இயந்திரம் என்பதன் வரையறை,
ஒரு (பொருள்)இருப்பு, அதற்கு என்று முன்பே வரையறுக்கப்பட்ட செயலை, மீண்டும் மீண்டும்
செய்யும் ஒன்று எனலாம். வரையறுக்கப்பட்ட செயல் என்பது மிக எளிதான மீண்டும் மீண்டும்
செய்யப்படும் ஒற்றைச் செயல்பாடாகவோ (எளிய மெக்கானிக்கல் இயந்திரம்) அல்லது, பலவிதமான
முன்கணிக்கப்பட்ட செயல்களின் விளைவுகளுக்கேற்ப தன் செயலை பிரித்தறிந்து செய்யும் (சிக்கல்
மிகுந்த தானியங்கி இயந்திரம்) செயலாகவோ இருக்கலாம்.
இந்த வகைப் பார்வையில்,
உயிரினங்களும் மாபெரும் இயந்திரங்களே- ஒரே ஒரு வித்தியாசத்தை தவிர! நாம் பொதுவாக இயந்திரங்கள்
என கூறுவது, மனிதனால் உருவாக்கப்பட்டவை. எனவே அவை மனிதனின் அறிதலின் எல்லைக்குள் இருக்கும்
உயிரினங்கள், இயற்கையின் விளைவுகளால் தாமாகவே உருவானவை. அல்லது இயற்கையை, முழு முதல்
இருப்பை, கடவுள் என நாம் கூற விரும்பினால், அவை கடவுளால் உருவாக்கப்பட்டவை. நிச்சயமாக,
மனிதனால் உருவாக்கப்படுபவையின் செயல்கள், மனிதனின் அறிவையும் கற்பனையைம் தாண்ட இயலாது.
உயிரினங்களின் பொதீக இருப்பு மனிதனின் அறிதலின் எல்லைக்குள் பெருமளவு வந்து விட்டாலும்,
உயிரினங்களின் முழு இருப்பு என்பது மனித அறிவின் அறிதலுக்கு அப்பாற்பட்டே உள்ளது. இதையே
இயந்திரங்களுக்கும் உயிரினங்களுக்குமான வேறுபாடாக நாம் கொள்ளலாம்.
ஒரு உயிரினமாக மனித இனமும்,
நம் செயல்பாடுகளை ஒட்டி, இந்த பிரிவினைக்கு உட்பட்டது. அதாவது மனிதர்களின் வரையறைக்கு
உட்பட்ட, குறிப்பிட்ட செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது இயந்திரத்தனமானது என்றும்,
நம் உயிரின் இயல்பான, நம் பொது வரையறைக்கு அப்பாற்பட்ட செயல்களின் மூலம் செயல்படுவது
உயிர்த்தனமானது என்றும் கூறலாம். இதன்படி பார்த்தால், சமூகமாக வாழும் எல்லா உயிரினங்களும்,
அந்த சமூகத்தின் சில வரையறைகளுக்குட்பட்டு இயந்திரத்தனமாக வாழ்கின்றன. அந்த வரையறை
தாண்டிய தளங்களில் மிக சுதந்திரத்துடன், தங்கள் முழு உயிர்த்தன்மையுடன் வாழ்கின்றன.
மனிதர்களும் ஒரு சமூக விலங்கு.
மனித இனம் மற்ற உயிரினங்களிடமிருந்து அறிவின் தளத்தில் மிக வேறுபாட்டுடன் உள்ளது. அந்த
வேறுபாட்டின் காரணமாக, அறிவின் வீச்சின் காரணமாக, மனித சமூகத்தின் வரையறைகள் மற்ற உயிரினங்களின்
சமூக வரையறைகளிலிருந்து வேறுபட்டதாக, பரந்ததாக உள்ளது. அந்த வரையறைக்குள் நாம் இயந்திரமாக
செயலாற்றியாக வேண்டியுள்ளதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு உயிரினமாக நம்மை நாம் நிலைநிறுத்திக்கொள்ள
வேண்டுமானால், நம் உயிர்தன்மையின் தளத்திலும் நாம் செயல்பட்டாக வேண்டும். ஒரு தனிமனித
இருப்பாக, நம் ஒவ்வொருவருக்கும், நம்மை ஒரு மனித உயிராக நிறுவுவது, நாம் எதிர்கொள்ள
வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவை ஏற்றுக்கொள்ளகூடியவையாக
இருந்தால், அந்த சவாலின் அம்சங்களை ஆராயலாம், அல்லது இந்த உரையாடல் தேவையற்ற ஒன்று.
இயந்திரத் தன்மை என்பது, வரையறுக்கபட்ட செயலை அந்த வரையறைக்குட்பட்டு செய்வது. சமூகம்
என்பது ஒரு அதிகார அடுக்கு. அதன் அதிகாரம், சமூகத்தின் அங்கத்தினர்களால் (ஜனநாயக சமூகத்தில்)
வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செயல்படும். ஜனநாயக சமூகத்தில், இந்த வரையறை என்பது அடுத்தவர்களை
அல்லது சமூகத்தின் இயக்கங்களை பாதிக்கும் செயல்களுக்கு மட்டுமே இருக்கும். முழுமுற்றான
தனிப்பட்ட செயல்களுக்கு எத்தகைய கட்டுப்பாடும் பெரும்பாலும் இருக்க கூடாது. இங்கு ஒரு
ஆர்வமூட்டும் விஷயம், எல்லாவிதமான வெளிப்படையான நம் செயல்பாடுகளும், மற்றவர்களை எந்த
விதத்திலாவது நிச்சயமாக பாதிக்கும். ஆனால் சமூகத்தில் இத்தகைய எல்லா விதமான புறவயச்செயல்பாடுகளுக்கும்
சமூக வரையறை என்பது இயலாத ஒன்று. ஆக நம் செயல்பாடுகள் குறித்த தளத்தில், இன்னொரு வரையறை,
தனிப்பட்ட அளவில், தேவைப்படுகிறது. இதுவே நம்மை ஒரு உயிரினமாகவோ அல்லது இயந்திரமாகவோ
நிலைநிறுத்துவதற்கு நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.
நம்மை ஒரு சமூக அமைப்பாக,
சமூக அதிகாரத்துக்குள் மட்டும் நிலைநிறுத்தி, முழுமையாக நம் இயக்கத்தை அமைத்து கொண்டால்,
அது நம்மை முழுமையாக இயந்திரத்தனத்துக்கு ஒப்புக்கொடுப்பதாகும். அந்த சமூக அதிகாரத்தை
முற்றிலும் எதிர்த்து, முழுமையாக அதற்கு எதிராக இயங்குவது, தவறாக இயங்கும் இயந்திரத்தன்மையை
போன்றதே. அதாவது ஒரு எதிர் சமூக அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மீண்டும் இயந்திரத்தன்மையை
நிலைநிறுத்துவது. சமூக அமைப்புக்குள் அதன் விதிகளுக்குட்பட்டு இயங்கும்போது, அந்த அமைப்பின்
அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் முதல் அதன் இயக்கத்தை கடைமட்டத்தில் இயக்குபவர்கள்வரை
எவரும் அந்த இயக்கங்களின் விளைவுகளையும் அதன் எல்லாவிதமான தாக்கங்களையும் பெரும்பாலும்
அறிந்திருப்பதில்லை. அவர்கள் அறிந்திருப்பது அந்த இயக்கத்தில், தனிமனிதனாக தங்களுக்கு
வரையறுக்கப்பட்டுள்ள பங்களிப்பையும் அந்த பங்களிப்பு ஏற்படுத்தும் வரையறை செய்யப்பட்டுள்ள
விளைவுகள் மட்டுமே. உதாரணமாக, தூக்குத்தண்டனை வழங்கும் நீதிபதியால், சமூகத்தின் அதிகாரத்தால்
வரையறுக்கப்பட்டுள்ள, சட்டங்களையும் முறைகளையும் கருத்தில் கொண்டு மட்டுமே தூக்குத்தண்டனை
வழங்க முடியும். அந்த சட்டங்களால வரையறைச்செய்யப்படாத எந்த நியாயங்களும் அந்த நீதிபதிக்கு
முக்கியமானதல்ல. வரையறை செய்யப்படாத நியாயங்கள் அவரால் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவரால்
அந்த நீதிபதி பதவியில் தொடர முடியாது. ஆக நீதிபதியாக அவர் ஒரு இயந்திரமாக மட்டுமே இருக்கமுடியும்.
அந்த தூக்குதண்டனையை நிறைவேற்றும்
கடைசி மனிதரும், ஒரு இயந்திரமாகவே செயல்பட முடியும். அந்த செயலை பொறுத்தவரையில், சமூக
அதிகார அமைப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணங்களோ அல்லது அதன் நியாய அநியாயங்களோ
அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரை கொல்ல வேண்டும் என்பது மட்டுமே
சமூகத்தால் அவருக்கு வரையறை செய்யப்பட்டது. அந்த செயலை நிறைவேற்றும்போது அவர் ஒரு இயந்திரம்
மட்டுமே. இந்த வரையறை, சமூக அமைப்பில் நாம் எந்த நிலையில் இருந்தாலும். எந்த செயல்
புரிந்தாலும் நம் அனைவருக்கும் பொருந்தும். எனவே சமூக அமைப்பில் நாம் அனைவரும் இயந்திரங்களே.
இயந்திரங்களாகவே இருந்தாக வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கைய வாழ, சமூக அமைப்பு தவிர்க்க
முடியாதது - நாம் ஒரு சமூக விலங்கு!
எனவே ஒரு உயிரினமாக நம்மை
நிகழ்த்த ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளம், சமூக அமைப்புகளால் தொடப்படாததாக இருந்தாக
வேண்டும். சமூக அதிகாரம், அந்த தளத்தை தொட்டால், அது வரையறை செய்யப்பட்டதாக, இயந்திரத்தனமானதாக
மாறிவிடும். ஆக ஒரு வரையறை செய்யப்படாத தளத்தில், முழுக்க முழுக்க நம் நுண்ணறிவால்,
நமது அறியமுடியாத இயங்கு சக்தியால் இயங்கும்போது மட்டுமே நாம் ஒரு உயிரினமாக நம்மை
நிலை நிறுத்த முடியும். முன்பே கூறியபடி, மனிதர்கள் தவிர அனைத்து உயிரினங்களுக்கும்
சமூக அமைப்பு என்பது, மிகமிக குறுகியவட்டத்தில் மட்டுமே. எனவே அவற்றின் பெரும்பாலான
செயல்கள் வரையறைக்கு அப்பாற்பட்டது. எனவே அவற்றின் உயிர்த்தன்மையை அவை எப்போதும்(பெரும்பாலும்)
வெளிப்படுத்துகின்றன.
நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள
நம்மால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு, ஒரு சமூகமாக நம் வாழ்க்கை தரத்தை தொடர்ந்து உயர்த்தி
வந்தாலும், ஒரு உயிர் இருப்பாக, உயிர்த்தன்மைய வெளிப்படுத்துவதற்கு ஒரு தடையாகவே உள்ளது.
ஆம் உண்மையில், ஒரு உயிராக நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமானால், இயந்திர
வாழ்க்கையிலிருந்து வெளிப்பட வேண்டுமானால், சமூக அமைப்பை சமூக அதிகாரத்தை கடந்த ஆனால்
சமூக அடுக்கை குலைக்காத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். அத்தகைய ஒரு வாழ்க்கையை
வாழ்ந்தால் மட்டுமே, ஒரு உயிரினமாக இந்த உலகில் நம் இருப்பை உறுதி செய்ய முடியும்.
துரதிர்க்ஷ்டவசமாக, மிகப்பெரும்பான்மையான மனிதர்கள் இயந்திரங்களிடமிருந்து பிறந்து,
இயந்திரங்களாக வளர்ந்து, இயந்திரங்களாக செயலாற்றி, இயந்திரமாக அழிந்து விடுகிறார்கள்.
எனில் எவ்வாறு நம் உயிர்த்தன்மையை
வெளிப்படுத்தி, ஒரு உயிரினமாக நம்மை நிலை நிறுத்துவது? சமூக இயக்கங்கள் பெருமளவில்
வரையறை செய்யப்பட்டு மனித சமூகத்தில், கலை என்பது நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்துவதற்கு
சாத்தியமான ஒரு தளம். ஆனால் நாம் அனைவரும் கலைஞர்கள் அல்ல, இயந்திரங்களும் அல்ல. எனவே,
நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த நமக்கேயான ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளத்தை
அறிந்து, நம் உயிர்த்தன்மையை முழுமையாக வெளிப்பட செய்வதே, ஒரு மனித உயிராக நம்மால்
செய்யமுடிந்த உச்சபட்ச செயலாக இருக்க முடியும். அதுவே மனித வாழ்க்கையின் இலட்சியம்!
blog.change@gmail.com