Thursday, July 29, 2021

நிலைப்பாடுகள்.

 

மனிதர்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் வழியாகவே அவர்கள் ஆளுமை வெளிப்படுகிறது. நிலைப்பாடுகள் தனிமனிதர்களின் கருத்து, அறிவு, சூழல் போன்றவை காரணமாகவோ அல்லது அவர்களின் உணர்வுகள் காரணமாகவோ அல்லது அவற்றின் கலவைகளின் காரணமாகவோ இருக்கலாம். அவை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எடுத்த நிலைப்பாடுகளாகவோ அல்லது எதற்கு என தெரியாமல் அவர்களை அறியாமலே எடுத்ததாகவோ இருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும், அவர்களின் உணர்வு அல்லது அறிவின் எல்லைகள், நிலைப்பாடுகளையும், எனவே ஆளுமையையும் வகுத்தளிக்கின்றன.

நமது மனநிலைப்பாடுகளை அறிவது, ஆளுமையின் வீச்சை அறிவதேயாகும். அல்லது நமது ஆளுமையை அறிந்திருந்தால், அவற்றிற்குக் காரணமான நிலைப்பாடுகளையும், நிலைப்பாடுகளை உருவாக்கும் பின்புலக் காரணிகளான அறிதல்களையும் கருத்துக்களையும் உணர்வு நிலைகளையும் ஓரளவுக்கு அனுமானிக்கலாம். மனிதர்கள் எடுக்கும் நிலைப்பாடுகள்,  தங்களை எவ்வளவு அறிவாளிகளாக வெளிப்படுத்துபவர்களாக இருந்தாலும், அவர்கள் அறிவின் பூர்த்தியின்மையைக் (Fragmentation) காட்டுகிறது.

அறிதல்கள் கருத்து நிலைப்பாடுகளாக மாறும் அதே நேரத்தில், நிலைப்பாடுகள், அறிதல்களின் வீச்சையும் மட்டுப்படுத்துகின்றன. அதாவது, நிலைப்பாடுகள், நாம் ஆராயும் அல்லது கவனிக்கும் பொருள் என்ன என்பதைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக நாம் ஒரு கருத்து நிலைப்பாடு (உதாரணத்திற்கு மதம் அல்லது அரசியல்) எடுத்துவிட்டால் அந்தக் கருத்துக்கு எதிரான எந்தத் தகவல்களையும் மனம் தவிர்க்கவே செய்யும். எனவே அந்தக் கருத்தைக் குறித்த ஒற்றைப்படையான அறிதலே நம்மிடம் எஞ்சியிருக்கும்.  சுயமுயற்சியில்லாமலேயே சில அறிதல்கள் தேடி வரும்போது, மனிதர்களின் நிலைப்பாடுகள் அவற்றுக்கு எதிராக இருக்குமானால், கவனத்தை அவற்றின் மேல் குவிக்காமல் புறந்தள்ளி விடுவது எப்போதும் நிகழும் ஒன்றாகும். அதாவது அறிவைப் புறந்தள்ளுவது.

ஆன்மீகம், முழுமுற்றான அறிவைத் தேடிய பயணமாகும். நம்மைத் தேடி வரும் அறிவைப் புறந்தள்ளுவது, ஆன்மீகத்திற்கு எதிரானச் செயல். அல்லது ஏதாவது நிலைப்பாடுகளை எடுத்திருப்பவர்கள் ஆன்மீக பயணத்திற்கு எதிரானவர்கள். ஆகவே ஆன்மீக சாதனைகளின் முதல் நோக்கம், சாதகர்களின் நிலைப்பாடுகளை, எனவே ஆளுமையை, இல்லாமல் செய்வதாகும். பெரும்பாலும் இந்த நோக்கம் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. துறவு நிலைகளின் கடுமையான விதிமுறைகள், பிச்சை எடுத்து உண்பது, அலைந்து கொண்டே இருப்பது, தேவைகளை துறப்பது போன்றவை மனித ஆளுமையத் தகர்த்து நிலைப்படுகளை இல்லமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டவை. நிலைப்பாடுகள் அழியும்போது, அறிவின் எல்லா பரிமாணங்களுக்கும் மனிதமனம் திறந்திருக்கும்.

ஆளுமை ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கும் அதேநேரத்தில், லொகீக வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு ஆளுமை மிகவும் தேவையானது. லொகீக வாழ்க்கை, நம்மை சமூகத்தின் அங்கமாக ஒரு இடத்தில் நிலைப்படுத்திக் கொள்வது. விரும்பினால் அங்கிருந்து படிப்படியாக, சமூகத்தின் அடுத்த லொகீகநிலையை நோக்கி முன்னேறுவது. இங்கு கட்டற்ற நிலை சாத்தியமில்லை. சமூகத்தின்  கட்டுக்குள்ளே இயங்கவேண்டிய உறுதிப்பாடு தேவையாகிறது. லொகீக மனிதர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் சமூக இடத்திற்கேற்ப சராசரி மனிதர்களாகவோ அல்லது சராசரியை கடந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் – அறிவு ஜீவிகள் சமூகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், என அவரவர் நிலைப்பாடுகளுடன் இருக்க வேண்டியிருக்கிறது..

சாராசரி மனிதர்களின் நிலைப்பாடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவை பெரும்பாலும் அந்த மனிதர்களையும் அவர்களைச் சார்ந்திருக்கும் வெகு சிலரையும் மட்டும்தான் பாதிக்கும். ஆனால் சாராசரியைக் கடந்த மனிதர்களின் நிலைப்பாடுகள் சில நேரங்களில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. (இவ்வாறு பிறரின் நிலைப்பாடுகளை கவனிக்கும் ஒருவர், தன் சொந்த நிலைப்பாடுகளையும் அவதானிப்பாரா என்பது ஆர்வமூட்டும் ஒரு கேள்வி!)

பரந்த அறிவுத் தளங்களில் இயங்கும் ஒருவர், அதற்காக உண்மையிலேயே உழைக்கும் ஒருவர், எடுத்திருக்கும் சில நிலைப்பாடுகள் மிகக்குறுகியதாக இருப்பதைப் பரவலாகக் காணலாம். இந்த நிலைப்பாடுகளின் குறுகியத் தன்மையை உணர்வதற்கு, அதே அறிவுத் தளங்களில் இயங்கும் வேறு சிலரின் வேறுபட்ட நிலைப்பாடுகளையும் அவதானிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு இல்லையென்றால் அந்நிலைப்பாடுகளை கவனிக்கும் ஒருவர், தானும் அத்தகைய குறுகிய நிலைப்பாடுகளுக்கு அடிமையாகலாம். இதுவே சராசாரிகளைக் கடந்தவர்களின் நிலைப்பாடுகளின் மிகவும் அச்சமூட்டும் விளைவு. ஆனால் அத்தகைய நிலைப்பாடுகள் இல்லாமல், அறிவுஜீவிகள் மற்றும் களப்பணியாளர்கள் அவர்கள் இயங்கும் தளங்களில் உறுதியுடன் இயங்க முடியாமலும் போகலாம். அவர்களைக் கவனிக்கும் ஒருவர் அறிவுரீதியில் தானாக சிந்திக்கும் திறன் உடையவராக இருக்கும் பட்சத்தில், குறுகிய நிலைப்பாடுகளுடன் பொதுத்தளத்தில் இயங்குபவர்களை, அவர்களின் உண்மையான மதிப்புக்காக ஏற்றுக்கொள்ள முடியலாம். அதே நேரத்தில் சராசரி மனிதர்கள் அவர்களின் குறுகிய நிலைப்பாடுகளையும் தங்களுடையதாக மாற்றிக் கொள்வார்களே! அறிவுஜீவிகளின் குரல் அறிவுஜீவிகளை மட்டும் அடையும் கடந்தக் காலங்களில் இது பெரிய பிரச்சினையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கருத்தும் பெரும்பாலும் உதிரி வரிகளாக சமூக ஊடகங்கள் மூலம் சராசரி மனிதர்களை அடையும் இன்றையக் காலகட்டத்தில், இத்தகைய குறைகளுள்ள அறிவுஜீவிகள் சமூக ஆக்கத்திற்கா அல்லது அழிவிற்கா உதவுகிறார்கள்?

அறிவுத் தளங்களில் இயங்கும் சிலரை நான் அறிவேன். அவர்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளும், அவை என் நிலைப்பாடுகளுடன் முரண்படுபவையாக இருந்தாலும், அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் என் நிலைப்பாடுகளை அசைத்து அவற்றை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பலதருணங்களில் அளித்திருக்கின்றன. ஆனால் அதே அறிவுத்தளங்களில் இயங்கும் இன்னொருவர், அதற்கு எதிரான, ஏற்றுக் கொள்ளக்கூடிய, மிகவும் தர்க்க ரீதியான வாதங்களை முன் வைத்து வேறொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பார். இரண்டு நிலைப்பாடுகளுமே தர்க்க ரீதியில் எடுக்கப்பட்டவை. எடுத்தாதளப்படும் தர்க்கங்கள் மிகமிகச் சரியாகவே இருக்கும். எனில் நான் எவரின் நிலைப்பாட்டை எடுப்பது? எனில் என் நிலைப்பாடு என்ன? இரண்டு நிலைப்பாடுகளையும் என் நிலைப்பாடுகளாகக் கொள்ள சாத்தியமில்லை. எனக்கென ஒரு நிலைப்பாடு தேவையென்றால், மேலதிக விபரங்கள், தகவல்கள், தரவுகளை தேவைப்படும். அவற்றைத் திரட்டாமல் நான் அந்தக்கருத்தின் மேல் ஒரு நிலைப்பட்டை எடுக்க முடியுமா? அவ்வாறு முடியாத பட்சத்தில், சமூகத்தில் என் இடம் என்ன? முரண்பட்ட நிலைப்பாடுகளைக் காணும் எத்தனைபேர் மேலதிக தகவல்களைப் பெற்று தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்?

சமூக வாழ்க்கையிலிருந்து விலகி ஆன்மீகத்தளத்தில் இயங்கும் மனிதர்களுக்கு நிலைப்பாடுகள் தேவையில்லை. ஆனால் ஒரு சராசரி சமூக மனிதன் இந்த இடரை எவ்வாறு எதிர் கொள்வான்? பெரும்பாலான மனிதர்கள், அவர்கள் சராசரிகள் என்பதனால், அவர்கள் வாழ்க்கைச் சூழல் மற்றும் மனஇயல்பு மேலதிகத் தரவுகளைத் திரட்ட இடம் கொடுக்காது. நிலைப்பாடுகள் எடுக்காமல் இருப்பதற்கும் அவர்களின் சராசரி மனநிலை இடம் கொடுக்காது. அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்னும் சுய/சமூக அழுத்தம் இருந்துக்கொண்டே இருக்கும்.

பள்ளியில் படிக்கும் வரலாறு முதற்கொண்டு, மேனேஜ்மென்ட் படிப்புகள் வரை அனைத்தும், சராசரி மனிதர்களின் நிலைப்பாடுகளுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன. இந்தப் பள்ளிகளில்/கல்லூரிகளில் வரலாறு எனப்படிப்பது பெரும்பாலும் இந்திய சுதந்திரத்திற்குப் பின் எழுதப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் ஆட்சியாளர்கள் சோஷலிஸ பார்வை கொண்டவர்கள். ஐரோப்பியக் கல்வி பெற்றவர்கள். மரபான இந்தியாவின் மேல் ஐயம் கொண்டவர்கள். அவர்களால் அமைக்கப்பட்ட கல்வித்துறையும் அவ்வாறே அமைந்ததில் ஆச்சரியம் இல்லை. எனவே நாம் படிக்கும் இந்திய வரலாற்றில் இந்தியர்கள் பெருமிதம் கொள்ளத்தக்கவை, இந்திய மரபை கற்பிப்பவை எதுவும், பெரும்பாலும் இல்லை. இந்த குறைபட்டக் கல்வியை அடைந்த தற்போதைய தலைமுறைகள், உண்மையான தரவுப்பூர்வமான இந்தியப்பெருமிதங்களை வரலாற்றுக் கல்வியில் சேர்ப்பதற்கான எந்த முயற்சியையும் முழு மூச்சுடன் எதிர்க்கின்றன.(இவை நான் அறிந்தவைகளைக் கொண்டு, நான் அடைந்த நிலைப்பாடு) இந்த அடிப்படை மனநிலை இந்தியாவின் இன்றைய பெரும்பாலான சராசரி மனிதர்களின் நிலைப்பாடுகளை வகுக்கும் அடிப்படைகளில் ஒன்று.

இன்றைய ஊடகங்கள், ஒவ்வொரு விஷயங்களிலும் அவற்றின் நிலைப்பாடுகளை ஊதிப் பெருக்கி, அவற்றையை தங்கள் நிலைப்பாடாக்க சராசரி மனிதர்களைத் தூண்டுகின்றன.  குடும்பத்திதனர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் தங்கள் நிலைப்பாடுகளை தாராளமாக வழங்கி, தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வட்டங்களை உருவாக்குகிறார்கள், கொஞ்சமு அறிவுத் தேடல் கொண்டவர்கள் தாங்கள் விரும்பும் அறிவுஜீவி ஒருவரின் நிலைப்பாட்டை தங்களுடையதாகவும் மாற்றிக் கொள்வார்கள்.

இவ்வாறு எடுக்கப்படும் நிலைப்பாடுகள் இன்றைய அரசாங்க, மத, நிறுவன, வேலையிட மற்றும் குடும்ப அரசியல்களை தீர்மானிப்பதில் பங்களிக்கிறது. அதாவது சமூக வாழ்க்கையின் எல்லா வித அரசியல்களையும் தீர்மானிப்பது சராசரி மனிதர்களின்  நிலைப்பாடுகள்தான. அவர்களின் நிலைப்பாடுகளோ அவர்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் அறிதல்களைச்  சார்ந்திருக்கிறது. அவர்களின் அறிதல்களோ அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படைக் கல்வி, மற்றும் அவர்களை அடையும் செய்திகள், வதந்திகள் ஆகியவற்றின் மூலம் நிகழ்கிறது. எனவே ஒரு சமூகம் நிலைகொள்ளும் தளம், அந்த சமூகத்தின் சராசரி மனிதர்கள் நிலைகொள்ளும் தளத்தைப் பொறுத்துதான் அமையும். ஒரு சமூகம் உன்னத இடத்தை அடைய வேண்டுமானால், அந்த சமூகத்தின் சராசரி மனிதர்களைப் பாதித்து, அவர்களின் நிலைப்பாட்டை உயர் தளங்களுக்கு எடுத்துச் செல்லும் தலைவர்கள் மூலம் மட்டும்தான் நிகழ முடியும். அத்தகையவர்களே கீழே குறிப்பிட்டிருக்கும் கீதை வரிகளில் ‘நான்’ என குறிப்பிடப்பட்டிருப்பது என்பது என் நிலைப்பாடு.

//யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

 

எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்.//

ஆன்மீகப் பாதையை தேர்வு செய்தவர்களுக்கு, அவர்களின் நிலைப்பாடுகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கான தடைகள். அறிதல்களின் எல்லைகளை வகுப்பவை. எல்லையற்ற அறிதலே ஆன்மீகத்தின் குறிக்கோள். அவ்வாறெனில் லொகீகமும் ஆன்மீகமும் Mutually Exclusive  ஆனவையா?

இல்லை என்றே நினைக்கிறேன். லொகீகம் புறவாழ்வுக்கான பாதை. ஆனமீகம் அக வாழ்க்கைக்கான பாதை. புறவாழ்க்கைக்கு நிலைப்பாடுகள் தேவை. அவை அக வாழ்விற்குத் தடைகள். ஒரு மனிதனால் தன் நிலைப்பாடுகளை தன் புறவாழ்வுக்குத் தேவையான இடங்களில் தேவையானவற்றில் மட்டும் நிலைப்படுத்தி, அக வாழ்க்கையில் நிலைப்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளியிருக்க முடிந்தால் ஆன்மீகமும் லொகீககமும் Mutually Exclusive ஆக இருக்க வேண்டியதில்லை. அவ்வாறெனில் புறவாழ்வு மற்றும் அகவாழ்வு ஆகியவறின் தொடர்புப் புள்ளிகளையையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் கபடதாரியாக (Hypocrite) இருக்கவேண்டும் என்பதில்லை. மாறாக புறவாழ்வில் தேவையானவற்றை தேவைக்கேற்ற நேரத்தில் செய்து, அவற்றின் தடங்கள் அகத்தைப் பாதிக்காத மனநிலையைப் பெறுவதாகும்.


No comments: