Wednesday, December 31, 2014

ரசனை

சிறகு இணைய இதழில் 27-12-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை


ரசனை என்பதை வார்த்தைகளில் பிடித்துவிட முடியுமா? முயற்சித்துதான் பார்க்கலாமே! ரசனை, உணர்வின் பிரதிபலிப்பு. உணர்வு மனதினுள்தான் பிரதிபலிக்க முடியும். மனதினுள் பிரதிபலிப்பது என்பது, அடைந்த உணர்வை மீண்டும் மனம் உணர்வது ஆகும். அதாவது, ஒரு உணர்வை அடையும் மனம், அந்த உணர்வை உணர்வதை தன்னுள் உணர்வது ஆகும். உதாரணமாக இசையை கேட்கும்போது, செவியின் மூலம் மனம் அதை உணர்கிறது. அந்த உணர்வுடன் மனம் அதன் செயல்பாட்டை முடித்து விட்டால், அங்கு இசை கேட்பது மட்டும்தான் இருக்கும். இசை ரசனை இல்லை. ஆனால், அந்த இசையை கேட்கும்போது மனம் அடையும் உணர்வை, அதே மனம் உணரும்போது அங்கு இசை ரசனை பிறக்கிறது. அந்த உணர்வின் அனுபவத்தை ரசனை எனலாம்.

மனதின் உணர்வுகளை மனமே அறியும்போது அடையும் உணர்வை நுண்ணுணர்வு என்றும் கூறலாம். எனவே ரசனைக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. நுண்ணுணர்வின் அனுபவம் ரசனை. நுண்ணுணர்வு, புலன் உணர்வுகள் சார்ந்தோ அல்லது புலன்களை கடந்த உணர்வுகள் சார்ந்தோ இருக்கலாம். பெரும்பாலனவர்களுக்கு நுண்ணுணர்வு ஏதேனும் ஒரு புலன் சார்ந்து அல்லது எண்ணங்கள் சார்ந்து இருக்கும். இது, மற்ற புலன்கள் சார்ந்த நுண்ணறிவு அவர்களுக்கு இருக்காது என்பதல்ல. அவையும் இருக்கவோ இல்லாமலோ போகலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட புலன் சார்ந்த நுண்ணறிவு சற்று அதிகமாக இருக்கலாம். அதன் மூலம் அந்த புலன் சார்ந்த ரசனை உடையவர்களாக இருப்பார்கள். புலன் நுண்ணுர்வு அல்லாமல் எண்ணங்களின் மேல் நுண்ணறிவுடைவர்கள், தத்துவம், எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலோ நுண்ணறிவுடன் இருக்க கூடும். நுண்ணறிவு எந்த தளம் சார்ந்து இருக்கிறதோ, அதுவே ஒருவரின் வாழ்க்கைத் தளம். அந்த தளத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நல்விதி பெற்றவர்கள், வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்கள். ரசனையோடு முழு வாழ்க்கையையும் வாழும் நல்விதி, வாழ்க்கைப் போரட்டங்களின் காரணமாக, மிகச்சிறுபான்மையினரால் மட்டுமே பெற முடிகிறது. ஆனாலும் தங்கள் ரசனையை அழியாமல் பேணுபவர்களால், வாழ்க்கையின் சில அம்சங்களையாவது ரசனையுடன், முழுமையுடன் கழிக்க முடியலாம்.

இன்றைய உலகில் ரசனை அனுபவம், பெரும்பாலானவர்கள், பெரும்பாலும் பெறுவதில்லை என்றே தோன்றுகிறது. ரசனைக்கு அடிப்படையான புலனுணர்வுகளைப் பெற்றாலும், அவற்றை பெரும்பாலானவர்களால் ரசனை அனுபவமாக மாற்ற முடிவதில்லை என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அனைவரும் இசை கேட்கலாம். ஆனால், அதை இசையனுபவமாக மாற்ற அனைவராலும் முடிவதில்லை. நுண்ணுணர்வின் இயல்பு, அதன் இயக்கத்தில் அது உணரும்தோறும், உணர்வு தொடர்ந்து அதிநுண்தளங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரே உணர்வையே மீண்டும் மீண்டும் அடைந்தால், அந்த நுண்ணுணர்வு ஒரு இயந்திரத்தனமான இயக்கமாக மாறியிருக்கும். அதாவது நுண்ணுணர்வு இழக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் ரசனையும் அழிந்திருக்கும். எப்போதோ பெற்றிருந்த நுண்ணுணர்வு அல்லது ரசனை, வெறும் இயந்திரத்தனமான இயக்கமாக மட்டும் எஞ்சியிருக்கும்.

மனித மனதினுள் ரசனை அனுபவத்தை உருவாக்கும் எதையும் அழகு எனக்கூறலாம். அழகை அளிப்பது கலை. அதாவது ரசனை, அழகுணர்வு, கலையுணர்வு ஆகிய சொற்கள் அனைத்தும் மனதின் ஒரே உணர்வையே குறிக்கிறது. நுண்ணுணர்வை இழந்த ஒருவருக்கு அழகு என ஒன்று உண்மையில் இருப்பதில்லை. அத்தகையவர் அழகு எனக்கூறுவது, எண்ணங்கள் உருவாக்கும் வெறும் மனப்பிரமையே. அதாவது, ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் தோன்ற வைக்கும் சிலவற்றையே அழகு என்னும் பெயரில் இன்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.

மனதின் பெரும்பகுதியை எதிர்காலம் என்னும் கவலை மூடியிருக்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எதிர்காலத்திற்காகவே செலவிடும்போது ரசனை மனதிலிருந்து மறைந்து விடுகிறது. நுண்ணுணர்வுடன் இருக்கும் குழந்தைகளை, எதிர்காலம் என்னும் ஒரே நோக்கத்தை நோக்கி துரத்தினால், அவர்களும் நுண்ணுணர்வு அல்லது ரசனை என்னும் ஒன்றை அனுபவிக்காமலே, வாழ்க்கை என்பது எதிர்காலம் என்ற ஒன்று மட்டுமே என அதைத்தேடி ஓடத்தொடங்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலம் என கருதியது, நிகழ்காலமாக நிகழ்ந்து கடந்தகாலமாக மாறும்போதும், அதை அறியாமல், எதிர்காலம் என்ற நோக்கத்திற்கான ஓட்டம் மட்டுமே இருக்கிறது. அதாவது, எந்த நோக்கத்துக்காக வாழ்க்கை சக்தியின் பெரும் பகுதி செலவிடப்படுகிறதோ, அந்த நோக்கம் அடையப்படும்போது, அதை முழுமையாக அனுபவிக்க, ரசிக்க முடியாத வகையில், மனதை புது நோக்கங்கள் ஆக்ரமித்திருக்கும்.

ரசனையை அடைய வேண்டுமானால், மனதில் ரசனை அனுபவத்துக்குப் போதுமான இடம் இருக்க வேண்டும். நுண்ணறிவின் செயல்பாட்டுக்கு மனம் குறைந்தபட்ச அமைதியுடன் இருந்தாக வேண்டும். மனம் வெறும் எண்ணங்களால் பொங்கி வழியும்போது, மன உணர்வுகளை அறிவதற்கான இடைவெளியோ, சக்தியோ மனதில் இருப்பதில்லை. நோக்கங்களும் குறிக்கோள்களும், மனதில் பயத்தை உருவாக்குகின்றன. மனதில் எண்ணங்களின் அணிவகுப்புக்கு, வேறு எந்த காரணங்களும் தேவையில்லை. எண்ணங்கள் அணிவகுத்து ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் செல்லும்போது, அவற்றுக்கிடையில் நுழைய நுண்ணறிவுக்கோ, ரசனைக்கோ முடிவதில்லை.

ஒருவருக்கு எந்த புலனுணர்வு சார்ந்த நுண்ணுணர்வு ஆதிக்கத்துடன் உள்ளதோ, அந்த உணர்வு சார்ந்த கலைகள் அவர் மனதை அமைதிப்படுத்தலாம், ஒருமுகப்படுத்தலாம். ஆம், எல்லா கலைகளின் ஆதாரமும், ஆன்மீகத்தேடலே. எந்த நிகழ்வு ஒரு மனிதனிடமாவது மன ஒருமையை, அமைதியை தூண்டுகிறதோ, நுண்ணுர்வை தூண்டுகிறதோ, அழகுணர்ச்சியை தூண்டுகிறதோ, அந்த நிகழ்வை கலை என சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். குறைந்த பட்சம் அந்நிகழ்வு, அந்த ஒரு மனிதனுக்காகவாவது கலையாக இருக்கும். கலை, அதன் இயல்பிலேயே, அதனால் தூண்டப்படுபவர்களை, அதைக்கடந்து செல்வதற்குமான நுண்ணறிவையும் அளிக்கும்.

ரசனை கடந்து செல்லும்தோறும், கலையும் அதற்கேற்ற வகையில் தன்னை மறுஆக்கம் செய்தாக வேண்டும். அவ்வாறு மறுஆக்கம் செய்யமுடியமல் தேங்கிநிற்குமானால், அதை கலை என்னும் சொல்லால் குறிக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், கலையும் ரசனையும் ஓயாத இயக்கங்கள். அவை இரண்டுமே, தேங்கி நின்றால் அவற்றின் இயல்பை இழந்து இயந்திரத்தனமானதாக மாறி விடும் - அதாவது மூளையின், மனதின் இயந்திரத்தனமான இயக்கம்.
ஒரு சமூகம் நாகரீக வளர்ச்சியோ, சிந்தனை வளர்ச்சியோ அல்லது அறிவியல் வளர்ச்சியோ அடைய வேண்டுமானால், அந்த சமூகத்தில் கலையும் ரசனையும் இருந்தாக வேண்டும். கலையும் ரசனையும் இருக்கும் சமூகங்களில் மட்டுமே நுண்ணுணர்வு இருக்க முடியும். சமூக வளர்ச்சிக்கு, அந்த சமூக குடிமக்களுக்கு நுண்ணுர்வு அவசியம். துரதிர்ஷ்டவசமாக, நாம் வாழும் சமூகத்தில், கல்வி என வழங்கப்படும் ஒன்றில் கலையும் ரசனையும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. சமூகப் பொதுவெளியில் கலை என கூறப்படுவது பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காகவே இயங்குவதால், அவை முழுவதும் இயந்திரத்தனமாகி விட்டன. எனவே வணிக நோக்கங்களால் ஆன கலைகளின் ரசனையும்! உண்மையான ரசனையும் கலையும், பொதுக்கல்விக்கு வெளியே, தம் சுயமுயற்சியால் அடைந்த ரசனை உணர்வுடன் இருக்கும் சிறுபான்மையினரிடம் மட்டுமே, பொதுக்கல்வியின் அன்றாட அழுத்தத்திற்கு தங்களை முழுவதும் இழந்து விடாத வெகு சிலரிடம் மட்டுமே, சற்றேனும் எஞ்சியிருக்கிறது.


ரசனையையும் கலையையும் இழக்கும் சமூகம், நாகரீகத்தில் தேக்கமடைவதை தவிர வேறு வழியில்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நம் நாகரீகம் கூறப்படுகிறது. அதாவது நாம் வாழும் சமூகம் நெடுங்காலமாகவே கலையையும் ரசனையையும் ஒரு இயக்கமாக தன்னுள் இணைத்துள்ளது. ஆனால் நாம் வெறும் பழம்பெருமை மட்டும் பேசிக்கொண்டு, அந்த பெருமைக்கு எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதன் மூலம் அந்த நாகரீகத்தை தேக்கமடையச் செய்து, அழிவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். ரசனையையும் கலையையும் இழப்பதன் மூலம் நம் நாகரீகத்தை தேக்கமடைய செய்கிறோம். இங்கு நாம் செய்யக்கூடியதெல்லாம், ஓரளவேனும் ரசனையும் கலையுணர்வு உடையவர்களாவது, அதை இழக்காமல், தங்கள் ரசனையையும் கலையுணர்வையும் மேலும் உயர்ந்த தளங்களுக்கு எடுத்துச்செல்வது மட்டுமே. அதன் மூலம், நம் பழமை வாய்ந்த நாகரீகம், சமூகத்தின் இருட்டறைகளிலாவது, தகுந்த தருணத்தை எதிர்பார்த்து, தன் உயிர்ப்பை வைத்திருக்க செய்வது. அது மட்டுமே நம்மை உருவாக்கிய சமூகத்துக்கு, நாகரீகத்துக்கு, நம்மால் அளிக்க முடியும் குறைந்த பட்ச பங்களிப்பு!

blog.change@gmail.com

Sunday, November 23, 2014

வாழ்தல்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் மேல் எத்தகைய சுய ஆதிக்கமும் இல்லாமல், வாழ்கிறோம் என்னும் உணர்வில்லாமல், மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தும் ஒரே காரணியான சுய அறிதல் சற்றும் இல்லாமல். மனித வாழ்க்கை மகத்தானது, தவற விடுவதற்கு மிக மிக அரிதானது, (Too precious to miss). எனினும் அதைத் தவற விட்டு, வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையை முழுமையாக அனைவரும் வாழ்வதற்கு தகுதியான சூழல், இன்றைய காலகட்டத்தைப்போல வேறு எப்போதும் இருந்ததில்லை. எனினும் இன்று வாழ்க்கையை மனிதர்கள் இழப்பது போல வேறு எந்த கால கட்டத்திலும் இழந்து விட்டதாகவும் தோன்றவில்லை.

வேறு எந்த காலகட்டத்திலும், மனிதர்களில் ஒரு சிறு குழுவினரைத்தவிர மற்ற அனைவருக்கும், தத்தம் அன்றாட வாழ்க்கைத்தேவைகளை அடைவதற்கே அவர்கள் வாழ்க்கை போதுமானதாக இருந்திருக்கவில்லை. அந்த நிலையில், அவர்கள் விரும்பியிருந்தாலும், வாழ்க்கையை அவர்களால் முழுமையாக வாழ்ந்திருக்க முடியாது. தற்போதைய காலகட்டத்தில், அன்றாடவாழ்க்கைத்தேவைகள், மிக மிக எளிதாக அனைவராலும் பெற முடிகிறது. அத்துடன் வாழ்க்கையின் பாதுகாப்பையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள், வாழ்க்கையை வாழாமல், அன்றாடத்தேவைகள் என்பதன் அர்த்தத்தை விரித்துக்கொண்டே சென்று, தேவைகளை அடையமுடியாத இடத்தில் தங்களை அமர்த்திக் கொள்கிறார்கள். - பொருளாதார நிலையில் அனைத்து தளங்களில் உள்ளவர்களும். அதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதையும் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார்கள் - தாங்கள் மரணிக்கும்வரைக்கும்; வாழும் சாத்தியத்தை முழுமையாக இழப்பதுவரைக்கும். அதற்கு தோதாக மறுபிறவி என்னும் ஒரு கற்பனையையும், அந்த கற்பனையின் மூலம் இன்னொரு பிறவியில் முழுமையாக வாழலாம் என்னும் இன்னொரு கற்பனையையும் தம் மனதுக்குள் விரித்தெடுத்து கொள்கிறார்கள் - மறுபிறவி என்னும் ஒன்று இருந்தால், அது எவ்வாறு நிகழ்கிறது என்னும் அறிதலை சற்றேனும் அடையாமல்.

ஒரு பெருங்கூட்டம், தங்களுக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் சாத்தியத்தை, சுயத்துடன் வாழும் சாத்தியத்தை, இழப்பதை அறியாமலே, புறங்கையால் தள்ளிவிடுவதை காணும்போது, அச்சாத்தியத்தை உணர்ந்த எவரும் தனிமையில் கண்ணீர் விடாமல் கடந்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை. துரதிர்ஷடவசமாக, சுயம் என ஒன்று இல்லாமல் வாழும் எவருக்கும், அவர்கள் வேண்டாம் என தள்ளிவிடுவதன் மதிப்பையும் உணர்த்தமுடிவதில்லை.

ஆம், நாம் மந்தைகளாகவே வாழ்ந்து வருகிறோம். சுயம் என அறிந்திருப்பது உண்மையில் நம் சுயம் அல்ல; மந்தையால் உருவாக்கப்பட்ட அகங்காரத்தையே! நம்மை சுற்றியிருக்கும் மந்தையின் பாகங்களாகிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் என்றும் சான்றோர் என்றும் கூறப்படுபவர்கள், நண்பர்கள், பகைவர்கள், ஆகியோர்களால் பாராட்டப்பட்டும், அவமானிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், சார்ந்து இருந்தும், எதிர்த்து இருந்தும் அகங்காரம் என்னும் நாம் அறியும் சுயம் நமக்குள் உருவாக்கப்பட்டு விட்டது. அந்த அகங்காரம் என்னும் சுயம் ஊக்குவிக்கப்படுவதை இன்பம் என்றும், தாக்குதலுக்குள்ளாவதை துன்பம் என்றும் பிரித்து வைத்து விட்டோம்.

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் என்று கூறுபவர்கள் இரண்டு வகைகளில் இந்த இன்ப துன்பங்களை கடந்திருக்க கூடும். ஒரு சாரர், இந்த இன்ப துன்பங்களை உணரும் தன்மையை இழந்து, மன அளவில் உணர்ச்சியற்று மரத்து போயிருப்பார்கள். அவர்களால் இன்ப துன்பங்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், தாங்கள் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நோக்கி, இயந்திரத்தனமாக முன்னேறிச் செல்ல முடியும். அவர்கள் சந்தேகம் இல்லாமல் தங்கள் நோக்கத்தை அடைவார்கள். ஆனால் அவர்களால் மனித வாழ்க்கையை வாழ முடியாது. அவர்கள் வெறும் இயந்திரங்களே. துரதிர்ஷ்டவசமாக, நாம் நம் குழந்தைகளை இந்த வழியிலேயே ஆற்றுப்படுத்துகிறோம். ஏனெனில் வெற்றிக்கு இன்னொரு வழி இருப்பதை நாமே அறிந்திருக்கவில்லை.

இரண்டாவது வகையினரும் இன்ப துன்பத்தை சற்றேனும் கடந்திருப்பார்கள். அந்த இன்ப துன்பங்களை அனுபவித்தபடி, உணர்ந்தபடி, இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் பாகங்களே, அவற்றை அனுபவிப்பதே வாழ்க்கை என்னும் புரிதலுடன், அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் நோக்கங்களை எந்த வகையிலும் பாதிக்காமல், நோக்கம் என்பதை ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் கொண்டு, அந்த நோக்கத்தை நோக்கி, அனைத்தையும் அனுபவித்தபடி, நெகிழ்வுத்தன்மையுடன் சென்று அடைவார்கள். அவர்களே வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நோக்கமும் வாழ்க்கையைப்போல நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், மிக எளிதாக அந்த நோக்கத்தை அடைந்திருப்பார்கள் - நோக்கத்தை அடையும்வரை எத்தனை இன்பதுன்பங்களை அடைந்திருந்தாலும்! மனிதர்களாக நோக்கத்தை அடைந்தவர்கள்! அவர்களுக்கு என் வணக்கங்கள்!
இன்ப துன்பங்களில் தங்களை இழப்பவர்கள், வாழ்க்கையில் எந்த நோக்கத்தையும் அடைய முடியாது. அவர்களுக்கு நோக்கம் எனவும் ஒன்று இருக்க முடியாது. எனவே வெற்றியும்! துரதிரஷ்டவசமாக, மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த மந்தையிலேயே இருக்கிறார்கள். பெற்றோரால் வெற்றியடையும் இயந்திரமாக உருவாக்கப்படும் பெரும்பாலான, அந்த வெற்றிக்கான திறமை இல்லாத குழந்தைகளும், இந்த மந்தையிலேயே வந்து சேர்கிறார்கள். அல்லது சேர்த்து விடப்படுகிறார்கள்.

தத்துவார்த்த தளத்தில், உடலை 'நாம்' எனக்கொள்ள முடியாது, நம்மில் இருக்கும் ஆன்மீக சாரத்தையே 'நாம்' எனக்கொள்ளமுடியும் என்று கூறப்பட்டாலும், அந்த ஆன்மீக சாரம் நிலைத்திருப்பதற்கு உடலும் மிக அவசியம். அந்த தளத்தில் உடலையும் 'நாம்' எனக்கூறலாம். உடல் ஒரு ஒற்றை இருப்பு அல்ல. அது கோடானுகோடி 'செல்'களால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுத்தொகை. ஒவ்வொரு 'செல்'லும் அதற்கென உயிரும் வாழ்நாளும் கொண்டவை. அதாவது, கோடானுகோடி உயிரினங்களின் கூட்டுத்தொகையே 'நாம்' என அறியப்படுவது. அந்த உயிரினங்களின் கூட்டு ஆன்மீக சாரமே, ஒற்றை இருப்பாக, மனிதன் என அறியப்படும் நம் ஆன்மீக சாரம். அந்த 'செல்'கள் நம் உடலினுள் தங்கள் ஒருங்கிணைப்பை இழக்கும்போது, ஒரு மனித இருப்பாக, நம் உயிரையும் எனவே ஆன்மீக சாரத்தையும் இழந்திருப்போம்.

மனித வாழ்க்கையை வாழ்தல் என கூறும்போது, உடலில் இருக்கும் கோடானுகோடி 'செல்'களும் வாழ்வதே ஆகும். அகங்காரத்தை மட்டும் 'நாம்' எனக்கொள்ளும்போது, அகங்காரம் அடையும் இன்பங்களை அதிகரிப்பதையும், துன்பங்களை குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும்போது, உடலில் வாழும் கோடானுகோடி 'செல்'களை, தம் இருப்பின் மூலம் நம் இருப்பை அளிக்கும் கோடானுகோடி உயிர்களை மறந்து விடுகிறோம். அத்துடன் நம் வாழ்க்கையை வாழ்தல் என்னும் சாத்தியத்தையும் அறிவிலிருந்து விலக்கி விடுகிறோம்.

அகங்காரம் விரும்பும் உணவை, அகங்காரம் விரும்பும் வகையில், நம் இருப்பை உறுதி செய்யும் கோடானுகோடி 'செல்'களாகிய உயிர்களுக்கு அளிக்கிறோம். அளிக்கும் உணவை அந்த உயிர்கள் விரும்புகின்றனவா, ஏற்றுக்கொள்கின்றனவா, போதுமானதாக உள்ளதா என்னும் அறிதல்கள் இல்லாமல், அகங்காரம் விரும்பும்வரை அவற்றுக்கு அளிக்கிறோம். மனித உயிர், அதற்கென ஒரு நோக்கத்தை கொண்டுள்ளதைப்போல, உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் அதன் இயல்பு மற்றும் உடலில் அதற்கு அளிக்கப்பட்டுள்ள தொழிலுக்கேற்ப ஒரு விழைவை கொண்டிருக்கும். மனிதர்களோ உடலின் 'செல்'களின் விழைவிற்கு எத்தகைய மதிப்பையும் அளிக்காமல், அகங்காரத்தின் விழைவிற்கேற்ப, வாழ்க்கைய அமைக்க முயற்சிக்கிறோம். உண்மையில், நம்மை உருவாக்கிய அந்த கோடானு கோடி உயிர்கள் அவற்றின் விழைவை அடையும் போது, அவற்றுக்கான தொழிலை மனித உடலினுள் தங்குதடையின்றி செய்யும் சூழல் அமையும்போது, அவற்றின் தொகுப்பான 'மனிதன்' எனப்படும் நாமும், நம் விழைவை நோக்கி சென்று கொண்டிருப்போம். அகங்காரத்தின் விழைவிற்கேற்ப செல்லும்போது, நம்மை ஆக்கிய உயிர்களின் விழைவிற்கு எதிராக செல்லும்போது 'நம்' இருப்பில் முரண்பாடு ஏற்படுகிறது. அந்த முரண்பாடு வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மை விலக்கி விடுகிறது.

ஆம், வாழ்க்கையை முழுமையாக வாழ, நம்மில் முரண்பாடு களையப்பட வேண்டும் - எல்லா நிலைகளிலும்; மனத்தளத்திலும், உடல் தளத்திலும், செயல்கள் தளத்திலும், உணர்வு தளத்திலும்..... முரண்பாடுகள் களையப்படும்போது, மனித உடலில் உள்ள கோடானுகோடி உயிர்களாகிய 'செல்;'களின் ஒத்திசைந்த இயக்கமே, மனித உயிரின் ஒற்றை இயக்கமாக வெளிப்படும். அந்நிலையில், மனித வாழ்க்கை முழுமையாக நிகழும். ஆனால், அது அத்தனை எளிதான ஒன்றாகவும் தோன்றவில்லை. அந்த ஒத்திசைவை உருவாக்க வேண்டுமானால், நம்மில் நிகழும் முரண்பாடுகளை அறிய வேண்டும். அதுவே சுய அறிதல். அந்த அறிதலில், முரண்பாடுகள் ஒத்திசைவாக மாற்றமடையும். எந்த முரண்பாடுகளையும் இல்லாமல் செய்வதற்கான ஒரே வழி, அந்த முரண்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதே. அப்புரிதல், முரண்பாட்டை, அதுவாகவே முற்றிலும் இல்லாமல் செய்து விடும். முரண்பாடுகளை இல்லாமல் செய்ய முயலும் மற்ற எல்லா வழிகளாலும் செய்ய முடிவது, அதை பொதுப்பார்வையிலிருந்து மறைத்து, உள்ளுக்குள் எடுத்துச் செல்லவதை மட்டுமே. அங்கு அந்த முரண்பாடு தன் இடத்தை நிறுவி, வேறு பல புதிய முரண்பாடுகளுக்கு ஆதாரமாக திகழும்.


எனில் வாழ்க்கையை வாழ்தல் என்பது எதுவாக இருக்க கூடும்? வாழ்வின் எந்தந்த தருணங்களில் எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் முழு ஒத்திசைவுடன், முரண்பாடுகள் இல்லாமல் நிகழ்கிறதோ, அந்த தருணங்கள் மட்டுமே மனிதப்பிறவியாக வாழ்க்கையை வாழும் தருணங்களாக இருக்க கூடும். மனிதனுக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் அழகானது. தனிமனித வாழ்க்கை எந்த கணத்தில் வேண்டுமானாலும் முடிந்து விடலாம். இந்த அரிய வாழ்கையை வாழாமல் இழப்பதைவிட மனிதன் இழப்பதற்கு வேறு மதிப்புடைய எதுவும் இல்லை. ஆனாலும், அந்த மகத்தான வாழ்க்கையை வாழாமல் இழந்து கொண்டிருக்கிறோம் - எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்குமான ஒத்திசைவை இழந்ததன் மூலம்! உயிர் இருப்பின் கடைசி கணம் வரை, அது அடுத்த கணமாக இருந்தாலும், ஒருகணத்திலேனும் முழுமையாக வாழ்வதற்கான சாத்தியம் எல்லா மனிதர்களுக்கும் உள்ளது. அந்த சாத்தியத்தை அறிவோமாக! வாழ்க்கையை வாழ்வோமாக!

blog.change@gmail.com

Thursday, November 13, 2014

ஞானமடைதல்

மனித மனதின் இயல்பு தேடுதல். எதை அடைந்தால் வேறு தேவைகள் இல்லையோ அதை அடையும்வரை தேடுவது. அந்த 'அது' எது என 'அதை' அடைவதுவரைக்கும் தெரிவதில்லை. ஆனால் மனித தேடுதல் அந்த ஒன்றை நோக்கி மட்டும் இல்லை. தேடுதலில் ஒரு எல்லையை அடைந்தவர்களே, அந்த கடைசியான ஒன்றைத் தேடுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும், மனதின் இயல்பின் காரணமாக, தாங்கள் அறிந்தவற்றையே தேடுகிறார்கள். தேடியவற்றை அடைந்த பின், மற்றொன்றை பற்றிக்கொண்டு அதைத் தேட தொடங்குகிறார்கள். அதையும் அடைந்த பின் மீண்டும் இன்னொன்றை. மனதின் தேடும் இயல்பை அறிந்தவர்களால் மட்டுமே, அறியாத ஒன்றை, அந்த இறுதித் தேடுதலை,  நோக்கி தங்கள் தேடுதலை திசை திருப்ப முடியும். அதை அடைந்தவர்கள் ஞானமடைந்தவர்கள், மனிதப் பிறவியாக முழுமையை அடைந்தவர்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள்!

மனம் என்பதை மூளையின் இயக்கங்களை அறியும், மூளையினுள் இருக்கும் ஒரு புலன் என கருதலாம் - அல்லது புலனால் உணரப்படும் உணர்வு. அந்த புலன் மூளையின் இயக்கங்களை உணர்வது, மனமாக மூளையினுள் உணரப்படுகிறது. ஆச்சரியமாக, மனதை உணரும் புலனும் மூளையினுள் இருப்பதால், மனமாக மூளையினுள் அடையப்படும் உணர்வுகளையும் அந்த புலனால் உணரமுடியும். அதாவது தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்தல். ஒரு முடிவற்ற, தன்னைத்தானே இயக்கும் கண்ணியைப்போல (Endless Self Refernecing Loop)  இரு கண்ணாடிகளுக்கு இடையில் நின்றுகொண்டு, அந்த கண்ணாடிகளில் தெரியும் முடிவற்ற நம் பிம்பங்களை, அந்த பிம்பங்களே நோக்குவதைப்போல! ஞானமடைதல் என்பதை மூளையின் இத்தகைய சுய அறிதல் என்னும் கோணத்திலும் காணலாம்.

ஞானமடைதல் என்னும் நிலையை அடையும்போது, மனமாக உணரப்படும் மூளை, தன்னைத்தானே முடிவில்லாமல் உணர்ந்து கொண்டு, தன்னில் நிலைத்திருக்க கூடும். அது மூளையில் உள்ள அணுக்களின் அல்லது செல்களின் அல்லது நியூரான்களின் ஒத்திசைந்த ஒரு நிலை. அந்த நிலையை அடைந்த மூளைக்கு வேறு தேடுதல்கள் இல்லை. அந்த ஒத்திசைந்த நிலைக்கேற்ப, அதன் இயக்கத்திற்கு தேவையான செயல்களை, அதன் உள்ளிருக்கும் நுண்ணறிவின் மூலம், வெளியிலிருந்து வரும் (புலன் உணர்வின்) எந்த இயக்கங்களிலோ அல்லது நினைவுகளின் இயக்கங்களிலோ தன்னை இழக்காமல், மூளை செய்ய வைக்கும். அந்நிலையில், மூளையினுள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அந்த மூளையை தன் உடலில் தாங்கியிருக்கும் மனிதனுக்கும் எந்த வாழ்க்கைப் போராட்டங்களும் இல்லை. அம்மனிதனுக்கு வாழ்தல் மட்டுமே எஞ்சியிருக்கும்.
நாம் அடையும் இன்பங்கள், துன்பங்கள் அனைத்தும் புலன்களால் அடையப்பெற்றவற்றை மனம் அறிவதையே. மனதை அறியும் புலனால், மனதையே அறியும் மனம் அடையும் இன்பம், வேறு எந்த இன்பங்களுடனும் ஒப்பீடு செய்ய முடியாதது. (அதை இன்பம் என்னும் வார்த்தையால் விளக்க முடியாது. ஏனெனில் இன்பம் எப்போதும் துன்பத்தையும் தன்னுடன் அழைத்து வரும். மனதை அறிவதில், துன்பம் இருக்க வாய்ப்பில்லை. துன்பத்தை அடையும் மனநிலையில் உள்ள மூளையில் இருக்கும் மனதுக்கான புலன், இன்னும் உணரும் திறனை அடையாததாகவே இருக்கும்)

அந்த நிலையை, அனுபவமாக கூற முடியும் என்று தோன்றவில்லை. அது நம் அன்றாட புழங்குதளத்தில் இல்லை. அவ்வாறு கூற முடிந்தாலும், அந்நிலையின் தொடக்கத்தையாவது உணர்ந்திருக்காதவர்களால், அதை விளக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளவும் முடியாது. உவமைகள் மூலம் மட்டுமே, மூளையின் அந்த நிலையை மற்றவர்களுக்கு கூற முடியும். உவமைகள் மூலம் கூறும்போது, கேட்பவர்களின் கற்பனைத்திறனுக்கேற்ப அது பல்வேறு வடிவங்களில் புரிந்து கொள்ளப்படும். எனினும் அந்த புரிதல்கள் மூலம் ஞானமடைந்த மனதின், மூளையின் இயங்கு நிலையை உணர முடியாது. ஞானமடைதலே அதற்கான ஒரே வழி. ஞானமடைதல் குறித்த எல்லா விளக்கங்களும், உவமைகளும் அவ்வாறு ஒரு நிலை உள்ளது என மற்றவர்களுக்கு உணர்த்துவதும், அதன் மூலம் மனதின் இயல்பான தேடுதலில், ஞானத்தேடுதலையும் ஒரு கண்ணியாக இணைப்பதற்காகவுமே.

மூளையின் இயங்கு முறையை, ஒரு எறும்புக் காலனியின் இயங்குமுறையுடன் ஒப்பிடலாம். ஒரு எறும்புக் கூட்டத்தை, எறும்பு வரிசையை சற்று தொலைவிலிருந்து பார்த்தால், அதன் இயக்கம், முழுமையாகத் திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைவுள்ள இயக்கமாகத் தோன்றும். ஆனால், அதை மிக அருகில் சென்று, தனித்தனி எறும்புகளின் இயக்கங்களாகப் பார்த்தால், அதைவிட மோசமான, ஒழுங்கற்ற ஒரு இயக்கத்தை காணமுடியாது என தோன்றலாம். வரிசையில் எறும்புகள் எதிர் எதிர் திசைகளில், ஒன்றை ஒன்று முட்டி விலகி, வரிசையிலிருந்து திசைமாறி சென்று மீண்டும் வரிசையில் இணைந்து, ஒழுங்கற்ற தன்மையுடன் காணப்படும். அதாவது, எறும்புக் கூட்டத்தை ஒரு ஒற்றை இயக்கமாக பார்ப்பது ஒரு நிலை. அவற்றை தனித்தனி எறும்புகளாக பார்ப்பது இன்னொரு நிலை. ஒற்றை இயக்கமாக பார்க்கும்போது, அவை நம்முள் ஒரு வகை அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம். தனித்தனியாக பார்க்கும்போது, முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை அல்லது உணர்வை கொடுக்கலாம்.

ஒரு எறும்பு கூட்டத்தில் பல்வேறு இன எறும்புகள் இருக்கும். உணவு சேகரிப்பதற்கான எறும்புகள், கூடு கட்டுவதற்கான எறும்புகள், காலனியின் பாதுகாப்புக்கான படை வீரர் எறும்புகள், இனப்பெருக்கத்திற்கான எறும்புகள் மற்றும் இதைப்போன்ற குழுக்கள். உணவு சேகரிக்கும் குழுவை சேர்ந்த எறும்பு, செல்லும் வழியில் உணவைக்கண்டு கொண்டால், அது வரிசையிலிருந்து விலகி அந்த உணவைப்பற்றிக்கொள்ளும். அத்துடன், அதன் மொழியில், ஒரு வகை வாசனையை எழுப்புவதன் மூலம் அந்த கூட்டத்தில் உள்ள மற்ற உணவு சேகரிக்கும் எறும்புகளுடன் தொடர்பு கொள்ளும். அந்த தொடர்பு எல்லைக்குள் தேவையான அளவு உணவு சேகரிக்கும் எறும்புகள் இருந்தால், அவை ஒன்று சேர்ந்து அந்த உணவை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை இருக்கும் உணவின் அளவு மிகக்குறைவாக இருந்து, அதிகமாக அந்த இனத்தை சார்ந்த எறும்புகள் இருந்தால், அங்கு தனியளவில் ஒரு ஒழுங்கின்மை தோன்றி, அந்த ஒழுங்கின்மையே அனைத்து எறும்புகளையும் மீண்டும், முழு அளவில், ஒரு ஒழுங்கினுள் சேர்க்கும்.

ஒரு எறும்புக் காலனி, நீடித்து இருக்க வேண்டுமானால், அதனுள் உள்ள வெவ்வேறு தொழில்களுக்கான இனக்குழுக்களின் பரவல், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருந்தாக வேண்டும். இந்த பரவல், ஒரு எறும்பு காலனியின் வாழ்நாளில் பலமுறை, அந்த காலனியின் இயல்பிற்கேற்ப, மறுஉருவாக்கம் அடையும். ஏதேனும் காரணங்களால், இனக்குழுக்களின் பரவல் தேவையான விகிதத்தில் இல்லாத பட்சத்தில், அந்த எறும்பு காலனி அதன் இருப்பை இழந்து விடும்.

நம் மூளையில் உள்ள நியூரான், எறும்புக் கூட்டத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட எறும்புக்கு இணையாக கருதலாம் (ஒரு ஒப்பீட்டுக்காக மட்டும்). மனித மூளையில் சுமார் 10 பில்லியன் (1000 கோடி) நியூரான்கள் உள்ளன. நியூரான்களில் சினாப்ஸ் (Synapse) என்னும் பகுதி அவற்றின் ஏற்பிகள் (Input) ஆகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, அவற்றின் வெளியீட்டு (Output) உறுப்பாகும். ஒரு நியூரானில் ஏறத்தாழ 200,000 ஏற்பிகள் உள்ளன. நியூரான்களுக்கு இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன - தூண்டப்பட்ட நிலை அல்லது தூண்டப்படாத நிலை. நியூரான்களின் தூண்டப்பட்ட நிலையில், அவை மின்வேதி அணுக்களை (Ions) அவற்றின் வெளியீட்டு உறுப்பின் வழியாக வெளியிடுகின்றன. ஒவ்வொரு நியூரானின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகள், பல ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நியூரான், ஒவ்வொரு நொடியிலும் சுமார் ஆயிரம் முறை தூண்டப்படலாம். ஒவ்வொரு தூண்டுதலிலும் மின்வேதி அணுக்கள் வெளியிடப்படுவதால், அவற்றை திரும்பப் பெறுவதற்காக ஒரு தூண்டுதலுக்கும் அடுத்த தூண்டுதலுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்தாக வேண்டும். இந்த இடைவெளி சுமார் 1 மில்லி செகன்ட் அளவுக்கு இருக்கும்.

நியூரானின் அமைப்பிலிருந்து, ஒவ்வொரு நியூரானும் ஒவ்வொரு வினாடியிலும் இருபது கோடி தூண்டுதல்களை பெற்று, சுமார் ஆயிரம் தூண்டுதல்களை 200,000 வேறு நியூரான்களுக்கு அளிக்கும் சாத்தியத்துடன் உள்ளதை அறியலாம். அதாவது, நம் மூளை எவ்வளவு வேகத்தில் இயங்குகிறது என்பது இந்த எண்ணிக்கைகளிலிருந்து ஓரளவு புலப்படலாம். ஒவ்வொரு நியூரானும் நேர்மறை அல்லது எதிர்மறை தூண்டுதல்களை, அதன் வெளியீட்டு உறுப்பு தொடர்பு கொண்டுள்ள நியூரான்களுக்கு அனுப்ப முடியும். ஒரு நியூரான் தூண்டப்பட வேண்டுமானால், அதன் தூண்டுதல் ஏற்பிகளில் வரும் தூண்டுதல்கள், ஒரு குறிப்பிட்ட குறைந்தப்பட்ச அளவை (Thrushhold) விட அதிகமாக இருக்க வேண்டும். ஒரு நியூரானில் உள்ள 200,000 ஏற்பிகளில், சில நேர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம், சில எதிர்மறை தூண்டுதலை பெற்றிருக்கலாம். அவற்றின் கூட்டுத்தொகை, நேர்மறையும் எதிர்மறையும் ஒன்றை ஒன்று சமன் செய்த பின், குறைந்த பட்ச தூண்டுதல் அளவை கடந்திருந்தால், அந்த நியூரான் தூண்டப்பட்டு, அதன் வெளியீட்டு உறுப்புகளால் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நியூரான்களுக்கு தூண்டுதலை அனுப்பும். நியூரானின் வெளியீட்டு உறுப்பு, வெவ்வேறு நீளங்களால் பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அந்த நீளத்திற்கேற்ப அடுத்த நியூரான்கள், வெவ்வேறு நேரத்தில், முதல் நியூரானிடமிருந்து தூண்டுதலை பெறுகின்றன. அடுத்த நியூரான்கள் முதல் நியூரானிலிருந்து பெறும் தூண்டுதலின் நேரத்திற்கேற்பவும், அதே நேரத்தில் அந்த நியூரான்கள், பிற நியூரான்களிடமிருந்து பெறும் தூண்டுதலிற்கேற்பவும் மூளையின் அந்த நேரத்து செயல்பாடு இருக்கும்.

இந்த தளத்தில் மூளையின் செயல்பாட்டை பார்த்தால், எறும்புக் காலனியில் உள்ள எறும்புகளின் இயக்கத்துடன் உள்ள ஒற்றுமையை உணரலாம். எறும்பு காலனியில் உள்ள எறும்பு, முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் அதன் இயல்பிற்கேற்ப இயங்குகிறது. அந்த ஒழுங்கற்ற தனி எறும்புகளின் இயக்கத்திலிருந்து, மிக ஒழுங்கான எறும்பு காலனியின் இயக்கம் உருவாகிறது. மனித மூளையிலும், நியூரான்கள் அவை பெறும் தூண்டுதலுக்கேற்ப ஒழுங்கற்ற முறையில் பிற நியூரான்களுக்கு தூண்டுதல்களை அனுப்புகிறது. அந்த கோடிக்கணக்கான ஒழுங்கற்ற தூண்டுதல்களிலிருந்து, ஒழுங்கான செயல், எண்ணம், சிந்தனை மனித மூளையில் உருவாகிறது.
நாம் அடையும் அறிவிற்கேற்ப, நியூரான்களின் ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளின் தொடர்புகள் தொடர்ந்து மாற்றமடைய வேண்டும். அல்லது சில ஏற்பிகள் மற்றும் வெளியீட்டு உறுப்புகளில் தூண்டுதல் ஏற்கப்படாமலோ, வெளியிடப்படாமலோ இருக்க வேண்டும். இந்த மாறுதலுக்கேற்ப நம் எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்களும் மாற்றமடைந்திருக்கலாம். நம் மூளைகளில், சில குறிப்பிட்ட நியூரான் கூட்டம், பிற நியூரான்களின் தூண்டுதல்களை கவனிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். அந்த நியூரான் கூட்டமே மனிதன் 'சுயம்' என்பதை அறிவதாகவும் இருக்கலாம். அதாவது நமது எண்ணங்களையும் செயல்களையும் அவை நிகழும் அதே நேரத்தில், உணர்வாக அடைவது.

விழிப்புணர்வு என நாம் கூறுவது, இந்த சுயம் என்னும் நியூரான் கூட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள, பிற நியூரான்களின் தொடர்புகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அதிகரிக்கும்தோறும், சுயம் என்னும் நியூரான் கூட்டத்தில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். முழுமையான விழிப்புணர்வை அடையும்போது அல்லது ஞானத்தை அடையும்போது, 'சுயம்' மூளையில் உள்ள எல்லா நியூரான்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லது மூளையின் எல்லா நியூரான்களும், 'சுயம்' என்னும் நிலையை அடைந்திருக்கலாம்.

நியூரான்கள் அவை அளவில் எந்த அர்த்தங்களும் இல்லாதவையாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு மொழியின் அடிப்படை அலகு எழுத்து. எழுத்துகள், ஒரு நிலையில் குறிப்பிட்ட அர்த்தத்தை கொடுக்கின்றன. ஆனால் ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை தனித்தனியாக பார்த்தால், அந்த வார்த்தையின் அர்த்தத்திற்கும், வார்த்தையை உருவாக்கிய எழுத்துகளின் அர்த்தத்திற்கும் தொடர்பேதும் இல்லை. பல தனிப்பட்ட அளவில் அர்த்தம் உள்ள வார்த்தைகளை கோர்த்து ஒரு வாக்கியம் உருவாக்கப்படுகிறது. அந்த வாக்கியம் முற்றிலும் புதிதான ஒரு அர்த்தத்தை நமக்கு அளிக்கிறது. ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தனித்தனி வார்த்தைகளின் அர்த்தம், ஒரு வாக்கியமாக அவை அளிக்கும் அர்த்தத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாக இருக்கக்கூடும். அவ்வாறே, ஒரு தனிப்பட்ட நியூரான் தூண்டதல், மனம் அளவில் எந்த அர்த்தமும் இல்லாததாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியூரான்களின் ஒருங்கிணைந்த தூண்டுதல் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கலாம்.

இங்கு கூறப்பட்டிருப்பவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே அர்த்தம் உடையதாக இருக்கலாம். ஞானமடைதல் என்பதை வேறு தளங்களில் நோக்கினால், இவை எந்த அர்த்தமும் இல்லாத வெற்று வார்த்தைகளாகவும் இருக்கக்கூடும். எழுத்துக்கள் வார்த்தையாக மாறும்போதும், வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்போதும், வாக்கியங்கள் பத்திகளாக மாறும்போதும் தத்தம் அர்த்தங்களை இழந்து, அதை விட உயர்ந்த நிலையில் அர்த்தத்தை பெறுவதைப்போல!


பின்குறிப்பு; இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில உதாரணங்களும், நியூரான்களின் செயல்பாடுகள் குறித்த விளக்கமும் GODEL, ESCHAR, BACH: An Eternal Golden Braid என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

blog.change@gmail.com

Monday, November 3, 2014

குடிமைப்பண்பு

சிறகு இணைய இதழில் 25-10-2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

"அதப்பாருங்க சார், அவ்வளவு காஸ்ட்லியான கார் வச்சிருக்கிறாரு. சொசைட்டியில பெரிய ஆளுன்னு காட்டத்தானே? அவரு எவ்வளவு சின்னத்தனமா ட்ராஃபிக் கியூவ மதிக்காம நடுவுல புகுந்து போறாரு. ஓரு Civic Sense இல்லாம, எதிரே வாற ட்ராஃபிக்கையும் நிறுத்த போறாரு'.
இவ்வாறு கூறியவர் மற்றொரு விலை உயர்ந்த வாகனத்தில் போகிறார். சற்று தொலைவில், ஒரு குளிர்பானம் அருந்திய பிளாஸ்டிக் காலி புட்டியை சாலை ஓரத்தில் வீசி எறிந்து விட்டு செல்கிறார். அவரும் படித்தவர்தான். சமூகத்தில் பொறுப்பான நிலையில் உள்ளவர்தான்.

ஆம், இந்தியர்களாகிய நமக்கு Civic Sense எனப்படும் குடிமை உணர்வு, நாம் அடைந்துள்ள அல்லது அடைந்ததாக பாவனை செய்யும் நாகரீகத்தின் அளவுக்கு இன்னும் வந்து விடவில்லை. ஆனால், நாகரீகம் நிலைத்திருக்க, சமூகம் குடிமைப்பண்பை அடைந்தாக வேண்டும். குடிமை உணர்வே சமூக அங்கத்தினர்களுக்கிடையேயான அற உணர்வாகும். சில அடிப்படை மானுட அறங்களைத்தவிர மற்றவை எல்லாம், வாழும் காலத்திற்கேற்ப, பின்பற்றும் நாகரீகத்திற்கேற்ப மாறும் இயல்புடையது. நாகரீக மாற்றத்திற்கேற்ப நம் அற உணர்வுகளையும் மறுமதிப்பீடு செய்தாக வேண்டும். அற உணர்வுகளும் குடிமைப்பண்புகளும், வாழும் சூழலுக்கேற்ப மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சமூகம் அதன் அடிப்படை கட்டுமானத்தை இழந்து விட நேரிடலாம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நம் சமூகத்தில், மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் ஒரு குறுகியவட்டத்தில் மட்டுமே இருந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். மக்கள் வாழ்க்கைக்கு தேவையானவை, அவர்கள் வாழும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே கிடைத்திருக்கலாம். வெளியுலக தொடர்புக்கான வசதிகள் அவர்களிடம் இல்லாமல் போயிருக்கலாம்.

இன்றைய நிலைமை முற்றிலும் வேறானவை. எந்த சமூகத்தினரும் ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைந்து விடுவதில்லை. ஒருவேளை அவர்களால் அந்த வட்டத்தை விட்டு வெளியேற முடியாவிட்டாலும், வெளியுலகம் அவர்களை தேடி வந்து கொண்டே இருக்கும். கூடவே வெளியுலக நாகரீகமும். ஆனால், அந்த புதிய உலகத்தையும் நாகரீகத்தையும் எதிர் கொள்ளவதற்கு, அந்த சமூகம் தயாராக இருக்காது. இதனால், சமூகத்தினுள் முரண்பாடு உருவாகி விடுகிறது. இந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருப்பவை இரண்டே வழிகள்தான். முதலாவது, அந்த சமூகத்தை, அது இருக்கும் தளத்திலே தொடர்ந்து இருக்கச் செய்வது. இது, உண்மையில் ஏற்றுக்கொள்ளவும் செயல்படுத்தவும் முடியாத ஒன்று. ஒரு சமூகத்தையே அதன் முன் உள்ள வாய்ப்புகளிலிருந்து தள்ளி வைப்பது. இரண்டாவது வழி, மாறும் சூழலுக்கேற்ப, வந்து சேரும் வாய்ப்புகளுக்கேற்ப, சமூகத்தின் மன அமைப்பை மாறுதலுக்குள்ளாக்குவது. ஆனால், அந்த மாற்றம் சமூகத்தின் அடிப்படை அறங்களையும் உணர்வுகளையும் மாற்றாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அவையும் மாறினால், ஒரு சமூகமே முற்றிலும் அழிந்து வேறோன்றாக மாறிவிடும். நம் கண்ணெதிரே பல உதாரணங்களு இதற்கும் உள்ளன. அந்த மாற்றத்துடன், அந்த சமூகம் அதுவரை அடைந்த அறிவும் அழிந்து விடும். இத்தகைய அழிவு, சமூகத்தின் ஆழ் மன அளவில் முரண்பாடுகளை கொண்டு வரக்கூடும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. உலகம் அதன் பொருளாதார தேவைகளுக்காக நம்மை நோக்கி வந்தாக வேண்டும். அவை உருவாக்கும் பொருட்களையும், அப்பொருட்களை ஏற்க வைக்கும் கோட்பாடுகளையும் ஓயாமல் நம்மை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். நாமும் அவற்றை எதிர்கொண்டாக வேண்டும். இதைத் தவிர நமக்கு, ஒரு சமூகமாக, வேறு வழியே இல்லை. முரண்நகையாக, உலகம் அவை நம்மிடம் அளிக்கும் நாகரீகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக நாம் மாறியிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கான எத்தகைய விழிப்புணர்வையும் அவை உருவாக்குவதில்லை. ஒருவேளை, உலகத்துக்கு அது தேவை இல்லையோ? ஆனால் ஒரு சமூகமாக நிலைத்திருக்க, அந்த மாற்றத்தை நாம் தழுவியாக வேண்டும். மாற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சமூகத்தினுள் அந்த மாற்றத்திற்கான விதைகளை விதைத்தாக வேண்டும். நம் அடிப்படை அற உணர்வுகளை இழக்காமலே, புதிய உலகை எதிர்கொள்ள தேவையான மன அமைப்பை, ஒரு சமூகமாக, உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்றுக்கொள்ளும் நாகரீகத்திற்கேற்ப, உலகம் வழங்கும் வசதிகளுக்கேற்ப, நம் குடிமைப்பண்புகளையும் மாற்றத்துக்குள்ளாக்கியாக வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், நாம் செல்லும் இடங்களில், இத்தனை கூட்டமாக மக்கள் திரளை கண்டிருக்கவில்லை. சேவைக்காக காத்திருக்கும் இடங்களில், பெரும்பாலும் வரிசை என்ற ஒன்று தேவைப்பட்டிருக்கவில்லை. சாலைகளில் இத்தனை வாகனங்கள் இல்லை. அல்லது சாலை விதிகளை கடைபிடிக்க, நம்மிடம் ஒரு வாகனம் இருந்திருக்கவில்லை. ஒருவேளை வாகனம் இருந்திருந்தாலும், செல்வதற்கு தடையாக எங்கும் மக்கள் திரள் இருந்திருக்கவில்லை. அன்று நமக்கு தேவையான பொருட்கள் மிகவும் குறைந்த பட்சமானவையே. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையும், அதன் புறவினையாக, கழிவுகளை உருவாக்கவில்லை. அவ்வாறே கழிவுகள் உருவாக்கப்பட்டாலும் தேவைகள் குறைவாக இருந்ததால், அந்த குறைந்த பட்ச கழிவுகள் மற்றவர்களுக்கு தொல்லையாக இருந்திருக்கவில்லை. இன்னும் இது போன்ற பல இல்லைகள்!

குடிமைப்பண்பின் அடிப்படை விதி, நாம் மற்றவர்களிடமிருந்து எத்கைய நாகரீகத்தை எதிர்பார்க்கிறோமோ, அத்தகயை நாகரீகத்துடன், பிறருடனான நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது. ஆனால் அது அத்தனை எளிமையானது அல்ல. காரணம், மனதினுள் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சட்டகம். மனதினுள், நமது செயல்பாடுகளை மதிப்பிட ஒரு சட்டகமும், பிறர் செயல்பாடுகளை மதிப்பிட இன்னொரு சட்டகமும் அமைந்திருக்கும். நம் மன இயக்கத்தை கவனித்து, இரு சட்டகங்களிலும் உள்ள முரண்பாட்டை அறியாதவரைக்கும், நம் செயல்களையும், பிறர் செயல்களையும் ஒரே சட்டகத்தின் வழியாக நோக்குவது முடியததாகும். இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சிந்தனைவாதிகள் என கூறிக்கொள்பவர்களுக்கும் எளிதானதல்ல.

ஓருவேளை, ஒரு சமூகமாக, நமக்கு இன்னொரு மனசட்டகம் தேவைப்படலாம் - நம் தற்போதைய புழங்கு தளத்தில் குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகம். நம் சமூகத்தில் குடிமைப்பண்பு இல்லை என கூறபவர்கள் எவருமே கூட, உண்மையில் இன்னும் தேவையான அளவுக்கு குடிமைப்பண்புகளுடன் இல்லை என்பதே நிதர்சனம். அதாவது ஒவ்வொருவரும், மற்றவர்கள் பார்வையில், சில பல குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. காரணம், அவர்கள் பார்வையின் வெவ்வேறு மனசட்டகங்களாக இருக்கக்கூடும்.

ஒரு சமூகமாக, குடிமை உணர்வு கொண்டவர்களாக வேண்டிய காலம் வந்து விட்டது. நாம் மாறியாக வேண்டும். இல்லையெனில், நம்மிடம் வந்து சேர்ந்த நாகரீகம், நம்மை உணவாக உண்டு, நம் சமூகத்தை கடந்து செல்ல நேரிடலாம். சட்டங்களும் கட்டுப்பாடுகளும், குடிமைப்பண்புகளுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் அவற்றால், நம் மனச்சட்டங்களை முழுவதும் மாற்றியமைக்க முடியாது. ஆக நமக்கு தற்போதைய அவசர தேவை, குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகங்களை நமக்குள் அமைத்துக்கொள்ள உதவும் விழிப்புணர்வு இயங்கங்களே.

யார் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் உருவாக்குவது? கல்வி அமைப்புகள் அவற்றை கொண்டு வர வேண்டும். ஆனால் நம் கல்வி அமைப்பின் லட்சியம் குமஸ்தாக்களை உருவாக்குவது மட்டுமே. வெளி நாகரீகத்தை வரவேற்று நமக்களிக்கும் அரசாங்கம் எப்போதோ இதற்கான பணிகளை தொடங்கி, முழுமையை அடைந்திருக்க வேண்டும். இப்போதுதான் 'தூய்மை இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.


எஞ்சியிருப்பது நீங்களும் நானும்தான். ஆம், நாம் தான் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் பரப்ப வேண்டும். நாமே பரப்பும்போது, நமது மனச்சட்டகமும், குடிமைப்பண்புகளை நோக்கி சற்றே மாற்றமுறலாம். நம் பணி, நம்மால் முடிந்த தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நம் இயல்பு அதற்கு தேவையான தீவிரமான களப்பணிக்கு அனுமதியளிக்காவிடில், நாம் அறிந்த தளங்களில், குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவது - அங்கு புழங்கும் மற்றவர்களிடம் அப்பண்புகள் இல்லாவிடிலும். எல்லா சமூக மாற்றங்களும், வெகு சிலராலேயே முன்னெடுக்கப்பட்டு, சமூகத்தினுள் அந்த மாற்றங்கள் நிலைநிறுத்தப்படும். குடிமைப்பண்புகளும் அவ்வாறே நிகழலாம். மாற்றத்தை உருவாக்கும் அந்த வெகு சிலராக, நாம் ஏன் நம்மை முன்னிறுத்தக் கூடாது? அதற்கு தேவையான குறைந்த பட்ச களப்பணியுடன் - பொது வெளியில் நம் குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம்! பிறர் வெளிப்படுத்தும் குடிமைப்பண்புகளை, நம் இயல்பில் ஏற்றுக்கொள்வதன் மூலம்!

blog.change@gmail.com

Sunday, October 26, 2014

(மன)அமைப்பிலிருந்து\சட்டகத்திலிருந்து (System) வெளியேறுதல்.

"நுண்ணறிவினால் அதன் அடிப்படை இயல்பின் மூலம், எடுத்துக்கொண்ட அல்லது செய்துகொண்டிருக்கும் செயலின் சட்டகத்திலிருந்து வெளியேறி, வெளியிலிருந்தே அந்த செயலை அதனால் மதிப்பிட முடியும். அவ்வாறு வெளிவந்து மதிப்பிடும்போது, அது செய்யும் செயல்களில் இருக்கும் ஒற்றுமையையே மதிப்பிட முயலும்.  பெரும்பாலும் செயல்களில் ஏதேனும் ஒற்றுமையையும் அறிந்து, அந்த அறிதலை கொண்டு செயலை எளிதாக்க முயலும். நுண்ணறிவால் சட்டகத்தை விட்டு வெளியேற முடியும் என்பது, எப்போதுமே அது சட்டகத்தை விட்டு வெளியேறி விடும் என்பதாக ஆகாது. அல்லது சில நேரங்களில், ஒரு சிறிய உந்துதல், நுண்ணறிவை சட்டகத்திலிருந்து வெளியேறி, செய்யும் செயலை மதிப்பிட வைக்கலாம். உதாரணமாக, ஒரு புத்தகத்தை படிக்கத்தொடங்கிய ஒரு நபர் ஒரே இருப்பாக புத்தகத்தை படித்து முடிக்காமல், தூக்க உணர்வு என்னும் உந்துதல் மூலம், படித்தல் என்னும் சட்டகத்திலிருந்து வெளியேறி, படித்தவற்றை மதிப்பிட உதவலாம்.  இது ஒரு நபர் மட்டும் தொடர்புடைய செயல்களுக்கு."

"ஒருவர் தம் அறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மற்றொருவர், அவரது ஆர்வமின்மையை வெளிப்படுத்தினால், முதலாமாவர் அந்த நிகழ்ச்சி இரண்டாமாவருக்கு பிடிக்கவில்லை எனக்கருதி, தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சிக்கு மாறலாம். அதாவது, முதலாவது மனிதர் தமது மனச்சட்ட்கத்தினுள் இருந்தபடியே, இரண்டாமாவரின் மனச்சட்டகத்தை புரிந்து கொண்டதாக கருதி, வேறு நிகழ்ச்சிக்கு மாறுகிறார். ஆனால் இரண்டாமாவரின் மனச்சட்டகமோ, அவர் வரும்போது தொலைக்காட்சியை நிறுத்தியிருக்க வேண்டும் என்னும் சட்டகத்தினுள் இருக்கலாம். அதாவது, முதலானவர், தம் மனச்சட்டகத்தினுள் இருந்து கொண்டே இரண்டாமாவரின் மனச்சட்டகத்தை புரிந்து கொண்டதாக கருதியிருக்கலாம். ஆனால் அது அத்தனை எளிதானதல்ல."

"நிச்சயமாக, மிக மிக அரிதாகவேனும் சில மனிதர்களால், பல மனிதர்களை உள்ளடக்கிய மனச்சட்டகங்களை அல்லது அமைப்புகளை, அவை ஒரு சட்டக அமைப்பு என இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தாலும், முழுமையாக உணர முடியும். அவ்வாறு உணர்ந்த மனிதர்கள், பெரும்பாலும், மற்றவர்களை அந்த சட்டகம் அல்லது அமைப்பில் பற்றிக்கொண்டிருப்பதை உணர வைப்பதற்காக, அந்த அமைப்புகளிலிருந்து நிச்சயமாக வெளிவந்தாக வேண்டும் என்பதை உணர வைப்பதற்காக, தங்கள் எஞ்சிய வாழ்நாட்களை அர்ப்பணிப்பார்கள்."

மேலே கூறப்பட்டவை சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் ஒரு பத்தியில் கூறப்பட்டிருந்தவற்றின் சாரம் (நான் புரிந்து கொண்ட அளவில்). அது ஒரு ஆன்மீகமோ, உளவியலோ அல்லது சுயமுன்னேற்றமோ பற்றி கூறும் புத்தகம் அல்ல. ஆசிரியரின் முன்னுரைப்படி, உயிரற்ற ஜடப்பொருள்களிலிருந்து, உயிர் எவ்வாறு உருவாகியது என்பதை கூறுவதற்கான, ஆசிரியரின் தனிப்பட்ட முயற்சியே அந்த புத்தகம். எனில், இந்த சட்டகத்தினுள்ளும் இப்புத்தகத்தை எளிதில் அடக்கி விட முடியும் எனத்தோன்றவில்லை. எனவேதான், இங்கு எடுத்தாளப்பட்டுள்ள பத்தி, ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. புத்தகம் பற்றிய குறிப்பு இறுதியில்.....

மனித அறிவு, ஒரு குறுகிய சட்டகத்தினுள் அல்லது அமைப்பினுள், அதன் விதிகளுக்கு உட்பட்டு மட்டும்தான் சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயங்கு அமைப்பு, ஒருவர் புலன்களாலும் அனுபவத்தாலும் அறிந்தவற்றையும், சுற்றுப்புறமும் சமூகமும் அளித்த நம்பிக்கைகளையும் அடிப்படையாக கொண்டிருக்கும்.

மனிதர்களின் அனைத்து இயக்கங்களும், உளவியல் இயக்கங்கள் உட்பட, அதிதீவிரமான விழிப்புணர்வு இல்லாத பட்சத்தில், ஏதேனும் ஒரு அமைப்புச்சட்டகத்தினுள்தான் இயங்கிக் கொண்டிருக்கும். இயக்கத்தின்போது அல்லது இயக்கம் முடிந்த பின் அந்த சட்டகத்திலிருந்து வெளிவந்து, நடந்து கொண்டிருக்கும் அல்லது முடிந்த இயக்கத்தை பார்க்கும்போதுதான் மனிதனால் தான் செய்த செயலை விளங்கிக் கொள்ள முடியும். அதன் சாதகபாதகங்களை உணர முடியும். இது நுண்ணறிவின் அடிப்படை இயல்பு. அதாவது சட்டகத்திலிருந்து வெளிவந்து அதை வெளியிலிருந்து பார்ப்பது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இதனை, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதில்லை. காரணம், தங்களின் எந்த வித முயற்சியும் இல்லாமல், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவில், அது தானாகவே நிகழ்வதால். செயல் ஒரு குறிப்பிட்ட சட்டகத்தினுள் இயங்கிக்கொண்டிருப்பது, எப்போதும் இயந்திரத்தனமானது ஆகும். கணினி, அதில் ஏற்றம் செய்யப்பட்ட செயல்திட்டத்தை (Program), அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதன் அமைப்புக்குள் இருந்து கொண்டே மீண்டும் மீண்டும் செயல்திட்டத்தில் கூறப்பட்டவற்றை செய்வதைப்போல.  அந்த நிலையில், மனிதர்களும் இயந்திரங்களைப்போலவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் - அவர்களின் செயல்களும், கருத்துகளும், எண்ணங்களும் கூட. எனெனில், தங்கள் மனதில் முன்பே ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டகத்தை கடந்து, பெரும்பாலான மனிதர்களுக்கு, செயல்புரியவோ, கருத்துகளை உருவாக்குவதோ இயலாது.

இந்த சட்டக அமைப்புகள் மனிதனுள் எவ்வாறு உருவாகின்றன? ஆன்மீக மரபுகளும் உளவியல் விஞ்ஞானமும் இதனை விரிவாக ஆராய்ந்துள்ளன. அந்த ஆராய்ச்சியின் விளைவுகளே இன்று நமக்கு கிடைக்கும் பல விரிவான கோட்பாடுகளும், மதங்களும், தத்துவங்களும்.

மனித மனம்,  குறைந்த பட்சம் சாதாரண தளத்தில் புளங்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு, மனதினுள் உருவாக்கப்பட்டுள்ள சட்டகங்களையும் மன அமைப்புகளையும் அடிப்படையாக கொண்டே இயங்குகிறது - அதன் உண்மையான இயல்பு அவ்வாறாக இல்லை என்று கூறப்பட்டாலும். இந்த மனச்சட்டகங்கள், சமூக அமைப்புகளாலும், அவர்கள் பெற்ற கல்வியாலும், மதம் இனம் போன்ற அமைப்புகளின் போதனைகளாலும், மனித மனிதினுள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, நல்லது அல்லது தீயது என வாழும் சமூகத்தில் போதிக்கப்படுபவைகளை ஏற்றுக்கொள்ளும் ஓருவர் எவை எவை நல்லது அல்லது  தீயது என தம் மனதினுள் ஒரு சட்டகத்தை உருவாக்கிக்கொள்கிறார். இப்போது அவர் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் இந்த நல்லது அல்லது தீயது என்னும் சட்டகத்தின் வழியாகவே பார்த்து, தாம் பார்க்கும் பொருளின் தன்மையை முடிவு செய்கிறார். இன்னொரு சமூகத்தில் வாழும் ஒருவருக்கு நல்லதும் தீயதும் முற்றிலும் வேறானவையாக இருக்கக்கூடும் - அவர் வாழும் சமூகம் அவர் மனதில் உருவாக்கி அளிக்கும் சட்டகத்தின் தன்மைக்கேற்ப!

அந்த சட்டகத்தினுள் இருந்து கொண்டு மனிதர்களால் எடுக்கப்படும் எந்த முடிவுகளிலும் அல்லது செய்யப்படும் செயல்களிலும், நுண்ணறிவு செயல்படுவதில்லை. அத்தகைய செயல்களும், முடிவுகளும், மனித மனதால் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், அவை வெறும் இயந்திரத்தனமானதே. ஏனெனில் நுண்ணறிவின் அடிப்படை இயல்பான, அமைப்பு\சட்டகத்திலிருந்து வெளிவந்து, செயலை கூர்ந்து கவனித்து, அதன் பின் அந்த முடிவெடுக்கப்படவில்லை. மாறாக மனதில் ஏற்கனவே உள்ள அமைப்புகள்\சட்டகங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில், நிறுவனமயமாக்கப்பட்டுள்ள தொழில் துறையில், நுண்ணறிவு மிக மிக அரிதாகவே தேவைப்படுகிறது - அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம்வரையில்! தொழில் துறையில் நுண்ணறிவு தேவைப்படுவது, செயல் அமைப்புகளையும் சட்டகங்களையும் உருவாக்கும்வரைதான். ஒரு குறிப்பிட்ட செயல் அமைப்பை, செயல் சட்டகத்தை உருவாக்கி விட்டால், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரும், அன்றாட வேலை அந்த செயல் அமைப்பினுள் இருக்குமாறு தங்களை தகவமைத்துக்கொண்டால் போதுமானது. அதாவது, ஒரு நிறுவனத்தினுள் வேலை செய்யும் அனைவரும், கீழ் நிலை முதல் உயர் நிலைவரை, வெறும் குமஸ்தாக்களே - அவர்கள் பதவியின் பெயர் என்னவாக இருந்தாலும். அந்த சட்டகத்தினுள், வேகமான இயந்திரமாக பணிபுரிபவர், நிறுவனத்தின் மேல் பதவிகளுக்கு சென்று கொண்டிருப்பார். மற்றவர்கள் அவர்கள் வேகத்திற்கேறப வெவ்வேறு நிலைகளில் அம்ர்ந்திருப்பார்கள். எனவே நமது கல்வி அமைப்பும், நிறுவனங்களுக்குத் தேவையான குமஸ்தாக்களை உருவாக்குவதையே முழுமுனைப்பாக கொண்டுள்ளது. அமைப்பு சார்ந்த கல்விக்கு வெளியே, தங்கள் நுண்ணறிவால், உண்மையான கல்வியை அடையும் ஓரு சிலரால் மட்டுமே நிறுவனங்களுக்கு தேவையான இயந்திர அமைப்புகளும் சட்டகங்களும் உருவாக்கப்படுகின்றன.

தொழில் நுட்பத்தின் இன்றைய காலகட்டத்தில், மனிதனின் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதற்கு நுண்ணறிவு முற்றிலும் தேவை இல்லாதது. அதன் மறுநிலையாக, மனிதனாக வாழ வேண்டுமானால், நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. ஆக மனிதனின் மனதினுள் ஒரு அடிப்படை முரண்பாடு உருவாக்கப்பட்டு விடுகிறது. பெரும்பாலான மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் நுண்ணறிவுடன் இல்லாத காரணத்தால், அமைப்புகளால் வாழ்க்கைக்கு எவ்வளவு பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அன்றாட வாழ்க்கையையே ஒரு போராட்டமாக கழிக்கிறார்கள். இந்த அன்றாட வாழ்க்கை போராட்டங்களுக்கிடையே, அவர்களுக்கு வாழ்வதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதிலேயே தங்கள் மொத்த வாழ்க்கையையும் கழித்து விடுகிறார்கள். அதற்கு இயந்திரத்தனம் மட்டுமே போதுமானாது. எனவே நுண்ணறிவை பற்றிய அக்கறையும் இல்லை. இன்றைய 700 கோடி மக்களில் மனிதர்களாக வாழ்பவர்கள் எத்தனைபேரோ?


இதில் எடுத்தாளப்பட்டுள்ள பத்தியை கொண்ட புத்தகம்;  GODEL, ESCHAR, BACH: An Eternal Golden Braid. இந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் 'ஒத்திசைவு' வலைப்பூவில், 21-06-2014 தேதியிட்ட பதிவிலிருந்து பெற்றுக்கொண்டேன். 'ஒத்திசைவு' ராமசாமி அவர்களுக்கு நன்றிகள்!

blog.change@gmail.com

Saturday, September 27, 2014

அரட்டை

சிறகு இணைய இதழில் 20-09-2014 வெளியிடப்பட்ட கட்டுரை.

தாங்கள் முற்றிலும் தனிமையானவர்கள் என்பதை உணர முடியாதவர்களுக்கு, தனிமை ஒரு கடும் தண்டனை. அரட்டை, தனிமையை மறைக்கும், மறக்க வைக்கும் கருவி. தனிமையை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்களுக்கான வாழ்க்கைத்துணை. அரட்டைக்கு தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள் மிக சிறுபான்மையினரே. எனில், தனிமையை அஞ்சாதவர்களும் சிறுபான்மையினரே. அரட்டைக்கு தேவைப்படுபவர் முன்பின் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. அதாவது, முன்பின் தெரியாதவர்களையும் ஒருவருடன் ஒருவரை தொடர்புகொள்ள வைக்கும், நண்பர்களாக்கிக் கொடுக்கும். நண்பர்களை, பகைவர்களாக்கவும் அதனால் முடியும்.

சமூகமும் மொழியும் தோன்றிய காலத்திலேயே அரட்டையும் தொடங்கியிருக்க வேண்டும். அரட்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே, எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் குறித்து அல்லாத, எந்த ஒரு இறுதி நோக்கமும் இல்லாத உரையாடல். ஆம் குறிப்பிட்ட நோக்கம் இல்லாத எல்லா உரையாடல்களையும் அரட்டை என வகைப்படுத்தலாம். எனவே அரட்டையினால் பயன் உண்டா என்பதற்கு அறுதியான பதில் எதுவும் இல்லை. நேரத்தைக் கொல்வதை தவிர, தனிமையை துரத்துவதைத் தவிர. அரட்டைச் செல்லும் திசைக்கேற்ப, அரட்டையில் பங்கேற்பவர்களின் அறிதல் வளர்தலோ அல்லது துண்டாடப்படுதலோ நிகழும். அது எவ்வாறாக ஆயினும், தனிமை இல்லாமல் செய்யப்படும். தனிமையை அஞ்சுபவர்களுக்கு அறிதல் குறித்து என்ன அக்கறை!

குறிப்பிட்ட நோக்கம் இல்லை என்பதே அரட்டை எதைக்குறித்தும் இருக்கலாம் என்றாகிறது. அல்லது எதைக்குறித்தும் இல்லாமல் இருக்கலாம் என்றும் ஆகிறது. ஆனால், தொடங்கப்பட்ட ஒரு அரட்டை பெரும்பாலும், முதலில் சொல்லப்பட்ட ஒரு பொருள் விரியும் பல திசைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட திசைகளிலோ விரிந்து செல்லலாம். அறிவார்ந்த தளத்திலோ, முட்டாள்தனமான தளத்திலோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட தளத்திலோ இருக்கலாம். குறிப்பிட்ட நோக்கம் என ஒன்று இல்லாததாலும், சிந்திக்கும் தன்மையும் பொதுவெளியில் மிக அரிதாகவே இருப்பதாலும் அரட்டை பெரும்பாலும் அறிவார்ந்த தளங்களில் நிகழ்வதில்லை. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவார்ந்த அரட்டைகளும் நிகழ்வதுண்டு.

அரட்டை எவ்வாறாக இருந்தாலும், கருத்துகளை, சிந்தனைகளை, நோக்கங்களை, எண்ணங்களை சமூகவெளியில் பரப்பவுதில் தவிர்க்க முடியாத இடத்தைப்பெற்றுள்ளது. எந்த ஒரு சமூக நிகழ்வுகளும் அரட்டையின் மூலமே பெரும்பாலும் பொதுவெளியை அடைகிறது. எந்த கருத்துகளும், கருத்துலக தளங்களில் நிகழ்ந்த பின் அரட்டை மூலமே பொதுவெளியில் அதன் இடத்தை அடைகிறது. அதாவது ஒரு சமூகத்தில் நிகழும் எல்லா கருத்தியல் மாற்றங்களும், கருத்தியல் உலகில் நிறுவபட்ட பின், அரட்டை மூலம் சமூகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அரட்டைகள் மூலம் கருத்துகள் தவிர்க்க முடியாமல் பெருமளவு திரிபும் அடைகிறது. எந்த கருத்தும் சமூகத்தின் வெவ்வேறு தட்டுகளை சென்றடையும்போது, அந்தந்த தட்டுகளின் சிந்தனையின் அல்லது சிந்தனையின்மையின் தன்மைக்கேற்ப, அரட்டை நிகழும் தளத்திற்கேற்ப திரிபு பெற்று விடுகிறது. 

சமூக இயக்கத்தில் அரட்டை இன்றியமையாத பங்கு பெறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், எந்த சமூகத்தில் அரட்டை அறிவுசார் தளங்களில் பெருமளவு நிகழ்கிறதோ அந்த சமூகம் பிற சமூகங்களை விட நாகரீகம் அடைந்ததாக இருக்கும். அங்கு கருத்துலக நிகழ்வுகள் பொது வெளிக்கு மிகக் குறைந்தபட்ச திரிபுடன் மட்டுமே சென்றடையும். கருத்தாக நிலைபெறும் அற உணர்வுகள், அரட்டை மூலம் செயல்களாக சமூகத்தில் தன் இடத்தை அடையும். அந்த சமூகம், குறிப்படத்தக்க அளவில் நேர்மையுடையதாக இருக்கும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை அரட்டை நிகழ்வதற்கு, அதில் பங்கு பெறுபவர்கள் அருகருகே இருந்தாக வேண்டியிருந்தது. இன்றைய இணையம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களின் மூலம் பொதீக தொலைவு இல்லாமல் ஆகி விட்டது. ஒருவர் எங்கிருந்தாலும், இணைய வசதியும், ஒரு மடிக்கணினியோ அல்லது 'ஸ்மார்ட' செல் பேசியோ இருந்தால் ஒத்த வசதிகளுடைய எவருடனும் அரட்டை அடிக்கலாம். உலக நிகழ்வுகளும்,கருத்துலக நிகழ்வுகளும் உடனடியாக அரட்டையாக மறுவடிவம் பெற்று விடுகிறது - அரட்டைக்கான திரிபுகளுடன்!

இன்றைய காலகட்டத்தில், மனிதன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மிக பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால்அதே அளவுக்கு தனிமையிலும் உழலுகிறான் என்றே தோன்றுகிறது. அதாவது அரட்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது. தற்போதைய தொழில் நுட்பத்தில் அரட்டை அடிப்பதற்கு, முகத்திற்கு முகம் நோக்க வேண்டியதில்லையே. டிவிட்டர், முகநூல், கூகிள் ப்ளஸ், வாட்ஸ்அப், இன்னும் என்னென்னமோ.

தொழில் நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள், ஜனநாயக நாட்டில் ஆட்சியையே மாற்றியமைக்கும் அளவுக்கு வலிமை பெற்று விட்டது. ஆம், கருத்துகள் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள் மூலம், மிக வேகமாக பெரும்பான்மையை சென்று அடைகிறது. அது அரட்டை என்னும் காரணத்தால், பொதுவெளியில் அதன் பயணமும் மிக மிக சிறிய கால அளவையே கொண்டிருக்கும். மிகசரியான முறையில் பரப்பிவிடப்படும் அரட்டை, அதன் குறுகிய வாழ்நாளுக்குள் மிகப்பெரிய சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது. அதன் பின் அந்த மாற்றங்களை குறித்த எதிர்மறை கருத்துகளையும்! சீனா போன்ற சில நாட்டு அரசுகள், அரட்டை அடிக்கும் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளமை, அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை தெளிவாக்குகிறது.

தொழில்நுட்பம் அளிக்கும் வசதிகளின் மூலம் அரட்டையை நிகழ்த்துவது, பெரும்பாலும் தங்களை கல்வி கற்றவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சமூகப்பிரிவினரே. அவர்கள் உண்மையில் கல்வி கற்றவர்களாக இருந்தால், தனிமையை அஞ்சுவது ஏன்? கல்வி அச்சத்தை தொலைவில் அல்லவா இருத்தி இருக்க வேண்டும். அல்லது அவர்களின் அரட்டை வேறு   எதேனும் நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படுகிறதா? புதிய சிந்தனைகள் அந்த அரட்டையின் மூலம் நிகழ்கிறதா? நிகழ்ந்த சிந்தனைகள் அலசப்படுகின்றனவா? அருகமர்ந்து அவதானித்த எந்த அரட்டையும் அவ்வாறு நிகழ்வதாக தெரியவில்லை.

இல்லையெனில் அது நிகழ வேண்டும். நாம் கல்வி கற்றவர்களாக இருந்தால், நம்மிடம் வந்த தொழில்நுடபம், நம்மை கருவியாக கொண்டு அதன் வளர்ச்சிப்போக்கை தொடர்ந்தாக வேண்டும். தொழில்நுட்பம் நம் உணர்திறனை, சிந்தனைத்திறனை இல்லாமல் செய்வதற்கல்ல. மாறாக அவற்றை அடுத்த தளங்களுக்கு எடுத்து செல்லவே உதவ வேண்டும். அதற்கு நம்மிடியே சிந்தனை நிகழ வேண்டும். பரிணாம வளர்ச்சி அறிவியலில் "Mutation" என்றொரு வார்த்தை உண்டு - ஒரு உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையில்லாத அம்சம், அதன் பரிணாம வளர்ச்சியில் இல்லாமல் செய்யப்பட்டு, மிகத்தேவையான அம்சம் புதிதாக உருவாகி வருவது. ஒருவேளை உணரும் தன்மையை, சிந்நிக்கும் தன்மையை தேவைஇல்லை என நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்டால், அடுத்த தலைமுறையில் அது பரிணாம வளர்ச்சியின் விதிகளின் படி இன்னும் குறையலாம். மாறாக நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் எந்தெந்த தன்மைகள் அடுத்த தலைமுறையை அடையும் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையால் மனிதர்களுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது - நம் பரிணாம வளர்ச்சியை முடிவு செய்யும் அளவுக்கு! அந்த அறிவை வெறும் வெட்டி அரட்டையில் வீணாக்குவது, இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம். துரோகத்துக்கு பதிலாக, அறிவு "Mute" ஆவதற்கும் சாத்தியம் உள்ளது.


தனிமை இருக்கும் இடத்தில்தான் சிந்தனை நிகழ முடியும். எனவே தனிமையை வரவேற்கத் தெரிந்திருக்க வேண்டும். கல்வி நிலையத்துக்கு சென்றோ செல்லாமலோ கல்வியை அடைந்தவர்களுக்கு, தனிமை ஒரு வரம். கல்வியின் துளியையாவது அடைந்தவர்கள், தனிமையை வெறுக்க முடியாது. அவர்கள் அரட்டையில் ஈடுபட்டாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அவர்களின் அரட்டையில், சற்றேனும் கல்வியின் துளி வெளிப்படும். எனவே அவர்களிடம் சிந்தனையும் நிகழும். அவர்களாலேயே மனித அறிவு "Mute"  ஆகாமல் பரிணாம வளர்ச்சியை அடையும் - மனித இனம் காக்கப்படும்!

blog.change@gmail.com

Saturday, September 13, 2014

கனவு

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலிருந்து, குழித்துறை நிலையத்தில் ஷக்தியும் அவள் அக்காவும் பெற்றோரின் துணையுடன், ஒரு குழந்தைக்கனவு நிகழ்வுகளாக நிகழ்ந்ததன் சுவடுகளுடனும், அது நிகழ்வாக மாறிய அனுபவத்தின் சுமையுடனும் இறங்கினர். சுமை சற்று அதிகம் போலும்! அவர்களால் சுமக்க முடியவில்லை. கனவின் இனிமையையும், நிகழ்வில் இல்லாமல் செய்துவிட்டது அந்த சுமை. ஆனாலும் அனுபவம்தானே கல்வி! சுமை சில நாட்களில் இறங்கி விடும். அனுபவத்தின் நினைவுகளை காலம் முழுவதும் முயன்றாலும் இல்லாமல் செய்துவிட முடியுமா?

இந்த கனவு முதன்முதல் தோன்றியது சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால். 'நாம டூர் போய் ரொம்ப நாள் ஆயாச்சு. ஆறு வருஷமா கேரளா மலை மேல ஏறி எறங்கிட்டு இருக்கோம். இந்த வருஷம் கொஞ்ச தூரமா டெல்லிவரைக்கும் போயிட்டு வரலாமா?' அப்பாவின் இந்த கேள்வி, ஷக்தியின், அவள் அக்காவின் பயணக்கனவுகளை தொடங்கி வைத்தது. கனவுகள்தானே வாழ்க்கையை வாழவைக்கின்றன. அகாலத்திலிருந்து காலத்திற்கு வாழ்க்கயை உந்தி தள்ளுகிறது. பயணம் கல்வியின் தவிர்க்க முடியாத கிளை. ஷக்தியின், அக்காவின் மனம் சரியான திசையில்தான்  அதன் கற்பனையை விரித்தெடுக்கிறது.

பயணக்கனவை நிகழ்வாக்கும் முயற்சிகளும், திட்டமிடலும் தொடங்கிவிட்டன. பயணம், கல்வியின் நடைமுறையாக இருக்கவேண்டுமானால், அதன் மூலம் பெறும் அனுபவங்களும் எதார்த்தத்தை நோக்கி இருந்தாக வேண்டும். விரும்பினால், ஷக்தி பள்ளி விடுமுறை நாட்களில், விமான பயணத்தின் மூலம் விரும்பிய இடங்களை பார்த்து வரலாம்.. அத்தகைய பயணத்தில் பெறும் அனுபவம் வெறும் மேட்டுமைத்தனத்துடன் மட்டுமே இருக்க முடியும். அந்த அனுபவத்திற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. பயணம் அதிகபட்ச உலக அனுபவத்தை அளித்தாக வேண்டும். பரந்த அனுபவத்தை, நீண்ட பயணத்தின் நிலத்தோற்றத்தை, இடத்திற்கு இடம் உள்ள வேறுபாடுகளை ..........

அவர்களை சாதாரண ரயில் பயணத்திற்கு தயாராக்க வேண்டும்

'ஒங்க ரண்டுபேருக்கும் வெளையாடுறது பிடிக்குமா? வெளையாட்ட பாக்கிறது பிடிக்குமா?'
'வெளையாடதான் பிடிக்கும். ஏன்?'

'வெளையாடினா ஒடம்பு வலிக்குமே, செரியா வெளையாடலைன்னா தோத்து போகவும் வேண்டிவருமே? தோத்தாலும் பரவாயில்லையா?'

'நாங்க தோக்க மாட்டோம். ஒங்களதான் தோக்க வைப்போம்'

அவர்கள் நம்பிக்கை வாழ்க! நம்பிக்கை அழியாமல் இருக்க வேண்டும். தோற்றாலும், நம்பிக்கை மீண்டும் துளிர்க்க வேண்டும். வெற்றி தோல்வி என எதுவும் இல்லை, அனுபவம் மட்டுமே உண்டு என்னும் தெளிவு பிறக்க வேண்டும். எல்லா அழிவுகளின் எச்சங்களும், புதிய துளிர்ப்புக்கான உரங்களே என்பதை அவர்கள் அறியவும் வேண்டும். அவர்களை உயிர்ப்புடன் இருக்க அவர்கள் சுற்றம் அனுமதித்தால், அல்லது சுற்றங்களின் அழுத்தங்களில் தங்கள் உயிர்ப்பை இழக்காமல் இருந்தால், இந்த நம்பிக்கை எப்போதும் அழியாது. அறிதல் அந்த நம்பிக்கையின் தன்மையை உண்மைக்கு அருகில் எடுத்துச் சென்றுகொண்டேயிருக்கும்.

'அப்ப டூர் நாம ட்ரெயின்லேயே, ஸ்லிப்பர் கோச்சுல போவோம். அதுதான் வெளையாடுறது. நெறைய நாள் ஸ்கூல் லீவு போடலாம். ஃபிளைட்ல போய் சுத்துறது வெளையாட்ட தூர இருந்து பாக்கிறது போலதான். ஸ்கூல் லீவு எடுக்கவும் தேவை வராது.'

'ட்ரெயின்லேயே போலாம்பா. ஸ்கூல் லீவு எடுக்காம போனா, போன மாதிரி இருக்காதே. ரண்டு வாரம் கூட லீவ் போடலாம் தேவிஷா எனக்காக நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருப்பா. அக்காக்க ஃப்ரெண்டும் அவளுக்கு நோட்ஸ் எடுத்து வச்சிருப்பா. நாங்க வந்து படிச்சிடுவோம்'

'ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். பகல்ல ரெம்ப சூடா இருக்கும். முடியுமா'?'

'போலாம்பா', 'போலாம்பா' கற்பனையின் போதையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இருவருக்கும் தெரியவில்லை.

ஷக்தியும் அவள் அக்காவும் படிக்கும் பள்ளியின் நிர்வாகம், ஒரு மலையாள அமைப்பால் நிர்வகிக்கப்படுவது. ஒவ்வோரு வருடமும், ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். தோராயமாக, அந்த விடுமுறையில் வருமாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. அதுவும் பயணத்தேதிகள் முடிந்த பின்னால்! எவ்வாறாயினும் பயணம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆறு நாட்கள் பள்ளிக்கு போகமுடியாது. அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஆறு நாட்கள் பள்ளிக்கு போக வேண்டியதில்லை. எவ்வளவு பெரிய விஷயம். மகிழ்ச்சி இருமடங்காகியது!

'ஒங்க லக்கேஜ, நானோ அம்மாவோ தூக்க மாட்டோம். ஒங்க பிரச்சன ஒங்களோடது. அதுக்கேத்த மாதிரி ஒங்களுக்கு தேவையான, தூக்க முடிஞ்ச துணிகள மட்டும் எடுத்து வைங்க'
'ட்ரெயின்ல ஏறுனா, ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். படிக்க புத்தகம் எதாவது வேணும்னா எடுத்து வச்சிடுங்க. அதையும் நீங்கதான் தூக்கணும்.'
'பத்து நாளுக்கு வீட்டு சாப்பாடு மாதிரி எதுவும் கெடைக்காது. கெடைக்கிறத சாப்பிடணும். இல்லைன்ன வெளையாட்டுல தோத்துப்போக வேண்டியதுதான். எங்களையும் தோத்துப்போக வச்சிடுவீங்க'

'நாம எடம் பாக்க சுத்துறது எல்லாம், பஸ், மெட்ரோட்ரெயின், ஆட்டோ-விலதான். அழுக்கா இருக்கும், நாற்றமாவும், நெருக்கமாவும், புழுக்கமாவும் இருக்கும். அழகு எல்லா எடத்திலேயும் அழுக்குக்கு பக்கத்திலதான் இருக்கும். அழுக்க விட்டுட்டு அழக மட்டும் பாக்கிறதும், வெளையாடாம வெளையாட்ட பாக்கிறதுதான்.'

பயண விதிகள் அவர்களுக்கு விளக்கப்பட்டன. எதிர் கொள்ள சாத்தியமான பிரச்சனைகளும் அறிய வைக்கப்பட்டன. கனவின் சுவையில் விதிகளின் யதார்த்தம் முழுமையாக மனதுக்குள் நுழையவில்லை. எனினும் ஒரு சந்தேகம் மனதின் ஒரத்தில் வெளிப்பட, அதன் எதிரொளி, முகத்திலும் சற்றே விரிந்தது.

'ஒங்களால முடியுமா'

'பாக்கலாம். நீங்கதான் கூட வாரீங்களே' - ஒரு முழுமையான பதிலை கூறி எந்த ஒரு பொறியிலும் மாட்டி விடக்கூடாது என்னும் தெளிவும், பிரச்சனையை அடுத்தவர்கள் மேல் தள்ளி விடும் சாதுர்யமும்(?)  இருவரிடமும் இருந்தது.

குதிரை வண்டியில் கட்டப்பட்டிருக்கும் குதிரைக்கு முன்னால் புல்கட்டு ஒன்றை கட்டி விடுவார்களாம். புல்லை கடிக்க குதிரை நடக்க, அத்துடன் வண்டியும் இழுபட, புல்கட்டும் முன்னால் செல்ல....ஷக்திக்கும், அவள் அக்காவுக்கும் முன்னால் ஒரு புல்கட்டு தெரிகிறது. என்ன, இன்னும் மூன்று வாரங்களில் புல்கட்டு அவர்கள் வாய்க்குள் இருக்கும். கிட்டத்தட்ட சுமார் மூன்று வாரங்களுக்கு, முழுமையாக அவர்களுக்கு கசப்பையளிக்கும் செயல்களையும், 'புல்கட்டை' காட்டியே செய்ய வைக்கப்பட்டனர்.

 'ஷக்தி டெல்லயில நடந்து நடந்து எடம் பாக்க ஹெல்த் வேணும். இன்னைக்கு வீட சுற்றி நீயும் அக்காவம் அம்பது ரவுண்ட் ஓடுங்க, 700 தடவை ஸ்கிப்பிங் பண்ணணுங்க'

 தினமும் இருபத்தைந்து ரவுண்ட் ஒடுவதற்கே சிணுங்கும் ஷக்தியும் அக்காவும், முகத்தில் தோன்றிய சிணுங்கலை மறைக்கவும் முடியாமல் காட்டவும் முடியாமல், 'ஓகே அப்பா' என்ற வார்த்தையுடன் ஓடவும் தொடங்கி விட்டார்கள். ஆச்சரியம்! ஆச்சரியம்!

'ஷக்தி ஸ்கூலுக்கு  ஆறு நாள் மட்டம் போடப்போற. வந்த உடனேயே டெஸ்ட் இருக்கு, இன்னிக்கு டெஸ்ட்டுக்கு படிச்சுட்டு தூங்க போ'

'இன்னிக்கு நெறய படிச்சாச்சு. டெஸ்ட்டுக்கு வந்து படிக்கலாம்'

'டெஸ்ட்டுக்கு படிக்கலைன்னா டிக்கட் கேன்சல் பண்ணிடலாம். டூர் போகண்டாம்'

'செரி, கொஞ்சம் இன்னிக்கு படிக்கிறன். மீதி நாளை படிக்கவா?'

இன்னும் எத்தனையோ மிரட்டல்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் காரணம் ஒரு கனவு. அதன் சுவை. மூளையின், மனதின் ஒவ்வொரு பகுதியும் கனவுகளை தோற்றுவிக்க வல்லது. அவர்களுக்கான கனவுகள் தோன்ற வேண்டும். பிறர் கனவுகளை காண்பதை தவிர்க்க வேண்டும். எனில் அவர்களுக்கான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

அந்த பயண நாளும் வந்தது. கனவு நிகழ்வாக மாற தொடங்கியது. நிகழ்வுகளின் யதார்த்தம் சிறிது சிறிதாக உருவேற தொடங்கியது. அகாலத்தில் இருந்து காலத்தில் அதன் லீலையை தொடங்கிவிட்டது. அவர்களுக்கான துணிமணிகள் அம்மாவால், அவர்களின் முழு அனுமதியுடன், எடுத்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் அவர்களுக்காக அவர்களே வாங்கிய அல்லது வாங்க வைக்கப்பட்ட புத்தகங்களும் எடுக்கப்பட்டன. இருவருக்குமான பயணப்பை தயாராகி விட்டது. அதுவும் அவர்களால் கையாளப்படும் அளவுக்கே, பள்ளி புத்தகச்சுமையில் பாதிக்கும் குறைந்த அளவுக்கே இருந்தது. திருவனந்தபுரம் சென்று, பெற்றோருடன், கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஏறி விட்டார்கள்.

48 மணி நேர பயணம், ஆக்ரா வரை. பல் வேறு கால நிலைகள், நில அமைப்புகள், மக்கள், மொழிகள், அனுபவங்கள்! உறக்கம், விழிப்பு, வேடிக்கை, படிப்பு, உணர்வு, சிந்தனை, அனுபவம்! ஆக்ரா சென்று சேர்ந்தது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை தாஜ்மஹால் மூடி இருப்பார்களாம். யதார்த்தம் ஒன்று மனதில் உதைத்தது. தாஜ்மஹால் அடுத்த நாள்தான் பார்க்க முடியும். ஆக்ரா கோட்டையில் சுமார் இரண்டு மணி நேரம் நடை. ஒரத்தில் பாயும் யமுனை நதியும், அதன் கரையோரமாக தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலும் மூளையில் அதுஅதற்கான இடத்தையும் பிடித்து விட்டன. கனவு நிகழ்வாகும்போது, கனவு இல்லாமல் ஆகிறது. நிகழ்வு நினைவாகிறது. நினைவுகள், புதிய கனவுகளின் கருவாகிறது.

நிகழ்வின் யதார்த்தம் ஷக்தியையும் அவள் அக்காவையும் சற்று நிலைகுலையவும் வைத்து விட்டது. மதிய வெயிலில், ஆக்ரா கோட்டையும், நாறும் ஆக்ரா வீதிகளின் வழியாக பேருந்து நிலையத்திற்கு சென்ற நிகழ்வுகளும், அங்கிருந்து மதுரா செல்லும் பேருந்தின் அவல நிலையும், 'குட்கா' வாசனையில் மூழ்கியிருந்த பேருந்து இருக்கைகளும் கற்பனை கோட்டைகளின் மேல் தாக்குதல்களை தொடர்ந்தன. கிருஷ்ணனை குறித்து அவர்கள் அறிந்திருந்தவை, புதிய கனவுகளாக வந்து 90 நிமிட மதுரா பயணத்தையும் சற்றே எளிமையாக்கின. பின் ஆக்ராவிற்கான 90 நிமிட பயணமும் முடிந்து விட்டது. அடுத்த சில நாட்கள் ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி என கழிந்தது.

டெல்லி சென்று சேர்ந்த அடுத்த நாள், மனகோட்டை முழுமையாக கலையும் நிலைக்கு மிக அருகில் வந்தது.

'அம்மா முடியல, ஹோட்டல்லேயே இருக்கலாம்' கனவுகள் கலையும் வேகத்தில், நிகழ்வுகளின் யதார்த்தம் முதலில் ஷக்தியின் அக்காவை தாக்கியது. எட்டிப்பார்த்த காய்ச்சலை, கையுடன் கொண்டு வந்திருந்த மருந்துகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சற்றே குறைவான தீவிரத்துடன் அன்றைய பொழுது கழிந்தது. இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பின் தீவிரம் நிகழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மூன்று நாட்கள் டெல்லியிலும் நல்ல படியாக கழிந்து, சென்னைக்கு ரயிலும் ஏறி விட்டார்கள். பின், சென்னையிலிருந்து வீடு நோக்கியும்.
குழித்துறை நிலையத்தில் இறங்கிய போது, கனவு முழுமையாக முடிந்து விட்டது. நினைவகளாக எஞ்சிய அனுபங்களுடன்.

'ஷக்தி, அடுத்த டூர் எங்க போலாம்'

'இனி எங்கயும் போகண்டாம்' கனவு நிகழ்ந்ததில் ஏற்பட்ட சலனங்களும், நிகழ்வுகளின் யதார்த்தமும் குழந்தைகளை பாதித்திருக்க கூடும். சில நாட்களுக்கு யதார்த்தத்தின் சுமை அவர்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும். சுமை இறங்கியபின், நினைவுகள் கனவின் சுவையை மீட்டளிக்க கூடும்.


அவர்கள் குழந்தைகள். நிகழ்வுகளின் நினைவுகள் அவர்கள் மனதின் மேல் பரப்புக்கு எழுந்து வரும். நினைவுகள் சூல் கொண்ட கனவுகள் முளைத்துக்கொண்டே இருக்கும். அதனால் உந்தப்பட்ட வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் கனவுகளின் கருப்பை மலடாக்கப்படாமல் இருக்க வேண்டும்

பின் குறிப்பு;

எழுதும் முறையை சற்று மாற்றி ஒரு முயற்சி. இதை சிறுகதை என்று கூற முடியுமா? வடிவ அமைப்புக்கு தன் கருத்துகளை அளித்து உதவிய ரகுநாத் -க்கு நன்றிகள்.

blog.change@gmail.com