எண்ணங்கள் நம்மை அடிமைப்படுத்துவதில்லை.
நம் மனதின் இயல்பிற்கேற்ப எண்ணங்கள் நம்மில் வந்து சென்று கொண்டிருக்கின்றன. நம் அறியாமையால்,
வந்து சென்று கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு அடிமையாகி, நாமே அந்த எண்ணங்களாக மாறிவிடுகிறோம்.
எண்ணங்களுக்கு அடியில் உள்ள மனதின் ஒரு இழை எண்ணங்களை கவனிக்க தொடங்கும்போது, எண்ணங்களின்
அடிமைத்தளையிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்போம். எண்ணங்கள் கவனிக்கப்படும்போது,
எண்ணங்களாக இருக்கும் நாம், அந்த கவனிக்கும் மனதின் இழையாக மாறிஇருப்போம்.
இப்போது எண்ணங்களை கவனிப்பது
இன்னொரு எண்ண இழையா அல்லது எண்ணங்கள் புழங்கும் தளத்திற்கு அடியில் உள்ள மனதின் இழையா
என எவ்வாறு அறிவது? எண்ணங்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் இயல்புள்ளவை. எண்ணங்களை
கவனிக்கும் இழை மற்றொரு எண்ண இழையாக இருந்தால், அது மனதின் மேல் தளத்தில் இயல்பாக நிகழும்
எண்ண ஒட்டங்களை கட்டுப்படுத்தி, தன் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயலும். அவ்வாறு எண்ண
ஒட்டம், மனதின் கவனிக்கும் இழையால் கட்டுப்படுத்தப்பட்டால், அந்த கவனிக்கும் இழை இன்னொரு
எண்ண இழையே. எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், அவை அந்த கட்டை உடைத்து புது வீரியத்துடன்
வெளிப்பட்டு நம்மை மீண்டும் அடிமைப்படுத்தும், இந்த எண்ணங்களை மற்றொரு எண்ண இழையால்
கவனிக்க முயல்வதும், அதனால் எண்ண அலைகள் கட்டுப்படுவதும், பின்னர் முழு வீரியத்துடன்
நம்மை மீண்டும் அடிமைப்படுத்துவதும், தொடக்க நிலையில் உள்ள, எண்ணங்களிலிருந்து விடுபட
முயல்பவர்களுக்கு மிக இயல்பானதே. இந்த எண்ணங்களுக்கிடையேயான போராட்டத்தை ஒரு புன்னகையுடன்
எதிர்கொண்டு மீள்பவர்கள் மிக எளிதாக எண்ணங்களை கவனிக்கும் மனதின் இழையை கண்டு கொள்ள
இயலலாம்.
'நான்' என்பது 'என்' எண்ணங்கள் அல்ல என்பதை நாம் உணரும்போது,
எண்ணங்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், எவ்வித
கட்டுப்பாட்டுக்குமான தேவை இன்றி தாமாகவே மனதிலிருந்து மறைகின்றன. ஆக மனதின் இயல்பிற்கேற்ற
எண்ணங்கள் தாமாகவே தோன்றி தாமாகவே மறைகின்றன. ஆனால் நாம் அந்த எண்ணங்களாக ஆவதில்லை.
எனவே நம் உளவியல் சக்தி எண்ணங்களாக வீணடிக்கப்படுவதில்லை. எண்ணங்கள் எவ்வித அழுத்தத்தையும்
மனதில் செலுத்தாமல் தானாகவே தோன்றி மறைகின்றன. நாம் விரும்பும்போது, எண்ணங்களாக மாறி,
தேவையான செயல்களை செய்யலாம். ஆக நாம் எண்ணங்களின் அடிமைகள் என்பதிலிருந்து, எண்ணங்கள்
நம் தோழன் என்னும் மாற்றம் நமக்குள் வருகிறது. மேலும், எண்ணங்களை கவனிக்கும் மனதின்
உள் இழையாக நாம் மாறும்போது, எண்ணங்களாக வீண்டிக்கப்பட்ட உளவியல் சக்தி, மனதின் உள்
இழையின் சக்தியாக சேமிக்கப்பட்டு, நம் விழிப்புணர்வாக வெளிப்படுகிறது.
எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்
இடைவெளிகளில், மூளையும் அதனால் மனமும், முழு விடுதலையுடன் உள்ளன. அந்த இடைவெளிகளில்,
அவை சில நொடி நேரம் மட்டும் இருந்தாலும், அடையும் விடுதலை நம் மனதை மிகவும் உணர்வுத்திறன்
உள்ளதாக மாற்றுகிறது. அல்லது, அந்த இடைவெளிகளில் மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை மீண்டும்
பெறுகிறது.
மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை
திரும்பப் பெறும்போது, நம் பொதீக (Gross body) உடலிலும் ஸ்தூல (Subtle body) உடலிலும்
நிகழும் பல செயல்கள் நம் மனதின் கவனிக்கும் இழையால் உணர்வாக உணரப்படும். (பொதீக உடல்
இந்திய ஆன்மீக மரபில் அன்னமய கோஷம் (Body formed by Food) எனவும், ஸ்தூல உடல் பிராணமய
கோஷம்(Energy Body), மனோமய கோஷம்(Psychological Body), விக்ஞ்ஞானமய கோஷம்(Intelectual
Body), ஆனந்தமய கோஷம்(Bliss Body) என நான்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது). இந்த உணர்வுகள்
எவ்வாறு இருக்கும் என கூறுவது இயலாத ஒன்று. ஏனெனில், அதற்கு இணையான ஒன்றை நாம் பெரும்பாலும்
அனுபவித்ததில்லை. ஆனால், சில உதாரணங்களின் மூலம் அவற்றை கூற முடியலாம். அவ்வாறு கூறும்போது,
நாம் அந்த உதாரணங்களையே முடிவுகளாக கொண்டு, அவற்றை எதிர்பார்பார்க்க தொடங்குவோம். ஆக,
அந்த எதிர்பார்ப்பு மனதின் புதிய எண்ணங்களாக மாறி, மனதின் எண்ணங்களற்ற இடைவெளியை நிரப்பி,
மனதின் உணர்வுத்திறனை மீண்டும் மழுங்கடிக்கும்.
எண்ண இடைவெளியில் நாம் அடையும்
உணர்வுகளுக்கு உதாரணம்; நாம் முழுமுற்றாக ஒன்றின்\ஒருவரின் மேல் அன்பு செலுத்தும் போது,
அந்த அன்பு முழுமையாக இருக்கும் சில நொடிகளில் ஒரு வித சிலிர்ப்பை உணர்ந்திருப்போம்.
அந்த சிலிர்ப்பு உணர்வை, எண்ணங்கள் அணையும்போது ஏற்படும் உணர்வுடன் ஓரளவு தொடர்பு படுத்தலாம்.
ஆண் பெண் உறவின் உச்சத்தில் (Orgasm), சில நொடிகள் அல்லது ஒரு நொடியின் சிறு சிதறலில்
அடையும் மன உணர்வையும் ஒரளவு தொடர்பு படுத்தலாம். அல்லது, எண்ணங்கள் இல்லாமல் ஆகும்போது
அடையும் ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு மலர் மலர்வதை போன்றிருக்கலாம். ஆம், இவை எல்லாம்
அந்த உணர்வுகளை நம்மால் அறிய முடிந்த உணர்வுகளுடன் தொடர்பு படுத்துவதற்கு மட்டுமே
- இவை, அவை அல்ல!
அவ்வாறு நாம் அறிந்திராத
உணர்வுகளை அடைய தொடங்கும்போது, நம் மனதின் கவனிக்கும் இழையிலிருந்து தடம் மாறி மீண்டும்
நாம் எண்ணங்களாக மாறிவிட நேரலாம் - நாம் தடம் மாறும் அறிதல் முற்றிலும் இல்லாமல். உதாரணமாக,
நம் மனம் ஸ்தூல உடலின் உணர்வுகளை அடைய தொடங்கும்போது, மனம் அந்த உணர்வுகளுடன் எண்ணங்களை
தோற்றுவித்து, அந்த எண்ணங்களை நம் கவனிக்கும் இழை தவறவிடும்போது, அந்த எண்ணங்கள் உருவெளித்தோற்றங்களாக
(Hallucination) வெளிப்படும். ஒருமுறை இந்த உருவெளித்தோற்றங்களில் தம்மை இழந்தவர்கள்
அதை விட்டுவிட்டு வெளிவருவது இயலாத காரியமாக இருக்கலாம் - போதைக்கு அடிமையானவர்கள்
போல! மனம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பின் அடையும் உணர்வு நிலைகளை பற்றிக்கொண்டு,
அந்த உணர்வுகளின் இன்பத்தில் திளைத்தல். இது சுய இன்பத்தை திரும்ப திரும்ப அடையும்
சிறுவனின் மனநிலையைப்போன்றது! 1960-கள் மற்றும் எழுபதுகளில், எல்.எஸ்.டி போன்ற போதைபொருட்களை
உபயோகிப்பதன் மூலம் உருவெளிதோற்றங்களை மனதில் அடைந்து, அவற்றை ஆன்மீக அடைதலாக எண்ணுவது
பரவலாக இருந்துள்ளது. அந்தகாலகட்டத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் போதைப்பொருட்களின் மூலம்
அடையும் உருவெளிக்காட்சிகள், ஆன்மீக அனுபவங்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
எண்ணங்களை கவனிக்கும் மன
இழை வலிமை அடையுந்தோறும், அந்த இழை மெல்ல மெல்ல மனதின் ஆழங்களை நோக்கி செல்லலாம். இங்கு
நாம் எண்ணங்களின் காரிய காரண இயக்கத்தை (Cause & Effect) சிறிதளவு அறிந்திருக்க
வேண்டும். எண்ணங்கள் தாமாகவே மனதில் தோன்றுகின்றன என்பது மனதின் மேல் அடுக்கை மட்டுமே
கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். நம் வாழ்க்கையில் செய்யும் எல்லா செயல்களுக்கும்,
விரும்பும் விளைவுகளை எதிர்பார்த்து வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நமக்கு, காரணம்
இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்பது மிக நன்றாகவே தெரியும். நம் எண்ணங்களும் இதற்கு
விதிவிலக்கு அல்ல. ஆம், மேல் மனதில் தாமாகவே வந்து செல்லும் எண்ணங்களுக்கு அடிப்படையாக,
நினைவுப்பதிவுகள் நம் மூளையில் பதிந்திருக்கின்றன.
நம் புலன்கள் அறியும் உணரும்
திறனை அடைந்தது முதல், அந்த உணர்வுகளை கிரகிக்கும் சக்தியை மூளை பெற்றது முதல், நம்
புலன்களின் ஒவ்வொரு உணர்வும் மூளையால் கிரகிக்கப்பட்டு நினைவுகளாக சேமிக்கப்பட்டுள்ளது.
நம் புதிய ஒவ்வொரு புலணர்வுகளும், சிந்தனைகளும் மூளையில் சேமிக்கப்பட்டுள்ள இந்த நினைவுகளின்
தாக்கத்தை பெற்றபின்னரே புதிய நினைவுகளாக சேமிக்கவோ அல்லது புதிய எண்ணங்களாக வெளிப்படவோ
செய்கிறது. அதாவது, நம் மனதில் தோன்றும் எந்த எண்ணங்களுக்கும், நம் நினைவுகளோ அல்லது
புலனுணர்வுடன் சேர்ந்த நினைவுகளோ காரணமாக இருக்கும்.
மேலும்
தொடர்புள்ள பதிவுகள்
blog.change@gmail.com
No comments:
Post a Comment