Friday, May 21, 2021

அவர்

 

அவர்

அவரைப் பற்றிய நினைவுகளை தொகுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த நேரம் அதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்.   

இவை அறுதியான உண்மைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைக்குறித்த என் எண்ணங்களின் பதிவு என்றநிலையில் உண்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.   அவரிடமிருந்து நான் விலகியிருக்கும் தூரத்தை அறிய இது எனக்கொரு வாய்ப்பு! அந்த தூரமே, நான் தனிமனிதனா அல்லது இன்னொருவரின் அப்பட்டமான பிரதியா என உணர்த்தும். உண்மையில் முற்றாக விடுதலை அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் முற்றிலும் தனிமனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், முற்றிலும் ஒருபிரதியாக இருப்பதும் வாழ்க்கை நமக்கு அளிக்கும் வாய்ப்பை இழப்பதே.

அவர் ஒரு சராசரி மனிதர். சராசரிகளின் பிரதிநிதி. ஆனால் மிகவும் சிக்கலான ஆளுமையை உடையவர்.என்பதே என் கணிப்பு. தன் அனைத்து அகச் சிக்கல்களையும் சராசரித்தனத்தை நோக்கி திசைதிருப்பியவர். அதன்மூலம் வாழ்வின் சிக்கல்களில் முழுமையாக அழியாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.

தற்போது தொண்ணூறுகளைக் கடந்த பெரும்பாலான முதியவர்களின் இளமைக்காலம் போலவே, அவரின் இளமைக்காலமும் வறுமையானதாகவே இருந்திருக்கிறது. சாதாரண காலங்களில் தன் இளமையைக் குறித்து அவர் எதுவும் கூறியதில்லை. ஆனால் தன்னை பிறர் ஒரு சுமையாகக் கருதுவதாக உணரும் தருணங்களில், தன் ஆளுமை எவ்வாறு பிறருக்கு சுமையாக மாறியது என்பதை தன் இளமைக்கால சிக்கல்களின் மூலம் கூறுவார்.ஒருவேளை நாங்கள் கேட்டிருந்தால் விவரித்திருக்கலாம். ஆனால் அவற்றை கேட்பதற்கான மனம் எப்போதும் எங்களுக்கு இருந்ததில்லை. இழப்பு எங்களுக்கே!

அவருக்கு மூன்று சகோதரர்களும், நான்கு சகோதரிகளும். சகோதரர்களில் மூத்தவர், மொத்தத்தில் இரண்டாமாவர். மேலும் சிலர் உண்டு (எத்தனைபேர் என்று கேட்டதில்லை). அவர்கள் குழந்தைப்பருவத்திலேயே உலகை விட்டவர்கள். குடும்பத்தில் ஓரளவு அசையா சொத்துக்கள் உண்டு. அவற்றில் அசையும் பனைமரங்களும் மரச்சீனி (மரவள்ளி கிழங்கு) செடிகளும் தான் வருமானத்துக்கான வழிகள். அவர் பள்ளிப்பருவத்தில் பெரும்பாலான நாட்களில் கருப்பட்டியும் தண்ணீரும்தான் காலை உணவு. மதியம் வெறும் தண்ணீர். இரவில் கஞ்சி போன்ற உணவுகள். இதுவே அவரின் பொதுவான சித்தரிப்பு. இதுவே பெரும்பாலான நாட்களிலா அல்லது சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமா என்று நாங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டதில்லை.. எங்கள் தாத்தாவுக்கும் குறைந்தப்பட்ச பள்ளிக் கல்வி உண்டென்பதால், அவர் படிப்பதற்கு பொருளாதார தடை தவிர வேறு தடைகள் இல்லை.

அவர் பள்ளிக் கல்வி, மார்த்தாண்டம் மற்றும் அருகில் உள்ள பள்ளிகள். இளநிலை இயற்பியல் பட்டம் திருவனந்தபுரம். இளநிலை கல்வியியல் தஞ்சாவூரில் படித்திருக்கிறார். இவற்றில் பள்ளிக்கல்வி மற்றும் இளநிலை பட்டம் ஆகியவற்றிற்கான செலவுகள் குறித்து அவர் கூறிக் கேட்டதில்லை. இளநிலை கல்வியியல் படிப்பதற்கு, நிலத்தை ஒற்றிக்கு வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் படித்திருக்கிறார். அந்ந நிலத்தை, ஆசிரியர் வேலை கிடைத்த பின்பு பலகாலம் உழைத்து மீட்டதாக கூறியிருக்கிறார். மூன்று தம்பிகளின் படிப்பு மற்றும் தங்கைகளின் திருமணம் ஆகியவற்றிற்கான செலவின் பெரும்பகுதி இவரின் உழைப்பினால் கிடைத்த வருமானத்தின் மூலம் செய்திருப்பதாகவும், இந்த செலவினங்களுக்காக வாங்கிய கடன்களில் பெரும்பகுதியை இவரே திருப்பிச்  செலுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த கடன்களால் பட்ட அவஸ்தைகள் பொருளாதாரம் சார்ந்த ஆளுமையை அவருள் வடிவமைத்திருப்பதாகத் தோன்றுகிறது. தானோ தன் மகன்களோ பிற்காலத்தில் எந்தக் கடன்களுக்கும் உள்ளாகக்கூடாது என்பதை ஒரு இறுகிய கொள்கையாகவே வைத்திருந்தார்.

இரண்டாவது அண்ணன் வீடு, பூர்வீகச் சொத்தான இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. வீடு கட்டும்போது, அந்த இடம் அண்ணன் பெயருக்கு மாற்றம் செய்யப்படவில்லை. வீட்டுக் கடன் பெறுவதற்காக அந்த இடத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க முன்வைத்த கோரிக்கையை, கடன் வாங்க்கூடாது என்னும் அவர் மனநிலைக்காக, நிராகரித்தார். அதனால் அதிக வட்டியில் வேறு கடன்கள் வாங்கி வீடு கட்டப்பட்டது. வீட்டுக் கடன் மூலம் கிடைக்கும் வருமான வரி சார்ந்த பயன்களை பெறமுடியாமல் போனது.

அவருடைய ஆரம்பகால பொருளாதார நிலைமை குறித்து அடிக்கடி விவரித்ததில் ஒன்று; அவரது தம்பிகளில் ஒருவரின் கல்வியோ வேலையோ (எது என்று ஞாபகம் இல்லை) சார்ந்து நாகர்கோவில் செல்ல வேண்டியிருந்தது. சுமார் 25 கிமீ தூரம். ’பஸ்’ டிக்கட்டிற்கு பணம் இல்லாத காரணத்தால் வீட்டிலிருந்து நடந்தே சென்று வந்திருக்கிறார். உணவுக்கும் கையில் காசில்லை. எனவே தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார். அந்த காலத்தில் பட்டினி ஒன்றும் பெரிய விஷயமில்லை. பெரும்பாலானவர்கள் அனுபவித்ததுதான். ஆனால் அந்த கடமையுணர்வு, அதற்காக எதையும் செய்யும் மனதிடம், அதுதான் என்னை ஆச்சரியப்படுத்துவது. நமக்கில்லையே என ஏங்க வைப்பது!

எளிதில் கோபப்படக்கூடியவர், பிறர் பார்வையை முழுமையாக நிராகரிக்கக் கூடியவர். என்னைப்பொறுத்தவரை அவர் இளமைக்காலத்திற்கு பின் மாற்றமடைந்த சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியில்லாதவர். குடும்பத்தலைவருக்கு மறுபேச்சு இல்லாத, எவரின் இரகசியங்களிலும் தலையிடும் உரிமையுள்ள, அனைவரின் விருப்பங்களையும் தேவைகளையும் அங்கீகரிக்கும் உரிமையுள்ள குடும்பத்தலைவராக இருந்தார். இது முந்தைய காலகட்டத்தின் கூட்டுக்குடும்ப மனநிலை. அதில் தனிமனிதர்கள் இல்லை. குடும்பம் மட்டுமே உண்டு. தனிமனித உரிமைகள் உள்ள  சமூக அமைப்பு அவர் மனதுக்குள் நுழையவே இல்லை. எனவே அவருடனான பிறர் உறவுகளும் சிக்கலானதாகவே இருந்து வந்தது.

அவர் ஆசிரியராக இருந்தவரைக்கும் அந்தச் சிக்கல்களுக்கு வடிகால் இருந்ததாக தோன்றுகிறது. அவர் பணி ஓய்வு பெற்ற நேரம், 1989 என  நினைவு. இந்த உறவுச் சிக்கல்கள் உச்சத்தை அடைந்ததாக நினைக்கிறேன்.  ஆனால் சில வருடங்களில், தன் குடும்பப் பொறுப்புகள் பெருமளவு முடிவடைந்த பிறகு, சமூத்தில் ஏற்பட்டிருந்த தனிமனித உரிமைகளை புரிந்துகொள்ளத் தொடங்கினார். ஆனாலும் அவரால் மாற முடியவில்லை என்பதுதான் என் அனுமானம்.

இந்த உறவுச் சிக்கல்கள், அவர் மகன்களாகிய எங்கள் மூவருடனும் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருந்திருக்கிறது. நான் தனிமனிதனாகிய பிறகு, என் இருபதுகளின் இறுதியில், இந்த உறவுச்சிக்கல்களை பெருமளவு கடந்து விட்டேன். குடும்பத்திலிருந்து கல்வி\வேலை நிமித்தம் விலகியிருந்ததும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். நான் மீண்டும் 2008 –ம் வருடம் அவருடன் ஒரே வீட்டில், அவரால் எனக்கு அளிக்கப்பட்ட 1971-ம் வருடம் அவரால் கட்டப்பட்ட வீட்டிற்கு திரும்பி வந்தேன். இம்முறை என் குடும்பத்துடன். அந்த நேரத்திலும் அவர் அடிப்படை மனநிலை மாறவில்லை என்றாலும், அவற்றை வெளிப்படுத்துவதில் சற்று கவனமாகவே இருந்திருக்கிறார். இது அதற்கு முன் ஏற்பட்ட உறவுச்சிக்கல்களால் அடைந்த மனமுதிர்ச்சியின் காரணமாகவும் இருக்கலாம். மேலும் எங்கள் மூவரில், என்னிடம் சற்றே மென்மையாக நடந்து கொள்வதாக பலமுறை உணர்ந்திருக்கிறேன். அது என் தோற்றப்பிழையாகக் கூட இருக்கலாம். அவரின் மனநிலையைத் தாண்டி, நாங்கள் இந்த வீட்டில் 2008 முதல் இணக்கமாக இருப்பதற்கு, பிரதிபாவின் adjusting capacity-ம் காரணம் என்பதை இங்கு பதிவுசெய்தாக வேண்டும்.

 

அவரது இந்த குணங்கள், அவரைச்சுற்றியிருந்த பலருக்கு வெறுப்பை அளித்திருக்கிறது. அதே நேரத்தில் பிறருக்கு உதவும் குணம், வேறு பலரிடம் தனிப்பட்ட மரியாதையையும் பெற்றுக்கொடுத்தது. அவரது பொருளாதாரம் சார்ந்த பொறுப்புகள் முடிந்த பிறகு, தன் பென்ஷன் வருமானத்தில் பெரும்பகுதியை பிறருக்காகவே, வெளியே தெரியாமல், செலவழித்திருக்கிறார். பல முதியவர்களுக்கு தொடர்ந்து உதவியிருக்கிறார். பல மாணவர்களின் கல்விக்காக உதவியிருக்கிறார். இவற்றின் மூலமும் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்னும் தகுதியின் மூலமும், அவருடைய அனைத்துக் குறைபாடுகளைக் கடந்தும் பலரை அவரின் ஆராதகர்களாக வைத்திருந்தது.

அவருக்கு இரவில் உறக்கம் வருவதில்லை. அதற்காக பெரும்பாடு பட்டிருக்கிறார். பலவிதங்களில் முயற்சித்திருக்கிறார். அவருடைய சுயகட்டுப்பாடு, உறக்கத்திற்காக போதைப்பொருட்களை நாடிச் செல்லாமல் வைத்திருந்தது. உறக்கத்திற்காக பகல் நேரத்தில் உடலுழைப்பு,  நீண்ட நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் களைப்பை உருவாக்குவார்.  எனினும் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கம் அவருக்கு பகல்கனவாகவே இருந்திருக்கிறது, இது Delayed Sleep Phase Disorder (DSPD) என்னும் அபூர்வ நோயாக இருந்திருக்கலாம்.

அவர் வயோதிகத்தில் உடல் தளர்ந்த பிறகும், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் இடுப்பு எலும்மை முறித்துக் கொள்வது வரைக்கும். நடைப்பயிற்சி ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகி இருந்தது. உடல் தளர்ந்த பிறகும், நினைவுகள் மங்கிய பிறகும், நடக்காமல் இருந்ததில்லை. பல நாட்கள் எங்கு செல்கிறோம் என்னும் நினைவில்லாமல் நடந்து சென்றவரை பல இடங்களில் தேடிச் சென்ற அனுபவம் எனக்குண்டு. அவ்வப்போது நடை செல்லும்போது எங்காவது விழுந்துக் கிடப்பார். பார்க்கும் எவராவது வீட்டுக்குக் கொண்டு விடுவார்கள். இருந்தாலும் அவர் நடை செல்வதை எங்களால்  தடுக்க முடிந்ததல்லை. பிடிவாதம், கோபம், அதற்கு எதிர்வினையாக பிடிவாதமும் கோபமும் தேவையில்லை என அவர் வழியிலேயே விட்டுவிட்டோம். என்ன வந்தாலும் எதிர்கொள்வதற்கு மனதளவில் எங்களை தயார்ப்படுத்திக் கொண்டோம்.

பலமுறை ரோட்டோரங்களில் விழுந்து எழுந்து வந்தவர் 2020-ம் வருடம் ஜனவரி மாதம் ஒரு அதிகாலையில், வீட்டினுள் விழுந்து தன் இடுப்பெலும்பை முறித்துக் கொண்டார். அன்றிலிருந்து சுமார் ஒன்றரை வருடங்கள் அவருடைய கட்டிலிலும் வீட்டினுள் மற்றவர்களின் உதவியுடனும், தினசரி குறைந்து வந்த நினைவுகளுடனும் இருந்தார். கடைசி நான்கு மாதங்கள் முழுமையான கட்டில் வாசம்.  குளிப்பதற்காக மூன்றுபேர் மற்றும் சக்கரநாற்காலி உதவியுடன்  செல்வது மட்டும்தான் கட்டிலுக்கு அவர் கொடுத்த ஓய்வு.

ஒரு சராசரி மனிதராக அவர் அடையவேண்டிய அனைத்தையும் அடைந்து விட்டார் என்பதுதான் என் எண்ணம். ஆனாலும் மன அமைதியுடன் நினைவுகளை இழப்பதுவரை அவர் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. மனித மனம் விசித்திரமானது. இல்லாதவற்றை கற்பனை செய்தே வாழ்வின் பெரும்பகுதியை அமைதியின்றிக் கழித்தவர். ஒருவகையில் பெரும்பாலானவர்கள் கற்பனையில்தான் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். என்ன, எதைக் கற்பனை செய்கிறார்கள் என்பது மட்டும் ஆளாளுக்கு மாறலாம். அந்த வகையிலும் அவர் வாழ்க்கை ஒரு சாராசரி வாழ்க்கைதான்.

ஆனால் சிலவற்றில் சராசரித் தன்மையை கடந்து வெகு தூரம் சென்று விட்டார். அவர் 2002 ம் ஆண்டு தன் உயில் ஆவணத்தை பதிவு செய்திருந்தார். (2009-ம் ஆண்டு வாக்கில், உயில் ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தவற்றை எங்கள் பெயருக்கே பதிவு செய்து அதற்கான அனைத்து சம்பிரதாயங்களையும் அவரே முடித்து, ஆவணங்களை எங்களிடம் கொடுத்து விட்டார்.) அந்த உயில் ஆவணத்துடன், தன் இறுதி விருப்பம் என ஒரு பட்டியலையும் எழுதி எங்களிடம் கொடுத்திருந்தார். அவற்றில் சில..

.

.

6. எனது இறுதி பயணத்திற்கான துணி வகைகள் அலமாரையில் இருக்கும். அவை தவிர வேறு எதுவும் பயன்படுத்த வேண்டாம்.

7. சவரம் (Shave) பண்ண வேண்டாம்.

8. உயிர் பிரிந்தபின் விரைவாக எரித்திட வேண்டும். எரித்த பின் 3-வது அல்லது 5-வது நாள இறுதிச் சடங்குகளை முடித்திட வேண்டும்.

9. செய்தித்தாள் விளம்பரம், போட்டோ மாட்டுதல் கூடவே கூடாது.

10. ஒவ்வொரு ஆண்டும் இறந்த திதி அன்று ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு, உடை, தட்சணை ஆகியவை நீங்கள் விரும்பினால் வழங்கலாம்.

 

அவர் துணிகள் வாங்கி வைத்திருந்தார். எப்போது வாங்கியது என்று தெரியவில்லை. குறைந்தப்பட்சம் 10 வருடங்களாவது ஆகியிருக்கலாம். அவற்றையே உபயோகித்தோம். அம்மா இருக்கும் வரை அவரது 10 வது விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதன் பின், நான் அவற்றைத் தொடரப் போவதில்லை. பிற இருவரையும் பற்றி எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு (எந்த) உறவுகள் சார்ந்த(தும்) மெல்லுணர்வுகள் (Sentiments)  இல்லை. எனவே இதற்கான தேவையும் இல்லை.

 

 

புறவயமான பார்வையில், கடைசி ஒன்றரை வருடங்கள் அவர் வாழ்க்கையின் கடினமான பகுதியாக தோன்றக்கூடும். அம்மா முழு நேரத்தையும் அவருக்காகவே செலவழித்தார். அம்மாவுக்கு எங்களால் முடிந்த அளவில் உதவியாக இருந்தோம். அவரை கவனித்துக் கொள்ள வெளியாட்கள் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் அதை விரும்பவில்லை. அவரும் விரும்பியிருக்க மாட்டார். உறக்கச் சிக்கல்கள் இந்தக் காலகட்டத்திலும், இறுதி நாள்வலை இருந்தது. உறக்க மருந்து இந்தச்சிக்கலுக்கு உதவவில்லை. உறக்க மருந்து கொடுத்தால், இரவில் உறங்காமல் மறுநாள் பகல் முழுவதும் உறங்குவார், எனவே அதைத் தொடரவில்லை.

17-05-2021 அன்று சுமார் 11 மணி முதல் கபம் காரணமாக மூச்சுவிடுதல் கடினமாக இருந்தது. இது சுமார் ஆறு மணிவரைத் தொடர்ந்தது. அவரது மரணம் இயல்பானதாக, இயற்கையானதாக இருக்க வேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்பினோம். அவரும் அவ்வாறே விரும்பியிருந்தார். எனவே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முனையவில்லை. கபத்தினால் அவதியுறுவதைப்பார்த்து அதற்காக மருந்து கொடுத்தோம். கபம் இளகியது. சில நிமிடங்களில், மாலை சுமார் 07:10 அளவில் உயிர் பிரிந்தது. அவரது இறுதி மூச்சுகள் வெளிப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தோம்.

உயிர் மற்றும் வாழ்க்கை சார்ந்தவற்றில் மேற்கத்திய நவீன சிந்தனைய உடைய ஒருவருக்கு, ஒன்பது மணிநேரம், உயிரை விட காத்திருக்கும் ஒருவரை ஆஸ்பத்திருக்கு எடுத்துச் செல்லாமல் அவ்வாறே வைத்திருப்பது, கடுமையான ஒன்றாக, அல்லது ஒரு கொலையாகக் கூட தோன்றலாம். ஆனால் ஆரோக்கிய நிகேதனம் நாவல் படித்திருக்கும், Death An Inside Story படித்திருக்கும், இந்தியத் தத்துவங்களில் மரணம் பற்றிக் கூறப்பட்டிருப்பவற்றில் குறைந்தப்பட்ச புரிதலையாவது உடைய எனக்கு, அது மிக இயல்பான ஒன்றாக இருந்தது.

blog.change@gmail.com

No comments: