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதை அறியலாம். இங்கு வாழ்க்கையின் தரம் என்பது, நம் அக வாழ்வின், ஆன்மீக வாழ்வின் தரம். கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், ஒருவேளை நம்மால் முற்றிலும் புதிதான, நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கையை வாழ இயலலாம். ஆம், நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் புதிதாக இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க முடியும். வாழ்ந்த வாழ்க்கையையே மீண்டும் மீண்டும் வாழ்வதும் அறிந்தவற்றையே மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டிருப்பதும் நம் வாழ்க்கையை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து, வாழ்வதை அந்த சிறிய வட்டத்திலிருந்து வெளியேறத்துடிக்கும் ஒரு போராட்டமாகவே மாற்றி விடுகிறது – நம் அக, புற வாழ்க்கை இரண்டுமே! நம் வாழ்க்கை முறை, சிறிய தொட்டியில் வளரும் வளர்ப்பு மீன்களின் வாழ்க்கை முறையை விட வேறானதில்லை. நாம் அறிந்தோ அறியாமலோ நிகழ்த்தும் அனைத்து செயல்களும், தொட்டியிலுள்ள மீனின் வெளியறத்துடிக்கும் துடிப்புக்கு சமமானது. தொட்டி மீனின் வெளியேறத்துடிக்கும் ஒவ்வொரு துடிப்பும் தொட்டி சுவருடனான மோதலில் முடிவது போல, நம் ஒவ்வொரு செயல்களும் நாமே உருவாக்கிக்கொண்ட சிறியவட்டத்தின் எல்லையில் மோதுவதுடன் முடிந்து விடுகிறது. ஆம் நம் வட்டத்தின் சுவர்கள், நாமே உருவாக்கிக் கொண்ட உளவியல் சுவர்கள். அந்த சுவர்களின் இருப்பை நம் மனதினுள் அறிவது மட்டுமே அந்த சுவரைத் தாண்டி வாழ சாத்தியமான நம் வாழ்க்கையின் தொடக்கம். நம் எல்லைகளை நாம் அறியாதவரையில் நாம் என்ன முயன்றாலும் அந்த எல்லைகளை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் அவை உண்மையான எல்லைகள் அல்ல….. நம் மனதால் உருவாக்கப்பட்ட மாய எல்லைகள்.

கவலைகளும் பயங்களுமே நம் சிறிய வட்டத்தை அல்லது மாய எல்லைகளை உருவாக்கும் முக்கியமான காரணிகள் - கவலைகளும் பயங்களும் எண்ணற்ற வேறு உளவியல் இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், வேறு எண்ணற்ற உளவியல் இயக்கங்களை உருவாக்கினாலும்! கவலை, பயம் மற்றும் இவை சார்ந்த மன இயக்கங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எவ்வாறு நம் மாய எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பதையும் அறிவதே நம் புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்க கூடும் – அந்த அறிதல் எந்த திசையிலிருந்து வந்தாலும்!

கவலை என்பது நமது  போதாமையின் வெளிப்பாடு. என்னிடம் இப்போது இவ்வளவு செல்வம் உள்ளது. நான் முழுமை பெற இன்னும் இவ்வளவு செல்வம் வேண்டும். ஆக, நான் முழுமை பெற செல்வம் போதாமையாக உள்ளது. இன்று நான் இத்தகைய சமூக அந்தஸ்துடன் இருக்கிறேன். நான் இத்தகைய சமூக அந்தஸ்தை அடையும்போதே முழுமை அடைவேன். ஆக நான் முழுமை பெற என் அந்தஸ்து போதாமையாக உள்ளது. இன்று என் குழந்தைகள் இவ்வாறாக இருக்கிறார்கள். என் குழந்தைகள் இவ்வாறு ஆனால் மட்டுமே ஒரு குடும்பஸ்தனாக என்னால் முழுமை அடைய முடியும். ஆக, என் குழந்தைகளின் இயல்பு, நான் முழுமை அடைய போதாமையாக உள்ளது. என் கணவன் அல்லது மனைவியின் அன்பு இன்று இந்த அளவு உள்ளது. அந்த அன்பு இவ்வாறாக இருந்தால் மட்டுமே நான் முழுமையடைய முடியும். ஆக, என் கணவன் அல்லது மனைவியின் அன்பு நான் முழுமையடைய போதாமையாக உள்ளது. நாம் அறிந்த ஒவ்வொன்றும் இவ்வாறு போதாமையுடன் உள்ளது. இந்த போதாமை என்னும் எண்ணத்தின் மறுவடிவமே கவலை. எந்த ஒரு போதாமையும், அந்த போதமைக்கான காரணியை மேலும் அடைவதன் மூலம் போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த அளவு செல்வம் சேர்த்தாலும், செல்வம் நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நமக்கு அன்பு போதாமையாக இருந்தால், எந்த அளவுக்கு அன்பு கிடைத்தாலும் அது போதுமானதாக ஆவதில்லை. நம் குழந்தைகள் எத்தகைய நிலையில் வந்தாலும் அது நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த சமூக அந்தஸ்தை அடைந்தாலும் அதுவும் நமக்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆக கவலை என்பது எப்போதும் நம்மிடமிருந்து அகல்வதில்லை – நாம் போதும் என்னும் மன நிலையை அடைவதுவரை!

பயம் என்பது நம் ஆசையின் வெளிப்பாடு. நான் இன்னும் செல்வத்தை அடைவதன் மூலம் முழுமையடைய ஆசைப்படுகிறேன். என்னிடம் தற்போதுள்ள செல்வத்தையும் இழக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். அத்துடன் இந்த ஆசை நிறைவேறுமா என்பதைக்குறித்து அச்சப்படுகிறேன். மிகப்பெரிய சமூக அந்தஸ்தை அடைய விரும்புகிறேன். அத்துடன் தற்போதைய அந்தஸ்தையும் இழக்காமலிருக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசையை அடைவது\அடையமுடியாதது குறித்துப் பயப்படுகிறேன். என் குழந்தைகள் இத்தகைய நல்ல நிலையை அடைவார்களா அல்லது தீய நிலையை அடைவார்களா என்பதை குறித்து பயப்படுகிறேன். எனது இந்த செயலின் மூலம் என் கணவன் அல்லது மனைவியின் அன்பு குறைவதைக் குறித்து பயப்படுகிறேன். இன்னும் நம் ஆசை எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பய உணர்ச்சியையும் உருவாக்கி, நம் மாய வட்டத்தின் சுவர்களை வலிமைப்படுத்துகிறோம். ஆம், பெரும்பாலான ஆசைகளும் நம் போதாமையின் மூலமே உருவாக்கப்டுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆசை பயமாக வெளிப்படுகிறது. அந்த பயம், நாம் சுவாரசியமான வாழ்க்கை வாழும் சாத்தியத்தை இல்லாமல் செய்கிறது.

ஆம் ஆசைகளே நம் வாழ்க்கையையும் இயக்குகிறது. விடுதலை அடைய வேண்டும் என்னும் விருப்பம் நம்மில் உருவாகாமால் விடுதலை சாத்தியம் இல்லை. உணவு உண்ண வேண்டும் என்னும் ஆசை இல்லாமல், உணவை தேடுவதற்கான செயல்களும், அதற்கு தேவையான பொருளை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்கான சாத்தியங்களும் இல்லை. நோய்வசப்படப்போகிறோம் என்னும் பயம் இல்லாமல், நம் உடலை அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான இயக்கங்களில் நம்மால் ஈடுபடவும் முடியாது. ஆக, ஆசைகளும் பயங்களுமே நம் மாய வட்டத்தை உருவாக்கி வலிமைப்படுத்தினாலும், அவை நம் மாய வட்டத்திலிருந்து விடுபடவும் இன்றியமையாதது.  ஆனால் நுண்ணறிவுடன் (Intelligence) கூடிய ஆசைகளும் பயங்களும்! ஆம், ஆசைகளும் பயங்களும் நுண்ணறிவுடன் சேரும்போது, அவையும் நுண்ணறிவாக மாறிவிடுகின்றன, மாயையுடன் சேரும்போது அவையும் மாயைகளாகின்றன! உதாரணமாக, நாம் செல்லும் வழியில் இருக்கும் பாம்பை காணும்போது ஏற்படும் பயம், அந்த பாம்பால் ஏற்பட சாத்தியமான அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இது நுண்ணறிவு. அதே நேரத்தில் நம் வழியில் கிடக்கும் கயிறை பார்த்து, பாம்பு என அஞ்சுவது மாயை- இங்கு நாம் நுண்ணறிவுடன் இருந்தால் கயிறை பாம்பாகவோ அல்லது பாம்பை கயிறாகவோ காணமாட்டோம். கயிறை கயிறாகவும் பாம்பை பாம்பாகவும் காண்பதே நுண்ணறிவு. அந்த நுண்ணறிவு, நம் மன இயக்கங்களின் தேவை இல்லாமலே தேவையான செயல்களை நம்மூலம் செய்விக்கும். அத்தகைய நுண்ணறிவை அடைந்தால், நுண்ணறிவுடன் கூடிய ஆசையின் மூலம் நம் விடுதலைக்கான எளிய வழியை அடைந்து விட்டோம் – மாயையிலிருந்து விடுபட்டு, நுண்ணறிவை அடைவது அல்லது நுண்ணறிவை அடைவதன் மூலம் மாயையிலிருந்து விடுபடுவது; மாயையுடன் சேரும் எதுவும் மாயையாகிறது அல்லது நுண்ணறிவுடன் சேரும் எதுவும் நுண்ணறிவாகிறது.
நுண்ணறிவு என்பது விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் வெளிப்பாடு. நாம் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும்தோறும் நுண்ணறிவை அடைகிறோம். அந்த நுண்ணறிவு செயல்படும் அனைத்து இயக்கங்களும் நம்மை விடுதலையை நோக்கி கொண்டுச்செல்லும். நாம் நுண்ணறிவுடன் செயல்படும்போது, அந்த நுண்ணறிவுக்கு தேவையான கவலைகளும் பயங்களும் மட்டுமே நம் மனதில் இருக்க முடியும். அவை உண்மையில் கவலைகளோ அல்லது பயங்களோ இல்லை – அவை நம் நுண்ணறிவு. எனவே அவற்றல் நம் வாழ்க்கையில் எந்த துயரும் இல்லை.

நாம் நுண்ணறிவுடன், விழிப்புடன், பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா இல்லையா என்பதற்கு, நாம் வாழ்க்கையில் துயரப்படுகிறோமா இல்லையா என்பதே கூட ஒரு அளவுகோலாக இருக்கலாம். நாம் துன்பப்படுகிறோம் என்றால், நம் பயங்களும் கவலைகளும் மட்டுமே அதற்கு காரணம். பயங்களும் கவலைகளும் மாயையுடன் சேரும்போது மட்டுமே பயங்களும் கவலைகளுமாக இருக்க முடியும். எனவே துயரம் நம்மை தாக்கும்போது, நாம் மாயையினால் ஆன சிறு வட்டத்தினுள் அடைபட்டிருக்கிறோம். நுண்ணறிவால்தான் மாயையின் சுவர்களை உடைக்க முடியும். . கல்வி என்பது அத்தகைய நுண்ணறிவை நமக்கு அளிப்பது. கல்வியின் மூலம் பெறும் அறிவு, கயிறு மற்றும் பாம்பின் தகவல்களை மட்டும் நமக்கு அளிக்குமானால் அது கல்வி அல்ல. கயிறை கயிறாகவும், பாம்பை பாம்பாகவும் காணும் நுண்ணறிவையும் சேர்த்து அளிக்கும் கல்வியே உண்மையான கல்வி! அத்தகைய நண்ணறிவை அளிக்காத கல்வியை பெறுவதால், நம் வாழ்க்கையின் தரத்தை எவ்வகையிலும் மாற்ற முடியாது, 

Tuesday, October 23, 2012

சுரண்டல் (Exploitation)


நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும் மற்ற ஒன்றின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும். இங்கு மற்ற ஒன்று என்பது பிற மனிதர்கள் அல்லது பிற உயிர்கள் அல்லது நுண்ணியுர்கள் அல்லது உயிரற்ற ஜடப் பொருட்கள். அதைப்போலவே நம்மால் கற்பனை செய்ய இயலாத வகையில் பிற உயிர்கள் அல்லது பொருட்களின் இயக்கங்கள் நம் மேலும் தாக்குதல் தொடுத்துக்கொண்டே இருக்கும். அத்தகைய தாக்குதல்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அத்தகைய தாக்குதல்களையும் அதன் காரணிகளையும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை அவற்றை நம்மால் எளிதாக எதிர்கொள்ள அல்லது ஏற்றுகொள்ள முடியலாம். 

எந்த ஒரு உயிரினமும் அதன் உணவுக்கு மற்றொரு உயிரின் இருப்பை தாக்குதலுக்குள்ளாக்கியாக வேண்டும் – சைவ உணவு எனக்கூறப்படுவதை உட்கொள்ளும் உயிரினங்கள் உட்பட.. இது இருப்பின் நியதி. இந்த நியதிக்கு எந்த உயிரினமும் விதிவிலக்கல்ல. அதைப்போலவே, மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினமும் தங்கள் உணவுக்காக அல்லது தங்கள் பாதுகாப்புக்காக தவிர மற்ற எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை – சில விதிவிலக்குகள் இருக்ககூடும்.

ஆம், சுரண்டல் என்பது நம் உணவுக்காக அல்லது அடிப்படைத் தேவைகளுக்காக பிற உயிர்களை அழிப்பது அல்லது ஜடப்பொருட்களின் இருப்பை குலைப்பது அல்ல – இது இருப்பின் இயல்பு, நம்மால் தவிர்க்க இயலாது. இந்த அடிப்படை தேவைகளை தாண்டி பிற உயிர்கள் அல்லது பொருட்கள் மீது நமது செயல்களின் இயக்கங்கள் தாக்குதலை தொடுக்குமானால் அதுவே சுரண்டல். அதாவது நம் அடிப்படை இயக்கங்களுக்கான செயல்கள் தவிர மற்ற அனைத்து செயல்களாலும் உலகின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கி கொண்டிருக்கிறோம், உலகை சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை அறியாமலே, அல்லது அவ்வாறான பிரக்ஞ்சை இல்லாமலே. ஆம், நாம் உலகை அல்லது கடவுளை அல்லது கடவுளால் உருவாக்கப்பட்ட இருப்பை (நமது கடவுள் என்னும் கருத்துக்கேற்ப), அல்லது நாம் எதன் அங்கமோ அதனை, அல்லது நம்மை நாமே (நமது, நாம் என்ற கருத்திற்கேற்ப) இடைவிடாது சுரண்டிக்கொண்டிருக்கிறோம். மேலும் நம்மால் சுரண்டப்படும் உலகம் எல்லா வகையான சுரண்டல்களையும் பொறுத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக்கு மேலும் மேலும் வளத்தை மட்டுமே அளிக்க வேண்டுமென்ற பேராசையுடன் வேறு இருக்கிறோம். இன்று படிக்க நேர்ந்த ஒரு வாக்கியம் – ‘நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறி விட்டோம்’ – ஆம், ஒரு சமூகமாக, இதுதான் இன்றைய நிதர்சனம். நாளையும் நமக்கு நெல் வேண்டுமென்ற பிரக்ஞ்சையை முற்றிலும் இழந்து அனைத்தையும் இன்றே உண்டு முடிக்கும் அவசரம்!

இன்றைய சமூக இயக்கங்களும், அந்த இயக்கங்களுக்கு அடிமையான நம் வாழ்க்கை முறைகளும், நம் பிரக்ஞ்சையை முற்றிலும் அழித்து விட்டிருக்கிறது. இன்றைய சமூக இயக்கங்களுக்கு அடிப்படையான பெரும்பான்மையான பொருளாதார இயக்கங்களும், ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நம்மை ஆட்டுவிக்கிறது. ஏதேனும் ஒரு பொருளாதார இயக்கத்தில் ஏற்படும் சலனம், மற்ற எல்லா பொருளாதார இயக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி நமது வாழ்க்கையிலும் அதன் தொடர்ச்சியான சலனத்தை ஏற்படுத்துகிறது. அந்த சலனத்தை நம் பிரக்ஞ்சை அறியாத பட்சத்தில், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சலனம் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறி விடுகிறது.

ஆம், சுரண்டலும், நம்மை பிறரின் சுரண்டலுக்கு எத்தகைய எதிர்வினையும் இல்லாமல் அனுமதிப்பதும் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகளாக மாறி விட்டது. இந்த சுரண்டலும், நம்மை சுரண்டப்படுவதை தடையில்லாமல் அனுமதிப்பதும், நமக்கு பல வாழ்க்கை வசதிகளை கொடுத்திருக்கலாம், சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார உயர்விற்கு உதவியிருக்கலாம் – ஆனால் அதற்கு விலையாக நம் பிரக்ஞ்சையை இழந்திருக்கிறோம் – நம் பிரக்ஞ்சையே நம் ஆன்மா, நம் ஆன்மாவை இழந்து பொருளாதார உயர்வை அடைந்திருக்கிறோம். ஆன்மாவை இழந்த நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

நம் வாழ்க்கை தேவைகளுக்கு மிக இன்றியமையாத நம் தொழில்கள், அவை சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், அவற்றின் பின்னிப்பிணைந்த பொருளாதார இயக்கங்களின் மூலம, இந்த உலகையும், அதில் வாழும் உயிரினங்களையும் இடைவிடாது சுரண்டுவதன் மூலம் மட்டுமே நிலை நிறுத்தப்படுகிறது. அந்த சுரண்டலின் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாமும் நம் சுரண்டலைப்பற்றிய எந்த விதமான பிரக்ஞ்சையும் இல்லாமல் நாம் சுரண்டும் சமூகத்தின் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை நாமே சுரண்டும் பிரக்ஞ்சை சிறிதளவும் இல்லாமல்! ஆம் இன்று பொதுவாக சக்தியின் தேவை, குறிப்பாக மின் சக்தியின் தேவை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த சக்தியை, நம் உண்மையான தேவையைபற்றிய, அந்த சக்தியை பெறுவதற்கான அழிக்கும் இயங்கங்களைப்பற்றிய பிரக்ஞ்சையில்லாமல் செலவழிப்பது நம் விதைநெல்லை நாமே உண்பதைப்போன்றது. ஆம் நம் வாழ்க்கையை உறுதிசெய்ய தேவையான காடுகளை அழித்து அதனடியிலிருந்து நிலக்கரியை அடைவதன் மூலம். அல்லது நம் சக மனிதர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அணு உலைகளை அமைப்பதன் மூலம், அணுக்கழிவுகளை எங்கே செல்கிறது என்னும் பிரக்ஞ்சையில்லாமல் – ஒருவேளை அது நம் வீட்டின் கொல்லைப்புறத்தை கூட அடையலாம், அவற்றின் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய, நம் பிரக்ஞ்சையற்ற நுகர்வின் மூலம் மறைமுக நெருக்கடியை உருவாக்கி, உலகத்தையும், நம் சமூகத்தையும் அதன் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டுகிறோம்.

ஆம், எனது தேவைகள் உங்களுக்கும், உங்கள் தேவைகள் எனக்கும் தேவையற்றதாக தோன்றலாம் நாம் உண்மையில் பிரக்ஞ்சை உடையவர்களாக, ஆன்மா உடையவர்களாக இருந்தால் அடுத்தவர் தேவைகள் குறித்து ஆராய மாட்டோம். நம் தேவைகளை பிரக்ஞ்சையுடன் நிறைவேற்றுவோம். ஒருவேளை இத்தகைய பிரக்ஞ்சையுடன் நம்மால் செயல்பட முடிந்தால், அந்த செயல்களின் மூலம் எந்த அழிவுகள் நேர்ந்தாலும், அது சுரண்டல் ஆகாது. பிரக்ஞ்சையுடன் செயல்புரிவதே கர்ம யோகம்!

blog.change@gmail.com

Sunday, September 30, 2012

உறவுகள்


நாம் உறவுகளால் ஆனவர்கள். உறவுகள் இல்லையேல் நாம் இல்லை. ஆம், நாம் என்பதும், நம் உலகம் என்பதும் நம் மனதில் பின்னிப் பிணைந்துள்ள உறவுகளே. நம் உறவுகளை முழுமையாக அறியும்போது நம் மனதை முழுமையாக அறிந்திருப்போம் – நம் உலகையும்!. அதுவே ஞானம்.

நாம் அறியும் ஒவ்வொன்றுடனும், நம் மனம் உடனடியாக உறவை ஏற்படுத்திக்  கொள்கிறது. அந்த உறவுகளின் மூலமே அறிந்தவைகள் நினைவுகளாக சேமிக்கப்படுகிறது. நினைவுகளிலிருந்து மனதில் எண்ணங்கள் உருவாகிறது. ஆக, எண்ணங்கள் என்பது, நாம் உலகுடன் கொண்டுள்ள உறவுகளின் வெளிப்பாடே.. நாம் எண்ணங்களை கூர்ந்து கவனித்திருந்தால், அந்த எண்ணங்கள் பெரும்பாலும் நம் மனதினுள் நிகழும் முரண்பாடுகளின் காரணமாகவே வெளிப்படுவதை அறியலாம் – நம் அடிப்படை செயல்களுக்கு தேவையான எண்ணங்களைத் தவிர. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகளே பெரும்பாலும், பிரக்ஞ்சையின் கட்டுப்பாடு இல்லாத எண்ணங்களாக வெளிப்படுகிறது.

புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தால், உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் பெரும்பாலும் பிற மனிதர்களுடனான உறவுகளிற்குள்ளேதான் ஏற்படும். புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாத பட்சத்தில், நம் மனம், மனிதர்கள் அல்லாத மற்றவற்றுடனான உறவுகளை நம் நம்பிக்கைகள், பயங்கள், மற்றும் இதுபோன்றவற்றுடன் கலந்து மேலும் உறுதியாக்குகிறது. அவ்வாறு உறவுகள் நம் முன்னறிவின் மூலம் உறுதிப்படுத்தப்படும்போது, புதிய அறிதலுக்கான சாத்தியங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. அதாவது, ஞானத்தின் கதவுகள் மூடப்படுகிறது.

வெளிப்புற காரணிகள் இல்லாமல், மனித மனம் மாறும் வேகத்தில் வேறு எந்த பொருட்களும் மாற்றம் அடைவதில்லை. எனவே அத்தகைய பொருட்களுடன் ஏற்படுத்தப்பட்ட உறவின் தன்மையும் மாற்றம் அடைய வேண்டிய தேவை இல்லை. வெளிப்புற காரணிகள் மாற்றம் அடைந்தால், அந்த காரணிகளின் தன்மைக்கேற்ப அந்த பொருட்களுடனான உறவைவையும் மனதால் மிக எளிதாக மாற்றியமைக்க முடியும். எனவே, நம் மனதில் ஏற்படுத்தப்பட்ட உறவுக்கும், அந்த பொருளின் உண்மையான இருப்புக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

பிற மனிதர்களுடனான உறவு என்பது உண்மையில் அந்த மனித மனங்களுடனான உறவுகளே. ஆனால் பெரும்பாலும் நாம் இதை உணர்ந்திருப்பதில்லை. பிற மனிதர்களை குறித்து நாம் அறிய நேரிடும் மிகச்சில இயல்புகளைக் கொண்டு, அந்த மனிதர்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை நம் மனம் உருவாக்குகிறது. பெரும்பாலும் பிற மனிதர்களுடனான நம் உறவு எனபது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நம் மனம் உருவாக்கி விட்ட பிம்பத்துடன் மட்டுமே. இங்கு பிற மனிதர்கள் என்பது கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரர், மக்கள் மற்றும் இதைப்போன்ற எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும்! நாம் உறவுடன் இருக்கும் அந்த பிம்பங்களின் மாறும் தன்மை, அவற்றுடனான நம் சார்புநிலையை பொறுத்தது. அந்த பிம்பங்களுடனான நம் சார்பு அதிகரிக்கும் தோறும், அந்த பிம்பங்களின் மாறும் தன்மை குறைகிறது. அதாவது, நம் பிறமனித உறவுகளுடனான சார்பு நிலை அதிகரிக்கும்தோறும், அந்த உறவுகளுடனான முரண்பாடுகளும் அதிகரிக்கும்.

நாம் நம் பிறமனித உறவுகளுடன் எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறோமோ, அதே அளவு, அந்த மனிதர்களும் அவர்கள் மனதில் நம்மை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்துடனும் சார்ந்திருக்கலாம். நம் பிற மனிதர்களுடனான சார்புநிலையை உறுதி செய்ய, அந்த மனிதர்களின் நம் பிம்பத்துடனான சார்பு நிலையை  நிலைப்படுத்துவது மிக அவசியம். இங்குதான் மனிதர்களின் முதல் ஆன்மீக விலக்கம் தொடங்குகிறது. அதாவது, நாம் நம் இயல்பை விட்டு விட்டு, அந்த மனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கு ஏற்ப நடிக்க தொடங்குகிறோம் – ஒரு கணவனாக, மனைவியாக, மகனாக, மகளாக, தாயாக, தந்தையாக, இன்னும் பலவாக. ஆம், மிகப்பெரும்பாலான நேரங்களில், நாம் நம்மை சார்ந்திருப்பவர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கேற்ப நடித்துக்கொண்டிருக்கிறோம் – மிக மிக குறைந்த தருணங்களை தவிர. அந்த குறைந்த தருணங்களில் மட்டமே நாம் எதிர்வினை ஆற்றாமல், உண்மையில் செயல்பட்டுக் கொண்டிருப்போம். அவ்வாறு செயல் படும் தருணங்களில் மட்டுமே நாம் உண்மையில் பிற மனிதர்களை குறித்த பிம்பங்களை மறந்து, உண்மையிலேயே அந்த மனிதர்களுடன், அந்த மனிதர்களின் மனங்களுடன் உறவில் இருப்போம். நாம் பெரும்பாலும் நம் பிற மனித உறவுகளிடம் அன்புடன் இருக்கிறோம் என்பது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நாம் உருவாக்கியிருக்கும் பிம்பத்துடன் அன்புடன் இருக்கிறோம் என்பதாகவே இருக்கும். அந்த மனிதர்கள் நாம் அவர்களை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்திற்கேற்ப அவர்கள் நடிக்கும்வரை நாம் அந்த பிம்பத்துடன் அன்புடன் இருப்போம். அவர்கள் நாம் உருவாக்கியள்ள பிம்பத்திலிருந்த முரண்படும்போது, நம்முடைய அன்பு, வெறுப்பாக வெளிப்படும், அந்த உறவுகள் எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் – அன்பு என்பதும் வெறுப்பு என்பதும் ஒரே உளவியல் சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகளே!

எவ்வாறு அந்த எதிர்வினையாற்றுதலை விட்டுவிட்டு, செயலில் ஈடுபடுவது? எவ்வாறு பிறமனித பிம்பங்களுடனான உறவை விட்டுவிட்டு பிற மனித மனங்களுடனான உறவில் ஈடுபடுவது? எவ்வாறு பிற மனிதர்களிடம் நிலையான அன்புடன் இருப்பது? அவ்வாறு பிற மனித மனங்களுடன் நம்மால் உறவை ஏற்படுத்த முடிந்தால் மட்டுமே, பிறமனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பங்களை உறுதி செய்வதற்கான நடிப்பிலிருந்து நம்மால் விடுபட முடியும். அவ்வாறு விடுபட்டால் மட்டுமே, நம் வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையாக இருக்கும், அன்புடைய வாழ்க்கையாக இருக்கும் – நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், தவறாமல் மதச்சடங்குகளை செயபவர்களாக இருந்தாலும், எத்தகைய கடவுள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும்!

அத்தகைய விடுதலையின் சாத்தியம், நாம் பிற மனித உறவுகள் என்பது உண்மையில் பிற மனித பிம்பங்களுடனான உறவு என்னும் அறிதலில் இருந்து தொடங்குகிறது. நம் சொந்த மனம் எவ்வாறு நிலையில்லாமல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடிந்தால், எல்லா மனித மனங்களும் இயங்குவது ஒரு பொது விதியின்கீழ் என்பதை நம்மால் உணர முடிந்தால், அப்போது நம் பிற மனித உறவுகளின் மனங்களும் நிலையற்ற தன்மை உடையவை என்பதை உண்மையிலேயே நாம் அறிவோம். இங்கு அறிவது என்பது வெறும் தகவலாக நம் மனதில் நுழைவது அல்ல. அந்த தகவல், நம் இருப்பின், இயல்பின் பகுதியாக ஆவது. நாம் ஒன்றை உண்மையில் அறிந்தோம் என்றால், அந்த அறிதல் நம் இயல்பாக மாறிவிடும், நம் செயல்கள் ஒவ்வொன்றிலும் அந்த அறிதலின் இயக்கம் இயல்பாகவே செயல்படும். ஆம், உண்மையில் கல்வி என்பது அத்தகைய அறிதலை நமக்கு அளிக்கும் செயல்பாடு மட்டுமே!

பிற மனித மனங்களின் நிலையற்ற தன்மையை நாம் அறியுந்தோறும், நாம் அவர்களை குறித்து கொண்டிருக்கும் பிம்பமும் உடையதொடங்கும். ஒருவேளை, நம் மனதில் உள்ள பிற மனித பிம்பங்கள் உடையதொடங்கினால், நம் மனம் பிறமனித உறவுகளை பிம்பங்கள் இல்லாதவாறு, உள்ளதை உள்ளவாறே ஏற்றுகொள்ளும் தன்மையை பெறும். நம்மை சார்ந்திருப்பவர்கள் இயல்பாகவே அவர்களின், நம் மனதில் இருந்த பிம்பத்திற்கேற்ப நடிப்பின் தேவையின்மையை உணர்வார்கள். அந்த உணர்வு, அவர்களை நடிப்பின் துணையினைறி நம் முன் இயல்பாக இருக்கச் செய்யும். ஆச்சரியகரமாக அவர்களும் நம் இயல்பை, நடிப்பின் தேவையின்றி ஏற்றுகொள்ள தொடங்குவார்கள். நம் மனதில் இருக்கும் உறவுசங்கிலிகளும் பிம்பங்களை, மாயைகளை தவிர்த்து பிறமனித மனங்களை உள்ளது உள்ளவறே ஏற்று கொள்ளும். அத்தகைய மனதில் முரண்பாடுகள் இல்லை. எனவே துன்பங்களும் இல்லை!

Wednesday, August 29, 2012

உணர்வு


நாம் உணர்வதை அறியும் திறன், மனித இனத்திற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஆறாவது அறிவு என்னும் பெருங்கொடையாகும். நம் ஆறாவது அறிவு முழுமை அடையும்போது, ஒரு மனிதப்பிறவியாக நாமும் முழுமை அடைந்நிருப்போம். உண்மையான கல்வி என்பது, நம் ஆறாவது அறிவான உணர்வதை அறியும் திறனை அடைவதை போதிப்பதாகவே இருக்கும். இந்த நோக்கில், நம் சமூகம் நமக்களிக்கும் பொதுவான கல்வி என்பது உண்மையில் கல்வி அல்ல – அது ஒரு தொழிற்பயிற்சி மட்டுமே. நாமும் பெரும்பாலும் அத்தகைய தொழிற்பயிற்சியை மட்டுமே நம் சமூகத்திடமிருந்து கோரும் நிலையில் இருக்கிறோம், நம் சந்ததியினருக்கும் முனைப்புடன் அளித்துக்கொண்டிருக்கிறோம்.

நம் மனம் என்பது நம் தற்போதைய உணர்வுகளும், மூளையில் நினைவுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் உணர்வுகளும் வெளிப்படும் ஒரு தளம். நாம் உணர்வதை அறிவது என்பது, ஐம்புலன்களின் உணர்வு நம் மனதாக வெளிப்படும் அதே தருணத்தில், அந்த உணர்வுகளை அறிவதாகும். ஆனால் நம் தற்போதைய நிலையில், நம்மில் பெரும்பாலானவர்களால், புலன்கள் உணரும்போதே மனதால் அறிய முடிவதில்லை. புலனுணர்வுகள் நினைவுகளாக மாற்றப்பட்டபின்பு, நினைவுகளை அறிவதன் மூலம் மட்டுமே நம்மால் புலனுணர்வுகளை அறிய முடிகிறது. நினைவுகள் எப்போதுமே புலன்கள் அறிவதை அறிந்தவாறே மூளையில் சேமிக்கப்படுவதில்லை. நம் முன்னறிவுகள், நம் புலனுணர்வுகளை உருமாற்றம் செய்து, நம் முன்னறிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்பே புலனுணர்வுகள் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. ஆகவே நினைவுகளிலிருந்து நாம் அறிவது எப்போதுமே உண்மை அல்ல – நம் முன்னறிவைப் பொறுத்து, உண்மைக்கு மிக அருகிலோ அல்லது மிகத் தொலைவிலோ அல்லது இடைப்பட்ட தூரத்திலோ இருக்கும்.

புலனுணர்வுகள் தவிர மூளையினுள் நிகழும் சில நிகழ்வுகள் பயம், கோபம், அன்பு, கருணை, அறம் போன்ற உணர்வுகளாக வெளிப்படுகிறது. இந்த உணர்வுகள்,  நாம் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் நம் இருப்பை உறுதிசெய்ய இன்றியமையாதவை. உதாரணமாக, பயம் என்னும் உணர்வு,  ஆபத்துகளிலிரந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள மிக மிக அவசியமானது. மூளையின் நிகழ்வுகள் மூலம் அடையும் பிற உணர்வுகளும் நம் வாழ்வின் உச்சத்தையோ அல்லது வீழ்ச்சியையோ அடைவதற்கு காரணமாகின்றன. இந்த மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்த முடிந்தால், நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நம்மால் விழிப்புடன் கவனிக்க முடிந்தால், பிறரின் உணர்வுகளையும் நம்மால் உணர முடியலாம்.

மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்துவது என்பது, நிகழ்வுகளை நம் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்வது என்னும் அர்த்தத்தில் அல்ல- கற்பனை அல்லது சிந்தனை நம் விருப்பமில்லாமல் நடைபெறாமல் இருப்பதையே பெரும்பாலும் குறிக்கும். நம் மனம் அத்தகைய நிலையை அடைந்தால், அது எப்போதுமே அமைதியில் திளைத்திருக்கும். அத்தகைய மனம், நம் பிரக்ஞ்சையின் அனுமதியின்றி எந்த வெளிப்புற நிகழ்வுகளாலும் அதன் அமைதியை இழப்பதில்லை. இந்த தகுதியை அடைந்த மனதால், அதன் அதீத விழிப்புணர்வாலும், முழுமை நோக்காலும், பிறர் உணர்வுகளையும் உணர முடியலாம். முழுமை நோக்கை அடைந்த மனம், பிறரின் உணர்வுகளை அடைந்தாலும், அந்த உணர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. அதாவது, நம் மனம் பிறரின் உணர்வுகளையும் அடையவேண்டுமானால், நம் மனம் உணர்வுகளால் பாதிக்கப்படாத தன்மையை அடையவேண்டும். நம் மனதின் இயக்கம், நம் பிரக்ஞ்சையின் கண்காணிப்பில் மட்டுமே நிகழ வேண்டும். அல்லது, நம் மனம் எப்போதும் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். முழு விழிப்ப நிலையில் இருக்கும் மனம், அறிதலின் இன்பத்தை இடைவிடாது அனுபவித்து கொண்டே இருக்கும்.

நாம் தற்போது ‘நாம்’ என அறியும் நமது உணர்வுகளை தாண்டி நமது சுற்றுப்புறங்களின் உணர்வையும் அடையும்தோறும் ‘நான்’ என்னும் சொல் குறிக்கும் நம் எல்லையும் விரிவடைந்து கொண்டே இருக்கும் அந்த ‘நான்’ முழுமை அடையும்போது, நம்மைதவிர நாமறிந்த உலகில் வேறு எதுவும் இருப்பதில்லை. இதுவே ‘அஹம் பிரம்மாஸ்மி’ அல்லது ‘நானே பிரம்மம்’ என உபநிக்ஷங்கள் அறைகூவுவது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நம் சுற்றுப்புறங்களின் உணர்வுகளையும் அடையும்போது, ‘நான்’ என்னும் தனிமைப்படுத்தும் உணர்வு நம்மிடமிருந்து மறைய ஆரம்பிக்கும். அந்த நிலையில், மனம் அதன் அகங்காரத்தின் உதவியால் தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் ‘நான்’ சார்ந்த குப்பைகளையும் இழக்கும். அதாவது, மனம் அதுவரை தான் சேர்த்து வைத்தவற்றின் உபயோகமின்மையை அறிந்து, அவற்றை களைவதன் மூலம் ஒருவகையான வெறுமையை அடையும். ‘நேதி, நேதி’ அல்லது ‘எதுவம் நானல்ல’ என்று உபநிஷங்கள் மறுத்து அடையும் நிலையும் அந்த மனதின் வெற்றிடமே.

ஆக மனம் தன்னையே அனைத்துமாக உணரும் முழுமை நிலையும், தன்னை ஒன்றுமில்லாமல் உணரும் வெறுமை நிலையும் ஒன்றாகும் உன்னத நிலையே ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய அனைவரின், அவர்கள் அறிந்த அல்லது அறியாத இலக்காக இருக்கும். மனதின் இத்தகைய உன்னத நிலையை அடைய மனம் அதன் உணரும் திறனை எப்போதும் அதன் முழுவீச்சில் பெற்றிருக்க வேண்டும். எல்லா ஆன்மீக பயிற்சிகளும், தத்துவங்களும், மதங்களும் போதிக்கும் அனைத்து வழிமுறைகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ மனதின் உணர்திறனை நோக்கியே இருக்கும். மனதின் உணர்திறனை அதிகரிக்கும் எந்த வழிமுறைகளும் ஆன்மீக வழிமுறைகளே.

தொடர்புடைய பதிவுகள்; உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்

blog.change@gmail.com

Sunday, June 24, 2012

எண்ணங்கள்

நம் சாதாரண மனநிலையில் எண்ணங்கள் மட்டுமே நனவுநிலை அல்லது நாம் அறிந்த மனதின் உள்ளிருப்பாக (content) இருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, செய்வது அனைத்தையும் எண்ணங்களாகவே நாம் அறிகிறோம். எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் நம்மால் எந்த செயல்களையும் செய்ய முடிவதில்லை. எண்ணங்களே நம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. நம் ஒவ்வொரு செயல்களும் எண்ணங்களையே அடிப்படையாக கொண்டுள்ளன. மூளை, எண்ணங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே நம்மால் மாற்றப்பட்டுள்ளது. நம் சந்ததியினரின் மூளையையும் ஒரு தொழிற்சாலையாக மாற்றுவதற்கான முயற்சியையும் நம்மால் முடிந்த அளவில் செய்து கொண்டிருக்கிறோம். நம் இன்பங்களையும் துன்பங்களையும் எண்ணங்களாகவே மாற்றி அறியக்கூடிய வகையில் நம் மூளை அதன் எண்ணங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் மூழ்கி இருக்குமாறு, அதன் இயக்கங்களை அமைத்து கொண்டுள்ளோம். இத்தகைய மூளையின் இடைவிடாத எண்ணங்களை உருவாக்கும் ஈடுபாட்டினால் எண்ணங்களே வாழ்க்கையின் இயங்குசக்தி என்னும் முடிவுக்கு வந்து, அந்த எண்ணங்களை வழிப்படுத்தும் புதிய எண்ணங்களை நம் மனதில் உருவாக்கி, எண்ண தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் தினம்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறோம் – இந்த தொழிற்சாலையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அதீத உற்பத்தி, தொழிற்சாலையை அதன் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாளுக்கு முன்னதாகவே பழுதடைய செய்யும் என்பதை அறிந்தும் அறியாமல், நம் வாழ்க்கையையே எண்ணங்களின் உற்பத்திக்கு அற்பணித்து, எல்லா விதமான உண்மையான சுயநலங்களையும் மறந்து, எண்ணங்களால் உருவாக்கப்பட்ட சுயங்களுக்காக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டிருக்கிறோம்.


எண்ணங்கள் நமக்கு தேவை இல்லை என்றால், அவை நம் வாழ்க்கையை அழிப்பவை என்றால், எதற்காக அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆம் எண்ணங்கள் மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்று. எண்ணங்களின் உதவியால் நாம் அடைந்தவையே நம்மை பிற உயிரினங்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. எண்ணங்களை உருவாக்கும் திறனை நம் மூளை இழந்து விட்டால், அது மனித மூளையாகவும், நாம் மனிதர்களாகவும் இருக்க முடியாது. ஆனால் அதே எண்ணங்களே நம்மை விலங்குகளுக்கும் கீழ் நிலையில் நம்மை தரம் தாழ்த்தவும் செய்கிறது.

எண்ணங்கள் மனிதர்களின் ஆயுதம். அந்த ஆயுதத்தை நம் முன் உள்ள தடைகளை அழிக்கவும் உபயோகப்படுத்தலாம், அல்லது நம்மையே அழிக்கவும் உபயோகப்படுத்தலாம். நாம் என்பது எது, நம் தடைகள் எவை என்பதை நம்மால் பிரித்துணர முடிந்தால்தான் நம்மிடம் இருக்கும் ஆயுதத்தை எங்கு பிரயோகப்படுத்துகிறோம் என்பதை நம்மால் அறிய முடியும். நம் உண்மையான சுயம்(self) என்பது எது, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் உருவாக்கப்பட்ட சுயம் என்பது எது என்பதை அந்த மாயைகளின் உற்பத்திகளனான நம் மனதால் பிரித்துணர முடியுமா? அவ்வாறு பிரித்துணர முடிந்தால் ஒருவேளை எண்ணங்களாகிய ஆயுதத்தை, நம் தடைகளை நோக்கி பிரயோகித்து, நம் வாழ்க்கையின் உச்சத்தை நம்மால் அடைய முடியலாம். நம் மனம் மாயைகளின் பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல் உண்மையான சுயத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. எனவே மனம் உண்மையையும் அறியும் தன்மையுடனே உள்ளது. நம் மூளையால் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உண்மையாகவே உருவாக்க முடிந்தால், எண்ணங்கள் என்னும் ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் களத்தையும் நம்மால் அறிய முடியலாம். அந்த களத்தை அறிந்த பின்னால் எண்ணங்கள் ஓரு அழிக்கும் ஆயுதம் அல்ல, அது ஒரு ஆக்கும் ஆயுதம்.

கல்வியால் மட்டுமே நம் மூளையினுள் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க முடியும். இங்கு கல்வி என்பது, நடைமுறையில் உள்ள பள்ளி, கல்லூரி சார்ந்த இலக்கு நோக்கிய ஒட்டம் அல்ல. கல்வி என்பது வாழ்க்கை கல்வி, அனுபவத்தால் அறியும் கல்வி, அனுபவத்தை அளிக்கும் கல்வி. இன்றைய இலக்கு நோக்கிய நடைமுறை கல்வியில் அனுபவத்திற்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உண்மையில் அனுபவத்திற்கு பதிலாக இலக்கு நோக்கிய ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே நம் கல்வி முறை பயிற்றுவிக்கிறது. இலக்கை அடையும்போது பெறும் அனுபவத்தை அது அனுமதிப்பதில்லை. இலக்கை அடைந்த உடனே அடுத்த இலக்குக்கான ஓட்டம் தொடங்கி விடுகிறது. அனுபவம், அனுபவிக்கப்படாமல் மறைகிறது. வாழ்க்கை என்பது கணத்துக்கு கணம் பெறும் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. அந்த அனுபவங்களை அடைய முடியாத அல்லது அந்த அனுபவங்களை அடைவதிலிருந்து நம்மை புறந்தள்ளும் எல்லா இலக்குகளும் மாயைகளே. உண்மையான கல்வியை, அனுபவத்தை அளிக்கும் கல்வியை நாம் சார்ந்திருக்கும் சமூகமும் அந்த சமூகத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறையும் நமக்கு அளிக்கவில்லை. ஆகவே நம் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே அனுபவத்தை அளிக்கும் கல்வியை பெறமுடியலாம். ஆக, உண்மையான கல்வியை அடைவது கூட தற்செயல் நிகழ்வாக ஆக்கப்பட்டுளது. அந்த தற்செயல் நிகழ்வு நமக்குள் நிகழ்ந்தால் மட்டுமே, கல்வியை நம்மால் அடையமுடியும். அந்த அனுபவ கல்வி மூலம் உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்குள் தூண்டப்பட்டால் மட்டுமே, நம் உண்மையான சுயத்தை அறிவதற்கான விருப்பமும், தேடலும் நமக்குள் தோற்றுவிக்கப்படலாம்.

நம் அன்றாட செயல்பாடுகளுக்கு எண்ணங்களும் நினைவுகளும் அவசியம். இவை அந்த செயல்கள் தேவைப்படும் தளத்தில், தேவைப்படும் நேரத்தில் மட்டும். ஆனால் அந்த செயல்பாடு முடிந்த பின்னும் அதன் விளைவுகளை அடைந்த பின்னும் (எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள்), அந்த செயல் குறித்த எண்ணங்களும் நினைவுகளும் நம் மனதை நிறைப்பது என்பது எண்ணங்கள் நம் தேவைக்காக மட்டும் நிகழவில்லை என்பதை உறுதி செய்கிறது. எண்ணங்கள் நம் ஆயுதமாக இருக்கும்போது அவை நம் தேவைகளுக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் எண்ணம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே இயங்குகிறது. அதாவது, நம்மிடம் இருக்கும் எண்ணமாகிய ஆயுதம், நம் தேவைக்கேற்ப இயங்காமல், அதன் இயக்கத்திற்கேற்ப நம் தேவைகளை வடிவமைக்கிறது. ஆகவே நம் அடிமையாக இருக்க வேண்டிய எண்ணமாகிய ஆயுதமே நம் தேவைகளை வடிவமைத்து, நம்மை அதன் அடிமையாக மாற்றி விட்டது. ஆக, நம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் ஆயுதத்தை நம்மிடம் வைத்திருக்கம் நாம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே – நம் வாழ வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவு அல்ல!

நம்மை அடிமையாக கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று, எண்ணங்களை நம் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தும் ஆற்றலை நம்மால் பெற முடியுமா? எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com