நாம் பெற்றிருக்கும் மனதாலும், அந்த மனிதின்
இயங்கு சக்தியினாலும், நாம் மற்ற உயர்நிலை உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறோம் அல்லது
ஒரு சமூகமாக மற்ற உயிரினங்களை விட உயர் நிலையை அடைந்து அனைத்தையும் ஆதிக்கம் செய்யும்
சக்தியையும் பெற்றிருக்கிறோம். ஆனால் அதே மனதின் இயக்கங்களால், சில சந்தர்ப்பங்களில்,
தனி மனித அளவிலோ அல்லது சமூக அளவிலோ பிற உயிரினங்களை விட மிக கீழ் நிலையையும் அடைகிறோம்.
ஆக மனித இனமாக நம் இருப்பை உறுதி செய்வது நம் மனமும் அதன் இயக்கங்களுமே. அத்தகைய மனதை
பெற்றிருப்பதன் மூலம், இந்த உலகில் நம்மால் அறியப்படும் அனைத்திற்கும் நாம் பொறுப்பானவர்கள்
ஆகிறோம் – மற்ற அனைத்து உயிரினங்களை விட உயர்வான நிலையை அடைந்ததன் மூலம்! அந்த பொறுப்பை
நாம் ஏற்று, அதற்கேற்ப நடப்பதன் மூலமே உண்மையில் நாம் உயர் நிலையை அடைய முடியும், அடைந்த
உயர்நிலையை நிலைநாட்ட முடியும். அந்த பொறுப்பை நம்மால் உணர முடியவில்லை என்றால், அந்த
பொறுப்பை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், நம் மனதால் அடையக்கூடிய உயர்நிலைக்கான
சாத்தியத்தையும் நம்மை அறியாமலே நாம் இழந்து விடுகிறோம்.
ஆக, ஒரு மனிதப்பிறவியாக நம் சாத்தியங்களை
அடைய வேண்டுமானால், நம் தனித்துவமான மனதின் இயக்கங்களையும், அந்த மன இயக்கங்களின் மூலம்
நாம் கொண்டிருக்கும் பொறுப்புகளையும் நாம் அறிந்திருப்பது அவசியம். நம் மன இயக்கங்களை
அறிவதன் மூலம், மன இயக்கங்களின் திசைகளை அறிவதன் மூலம் மனிதனின் மன இயக்கங்கள், தனி
மனிதனாகவோ, சமூகமாகவோ எவ்வாறு நம் சுற்றுச்சூழலை, பிற உயிரினங்களை பாதிக்கிறது என்பதை
அறிய முடியும். அந்த அறிதலைஅடையும்போது நாம் ஒரு மனிதப்பிறவியாக நம் பொறுப்பை முழுமையாக
அடைந்திருப்போம்.
நம் மனம், அதன் இயக்கங்களையும் அறியும்
சாத்தியங்களுடனேயே உருவாகியிருக்கிறது. அந்த அறிதலை அடைய நமக்கு தேவையானது, அத்தகைய
சாத்தியத்தை அடையும் பெருவிருப்பு மட்டுமே – நுண்ணுணர்வுடன் கூடிய பெருவிருப்பு! நாம்
ஒன்றை முழுவிருப்புடன், முழு உணர்வுடன் அடைய விரும்பினால், நம் மனம் அதனை அடையும் எல்லா
சாத்தியங்களையும் நம் முன் தருவிக்கும் மிகப்பெரிய சக்தியை உடையது. நம் விருப்பத்தின்
ஆழத்திற்கேற்ப, நம் முன் தருவிக்கப்படும் சாத்தியங்களை உணரும் நுண்ணறிவிற்கேற்ப, விரும்பியவற்றை
நாம் நெருங்குவோம் – நாம் விரும்பியவை நம் கற்பனையின் எல்லையில் இருப்பவையாக இருந்தாலும்.
ஆக, நம் மன இயக்கங்களை உண்மையிலேயே நாம் அறிய விரும்பினால், உண்மையில் நமக்கு தேவையானது
அதற்கான பெருவிருப்பு மட்டுமே – நுண்ணறிவுடன் கூடிய பெருவிருப்பு!
மன இயக்கம் என்பது நம் மூளையின் நிகழ்வுகள்.
மூளையின் நிகழ்வுகள் நிகழ்காலத்தை சார்ந்திருக்கலாம் - அதாவது, நம் புலன்களின் உணர்வு,
அந்த புலன்கள் உணர்ந்தவாறே மூளையினுள் நிகழ்வது. கடந்த காலத்தை சார்ந்திருக்கலாம்
– அதாவது, நம் நினைவுகளில் சேமிக்கப்பட்டவை மூளையினால் மீட்டெடுக்கப்பட்டு, ஒரு நிகழ்வா்க
வெளிப்படுவது. எதிர்காலத்தை சார்ந்திருக்கலாம்- அதாவது நினைவை மீட்டெடுத்து, அதைச்சார்ந்த
நிகழ்வு எதிர்காலத்தில் நிகழ்வதாக கற்பனை செய்வது. இவற்றுள் எதிர்காலத்தை சார்ந்த நம்
மன இயக்கங்கள் முற்றிலும் கற்பனை என்பது மிகவும் தெளிவானது. அத்தகைய எதிர்காலம் சார்ந்த
மன இயக்கங்களில் உண்மை என்பது இல்லை. ஏனெனில் அது நடக்காத ஒன்றைப்பற்றிய நம் கற்பனை.
அந்த எதிர்காலம் சார்ந்த மன இயக்கங்கள் உண்மையில் கடந்தகாலம் சார்ந்த இயக்கங்களே. அவை
கடந்த காலத்தில் நிகழ்ந்த, மூளையில் சேமிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை கலந்து, அதில்
மேலும் சில கற்பனைகளை ஏற்றி எதிர்காலமாக நீட்டுவிப்பது மட்டுமே. ஆக எதிர்காலம் என்ற
ஒன்று உண்மையில் இல்லை. எதிர்காலம் என நாம் நினைப்பது உண்மையில் கடந்த காலமே – கடந்த
கால நிகழ்வுகளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து எதிர்காலத்தில் நிகழ்வதாக கற்பனை செய்வது.
நம் கடந்த கால நினைவுகளிலும், உண்மையின்
பங்கு மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். ஏனெனில் நம் நுண்ணறிவு அதன் முழு வீச்சில் செயல்படும்போது
மட்டுமே நம் புலன்கள் உணர்வதை மனம் உள்ளவாறே
சேமிக்கும். நுண்ணறிவு செயல்படாத தருணங்களில், புலன்கள் உணர்வதை கடந்தகால நினைவுகளால்
பொதிந்து அவற்றை புது நினைவுகளாக மனம் சேமிக்கும். ஆக நினைவுகள் பெரும்பாலும் உண்மையிலிருந்து
வெகுதொலைவிலேயே இருக்கும் – நிகழ்காலத்தின் மேல் ஏற்றப்பட்ட கடந்தகால நினைவுகளின் உருவாக்கத்தில்
நம் நுண்ணறிவின் பங்களிகப்பிற்கேற்ப!
நாம் உலகம் எனக்கூறுவதும் நம் மன இயக்கங்களை
மட்டுமே. நாம் அறியும் உலகம், நம் புலன்களால் உணரப்பட்டு நம் மனதில் பிரதிபலிக்கும்
வெறும் பிம்பம். நாம் அறியும் உலகம் வெறும் பிம்பம் என்றால், உண்மையில் உலகம் என ஒன்று
இல்லையா? பல விளக்கங்கள் பல தத்துவ தரிசனங்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்கின்றன. நம்
மன நிலைக்கேற்ப, நம் அறிதலின் ஆழத்திற்கேற்ப, அந்த விளக்கங்களை, தரிசனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவோ
அல்லது மறுக்கவோ கூடும். ஆனால் உண்மை என்பது, நமது ஏற்புக்கோ அல்லது மறுப்புக்கோ மிகவும்
அப்பாற்பட்டது, நமது ஏற்பினாலோ அல்லது மறுப்பினாலோ உண்மை எவ்விதத்திலும் பாதிப்பு அடைவதும்
இல்லை.
நாம் அறியும் உலகம் என்பது வெறும் மன இயக்கங்கள்
மட்டும்தான் என்பதையும், நாம் அறியும் உலகுக்கும் உண்மையான உலகுக்குமான தொடர்பு என்பது
நம் மனதின் இருப்பு மட்டும்தான் என்பதையும் நம் மனம் உண்மையில் அறிய நேர்ந்தால், அந்த
மனம் அடைவதற்கோ அல்லது இழப்பதற்கோ இங்கு எதுவும் இருப்பதில்லை என்பதையும் அறிந்திருக்கும்.
தான் அடைவதற்கோ அல்லது இழப்பதற்கோ எதுவும் இல்லை என அறியும் மனமே விடுதலை அடைந்த மனமாக
இருக்க கூடும். அத்தகை மனதில் ஆசைகளோ அல்லது துயரங்களோ இருக்க வாய்ப்பில்லை. விடுதலை
அடைந்த மனம் விழிப்புணர்வின் உச்சத்தில் இருப்பதற்கான சாத்தியங்கள் மட்டும்தான் இருக்ககூடும்.
ஏனெனில், அத்தகைய மனதை விழிப்பிலிருந்து எடுத்து செல்லும் அனைத்து இயக்கங்களிலிருந்தும்
அது விடுதலையுடன் இருக்கும். அந்த மனதின் விழிப்புணர்வு, அதன் இயக்கங்களை, அந்தந்த
தருணங்களின் நிகழ்வுகளின் தொகுப்பாக மாற்றக்கூடும். அதாவது, கடந்த காலம் மற்றும் எதிர்காலங்களாலான
மன இயக்கங்களின் தொகுப்பிலிருந்து விடுபட்டு, அந்த மனம், நிகழ்கால நிகழ்வுகளாக நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்க கூடும். ஆக விடுதலை அடைந்த மனதில் எதிர்காலங்களோ கடந்த காலங்களோ
இருக்க வாய்ப்பில்லை - அவ்வாறு ஒரு மனம் சாத்தியம்
என்றால் அது நிகழ்கால நிகழ்வுகளாக, நிகழ்வுகளின் அறிதல்களாக மட்டும் எஞ்சியிருக்க கூடும்.
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும், மிகமிக
அபூர்வமாக நம் பிரக்ஞ்சையில்லாமல் நிகழ்காலத்திலும் உழலும் நம் மனதிற்கு, முற்றிலும்
நிகழ்கால நிகழ்வாக விளங்கும் மனதின் தன்மைகளும், அம்மனதின் அறிதல்களின் தன்மைகளும்,
நிகழ்கால நிகழ்வுகளின் அனுபவமாக விளங்கும் மனதின் தன்மையும் பற்றி எவ்விதமான கற்பனைகளாலும்
அறிய முடியாததாக இருக்கலாம். ஆகவே, அத்தகைய நிகழ்கால நிகழ்வாகிய மனதை அடைந்தவர்கள்,
மற்றவர்களுக்காக, அந்த அனுபவத்தின் தன்மையை உவமைகளால் மட்டுமே விளக்க முடியலாம். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக, நம்மனம், அதன் மாயைகளாலான முன்னறிவின் மூலம், அந்த உவமைகளை உவமைகளாக
ஏற்காமல், உவமைகளையே உண்மையாக கருதிக்கொள்கிறது. இதன் மூலம், அந்த மனம் அறியவரும் ஆன்மீகம்
என்பதும் வெறும் உவமைகளை மட்டுமே. ஆக நாம் பெரும்பாலும் அறியும் ஆன்மீகம் என்பதும்
மாயையே. ஆனால் ஆன்மீகத்தில் உண்மையில் நமக்கு ஈடுபாடு இருந்தால், நமக்கு வேறு வழிகளும்
இல்லாமல் இருக்கலாம். ஆக நம் முன் உள்ள சாத்தியம் நம் அறிவில் கலந்திருக்கும் மாயையின்
அம்சத்தையும் முழு பிரக்ஞ்சையுடன் ஏற்றுக்கொண்டு, முன்நகர்ந்து செல்வதாகவே இருக்கும்.
2 comments:
If we analyse in deep, sprituality is nothing but way of life or how one can lead a good life. The word good has its own meaning.
great thoughts.
Thanks for the comments. I also feel the same thing. Spirituality is a way of life. For me, how we live with in ourselves is synchronized with how we live outside, it is spiritual life.If this component does not happen, whatever we do on the name of spirituality can never approach spirituality. There may be many methods to get that synchronization – some methods with our knowledge of this process and some methods with out even our knowledge.
Post a Comment