சமீபத்தில் Analytic Idealism என்னும் கருத்தியல் வாதத்தின் ஒரு கிளை பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. பெர்னாடோ காஸ்த்ரப் (Bernardo Kastrup) என்பவருடைய, Analytical Idealism குறித்த அறிமுக காணொளிகள். ஏழு காணொளிகள், சுமார் ஆறு மணி நேரம். பத்து நாட்களில் பார்த்து/கேட்டு முடித்தேன்.
இந்திய தத்துவங்களில்,
என் மனச்சாய்வு அத்வைதத்தின் பக்கம். எனவே அதைப்பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். அத்வைதத்தின்
மாயாவாதம், பிரம்மம் போன்ற கருதுகோட்கள் குறித்து எனக்கேயான சில புரிதல்களை அடைந்திருக்கிறேன்.
நான் இளநிலை இயற்பியலில் படித்தவற்றில் இன்னும் ஞாபகத்தின் அடியாழத்தில் இருக்கும்
சில கருதுகோள்களும் இந்தப் புரிதல்களை அடைய உதவியிருந்தன.
ஜக்கி வாசுதேவ்
அவர்களின் ஒருமை நிலையை அனுபவப்பூர்வமாக அடைவதைக் குறித்த உரைகளையும் உரைகளின் எழுத்துவடிவங்களையும்
தொடர்ந்து கேட்டு/படித்து வருகிறேன். இவற்றில் இருந்து ஒருமை நிலை குறித்தும் அதை அடைவதன்
வழிகள் குறித்தும் ஒருவகையான புரிதல்களை வைத்திருக்கிறேன்.
இந்தப் பின்புலத்தில்
Analytical Idealism பற்றிய காணொளிகள் இன்னும் சில திறப்புகளை அளித்தன. இந்தக் குறிப்புகள்,
நான் புரிந்து கொண்டவை ஒருமாதிரி என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கிறதா என
நானே உறுதி செய்வதற்கான முயற்சி.
கருத்தியல் வாதம்
அல்லது கருத்துமுதல் வாதம், மேற்குலகின் தத்துவம் எனக் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.
அத்வைதம், புத்தமதம் ஆகியவையும் கருத்தியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவையே. மேற்குலகில்
பிளாட்டோவின் தத்துவங்கள் கருத்தியல் வாதத்தின் தொடக்கமாக இருக்கலாம். பிளாட்டோவின்
காலம் கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன்னால். கௌதம புத்தரின் காலமும் கிட்டத்தட்ட
இதுவே. வேதாந்தத்தின் தொடக்கக் காலம், இதற்கும் சிலபல நூறாண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம்.
அதாவது அத்வைதம் மற்றும் அத்வைதக் கருத்துக்களை கொண்டுள்ள பிரம்ம சூத்திரம், பகவத்கீதை
போன்றவை பிளாட்டோ, கௌதம புத்தர் ஆகியோருக்கு சிலபல நூறூண்டுகளுக்கு முன்னால்.
கருத்தியல் வாதத்தில்
பல பிரிவுகள் உள்ளன. பொதுவாக இவ்வாறு கூறலாம் – நாம் காணும் உலகம் உண்மையானது அல்ல,
அது நம் மனதுக்குள் உருவாகும் கருத்து (Idea) மட்டுமே. தத்துவங்களில் பரிச்சயம் இல்லாதவர்கள்
இடது கையால் தள்ளி விடக்கூடியது. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், ஆச்சரியங்களையும் அளிக்கக்
கூடியது.
நமது ஐந்து புலன்களின்
உதவியால் மட்டும்தான் இந்த உலகத்தை நம்மால் உணரவும், உணர்தல் மூலம் அறியவும் முடியும்.
எனவே நாம் அறிந்திருக்கும் உலகம் நம் புலன்களின் எல்லைக்கு உட்பட்டது. உதாரணமாக நமது
கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள ஒளியை மட்டும்தான் கிரகிக்க முடியும். எனவே
நமது பார்வையின் எல்லை முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் உணரும் எல்லைக்கு வெளியேயும்
அலைக்கற்றைகள் உள்ளன. அந்த அலைக்கற்றைகள் அளிக்கும் நிறங்களையும் எதிரொளிக்கும் பொருட்களையும்
நம்மால் காண முடியாது. ஆக உலகின் ஒரு சிறுபகுதி மட்டுமே நம் கண்ணுக்கு அகப்படுகிறது.
இதுவே பிற புலன்களுக்கும். அதாவது நமக்கு வெளியே இருக்கும் உலகின் ஒரு சிறு பகுதி மட்டுமே
புலன்களுக்கு அகப்படுகிறது. எனவே நம் அறிவுக்கும் அவ்வாறே. டார்வினின் பரிணாமக் கொள்கைகளின்
படி, மனித உயிரினம் இவ்வுலகில் வாழ்வதற்குத் (Survival) தேவையான அளவுக்கு மட்டுமே உணரும்
திறன் நம்மில் இயல்பாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. புலன்கள் வெளியே இருக்கும் உலகத்தின்
ஒரு பகுதியை உணர்ந்து மனதிற்கு அளிக்கிறது. அந்தத் தகவல்களிலிருந்து மனம், நாம் காணும்
உலகை உருவாக்கி (கருத்து, Idea) நமக்கு அளிக்கிறது.
இதன் அடுத்த தளத்தில்,
உலகம் ஒரு இருப்பு அல்ல, அது ஒரு நிகழ்வு மட்டுமே. அந்த நிகழ்வுகளை புலன்கள் மூலம்
உணரும் மனம், அவற்றை பொருட்களின் இருப்பாகக் காட்சிப்படுத்துகிறது. உலகம் ஒரு இருப்பு
அல்ல, அது ஒரு நிகழ்வு மட்டுமே என்பதை புரிந்துக்கொள்ள, இயற்பியலின் ஒரு பிரிவான குவாண்டம்
மெக்கானிக்ஸ் –இன் சில கருதுகோள்கள் உதவலாம், நாம் காணும் ஒவ்வொரு பொருட்களும் அணுக்களால்
ஆனது என்றும் அணுக்கள், புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் ஆகியவற்றால் ஆனது என்றும்
அறிவோம். இந்த அணுக்களின் பாகங்களும், Elementary particls அல்லது அடிப்படைத் துகள்களால்
ஆனது. குவாண்டம் இயற்பியல் கொள்கைகளின்படி, அடிப்படைத் துகள்கள் என்பவை, பௌதீக இருப்பு
கொண்டவை அல்ல. அவற்றுக்கு எடை இல்லை. அவை குவாண்டம் Field என்னும் சக்தி அலையின் ஒருக்
குறிப்பட்டவகையான தூண்டுதல் (Excitation) பெற்ற பாகம் ஆகும்.
அதாவது, பிரபஞ்ச்த்தில்
உள்ள சக்தி அலை சில வகையான துண்டுதல்களைப் பெற்று அடிப்படைத் துகள்களாக காட்சி அளிக்கிறது.
இந்த அடிப்படைத் துகள்கள் சேர்ந்து அணுக்களாகவும் பின்னர் பொருட்களாகவும் நமக்குக்
காட்சியளிக்கிறது. நம் உடலும் அத்தகைய குவாண்டம் சக்தி அலைகளில் தூண்டுதல் பெற்று அடிப்படைத்துகள்களாகவும்
அணுக்களாகவும் தோன்றுபவை மேலும் சேர்க்கையடைந்து செல்களாகவும் உறுப்புகளாகவும் தோற்றமளித்து
சில குறிப்பிட்ட செயல்களை அந்த சக்தி அலைக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதாவது
நம் பௌதீக இருப்பு உட்பட அனைத்துப் பௌதீக பொருட்களும் பிரபஞ்ச சக்தி அலைகளின் நிகழ்வுகளே.
– இது ஒரு பார்வை.
Analytical
Idealism இதை ஒரு உவமை மூலம் விளக்குகிறது –விமானத்தில் இரவு நேரத்தில், வெளிப்புற
நிகழ்வுகள் எதுவும் விமானிக்கு நேரடியாகத் தெரியாது. அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும்,
விமானிக்கு முன்னால் உள்ள கருவிகளின் தொகுதியில் எண்களாக மாற்றப்பட்டு காட்டப்படுகிறது.
அந்த கருவிகளின் தொகுதியை வெளிப்புற நிகழ்வாகக் கொண்டு, விமானம் இயக்கப்படுகிறது. இங்கு
கருவிகள் காட்டும் எண்கள் விமானத்தின் வெளிப்புறம் இல்லை. அது வெளிப்புறத்தில் உள்ள
விமானத்தைப் பாதிக்கும் சில நிகழ்வுகள் கருவிகளால் அளவிட்டு அதை விமானிக்கு ஒரு கருத்தாக,
ஒரு வித பார்வையாகத் தெரிவிப்பது. அது போல மனித புலன்கள் வெளிப்புற நிகழ்வுகளை உணர்ந்து
மூளைக்கு அனுப்ப, மூளை அங்கு சேர்ந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவற்றைப் பகுத்து,
மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மட்டும் மனதில் வெளிப்படுத்துகிறது. அதாவது நாம்
காண்பது விமானத்தின் வெளிப்புற நிகழ்வுகளை விமானி கருவிகளின் தொகையில் காண்பது போல,
இவ்வுலகத்தில் நம்மைப் பாதிக்கும் வாய்ப்புள்ள நிகழ்வுகளை புலன்கள் உணர்ந்து மனம் என்னும்
கருவிகள் தொகையில் காட்டுகிறது. அந்தக் கருவிகளின் தொகையில் காண்பதையே நாம் வெளியுலகம்
என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
பல நூறாண்டுகளுக்கு
முன்னால் இந்தியத் தத்துவங்கள், தங்கள் தரிசனங்களை முன்வைத்த போது, அறிவியல் உலகால்
ஆய்வு செய்யப்பட்டு உறுதிப் படுத்தப்பட்ட தரவுகள் இல்லை. ஆகவே அன்றைய தரிசனங்கள் பெரும்பாலும்
உவமைகளையும் பட்டறிவையும் கொண்டு தரிசனங்களை விளக்கின. எனவே பெரும்பாலும் எல்லா தரிசனங்களும்
Epsitomolgy – அறிவியங்குமுறை, என்னும் அந்தத் தரிசனங்களை அறிவதற்கான அடிப்படைகளை முன்வைத்து
விட்டு, அதன் மேல் தரிசனங்களை வைத்து விளக்கின. இந்தியாவின் அறிவுலகு, இஸ்லாமியப் படையெடுப்புகள்,
பிரிட்டீஷ் காலனியாதிக்கம் ஆகியவற்றின் காரணமாக அழிக்கப்பட்டதால், இந்தியாவின் தத்துவ
தரிசனங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல், தேங்கியிருக்கின்றன.
மாறாக ஐரோப்பாவில்
பாகன் மதங்கள் கிறிஸ்தவத்தால் முழுமையாக அழிக்கப்பட்டதாலும், பதினேழாம் நூற்றாண்டின்
இறுதிவரை கிறிஸ்தவம் முழுமையாக அறிவியலையும் பைபிளுக்கு மேலான அறிதல்களையும் கொலைக்கரம்
கொண்டு தடை செய்திருந்ததாலும் (Witch Hunting போன்ற நிகழ்வுகள்), ஐரோப்பாவில் அவை தேங்கியிருந்தன.
இந்த காலகட்டத்திற்கு பிறகு ஐரோப்பா கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டதால்
அங்கு அறிவியலும் தத்துவங்களும் புத்தெழுச்சி பெற்று ஒன்றை ஒன்று முழுமையாக்கி வளர்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கல்வியமைப்பும் சமூக அமைப்பும் காலனியாதிக்கத்தால்
முழுமையாக சிதைக்கப்பட்டு விட்டது. (திரு. தரம்பால் அவர்களின் The Beautiyful Tree
என்னும் புத்தகம், இந்தியாவின் கல்வியமைப்பு பதினேழாம் நூற்றாண்டின் இறுதி மற்றும்
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது என்றும், எவ்வாறு சிதைக்கப்பட்டது
என்பதையும் தரவுகளை முன்வைத்து விளக்குகிறது) இன்னும் துரதிர்ஷ்டவசமாக, சுதந்திர இந்தியாவின் முதல் ஆட்சியாளர்கள், அந்தச் சிதைவிலிருந்து மீள்வதற்கான
எதையும் செய்யவில்லை. ஒருவேளை அவர்களிடம் இந்தச் சிதைவு குறித்த பிரக்ஞை இல்லாமலிருந்திருக்கலாம்.
இந்திய அறிவுத்துறை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இரு தலைமுறை காலங்கள் சுதந்திர இந்தியாவில்
கடந்து விட்டது. தற்போதைய தலைமுறை அதைக்குறித்த அறிவு கொஞ்சமும் இல்லாததுடன் அரசியல்
காரணமான எதிர்மறைப் பிரச்சாரங்களும் ஓங்கியிருக்கின்றன. இந்த நிலையில் இந்திய அறிதல்களுக்கு
தற்போது மீட்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே
இந்தியாவின் தத்துவங்கள் பல நூறாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே இன்றும் இருக்கிறது.
ஆனால் மேற்குலக தத்துவ தரிசனங்கள் இன்னும், அந்த இடத்திற்கு வந்து சேரவில்லை. ஒருவேளை
இன்னும் ஒருசில நூறாண்டுகளில், நாம் நம்மை மறுகண்டடைவு செய்யவில்லை என்றால், மேற்கு,
இந்தியாவின் தரிசனங்களைக் கடந்து செல்லக்கூடும்.
Analytical
Idealism. நாம் காணும் உலகம், நம் புலன்களால் உணரப்பட்டவற்றை மனம் உருவாக்கி அளிக்கும்
ஒன்று; மனம் எவற்றிலெல்லாம் பிரக்ஞையுடன் இருக்கின்றதோ அவை மட்டுமே நமது உலகம் பிரக்ஞை
இல்லாவிட்டால் உலகம் இல்லை; உலகத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பிரக்ஞை உண்டு, பிரக்ஞையின்
அளவு வேறுபடலாம், உதாரணமாக ஒரு அணுவின் பிரக்ஞையே, அணுத்துகள்களை ஒன்றாக வைத்து ஒரு
அணுவாக அதை வைத்திருக்கிறது; உலகம் என்பதே ஒரு பெரும் மனதில் நிகழும் எண்ணங்களே, மனிதர்களாகிய
நாமக்கும் உண்மையான இருப்பு இல்லை, நாமும் அந்த பெரும் மனதில் உள்ள ஒரு எண்ணம் அல்லது
தூண்டுதல் (Excitation) மட்டும்தான்; என்னும் கருது கோள்களை முன்வைக்கிறது.
பெர்னாடோ அந்தக்
காணொளிகளில், மிக விரிவாக இதை விளக்குகிறார். அவர் உதவிக்கு இயற்பியல் துறை, நரம்பியல்
துறை, தத்துவத்துறை போன்றவை உலகின் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகளையும்,
தனது உவமைகளுக்கு வலு சேர்க்கும்படியாக சேர்த்திருக்கிறார். ஒரு காணொளியில் பிரக்ஞை
(Consciousness) குறித்து விளக்கும்போது, மனம் மற்றும் பிரக்ஞை ஆகியவற்றை விளக்க, கிழக்குடன்
ஒப்பிடுகையில், மேற்குலகில் போதுமான சொற்கள் இல்லை என்பதை ஒரு ஆற்றாமையுடன் கூறுகிறார்.
இந்தியத் தத்துவங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு இதன் அர்த்தம் புரியலாம்.
அத்வைதம், நாம்
காணும் உலகம் மாயை, தூய பிரக்ஞை மட்டுமே உண்மை என்கிறது. இந்தப் பிரக்ஞை பிரம்மம் என
கூறப்படுகிறது. நமது தனிப் பிரக்ஞைகள் பிரம்மதினுள் நிகழும் எதிரொளிகள் மட்டும்தான்.
அந்த எதிரொளிகளுக்குக் காரணமான ஒளியை தனிப்பிரக்ஞைகள் (தனி மனிதர்கள்) உணரும்போது அவை
பிரம்மத்தின் பிரக்ஞையுடன் ஒன்றுகின்றன. இதுவே ’இரண்டின்மை’ என்னும் அர்த்தத்தை அளிக்கும்
அத்வைதம் என்னும் தத்துவத்தின் சாரம்.
இங்கு நாம் கவனிக்க
வேண்டியது, Analytical idealism ஒரு கருத்தாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அத்வைத
வேதாந்தம் இரண்டின்மை என்னும் கருத்தை முன்வைப்பதுடன், அந்தக்கருத்து விளக்கும் நிலையை
எவ்வாறு அனுபவப்பூர்வமாக அடையலாம் என்பதையும் விளக்குகிறது. ஜக்கி வாசுதேவ், J கிருஷ்ணமூர்த்தி,
ஓஷோ, மகிரிஷி மகேஷ் யோகி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், மாதா அமிர்தானந்தமயி, etc, etc… போன்றவர்கள்
விளக்குவது, இந்த இரண்டின்மை நிலையை அடைவதற்கான வழிமுறைகளே. இதுவே மேற்குலகம், இந்தியாவின்
தத்துவத் தரிசனங்களுடன் ஒப்பிடுகையில், இன்னும் பின் தங்கி இருக்கின்றன என்னும் என்
முந்தையக் கூற்றுக்கு ஒரு முக்கியமான காரணம்.
அத்வைதம் அல்லது
Analytical Idealism மட்டும்தான் உலகின் இருப்பை விளக்கும் சரியான தத்துவம் என்று நான்
கூறமாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு பார்வை கோணம் மட்டும்தான். ஒருவேளை
பிற பார்வை கோணங்களை விட சற்று அதிகமாக ஊடுருவிய பார்வைக் கோணம் என்று வேண்டுமானால்
கூறலாம், மேற்குலகில் உள்ள பிற கருத்தியல்வாத தத்துவங்கள், பொருள்முதல்வாத
(Materialistic/physicalism) தத்துவங்கள், இருத்தலியல் (Existential) சூன்ய வாதம்
(Nihilism) போன்றவையும், கிழக்குலகின் பிற வேதாந்தத் தத்துவங்கள், சாங்கியம், யோகம்,
நியாயம் வைஷேஷிகம் போன்ற பொருள்முதல்வாத/கருத்தியல் தத்துவங்கள், ஜைனமத தத்துவங்கள்,
புத்த மத தத்துவப்பிரிவுகள், ஜென், தாவோ போன்ற தத்துவங்கள், etc, etc… ஆகியவயும் மனிதர்களின்
தேடுதலின் கண்டடைதல்களே. எனவே இவை அனைத்தும், சில மன அமைப்பு கொண்டவர்களைப் பொறுத்தவரைக்கும்
இறுதி உண்மையை சேர்வதற்கான வழிகளே. ஒருவேளை அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, இறுதி உண்மையைக்
காட்டவில்லை என்றாலும், அவர்கள் சென்று சேரும் இடம், இறுதி உண்மை என ஒன்று உண்டென்றால் அதற்கான பாதையை
அங்கிருந்து அவர்களுக்குக் காட்டும். தத்துவங்களைக் குறித்து மட்டும்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.
No comments:
Post a Comment