Saturday, September 27, 2014

அரட்டை

சிறகு இணைய இதழில் 20-09-2014 வெளியிடப்பட்ட கட்டுரை.

தாங்கள் முற்றிலும் தனிமையானவர்கள் என்பதை உணர முடியாதவர்களுக்கு, தனிமை ஒரு கடும் தண்டனை. அரட்டை, தனிமையை மறைக்கும், மறக்க வைக்கும் கருவி. தனிமையை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்களுக்கான வாழ்க்கைத்துணை. அரட்டைக்கு தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள் மிக சிறுபான்மையினரே. எனில், தனிமையை அஞ்சாதவர்களும் சிறுபான்மையினரே. அரட்டைக்கு தேவைப்படுபவர் முன்பின் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. அதாவது, முன்பின் தெரியாதவர்களையும் ஒருவருடன் ஒருவரை தொடர்புகொள்ள வைக்கும், நண்பர்களாக்கிக் கொடுக்கும். நண்பர்களை, பகைவர்களாக்கவும் அதனால் முடியும்.

சமூகமும் மொழியும் தோன்றிய காலத்திலேயே அரட்டையும் தொடங்கியிருக்க வேண்டும். அரட்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே, எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் குறித்து அல்லாத, எந்த ஒரு இறுதி நோக்கமும் இல்லாத உரையாடல். ஆம் குறிப்பிட்ட நோக்கம் இல்லாத எல்லா உரையாடல்களையும் அரட்டை என வகைப்படுத்தலாம். எனவே அரட்டையினால் பயன் உண்டா என்பதற்கு அறுதியான பதில் எதுவும் இல்லை. நேரத்தைக் கொல்வதை தவிர, தனிமையை துரத்துவதைத் தவிர. அரட்டைச் செல்லும் திசைக்கேற்ப, அரட்டையில் பங்கேற்பவர்களின் அறிதல் வளர்தலோ அல்லது துண்டாடப்படுதலோ நிகழும். அது எவ்வாறாக ஆயினும், தனிமை இல்லாமல் செய்யப்படும். தனிமையை அஞ்சுபவர்களுக்கு அறிதல் குறித்து என்ன அக்கறை!

குறிப்பிட்ட நோக்கம் இல்லை என்பதே அரட்டை எதைக்குறித்தும் இருக்கலாம் என்றாகிறது. அல்லது எதைக்குறித்தும் இல்லாமல் இருக்கலாம் என்றும் ஆகிறது. ஆனால், தொடங்கப்பட்ட ஒரு அரட்டை பெரும்பாலும், முதலில் சொல்லப்பட்ட ஒரு பொருள் விரியும் பல திசைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட திசைகளிலோ விரிந்து செல்லலாம். அறிவார்ந்த தளத்திலோ, முட்டாள்தனமான தளத்திலோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட தளத்திலோ இருக்கலாம். குறிப்பிட்ட நோக்கம் என ஒன்று இல்லாததாலும், சிந்திக்கும் தன்மையும் பொதுவெளியில் மிக அரிதாகவே இருப்பதாலும் அரட்டை பெரும்பாலும் அறிவார்ந்த தளங்களில் நிகழ்வதில்லை. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவார்ந்த அரட்டைகளும் நிகழ்வதுண்டு.

அரட்டை எவ்வாறாக இருந்தாலும், கருத்துகளை, சிந்தனைகளை, நோக்கங்களை, எண்ணங்களை சமூகவெளியில் பரப்பவுதில் தவிர்க்க முடியாத இடத்தைப்பெற்றுள்ளது. எந்த ஒரு சமூக நிகழ்வுகளும் அரட்டையின் மூலமே பெரும்பாலும் பொதுவெளியை அடைகிறது. எந்த கருத்துகளும், கருத்துலக தளங்களில் நிகழ்ந்த பின் அரட்டை மூலமே பொதுவெளியில் அதன் இடத்தை அடைகிறது. அதாவது ஒரு சமூகத்தில் நிகழும் எல்லா கருத்தியல் மாற்றங்களும், கருத்தியல் உலகில் நிறுவபட்ட பின், அரட்டை மூலம் சமூகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அரட்டைகள் மூலம் கருத்துகள் தவிர்க்க முடியாமல் பெருமளவு திரிபும் அடைகிறது. எந்த கருத்தும் சமூகத்தின் வெவ்வேறு தட்டுகளை சென்றடையும்போது, அந்தந்த தட்டுகளின் சிந்தனையின் அல்லது சிந்தனையின்மையின் தன்மைக்கேற்ப, அரட்டை நிகழும் தளத்திற்கேற்ப திரிபு பெற்று விடுகிறது. 

சமூக இயக்கத்தில் அரட்டை இன்றியமையாத பங்கு பெறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், எந்த சமூகத்தில் அரட்டை அறிவுசார் தளங்களில் பெருமளவு நிகழ்கிறதோ அந்த சமூகம் பிற சமூகங்களை விட நாகரீகம் அடைந்ததாக இருக்கும். அங்கு கருத்துலக நிகழ்வுகள் பொது வெளிக்கு மிகக் குறைந்தபட்ச திரிபுடன் மட்டுமே சென்றடையும். கருத்தாக நிலைபெறும் அற உணர்வுகள், அரட்டை மூலம் செயல்களாக சமூகத்தில் தன் இடத்தை அடையும். அந்த சமூகம், குறிப்படத்தக்க அளவில் நேர்மையுடையதாக இருக்கும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை அரட்டை நிகழ்வதற்கு, அதில் பங்கு பெறுபவர்கள் அருகருகே இருந்தாக வேண்டியிருந்தது. இன்றைய இணையம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களின் மூலம் பொதீக தொலைவு இல்லாமல் ஆகி விட்டது. ஒருவர் எங்கிருந்தாலும், இணைய வசதியும், ஒரு மடிக்கணினியோ அல்லது 'ஸ்மார்ட' செல் பேசியோ இருந்தால் ஒத்த வசதிகளுடைய எவருடனும் அரட்டை அடிக்கலாம். உலக நிகழ்வுகளும்,கருத்துலக நிகழ்வுகளும் உடனடியாக அரட்டையாக மறுவடிவம் பெற்று விடுகிறது - அரட்டைக்கான திரிபுகளுடன்!

இன்றைய காலகட்டத்தில், மனிதன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மிக பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால்அதே அளவுக்கு தனிமையிலும் உழலுகிறான் என்றே தோன்றுகிறது. அதாவது அரட்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது. தற்போதைய தொழில் நுட்பத்தில் அரட்டை அடிப்பதற்கு, முகத்திற்கு முகம் நோக்க வேண்டியதில்லையே. டிவிட்டர், முகநூல், கூகிள் ப்ளஸ், வாட்ஸ்அப், இன்னும் என்னென்னமோ.

தொழில் நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள், ஜனநாயக நாட்டில் ஆட்சியையே மாற்றியமைக்கும் அளவுக்கு வலிமை பெற்று விட்டது. ஆம், கருத்துகள் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள் மூலம், மிக வேகமாக பெரும்பான்மையை சென்று அடைகிறது. அது அரட்டை என்னும் காரணத்தால், பொதுவெளியில் அதன் பயணமும் மிக மிக சிறிய கால அளவையே கொண்டிருக்கும். மிகசரியான முறையில் பரப்பிவிடப்படும் அரட்டை, அதன் குறுகிய வாழ்நாளுக்குள் மிகப்பெரிய சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது. அதன் பின் அந்த மாற்றங்களை குறித்த எதிர்மறை கருத்துகளையும்! சீனா போன்ற சில நாட்டு அரசுகள், அரட்டை அடிக்கும் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளமை, அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை தெளிவாக்குகிறது.

தொழில்நுட்பம் அளிக்கும் வசதிகளின் மூலம் அரட்டையை நிகழ்த்துவது, பெரும்பாலும் தங்களை கல்வி கற்றவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சமூகப்பிரிவினரே. அவர்கள் உண்மையில் கல்வி கற்றவர்களாக இருந்தால், தனிமையை அஞ்சுவது ஏன்? கல்வி அச்சத்தை தொலைவில் அல்லவா இருத்தி இருக்க வேண்டும். அல்லது அவர்களின் அரட்டை வேறு   எதேனும் நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படுகிறதா? புதிய சிந்தனைகள் அந்த அரட்டையின் மூலம் நிகழ்கிறதா? நிகழ்ந்த சிந்தனைகள் அலசப்படுகின்றனவா? அருகமர்ந்து அவதானித்த எந்த அரட்டையும் அவ்வாறு நிகழ்வதாக தெரியவில்லை.

இல்லையெனில் அது நிகழ வேண்டும். நாம் கல்வி கற்றவர்களாக இருந்தால், நம்மிடம் வந்த தொழில்நுடபம், நம்மை கருவியாக கொண்டு அதன் வளர்ச்சிப்போக்கை தொடர்ந்தாக வேண்டும். தொழில்நுட்பம் நம் உணர்திறனை, சிந்தனைத்திறனை இல்லாமல் செய்வதற்கல்ல. மாறாக அவற்றை அடுத்த தளங்களுக்கு எடுத்து செல்லவே உதவ வேண்டும். அதற்கு நம்மிடியே சிந்தனை நிகழ வேண்டும். பரிணாம வளர்ச்சி அறிவியலில் "Mutation" என்றொரு வார்த்தை உண்டு - ஒரு உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையில்லாத அம்சம், அதன் பரிணாம வளர்ச்சியில் இல்லாமல் செய்யப்பட்டு, மிகத்தேவையான அம்சம் புதிதாக உருவாகி வருவது. ஒருவேளை உணரும் தன்மையை, சிந்நிக்கும் தன்மையை தேவைஇல்லை என நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்டால், அடுத்த தலைமுறையில் அது பரிணாம வளர்ச்சியின் விதிகளின் படி இன்னும் குறையலாம். மாறாக நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் எந்தெந்த தன்மைகள் அடுத்த தலைமுறையை அடையும் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையால் மனிதர்களுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது - நம் பரிணாம வளர்ச்சியை முடிவு செய்யும் அளவுக்கு! அந்த அறிவை வெறும் வெட்டி அரட்டையில் வீணாக்குவது, இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம். துரோகத்துக்கு பதிலாக, அறிவு "Mute" ஆவதற்கும் சாத்தியம் உள்ளது.


தனிமை இருக்கும் இடத்தில்தான் சிந்தனை நிகழ முடியும். எனவே தனிமையை வரவேற்கத் தெரிந்திருக்க வேண்டும். கல்வி நிலையத்துக்கு சென்றோ செல்லாமலோ கல்வியை அடைந்தவர்களுக்கு, தனிமை ஒரு வரம். கல்வியின் துளியையாவது அடைந்தவர்கள், தனிமையை வெறுக்க முடியாது. அவர்கள் அரட்டையில் ஈடுபட்டாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அவர்களின் அரட்டையில், சற்றேனும் கல்வியின் துளி வெளிப்படும். எனவே அவர்களிடம் சிந்தனையும் நிகழும். அவர்களாலேயே மனித அறிவு "Mute"  ஆகாமல் பரிணாம வளர்ச்சியை அடையும் - மனித இனம் காக்கப்படும்!

blog.change@gmail.com

No comments: