Sunday, August 18, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 2

இயற்கையிலிருந்து தேவையான ஆற்றலை வெளிக்கொணரும் மனிதனின் திறன் அதிகரிக்கும்தோறும், இயற்கையுடனான மனிதனின் போராட்டமும் அதிகரிக்கிறது. அந்த போராட்டங்களின் தற்போதைய நிலவரங்களில் சிலவற்றை இங்கு காண்போம்

உலக மக்கள் தொகை கடந்த நூறு ஆண்டுகளில் 2 பில்லியனிலிருந்து 7 பில்லியனாக உயர்ந்துள்ளது.

பூமியில் உள்ள நீரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவு நீரே நம்மாலும் பிற நிலம் வாழ் உயிரினங்களாலும் பயன் படுத்த தக்கதாக உள்ளது. அந்த நீரை பயன்படுத்தும் பயனாளிகளான எண்ணற்ற உயிரினங்களில் ஒரு இனமான மனித இனம் கட்டற்று பெருகி வருகிறது. இதன் மூலம் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுமே நீர் பற்றாக்குறை என்னும் மிகப்பெரிய பிரசிசினையை எதிர்நோக்கியிருக்கின்றன.

இரசாயனங்களை மூலப்பொருட்களாக கொண்டு செய்யும் விவசாயத்தினால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிவதன் மூலம் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த கட்டமாக மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் மூலம் செய்யப்படும் விவசாயத்தால் தாவரங்களை ஒட்டி வாழும் உயிரினங்களின் சமன் நிலையை குலைத்து அதன் மூலம் பூமியில் உயிரினங்களின் சமன் நிலையை குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இறைச்சிக்கோழிகளுக்கு ஹார்மோன் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும்) மற்றும் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, 50 நாட்களுக்குள் சிறு குஞ்சு, முழு கோழியாக மாற்றப்பட்டு, அந்த ஹார்மோன்களும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் உணவுடன் சேர்ந்து நமது உணவுப்பையை அடைகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழி குஞ்சுகள் முழு வளர்ச்சியை அடைய சுமார் 6 முதல் 8 மாதங்கள்வரை ஆகிறது.

பசுக்களுக்கு ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்பட்டு, பால் கறவை அதிகரிக்கப்படுகிறது. ஹார்மோன்கள் கலந்த அந்த பால் உணவுகளை உண்டே நமது குழந்தைகள் வளர்கின்றன.

எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி (GDP) ஒவ்வொரு வருஷமும் முடிந்த அளவுக்கு கூட்ட முயலுகின்றன. உற்பத்தி கூட வேண்டுமானால் நுகர்வு கூட வேண்டும். எனவே எல்லா உலக நாடுகளும், விதிவிலக்கில்லாமல், தங்கள் நாட்டு உற்பத்தியை நுகருமாறு எல்லா மக்களையும் தூண்டுகின்றன. உற்பத்தி பெருக வேண்டுமானால், இயற்கையை ஆற்றலாக மாற்ற வேண்டும். இயற்கை அதீத அளவில் ஆற்றலாக மாற்றப்படும்பொழுது, பூமியின் இயற்கை சமன் நிலை குலைக்கப்படுகிறது.

ஆற்றலுக்காக எல்லா நாடுகளும், பிற நாடுகளின் இயற்கை வளங்களையோ அல்லது தம் சொந்த நாட்டின் இயற்கை வளங்களையோ, மிக அதீத அளவில் சுரண்டுவதுடன் அந்த சூழலில் வாழும் மக்களையும் ஈவுஇரக்கமின்றி சுரண்டுகின்றன. இந்த சுரண்டலின் மூலம் சமூகங்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி சமூக மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. ஒருவேளை இந்த மோதல்கள் மனித இனத்தின் பெரும்பகுதியை அழித்து, உலகில் மனித இனத்தின் சமன் நிலையை கொண்டு வருவதற்கான எதிர்மறை ஆயுதமாகவும் இருக்கலாம்.

தற்போது ஆற்றலுக்காக சுரண்டும் நாடுகள், இன்னும் மிக குறுகிய காலத்தில் நீருக்காகவும் சுரண்ட தயாராகி வருகின்றன. உதாரணம் மக்கள் குழுக்களுக்கிடையேயான நதி நீர் பகிர்வு பிரச்சினைகள் - காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற ஒரே நாட்டுக்குள் உள்ள மக்களுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள், பிரம்மபுத்திரா போன்ற நதிகளுக்காக இரு நாடுகளுக்கிடையேயான நீர் பிரச்சினைகள், நைல் நதி போன்ற நதிகளுக்காக பல நாடுகளுக்கிடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினைகள்.

மேலே கூறப்பட்டவை நாம் அனைவரும் அறிந்தவற்றில் மிகச்சில உதாரணங்களே. இவை இந்த உலகின் சமன்நிலையை அதீத வேகத்தில் பாதித்து கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியாவிடில், மிக தெளிவாக தெரியும் உண்மையான, நாம் அனைவரும் ஒரு நாள் மரணிப்போம், என்பதையும் உணர முடியதவர்களாகவே இருக்க முடியும்.

நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த உலகமே நுகர்வுக்கு அடிமையாக இருக்கும்போது, தனிப்பட்ட நான் அல்லது தனிப்பட்ட ஒரு சிலரால் என்ன செய்ய முடியும்? சூழலியல் வரலாற்றாசிரியர்களின் பார்வையில், கடந்த சில பத்தாண்டுகளாக, இயற்கையை சுரண்டுதலின் வேகம் பலவிதங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணம் தனிப்பட்ட சிலரின் கூட்டுமுயற்சியும், இயற்கையை சுரண்டுவதால் பாதிக்கப்படும் மக்களின் போரட்டங்களுமே. ஒரு தனிமனிதனாக நம்மால் சூழல் அழிவை முழுமையாக தடுக்க எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் நுகர்வின் கோரப்பசி உலகின் வாழ்க்கை சூழலை அழிப்பதை நம்மால் உணர முடிந்தால், அத்தகைய நுகர்வுக்கு எதிராக நம்மால் முடிந்தவற்றை, நம்மை அறியாமலே நாம் செய்து கொண்டிருப்போம். அதன் முதல் கட்டமாக நமது நுகர்வின் தன்மையை யாரும் கோராமலே நாம் மாற்றியமைத்திருப்போம். ஆம், சமூகம் என்பது அதனளவில் ஒரு அசைக்க முடியாத தனித்த இருப்பு அல்ல. சமூகம் நம்மைப்போன்ற பல 'நான்' களின் தொகுப்பு. எனவே 'நான்' மாறினால் சமூகமும் மாறி விடுகிறது.  

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருத்து இரசாயன உரங்கள் விவசாயத்தின் பயன்பாட்டில் பெருமளவு வந்தன. அதன் பின்னரே மனிதர்களுக்கு கிருமிகள் மூலம் பரவாத, புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வர தொடங்கின. தற்போதைய நமது நுகர்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, இது போன்ற நோய்களுக்கான மருந்துகளாகவே இருக்கிறது.

நம் நுகர்வின் அழிக்கும் வீரியத்தை உணர வேண்டுமானால், நாம் நுகரும் ஒவ்வொரு சாதாரண பொருட்களும் இயற்கையின் சக்தியை எந்த அளவுக்கு கோருகின்றன என்பதையும் அதன் மூலம் இயற்கையின் சமன்பாடு எவ்வாறு குலைகிறது என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். இயற்கையின் சக்தி அதீத அளவில், இயற்கையின் ஒரு பாகமான மனிதனால் மட்டும் நுகரப்படும்போது, இயற்கையின் மற்ற பாகங்களான பிற உயிரினங்களின் சமன் நிலை இரண்டு வழிகளில் குலைகிறது. முதலாவது, நாம் நுகரும்போது இருக்கும் ஏதோ ஒன்று அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு அதன் மறு உருவாக்கத்துடன் சமநிலையை இழக்கும்போது, நம் நுகர்வு இயற்கையின் சமன் நிலையை குலைக்கிறது. இரண்டாவது, எந்த ஒன்று நுகரப்பட்டலும் அந்த நுகர்வின் பக்கவிளைவாக, நுகர்பொருளின் கழிவும் வெளியிடப்படுகிறது. அந்த நுகர்பொருளின் கழிவை நுகரும் இன்னொரு உயிரினம் இருந்தால் மட்டுமே கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கையின் சமன் நிலை பேணப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த கழிவுகள் உலகம் முழுவதும் பரவி, அவற்றை ஒவ்வாமையக கொண்டுள்ள உயிரினங்களை தொடர்ந்து அழிக்கும். அல்லது அந்த கழிவுகளில் வாழும் உயிரினங்கள் மிக அதிகமாக உருவாகி இயற்கையின் சமன் நிலையை குலைக்கலாம்.

 நம் நுகர்வு, எத்தகைய கழிவுகளை இந்த பூமியின் எல்லா இடங்களிலும் நிரப்புகிறது என்பதை உணரும்போது, நம் நுகர்வின் வீரியத்திதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியலாம். வளர்ந்த நாடுகள் தங்கள் கழிவுகளை பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றன. உதாரணம், இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் வழியாக வந்த வெளிநாட்டு கழிவுகள் - மிகச்சில தருணங்களில் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவுகள் அவற்றின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பல தருணங்களில் கண்டுபிடிக்கப்படாமல் இங்கு கொட்டப்படுகின்றன. மாநில எல்லைகளை தாண்டி இறைச்சிக்கழிவுகளை சாலையோரம் எறிந்து செல்லும் பல தருணங்கள் பிராந்திய செய்தித்தாள்களில் பல முறை வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. உச்சமாக, நம் நுகர்வுக்கு தேவையான சக்திக்காக அணுவை பிளந்து அதன் சக்தியை எடுத்துவிட்டு, வரும் கழிவுகளின் தீவிரத்தன்மையை அறிந்திருந்த போதிலும், அந்த கழிவுகளை  என்ன செய்வது என தெரியாத போதிலும், மீண்டும் மீண்டும் அணுவிலிருந்து பெறப்பட்ட சக்தியையும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நுகர்ந்து கொண்டிருக்கிறோம்.

[மேலும்]


தொடர்புடைய பதிவுகள்; நுகர்வெனும் பெரும்பசி - 1
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism& Consumerism
blog.change@gmail.com

No comments: