நமது நுகர்வு கலாசாரத்தின் அழிக்கும்
தன்மையை ஒரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. நுகர்வின் அழிக்கும் சக்திக்கு நாம் ஒவ்வொருவரும்
கராணம் என்பதும், இந்த பூமி உயிரினங்கள் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும் என்றால் நாமும்
நம் நுகர்வின் தன்மையும் மாறியாக வேண்டும் என்பதும் புரிகிறது. ஆனால் இப்போது அடிப்படையாக
எழும் கேள்வி, எனது புரிதலின் மூலம் நான் ஒருவன் நுகர்வுக்கான மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து
செல்லலாம். ஆனால் உலகில் மற்றவர்கள் அனைவரும் அதே ஆபத்தான பாதையில் பயணிக்கும்போது
என் நுகர்வின் மாற்றுப்பாதையால் என்ன பயன்? ஆபத்தான பாதையில் செல்லும் பெருங்கூட்டத்தால்,
ஆபத்து அதேவேகத்தில் நெருங்கிக்கொண்டுதானே இருக்கிறது? பெருங்கூட்டத்தினர் இன்னும்
ஆபத்தை புரிந்து கொள்ளவில்லையே,, என்ன செய்வது?
நாம் புரிந்து விட்டோம், மாற்றப்பாதையை தேர்ந்தெடுப்போம்.
பிறர் நம்மை ஒரு புழுவைப்போல பார்க்கலாம், நம் நோக்கத்தை புரிந்து கொள்ளமல் இருக்கலாம்.
அது அவர்களின் அறியாமை மட்டுமே - தம்மையும் தம் சந்ததியினரயும் சுற்றத்தாரையும், தாமே
கொன்று குவிப்பதை அறியமுடியாத அறியாமை! பாவம் அவர்கள்! அவர்கள் அறியாபமையை குறித்து
நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். ஆனாலும் நம்மை சுற்றி இருப்பவர்களும், சிறிதளவேனும்
நுண்ணறிவு உடையவர்களாக இருந்தால், நம் மாற்றுப்பாதை இயக்கத்தால் நிச்சயாமாக தாக்கத்துக்குள்ளாவர்கள்.
அந்த தாக்கத்தின் அளவு வேறுபட்டாலும், அவர்களும் மாற்றியக்கத்தை தேர்ந்தெடுக்கலாம்.
எந்த ஒரு சமூக மாற்றமும், ஒரு சிலரில் தோன்றியபின்னரே மக்களின் பெரும்பான்மையினரை அடையும்.
ஆம், நம்மால் நுகர்வின் இயக்கத்தை மாற்றியமைக்கும் முன்னோடிகளாக நம்மை மாற்றியமைக்க
முடியும் - உண்மையில் நாம் நுகர்வு என்னும் பெரும்பசியின் அழிக்கும் திறனை புரிந்து
கொள்ள முடிந்தால்!
நாம் எத்தகைய நுகர்வின் மாற்றுப்பாதையை
தேர்ந்தெடுப்பது? அது நுகர்வு என்னும் பெரும் பசியின் தீவிரத்தை புரிந்துகொள்ளும் நமது
இயக்கத்தின் தீவிரத்தை பொறுத்தது. குறைந்த பட்சமாக, தினமும் நமக்கு நாமே நுகர்வின்
பெரும்பசியை குறித்து நினைவூட்டிக்கொள்ளலாம். அது நம்மை சிறிய அளவிலான மாற்று சாத்தியங்களை
கையாள்வதற்கான மன உறுதியை கொடுக்கலாம். உதாரணமாக நாம் தண்ணீர் குழாயின் முன் இருக்கும்போது,
சில பத்தாண்டுகளில் நீரின்றி நம் குழந்தைகள் படும்பாட்டை உணர முடிந்தால், நம் முன்
இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து அந்த நேரத்தில் நமக்கு மிகத்தேவையான நீரை விட அதிகமாக
ஒரு சொட்டு நீர் கூட நுகரவோ வீணாக்கவோ மாட்டோம்.
நாம் வீட்டில் இருக்கும்போது,
யாரும் இல்லாத அறையில் மின் விசிறி அல்லது மின் விளக்கு மின்சாரத்தை வீணாக்கி கொண்டிருப்பதை
காணும்போது, அந்த விசிறியை சுற்ற செய்வதற்காக எங்கோ ஒரு காட்டில் மரத்தை அழித்து தோண்டிய
நிலக்கரி இன்னொரு இடத்தில் சென்று அங்கு காற்றில் கார்ப்பன் டை ஆக்சைடை செலுத்தி உருவாக்கும்
மின் சக்திதான் நம் வீட்டில் யாருக்கும் தேவையின்றி மின்விசிறியை சுற்றிக்கொண்டிருக்கிறது
என்பதை உண்மையிலேயே நாம் புரிந்து கொண்டி,ருந்தால், நாம் எந்த தடையும் மாற்று எண்ணங்களும்
இல்லாமல் அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியையோ அல்லது எரிந்து கொண்டிருக்கும்
மின் விளக்கையோ அணைத்திருப்போம்.
நாம் உண்ணும் உணவு நம் உணவு தட்டில்
வருவதற்கு முன் அது எந்த அளவு நீரை குடித்து நம் உணவு தட்டில் இருக்கும் வடிவத்தில்
வந்துள்ளது என்பதையும், அந்த உணவு அது உருவாவதற்காகவும், நம் உணவு தட்டுவரை வருவதற்காகவும்
எவ்வளவு ஆற்றலை செலவிட்டுள்ளது, அந்த ஆற்றலை பெற எத்தனை கிலோ அல்லது டன் கரியமல வாயுவை காற்று வெளியில் செலுத்தியிருக்க
கூடும் எனபதையும், உலகின் மற்றொரு பகுதியில் காலி உணவுத்தட்டுடன் தங்கள் இருப்பை உறுதி
செய்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் உணவுக்கு வழியில்லாத மக்களை குறித்தும் ஒரளவுக்கு
நம்மால் கற்பனை செய்ய முடிந்தாலும், நம் உணவுத்தட்டில் இருக்கும் உணவை, அது எத்தகையதாக
இருந்தாலும், நாம் வீணாக்க மாட்டோம்.
நமது நுகர்வின் மூலம் நாம் உருவாக்கும்
கழிவுகள் இயற்கையின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது, நம் உடலுக்கு எவ்வாறு விஷமாகிறது,
நம் வாழ்க்கை தரத்தை இன்னும் சிறிது காலத்தில் எவ்வாறு சீர்குலைக்க போகிறது என்பது
நம் அறிவுக்குள் நுழைந்தால், நம் நுகர்வின் தன்மை யாரும் கேட்காமலே மாற்றியமைக்கப்படும்
- நமது நுண்ணறிவால்!
இவை போன்றவையே நுகர்வு கலாச்சாரத்தில்
நாம் கொண்டுவரும் மாற்றத்தின் முதல் படியாக இருக்க கூடும். ஆம், நாம் அனைவரும் பொருட்களை
நுகர்ந்தாக வேண்டும். அந்த நுகர்வின் பாகமாக இருக்கும் வீணாக்குதலை நம்மால் குறைக்க
முடிந்தால், நமது நுகர்வு உருவாக்கும் கழிவுகளை மட்டுப்படுத்த முடிந்தால் நாம் நம்
எதிர்காலத்தை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்திருப்போம். இந்த முதல்படியை
நம்மால் எடுத்து வைக்க முடிந்தால், அதற்காக நம்முள் நாம் கொண்டுவரும் விழிப்புணர்வு,
அடுத்த படிகளை நாம் தேடாமலே நம்முன் தருவிக்கும். விழிப்புணர்வுடன் வாழ்க்கையை வாழ்வதே
ஆன்மீக வாழ்க்கை. நம்முன் விரிந்து கிடக்கும் ஆபத்தான நுகர்வு என்னும் பெரும்பசி, சற்று
விழிப்புணர்வை நம் வாழ்க்கைக்கு அளிக்குமானால், அது நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கமாகவும்
இருக்க கூடும். ஆம் எப்போதும் பெரும் பசியால் மட்டுமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை திரும்ப
வைக்க முடியும்!
[மேலும்]
blog.change@gmail.com
தொடர்புடைய பதிவுகள்; நுகர்வெனும்பெரும்பசி - 1
No comments:
Post a Comment