Tuesday, October 23, 2012

சுரண்டல் (Exploitation)


நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும் மற்ற ஒன்றின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும். இங்கு மற்ற ஒன்று என்பது பிற மனிதர்கள் அல்லது பிற உயிர்கள் அல்லது நுண்ணியுர்கள் அல்லது உயிரற்ற ஜடப் பொருட்கள். அதைப்போலவே நம்மால் கற்பனை செய்ய இயலாத வகையில் பிற உயிர்கள் அல்லது பொருட்களின் இயக்கங்கள் நம் மேலும் தாக்குதல் தொடுத்துக்கொண்டே இருக்கும். அத்தகைய தாக்குதல்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அத்தகைய தாக்குதல்களையும் அதன் காரணிகளையும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை அவற்றை நம்மால் எளிதாக எதிர்கொள்ள அல்லது ஏற்றுகொள்ள முடியலாம். 

எந்த ஒரு உயிரினமும் அதன் உணவுக்கு மற்றொரு உயிரின் இருப்பை தாக்குதலுக்குள்ளாக்கியாக வேண்டும் – சைவ உணவு எனக்கூறப்படுவதை உட்கொள்ளும் உயிரினங்கள் உட்பட.. இது இருப்பின் நியதி. இந்த நியதிக்கு எந்த உயிரினமும் விதிவிலக்கல்ல. அதைப்போலவே, மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினமும் தங்கள் உணவுக்காக அல்லது தங்கள் பாதுகாப்புக்காக தவிர மற்ற எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை – சில விதிவிலக்குகள் இருக்ககூடும்.

ஆம், சுரண்டல் என்பது நம் உணவுக்காக அல்லது அடிப்படைத் தேவைகளுக்காக பிற உயிர்களை அழிப்பது அல்லது ஜடப்பொருட்களின் இருப்பை குலைப்பது அல்ல – இது இருப்பின் இயல்பு, நம்மால் தவிர்க்க இயலாது. இந்த அடிப்படை தேவைகளை தாண்டி பிற உயிர்கள் அல்லது பொருட்கள் மீது நமது செயல்களின் இயக்கங்கள் தாக்குதலை தொடுக்குமானால் அதுவே சுரண்டல். அதாவது நம் அடிப்படை இயக்கங்களுக்கான செயல்கள் தவிர மற்ற அனைத்து செயல்களாலும் உலகின் இருப்பை எந்த வகையிலாவது தாக்குதலுக்குள்ளாக்கி கொண்டிருக்கிறோம், உலகை சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை அறியாமலே, அல்லது அவ்வாறான பிரக்ஞ்சை இல்லாமலே. ஆம், நாம் உலகை அல்லது கடவுளை அல்லது கடவுளால் உருவாக்கப்பட்ட இருப்பை (நமது கடவுள் என்னும் கருத்துக்கேற்ப), அல்லது நாம் எதன் அங்கமோ அதனை, அல்லது நம்மை நாமே (நமது, நாம் என்ற கருத்திற்கேற்ப) இடைவிடாது சுரண்டிக்கொண்டிருக்கிறோம். மேலும் நம்மால் சுரண்டப்படும் உலகம் எல்லா வகையான சுரண்டல்களையும் பொறுத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக்கு மேலும் மேலும் வளத்தை மட்டுமே அளிக்க வேண்டுமென்ற பேராசையுடன் வேறு இருக்கிறோம். இன்று படிக்க நேர்ந்த ஒரு வாக்கியம் – ‘நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறி விட்டோம்’ – ஆம், ஒரு சமூகமாக, இதுதான் இன்றைய நிதர்சனம். நாளையும் நமக்கு நெல் வேண்டுமென்ற பிரக்ஞ்சையை முற்றிலும் இழந்து அனைத்தையும் இன்றே உண்டு முடிக்கும் அவசரம்!

இன்றைய சமூக இயக்கங்களும், அந்த இயக்கங்களுக்கு அடிமையான நம் வாழ்க்கை முறைகளும், நம் பிரக்ஞ்சையை முற்றிலும் அழித்து விட்டிருக்கிறது. இன்றைய சமூக இயக்கங்களுக்கு அடிப்படையான பெரும்பான்மையான பொருளாதார இயக்கங்களும், ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நம்மை ஆட்டுவிக்கிறது. ஏதேனும் ஒரு பொருளாதார இயக்கத்தில் ஏற்படும் சலனம், மற்ற எல்லா பொருளாதார இயக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி நமது வாழ்க்கையிலும் அதன் தொடர்ச்சியான சலனத்தை ஏற்படுத்துகிறது. அந்த சலனத்தை நம் பிரக்ஞ்சை அறியாத பட்சத்தில், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சலனம் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறி விடுகிறது.

ஆம், சுரண்டலும், நம்மை பிறரின் சுரண்டலுக்கு எத்தகைய எதிர்வினையும் இல்லாமல் அனுமதிப்பதும் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகளாக மாறி விட்டது. இந்த சுரண்டலும், நம்மை சுரண்டப்படுவதை தடையில்லாமல் அனுமதிப்பதும், நமக்கு பல வாழ்க்கை வசதிகளை கொடுத்திருக்கலாம், சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார உயர்விற்கு உதவியிருக்கலாம் – ஆனால் அதற்கு விலையாக நம் பிரக்ஞ்சையை இழந்திருக்கிறோம் – நம் பிரக்ஞ்சையே நம் ஆன்மா, நம் ஆன்மாவை இழந்து பொருளாதார உயர்வை அடைந்திருக்கிறோம். ஆன்மாவை இழந்த நாம் விதைநெல்லையும் உண்ணும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

நம் வாழ்க்கை தேவைகளுக்கு மிக இன்றியமையாத நம் தொழில்கள், அவை சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், அவற்றின் பின்னிப்பிணைந்த பொருளாதார இயக்கங்களின் மூலம, இந்த உலகையும், அதில் வாழும் உயிரினங்களையும் இடைவிடாது சுரண்டுவதன் மூலம் மட்டுமே நிலை நிறுத்தப்படுகிறது. அந்த சுரண்டலின் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாமும் நம் சுரண்டலைப்பற்றிய எந்த விதமான பிரக்ஞ்சையும் இல்லாமல் நாம் சுரண்டும் சமூகத்தின் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டிக்கொண்டிருக்கிறோம் – நம்மை நாமே சுரண்டும் பிரக்ஞ்சை சிறிதளவும் இல்லாமல்! ஆம் இன்று பொதுவாக சக்தியின் தேவை, குறிப்பாக மின் சக்தியின் தேவை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த சக்தியை, நம் உண்மையான தேவையைபற்றிய, அந்த சக்தியை பெறுவதற்கான அழிக்கும் இயங்கங்களைப்பற்றிய பிரக்ஞ்சையில்லாமல் செலவழிப்பது நம் விதைநெல்லை நாமே உண்பதைப்போன்றது. ஆம் நம் வாழ்க்கையை உறுதிசெய்ய தேவையான காடுகளை அழித்து அதனடியிலிருந்து நிலக்கரியை அடைவதன் மூலம். அல்லது நம் சக மனிதர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அணு உலைகளை அமைப்பதன் மூலம், அணுக்கழிவுகளை எங்கே செல்கிறது என்னும் பிரக்ஞ்சையில்லாமல் – ஒருவேளை அது நம் வீட்டின் கொல்லைப்புறத்தை கூட அடையலாம், அவற்றின் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய, நம் பிரக்ஞ்சையற்ற நுகர்வின் மூலம் மறைமுக நெருக்கடியை உருவாக்கி, உலகத்தையும், நம் சமூகத்தையும் அதன் அங்கத்தினரான நம்மையும் சேர்த்தே சுரண்டுகிறோம்.

ஆம், எனது தேவைகள் உங்களுக்கும், உங்கள் தேவைகள் எனக்கும் தேவையற்றதாக தோன்றலாம் நாம் உண்மையில் பிரக்ஞ்சை உடையவர்களாக, ஆன்மா உடையவர்களாக இருந்தால் அடுத்தவர் தேவைகள் குறித்து ஆராய மாட்டோம். நம் தேவைகளை பிரக்ஞ்சையுடன் நிறைவேற்றுவோம். ஒருவேளை இத்தகைய பிரக்ஞ்சையுடன் நம்மால் செயல்பட முடிந்தால், அந்த செயல்களின் மூலம் எந்த அழிவுகள் நேர்ந்தாலும், அது சுரண்டல் ஆகாது. பிரக்ஞ்சையுடன் செயல்புரிவதே கர்ம யோகம்!

blog.change@gmail.com

Sunday, September 30, 2012

உறவுகள்


நாம் உறவுகளால் ஆனவர்கள். உறவுகள் இல்லையேல் நாம் இல்லை. ஆம், நாம் என்பதும், நம் உலகம் என்பதும் நம் மனதில் பின்னிப் பிணைந்துள்ள உறவுகளே. நம் உறவுகளை முழுமையாக அறியும்போது நம் மனதை முழுமையாக அறிந்திருப்போம் – நம் உலகையும்!. அதுவே ஞானம்.

நாம் அறியும் ஒவ்வொன்றுடனும், நம் மனம் உடனடியாக உறவை ஏற்படுத்திக்  கொள்கிறது. அந்த உறவுகளின் மூலமே அறிந்தவைகள் நினைவுகளாக சேமிக்கப்படுகிறது. நினைவுகளிலிருந்து மனதில் எண்ணங்கள் உருவாகிறது. ஆக, எண்ணங்கள் என்பது, நாம் உலகுடன் கொண்டுள்ள உறவுகளின் வெளிப்பாடே.. நாம் எண்ணங்களை கூர்ந்து கவனித்திருந்தால், அந்த எண்ணங்கள் பெரும்பாலும் நம் மனதினுள் நிகழும் முரண்பாடுகளின் காரணமாகவே வெளிப்படுவதை அறியலாம் – நம் அடிப்படை செயல்களுக்கு தேவையான எண்ணங்களைத் தவிர. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகளே பெரும்பாலும், பிரக்ஞ்சையின் கட்டுப்பாடு இல்லாத எண்ணங்களாக வெளிப்படுகிறது.

புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தால், உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் பெரும்பாலும் பிற மனிதர்களுடனான உறவுகளிற்குள்ளேதான் ஏற்படும். புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாத பட்சத்தில், நம் மனம், மனிதர்கள் அல்லாத மற்றவற்றுடனான உறவுகளை நம் நம்பிக்கைகள், பயங்கள், மற்றும் இதுபோன்றவற்றுடன் கலந்து மேலும் உறுதியாக்குகிறது. அவ்வாறு உறவுகள் நம் முன்னறிவின் மூலம் உறுதிப்படுத்தப்படும்போது, புதிய அறிதலுக்கான சாத்தியங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. அதாவது, ஞானத்தின் கதவுகள் மூடப்படுகிறது.

வெளிப்புற காரணிகள் இல்லாமல், மனித மனம் மாறும் வேகத்தில் வேறு எந்த பொருட்களும் மாற்றம் அடைவதில்லை. எனவே அத்தகைய பொருட்களுடன் ஏற்படுத்தப்பட்ட உறவின் தன்மையும் மாற்றம் அடைய வேண்டிய தேவை இல்லை. வெளிப்புற காரணிகள் மாற்றம் அடைந்தால், அந்த காரணிகளின் தன்மைக்கேற்ப அந்த பொருட்களுடனான உறவைவையும் மனதால் மிக எளிதாக மாற்றியமைக்க முடியும். எனவே, நம் மனதில் ஏற்படுத்தப்பட்ட உறவுக்கும், அந்த பொருளின் உண்மையான இருப்புக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

பிற மனிதர்களுடனான உறவு என்பது உண்மையில் அந்த மனித மனங்களுடனான உறவுகளே. ஆனால் பெரும்பாலும் நாம் இதை உணர்ந்திருப்பதில்லை. பிற மனிதர்களை குறித்து நாம் அறிய நேரிடும் மிகச்சில இயல்புகளைக் கொண்டு, அந்த மனிதர்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை நம் மனம் உருவாக்குகிறது. பெரும்பாலும் பிற மனிதர்களுடனான நம் உறவு எனபது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நம் மனம் உருவாக்கி விட்ட பிம்பத்துடன் மட்டுமே. இங்கு பிற மனிதர்கள் என்பது கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரர், மக்கள் மற்றும் இதைப்போன்ற எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும்! நாம் உறவுடன் இருக்கும் அந்த பிம்பங்களின் மாறும் தன்மை, அவற்றுடனான நம் சார்புநிலையை பொறுத்தது. அந்த பிம்பங்களுடனான நம் சார்பு அதிகரிக்கும் தோறும், அந்த பிம்பங்களின் மாறும் தன்மை குறைகிறது. அதாவது, நம் பிறமனித உறவுகளுடனான சார்பு நிலை அதிகரிக்கும்தோறும், அந்த உறவுகளுடனான முரண்பாடுகளும் அதிகரிக்கும்.

நாம் நம் பிறமனித உறவுகளுடன் எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறோமோ, அதே அளவு, அந்த மனிதர்களும் அவர்கள் மனதில் நம்மை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்துடனும் சார்ந்திருக்கலாம். நம் பிற மனிதர்களுடனான சார்புநிலையை உறுதி செய்ய, அந்த மனிதர்களின் நம் பிம்பத்துடனான சார்பு நிலையை  நிலைப்படுத்துவது மிக அவசியம். இங்குதான் மனிதர்களின் முதல் ஆன்மீக விலக்கம் தொடங்குகிறது. அதாவது, நாம் நம் இயல்பை விட்டு விட்டு, அந்த மனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கு ஏற்ப நடிக்க தொடங்குகிறோம் – ஒரு கணவனாக, மனைவியாக, மகனாக, மகளாக, தாயாக, தந்தையாக, இன்னும் பலவாக. ஆம், மிகப்பெரும்பாலான நேரங்களில், நாம் நம்மை சார்ந்திருப்பவர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கேற்ப நடித்துக்கொண்டிருக்கிறோம் – மிக மிக குறைந்த தருணங்களை தவிர. அந்த குறைந்த தருணங்களில் மட்டமே நாம் எதிர்வினை ஆற்றாமல், உண்மையில் செயல்பட்டுக் கொண்டிருப்போம். அவ்வாறு செயல் படும் தருணங்களில் மட்டுமே நாம் உண்மையில் பிற மனிதர்களை குறித்த பிம்பங்களை மறந்து, உண்மையிலேயே அந்த மனிதர்களுடன், அந்த மனிதர்களின் மனங்களுடன் உறவில் இருப்போம். நாம் பெரும்பாலும் நம் பிற மனித உறவுகளிடம் அன்புடன் இருக்கிறோம் என்பது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நாம் உருவாக்கியிருக்கும் பிம்பத்துடன் அன்புடன் இருக்கிறோம் என்பதாகவே இருக்கும். அந்த மனிதர்கள் நாம் அவர்களை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்திற்கேற்ப அவர்கள் நடிக்கும்வரை நாம் அந்த பிம்பத்துடன் அன்புடன் இருப்போம். அவர்கள் நாம் உருவாக்கியள்ள பிம்பத்திலிருந்த முரண்படும்போது, நம்முடைய அன்பு, வெறுப்பாக வெளிப்படும், அந்த உறவுகள் எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் – அன்பு என்பதும் வெறுப்பு என்பதும் ஒரே உளவியல் சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகளே!

எவ்வாறு அந்த எதிர்வினையாற்றுதலை விட்டுவிட்டு, செயலில் ஈடுபடுவது? எவ்வாறு பிறமனித பிம்பங்களுடனான உறவை விட்டுவிட்டு பிற மனித மனங்களுடனான உறவில் ஈடுபடுவது? எவ்வாறு பிற மனிதர்களிடம் நிலையான அன்புடன் இருப்பது? அவ்வாறு பிற மனித மனங்களுடன் நம்மால் உறவை ஏற்படுத்த முடிந்தால் மட்டுமே, பிறமனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பங்களை உறுதி செய்வதற்கான நடிப்பிலிருந்து நம்மால் விடுபட முடியும். அவ்வாறு விடுபட்டால் மட்டுமே, நம் வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையாக இருக்கும், அன்புடைய வாழ்க்கையாக இருக்கும் – நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், தவறாமல் மதச்சடங்குகளை செயபவர்களாக இருந்தாலும், எத்தகைய கடவுள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும்!

அத்தகைய விடுதலையின் சாத்தியம், நாம் பிற மனித உறவுகள் என்பது உண்மையில் பிற மனித பிம்பங்களுடனான உறவு என்னும் அறிதலில் இருந்து தொடங்குகிறது. நம் சொந்த மனம் எவ்வாறு நிலையில்லாமல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடிந்தால், எல்லா மனித மனங்களும் இயங்குவது ஒரு பொது விதியின்கீழ் என்பதை நம்மால் உணர முடிந்தால், அப்போது நம் பிற மனித உறவுகளின் மனங்களும் நிலையற்ற தன்மை உடையவை என்பதை உண்மையிலேயே நாம் அறிவோம். இங்கு அறிவது என்பது வெறும் தகவலாக நம் மனதில் நுழைவது அல்ல. அந்த தகவல், நம் இருப்பின், இயல்பின் பகுதியாக ஆவது. நாம் ஒன்றை உண்மையில் அறிந்தோம் என்றால், அந்த அறிதல் நம் இயல்பாக மாறிவிடும், நம் செயல்கள் ஒவ்வொன்றிலும் அந்த அறிதலின் இயக்கம் இயல்பாகவே செயல்படும். ஆம், உண்மையில் கல்வி என்பது அத்தகைய அறிதலை நமக்கு அளிக்கும் செயல்பாடு மட்டுமே!

பிற மனித மனங்களின் நிலையற்ற தன்மையை நாம் அறியுந்தோறும், நாம் அவர்களை குறித்து கொண்டிருக்கும் பிம்பமும் உடையதொடங்கும். ஒருவேளை, நம் மனதில் உள்ள பிற மனித பிம்பங்கள் உடையதொடங்கினால், நம் மனம் பிறமனித உறவுகளை பிம்பங்கள் இல்லாதவாறு, உள்ளதை உள்ளவாறே ஏற்றுகொள்ளும் தன்மையை பெறும். நம்மை சார்ந்திருப்பவர்கள் இயல்பாகவே அவர்களின், நம் மனதில் இருந்த பிம்பத்திற்கேற்ப நடிப்பின் தேவையின்மையை உணர்வார்கள். அந்த உணர்வு, அவர்களை நடிப்பின் துணையினைறி நம் முன் இயல்பாக இருக்கச் செய்யும். ஆச்சரியகரமாக அவர்களும் நம் இயல்பை, நடிப்பின் தேவையின்றி ஏற்றுகொள்ள தொடங்குவார்கள். நம் மனதில் இருக்கும் உறவுசங்கிலிகளும் பிம்பங்களை, மாயைகளை தவிர்த்து பிறமனித மனங்களை உள்ளது உள்ளவறே ஏற்று கொள்ளும். அத்தகைய மனதில் முரண்பாடுகள் இல்லை. எனவே துன்பங்களும் இல்லை!

Wednesday, August 29, 2012

உணர்வு


நாம் உணர்வதை அறியும் திறன், மனித இனத்திற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஆறாவது அறிவு என்னும் பெருங்கொடையாகும். நம் ஆறாவது அறிவு முழுமை அடையும்போது, ஒரு மனிதப்பிறவியாக நாமும் முழுமை அடைந்நிருப்போம். உண்மையான கல்வி என்பது, நம் ஆறாவது அறிவான உணர்வதை அறியும் திறனை அடைவதை போதிப்பதாகவே இருக்கும். இந்த நோக்கில், நம் சமூகம் நமக்களிக்கும் பொதுவான கல்வி என்பது உண்மையில் கல்வி அல்ல – அது ஒரு தொழிற்பயிற்சி மட்டுமே. நாமும் பெரும்பாலும் அத்தகைய தொழிற்பயிற்சியை மட்டுமே நம் சமூகத்திடமிருந்து கோரும் நிலையில் இருக்கிறோம், நம் சந்ததியினருக்கும் முனைப்புடன் அளித்துக்கொண்டிருக்கிறோம்.

நம் மனம் என்பது நம் தற்போதைய உணர்வுகளும், மூளையில் நினைவுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் உணர்வுகளும் வெளிப்படும் ஒரு தளம். நாம் உணர்வதை அறிவது என்பது, ஐம்புலன்களின் உணர்வு நம் மனதாக வெளிப்படும் அதே தருணத்தில், அந்த உணர்வுகளை அறிவதாகும். ஆனால் நம் தற்போதைய நிலையில், நம்மில் பெரும்பாலானவர்களால், புலன்கள் உணரும்போதே மனதால் அறிய முடிவதில்லை. புலனுணர்வுகள் நினைவுகளாக மாற்றப்பட்டபின்பு, நினைவுகளை அறிவதன் மூலம் மட்டுமே நம்மால் புலனுணர்வுகளை அறிய முடிகிறது. நினைவுகள் எப்போதுமே புலன்கள் அறிவதை அறிந்தவாறே மூளையில் சேமிக்கப்படுவதில்லை. நம் முன்னறிவுகள், நம் புலனுணர்வுகளை உருமாற்றம் செய்து, நம் முன்னறிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்பே புலனுணர்வுகள் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. ஆகவே நினைவுகளிலிருந்து நாம் அறிவது எப்போதுமே உண்மை அல்ல – நம் முன்னறிவைப் பொறுத்து, உண்மைக்கு மிக அருகிலோ அல்லது மிகத் தொலைவிலோ அல்லது இடைப்பட்ட தூரத்திலோ இருக்கும்.

புலனுணர்வுகள் தவிர மூளையினுள் நிகழும் சில நிகழ்வுகள் பயம், கோபம், அன்பு, கருணை, அறம் போன்ற உணர்வுகளாக வெளிப்படுகிறது. இந்த உணர்வுகள்,  நாம் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் நம் இருப்பை உறுதிசெய்ய இன்றியமையாதவை. உதாரணமாக, பயம் என்னும் உணர்வு,  ஆபத்துகளிலிரந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள மிக மிக அவசியமானது. மூளையின் நிகழ்வுகள் மூலம் அடையும் பிற உணர்வுகளும் நம் வாழ்வின் உச்சத்தையோ அல்லது வீழ்ச்சியையோ அடைவதற்கு காரணமாகின்றன. இந்த மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்த முடிந்தால், நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நம்மால் விழிப்புடன் கவனிக்க முடிந்தால், பிறரின் உணர்வுகளையும் நம்மால் உணர முடியலாம்.

மூளையின் நிகழ்வுகளை நம்மால் வழிநடத்துவது என்பது, நிகழ்வுகளை நம் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்வது என்னும் அர்த்தத்தில் அல்ல- கற்பனை அல்லது சிந்தனை நம் விருப்பமில்லாமல் நடைபெறாமல் இருப்பதையே பெரும்பாலும் குறிக்கும். நம் மனம் அத்தகைய நிலையை அடைந்தால், அது எப்போதுமே அமைதியில் திளைத்திருக்கும். அத்தகைய மனம், நம் பிரக்ஞ்சையின் அனுமதியின்றி எந்த வெளிப்புற நிகழ்வுகளாலும் அதன் அமைதியை இழப்பதில்லை. இந்த தகுதியை அடைந்த மனதால், அதன் அதீத விழிப்புணர்வாலும், முழுமை நோக்காலும், பிறர் உணர்வுகளையும் உணர முடியலாம். முழுமை நோக்கை அடைந்த மனம், பிறரின் உணர்வுகளை அடைந்தாலும், அந்த உணர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. அதாவது, நம் மனம் பிறரின் உணர்வுகளையும் அடையவேண்டுமானால், நம் மனம் உணர்வுகளால் பாதிக்கப்படாத தன்மையை அடையவேண்டும். நம் மனதின் இயக்கம், நம் பிரக்ஞ்சையின் கண்காணிப்பில் மட்டுமே நிகழ வேண்டும். அல்லது, நம் மனம் எப்போதும் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். முழு விழிப்ப நிலையில் இருக்கும் மனம், அறிதலின் இன்பத்தை இடைவிடாது அனுபவித்து கொண்டே இருக்கும்.

நாம் தற்போது ‘நாம்’ என அறியும் நமது உணர்வுகளை தாண்டி நமது சுற்றுப்புறங்களின் உணர்வையும் அடையும்தோறும் ‘நான்’ என்னும் சொல் குறிக்கும் நம் எல்லையும் விரிவடைந்து கொண்டே இருக்கும் அந்த ‘நான்’ முழுமை அடையும்போது, நம்மைதவிர நாமறிந்த உலகில் வேறு எதுவும் இருப்பதில்லை. இதுவே ‘அஹம் பிரம்மாஸ்மி’ அல்லது ‘நானே பிரம்மம்’ என உபநிக்ஷங்கள் அறைகூவுவது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நம் சுற்றுப்புறங்களின் உணர்வுகளையும் அடையும்போது, ‘நான்’ என்னும் தனிமைப்படுத்தும் உணர்வு நம்மிடமிருந்து மறைய ஆரம்பிக்கும். அந்த நிலையில், மனம் அதன் அகங்காரத்தின் உதவியால் தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் ‘நான்’ சார்ந்த குப்பைகளையும் இழக்கும். அதாவது, மனம் அதுவரை தான் சேர்த்து வைத்தவற்றின் உபயோகமின்மையை அறிந்து, அவற்றை களைவதன் மூலம் ஒருவகையான வெறுமையை அடையும். ‘நேதி, நேதி’ அல்லது ‘எதுவம் நானல்ல’ என்று உபநிஷங்கள் மறுத்து அடையும் நிலையும் அந்த மனதின் வெற்றிடமே.

ஆக மனம் தன்னையே அனைத்துமாக உணரும் முழுமை நிலையும், தன்னை ஒன்றுமில்லாமல் உணரும் வெறுமை நிலையும் ஒன்றாகும் உன்னத நிலையே ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய அனைவரின், அவர்கள் அறிந்த அல்லது அறியாத இலக்காக இருக்கும். மனதின் இத்தகைய உன்னத நிலையை அடைய மனம் அதன் உணரும் திறனை எப்போதும் அதன் முழுவீச்சில் பெற்றிருக்க வேண்டும். எல்லா ஆன்மீக பயிற்சிகளும், தத்துவங்களும், மதங்களும் போதிக்கும் அனைத்து வழிமுறைகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ மனதின் உணர்திறனை நோக்கியே இருக்கும். மனதின் உணர்திறனை அதிகரிக்கும் எந்த வழிமுறைகளும் ஆன்மீக வழிமுறைகளே.

தொடர்புடைய பதிவுகள்; உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்

blog.change@gmail.com

Sunday, June 24, 2012

எண்ணங்கள்

நம் சாதாரண மனநிலையில் எண்ணங்கள் மட்டுமே நனவுநிலை அல்லது நாம் அறிந்த மனதின் உள்ளிருப்பாக (content) இருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, செய்வது அனைத்தையும் எண்ணங்களாகவே நாம் அறிகிறோம். எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் நம்மால் எந்த செயல்களையும் செய்ய முடிவதில்லை. எண்ணங்களே நம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. நம் ஒவ்வொரு செயல்களும் எண்ணங்களையே அடிப்படையாக கொண்டுள்ளன. மூளை, எண்ணங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே நம்மால் மாற்றப்பட்டுள்ளது. நம் சந்ததியினரின் மூளையையும் ஒரு தொழிற்சாலையாக மாற்றுவதற்கான முயற்சியையும் நம்மால் முடிந்த அளவில் செய்து கொண்டிருக்கிறோம். நம் இன்பங்களையும் துன்பங்களையும் எண்ணங்களாகவே மாற்றி அறியக்கூடிய வகையில் நம் மூளை அதன் எண்ணங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் மூழ்கி இருக்குமாறு, அதன் இயக்கங்களை அமைத்து கொண்டுள்ளோம். இத்தகைய மூளையின் இடைவிடாத எண்ணங்களை உருவாக்கும் ஈடுபாட்டினால் எண்ணங்களே வாழ்க்கையின் இயங்குசக்தி என்னும் முடிவுக்கு வந்து, அந்த எண்ணங்களை வழிப்படுத்தும் புதிய எண்ணங்களை நம் மனதில் உருவாக்கி, எண்ண தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் தினம்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறோம் – இந்த தொழிற்சாலையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அதீத உற்பத்தி, தொழிற்சாலையை அதன் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாளுக்கு முன்னதாகவே பழுதடைய செய்யும் என்பதை அறிந்தும் அறியாமல், நம் வாழ்க்கையையே எண்ணங்களின் உற்பத்திக்கு அற்பணித்து, எல்லா விதமான உண்மையான சுயநலங்களையும் மறந்து, எண்ணங்களால் உருவாக்கப்பட்ட சுயங்களுக்காக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டிருக்கிறோம்.


எண்ணங்கள் நமக்கு தேவை இல்லை என்றால், அவை நம் வாழ்க்கையை அழிப்பவை என்றால், எதற்காக அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆம் எண்ணங்கள் மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்று. எண்ணங்களின் உதவியால் நாம் அடைந்தவையே நம்மை பிற உயிரினங்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. எண்ணங்களை உருவாக்கும் திறனை நம் மூளை இழந்து விட்டால், அது மனித மூளையாகவும், நாம் மனிதர்களாகவும் இருக்க முடியாது. ஆனால் அதே எண்ணங்களே நம்மை விலங்குகளுக்கும் கீழ் நிலையில் நம்மை தரம் தாழ்த்தவும் செய்கிறது.

எண்ணங்கள் மனிதர்களின் ஆயுதம். அந்த ஆயுதத்தை நம் முன் உள்ள தடைகளை அழிக்கவும் உபயோகப்படுத்தலாம், அல்லது நம்மையே அழிக்கவும் உபயோகப்படுத்தலாம். நாம் என்பது எது, நம் தடைகள் எவை என்பதை நம்மால் பிரித்துணர முடிந்தால்தான் நம்மிடம் இருக்கும் ஆயுதத்தை எங்கு பிரயோகப்படுத்துகிறோம் என்பதை நம்மால் அறிய முடியும். நம் உண்மையான சுயம்(self) என்பது எது, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் உருவாக்கப்பட்ட சுயம் என்பது எது என்பதை அந்த மாயைகளின் உற்பத்திகளனான நம் மனதால் பிரித்துணர முடியுமா? அவ்வாறு பிரித்துணர முடிந்தால் ஒருவேளை எண்ணங்களாகிய ஆயுதத்தை, நம் தடைகளை நோக்கி பிரயோகித்து, நம் வாழ்க்கையின் உச்சத்தை நம்மால் அடைய முடியலாம். நம் மனம் மாயைகளின் பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல் உண்மையான சுயத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. எனவே மனம் உண்மையையும் அறியும் தன்மையுடனே உள்ளது. நம் மூளையால் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உண்மையாகவே உருவாக்க முடிந்தால், எண்ணங்கள் என்னும் ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் களத்தையும் நம்மால் அறிய முடியலாம். அந்த களத்தை அறிந்த பின்னால் எண்ணங்கள் ஓரு அழிக்கும் ஆயுதம் அல்ல, அது ஒரு ஆக்கும் ஆயுதம்.

கல்வியால் மட்டுமே நம் மூளையினுள் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க முடியும். இங்கு கல்வி என்பது, நடைமுறையில் உள்ள பள்ளி, கல்லூரி சார்ந்த இலக்கு நோக்கிய ஒட்டம் அல்ல. கல்வி என்பது வாழ்க்கை கல்வி, அனுபவத்தால் அறியும் கல்வி, அனுபவத்தை அளிக்கும் கல்வி. இன்றைய இலக்கு நோக்கிய நடைமுறை கல்வியில் அனுபவத்திற்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உண்மையில் அனுபவத்திற்கு பதிலாக இலக்கு நோக்கிய ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே நம் கல்வி முறை பயிற்றுவிக்கிறது. இலக்கை அடையும்போது பெறும் அனுபவத்தை அது அனுமதிப்பதில்லை. இலக்கை அடைந்த உடனே அடுத்த இலக்குக்கான ஓட்டம் தொடங்கி விடுகிறது. அனுபவம், அனுபவிக்கப்படாமல் மறைகிறது. வாழ்க்கை என்பது கணத்துக்கு கணம் பெறும் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. அந்த அனுபவங்களை அடைய முடியாத அல்லது அந்த அனுபவங்களை அடைவதிலிருந்து நம்மை புறந்தள்ளும் எல்லா இலக்குகளும் மாயைகளே. உண்மையான கல்வியை, அனுபவத்தை அளிக்கும் கல்வியை நாம் சார்ந்திருக்கும் சமூகமும் அந்த சமூகத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறையும் நமக்கு அளிக்கவில்லை. ஆகவே நம் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே அனுபவத்தை அளிக்கும் கல்வியை பெறமுடியலாம். ஆக, உண்மையான கல்வியை அடைவது கூட தற்செயல் நிகழ்வாக ஆக்கப்பட்டுளது. அந்த தற்செயல் நிகழ்வு நமக்குள் நிகழ்ந்தால் மட்டுமே, கல்வியை நம்மால் அடையமுடியும். அந்த அனுபவ கல்வி மூலம் உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்குள் தூண்டப்பட்டால் மட்டுமே, நம் உண்மையான சுயத்தை அறிவதற்கான விருப்பமும், தேடலும் நமக்குள் தோற்றுவிக்கப்படலாம்.

நம் அன்றாட செயல்பாடுகளுக்கு எண்ணங்களும் நினைவுகளும் அவசியம். இவை அந்த செயல்கள் தேவைப்படும் தளத்தில், தேவைப்படும் நேரத்தில் மட்டும். ஆனால் அந்த செயல்பாடு முடிந்த பின்னும் அதன் விளைவுகளை அடைந்த பின்னும் (எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள்), அந்த செயல் குறித்த எண்ணங்களும் நினைவுகளும் நம் மனதை நிறைப்பது என்பது எண்ணங்கள் நம் தேவைக்காக மட்டும் நிகழவில்லை என்பதை உறுதி செய்கிறது. எண்ணங்கள் நம் ஆயுதமாக இருக்கும்போது அவை நம் தேவைகளுக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் எண்ணம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே இயங்குகிறது. அதாவது, நம்மிடம் இருக்கும் எண்ணமாகிய ஆயுதம், நம் தேவைக்கேற்ப இயங்காமல், அதன் இயக்கத்திற்கேற்ப நம் தேவைகளை வடிவமைக்கிறது. ஆகவே நம் அடிமையாக இருக்க வேண்டிய எண்ணமாகிய ஆயுதமே நம் தேவைகளை வடிவமைத்து, நம்மை அதன் அடிமையாக மாற்றி விட்டது. ஆக, நம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் ஆயுதத்தை நம்மிடம் வைத்திருக்கம் நாம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே – நம் வாழ வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவு அல்ல!

நம்மை அடிமையாக கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று, எண்ணங்களை நம் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தும் ஆற்றலை நம்மால் பெற முடியுமா? எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

Sunday, June 17, 2012

மனம், மனமயக்கம், மாயை

கடவுள் என்பது ஒரு இருப்பா (சத் - existance) அல்லது இன்மையா (அசத்- non-existance) என்னும் உபநிஷங்கள் எழுப்பும் கேள்வியை நம் மனதை நோக்கியும் நாம் கேட்கலாம். இங்கு இன்மை என்பது இருப்பு என்பதன் எதிர்பதம் ஆகாது. இன்மை என்பது எல்லாவற்றையும் அதனுள் அடக்கும் முழு வெறுமை – இந்த அர்த்தத்தில் இருப்பு என்பது இன்மையினுள் மிதக்கும் சிறுதுகள் மட்டுமே. இன்மை என்பதை நிகழ்வு என்னும் அர்த்தத்திலும் கொள்ளலாம்.


இந்த அர்த்தத்தில் மனம் ஒரு இருப்பா (சத்), நிகழ்வா(அசத்) என்னும் கேள்வியை எழுப்பினால் மனம் ஒரு நிகழ்வு என்பதே பதிலாக இருக்க முடியும். மனம் என்பது ஒரு பொதீக பொருள் அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அதாவது மூளையின் இயக்கங்களின் பிம்பங்களே மனமாக வெளிப்படுகிறது. அதாவது மனம் என்னும் நிகழ்விற்கு மூளை என்னும் இருப்பு தேவைப்படுகிறது. (கடவுள் என்பது நிகழ்வாக இருந்தால், அந்த நிகழ்விற்கு அடிப்படையாக எந்த இருப்பும் தேவையாக இருக்க முடியாது. எனவே சத், அசத் என்னும் வார்த்தைகளை மனதிற்கு பொருத்தி பார்ப்பது, ஒரு தகுதியற்ற ஒப்பீடு மட்டுமே) மூளை அதன் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபடும்போது அல்லது மூளையின் உயிர்ப்பு இல்லாமல் ஆகும்போது மனம் என்னும் நிகழ்வும் இல்லாமல் ஆகிறது.

மூளையின் இயக்கங்கள், அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்குமானால், அந்த இயக்கங்களின் வெளிப்பாடான மனமும் அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்க கூடும். இத்தகைய மூளையின் ஒத்திசைவான இயக்கங்களை வெளிப்படுத்தும் மனமே உண்மையை அல்லது கடவுளை உணரும் மனமாக இருக்கலாம். மூளை அதன் அறிதல்கள் மூலம் சுய அடையாளங்களை உருவாக்கி கொள்ளும்போது, அது வெளிப்புற இயக்கங்களுடனான ஒத்திசைவை இழந்து, அதுவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன்(Self) ஒத்திசைவை ஏற்படுத்துகிறது. மூளை உருவாக்கும் சுயம் என்பது ஒற்றைப்படையான ஒரு இயக்கம் அல்ல. மூளை அறியும் ஒவ்வொரு அறிதலும் ஒரு சுயத்தை உருவாக்குகிறது. மேலும் மூளை அடைந்த அறிவின் இயல்பிற்கேற்ப இந்த ஒவ்வொரு சுயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும் முரண்பட்டதாகவும் இருக்க கூடும். ஆக, மூளை அதுவாகவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன் ஒத்திசைந்து செயல்களை வெளிப்படுத்தும்போது, அந்த செயல்களும் செயல்களின் மூலம் அடையப்படும் விளைவுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருக்கும். இத்தகைய செயல்கள் மற்றும் விளைவுகளின் தொடர்பின்மையும் முரண்பாடுகளுமே நம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படை காரணியாக இருக்கிறது.

உண்மையான சுயம் என்பது நாம் இந்த உலகில் தோன்றியபின் உருவாகி நம்முடன் ஒட்டிக்கொண்ட ஒன்றாக இருக்க முடியாது. நம் உண்மையான சுயம், நாம் இந்த உலகில் தோன்றும்போது உருவான ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் – அந்த சுயம் என்பது நம் பிறப்புடன் தோன்றி இறப்புடன் முடியும் ஒன்றாக இருந்தால். நாம் பிறந்தபின், மூளையின் அறிதல் இயக்கம் தொடங்கியபின், மூளை உருவாக்கும் சுயங்கள் எல்லாம், அந்த மூளையால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களே. மாயத்தோற்றங்களை உருவாக்கும் மூளை, வெளிப்புற இயக்கங்களுடனான தன் ஒத்திசைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொணைடு, அதனால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களான சுயங்களுடன் ஒத்திசைந்து புதிய அறிதல்களை நிகழ்த்துகிறது. இந்த மாயத்தோற்றங்களுடன் ஓத்திசைந்து இயங்கும் மூளையின் ஒவ்வொரு இயக்கத்தையும் தன் நிகழ்வாக பெறும் மனம், வெறும் மனமயக்கம் மட்டுமே. அதாவது, நம் வாழ்க்கையை பெரும்பாலும் மனமயக்கங்களாக இருக்கும் இயக்கங்கள் மற்றும் அந்த மனமயக்கங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் இயக்கங்களினால் மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது நம் வாழ்க்கைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருந்தால், அந்த தொடர்பு பிரக்ஞ்சைபூர்வமாக நம்மால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு அல்ல. அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமே.

எனில் நாம் பிறக்கும்போது நம் மூளை இயற்கையுடன் கொண்டிருந்த ஒத்திசைவு இயக்கத்தை எவ்வாறு நாம் இழக்கிறோம்? நம் சுற்றுச்சூழலும் சமூகமும் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் இந்த இழப்புக்கு காரணமாக இருக்கலாம். நம் மனம் இயற்கையுடன் தொடர்ச்சியாக ஒத்திசைவுடன் இருக்க அது அதீத சக்தியுடனும் முழு உயிர்ப்புடனும் இருக்க வேண்டியது மிக அவசியம். சமூகம் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் தன்மை அந்த உயிர்ப்பை இழக்க செய்திருக்க கூடும். இயற்கையுடன் தொடர்பை இழந்த மனம், அதன் இயக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு, சுயங்களை உருவாக்கி, அந்த சுயங்களுடன் ஒத்திசைந்து தன் இயக்கத்தை தொடர்ந்திருக்கலாம். அவ்வாறு சுயங்களை உருவாக்க இயலாத மனம், மனப்பிறழ்வு நிலையை அடைந்து வெளிஉலகத்திடமிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள்ள நேரலாம்.

ஆன்மீகம் என்பது இயற்கையுடனான நம் மனதின் உறவை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கான இயக்கமே. நம் மனம் மீண்டும் இயற்கையுடனான ஒத்திசைவை திரும்பப்பெற வேண்டுமானால், மனம் அதுவாக உருவாக்கிக்கொண்ட சுயங்களிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளே நம் சுயத்தை உருவாக்குகிறது. எனவே சுயங்களிலிருந்து விடுபட, நாம் அறிந்தவைகளிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளின் இயல்பை அறிவதும், நம் சுயங்களின் இயல்பை அறிவதும், இயற்கையுடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்கான எளிய வழிகளாக இருக்க கூடும். மனம் அடைந்த சுயங்களை அழிப்பதற்கான வேறு வழிகளும் இருக்க கூடும். எந்த வழியில் சுயத்தை இழப்பதற்கான முயற்சியில் இருந்தாலும், அத்துடன் சேர்ந்து இயற்கையுடனான தொடர்பையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை நம் மனதால் சுயத்தை அழிக்க முடிந்து, ஆனால் இயற்கையுடனான தொடர்பை மீட்டெடுக்க முடியாமல் போனால், மனப்பிறழ்வு நிலை கூட அதன் முடிவாக இருக்கலாம். இந்த எதிர்மறை விளைவே ஆன்மீக சாதனைகளுக்கு வழிகாட்டுதலை அவசியமாக்குகிறது.

நாம் சமூக வாழ்க்கையினுள் செல்ல செல்ல, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் நம்மை இழப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த இழப்பை நம்மால் அறிய முடிந்தால், மனமயக்கங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் ஒருவேளை நம்மால் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியலாம். எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

Tuesday, June 5, 2012

அறிதல், அறிந்ததிலிருந்து விடுபடுதல்

மனிதனின் குறைந்தபட்ச தேவைகளுக்கான இயக்கங்களைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் மனித மனதின் அறிதல் தேவைகளை சார்ந்தே இருக்கும். புகழ் அல்லது செல்வத்தை தேடும் இயக்கங்கள் கூட, அந்த புகழ் அல்லது செல்வத்தை அடையும்போது மனம் அடையும் இன்பத்தை நம் மனமே அறிவதாலும் அவ்வாறு அறிவதற்கான தேவை நம்மிடம் இருப்பதாலும் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை புகழ் அல்லது செல்வம் சேர்வதனால் மனம் அடையும் இன்பத்தை அறியும் தேவையை நம்மால் கடந்து செல்ல முடிந்தால், புகழ் அல்லது செல்வத்தை தேடுவதற்கான நம் இயக்கங்களையும் நம்மால் கடந்து செல்ல முடியும்.


சமூக வாழ்க்கையில் நம் குறைந்த பட்ச தேவைகளை அடைய செல்வம் இன்றியமையாதது. எனவே அந்த செல்வத்தை தேடுவதற்கான இயக்கங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இயக்கங்கள் மூலம் செல்வத்தை நாம் அடையும்போது மனம் அடையும் இன்பத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இன்பத்தை அறியும் மனம், அதையே பற்றிக்கொள்ள விரும்புகிறது, அந்த இன்பத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் எந்த இன்பமும் கண நேரத்திற்கு மட்டுமே இருக்கும் – அந்த இன்பத்தை மனம் அறியும் தருணத்தில் மட்டும். மனம் தொடர்ச்சியாக அந்த இன்பத்தை பெற வேண்டுமானால், அதற்கான காரணி தொடர்ச்சியாக இருக்க வேணைடும். அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செல்வத்தை அடைந்து கொண்டே இருக்க வேண்டும், செல்வத்தை அடையும்போது மனம் அடையும் புளங்காகிதத்தை அந்த மனம் மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே செல்வத்தை அடைதல் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் அடைந்த இன்பத்தை அறிந்த மனம், அந்த அறிதலிலுருந்து விடுபட இயலாமல் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தை அறிவதற்காக, நம் மரணம்வரை செல்வத்தின் பின்னால் நம்மை ஓட வைக்கிறது. இது எவ்வாறு நம் மனம் செல்வத்தை தேடுதல் என்னும் ஒரு இயக்கத்திற்கு அடிமையாகிறது என்பது. இதைப்போல நம் அறிவின் எல்லைக்கேற்ப நம் மனம் எண்ணற்ற இயக்கங்களின் அடிமையாக மாறி, அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட வழி தெரியாமல் அடிமைத்தனத்தையே அதன் இயங்கும் திசையாக அமைத்துக்கொண்டுள்ளது.

ஆனால் அறிவு மட்டுமே நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் ஆற்றலையம் கொண்டது – அந்த அறிவை நம் தர்க்க புத்தியின் மூலமோ, இயற்கை அல்லது உண்மை அல்லது கடவுள் என்னும் கருத்திடம் முழுமையாக சரணடைவதன் மூலமோ அல்லது நம் உணர்வுநிலைகளை உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் வேறு வழிகள் மூலமோ நாம் பெறலாம். ஆக அறிவே நம்மை தளைப்படுத்துகிறது. அதே அறிவே தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் கூடியது. வெளிப்படையாக பார்த்தால் முரண்பாடாக தோன்றும் இந்த கருத்தின் யதார்த்தத்தை அறிய நம் மன இயக்கங்களை சற்று நோக்க வேண்டி இருக்கலாம். அறிவு நம்மை தளை படுத்துகிறது, எனில் அறிவை அடையாமல் இருந்தால் தளைபட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆம், அறிவை அடையாவிட்டால் தளைபட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்போது நாம் மனிதர்களும் இல்லை – ஓரு தளைபடாத விலங்கு மட்டுமே. அறிதலின் சாத்தியங்களே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

நம் சாதாரண நிலையில், எல்லா புதிய அறிதல்களும், நாம் முன்பே அறியும் ஏதேனும் ஒன்றை சார்ந்து மட்டுமே இருக்க முடியும். எனவே நமது அறிவு எப்போதுமே முழுமையானதாக இருக்க முடியாது. முழுமையான அறிவு என்பது நம் அறிதல் எப்போது நம் முன்னறிவை சார்ந்திராமல் முற்றிலும் புதிதாக இருக்க முடியுமோ அந்த அறிவு மட்டுமே ஆகும். அத்தகைய முற்றான அறிதல் நம்முள் நடைபெறும்போது, அங்கு எந்த எண்ணங்களுக்கும் இடம் இல்லை, நம் மூளையில் அடைத்து இறுக்கி வைத்திருக்கும் எந்த நினைவுகளுக்கும், தகவல்களுக்கும் தேவை இல்லை. நாம் முயன்று பெற்ற கல்விக்கும் தேவை இல்லை.

ஒரு சாதாரண சார்புநிலை அறிவு, சிறிதளவு செல்வம் நம்மிடம் சேருகிறது என நாம் அறியும் அறிவு நமக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கும்போது, முழு முதல் அறிவு, முழுமையான அறிவு, எதையும் சார்ந்திராத அறிவு அறியப்படும்போது நாம் அடையும் இன்பத்தை அனுமானிக்க சிறிதளவு கற்பனைத்திறனே போதுமானது. ஆம், இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து முடித்து விட்டோம். நம் மனதை நோக்கி இப்போது கூட நாம் திரும்பாமல் இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்த கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து இறந்து இருப்போம். இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அளிக்காத கல்வியை கற்று விட்டு, நாம் கற்றவர்கள் என்னும் கற்பனையில் மூழ்கியிருக்கிறோம்.

எனில், நாம் எவற்றை அறிய வேண்டும்? எந்த அறிதல்களிலிருந்து விடுபட வேண்டும்? நாம் விரும்பியவற்றை அடைந்து விட்டோம் என்னும் அறிதலே இதுவரை நாம் அடைந்த எல்லா இன்பங்களுக்குமான காரணம். அந்த அறிதல் நடைபெற்ற தருணங்கள் மட்டுமே நாம் இன்பமாக இருந்த தருணங்கள். மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டிருப்பது, மனிதனிடம் உள்ள அறிதலின் சாத்தியத்தினால் மட்டுமே. எனவே மனிதனின் இயல்பு என்பது அறிதலின் இன்பத்தில் திளைத்திருப்பது. எல்லாவிதமான சார்புநிலை அறிவுகளாலும் அறியும் தருணத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க இயலும் – அடைதலை அறியும் இன்பங்களும், அடைந்ததை நுகரும்போது அறியும் இன்பமும். அறிதல் நிகழ்ந்த அடுத்த கணத்தில் அது நம் நினைவுகளாகி அறிதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும். எனவே நாம் உண்மையில் மனிதர்களாக இருக்க விரும்பினால், நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒவ்வொரு கணமும் இன்பத்தில் திளைத்திருக்கும் நிலையை நோக்கி நம் இயக்கத்தை வழிப்படுத்துவது மட்டுமே. அத்தகைய முடிவிலா இன்பத்தை, ஒவ்வொரு கணமும் அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் அடைய முடியும். முழுமையான அறிவை அறியம்போது மட்டுமே ஒவ்வொரு கணமும் அறிதல் புத்தம்புதியதாக எந்த சார்புநிலையும் இல்லாமல் நிகழும் சாத்தியம் உள்ளது. ஆக நாம் அறியவேண்டியதெல்லாம் அத்தகைய முழுமையான அறிவுக்கான சாத்தியங்களையும் அந்த அறிவை அடைவதற்கான வழிமுறைகளையுமே.

ஆனால் முழுமையான அறிவு என்பது, நாம் அறிந்த எந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் தொடர்பில்லாததாக மட்டுமே இருக்க முடியும். ஏனைனில் முழுமையான அறிவு முற்றிலும் சார்புநிலையற்றது. அறியும் ஒவ்வோரு கணமும் புத்தம்புதியதாக அறியப்படுவது. நாம் அறிந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் சார்ந்திருந்தால் அது சார்புநிலையற்ற அறிவாக இருக்க முடியாது. முழுமையான அறிவின் இத்தகைய சார்புநிலையற்ற தன்மையே நாம் அறிந்தவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆம், நாம் அறிந்த அனைத்திலிருந்தும் நம்மால் விடுபட முடிந்தால் மட்டுமே முழுமையான அறிதலின் இன்பத்தில் நம்மால் திளைக்க முடியும் – நாம் அறிந்தவை வேதங்களாக இருந்தாலும், குருவின் வார்த்தைகளாக இருந்தாலும் அல்லது எந்த மூல நூல்களாக இருந்தாலும்! ஆனால் வேதங்களும், குருவின் வார்த்தைகளும் மற்ற மூல நூல்களும் நிச்சயமாக நமக்கு தேவை – முழுமையான அறிவின் சாத்தியங்களை அறிவதற்காக, அந்த சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்காக! அத்தகைய சாத்தியங்களை, வழிமுறைகளை அறிந்தபின், அடைந்தபின் வேதங்களும், குருவின் வார்த்தைகளும், மற்ற மூல நூல்களும் முழுமையான அறிதலுக்கு இடைஞ்சல்களே!

blog.change@gmail.com

Monday, May 7, 2012

மனித மனம், மிருகம், தெய்வம்

மனித மனத்தின் கீழ்மைகளை விலங்குகளுடன் ஒப்பிடுவது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பீடு சரியான ஒன்றா என்பது உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. நாம் மரபு கண்ணி வழியாக விலங்குகளிலிருந்து உருவானவர்கள். எனவே நம் அடிப்படைத் தன்மையும் விலங்குகளின் அடிப்படைத் தன்மையை ஒத்திருக்கவே முடியும். அந்த அடிப்படைத் தன்மைகளின் மூலம் உருவாகும் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். அதற்கு எதிராக, அந்த அடிப்படைத் தேவைகள் மிருகத்தன்மை என்னும் சாயம் பூசி அவற்றை வலுக்கட்டாயமாக தவிர்ப்போமானால், நாம் இயற்கையுடன் முரண்பட்டுக்கொண்டிருப்போம். முரண்பாடுகள் இருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது.


சமீபத்தில் படிக்க நேர்ந்த ‘THE MONKEYS OF VARANASI”  கட்டுரை சில வெளிச்சக்கோடுகளை எனக்கு காட்டியது. இந்தக் கட்டுரையில் வரும் இந்த வாக்கியம், நாம் மிருகத்தன்மை என விலக்க முயலும், ஆனால் நம்மிடமிருந்து விலகாத நம் இயல்புகளை கூறுகிறது போலும். ‘Any one who has done a little self-observation may have detected these three main objects of desire whereby pleasure, security, and status reveal themselves as the centeres around which psychological thinking turns”. இன்பம், உயிர் மற்றும் இன்பத்திற்கான பாதுகாப்பு, இவை இரண்டுக்கும் தேவையான அந்தஸ்து(விலங்கு சமூகத்தின் தலைமை பொறுப்பு) இவை மூன்றுமே விலங்குகளுக்கான அடிப்படைத் தேவைகள் என கூறப்பட்டுள்ளது. விலங்குகளின் இயக்கத்தை கவனித்தால் இதனை நாமும் உணரலாம். இந்த மூன்று தேவைகளும், அந்த தேவை உருவாகும் நேரத்திலேயே அதை அடைய தேவையான உயிர்ப்பையும் விலங்குகள் பெறுகின்றன. அந்த உயிர் சக்தி, தேவைகளை அடைவதற்கான இயக்கங்களில் விலங்குகளை ஈடுபட வைக்கிறது. அதாவது, அந்த விலங்கு இன்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் அந்தஸ்துடன் இருந்தால் இன்பத்தையும் உணவையும் அடைகிறது. அந்த இன்பத்திற்கும், பாதுகாப்புக்கும் எதிர்ப்புகள் எழும்போது, அந்த எதிர்ப்பை அழிப்பதற்கு தேவையான விழிப்புணர்வுடன் இருக்கிறது- விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உண்மையிலேயே முழுமையான உயிர்ப்பு அதன் முழு வீரியத்துடன் இருக்கிறது. விலங்குகளிடம் இன்பத்திற்கான தேவை எற்படும்போது, அந்த தேவையை நிறைவேற்றத் தேவையான அந்தஸ்து அல்லது தலைமைப் பதவி இல்லாத பட்சத்தில், அந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தலைமையுடன் போராட்டத்தில் ஈடுபடுகிறது. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றால், இன்பத்தை அடைகிறது. போராட்டத்தில் ஈடுபடும்போது வீணாகும் உயிர் சக்தியின் மூலம் இன்பத்திற்கான தேவை அழியுமானால், அந்த விலங்கு சமூகத்தினுள் அடங்கி இருந்து உயிர்ப்பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது. இன்பத்திற்கான தேவை குறையாத பட்சத்தில் கடைசிவரைப் போராடி உயிரை விடுகிறது.

நாம் மனிதர்கள்! நம் அறிவின் மூலம் சமூக அமைப்புகளை உருவாக்கி இன்பம் மற்றும் உயிர் பாதுகாப்பை பெருமளவில் உறுதி செய்து விட்டோம். ஆனால் நமக்கு மனம் என்னும் கொடை இயற்கையால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனதை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை தெரிவு செய்யும் சாத்தியத்தையும் நமக்கு இயற்கை அளித்துள்ளது. இந்த தெரிவு செய்யும் சாத்தியத்தையே நாம் மனித வாழ்விலிருந்து பிறழ்வதற்காக உபயோகப்படுத்துகிறோமா? அல்லது தெரிவு செய்யும் சாத்தியம் இருந்தும் தெரிவு செய்ய இயலாதவர்களாக இருக்கிறோமா? ஆக, மனிதர்களாக பரிணாம வளர்ச்சியடைந்த நம் இயக்கம், விலங்கின் அடிப்படை இயல்புகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஏனெனில் அந்த தேவைகளை நாம் அடைந்து விட்டோம், அல்லது அந்த தேவைகளுக்கான போராட்டத்தை கடந்து வந்து விட்டோம். எனவே நமது தற்போதைய போராட்டம், நம் உயிரின் தற்போதைய இயக்கம், அந்த அடிப்படைத் தேவைகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஆனால், மனிதர்களாகிய நாமும் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எதை அடைய இந்த இடைவிடாத போராட்டம்?

நாம் நம் அறிவின் மூலம் அளவில்லாத புதிய தேவைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த புதிய தேவைகள் நம் அறிவின் தரம் அல்லது அந்த அறிவு உண்மையுடன் அல்லது இயற்கையுடன் கொண்டுள்ள உறவை அடிப்படையாக கொண்டிருக்கும். நம் தேவைகளை உருவாக்கும் அறிவு உண்மையுடன் நெருங்கிய உறவில் இருக்குமானால், அந்த தேவைகளினால், நம் வாழ்க்கை இயக்கத்தில் முரண்பாடுகளை ஏற்பட சாத்தியம் இல்லை. முரண்பாடுகள் இல்லா விட்டால் வாழ்க்கையில் போராட்டமும் இல்லை. ஆனால் வாழ்வின் எதார்த்தம் அவ்வாறு இல்லை. நம் பெரும்பாலான இயக்கங்களில் முரண்பாடுகள் உள்ளது. அதன் மூலம் நம் பெரும்பாலான வாழ்வின் இயக்கங்கள் போராட்டங்களாகவே உள்ளது. இதன் காரணம், நம் அறிவு உண்மையிலிருந்து விலகி உளவியல் இயக்கங்கள் மூலம் உருவாகும் மாயையில் இருப்பதாலா?

நாம் நம்மை அறிய விரும்பினால், அல்லது நமது வாழ்க்கை போராட்டத்தின் திசையை அறிவதற்கான தேவை நம்மில் தோன்றினால், நாம் அறிய வேண்டியது, எந்த அடிப்படை தேவை நம் வாழ்க்கையை இயக்குகிறது அல்லது எந்த அடிப்படைத் தேவையிலிருந்து நம் அறிவு வாழ்க்கையின் போராட்டங்களுக்கு காரணமான தேவைகளை உருவாக்குகிறது என்பதாகவே இருக்கும். நம் உயிர்ப்பு எதைத் தேடுகிறது? நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் எந்த குறிக்கோளுக்காக? அவ்வாறு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்தால், நாம் போராட வேண்டிய தேவையே இல்லையே. நம் சமூக அமைப்பு, அந்த சமூகத்தின் அங்கத்தினராக இருக்கும் அடிப்படைத் தகுதி நமக்கு இருந்தால், அடிப்படை இன்பங்களையும் அடிப்படை பாதுகாப்பையும் சமூக கட்டமைப்பின் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சமூக கட்டமைப்பை மீறும் எந்த மனிதனும், ஏதோ ஒரு தேடலின் விசை கொண்டு மட்டுமே அந்த சமூக கட்டமைப்பை மீற முடியும். அந்த விசை எதனால்? எதை நோக்கி?

நம்மை இயக்கும், நம் உயிர்ப்பை இறுதிவரை உண்ணும், நம் எல்லா வித சக்திகளையும் திசைப்படுத்தும் அந்த தேடுதலின் ஊற்றுமுகம் நம் மனமாகவே இருக்க முடியும். நம் மனம் அதன் ஆழங்களிலிருந்து அதற்கான விசையை பெறுகிறது. அந்த விசையின் தோற்றுவாயை அறியாத பட்சத்தில், விலங்குகளிலிருந்து நாம் பெற்ற, நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படைத் தேவைகளில் அந்த விசையை உளவியல் இயக்கங்கள் மூலம் செலுத்தி நம் அன்றாட போராட்டங்களை வெளிப்படுத்துகிறது. நாம் பெறும் அறிவின் அளவிற்கேற்ப, அந்த அறிவு உண்மையுடன் கொண்டுள்ள தொடர்பிற்கேற்ப நம் மனதில் உருவாகும் விசையின் திசையும் அமைந்திருக்கலாம். நம் தேடுதல் முழுமை அடையும்போது, நம் உயிர்ப்பு முழுமையாக, சிறிதளவும் சிதையாமல், நம் தேவைகளால் உண்ணப்படாமல் அதன் முழுமையுடன் நம்மிடம் தங்கக்கூடும். உயிர்ப்பின் முழுமைத் தன்மையை அடைவது கூட நம் வாழ்க்கையின் போராட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்கலாம். ஒருவேளை அத்தகைய ஒரு உயிர்ப்பு நிலையை நாம் அடைந்து, அந்நிலையை தலைமுறைகளாக நம்மால் தக்க வைத்திருக்க முடிந்தால், அதுவே பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கூட இருக்கலாம்.

blog.change@gmail.com