Tuesday, December 31, 2013

இயந்திரம்

இயந்திரம் என்பதன் வரையறை, ஒரு (பொருள்)இருப்பு, அதற்கு என்று முன்பே வரையறுக்கப்பட்ட செயலை, மீண்டும் மீண்டும் செய்யும் ஒன்று எனலாம். வரையறுக்கப்பட்ட செயல் என்பது மிக எளிதான மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஒற்றைச் செயல்பாடாகவோ (எளிய மெக்கானிக்கல் இயந்திரம்) அல்லது, பலவிதமான முன்கணிக்கப்பட்ட செயல்களின் விளைவுகளுக்கேற்ப தன் செயலை பிரித்தறிந்து செய்யும் (சிக்கல் மிகுந்த தானியங்கி இயந்திரம்) செயலாகவோ இருக்கலாம்.

இந்த வகைப் பார்வையில், உயிரினங்களும் மாபெரும் இயந்திரங்களே- ஒரே ஒரு வித்தியாசத்தை தவிர! நாம் பொதுவாக இயந்திரங்கள் என கூறுவது, மனிதனால் உருவாக்கப்பட்டவை. எனவே அவை மனிதனின் அறிதலின் எல்லைக்குள் இருக்கும் உயிரினங்கள், இயற்கையின் விளைவுகளால் தாமாகவே உருவானவை. அல்லது இயற்கையை, முழு முதல் இருப்பை, கடவுள் என நாம் கூற விரும்பினால், அவை கடவுளால் உருவாக்கப்பட்டவை. நிச்சயமாக, மனிதனால் உருவாக்கப்படுபவையின் செயல்கள், மனிதனின் அறிவையும் கற்பனையைம் தாண்ட இயலாது. உயிரினங்களின் பொதீக இருப்பு மனிதனின் அறிதலின் எல்லைக்குள் பெருமளவு வந்து விட்டாலும், உயிரினங்களின் முழு இருப்பு என்பது மனித அறிவின் அறிதலுக்கு அப்பாற்பட்டே உள்ளது. இதையே இயந்திரங்களுக்கும் உயிரினங்களுக்குமான வேறுபாடாக நாம் கொள்ளலாம்.

ஒரு உயிரினமாக மனித இனமும், நம் செயல்பாடுகளை ஒட்டி, இந்த பிரிவினைக்கு உட்பட்டது. அதாவது மனிதர்களின் வரையறைக்கு உட்பட்ட, குறிப்பிட்ட செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது இயந்திரத்தனமானது என்றும், நம் உயிரின் இயல்பான, நம் பொது வரையறைக்கு அப்பாற்பட்ட செயல்களின் மூலம் செயல்படுவது உயிர்த்தனமானது என்றும் கூறலாம். இதன்படி பார்த்தால், சமூகமாக வாழும் எல்லா உயிரினங்களும், அந்த சமூகத்தின் சில வரையறைகளுக்குட்பட்டு இயந்திரத்தனமாக வாழ்கின்றன. அந்த வரையறை தாண்டிய தளங்களில் மிக சுதந்திரத்துடன், தங்கள் முழு உயிர்த்தன்மையுடன் வாழ்கின்றன.

மனிதர்களும் ஒரு சமூக விலங்கு. மனித இனம் மற்ற உயிரினங்களிடமிருந்து அறிவின் தளத்தில் மிக வேறுபாட்டுடன் உள்ளது. அந்த வேறுபாட்டின் காரணமாக, அறிவின் வீச்சின் காரணமாக, மனித சமூகத்தின் வரையறைகள் மற்ற உயிரினங்களின் சமூக வரையறைகளிலிருந்து வேறுபட்டதாக, பரந்ததாக உள்ளது. அந்த வரையறைக்குள் நாம் இயந்திரமாக செயலாற்றியாக வேண்டியுள்ளதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு உயிரினமாக நம்மை நாம் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமானால், நம் உயிர்தன்மையின் தளத்திலும் நாம் செயல்பட்டாக வேண்டும். ஒரு தனிமனித இருப்பாக, நம் ஒவ்வொருவருக்கும், நம்மை ஒரு மனித உயிராக நிறுவுவது, நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

மேலே கூறப்பட்டவை ஏற்றுக்கொள்ளகூடியவையாக இருந்தால், அந்த சவாலின் அம்சங்களை ஆராயலாம், அல்லது இந்த உரையாடல் தேவையற்ற ஒன்று. இயந்திரத் தன்மை என்பது, வரையறுக்கபட்ட செயலை அந்த வரையறைக்குட்பட்டு செய்வது. சமூகம் என்பது ஒரு அதிகார அடுக்கு. அதன் அதிகாரம், சமூகத்தின் அங்கத்தினர்களால் (ஜனநாயக சமூகத்தில்) வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செயல்படும். ஜனநாயக சமூகத்தில், இந்த வரையறை என்பது அடுத்தவர்களை அல்லது சமூகத்தின் இயக்கங்களை பாதிக்கும் செயல்களுக்கு மட்டுமே இருக்கும். முழுமுற்றான தனிப்பட்ட செயல்களுக்கு எத்தகைய கட்டுப்பாடும் பெரும்பாலும் இருக்க கூடாது. இங்கு ஒரு ஆர்வமூட்டும் விஷயம், எல்லாவிதமான வெளிப்படையான நம் செயல்பாடுகளும், மற்றவர்களை எந்த விதத்திலாவது நிச்சயமாக பாதிக்கும். ஆனால் சமூகத்தில் இத்தகைய எல்லா விதமான புறவயச்செயல்பாடுகளுக்கும் சமூக வரையறை என்பது இயலாத ஒன்று. ஆக நம் செயல்பாடுகள் குறித்த தளத்தில், இன்னொரு வரையறை, தனிப்பட்ட அளவில், தேவைப்படுகிறது. இதுவே நம்மை ஒரு உயிரினமாகவோ அல்லது இயந்திரமாகவோ நிலைநிறுத்துவதற்கு நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.

நம்மை ஒரு சமூக அமைப்பாக, சமூக அதிகாரத்துக்குள் மட்டும் நிலைநிறுத்தி, முழுமையாக நம் இயக்கத்தை அமைத்து கொண்டால், அது நம்மை முழுமையாக இயந்திரத்தனத்துக்கு ஒப்புக்கொடுப்பதாகும். அந்த சமூக அதிகாரத்தை முற்றிலும் எதிர்த்து, முழுமையாக அதற்கு எதிராக இயங்குவது, தவறாக இயங்கும் இயந்திரத்தன்மையை போன்றதே. அதாவது ஒரு எதிர் சமூக அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மீண்டும் இயந்திரத்தன்மையை நிலைநிறுத்துவது. சமூக அமைப்புக்குள் அதன் விதிகளுக்குட்பட்டு இயங்கும்போது, அந்த அமைப்பின் அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் முதல் அதன் இயக்கத்தை கடைமட்டத்தில் இயக்குபவர்கள்வரை எவரும் அந்த இயக்கங்களின் விளைவுகளையும் அதன் எல்லாவிதமான தாக்கங்களையும் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அவர்கள் அறிந்திருப்பது அந்த இயக்கத்தில், தனிமனிதனாக தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பங்களிப்பையும் அந்த பங்களிப்பு ஏற்படுத்தும் வரையறை செய்யப்பட்டுள்ள விளைவுகள் மட்டுமே. உதாரணமாக, தூக்குத்தண்டனை வழங்கும் நீதிபதியால், சமூகத்தின் அதிகாரத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, சட்டங்களையும் முறைகளையும் கருத்தில் கொண்டு மட்டுமே தூக்குத்தண்டனை வழங்க முடியும். அந்த சட்டங்களால வரையறைச்செய்யப்படாத எந்த நியாயங்களும் அந்த நீதிபதிக்கு முக்கியமானதல்ல. வரையறை செய்யப்படாத நியாயங்கள் அவரால் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவரால் அந்த நீதிபதி பதவியில் தொடர முடியாது. ஆக நீதிபதியாக அவர் ஒரு இயந்திரமாக மட்டுமே இருக்கமுடியும்.

அந்த தூக்குதண்டனையை நிறைவேற்றும் கடைசி மனிதரும், ஒரு இயந்திரமாகவே செயல்பட முடியும். அந்த செயலை பொறுத்தவரையில், சமூக அதிகார அமைப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணங்களோ அல்லது அதன் நியாய அநியாயங்களோ அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரை கொல்ல வேண்டும் என்பது மட்டுமே சமூகத்தால் அவருக்கு வரையறை செய்யப்பட்டது. அந்த செயலை நிறைவேற்றும்போது அவர் ஒரு இயந்திரம் மட்டுமே. இந்த வரையறை, சமூக அமைப்பில் நாம் எந்த நிலையில் இருந்தாலும். எந்த செயல் புரிந்தாலும் நம் அனைவருக்கும் பொருந்தும். எனவே சமூக அமைப்பில் நாம் அனைவரும் இயந்திரங்களே. இயந்திரங்களாகவே இருந்தாக வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கைய வாழ, சமூக அமைப்பு தவிர்க்க முடியாதது - நாம் ஒரு சமூக விலங்கு!

எனவே ஒரு உயிரினமாக நம்மை நிகழ்த்த ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளம், சமூக அமைப்புகளால் தொடப்படாததாக இருந்தாக வேண்டும். சமூக அதிகாரம், அந்த தளத்தை தொட்டால், அது வரையறை செய்யப்பட்டதாக, இயந்திரத்தனமானதாக மாறிவிடும். ஆக ஒரு வரையறை செய்யப்படாத தளத்தில், முழுக்க முழுக்க நம் நுண்ணறிவால், நமது அறியமுடியாத இயங்கு சக்தியால் இயங்கும்போது மட்டுமே நாம் ஒரு உயிரினமாக நம்மை நிலை நிறுத்த முடியும். முன்பே கூறியபடி, மனிதர்கள் தவிர அனைத்து உயிரினங்களுக்கும் சமூக அமைப்பு என்பது, மிகமிக குறுகியவட்டத்தில் மட்டுமே. எனவே அவற்றின் பெரும்பாலான செயல்கள் வரையறைக்கு அப்பாற்பட்டது. எனவே அவற்றின் உயிர்த்தன்மையை அவை எப்போதும்(பெரும்பாலும்) வெளிப்படுத்துகின்றன.

நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு, ஒரு சமூகமாக நம் வாழ்க்கை தரத்தை தொடர்ந்து உயர்த்தி வந்தாலும், ஒரு உயிர் இருப்பாக, உயிர்த்தன்மைய வெளிப்படுத்துவதற்கு ஒரு தடையாகவே உள்ளது. ஆம் உண்மையில், ஒரு உயிராக நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமானால், இயந்திர வாழ்க்கையிலிருந்து வெளிப்பட வேண்டுமானால், சமூக அமைப்பை சமூக அதிகாரத்தை கடந்த ஆனால் சமூக அடுக்கை குலைக்காத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே, ஒரு உயிரினமாக இந்த உலகில் நம் இருப்பை உறுதி செய்ய முடியும். துரதிர்க்ஷ்டவசமாக, மிகப்பெரும்பான்மையான மனிதர்கள் இயந்திரங்களிடமிருந்து பிறந்து, இயந்திரங்களாக வளர்ந்து, இயந்திரங்களாக செயலாற்றி, இயந்திரமாக அழிந்து விடுகிறார்கள்.


எனில் எவ்வாறு நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்தி, ஒரு உயிரினமாக நம்மை நிலை நிறுத்துவது? சமூக இயக்கங்கள் பெருமளவில் வரையறை செய்யப்பட்டு மனித சமூகத்தில், கலை என்பது நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்துவதற்கு சாத்தியமான ஒரு தளம். ஆனால் நாம் அனைவரும் கலைஞர்கள் அல்ல, இயந்திரங்களும் அல்ல. எனவே, நம் உயிர்த்தன்மையை வெளிப்படுத்த நமக்கேயான ஒரு தளம் இருந்தாக வேண்டும். அந்த தளத்தை அறிந்து, நம் உயிர்த்தன்மையை முழுமையாக வெளிப்பட செய்வதே, ஒரு மனித உயிராக நம்மால் செய்யமுடிந்த உச்சபட்ச செயலாக இருக்க முடியும். அதுவே மனித வாழ்க்கையின் இலட்சியம்!

blog.change@gmail.com

Saturday, December 14, 2013

எண்ணங்கள்-3

நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று எண்ணங்களை கவனிக்கத்தொடங்கும்போது, எண்ணங்கள் சாதாரண நிலையில், அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், அவை தோன்றி மறையும் இயக்கத்தில் சில இடைவெளிகளை அனுமதிக்கின்றன. அத்தகைய எண்ணங்களற்ற இடைவெளிகளில் நம் மனம் அதன் இயல்பான விழிப்புணர்வை மீண்டும் பெறுகிறது. அந்த விழிப்புணர்வு, மனதின் உணரும் திறனை மேலும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் எண்ணங்கள் மனதின் உணர்வுகளுக்கு இடம்கொடுத்து நகருகின்றன. ஆக மனதின் உணர்வுநிலை அதிகரிக்கும்தோறும் எண்ணங்கள் முக்கியத்துவத்தை இழந்து, நாம் விரும்பாத நிலையில் மனதைவிட்டு முற்றிலும் அகன்றுவிடுகின்றன. நம் வாழ்க்கை இயக்கத்துக்கு எண்ணங்கள் தேவைப்படும்போது, தேவைக்கேற்ற வகையில் நம் நண்பனை போல உதவுகின்றன.

நமக்கு தேவைப்படும் இடங்களில் எண்ணங்கள் வெளிப்பட்டு நமக்கு நண்பனை போல உதவியாக வேண்டும். எனவே எண்ணங்களும் விழிப்புடன் எப்போதும் நம் அழைப்புக்காக காத்திருந்தாக வேண்டும். எண்ணங்கள் நம் அழைப்புக்கு வராத பட்சத்தில், நம் வாழ்க்கை அந்த நொடியில் முடிந்து விடும். எனவே நினைவுகளால் தொகுக்கப்பட்ட எண்ணம், நம் செயலின் தேவைக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும், ஆனால் நம் விழிப்புணர்வு இல்லாமல், நம் அனுமதி இல்லாமல் அவையாக செயல்படக் கூடாது. இதுவே எண்ணங்களிலிருந்து பெறும் விடுதலையாக இருக்க முடியும். நண்பனாக, நமக்காக காத்திருக்கும் எண்ணத்தை, விழிப்புணர்வை தவறவிடும் நொடியில், மாயையால் உந்தப்பட்டு, 'நான்' என்று கருதி, மீண்டும் எண்ணங்களுக்கு நாம் அடிமையாகவும் கூடும். எனினும், ஒரு முறை விடுதலையை சுவைத்தவர்களால் மீண்டும் அடிமைத்தளையில் முழுவதுமாக இழக்க முடியாது.

மனதின் மேல் தளத்து எண்ணங்கள், நம் பிரக்ஞ்சையில் முழுவதுமாக வசப்படும்போது, எண்ணங்களுக்கு காரணமான நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நம் பிரக்ஞ்சையினுள் வரத்தொடங்கும். அதாவது நம் எண்ணங்களுக்கு காரணமான மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் நினைவுகளும் பிரக்ஞ்சையின் வீச்சில் உணரப்படத் தொடங்கும். எண்ணங்களுக்கு காரணமான நினைவுகள், அந்த எண்ணங்களுடன் பிரக்ஞ்சையில் வரும்போது, எண்ணங்களின் தற்கால செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாத தன்மையும் நம் அறிதலில் மிகத்தெளிவாக விளங்கும். ஆக, நம்மால் தற்கால நிகழ்வுகளுக்கு மிகஏற்ற செயல்களை, எந்த சந்தேகமும் இல்லாமல் முழுமையாக செயல்படுத்த முடியும். எனவே அந்த செயல்களின் விளைவுகள் எவ்வாறாக இருந்தாலும், அவற்றால் பாதிப்படையாமல் நம் வாழ்க்கையை வாழவும் முடியும்.
ஸ்தூல உடல் எனக்குறிப்பிடப்படும் (ப்ராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம்) நான்கு பகுதிகளும், தற்போதைய நம் அறிதலின் எல்லைக்குள், நம் மூளையையும் அதன் விளைவாக நாம் பெற்றிருக்கும் மனதின் நிலைகளையும் குறிக்கின்றன. மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, ஸ்தூல உடலின் உணர்வுகள் நம் மனதால் உணரப்படுகிறது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறும்போது, மனம் ஒரு புதிய, நாம் இதுவரை அறிந்திராத ஒரு நிலைக்கு மாறுகிறது. அதாவது, மனதின் வெவ்வேறு நிலைகளை அறியும் மனம், அந்த அறிதலின் விளைவாக தன்னை முற்றிலும் புதிதாக, நமது உணர்வு தளத்தில், மாற்றியமைத்துக் கொள்கிறது.

ஸ்தூல உடல், பொதீக உடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. ஸ்தூல உடலின் இயக்கங்களின் அடிப்படையிலேயே பொதீக உடல் இயங்க முடியும். அதாவது, பொதீக உடலும் ஸ்தூல உடலுபம் ஒரு வகையான ஒத்திசைவில் இருந்தாக வேண்டும். எண்ணங்களை மனதின் எண்ணங்களை கடந்த இழை கவனிப்பதன் மூலம் நம் மனம் அடையும் மாற்றம், ஸ்தூல உடலை மிகவும் துடிப்புள்ளதாக மாற்றுகிறது. ஸ்தூல உடல் துடிப்புள்ளதாக இருக்கும்போது, பொதீக உடலும் அதற்கு இணையான துடிப்புள்ளதாக இருந்தால் மட்டுமே அவை இரண்டும் ஒத்திசைவுடன் இயங்க முடியும். அத்தகைய ஒத்திசைவு ஏற்படாத நிலையில், மனம் அடையும் புதிய உணர்வுகளும் ஸ்தூல உடல் அடைந்த துடிப்பும், ஒரு இருப்பாக, நம்மை அழித்து விடக்கூடும். உதாரணமாக மனநிலை பிறழ்தல், உடல் நிலை பாதிப்படைதல் போன்றவை.

ஆம், பொதீக உடல் தகுந்த தகுதியை அடையாமல், மனதுக்கு எண்ணங்களை கவனிப்பதோ, அதன் மூலம் அதீத உணர்வு நிலைகளை அடைவதோ முடியாததாக இருக்கலாம். உணவே மருந்தாக இருக்கவேண்டிய நிலையை விட்டு, மருந்தே உணவாக மாறும் நிலையில் பெரும்பாலான மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்திருக்கும் இந்த காலகட்டத்தில், பொதீக உடலை தகுதியுள்ளதாக மாற்றாமல் ஸ்தூல உடலை மாற்றியமைக்கும் எண்ணங்களுடனான நம் விளையாட்டு அத்தனை எளிதானதல்ல. அத்தகையவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்காதவரைக்கும், எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவது என்பது சாத்தியமற்றதாக இருக்கலாம்.  ஆம், விடுதலை அடைய உண்மையான விருப்பமும் அர்ப்பணிப்பும் தேவை - வாழ்வதற்கும் கூட!

நம் மனமும் உடலும் நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நுண்ணறிவு உடையவை. அவை ஒன்றின் தகுதிக்கேற்ப மற்றதை மாற்றியமைத்து, தமக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொள்ளும் - நாம் அவற்றின் இயக்கத்தில் குறுக்கிடாதது வரை! நம் மனம் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, உடலும் அந்த நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள தேவையானவற்றை தானாகவோ அல்லது மனதின் தூண்டுதலாலோ செய்யத்தொடங்கும். அல்லது உடல் ஒரு உயர்ந்த நிலையை அடையும்போது, மனதையும் அதற்கு இயைவான நிலையை அடைய தூண்டுவதன் மூலம் உடலும் மனமும் தங்களுக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்ள முயலும். ஆனால், நம்முள் விடுதலைக்கான விருப்பம் துளிர்க்காதவரையில் அந்த ஒத்திசைவுக்கான தூண்டுதலை முன்எடுத்துச் செல்வது இயலாததாக இருக்கலாம்.

நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ள வேண்டுமென்றால், அதைக்குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவு குடும்ப சூழலில் இருந்தோ அல்லது பண்பாட்டுச் சூழலிருந்தோ அல்லது இவை கடந்த தனிமனித சூழலிருந்தோ நமக்கு வரலாம். இன்றைய சூழலில், ஆன்மீக விடுதலையை கற்பிக்கும் பண்பாட்டுத்தளமான மதங்கள், அறிவை முற்றிலும் தவிர்த்து பெருமளவு நம்பிக்கை சார்ந்ததாகவும், சிறிது உணர்வு சார்ந்ததாகவும் கடைபிடிக்கப்படுகிறது. விடுதலைக்கு உணர்வு மிக இன்றியமையாதது. ஆனால் அந்த உணர்வு, அறிவை முற்றிலுமாக புறக்கணிக்கும்போது, அந்த உணர்வு வெறும் நம்பிக்கை சார்ந்ததாகவும், அதன் மூலம் எண்ணங்களை மனதில் பெருக்கும் உற்பத்தித் தளவாடமாகவும் மாறிவிடுகிறது. எனவே மதங்கள் பண்பாட்டுச் சூழலில் மாற்றியமைக்கப்படாதவரைக்கும், விடுதலைக்கான விருப்பம் பெரும்பான்மை மக்களை அடைவது எளிதான காரியம் அல்ல.

இங்கு மனம் மற்றும் மனதில் உருவாகும் எண்ணங்களை மட்டுமே நம் எண்ணங்களுடனான அடிமைத்தளைக்கு காரணங்களாக கூறப்பட்டாலும், நம் மனதின் மிக ஆழத்தில் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். இங்கு மனம் என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட அர்த்தத்துடனே கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ஆன்மீகத் தளங்களில் சித்தம் எனக்கூறப்பட்டுள்ளது, இங்கு மனம் என பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இங்கு கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தொடக்கநிலையில் இருப்பவனின் மனநிலையிலேயே கூறப்பட்டுள்ளது. இதன் பயன் எனக்குறிப்பிட்டால், விடுதலை குறித்த ஒரு ஆர்வத்தையும், அதிகப்படியான அறிதலை தேடுவதற்கான கிரயாஊக்கியாகவும், ஆன்மீக விடுதலை என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று என்பதை மனதில் பதியவைப்பதுமே. அதைத்தவிர இங்கு கூறப்பட்டவை வெறும் வெற்று வார்த்தைகளே. அதிலும் ஆன்மீக பாதையில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்தவர்களுக்கு, இவை வெறும் குப்பைகளே. ஏனெனில் ஆன்மீக பாதை என்பது மிகவும் தனிமையானது - எந்த இருவரும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது, மிகவும் அந்தரங்கமானது. அதை வெளிப்படுத்துவது என்பதே ஒரு வகையில் அகங்காரம். கென் வில்பரின் மேற்கோளை மீண்டும் நினைவுகூருகிறேன்,


".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

[முடிவு]


blog.change@gmail.com

Tuesday, December 10, 2013

எண்ணங்கள்-2

எண்ணங்கள் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. நம் மனதின் இயல்பிற்கேற்ப எண்ணங்கள் நம்மில் வந்து சென்று கொண்டிருக்கின்றன. நம் அறியாமையால், வந்து சென்று கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு அடிமையாகி, நாமே அந்த எண்ணங்களாக மாறிவிடுகிறோம். எண்ணங்களுக்கு அடியில் உள்ள மனதின் ஒரு இழை எண்ணங்களை கவனிக்க தொடங்கும்போது, எண்ணங்களின் அடிமைத்தளையிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்போம். எண்ணங்கள் கவனிக்கப்படும்போது, எண்ணங்களாக இருக்கும் நாம், அந்த கவனிக்கும் மனதின் இழையாக மாறிஇருப்போம்.

இப்போது எண்ணங்களை கவனிப்பது இன்னொரு எண்ண இழையா அல்லது எண்ணங்கள் புழங்கும் தளத்திற்கு அடியில் உள்ள மனதின் இழையா என எவ்வாறு அறிவது? எண்ணங்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் இயல்புள்ளவை. எண்ணங்களை கவனிக்கும் இழை மற்றொரு எண்ண இழையாக இருந்தால், அது மனதின் மேல் தளத்தில் இயல்பாக நிகழும் எண்ண ஒட்டங்களை கட்டுப்படுத்தி, தன் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயலும். அவ்வாறு எண்ண ஒட்டம், மனதின் கவனிக்கும் இழையால் கட்டுப்படுத்தப்பட்டால், அந்த கவனிக்கும் இழை இன்னொரு எண்ண இழையே. எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், அவை அந்த கட்டை உடைத்து புது வீரியத்துடன் வெளிப்பட்டு நம்மை மீண்டும் அடிமைப்படுத்தும், இந்த எண்ணங்களை மற்றொரு எண்ண இழையால் கவனிக்க முயல்வதும், அதனால் எண்ண அலைகள் கட்டுப்படுவதும், பின்னர் முழு வீரியத்துடன் நம்மை மீண்டும் அடிமைப்படுத்துவதும், தொடக்க நிலையில் உள்ள, எண்ணங்களிலிருந்து விடுபட முயல்பவர்களுக்கு மிக இயல்பானதே. இந்த எண்ணங்களுக்கிடையேயான போராட்டத்தை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டு மீள்பவர்கள் மிக எளிதாக எண்ணங்களை கவனிக்கும் மனதின் இழையை கண்டு கொள்ள இயலலாம்.

'நான்'  என்பது 'என்' எண்ணங்கள் அல்ல என்பதை நாம் உணரும்போது, எண்ணங்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன. முக்கியத்துவத்தை இழந்த எண்ணங்கள், எவ்வித கட்டுப்பாட்டுக்குமான தேவை இன்றி தாமாகவே மனதிலிருந்து மறைகின்றன. ஆக மனதின் இயல்பிற்கேற்ற எண்ணங்கள் தாமாகவே தோன்றி தாமாகவே மறைகின்றன. ஆனால் நாம் அந்த எண்ணங்களாக ஆவதில்லை. எனவே நம் உளவியல் சக்தி எண்ணங்களாக வீணடிக்கப்படுவதில்லை. எண்ணங்கள் எவ்வித அழுத்தத்தையும் மனதில் செலுத்தாமல் தானாகவே தோன்றி மறைகின்றன. நாம் விரும்பும்போது, எண்ணங்களாக மாறி, தேவையான செயல்களை செய்யலாம். ஆக நாம் எண்ணங்களின் அடிமைகள் என்பதிலிருந்து, எண்ணங்கள் நம் தோழன் என்னும் மாற்றம் நமக்குள் வருகிறது. மேலும், எண்ணங்களை கவனிக்கும் மனதின் உள் இழையாக நாம் மாறும்போது, எண்ணங்களாக வீண்டிக்கப்பட்ட உளவியல் சக்தி, மனதின் உள் இழையின் சக்தியாக சேமிக்கப்பட்டு, நம் விழிப்புணர்வாக வெளிப்படுகிறது.

எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் இடைவெளிகளில், மூளையும் அதனால் மனமும், முழு விடுதலையுடன் உள்ளன. அந்த இடைவெளிகளில், அவை சில நொடி நேரம் மட்டும் இருந்தாலும், அடையும் விடுதலை நம் மனதை மிகவும் உணர்வுத்திறன் உள்ளதாக மாற்றுகிறது. அல்லது, அந்த இடைவெளிகளில் மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை மீண்டும் பெறுகிறது.

மனம் அதன் இயல்பான உணர்வுத்திறனை திரும்பப் பெறும்போது, நம் பொதீக (Gross body) உடலிலும் ஸ்தூல (Subtle body) உடலிலும் நிகழும் பல செயல்கள் நம் மனதின் கவனிக்கும் இழையால் உணர்வாக உணரப்படும். (பொதீக உடல் இந்திய ஆன்மீக மரபில் அன்னமய கோஷம் (Body formed by Food) எனவும், ஸ்தூல உடல் பிராணமய கோஷம்(Energy Body), மனோமய கோஷம்(Psychological Body), விக்ஞ்ஞானமய கோஷம்(Intelectual Body), ஆனந்தமய கோஷம்(Bliss Body) என நான்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது). இந்த உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என கூறுவது இயலாத ஒன்று. ஏனெனில், அதற்கு இணையான ஒன்றை நாம் பெரும்பாலும் அனுபவித்ததில்லை. ஆனால், சில உதாரணங்களின் மூலம் அவற்றை கூற முடியலாம். அவ்வாறு கூறும்போது, நாம் அந்த உதாரணங்களையே முடிவுகளாக கொண்டு, அவற்றை எதிர்பார்பார்க்க தொடங்குவோம். ஆக, அந்த எதிர்பார்ப்பு மனதின் புதிய எண்ணங்களாக மாறி, மனதின் எண்ணங்களற்ற இடைவெளியை நிரப்பி, மனதின் உணர்வுத்திறனை மீண்டும் மழுங்கடிக்கும்.

எண்ண இடைவெளியில் நாம் அடையும் உணர்வுகளுக்கு உதாரணம்; நாம் முழுமுற்றாக ஒன்றின்\ஒருவரின் மேல் அன்பு செலுத்தும் போது, அந்த அன்பு முழுமையாக இருக்கும் சில நொடிகளில் ஒரு வித சிலிர்ப்பை உணர்ந்திருப்போம். அந்த சிலிர்ப்பு உணர்வை, எண்ணங்கள் அணையும்போது ஏற்படும் உணர்வுடன் ஓரளவு தொடர்பு படுத்தலாம். ஆண் பெண் உறவின் உச்சத்தில் (Orgasm), சில நொடிகள் அல்லது ஒரு நொடியின் சிறு சிதறலில் அடையும் மன உணர்வையும் ஒரளவு தொடர்பு படுத்தலாம். அல்லது, எண்ணங்கள் இல்லாமல் ஆகும்போது அடையும் ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு மலர் மலர்வதை போன்றிருக்கலாம். ஆம், இவை எல்லாம் அந்த உணர்வுகளை நம்மால் அறிய முடிந்த உணர்வுகளுடன் தொடர்பு படுத்துவதற்கு மட்டுமே - இவை, அவை அல்ல!

அவ்வாறு நாம் அறிந்திராத உணர்வுகளை அடைய தொடங்கும்போது, நம் மனதின் கவனிக்கும் இழையிலிருந்து தடம் மாறி மீண்டும் நாம் எண்ணங்களாக மாறிவிட நேரலாம் - நாம் தடம் மாறும் அறிதல் முற்றிலும் இல்லாமல். உதாரணமாக, நம் மனம் ஸ்தூல உடலின் உணர்வுகளை அடைய தொடங்கும்போது, மனம் அந்த உணர்வுகளுடன் எண்ணங்களை தோற்றுவித்து, அந்த எண்ணங்களை நம் கவனிக்கும் இழை தவறவிடும்போது, அந்த எண்ணங்கள் உருவெளித்தோற்றங்களாக (Hallucination) வெளிப்படும். ஒருமுறை இந்த உருவெளித்தோற்றங்களில் தம்மை இழந்தவர்கள் அதை விட்டுவிட்டு வெளிவருவது இயலாத காரியமாக இருக்கலாம் - போதைக்கு அடிமையானவர்கள் போல! மனம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பின் அடையும் உணர்வு நிலைகளை பற்றிக்கொண்டு, அந்த உணர்வுகளின் இன்பத்தில் திளைத்தல். இது சுய இன்பத்தை திரும்ப திரும்ப அடையும் சிறுவனின் மனநிலையைப்போன்றது! 1960-கள் மற்றும் எழுபதுகளில், எல்.எஸ்.டி போன்ற போதைபொருட்களை உபயோகிப்பதன் மூலம் உருவெளிதோற்றங்களை மனதில் அடைந்து, அவற்றை ஆன்மீக அடைதலாக எண்ணுவது பரவலாக இருந்துள்ளது. அந்தகாலகட்டத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் போதைப்பொருட்களின் மூலம் அடையும் உருவெளிக்காட்சிகள், ஆன்மீக அனுபவங்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

எண்ணங்களை கவனிக்கும் மன இழை வலிமை அடையுந்தோறும், அந்த இழை மெல்ல மெல்ல மனதின் ஆழங்களை நோக்கி செல்லலாம். இங்கு நாம் எண்ணங்களின் காரிய காரண இயக்கத்தை (Cause & Effect) சிறிதளவு அறிந்திருக்க வேண்டும். எண்ணங்கள் தாமாகவே மனதில் தோன்றுகின்றன என்பது மனதின் மேல் அடுக்கை மட்டுமே கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். நம் வாழ்க்கையில் செய்யும் எல்லா செயல்களுக்கும், விரும்பும் விளைவுகளை எதிர்பார்த்து வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நமக்கு, காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்பது மிக நன்றாகவே தெரியும். நம் எண்ணங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆம், மேல் மனதில் தாமாகவே வந்து செல்லும் எண்ணங்களுக்கு அடிப்படையாக, நினைவுப்பதிவுகள் நம் மூளையில் பதிந்திருக்கின்றன.


நம் புலன்கள் அறியும் உணரும் திறனை அடைந்தது முதல், அந்த உணர்வுகளை கிரகிக்கும் சக்தியை மூளை பெற்றது முதல், நம் புலன்களின் ஒவ்வொரு உணர்வும் மூளையால் கிரகிக்கப்பட்டு நினைவுகளாக சேமிக்கப்பட்டுள்ளது. நம் புதிய ஒவ்வொரு புலணர்வுகளும், சிந்தனைகளும் மூளையில் சேமிக்கப்பட்டுள்ள இந்த நினைவுகளின் தாக்கத்தை பெற்றபின்னரே புதிய நினைவுகளாக சேமிக்கவோ அல்லது புதிய எண்ணங்களாக வெளிப்படவோ செய்கிறது. அதாவது, நம் மனதில் தோன்றும் எந்த எண்ணங்களுக்கும், நம் நினைவுகளோ அல்லது புலனுணர்வுடன் சேர்ந்த நினைவுகளோ காரணமாக இருக்கும்.

மேலும்

தொடர்புள்ள பதிவுகள்

blog.change@gmail.com

Friday, December 6, 2013

எண்ணங்கள் - 1

நாம் எண்ணங்களால் ஆக்கப்பட்டவர்கள். நமது சுயம்(Self), தற்போதைய நம் விழிப்பு நிலையில், வெறும் எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அதுவே நம் அகங்காரமாக (Ego) வெளிப்படுகிறது. நம் மனதில் எண்ணங்கள் இடைவிடாமல், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் மனதில் இயங்கும்போது, நாம் அந்த எண்ணங்களாகவே மாறிவிடுகிறோம். அதாவது, நம் எண்ணம் நாம் என்னவாக இருக்கிறோம் என எண்ணுகிறதோ அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக நம் எண்ணம் நாம் நல்லவர் என எண்ணினால் நாம் நல்லவராகவே இருக்கிறோம் - நாம் உண்மையில் எப்படிப்பட்டவராக இருந்தாலும். நம் எண்ணம், நம்மை பலவானாக எண்ணினால், நாம் பலவானாகவே மாறிவிடுகிறோம் - உண்மையில் நாம் எத்தகைய பலவீனர்களாக இருந்தாலும். நாம் என்பது நம்மை குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் மட்டும் அல்ல. நம்முள் தோன்றும் எல்லா எண்ணங்களும் நாமே - அவை எத்தகைய எண்ணங்களாக இருந்தாலும். அதாவது நமது எண்ணங்களே நாம் - நம் தற்போதைய விழிப்பு நிலையில்!

இவை அனைத்தும் முழுமையை உண்மையாகவே உணர்ந்த பலரால், பல காலங்களில், பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வார்த்தைகளின் முன், இந்த வலைத்தளத்தில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை ஒரு சுயவிருப்பத்திற்காகவே வலையேற்றப்படுகிறது. மிக சமீபத்தில், படிக்க நேர்ந்த சீர்மை என்னும் குறுநாவலின் கதாநாயகனான கென்வில்பர்-இன் ஒரு மேற்கோள் அந்த சுயவிருப்பத்தை மீண்டும் நிலைநிறுத்தியது. (சீர்மை  குறுநாவலின் மூலம் கென் வில்பரின் அறிமுகத்தை பெற்று, ஒரு புத்தக கடையில் கென் வில்பரின் புத்தகங்களை தேடும்போது கிடைத்த FountainHead என்னும் 'அயன் ரான்ட்' அவர்களின் நாவல்.............. - இவ்வாறு 'சீர்மை'யின் மூலம் நான் பயணித்த தூரம் மிக அதிகம்)

 கென் வில்பரின் மேற்கோள்; ".................................. And this is truly a terrible burden, a horrible burden, because in any case there is no room for timidity. The fact that you might be wrong is simply no excuse: You might be right in your communication, and you might be wrong, but that doesn’t matter. What does matter, as Kierkegaard so rudely reminded us, is that only by investing and speaking your vision with passion, can the truth, one way or another, finally penetrate the reluctance of the world. If you are right, or if you are wrong, it is only your passion that will force either to be discovered. It is your duty to promote that discovery—either way—and therefore it is your duty to speak your truth with whatever passion and courage you can find in your heart. You must shout, in whatever way you can.” 
http://www.goodreads.com/author/quotes/22075.Ken_Wilber

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் தற்போதைய விழிப்பு நிலையில் எண்ணங்களை நம்மால் கவனிக்கப்படும் ஒரு செயல்பாடாக உணர முடிவதில்லை. நாம், நமது இருப்பை எண்ணங்களின் மேல் அமர்த்தி, நாமே எண்ணங்களாக மாறிவிடுகிறோம். அதாவது, எண்ணங்கள் எதை எல்லாம் எண்ணுகின்றனவோ அதுவே நாம் ஆகிவிடுகிறோம். எண்ணம் ஒரு செயலை செய்யுமாறு எண்ணினால், நாமே அந்த எண்ணமாகி, அந்த செயலை செய்கிறோம். அந்த செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கம்போதே நாம் வேறு ஒரு எண்ணமாகி, தொடங்கிய செயலை விட்டுவிடுகிறோம். அந்த செயல் முடிய வேண்டுமானால், மீண்டும் நம் எண்ணம் அந்த செயலின் மேல் குவிந்தாக வேண்டும். அதாவது, ஒரு புதிய எண்ணத்தின் மூலம், அந்த செயலை குறித்த ஒரு புதிய எண்ணமாகி, நாம் மீண்டும் தொடங்கிய செயலின் மேல் வந்தாக வேண்டும்.

நாம் நம் எண்ணமாக இருக்கும்வரையில் நம்மிடமிருந்து வெளிப்படும் எந்த செயல்களும், சுவாசித்தல் போன்ற நுண்ணறிவின் மூலம் நடைபெறும் செயல்களை தவிர, நம் எண்ணங்களின் உந்துதல் மூலம் மட்டுமே நடைபெற இயலும். இந்த செயல்பாட்டில், இயற்கையாக நம்மிடம் இருக்கும் நுண்ணறிவு (Inteligence) மிக மிக சிறு பங்களிப்பையே அளிக்க முடியும் - நம் எண்ணங்களில் நுண்ணறிவின் ஆதிக்கத்தை, நம்மால் சாதாரணமாக அறிய முடியாத தளத்தில், படரவிடுவதன் மூலம். அதாவது நம் தற்போதைய விழிப்பு நிலையில், நம் வாழ்க்கையை, நம் விதியை எண்ணங்களே தீர்மானிக்கின்றன. நாமே அந்த எண்ணங்களாக இருப்பதன் மூலம், அவற்றை நாமே தீர்மானிப்பதாக கூறிக்கொள்ளலாம் - ஆனால் நாமோ எண்ணங்களின் அடிமைகளாக இருக்கிறோம். எண்ணங்களின் அடிமைகளாக இருப்பதை அறியாமல் இருக்கிறோம். அந்த அறியாமையில் இருக்கும்வரை, நம் வாழ்க்கையை, நம் விதியை நாமே தீர்மானிக்கும் சக்தியை உடையவர்களாக இருந்தும், அவற்றை நம் எண்ணங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

நாம்  எண்ணங்களாக இருக்கும்வரை, எண்ணங்களுக்கு அடிமையாகவே இருக்கிறோம். நம்மால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நமக்குள் எத்தகைய எண்ணங்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ, கிளர்ந்து எழுந்துகொண்டே இருக்கலாம். அவ்வாறு கட்டுக்கடங்காத எண்ணங்களுடன் நாம் இருந்தாலும், அந்த எண்ணங்களிடமிருந்து விடுபட்டிருக்கவும் நம்மால் முடியும்- நாம் அத்தகைய விடுதலைக்கு அதிவிருப்புடன் இருந்தால்!

ஆம், நாம் என்பது நமது எண்ணங்கள் அல்ல. எண்ணங்களாகவே நாம் மாறிவிடுவது, நமது மன மயக்கத்தால், நம் அறிவின் தயக்கத்தால், எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான விருப்பமின்மையால். நாம் விரும்பினால், இந்த நொடியில் எண்ணங்களிலிருந்து நம்மால் விடுபட முடியும், ஆனால் நம்மிடம் அத்தகைய பெருவிருப்பு இல்லை. ஒருவேளை அந்த விடுதலையின் ஆனந்தத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியாமை கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அந்த விடுதலையின் ஆனந்தம் இதுவரை நாம் அறிந்துள்ள ஆனந்தங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எனவே அந்த ஆனந்தத்தை அறிந்தவர்களால், அவற்றை நேரடியாக நமக்கு விளக்கமுடியாது. ஏனெனில் அதற்கு இணையான எதையும் நாம் இதுவரை அறிந்தது இல்லை. நம் மூளையால் எந்த புதியதையும் நாம் அறிந்த ஒன்றுடன் ஒப்பிடுவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். எனவே எல்லா ஞானிகளின் விளக்கங்களும், நாம் அறிந்தவற்றுடன் ஒப்பிடப்பட்டு, திரிக்கப்பட்டு, அவற்றின் சாரத்தை இழந்த பின்பே நம் அறிவை அடைகிறது. ஞானிகள் அறிந்த ஆனந்தம் நம் அறிவுக்கு எட்டாத தளத்தில் இருப்பதால், அவர்களால் உவமைகளின் மூலம் மட்டுமே நமக்க விளக்க முடியும். உதாரணமாக பேரின்ப நிலையை ஆயிரம் இதழ் தாமரை மலர் முகிழ்தலுக்கு ஒப்பிடுதல் போன்றவை. இதற்கு அர்த்தம், அந்த ஆனந்தத்தை நம்மால் அடைய முடியாது என்பதல்ல. என்னால், இங்கு இந்த அளவுக்கேனும் விளக்கும் அறிதலை அடைய முடிந்திருந்தால், இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த பேரானந்தத்தின் உச்சத்தை அடைவது மிகமிக எளிதான செயலே- அத்தகைய விருப்பம் ஒருவரில் எழுந்தால்!

மீண்டும் எண்ணங்களுக்கு. நம் மனம் என்பது ஒரு செயல்பாடுகளின் களம். மேல் அடுக்கில், மனம் வெறும் எண்ணங்களாக இருக்கிறது. உள்ளடுக்குகளில், அது நம் எல்லா செயல்பாடுகளாகவும் இருக்கிறது. மேலும் அடியாழத்தில் மொத்த மனித குலத்தின் செயல் தளமாக இருக்கிறது என்றும் அதன் அடிப்பரப்பில் உலகத்தின் இயக்கமாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இவை நம் தற்போதைய அறிதலுக்கு அப்பாற்பட்டவை. எனவே அவற்றை நம்புவதோ அல்லது மறுப்பதோ நமக்கு தேவையற்றது, முடியாதது. இவ்வாறு கூறப்பட்டிருப்பதை பற்றி அறிந்திருப்பது, நமது இருப்பை பற்றிய ஒரு கருத்தாக்கத்திற்கு சில தளங்களில் உதவலாம்.

நாம் விரும்பினால், எண்ணங்களிலிருந்து விடுபடுவது மிக எளிமையானது. மனதின் மேல் அடுக்கில் நிகழும் எண்ணங்களை, மனதின் எண்ணங்களுக்கு அடியில் உள்ள அடுக்கின் ஒரு இழையின் மூலம் கவனிக்கத்தொடங்கும் நொடியில் நாம் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்போம்.


[மேலும்]

எண்ணங்கள் - 2
blog.change@gmail.com

Sunday, September 15, 2013

காமத்தின் ஒரு முகம்

காமம் என்னும் சமஸ்கிருத வார்த்தை, மனிதனின் எல்லா விதமான ஆசைகளையும் விருப்பங்களையும் சேர்த்து குறிக்கும் பொருளுடையது. அந்த விரிவான பொருளை கொண்டால், மனிதனின் எல்லா விதமான இயக்கங்களும் உலகியல் இயக்கத்தில் வெளிப்படுவதற்கு ஆதாரம் காமம். மனிதனின் அடிப்படை அல்லது மூலாதார சக்தி, காமத்தின் விளைவாக இச்சா சக்தியாக உருமாறி உலகியல் இயக்கமாக மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. ஆம், ஒரு சமூகம் இயங்குவதற்கு அடிப்படை சக்தி அந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் இச்சா சக்தியே. இச்சா சக்தி அந்த சமூகத்திலிருந்து வெளிப்படும் தன்மைக்கேற்ப, அந்த குறிப்பிட்ட சமூகத்தின் இயல்பு அமைந்திருக்கும்.

பொது தளத்தில், காமம் என்னும் சொல் உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக புழங்குகிறது. இந்த அர்த்தத்தில், காமம் என்பது ஒரு சமநிலையுடன் அனுகப்படவேண்டிய இயக்கம். தனிமனித அளவில் காமத்தின் சமநிலை தவறும்போது, அந்த தனிமனிதனையும் அந்த மனித உயிரின் காமத்தின் திசையில் அகப்படுபவரையும் பாதிக்கும் உடல் இச்சையாக வடிவம் பெறுகிறது. அதே காமம், சமூக அளவில் சமநிலை இழக்கும்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிநிலைக்கு கொண்டு செல்லும். அதுவே நம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் காமத்தின் சமநிலை குலைவால் வீணடிக்கப்பட்ட மற்றும் தவறான திசையில் செலுத்தப்பட்ட இச்சா சக்தி, ஒரு இளம் பெண்ணின் உடலை கொடூரமாக வேட்டையாடி அவர் உயிரை பறித்ததுடன், அந்த சக்தியின் சமநிலை இழந்த ஒருவரை தற்கொலை செய்ய வைத்து, மேலும் நான்குபேருக்கு தூக்கு தண்டனையைம் வழங்கியுள்ளது. இந்த தண்டனையை மொத்த சமூகமும் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, அந்த சமூகம் இது தனிமனித இச்சா சக்தியின் தவறான இயக்கம் மட்டும் அல்ல, சமூக இச்சா சக்தியின் தவறாக வழிநடத்தப்பட்ட இயக்கமும்தான் என்பதை மிக கவனமாக சமூகம் மறந்து விடுகிறது. சமூகத்தின் ஒரு மூலையிலிருந்து கூட, ஒரு தீனமான குரல் கூட, ஒரு சில அர்த்தமில்லாத கூச்சல்களை தவிர, சமூகத்தின் இந்த அவலத்திற்கான காரணத்தை நோக்கி எழும்பவில்லை என்பதை காணும்போது, சமூகத்தின் மொத்த இச்சா சக்தியும் திசைமாறி, அழிவு சக்தியாக மாற்றமெடுக்கும் சாத்தியத்தை மறுக்க வழியில்லை.

மேலே கூறப்பட்டது, செய்யப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்தவோ அல்லது கொடுக்கப்பட்ட தண்டனையை குறைகூறுவதற்காகவோ அல்ல. சமூகம் நிலைத்திருக்க வேண்டுமானால், அந்த சமூகத்தின் இயக்க விதியை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இங்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அந்த நான்குபேர் மட்டுமா என்பது, இந்த தண்டனையை கொண்டாடும் ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பியாக வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத கேள்வி - இந்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்தவர்களாக இருந்தால்!. ஆம், இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும், குற்றத்தை இழைத்தவர்களும் நம் குழந்தைகளே\சகோதரியே\சகோதரர்களே, நம் சமூகத்தின் குழந்தைகளே. அவர்கள் இழைத்த குற்றத்துக்காக அவர்களை தண்டிக்கலாம், ஆனாலும் அவர்கள் நம் சமூகத்தின் குழந்தைகள் என்பதிலிருந்து விலக்க முடியாது. அவ்வாறு நம்மால் விலக்க முடிந்தால், அதன் பின் நம்மை நாமே ஒரு மனிதப்பிறவி என கூறிக்கொள்ள நம்மால் முடியாது.

மனிதனின் இச்சா சக்தியின் இயங்கு விதிகளை தர்க்கத்தால் வரையறை செய்ய (Define) முடியும் என்று தோன்றவில்லை. எனினும் மிகவும் கூர்ந்த அவதானிப்பு மற்றும் உளவியல் வரையறைகளுக்கு உட்பட்டு, தனிமனித ஆசைகளும் விருப்பங்களும் சமூக இயக்கங்களாலே வடிவமைக்கப்படுகிறது எனக்கூறலாம். கூர்ந்து கவனித்தால், சமூக காரணங்களுக்கும் தூண்டுதல்களுக்கும் அப்பாற்பட்டு மனிதனின் அடிப்படை இயல்பு அமைந்துள்ளதை உணரலாம். ஆனால் அந்த இயல்பு குறித்த எந்த முடிவுக்கும் நம் தற்போதைய அறிவு நிலையில் நம்மால் வர இயலாமல் போகலாம். எனினும் அந்த அடிப்படை இயல்பு, அழிவு சக்தியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த ஊகத்தின் அடிப்படையில், தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளை முடிவு செய்வது சமூக காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு கூறுவது, ஒவ்வொரு தனிமனித தவறுகளுக்கும் சமூகத்தை பொறுப்பாக்குவது என்பது நோக்கமல்ல.

நம் உளவியல் இயல்பை தீர்மானிப்பது, நாம் அறிந்தவையும் அறிந்தவற்றின் மூலம் அடையும் முன்முடிவுகளுமே. நாம் அறிபவை பெரும்பாலும் நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வழியாகவே நம்மை அடைகிறது. ஆக பெரும்பாலும் நம் ஆதார சக்தியை இச்சா சக்தியாக மாற்றுவது சமூகத்திலிருந்து நம் அறிவுக்கு வந்து சேர்பவை. அந்த இச்சா சக்தியின் திசையை தீர்மானிப்பவை நாம் அடைந்துள்ள முன்முடிவுகள் மற்றும் நம் மேல் திணிக்கப்படும் முன் முடிவுகள். ஆக சமூகம் நம் ஆசைகளையும் விருப்பங்களையும் உருவாக்குவதுவரை இருப்பது மிக இயல்பானது. ஆனால் அந்த சமூகம் அதீத ஆசைகளையும் விருப்பங்களையும் நம்மேல் சுமத்துவதன் மூலம், சில முன்முடிவகளையும் நம்மைஅறியாமலே நமக்குள் ஏற்றுகிறது. அந்த நிலையில் நம் இச்சா சக்தியின் திசையையும் சமூகமே தீர்மானிக்கிறது.

இச்சா சக்தியாக மாற்றப்பட்ட நம் மூல சக்தி, செயல்களாக வெளிப்பட்டாக வேண்டும். அவ்வாறு செயல் வடிவம் பெறாத ஆசைகள், நம் மனதின் ஆழத்தில் புதைந்து, அழுத்தம் செலுத்தினால் வெடிக்கும் கண்ணிவெடியாக மனதினுள் கிடக்கும். ஒரே ஆசையை சமூகம் மீண்டும் மீண்டும் நம்மேல் திணிக்குமானால், அந்த ஆசை செயல் வடிவம் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் மனதினுள் புதைந்து கொண்டிருந்தால், அந்த கண்ணி வெடியின் அழிக்கும் சக்தியும் அதிகரித்து கொண்டேயிருக்கும்.

மீண்டும் உடல் இச்சைக்கு - நமது சமூகத்தில், உடல் இச்சை என்பது இரகசியமாக தீர்க்கப்பட வேண்டியது. சட்டபூர்வமான அல்லது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்குள் மட்டும் தீர்க்கப்பட வேண்டியது. உறவுகள் திருமணம் மூலம் சமூகரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன், உடல் ரீதியான உறவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி உடல் ரீதியாக உறவு கொண்டால் அது விபச்சாரமாக கருதும் சமூகம், நாம் வாழும் சமூகம். நமது சமூக அமைப்பில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாமல், குற்றமாக கருதப்பட்டு, தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் இதே சமூகத்தில் எல்லாவிதமான உடல் இச்சை தூண்டுதல்களும் சுய கட்டுப்பாடு தவிர வேறு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், வயது வித்தியாசம் இல்லாமல், ஆசைகளை செயலாக்கும் வாய்ப்பு உள்ளவர்களா இல்லாதவர்களா என்னும் வித்தியாசம் இல்லாமல் சென்றடைகிறது.

அதாவது நம் சமூகம், எந்த தடையும் இல்லாமல் நம் அடிப்படை ஆற்றலை ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஆன இச்சா சக்தியாக, உடல் இச்சையாக எந்த தடையும் இல்லாமல் மாற்றுகிறது. ஆனால் அந்த உடல் இச்சைகள், செயல் வடிவம் பெறுவதற்கு அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் நமக்கு விதிக்கிறது. ஆக, உடல் இச்சைகளை செயல்படுத்த இயலாதவர்கள் அந்த ஆசைகளை மனதினுள் புதைப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு புதைக்கப்பட்ட ஆசைகள் என்பது ஒரு உளவியல் கண்ணி வெடி. வெளிப்புற காரணிகள் ஒரளவு அழுத்தத்தை கொடுத்தால், அந்த கண்ணிவெடியை மனதினுள் கொண்டுள்ளவர், அந்த கண்ணிவெடியின் அழிவு சக்கதியை குறித்த விழிப்புணர்வை அந்த கணத்தில் இழந்தால், புதைக்கப்பட்ட கண்ணிவெடி, அதன் அழிவு சக்தியை முழு வீரியத்துடன் வெளிப்படுத்தும்.

இந்த சூழ்நிலையில். இச்சையை கட்டுப்படுத்த இயலாத அந்த சிலர் மட்டும் குற்றவாளிகளா அல்லது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உடல் இச்சைகளை தூண்டும் சமூகத்திற்கும் குற்றத்தில் பங்குள்ளதா? சமூகம் எவ்வாறு உடல் இச்சைகளை தூண்டுகிறது என்பதை விவரிக்க தேவை இல்லை. நம் வீட்டு வரவேற்பறையிலே எல்லாவிதமான வக்கிரங்களும், குழந்தைகள் முன்னிலையிலேயே எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை விவரிக்காமலே நாம் அனைவரும் அறிவோம்.

குற்றத்தை அரங்கேற்றுவதற்கான எல்லா காரணிகளையும் உருவாக்கிவிட்டு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, அத்தகைய குற்றம் நடைபெற உள்ள சாத்தியங்கள் குறித்த எந்த விதமான விழிப்புணர்வையும வழங்காத சமூகத்திற்கு, அந்த குற்றத்தில பங்கு இல்லையா? குற்றத்திற்கான எல்லா காரணிகளையும் வெளிப்படுத்தி, அந்த குற்றத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ளவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்காத சமூகத்திற்கு அந்த குற்றத்தில் பங்கு இல்லையா?
ஆக நம் சமூகமே குற்றங்கள் நடைபெறுவதற்கான எல்லா காரணங்களையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த குற்றத்தால் நேரடியாக பாதிப்படைபவர்களும், குற்றம் புரிந்து பின் அந்த குற்றத்தை செய்ய தூண்டிய சமூகத்தால் தண்டிக்கப்பட்டு பாதிப்படைபவர்களும், சில தனிப்பட்ட மனிதர்களே. துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமூகத்தின் அங்கத்தினர்கள் என்பதும், எனவே பாதிக்கப்படுவது அந்த சமூகம்தான் என்பதையும் அந்த சமூகம் அறியாதது போலவே நடந்து கொள்கிறது.

நாம் அனைவரும் சேர்ந்து தொகுப்புதான் நம் சமூகம். எனவே நம் ஒவ்வொருவருக்கும் அந்த குற்றத்திலும். குற்றத்தால் நிகழ்ந்த பாதிப்பிலும் பங்கு உண்டு. நாம் அந்த குற்றத்தால் அடைந்த பாதிப்பிற்கு எதிர் வினையாற்றுகிறோம். அது மிகச்சரியானது. ஆனால் அந்த குற்றத்தில் நம் பங்கிற்கு எந்த தண்டனையும் ஏற்கவில்லையே. அது ஏன்? குறைந்த பட்சம். அந்த குற்றத்தில், ஒரு சமூகமாக, நம் பங்கும் உள்ளதே. அதை ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? ஆம், நம்மால் நம் பாதிப்பை மட்டுமே காணமுடிகிறது. அந்த பாதிப்பிற்கான காரணத்தில் நம் பங்களிப்பை காண முடியவில்லை. ஆக நாம் அனைவரும் வெறும் பாசாங்குகாரர்கள் (hypocrites). நம்மில் ஒரு பகுதியை மட்டும் கண்டு மற்றொரு பகுதியை காண மறுப்பவர்கள்.

ஒருவேளை நம்மால், குற்றத்தில் நம் பங்களிப்பையும் காண முடிந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? குற்றத்திற்கான தண்டனையை நமக்கு நாமே வழங்குவதன் மூலம் மட்டுமே நம் அற உணர்வை, அத்தகைய அற உணர்வை நாம் கொண்டிருந்தால், நம்மால் நிலை நாட்ட முடியலாம். உதாரணமாக, இத்தகைய உடல் இச்சைகளை தூண்டும் வக்கிரங்கள் பொழுது போக்கு என்னும் பெயரில் நம் வீட்டு வரவேற்பறையில் நிகழ்வதை நாமாகவே நிறுத்தலாம். இதன் மூலம் நம் குழந்தைகளின் உளவியலில் இந்த வக்கிரங்கள் நேரடியாக நம் வீட்டிலிருந்தே புதைக்கப்படுவதை குறைந்த பட்ச அளவிலாவது குறைக்கலாம். ஆம், சமூக அளவில் பார்த்தால், நமக்கு நாமே இந்த சிறு தண்டனையை வழங்க முடிந்தால், நம் சமூகத்திற்கு பெரும் உதவி செய்தவர்கள் ஆவோம் - நம் குழந்தைகள் மனதில் நாமாகவே வக்கிரத்தை விதைக்காததன் மூலம்!


எனது வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகளுக்கு முன்பே, பரஸ்பர புரிதலின் மூலம், இத்தகைய வக்கிரங்கள் அரங்கேறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. என்னாலான என் பங்களிப்பு!

blog.change@gmail.com

Thursday, September 5, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 5

நுகர்வின் இன்னொரு பரிமாணம், நாம் ஒன்றை நுகரும்போது, அந்த நுகர்தலுக்காக அந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ, மற்றொரு உயிர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். அது மனித உயிராகவோ அல்லது பிற உயிரினங்களாகவோ இருக்கலாம் இது இயற்கையின் தவிர்க்க முடியாத விதி. உதாரணமாக நாம் சைவ உணவு உணபவர்களாக இருந்தாலும் நம் உணவின் பெரும் பகுதியாக இருக்கும் விதைகள் என்பவை மற்றொரு உயிருக்கான சாத்தியங்களே.  நாம் அந்த உணவை உண்ணும்போது அந்த உயிர் வாழ்வதற்கான சாத்தியத்தை நாம் அழிக்கிறோம். அந்த உணவை விளைவிப்பதற்கு தேவையான நீராதாரத்தை பெறுவதற்காக அணைகளை கட்டம்போது, அங்கே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவுஇரக்கமின்றி, அவர்களுக்கு எதுவும் வழங்காமல், அவர்கள் வாழ்வாதாரத்தையே பறித்து அணைக்கட்டுகளை கட்டி, அந்த நீரில் விளைவித்த உணவையும், அங்கிருந்து பெறப்பட்ட மின்சாரத்தில் நம் நுகர்வின் சில பிற அம்சங்களையும் பெறுகிறோம் - இதற்கு எடுத்துகாட்டு நர்மதா நதி அணைக்கட்டுக்கு எதிரான போராட்டம்.

பிற விலங்குகளிலிருந்து நாம் பெறும் உணவுப்பொருட்களான இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை பெறுவதற்காக அந்த விலங்குகள் எத்தகைய கொடுமையான சூழலில் தங்கள் வாழ்நாளை கழிக்கின்றன என்பது நம் சிற்றறிவுக்கு எட்டினால், ஒரு மனிதப்பிறவியாக இருக்க நாம் நிச்சயமாக வெட்கப்பட்டாக வேண்டும். அந்த விலங்குகள் வாழும் சூழலுடன் ஒப்பிடும்போது, அந்த விலங்குகளை இறைச்சிக்காக நாம் கொல்லும்போது உண்மையில் நாம் அவற்றுக்கு விடுதலை அளிக்கிறோம். இறைச்சிக்காகவும், பாலுக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகள் மிககுறுகிய இடத்தில் மிககுறைவான அசைவுகளுக்கு மட்டுமே சாத்தியமான வகையில் வாழ்நாள் முழுக்கவும் பிணைத்து கட்டப்பட்டிருக்கின்றன. கன்று ஈன்ற பசு அல்லது எருமையிடமிருந்து அதன் கன்று உடனடியாக பிரிக்கப்படுகிறது. ஆம், உயிர்களுக்கு இயற்கை அளித்துள்ள மிக இயல்பான தாய்ப்பாசத்தை கொடுப்பது அந்த பசுக்கள் \ எருமைகளுக்கும், பெறுவது அந்த கன்றுகளுக்கும் அவை பிறந்த உடன் தடை செய்யப்படுகிறது. இதை விட வேறு எந்த கொடுமைகளும் அந்த விலங்குகளுக்கு மனிதனால் இழைக்கப்பட முடியாது. ஆம் பால் என்பது இனிமேலும் சைவ உணவு அல்ல - அசைவ உணவு என்பது விலங்குகளை கொல்வதன் மூலம் பெறுவதாக இருந்தால்! பண்ணைகளில் வளரும் பசு\எருமையிடமிருந்து பால் பெறுவதற்காக அவற்றை கொல்வதை விட மிக அதிகமான கொடுமைகளை அவற்றின் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறோம்

நம் கலாச்சரத்தில் உணவு உண்பதற்கு முன் பிராத்தனை என்பது, உண்மையில் நமக்கு உணவாகும் அல்லது உணவை உருவாக்கி நமக்களித்த அந்த பிற உயிரினங்களுக்கு நாம் தெரிவிக்கும் நன்றியுணர்வே. நம் நுகர்வுக்காக பிற உயிர்கள் அழிவதை நாம் உண்மையில் புரிந்து கொண்டால், அந்த உயிரினங்களுக்கு உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருந்தால், நமக்கு தேவையானவற்றை மட்டுமே நாம் நுகர்வோம். அளவுக்கதிகமான நுகர்வின் மூலம் எதையும், எதனுடைய உயிரையும் உழைப்பையும், வாழ்வையும் வீணாக்க மாட்டோம்.

தற்போதைய உலகில் வழங்கப்படும் பொருளாதார கோட்பாடுகள் நுகர்வெனும் பெரும்பசியின் பசி ஊக்கிகள். அதாவது, மனிதனின் அடிப்படைச்செயல், மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியும் அதைச்சார்ந்த தொழில்களும் என்பதிலிருந்து மாறி மனிதனின் எல்லா நுகர்வுகளுக்குமான உற்பத்தியும் அதை சார்ந்த தொழில்களும் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. ஆம் இந்த பொருளாதார கொள்ளகையில் பொருள் சார்ந்து மனித தன்னிறைவு என்பது இல்லவே இல்லை. அங்கு எப்போதும் நுகரும் பொருள்களின் உற்பத்தி பெருகிக்கொண்டே இருக்கும். இந்த அடிப்படையிலே நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் அது நுகரும் பொருட்களில், ஒவ்வொரு வருஷமும் பல சதவிகிதம் வளர்ச்சி பெற போராடிக்கொண்டிருக்கின்றன. ஆக இங்கு தன்னிறைவு என்பது எப்போதுமே எட்டப்படுவதில்லை. அல்லது மக்கள் தன்னிறைவு அடைந்த உணர்வு வாராதவாறு அரசாங்கங்கள் பார்த்துக்கொள்கின்றன. ஆம் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், வாங்கும் திறன் படைத்தவர்களை மேலும் மேலும் வாங்கி நுகரவோ வீணாக்கவோ அரசாங்கங்கள் அனைத்தும் முழு முனைப்புடன் ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் வாங்கும் திறன் அற்றவர்களை, அவர்கள் அறியாமலே மேலும் சுரண்டுகின்றன. எடுத்துக்காட்டுகள் - சென்னையில் இரண்டு மணி நேரம் மின் வெட்டு, தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் 16 மணி நேரம் மின் வெட்டு. அரசாங்கம் மது பானங்களை மக்களின் மேல் சுமத்தி, அதில் வரும் வருமானத்தால் அதே மக்களுக்கு இலவசங்களை வழங்கி, அவர்களை ஒரு வெளிவரமுடியாத சட்டகத்தினுள் அமர்த்துதல். அரசின் வருவாய்க்காக, கள் போன்ற இயற்கை உணவுகளை தடை செய்து, அவற்றிற்கு மாற்றாக செயற்கை மதுபானங்களை வழங்குதல் - கள் தடை செய்யப்பட்டதன் மூலம் தென்தமிழ் நாட்டின் முக்கியமான ஒரு தொழில் - பனை ஏற்றம், அழியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் ஒரு முக்கியமான இயற்கை உணவான பனை வெல்லத்தை நம் சந்ததியினரால் புத்தகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

இதுவே காந்தியால் முன்வைக்கப்பட்ட ராம ராஜ்யம் தற்போதைய உலக ராஜ்யத்திலிருந்து வேறுபடுகிறது. ராம ராஜ்யத்தில் ஒவ்வொரு சிறு குழுவும், அதனுள் தன்நிறைவு அடைந்திருக்கும். அந்த குழுவின் பிற குழுக்களுடன் சார்ந்திருக்க தேவையில்லை அல்லது மிக குறைந்தபட்ச சார்பு மட்டுமே இருக்கும். இந்த தன்னிறைவு அடைந்த சமுதாயத்தில் வளர்ச்சி என்பது, அனைவருக்கும் அந்த சமுதாயத்தில் உள்ள அனைத்தும் கிடைப்பது என்பதுவரை மட்டுமே.

உலக சமுதாயம் என்பது, உலகம் முழுவதுக்கும் விரிவாக்கப்பட்ட ராமராஜ்யமே. ஆம் இதன் அடிப்படை உலக மக்கள் அனைவருக்கும் உலகில் உள்ள அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இயற்கையின் பரவலாக்கத் தன்மையின் (Distributive) காரணமாக அத்தகைய ஒரு சாத்தியமே இல்லை. அவ்வாறு ஒரு சாத்தியத்துக்காக இயற்கையுடன் போராடினால், நாம் வாழும் சூழலை அழிப்பதை தவிர வேறு எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனித இனத்தின் இருப்பு பெரும் போராட்ங்களுக்கிடையேதான் உறுதி செய்ய முடிந்தது. மனித இனத்தின் பெரும்பகுதி இனக்குழுக்களுக்கிடையேயான போர்கள், பசி, நோய்கள் போன்றவற்றால் அழிந்து கொண்டே இருந்தன. மக்கள் தொகை பெருக்கம் இத்தகைய அழிவுகளால் சமன் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது.  மனித அறிவின் முன்னேற்றத்தால் அந்த அழிவு பெருமளவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மனித அறிவின் முன்னேற்றத்தால் மனித இனம் எப்போதையும் விட தற்காலத்தில் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் அந்த எளிமையாக்குதலின் மூலம் துரதிர்ஷ்டவசமாக இன்னொரு, நாம் எதிர்பார்க்காத, அழிவை நோக்கி நகர்கிறோம் - மக்கள் தொகை சமநிலையை விட அதிகரித்தலும், அதன் விளைவான சூழல் அழிவுகளும்! நமது எளிமையாக்கப்பட்ட மனங்கள் சூழல் அழிவின் காரணமாக நாம் எதிர் கொள்ளப்போகும் பெரும் அழிவை எதிர்கொள்ளும் திறனை பெறுமா? நாம் உண்மையில் விரும்பினால், அந்த அழிவு நம்மை நெருங்காமலே தொலைவில் இருக்க வைக்கலாம் - நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலம், இயற்கையின் தலையீடு இல்லாமல் நாமாகவே சமநிலையை உறுதி செய்வதன் மூலம்! நோயையும், பசியையும், போராட்டங்களையும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலமாக வென்றது போல, அதே அறிவால் மக்கள் தொகை பெருக்கத்தையும், மக்கள் நுகர்வு பெருக்கத்தையும், சூழல் அழிவையும் வெல்வதன் மூலம்!

நம்மை நாமே சமன் செய்வதற்கான அறிவை மனித இனம் தொட தொடங்கிவிட்டது. ஆனால் அது இன்னும் மிகமிக சிறிய அளவிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அறிவு நமக்கு தெரிவிக்கும் கூறுகள் மிக பயங்கரமானவை. அந்த ஒரே காரணத்தால்தான் எல்லா அரசாங்கங்களும் பெயரளவுக்குமேனும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை முன்வைக்கின்றன. சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பறைசாற்றுகின்றன - உண்மை நிலை அந்த அறிவுப்புகளுக்கேற்றாற் போல் இல்லாவிட்டாலும். இத்தகைய கொள்கை முடிவுகள் எல்லா அரசாங்கங்களாலும் அறிவிக்கப்படுவதே சூழலை நம்மால் பாதுகாக்க முடியும் என்னும் அறிவு மனித இனத்தை அடைந்ததால் மட்டுமே. ஆம், மனிதரில் ஒருசிலரால் மட்டும் அடையப்பட்ட அறிவை பெரும்பான்மையானவர்கள் அடைவதால் மட்டுமே காகித அளவில் அறிவுப்புகளாக மட்டும் இருக்கும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை ஆர்வத்துடனும், சூழலை பாதுகாத்து சமன்நிலையை பேணவேண்டும் என்னும் உண்மையான நோக்கத்துடனும் செயல்படுத்த வைக்க முடியும்.

ஆம், நம்மால் சூழலின் சமன்நிலை குலைவை உணர முடிந்தால், அதற்கு ஒற்றை காரணம் நமது நுகர்வு என்பதை உணர முடிந்தால், அந்த உணர்வே நமது நுகரும் தேவைகளை மாற்றியமைக்கும். அந்த மாற்றமே மனித இனம் பெறும் சூழலியல் அறிவின் பரவலாக்கம். அந்த அறிவின் பரவலாக்கம் நம் அரசாங்கங்கள், காகித அளவில் இருக்கும் கொள்கைகளின் செயல் வடிவ மாற்றத்திற்கு ஊக்கிகளாக இருக்கும். இதன்மூலம் நம்மை நாமே சமன் செய்து, நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறுதி செய்வதுடன் மனித இனம் தன்னுள் முழுமை அடைவதுவரை இந்த பூமியில் நிலைத்து இருப்பதற்கான சூழலை உறுதி படுத்த முடியலாம். அவ்வாறே உறுதி படுத்துவோமாக!

[முடிவு]

blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           நுகர்வெனும்பெரும்பசி - 3
                           தேவைக்கேற்ற நுகர்வு:
                                              Commercialismand Consumerism           


Friday, August 30, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 4

நமது நுகர்வு கலாசாரத்தின் அழிக்கும் தன்மையை ஒரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. நுகர்வின் அழிக்கும் சக்திக்கு நாம் ஒவ்வொருவரும் கராணம் என்பதும், இந்த பூமி உயிரினங்கள் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும் என்றால் நாமும் நம் நுகர்வின் தன்மையும் மாறியாக வேண்டும் என்பதும் புரிகிறது. ஆனால் இப்போது அடிப்படையாக எழும் கேள்வி, எனது புரிதலின் மூலம் நான் ஒருவன் நுகர்வுக்கான மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து செல்லலாம். ஆனால் உலகில் மற்றவர்கள் அனைவரும் அதே ஆபத்தான பாதையில் பயணிக்கும்போது என் நுகர்வின் மாற்றுப்பாதையால் என்ன பயன்? ஆபத்தான பாதையில் செல்லும் பெருங்கூட்டத்தால், ஆபத்து அதேவேகத்தில் நெருங்கிக்கொண்டுதானே இருக்கிறது? பெருங்கூட்டத்தினர் இன்னும் ஆபத்தை புரிந்து கொள்ளவில்லையே,, என்ன செய்வது?

 நாம் புரிந்து விட்டோம், மாற்றப்பாதையை தேர்ந்தெடுப்போம். பிறர் நம்மை ஒரு புழுவைப்போல பார்க்கலாம், நம் நோக்கத்தை புரிந்து கொள்ளமல் இருக்கலாம். அது அவர்களின் அறியாமை மட்டுமே - தம்மையும் தம் சந்ததியினரயும் சுற்றத்தாரையும், தாமே கொன்று குவிப்பதை அறியமுடியாத அறியாமை! பாவம் அவர்கள்! அவர்கள் அறியாபமையை குறித்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். ஆனாலும் நம்மை சுற்றி இருப்பவர்களும், சிறிதளவேனும் நுண்ணறிவு உடையவர்களாக இருந்தால், நம் மாற்றுப்பாதை இயக்கத்தால் நிச்சயாமாக தாக்கத்துக்குள்ளாவர்கள். அந்த தாக்கத்தின் அளவு வேறுபட்டாலும், அவர்களும் மாற்றியக்கத்தை தேர்ந்தெடுக்கலாம். எந்த ஒரு சமூக மாற்றமும், ஒரு சிலரில் தோன்றியபின்னரே மக்களின் பெரும்பான்மையினரை அடையும். ஆம், நம்மால் நுகர்வின் இயக்கத்தை மாற்றியமைக்கும் முன்னோடிகளாக நம்மை மாற்றியமைக்க முடியும் - உண்மையில் நாம் நுகர்வு என்னும் பெரும்பசியின் அழிக்கும் திறனை புரிந்து கொள்ள முடிந்தால்!

நாம் எத்தகைய நுகர்வின் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பது? அது நுகர்வு என்னும் பெரும் பசியின் தீவிரத்தை புரிந்துகொள்ளும் நமது இயக்கத்தின் தீவிரத்தை பொறுத்தது. குறைந்த பட்சமாக, தினமும் நமக்கு நாமே நுகர்வின் பெரும்பசியை குறித்து நினைவூட்டிக்கொள்ளலாம். அது நம்மை சிறிய அளவிலான மாற்று சாத்தியங்களை கையாள்வதற்கான மன உறுதியை கொடுக்கலாம். உதாரணமாக நாம் தண்ணீர் குழாயின் முன் இருக்கும்போது, சில பத்தாண்டுகளில் நீரின்றி நம் குழந்தைகள் படும்பாட்டை உணர முடிந்தால், நம் முன் இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து அந்த நேரத்தில் நமக்கு மிகத்தேவையான நீரை விட அதிகமாக ஒரு சொட்டு நீர் கூட நுகரவோ வீணாக்கவோ மாட்டோம்.

நாம் வீட்டில் இருக்கும்போது, யாரும் இல்லாத அறையில் மின் விசிறி அல்லது மின் விளக்கு மின்சாரத்தை வீணாக்கி கொண்டிருப்பதை காணும்போது, அந்த விசிறியை சுற்ற செய்வதற்காக எங்கோ ஒரு காட்டில் மரத்தை அழித்து தோண்டிய நிலக்கரி இன்னொரு இடத்தில் சென்று அங்கு காற்றில் கார்ப்பன் டை ஆக்சைடை செலுத்தி உருவாக்கும் மின் சக்திதான் நம் வீட்டில் யாருக்கும் தேவையின்றி மின்விசிறியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உண்மையிலேயே நாம் புரிந்து கொண்டி,ருந்தால், நாம் எந்த தடையும் மாற்று எண்ணங்களும் இல்லாமல் அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியையோ அல்லது எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கையோ  அணைத்திருப்போம்.

நாம் உண்ணும் உணவு நம் உணவு தட்டில் வருவதற்கு முன் அது எந்த அளவு நீரை குடித்து நம் உணவு தட்டில் இருக்கும் வடிவத்தில் வந்துள்ளது என்பதையும், அந்த உணவு அது உருவாவதற்காகவும், நம் உணவு தட்டுவரை வருவதற்காகவும் எவ்வளவு ஆற்றலை செலவிட்டுள்ளது, அந்த ஆற்றலை பெற எத்தனை கிலோ அல்லது  டன் கரியமல வாயுவை காற்று வெளியில் செலுத்தியிருக்க கூடும் எனபதையும், உலகின் மற்றொரு பகுதியில் காலி உணவுத்தட்டுடன் தங்கள் இருப்பை உறுதி செய்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் உணவுக்கு வழியில்லாத மக்களை குறித்தும் ஒரளவுக்கு நம்மால் கற்பனை செய்ய முடிந்தாலும், நம் உணவுத்தட்டில் இருக்கும் உணவை, அது எத்தகையதாக இருந்தாலும், நாம் வீணாக்க மாட்டோம்.

நமது நுகர்வின் மூலம் நாம் உருவாக்கும் கழிவுகள் இயற்கையின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது, நம் உடலுக்கு எவ்வாறு விஷமாகிறது, நம் வாழ்க்கை தரத்தை இன்னும் சிறிது காலத்தில் எவ்வாறு சீர்குலைக்க போகிறது என்பது நம் அறிவுக்குள் நுழைந்தால், நம் நுகர்வின் தன்மை யாரும் கேட்காமலே மாற்றியமைக்கப்படும் - நமது நுண்ணறிவால்!

இவை போன்றவையே நுகர்வு கலாச்சாரத்தில் நாம் கொண்டுவரும் மாற்றத்தின் முதல் படியாக இருக்க கூடும். ஆம், நாம் அனைவரும் பொருட்களை நுகர்ந்தாக வேண்டும். அந்த நுகர்வின் பாகமாக இருக்கும் வீணாக்குதலை நம்மால் குறைக்க முடிந்தால், நமது நுகர்வு உருவாக்கும் கழிவுகளை மட்டுப்படுத்த முடிந்தால் நாம் நம் எதிர்காலத்தை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க தூரத்தை கடந்திருப்போம். இந்த முதல்படியை நம்மால் எடுத்து வைக்க முடிந்தால், அதற்காக நம்முள் நாம் கொண்டுவரும் விழிப்புணர்வு, அடுத்த படிகளை நாம் தேடாமலே நம்முன் தருவிக்கும். விழிப்புணர்வுடன் வாழ்க்கையை வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை. நம்முன் விரிந்து கிடக்கும் ஆபத்தான நுகர்வு என்னும் பெரும்பசி, சற்று விழிப்புணர்வை நம் வாழ்க்கைக்கு அளிக்குமானால், அது நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கமாகவும் இருக்க கூடும். ஆம் எப்போதும் பெரும் பசியால் மட்டுமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை திரும்ப வைக்க முடியும்!

[மேலும்]

blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           நுகர்வெனும்பெரும்பசி - 3
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism &Consumerism

Friday, August 23, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 3

நம் அனைவரின் அடிப்படை நுகர்வு உணவே ஆகும். இன்று, நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தபின், உணவை தேவைக்கு உண்பதுடன் பொழுதுபோக்கிற்கான கருவியாகவும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். பொழுது போக்கு கருவியாக உணவு மாறும்போது நாம் வீணாக்கும் உணவின் அளவும் அதிகரிக்கிறது. கீழே இருப்பது உணவு குறித்த சிறு புள்ளிவிவரம்.

சுமார் 870 மில்லியன் மக்கள் உலகம் முழுவதுமாக, போதிய உணவு இல்லாமல் இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதத்தை விட அதிகம். ஆனால் அனைவருக்கும் போதுமான அளவு (2720 கலோரி- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபருக்கும்) உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.

நம் உடல் 70% நீரால் ஆனாது. நீர் இன்றி நம் உணவு இல்லை, நாமும் இல்லை. நாம் நுகரும் நீர் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. 1) நேரடி நுகர்வு (Domestic Consumption), 2) மறை நுகர்வு (Virtual Consumption). இதில் மறை நுகர்வு மேலும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 1) நாம் தினம் தோறும் நுகரும் பொருட்களை உருவாக்குவதற்காக செலவிடப்படும் நீர், 2) நாம் உண்ணும் அல்லது வீணாக்கும் உணவை விளைவிப்பதற்கு அல்லது உருவாக்குவதற்கு செலவிடப்படும் நீர். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ உணவு பொருளை உருவாக்க செலவிடப்படும் மறை நீரின் அளவு.

       உணவு பொருள் (ஒரு கிலோ)
நீர் அளவு - லிட்டரில்
 காப்பி கொட்டை
18900
மாட்டிறைச்சி
15400
ஆட்டிறைச்சி
5500
கோழி இறைச்சி
4300
பாலாடை கட்டி
3180
அரிசி
2500
கோதுமை
1830
சர்க்கரை
1780
சோளம்
1220
பால்
1000
ஆப்பிள்
822
                   
வட அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இந்தியா அல்லது சைனாவில் வசிக்கும் ஒருவரை விட 3 மடங்கு அதிக நீரை உபயோகிக்கிறார். மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவர், வட அமெரிக்கர் உபயோகிக்கும் நீரில் கிட்டதட்ட இரண்டு சதவிகித நீரிலேயே தன் வாழ்க்கையை கழிக்கிறார். தற்போதைய ஐரோப்பிய அல்லது வட அமெரிக்க வாழ்க்கை முறை உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டால், பூமியில் தற்போது உள்ளதை விட 3.5 மடங்கு அதிக நன்நீர் (Fresh water) தேவைப்படும். வேறு வார்த்தைகளில் கூறினால், பூமியில் உள்ள மொத்த நன்நீரும் உலகில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் விட குறைவானவர்களுக்கே போதுமானதாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையை நாம் மிக விரைவாக மாற்றியமைக்காவிட்டால் 2025 வது வருடத்தில், இப்போதைய நீர் தேவையின் வளர்ச்சி விகிதத்தில் கணக்கிட்டால், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதுமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில் வசிக்க வேண்டியிருக்கும்.

நமது நுகர்வு, நம்மை வெகு வேகமாக எங்கே அழைத்து செல்கிறது என்பது ஓரளவு தெளிவாகியிருக்கும். மேலும் பார்ப்போம்!

2010 ஆம் ஆண்டு, உலகம் முழுவதிலிருந்தும் 31.8 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு, ஆற்றலுக்காக மட்டும் வெளியிடப்பட்டுளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காற்று வெளியில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, பூமி சூடாவதற்கான முக்கியமான காரணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். 21 ஆம் நூற்றாண்டில், கார்பன் டை ஆக்சைடு வெளியீடு, வருஷத்திற்கு 3.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய பத்தாண்டுகளின் வெளியீட்டு அதிகரிப்பான வருஷத்திற்கு 1% என்பதை விட மிகவும் அதிகமாகும். ஆக நம் நுகர்வு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விபரம் - சுமார் 23% கார்பன் டை ஆக்சைடு வெளியீடுக்கு காரணமான உற்பத்தி செய்யப்பட்ட பொருள், உற்பத்தி செய்த நாட்டிலிருந்து பிற நாடுகளின் நுகர்வுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின் படி சைனா 1.4 GT (Giga Ton) அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு உற்பத்தி செய்த பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 0.3 GT  அளவுக்கான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிற்கான இந்த அளவுகள் 0.25 GT ஏற்றுமதி மற்றும் 0.1 GT இறக்குமதி. ஆனால் அமெரிக்காவிற்கோ 0.5 GT ஏற்றுமதி மற்றும் 1.3 GT இறக்குமதி. ஆக உலகத்தை அழிப்பதற்கு காரணமான நுகர்வு யாரால் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகியிருக்கும்.

நாம் அனைவரும் மின்அணு (Elctronic) பொருட்களின் தீவிர விசிறிகள். ஒரு புதிய செல்பேசி விற்பனைக்கு வந்தால், நமக்கு அது தேவைப்படுகிறதோ இல்லையோ, நம்மைப்பற்றிய  பிம்பத்தை (Image) பிறரிடம் உயர்த்தி பிடிப்பதற்காக அல்லது நம் கற்பனையில் உருவாக்கப்பட்ட பிற காரணங்களுக்காக அந்த புதிய வகை செல்பேசியை வாங்கி, பழையதை குப்பையில் வீசுகிறோம். நாம் உபயோகப்படுத்தும் செல்பேசிகள் 200 முதல் 300 கிராம் வரை இருக்கலாம். இதனை உருவாக்க சுமார் 112 கிலோ CO2 காற்றுமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இது தவிர அந்த செல்பேசி, அது உருவான இடத்திலிருந்து நம்மை வந்து அடைவதக்கு முன் அது எடுத்துக்கொள்ளும் சக்தி மற்றும் அதன் உருவாக்கத்திற்கும், நம்மை வந்து அடைவதற்கும் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவையும் நம்மால் ஓரளவு கற்பனை செய்து கொள்ள முடியலாம். ஆக, நம் பிம்பத்தை தக்கவைத்து கொள்வதற்காக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டிய நம் சூழலை தொடர்ந்து அழித்து கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் விரும்பினால், இதைப்போல நம் பிம்பத்தை உயர்த்திபிடிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும், அது எத்தகைய முக்கியத்துவத்தை உடையதாக அல்லது இல்லாததாக இருந்தாலும், நமது சூழலில் அது ஏற்படுத்தும் விளைவுகளை நம்மால் கற்பனை செய்ய முடிந்தால், நம் பிம்பத்தை விட நமது மற்றும் நம் சந்ததியினரின் வாழ்க்கையே முக்கியம் என்னும் முடிவுக்கு வர முடியலாம். அத்தகைய முடிவுக்கு நம்மால் வர முடிந்தால், நம் வாழ்க்கையும் மிக எளிமையானதாக மாறிவிடும்.

ஆம் பிரச்சினையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நம்மல் என்ன செய்ய முடியும். அரசாங்கங்கள்தான் கொள்கை முடிவுகளை எடுத்து, மிக கவனமாக இதற்கு பரிகாரம் தேடவேண்டும் என நினைத்து நாம் செயல்படாமல் இருந்தால், அது நம் கையாலாகாதனம் மட்டுமே. வாழ்வில் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் நம் தயக்கம் மட்டுமே. ஏனெனில் அரசாங்கம் என்பது நம்மைப்போன்றவர்களால் நடத்தப்படும் அமைப்பு. நாம் மாறாமல், அவர்கள் மட்டும் நாம் எண்ணுவதை அவர்களாகவே புரிந்து கொண்டு இயங்க வேண்டும் என நினைத்தால், சிறுபிள்ளைத்தனமான நினைப்புக்கும், நமது இந்த நினைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லது நாமே நம் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றி அமைக்கவேண்டும், நம் நுகர்வை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டும் என்னும் சிபாரிசுகளை முன் வைத்தால், அவற்றாலும் எந்த பயனும் இல்லை.

எனில் நாம் என்னதான் செய்வது. இந்தப்பிரச்சினையை அறிவ பூர்வமாக, நுண்ணறிவுபூர்வமாக அணுகுதலே சாத்தியமான தீர்வுகளை உருவாக்கும். அதாவது, நுகர்வு என்னும் பிரச்சினையின் முழு வடிவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு புரிந்து கொள்வது என்பது வெறும் எண்ணங்களால், தர்க்கரீதியாக நிறுவுவது மட்டுமில்லை. அதற்கும் மேலே செயல்படுவது. உதாரணமாக நாம் அலுவலகத்திலிருந்து தினமும் வீடு செல்லும் பாதையில் அந்த குறிப்பிட்ட நாளில் ஆபத்து இருப்பதாக புரிந்து கொண்டால், வெறும் தர்க்கபூர்வமாக, ஆம் ஆபத்து உள்ளது என்று கூறிக்கொண்டு, அதே பாதையில் சென்று கொண்டிருக்க மாட்டோம். மாற்றுப்பாதையை நம் அறிவால் அறிந்து அந்த மாற்றுப்பாதையில் வீடு சென்று சேர்வோம். தற்போதைய நம் நுகர்வு பாதையில் ஆபத்து உள்ளது என உண்மையில் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால், எவரும் கூறாமலே நமது தனிப்பட்ட நுகர்வுக்கான மாற்று பாதைகளை ஆராய தொடங்குவோம்.

[மேலும்]
blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           தேவைக்கேற்றநுகர்வு

                           Commercialism &Consumerism