Sunday, September 15, 2013

காமத்தின் ஒரு முகம்

காமம் என்னும் சமஸ்கிருத வார்த்தை, மனிதனின் எல்லா விதமான ஆசைகளையும் விருப்பங்களையும் சேர்த்து குறிக்கும் பொருளுடையது. அந்த விரிவான பொருளை கொண்டால், மனிதனின் எல்லா விதமான இயக்கங்களும் உலகியல் இயக்கத்தில் வெளிப்படுவதற்கு ஆதாரம் காமம். மனிதனின் அடிப்படை அல்லது மூலாதார சக்தி, காமத்தின் விளைவாக இச்சா சக்தியாக உருமாறி உலகியல் இயக்கமாக மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. ஆம், ஒரு சமூகம் இயங்குவதற்கு அடிப்படை சக்தி அந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் இச்சா சக்தியே. இச்சா சக்தி அந்த சமூகத்திலிருந்து வெளிப்படும் தன்மைக்கேற்ப, அந்த குறிப்பிட்ட சமூகத்தின் இயல்பு அமைந்திருக்கும்.

பொது தளத்தில், காமம் என்னும் சொல் உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக புழங்குகிறது. இந்த அர்த்தத்தில், காமம் என்பது ஒரு சமநிலையுடன் அனுகப்படவேண்டிய இயக்கம். தனிமனித அளவில் காமத்தின் சமநிலை தவறும்போது, அந்த தனிமனிதனையும் அந்த மனித உயிரின் காமத்தின் திசையில் அகப்படுபவரையும் பாதிக்கும் உடல் இச்சையாக வடிவம் பெறுகிறது. அதே காமம், சமூக அளவில் சமநிலை இழக்கும்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிநிலைக்கு கொண்டு செல்லும். அதுவே நம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் காமத்தின் சமநிலை குலைவால் வீணடிக்கப்பட்ட மற்றும் தவறான திசையில் செலுத்தப்பட்ட இச்சா சக்தி, ஒரு இளம் பெண்ணின் உடலை கொடூரமாக வேட்டையாடி அவர் உயிரை பறித்ததுடன், அந்த சக்தியின் சமநிலை இழந்த ஒருவரை தற்கொலை செய்ய வைத்து, மேலும் நான்குபேருக்கு தூக்கு தண்டனையைம் வழங்கியுள்ளது. இந்த தண்டனையை மொத்த சமூகமும் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, அந்த சமூகம் இது தனிமனித இச்சா சக்தியின் தவறான இயக்கம் மட்டும் அல்ல, சமூக இச்சா சக்தியின் தவறாக வழிநடத்தப்பட்ட இயக்கமும்தான் என்பதை மிக கவனமாக சமூகம் மறந்து விடுகிறது. சமூகத்தின் ஒரு மூலையிலிருந்து கூட, ஒரு தீனமான குரல் கூட, ஒரு சில அர்த்தமில்லாத கூச்சல்களை தவிர, சமூகத்தின் இந்த அவலத்திற்கான காரணத்தை நோக்கி எழும்பவில்லை என்பதை காணும்போது, சமூகத்தின் மொத்த இச்சா சக்தியும் திசைமாறி, அழிவு சக்தியாக மாற்றமெடுக்கும் சாத்தியத்தை மறுக்க வழியில்லை.

மேலே கூறப்பட்டது, செய்யப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்தவோ அல்லது கொடுக்கப்பட்ட தண்டனையை குறைகூறுவதற்காகவோ அல்ல. சமூகம் நிலைத்திருக்க வேண்டுமானால், அந்த சமூகத்தின் இயக்க விதியை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இங்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அந்த நான்குபேர் மட்டுமா என்பது, இந்த தண்டனையை கொண்டாடும் ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பியாக வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத கேள்வி - இந்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்தவர்களாக இருந்தால்!. ஆம், இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும், குற்றத்தை இழைத்தவர்களும் நம் குழந்தைகளே\சகோதரியே\சகோதரர்களே, நம் சமூகத்தின் குழந்தைகளே. அவர்கள் இழைத்த குற்றத்துக்காக அவர்களை தண்டிக்கலாம், ஆனாலும் அவர்கள் நம் சமூகத்தின் குழந்தைகள் என்பதிலிருந்து விலக்க முடியாது. அவ்வாறு நம்மால் விலக்க முடிந்தால், அதன் பின் நம்மை நாமே ஒரு மனிதப்பிறவி என கூறிக்கொள்ள நம்மால் முடியாது.

மனிதனின் இச்சா சக்தியின் இயங்கு விதிகளை தர்க்கத்தால் வரையறை செய்ய (Define) முடியும் என்று தோன்றவில்லை. எனினும் மிகவும் கூர்ந்த அவதானிப்பு மற்றும் உளவியல் வரையறைகளுக்கு உட்பட்டு, தனிமனித ஆசைகளும் விருப்பங்களும் சமூக இயக்கங்களாலே வடிவமைக்கப்படுகிறது எனக்கூறலாம். கூர்ந்து கவனித்தால், சமூக காரணங்களுக்கும் தூண்டுதல்களுக்கும் அப்பாற்பட்டு மனிதனின் அடிப்படை இயல்பு அமைந்துள்ளதை உணரலாம். ஆனால் அந்த இயல்பு குறித்த எந்த முடிவுக்கும் நம் தற்போதைய அறிவு நிலையில் நம்மால் வர இயலாமல் போகலாம். எனினும் அந்த அடிப்படை இயல்பு, அழிவு சக்தியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த ஊகத்தின் அடிப்படையில், தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளை முடிவு செய்வது சமூக காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு கூறுவது, ஒவ்வொரு தனிமனித தவறுகளுக்கும் சமூகத்தை பொறுப்பாக்குவது என்பது நோக்கமல்ல.

நம் உளவியல் இயல்பை தீர்மானிப்பது, நாம் அறிந்தவையும் அறிந்தவற்றின் மூலம் அடையும் முன்முடிவுகளுமே. நாம் அறிபவை பெரும்பாலும் நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வழியாகவே நம்மை அடைகிறது. ஆக பெரும்பாலும் நம் ஆதார சக்தியை இச்சா சக்தியாக மாற்றுவது சமூகத்திலிருந்து நம் அறிவுக்கு வந்து சேர்பவை. அந்த இச்சா சக்தியின் திசையை தீர்மானிப்பவை நாம் அடைந்துள்ள முன்முடிவுகள் மற்றும் நம் மேல் திணிக்கப்படும் முன் முடிவுகள். ஆக சமூகம் நம் ஆசைகளையும் விருப்பங்களையும் உருவாக்குவதுவரை இருப்பது மிக இயல்பானது. ஆனால் அந்த சமூகம் அதீத ஆசைகளையும் விருப்பங்களையும் நம்மேல் சுமத்துவதன் மூலம், சில முன்முடிவகளையும் நம்மைஅறியாமலே நமக்குள் ஏற்றுகிறது. அந்த நிலையில் நம் இச்சா சக்தியின் திசையையும் சமூகமே தீர்மானிக்கிறது.

இச்சா சக்தியாக மாற்றப்பட்ட நம் மூல சக்தி, செயல்களாக வெளிப்பட்டாக வேண்டும். அவ்வாறு செயல் வடிவம் பெறாத ஆசைகள், நம் மனதின் ஆழத்தில் புதைந்து, அழுத்தம் செலுத்தினால் வெடிக்கும் கண்ணிவெடியாக மனதினுள் கிடக்கும். ஒரே ஆசையை சமூகம் மீண்டும் மீண்டும் நம்மேல் திணிக்குமானால், அந்த ஆசை செயல் வடிவம் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் மனதினுள் புதைந்து கொண்டிருந்தால், அந்த கண்ணி வெடியின் அழிக்கும் சக்தியும் அதிகரித்து கொண்டேயிருக்கும்.

மீண்டும் உடல் இச்சைக்கு - நமது சமூகத்தில், உடல் இச்சை என்பது இரகசியமாக தீர்க்கப்பட வேண்டியது. சட்டபூர்வமான அல்லது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்குள் மட்டும் தீர்க்கப்பட வேண்டியது. உறவுகள் திருமணம் மூலம் சமூகரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன், உடல் ரீதியான உறவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி உடல் ரீதியாக உறவு கொண்டால் அது விபச்சாரமாக கருதும் சமூகம், நாம் வாழும் சமூகம். நமது சமூக அமைப்பில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாமல், குற்றமாக கருதப்பட்டு, தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் இதே சமூகத்தில் எல்லாவிதமான உடல் இச்சை தூண்டுதல்களும் சுய கட்டுப்பாடு தவிர வேறு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், வயது வித்தியாசம் இல்லாமல், ஆசைகளை செயலாக்கும் வாய்ப்பு உள்ளவர்களா இல்லாதவர்களா என்னும் வித்தியாசம் இல்லாமல் சென்றடைகிறது.

அதாவது நம் சமூகம், எந்த தடையும் இல்லாமல் நம் அடிப்படை ஆற்றலை ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஆன இச்சா சக்தியாக, உடல் இச்சையாக எந்த தடையும் இல்லாமல் மாற்றுகிறது. ஆனால் அந்த உடல் இச்சைகள், செயல் வடிவம் பெறுவதற்கு அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் நமக்கு விதிக்கிறது. ஆக, உடல் இச்சைகளை செயல்படுத்த இயலாதவர்கள் அந்த ஆசைகளை மனதினுள் புதைப்பதை தவிர வேறு வழி இல்லை. அவ்வாறு புதைக்கப்பட்ட ஆசைகள் என்பது ஒரு உளவியல் கண்ணி வெடி. வெளிப்புற காரணிகள் ஒரளவு அழுத்தத்தை கொடுத்தால், அந்த கண்ணிவெடியை மனதினுள் கொண்டுள்ளவர், அந்த கண்ணிவெடியின் அழிவு சக்கதியை குறித்த விழிப்புணர்வை அந்த கணத்தில் இழந்தால், புதைக்கப்பட்ட கண்ணிவெடி, அதன் அழிவு சக்தியை முழு வீரியத்துடன் வெளிப்படுத்தும்.

இந்த சூழ்நிலையில். இச்சையை கட்டுப்படுத்த இயலாத அந்த சிலர் மட்டும் குற்றவாளிகளா அல்லது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உடல் இச்சைகளை தூண்டும் சமூகத்திற்கும் குற்றத்தில் பங்குள்ளதா? சமூகம் எவ்வாறு உடல் இச்சைகளை தூண்டுகிறது என்பதை விவரிக்க தேவை இல்லை. நம் வீட்டு வரவேற்பறையிலே எல்லாவிதமான வக்கிரங்களும், குழந்தைகள் முன்னிலையிலேயே எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை விவரிக்காமலே நாம் அனைவரும் அறிவோம்.

குற்றத்தை அரங்கேற்றுவதற்கான எல்லா காரணிகளையும் உருவாக்கிவிட்டு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, அத்தகைய குற்றம் நடைபெற உள்ள சாத்தியங்கள் குறித்த எந்த விதமான விழிப்புணர்வையும வழங்காத சமூகத்திற்கு, அந்த குற்றத்தில பங்கு இல்லையா? குற்றத்திற்கான எல்லா காரணிகளையும் வெளிப்படுத்தி, அந்த குற்றத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ளவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்காத சமூகத்திற்கு அந்த குற்றத்தில் பங்கு இல்லையா?
ஆக நம் சமூகமே குற்றங்கள் நடைபெறுவதற்கான எல்லா காரணங்களையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த குற்றத்தால் நேரடியாக பாதிப்படைபவர்களும், குற்றம் புரிந்து பின் அந்த குற்றத்தை செய்ய தூண்டிய சமூகத்தால் தண்டிக்கப்பட்டு பாதிப்படைபவர்களும், சில தனிப்பட்ட மனிதர்களே. துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமூகத்தின் அங்கத்தினர்கள் என்பதும், எனவே பாதிக்கப்படுவது அந்த சமூகம்தான் என்பதையும் அந்த சமூகம் அறியாதது போலவே நடந்து கொள்கிறது.

நாம் அனைவரும் சேர்ந்து தொகுப்புதான் நம் சமூகம். எனவே நம் ஒவ்வொருவருக்கும் அந்த குற்றத்திலும். குற்றத்தால் நிகழ்ந்த பாதிப்பிலும் பங்கு உண்டு. நாம் அந்த குற்றத்தால் அடைந்த பாதிப்பிற்கு எதிர் வினையாற்றுகிறோம். அது மிகச்சரியானது. ஆனால் அந்த குற்றத்தில் நம் பங்கிற்கு எந்த தண்டனையும் ஏற்கவில்லையே. அது ஏன்? குறைந்த பட்சம். அந்த குற்றத்தில், ஒரு சமூகமாக, நம் பங்கும் உள்ளதே. அதை ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? ஆம், நம்மால் நம் பாதிப்பை மட்டுமே காணமுடிகிறது. அந்த பாதிப்பிற்கான காரணத்தில் நம் பங்களிப்பை காண முடியவில்லை. ஆக நாம் அனைவரும் வெறும் பாசாங்குகாரர்கள் (hypocrites). நம்மில் ஒரு பகுதியை மட்டும் கண்டு மற்றொரு பகுதியை காண மறுப்பவர்கள்.

ஒருவேளை நம்மால், குற்றத்தில் நம் பங்களிப்பையும் காண முடிந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? குற்றத்திற்கான தண்டனையை நமக்கு நாமே வழங்குவதன் மூலம் மட்டுமே நம் அற உணர்வை, அத்தகைய அற உணர்வை நாம் கொண்டிருந்தால், நம்மால் நிலை நாட்ட முடியலாம். உதாரணமாக, இத்தகைய உடல் இச்சைகளை தூண்டும் வக்கிரங்கள் பொழுது போக்கு என்னும் பெயரில் நம் வீட்டு வரவேற்பறையில் நிகழ்வதை நாமாகவே நிறுத்தலாம். இதன் மூலம் நம் குழந்தைகளின் உளவியலில் இந்த வக்கிரங்கள் நேரடியாக நம் வீட்டிலிருந்தே புதைக்கப்படுவதை குறைந்த பட்ச அளவிலாவது குறைக்கலாம். ஆம், சமூக அளவில் பார்த்தால், நமக்கு நாமே இந்த சிறு தண்டனையை வழங்க முடிந்தால், நம் சமூகத்திற்கு பெரும் உதவி செய்தவர்கள் ஆவோம் - நம் குழந்தைகள் மனதில் நாமாகவே வக்கிரத்தை விதைக்காததன் மூலம்!


எனது வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகளுக்கு முன்பே, பரஸ்பர புரிதலின் மூலம், இத்தகைய வக்கிரங்கள் அரங்கேறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. என்னாலான என் பங்களிப்பு!

blog.change@gmail.com

Thursday, September 5, 2013

நுகர்வெனும் பெரும்பசி - 5

நுகர்வின் இன்னொரு பரிமாணம், நாம் ஒன்றை நுகரும்போது, அந்த நுகர்தலுக்காக அந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ, மற்றொரு உயிர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். அது மனித உயிராகவோ அல்லது பிற உயிரினங்களாகவோ இருக்கலாம் இது இயற்கையின் தவிர்க்க முடியாத விதி. உதாரணமாக நாம் சைவ உணவு உணபவர்களாக இருந்தாலும் நம் உணவின் பெரும் பகுதியாக இருக்கும் விதைகள் என்பவை மற்றொரு உயிருக்கான சாத்தியங்களே.  நாம் அந்த உணவை உண்ணும்போது அந்த உயிர் வாழ்வதற்கான சாத்தியத்தை நாம் அழிக்கிறோம். அந்த உணவை விளைவிப்பதற்கு தேவையான நீராதாரத்தை பெறுவதற்காக அணைகளை கட்டம்போது, அங்கே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவுஇரக்கமின்றி, அவர்களுக்கு எதுவும் வழங்காமல், அவர்கள் வாழ்வாதாரத்தையே பறித்து அணைக்கட்டுகளை கட்டி, அந்த நீரில் விளைவித்த உணவையும், அங்கிருந்து பெறப்பட்ட மின்சாரத்தில் நம் நுகர்வின் சில பிற அம்சங்களையும் பெறுகிறோம் - இதற்கு எடுத்துகாட்டு நர்மதா நதி அணைக்கட்டுக்கு எதிரான போராட்டம்.

பிற விலங்குகளிலிருந்து நாம் பெறும் உணவுப்பொருட்களான இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை பெறுவதற்காக அந்த விலங்குகள் எத்தகைய கொடுமையான சூழலில் தங்கள் வாழ்நாளை கழிக்கின்றன என்பது நம் சிற்றறிவுக்கு எட்டினால், ஒரு மனிதப்பிறவியாக இருக்க நாம் நிச்சயமாக வெட்கப்பட்டாக வேண்டும். அந்த விலங்குகள் வாழும் சூழலுடன் ஒப்பிடும்போது, அந்த விலங்குகளை இறைச்சிக்காக நாம் கொல்லும்போது உண்மையில் நாம் அவற்றுக்கு விடுதலை அளிக்கிறோம். இறைச்சிக்காகவும், பாலுக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகள் மிககுறுகிய இடத்தில் மிககுறைவான அசைவுகளுக்கு மட்டுமே சாத்தியமான வகையில் வாழ்நாள் முழுக்கவும் பிணைத்து கட்டப்பட்டிருக்கின்றன. கன்று ஈன்ற பசு அல்லது எருமையிடமிருந்து அதன் கன்று உடனடியாக பிரிக்கப்படுகிறது. ஆம், உயிர்களுக்கு இயற்கை அளித்துள்ள மிக இயல்பான தாய்ப்பாசத்தை கொடுப்பது அந்த பசுக்கள் \ எருமைகளுக்கும், பெறுவது அந்த கன்றுகளுக்கும் அவை பிறந்த உடன் தடை செய்யப்படுகிறது. இதை விட வேறு எந்த கொடுமைகளும் அந்த விலங்குகளுக்கு மனிதனால் இழைக்கப்பட முடியாது. ஆம் பால் என்பது இனிமேலும் சைவ உணவு அல்ல - அசைவ உணவு என்பது விலங்குகளை கொல்வதன் மூலம் பெறுவதாக இருந்தால்! பண்ணைகளில் வளரும் பசு\எருமையிடமிருந்து பால் பெறுவதற்காக அவற்றை கொல்வதை விட மிக அதிகமான கொடுமைகளை அவற்றின் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறோம்

நம் கலாச்சரத்தில் உணவு உண்பதற்கு முன் பிராத்தனை என்பது, உண்மையில் நமக்கு உணவாகும் அல்லது உணவை உருவாக்கி நமக்களித்த அந்த பிற உயிரினங்களுக்கு நாம் தெரிவிக்கும் நன்றியுணர்வே. நம் நுகர்வுக்காக பிற உயிர்கள் அழிவதை நாம் உண்மையில் புரிந்து கொண்டால், அந்த உயிரினங்களுக்கு உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருந்தால், நமக்கு தேவையானவற்றை மட்டுமே நாம் நுகர்வோம். அளவுக்கதிகமான நுகர்வின் மூலம் எதையும், எதனுடைய உயிரையும் உழைப்பையும், வாழ்வையும் வீணாக்க மாட்டோம்.

தற்போதைய உலகில் வழங்கப்படும் பொருளாதார கோட்பாடுகள் நுகர்வெனும் பெரும்பசியின் பசி ஊக்கிகள். அதாவது, மனிதனின் அடிப்படைச்செயல், மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியும் அதைச்சார்ந்த தொழில்களும் என்பதிலிருந்து மாறி மனிதனின் எல்லா நுகர்வுகளுக்குமான உற்பத்தியும் அதை சார்ந்த தொழில்களும் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. ஆம் இந்த பொருளாதார கொள்ளகையில் பொருள் சார்ந்து மனித தன்னிறைவு என்பது இல்லவே இல்லை. அங்கு எப்போதும் நுகரும் பொருள்களின் உற்பத்தி பெருகிக்கொண்டே இருக்கும். இந்த அடிப்படையிலே நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் அது நுகரும் பொருட்களில், ஒவ்வொரு வருஷமும் பல சதவிகிதம் வளர்ச்சி பெற போராடிக்கொண்டிருக்கின்றன. ஆக இங்கு தன்னிறைவு என்பது எப்போதுமே எட்டப்படுவதில்லை. அல்லது மக்கள் தன்னிறைவு அடைந்த உணர்வு வாராதவாறு அரசாங்கங்கள் பார்த்துக்கொள்கின்றன. ஆம் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், வாங்கும் திறன் படைத்தவர்களை மேலும் மேலும் வாங்கி நுகரவோ வீணாக்கவோ அரசாங்கங்கள் அனைத்தும் முழு முனைப்புடன் ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் வாங்கும் திறன் அற்றவர்களை, அவர்கள் அறியாமலே மேலும் சுரண்டுகின்றன. எடுத்துக்காட்டுகள் - சென்னையில் இரண்டு மணி நேரம் மின் வெட்டு, தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் 16 மணி நேரம் மின் வெட்டு. அரசாங்கம் மது பானங்களை மக்களின் மேல் சுமத்தி, அதில் வரும் வருமானத்தால் அதே மக்களுக்கு இலவசங்களை வழங்கி, அவர்களை ஒரு வெளிவரமுடியாத சட்டகத்தினுள் அமர்த்துதல். அரசின் வருவாய்க்காக, கள் போன்ற இயற்கை உணவுகளை தடை செய்து, அவற்றிற்கு மாற்றாக செயற்கை மதுபானங்களை வழங்குதல் - கள் தடை செய்யப்பட்டதன் மூலம் தென்தமிழ் நாட்டின் முக்கியமான ஒரு தொழில் - பனை ஏற்றம், அழியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் ஒரு முக்கியமான இயற்கை உணவான பனை வெல்லத்தை நம் சந்ததியினரால் புத்தகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

இதுவே காந்தியால் முன்வைக்கப்பட்ட ராம ராஜ்யம் தற்போதைய உலக ராஜ்யத்திலிருந்து வேறுபடுகிறது. ராம ராஜ்யத்தில் ஒவ்வொரு சிறு குழுவும், அதனுள் தன்நிறைவு அடைந்திருக்கும். அந்த குழுவின் பிற குழுக்களுடன் சார்ந்திருக்க தேவையில்லை அல்லது மிக குறைந்தபட்ச சார்பு மட்டுமே இருக்கும். இந்த தன்னிறைவு அடைந்த சமுதாயத்தில் வளர்ச்சி என்பது, அனைவருக்கும் அந்த சமுதாயத்தில் உள்ள அனைத்தும் கிடைப்பது என்பதுவரை மட்டுமே.

உலக சமுதாயம் என்பது, உலகம் முழுவதுக்கும் விரிவாக்கப்பட்ட ராமராஜ்யமே. ஆம் இதன் அடிப்படை உலக மக்கள் அனைவருக்கும் உலகில் உள்ள அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இயற்கையின் பரவலாக்கத் தன்மையின் (Distributive) காரணமாக அத்தகைய ஒரு சாத்தியமே இல்லை. அவ்வாறு ஒரு சாத்தியத்துக்காக இயற்கையுடன் போராடினால், நாம் வாழும் சூழலை அழிப்பதை தவிர வேறு எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனித இனத்தின் இருப்பு பெரும் போராட்ங்களுக்கிடையேதான் உறுதி செய்ய முடிந்தது. மனித இனத்தின் பெரும்பகுதி இனக்குழுக்களுக்கிடையேயான போர்கள், பசி, நோய்கள் போன்றவற்றால் அழிந்து கொண்டே இருந்தன. மக்கள் தொகை பெருக்கம் இத்தகைய அழிவுகளால் சமன் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது.  மனித அறிவின் முன்னேற்றத்தால் அந்த அழிவு பெருமளவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மனித அறிவின் முன்னேற்றத்தால் மனித இனம் எப்போதையும் விட தற்காலத்தில் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் அந்த எளிமையாக்குதலின் மூலம் துரதிர்ஷ்டவசமாக இன்னொரு, நாம் எதிர்பார்க்காத, அழிவை நோக்கி நகர்கிறோம் - மக்கள் தொகை சமநிலையை விட அதிகரித்தலும், அதன் விளைவான சூழல் அழிவுகளும்! நமது எளிமையாக்கப்பட்ட மனங்கள் சூழல் அழிவின் காரணமாக நாம் எதிர் கொள்ளப்போகும் பெரும் அழிவை எதிர்கொள்ளும் திறனை பெறுமா? நாம் உண்மையில் விரும்பினால், அந்த அழிவு நம்மை நெருங்காமலே தொலைவில் இருக்க வைக்கலாம் - நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலம், இயற்கையின் தலையீடு இல்லாமல் நாமாகவே சமநிலையை உறுதி செய்வதன் மூலம்! நோயையும், பசியையும், போராட்டங்களையும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவின் மூலமாக வென்றது போல, அதே அறிவால் மக்கள் தொகை பெருக்கத்தையும், மக்கள் நுகர்வு பெருக்கத்தையும், சூழல் அழிவையும் வெல்வதன் மூலம்!

நம்மை நாமே சமன் செய்வதற்கான அறிவை மனித இனம் தொட தொடங்கிவிட்டது. ஆனால் அது இன்னும் மிகமிக சிறிய அளவிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அறிவு நமக்கு தெரிவிக்கும் கூறுகள் மிக பயங்கரமானவை. அந்த ஒரே காரணத்தால்தான் எல்லா அரசாங்கங்களும் பெயரளவுக்குமேனும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை முன்வைக்கின்றன. சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பறைசாற்றுகின்றன - உண்மை நிலை அந்த அறிவுப்புகளுக்கேற்றாற் போல் இல்லாவிட்டாலும். இத்தகைய கொள்கை முடிவுகள் எல்லா அரசாங்கங்களாலும் அறிவிக்கப்படுவதே சூழலை நம்மால் பாதுகாக்க முடியும் என்னும் அறிவு மனித இனத்தை அடைந்ததால் மட்டுமே. ஆம், மனிதரில் ஒருசிலரால் மட்டும் அடையப்பட்ட அறிவை பெரும்பான்மையானவர்கள் அடைவதால் மட்டுமே காகித அளவில் அறிவுப்புகளாக மட்டும் இருக்கும் சூழல் பாதுகாப்புக்கான கொள்கைகளை ஆர்வத்துடனும், சூழலை பாதுகாத்து சமன்நிலையை பேணவேண்டும் என்னும் உண்மையான நோக்கத்துடனும் செயல்படுத்த வைக்க முடியும்.

ஆம், நம்மால் சூழலின் சமன்நிலை குலைவை உணர முடிந்தால், அதற்கு ஒற்றை காரணம் நமது நுகர்வு என்பதை உணர முடிந்தால், அந்த உணர்வே நமது நுகரும் தேவைகளை மாற்றியமைக்கும். அந்த மாற்றமே மனித இனம் பெறும் சூழலியல் அறிவின் பரவலாக்கம். அந்த அறிவின் பரவலாக்கம் நம் அரசாங்கங்கள், காகித அளவில் இருக்கும் கொள்கைகளின் செயல் வடிவ மாற்றத்திற்கு ஊக்கிகளாக இருக்கும். இதன்மூலம் நம்மை நாமே சமன் செய்து, நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறுதி செய்வதுடன் மனித இனம் தன்னுள் முழுமை அடைவதுவரை இந்த பூமியில் நிலைத்து இருப்பதற்கான சூழலை உறுதி படுத்த முடியலாம். அவ்வாறே உறுதி படுத்துவோமாக!

[முடிவு]

blog.change@gmail.com

தொடர்புடைய பதிவுகள்;     நுகர்வெனும்பெரும்பசி - 1
                           நுகர்வெனும்பெரும்பசி - 2
                           நுகர்வெனும்பெரும்பசி - 3
                           தேவைக்கேற்ற நுகர்வு:
                                              Commercialismand Consumerism