இன்று படிக்க நேர்ந்த இரண்டு
பதிவுகள், அரசியல் அதிகாரம் சுதந்திரம் சுற்று சூழல் கல்வி சூழல் ஆகியவற்றை பற்றிய
எண்ணங்களை மனதில் அசைபோட தூண்டியது. இதில் ஒன்று THE REAL POLITICS என்னும் இந்த பதிவு. இதை
எழுதியவர் Donnachada McCarthy என்பவர். இவர் பிரிட்டனின் Liberal Democrats என்னும்
கட்சியின் முன்னாள் துணை தலைவர். இவர் தற்போது சுற்றுசூழல் குறித்த தன்னார்வ இயக்கங்களில்
இருக்கிறார். கீழே கொடுத்திருப்பது, அவரின் பதிவிலிருந்து சில கருத்துகள்.
நாம் தற்போது ஜனநாயகம் என
கொண்டாடுவது உண்மையில் ஜனநாயகம் இல்லை. நாம் வாழ்வது ஜனநாயகத்தின் பண்புகளை கொண்ட ஜனநாயகத்தில்
அல்ல. இது ஒரு ஊழல் ஜனநாயகம். ஏன் இதை ஊழல் ஜனநாகம் என கூறுகிறார் என்பதை அவர் துணைதலைவராக
இருந்த கட்சியின் நிகழ்வுகளை கொண்டே விளக்கியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் உள்ளிருப்பவராக,
அதன் இயங்கு விதிகளை அறிந்தவராக, பிரிட்டனில் உள்ள மூன்று முக்கிய கட்சிகளிலும் இதுவே
நிலைமை என்பதை விளக்குகிறார். இன்றைய ஜனநாயகம் பெருநிறுவனங்களின் அரசியல் ஆதாயம் திரட்டுபவர்களால்
(Corporate Lobyist) வழி நடத்தப்படுகிறது.
இன்றைய கல்வித்துறை, தொடக்க
நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைவரை, உண்மையில் கல்வியாளர்களால் நடத்தப்படவில்லை. அனைத்து நிலைகளிலும் எவ்வாறு கல்வி நடைபெறவேண்டும்
என்பது பெருநிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. அதாவது வருங்கால கலவியாளர்களின்
சுயஅறிவு முற்றிலும் பெருநிறுவனங்களால் அழிக்கப்பட்டு, அவர்களின் சிந்தனையின் அடிப்படை
அவற்றின் வியாபார நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகிறது. இதன் அர்த்தம், எதிர்காலத்தில்
சுயஅறிவுடன் இருக்கும் எந்த அறிவுஜீவிகளும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். இதன் விளைவை
என்னை இன்று பாதித்த இரண்டாவது பதிவு விளக்குகிறது.
அடுத்ததாக வரி புகலிடம்(Tax Haven). இந்த வரிபுகலிடம்
என்னும் வரிஏய்ப்பு வாய்ப்பை உபயோகப்படுத்தும் நிலையில் உள்ள பெருநிறுவனங்கள்அனைத்தும்
எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பெருந்தொகையை கப்பமாக செலுத்துகின்றன். இதன் மூலம் வரிஏய்ப்பு
செய்ய உதவும் எல்லா வாய்ப்புகளையும் சட்டபூர்வமானதாக இருக்க வைக்கின்றன.
இறுதியாக பெருநிறுவனங்களால்
கைப்பற்றப்பட்ட ஊடகங்கள். பிரிட்டனில் மிகப்பெரும்பான்மையான ஊடகங்கள், மற்ற தொழில்களில்
பெருமளவு அக்கறையுள்ள பெருநிறுவனங்களால் நடத்தப்படுகிறது. எனவே இயற்கையாகவே எல்ல ஊடகங்களும்
அவற்றின் உரிமையாளர்களின் சுயலாப (ஊடக தொழிலில் பெறும் இலாபம் அல்ல, ஊடகத்தின் மூலம்
நிறுவனங்களின் முக்கிய தொழில்களின் இலாபங்கள்) நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகிறது.
இவர் இந்த பதிவில் கூறியிருப்பது பிரிட்டனின் ஜனநாயகத்தை பற்றியே. இதுவே உலகம் முழுவதும்
உள்ள ஜனநாயகங்களின், சற்றேறக்குறைய, உள்ள நிலைமை என்பது வெளிப்படை.
இரண்டாவதாக என்னைப்பாதித்த
பதிவு, ஜெயமோகன் அவர்களின் 'ஜோ - சில வினாக்கள்'.
இந்த பதிவில், இந்த வருடத்திய சாகித்தய அகாதமி பரிசுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்
அவர்கள், வெளிப்படையாக இந்திய பிரதம வேட்பாளர் நரேந்திரமோடியை ஆதரித்ததால், இந்திய
அறிவுலகத்திலிருந்து அவர் பெறும் எதிர்வினைகளை குறித்தது. அதாவது, இந்திய அறிவியக்கம்
எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைபாடு சார்ந்து மட்டுமே இயங்குகிறது என்பதையும், எந்த மாற்று
கருத்துகளையும் அது எவ்வாறு நசுக்குகிறது என்பதையும், மிக விரிவாக, தணியாத ஆற்றாமையுடன்
வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவின் உச்சமாக நான்
நினைப்பது, சாகித்ய அகாதமி விருது தேர்வுகுழுவில் இருந்த ஒருவர், ஜோ.டி.குரூஸ் அவர்களின்
அரசியல் நிலைபாடு முன்பே தெரிந்திருந்தால், அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்க
மாட்டாது என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பதை பற்றியது. அதாவது நமது அறிவு இயக்கத்தில்,
அவரின் அரசியல் நிலைபாடே அவர் தகுதியை நிர்ணயிக்கிறது.
ஜோ.டி.குரூஸ் அவர்களின்
முந்தைய நாவலான 'ஆழிசூழ் உலகு' என்னும் நாவல் (இந்த நாவலை ஒரு முறைக்கு மேல் படித்திருக்கிறேன்,
நான் முழு ஆர்வத்துடன் படித்த நாவல்களில் ஒன்று) இன்னொரு மொழியில் வெளியிடவேண்டி மொழியாக்கம்
செய்யப்பட்டு, தற்போது அவரது அரசியல் நிலைபாட்டின் காரணமாக, அந்த வாய்ப்பு அவருக்கு
மறுக்கப்பட்டுள்ளது. நம் இந்திய அறிவியக்கம் உண்மையில் எங்கே இருக்கிறது? உண்மையில்
இங்கு அறிவியக்கம் என ஒன்று உள்ளதா?
இந்த ஜனநாயகத்தின் அங்கத்தினர்களாக
வாழும், கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்ளும், நாம் எவ்வாறு இவற்றை எதிர்கொள்வது.
எப்போதும் போல அரசாள்பவர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருநிறுவனங்களின் லாபநோக்கையும்
குறை கூறிவிட்டு, மிக எளிதாக, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இந்த அவலங்களை கடந்து
செல்லலாம். சற்று சிந்திப்பவர்களாக இருந்தால், தத்துவங்களை நமக்கு துணையாக அழைத்து,
சற்று கடினத்துடன் கடந்து செல்லலாம். நாம் பிறந்தது முதல் இதுவே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.
நாம் தான் உண்மையிலேயே கற்றவர்கள்! - இந்த சூறையாடப்பட்ட கல்வி முறையின், சூறையாடப்பட்ட
ஊடகங்களின் துணைகொண்டு!
மேலை கூறப்பட்ட வழிகளில்,
இந்த பிரச்சினையை நம்மால் கடந்து செல்ல முடியாவிட்டால், இவற்றை எதிர்கொள்ள நாம் செயலாற்றலாம்.
அந்த செயல், உண்மையில் நாம் அத்தகைய செயலாற்ற விரும்பினால், அவற்றை கடந்து செல்வதை
விட எளிதானதாக கூட இருக்கலாம். ஆம் நாம் செய்யவேண்டியதெல்லாம் நம் அறிவை மறுபரிசீலனை
செய்வதைதான். நம் அறிவின் உண்மை தன்மையை, அல்லது நாம் பெற்றிருக்கும் அறிவு உண்மையுடன்
உள்ள தூரம் என்பதைதான். நம் அறிவு என நாம் கொண்டாடுவது நாம் கொண்டிருக்கும் முன்முடிவுகளையே.
நாம் ஆராய வேண்டியது அந்த முன்முடிவுகளையும், அவற்றின் காரணங்களையும்.
ஒருவேளை குறைந்த பட்ச நேர்மையுடன்
நம்மை மறுபரிசீலனை செய்ய முடிந்தால், இந்த பிரச்சினைகளுக்கு நாம் எவ்வாறு செயலாற்ற
முடியலாம் என்பது புலப்படலாம். அது, செயலாற்றாமல், இவற்றை கடந்து செல்வதை விட எளிதானதாகவோ
அல்லது கடினமாகவோ இருக்கலாம் - நாம் அடையும் சுயபரிசோதனையின் முடிவையும், நம் இயல்பையும்
பொறுத்து! பொது தேர்தல் நடைபெறும் இந்த காலகட்டம், இத்தகைய மறுபரீசலனைக்கு ஏற்ற காலம்
என்பதே என் கருத்து.
blog.change@gmail.com
No comments:
Post a Comment