Sunday, July 11, 2021

மீண்டும்…..

Blog – இல் கடந்த நான்காண்டுகளாக எதுவும் எழுதவில்லை. எழுதாமல் இருப்பது எனக்குத் தேவையாக இருந்தது. எதையாவது எழுதுவதற்காக, அகப்பயணத்திற்கான என் நேரத்தை இழந்ததைப்போல தோன்றியது. மேலும் என் எண்ணங்களை அறுதியான உண்மைகள் என எழுதும் த்வனி சில பதிவுகளிலும். சில காலத்திற்குப்பிறகு படித்தால் அபத்தமாகத் தோன்றுவது பல பதிவுகளிலுமாக குளறுபடிகள் விரவி இருக்கிறது. இந்தக்  குறைபாடுகளை களையாமல் எழுதுவதும் அவற்றை Blog-இல் பதிப்பதும் சரியானதாகத் தோன்றவில்லை.  

ஆனால் எழுதுவது ஒரு வகையில் எண்ணங்களை தொகுக்க உதவுகிறது. அகப்பயணத்திற்கு எண்ணங்களைத் தொகுத்து, தேவை/தேவையற்றவற்றை பகுத்தறிவுதும் முக்கியமான படிநிலை என நான் நினைக்கிறேன். அந்த அறிதல்கள் எண்ணங்களின்/சிந்தனைகளின் திசைகாட்டி. எனவே எழுதுவது எனக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் எழுத்தின் தரத்தையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

எனவே மீண்டும் எழுத விரும்புகிறேன். எதை எழுதுவது? எனது எண்ணங்களாக வெளிப்படுவதைத்தான் எழுத்தாக வெளிப்படுத்த முடியும். ஆனால் எழுதுவதற்கென்று எண்ணங்களை இழுத்து நீட்டி மடக்கக்கூடாது. அந்த எண்ணங்களால் எனக்கு எதாவது பயன் மதிப்பு உண்டென்றால் மட்டுமே அவற்றை எழுத வேண்டும். பயன் மதிப்பு என்றால், அந்த எண்ணங்கள் எனக்குள் கோர்வையாக்கப்படுவது, என் அகப்பயணத்திற்கோ அல்லது என் லௌகீக இயக்கங்களை நேர்ப்படுத்துவதற்கோ தேவையானதாக இருக்க வேண்டும்.

எழுத்துக்களில் பிறருக்கு என அறிவுரையோ, வேறு எதுவோ இருக்கக் கூடாது. என் எழுத்துக்களைப் படித்து, அறிவுரையை ஏற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. முடிந்தால், ஒவ்வொரு பதிவும் எனக்கு என்ன செய்கிறது என்பதையும் அதில் குறித்துக் கொள்ள வெண்டும். இது என் எழுத்தின் பயன்மதிப்பை எனக்கு உணர்த்தலாம். ஆனால் இது சாத்தியமாகுமா என்றும் பார்க்க வேண்டும்.

எழுதுவது எனக்காக மட்டும் என்றால் ஏன் அதை blog-இல் பதிப்பிக்க வேண்டும்? இதற்கு சரியான பதில் என்னிடம் இல்லை. எழுதுவது இரகசியங்களை குறித்து வைப்பதற்காக இல்லை. வெளிப்படுத்துவதற்கும் வெளிப்படுவதற்குமாக. பதிப்பிப்பது குறைந்தப்பட்ச தரத்தை உறுதி செய்கிறது.

சுமார் பத்து வருடங்கள் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். இருந்தாலும் எழுத்தின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை. இனி தரமாக எழுதுவதும் குறிக்கோளாக இருக்க வேண்டும். சற்றேனும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர் இதை வாசிக்க நேர்ந்தால், எழுத்தின் தரம் அவர் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதாக இருக்கக்கூடாது. தரம் எழுதுவதன் விசையைப் பொறுத்திருக்கிறது என்று கருதுகிறேன்.

முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். என் ஆங்கில அறிவின் எல்லை எழுத்தை விரிக்க தடையாக இருந்ததால் தமிழில் எழுதத் தொடங்கினேன். இனிமேல் அந்தந்த எண்ணங்களை வெளிப்படுத்த எந்த மொழி வசதியாக இருக்கிறதோ அதில் எழுதலாம் என நினைக்கிறேன்.

இறுதியாகவும் மிக முக்கியமானதுமான, எழுதுவதற்கான ஒரு விதி. என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள விரும்பினால், அல்லது வெளிப்படுத்த எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் மட்டுமே எழுத வேண்டும். எழுத வேண்டும் என்பது எந்த வகையிலும் ஒரு Comulsion ஆக மன அழுத்தமாக மாற எப்போதும் அனுமதிக்கக் கூடாது. இன்னொரு பதிவு இடவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.

No comments: