உலகத்தின் எல்லா நாடுகளின்
தலைமைகளுக்கும் எந்த காலத்திற்குமான ஒரே நோக்கம் பொருளாதார முன்னேற்றம். பொருளாதார
முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும், குடிமக்களின் சுபிட்சமும் அடையப்படுவது அரசுகளின்
இறுதி நோக்கமாக இருக்கலாம். ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும் குடிமக்கள்
சுபிட்சமும் உண்மையிலேயே அடையப்படுகிறதா என்பது சந்தேகத்திற்கிடமானதே.
பொருளாதாரம் என்பது பொருட்களின்
சுற்றோட்டமும் (Circulation), அதன் மூலம் அல்லது காரணமாக நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும்
ஆகும். அல்லது பொருளாதாரம் என்பது குடிமக்களிடம் நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும்
அதன் மூலம் நிகழும் நுகர்வுமே. ஆம், பொருட்கள் நுகரப்படுவதற்காகவே சுற்றோட்டத்தில்
விடப்படுகிறது. பணத்தின் மூலம் குடிமக்களால் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பின் நுகரப்படுகிறது.
உலகத்தில் நிகழும் மொத்த
உற்பத்தி, நிகழும் மொத்த நுகர்வுக்கு சற்றேறக்குறைய சமமாகவே இருக்கும். உற்பத்தி நுகர்வை
விட அதிகமாக இருந்தால் தேக்கநிலையும், குறைவாக இருந்தால் பற்றாகுறையும் ஏற்படும். அந்த
தேக்கநிலை அல்லது பற்றாகுறைக்கு ஏற்றவகையில் பொருட்களின் உற்பத்தி விகிதம் மாற்றியமைக்கப்படும்.
இதன்மூலம் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான சமன்நிலை பேணப்படும்.
ஆனால் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான
சமநிலை தவறுதல், மாறும் இயற்கை காரணிகளை பொறுத்து இருக்கும்போது, உற்பத்தி விகிதத்தை
மாற்றியமைத்தல் நிகழாமல் இருக்கலாம். உதாரணமாக விவசாய உற்பத்தி. விவசாயத்திற்கு தேவையான
நீர் வளம் மற்றும் மண்வளம், ஒரு குறிப்பிட்ட வரம்பை உடையது. அந்த வரம்பிற்கு மேல் நீர்
வளத்தையோ அல்லது மண்வளத்தையோ அதிகரிக்கும் மனிதனின் முயற்சிகள் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம். எனவே விவசாய பொருட்களின் நுகர்வும் அந்த
வரம்பிற்குட்பட்டே இருக்கும். ஆனால் விவசாய பொருட்களின் நுகர்வு, மக்கள் தொகை பெருக்கம்
போன்ற காரணிகளால் அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதிகரித்தாக வேண்டும். முன்பே கூறியபடி,
அந்த உற்பத்தி அதிகரிப்பு, தவிர்க்க முடியாத எதிர் விளைவுகளுடன் மட்டுமே அடைய முடியும்.
ஆக உலக நாடுகளின் தலைமைகள், அவை உண்மையிலேயே குடிமக்களின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும்
உத்தேசித்திருந்தால், நுகர்வு உற்பத்தியின் வரம்புகளிலிருந்து வெளியேறாத படி குடிமக்களின்
இயல்பை அமைத்திருக்க வேண்டும். இன்னும் கூறப்போனால், பொறுப்புணர்வுள்ள எந்த குடிமக்களும்,
தங்கள் நுகர்வு தத்தமது அத்தியாவசிய தேவை மற்றும் பண உற்பத்தியின் அளவை கடக்காமலும்,
உபரி பணம் இருந்தால் தங்கள் நுகர்வு தத்தமது தேவை மற்றும் தத்தமது நாடு மற்றும் உலகின்
உற்பத்தி நுகர்வு சமநிலையை குலைக்காதவாறும் அமைத்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
முன்பே கூறியபடி, எல்லா
நாடுகளின் ஆட்சியாளர்களும் தமது நாட்டின் பொருளாதாரத்தையை முழுமுதல் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.(ஒரு
சில ஆட்சியாளர்களை தவிர்த்து - அவர்களுக்கு தத்தமது சொந்த பொருளாதாரமே குறிக்கோள்)
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அதன் மொத்த உற்பத்தியால் (GDP) குறிக்கப்படுகிறது.
எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்
அதிகரிப்பதற்கான முயற்சியில் இடைவிடாது ஈடுபடுகின்றன - தங்களால் முடியாவிட்டால் பிற
நாடுகளை சுரண்டுவதன் மூலம்! அதாவது அவை எந்த அளவுக்கு தங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிக்க
விழைகிறார்களோ அந்த அளவுக்கு தங்கள் நாட்டின் அல்லது உலகின் மற்ற பகுதியில் அவர்கள்
உற்பத்தி பொருட்களுக்கான நுகர்வு அதிகரித்தாக வேண்டும்.
எந்த ஒரு பொருளின் உற்பத்தியும்
இயற்கையில் நம் பூமியில் உள்ளவற்றை, அவை மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் வகையில்
மாற்றியமைப்பதன் மூலமே நிகழ்கிறது. அதாவது நம் நுகர்வுக்கான எல்லா பொருள்களும் இயற்கையில்
உள்ளவற்றை மாற்றியமைப்பதன் மூலமே பெறப்படுகிறது. எவையும் ஒன்றுமின்மையிலிருந்து பெறப்படுவதில்லை.
இங்கு நாம் இரண்டு விளைவுகளை ஆராய்ந்தாக வேண்டும். முதலாவதாக மாற்றியமைக்கப்பட்டு புதிதாக
உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது. இரண்டாவது,
புதிதாக உற்பத்திசெய்யப்பட்டுள்ள பொருள் அது உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் அல்லது
மூலப்பொருள் இன்னொன்றாக மாற்றியமைக்கப்படுவதன் மூலம் மனித இனத்துக்கும் பூமியில் வாழும்
மற்ற உயிரினங்களுக்குமான வாழ்க்கை சூழலின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது என்பது.
மேலே கூறப்பட்ட இரண்டு விளைவுகளும்,
ஒரு பொருளை நுகர்வதற்கு முன் ஆராயப்பட்டாக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது விளைவை
நம்மில் எவரும், நம் சொந்த நுகர்வுடன் துளி கூட தொடர்புபடுத்தி காண்பதில்லை.
உலகமெங்கும், அடிப்படை தேவைகளுக்கான
நுகர்வு சாதனங்களை பெற இயலாத மக்கள் பல்வேறு விகிதாச்சாரங்களில் இன்னும் உள்ளனர். இருந்தாலும்
பெரும்பாலான நாடுகளில், முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவாக, உலக மொத்த
உற்பத்தியை (World GDP) அதிகரிக்கும் படியாக நுகர்வு உருவாக்கப்படுகிறது. ஆம், உண்மையில்
பொருட்கள் நுகரப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், தங்கள் பொருளாதரத்தை உயர்த்துவதற்காக
உலக மக்களை நுகர கட்டாயப்படுத்துகின்றன - பெரும்பாலும் மறைமுக அழுத்தத்தை அளிப்பதன்
மூலம். இந்த மறைமுக அழுத்தம் சலுகைகள் என்ற பெயரில் கூட இருக்கலாம். உதாரணமாக அமெரிக்காவில்
தற்போது புழக்கத்தில் இருக்கும் Quantitative Easing எனப்படும் பணப்புழக்கத்திற்கான
ஏற்பாடு - ஒரு பெரும் நாடு, அதன் பொருளாதார தேக்க நிலையிலிருந்து வெளிப்படுவதற்காக,
மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய எளிதான வட்டியில்லாத கடன் அளித்தல்.
ஆம் குடிமக்களை அளவில்லாமல் நுகருங்கள் என கொடுக்கும், ஆட்சியாளர்களின் மறைமுக அழுத்தம்!
உண்மையில் பொருளாதாரம் என்பது,
இயற்கை பொருட்களை உள்ளவாறோ அல்லது உருவமாற்றத்திற்கு உட்படுத்தியோ மனிதனின் நுகர்வுக்கு
உட்படுத்தும் இயக்கமே ஆகும். அந்த இயக்கம் பணம் என்னும் பொருளால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஆக பொருளாதார முன்னேற்றம் எனப்படுவது, இயற்கையை எந்த அளவுக்கு மனிதன் பயன்படுத்தும்
பொருள்களாக மாற்றப்படுகிறது என்பதே. வேறு வார்த்தைகளில் கூறினால் இயற்கை மனிதனால் நுகரப்படும்
அளவே உலகத்தின் உற்பத்தி திறன் எனப்படுகிறது.
உலகம் முழுவதும் பொருளாதார
மேதைகள் இயற்கையை நுகரும் வழிகளை குடிமக்கள் மேல் அழுத்தும்போது, இயற்கையின் மறுஉற்பத்தி
திறனைப்பற்றிய எவ்வித கவலையும் அல்லது அறிதலும் இல்லாமல், மனித இனத்தின் அழிவுக்கே
அடிகோலுகிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பொருளாதார மேதைகளின் அழுத்தத்தால்,
சாதாரண மனிதர்களாகிய நாமும் நம் பொருளாதார தகுதிக்கு அப்பாற்பட்ட நுகர்வுக்காக அலைபாய்கிறோம்
- நம் நுகர்வின் மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கான அடிப்படை நுகர்வு சாதனங்களையும்
இல்லாமல் செய்கிறோம் என்னும் பிரக்ஞ்சையே இல்லாமல்!
இயற்கை தன்னைத்தானே மறுஉற்பத்தி
செய்யும் இயல்புடையது - அதன் சமன் நிலையை குலைக்காதவரை. ஆனால் இன்றைய நம் நுகர்வின்
தன்மையையும், அந்நுகர்வுக்கு பூமியின் எதிர்வினைகளையையும் காணும்போது அந்த சமன் நிலை
குலைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக இன்றைய விவசாய முறைகளால், சிறு உயிரினங்களின்
சமன்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மறுஉற்பத்தி அந்த இயற்கையில் வாழும்
உயிரினங்களாலே நடைபெறுகிறது. உயிரினங்களின் சமன் நிலை குலையும்போது இயற்கையின் மறு
உற்பத்தியும் குலைகிறது. இயற்கை மறுஉற்பத்தி செய்யாமல் இருந்தால், நம் சந்ததியினரின்
அடிப்படை நுகர்வு சாதனங்கள் இயற்கையில் இல்லாமல் போகலாம். அந்த நிலைமையில் நம் வருங்கால
சந்ததியினர் உயிர் வாழ்வதற்கான சாத்தியம், அவர்கள் எவ்வாறு பரிணாம மாற்றம் அடைந்து,
இயற்கையில் அவர்கள் காலத்தில் உள்ள பொருள்களை நுகர தக்கவர்களாக மாறுகிறார்கள் என்பதை
பொறுத்தே உள்ளது. ஆனால் பரிணாம மாற்றம் குறைந்த காலத்தில், ஒரு சில தலைமுறைகளில் ஏற்பட
வாய்ப்பில்லை. எனவே நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழ்வார்களா இல்லையா என்பது, நமது
நுகர்வின் தன்மையை பொறுத்தே உள்ளது.
தற்போது உலகின் பெரும்பான்மையான
நாடுகள் ஜனநாயக நாடுகளே. அந்நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் நாட்டு மக்களின் சரசரி
விருப்பத்தையே பிரதிபலிப்பார்கள். எனவே நாம் ஒவ்வொருவரும், நம் சந்ததியினரின் அழிவிற்கு
அல்லது வாழ்விற்கு சம அளவு பொறுப்படையவர்கள். குறுகிய சுயநல நோக்குள்ளவர்களுக்கு அதிகாரத்தை
அளிப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் மனித இன அழிவிற்கு நம் பங்கை அளிக்கிறோம். உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சி பொறுப்பிற்கு உண்மையான அறிவுஜீவிகளை அனுப்புவதன்
மூலம், பொருளாதாரத்தை மக்களின் உண்மையான சுபிட்சத்தோடு அணுகும் ஆட்சியாளர்களை நம்மால்
பெற இயலலாம். அவ்வாறு பெற முடிந்தால், நாம் ஆசியளிக்கப்பட்டவர்கள்.
ஆன்மீக ரீதியிலும் நம் தனிப்பட்ட
நுகர்வின் தன்மை ஆதிக்கம் செலுத்தலாம். வாழ்க்கை என்பது ஒயாத நுகர்வு. ஆனால் வாழ்க்கையே
நுகர்வு என்பதற்கும் நுகர்வே வாழ்க்கை எனபதற்கும் இடையில் அளவிட முடியாத இடைவெளி உள்ளது.
வாழ்க்கையே நுகர்வு என்பதில், நம் வாழ்க்கையை வாழும்போது, அந்தந்த நேரத்தில் வாழ்க்கையின்
இயக்கத்திற்கு எத்தகைய நுகர்வு தேவைப்படுகிறதோ, அதை மட்டும் நுகர்வோம். ஆனால் நுகர்வே
வாழ்க்கையாகும்போது, நம் வாழ்க்கையை சுற்றுபுறத்தில் உள்ள பொருள்களுக்காக மாற்றியமைக்க
முயற்சிப்போம். நம் உண்மையான தேவைகளை புறந்தள்ளி, மன மயக்கம் நம் தேவைகள் எவை என கூறுகின்றதோ
அவற்றைமட்டும் நுகர ஓயாத முயற்சி செய்துகொண்டிருப்போம்.
தனிப்பட்ட வகையில், இன்று,
நம்மில் பெரும்பான்மையானவர்களின் நுகர்வுக்கும், அவர்கள் தேவைகளுக்கும் எவ்வித தொடர்பும்
இல்லை. நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும், சுற்றி இருப்பவர்களிடம்
நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே நம் நுகர்வு இன்றையநிலையில் உள்ளது. இன்னும் ஆழமாக
நோக்கினால், சுற்றி இருப்பவர்கள் நாம் என்ன நுகர வேண்டும் என விரும்புவதை நாம் நுகர்ந்து
கொண்டிருப்பதை விட, சுற்றி இருப்பவர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் மன பிம்பங்களின்
விருப்பங்களுக்கேற்பவும, அந்த மன பிம்பங்களிடம் நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே
நாம் இன்று இயற்கையை இத்தகைய வெறியுடன் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நுகர்வில்
நம் வாழ்க்கையை முற்றிலும் மறந்தும் விட்டிருக்கிறோம். அத்துடன், இவ்வுலகை நம் சந்நததியினருக்கு
விட்டு செல்ல வேண்டும் என்பதையும் மறந்து விட்டோம்.
அதிர்ஷ்டவசமாக, இங்கொன்றும்
அங்கொன்றுமாக கட்டுபாடுகளற்ற நுகர்வை குறித்த விழிப்புணர்வு குரல்கள் உரக்க ஒலிக்கின்றன.
அக்குரல்களின் தன்மை, அவை இன்னும் பெருகும் என்பதையும் சுட்டுகின்றன! இயற்கையிலிருந்து
நமக்கு தேவையானவற்றை மட்டும் நுகர்வோம்! இயற்கையை மறுஉற்பத்தி செய்ய அனுமதிப்போம்!
நம் சந்ததியினர், இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்து, மனித உயிரினத்தின் உச்சத்தை அடைய
வாழ்த்துவோம்! ஆம், அவ்வாறே ஆகட்டும்!
தொடர்புடைய பதிவுகள்
blog.change@gmail.com
No comments:
Post a Comment