Sunday, November 23, 2014

வாழ்தல்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் மேல் எத்தகைய சுய ஆதிக்கமும் இல்லாமல், வாழ்கிறோம் என்னும் உணர்வில்லாமல், மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தும் ஒரே காரணியான சுய அறிதல் சற்றும் இல்லாமல். மனித வாழ்க்கை மகத்தானது, தவற விடுவதற்கு மிக மிக அரிதானது, (Too precious to miss). எனினும் அதைத் தவற விட்டு, வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையை முழுமையாக அனைவரும் வாழ்வதற்கு தகுதியான சூழல், இன்றைய காலகட்டத்தைப்போல வேறு எப்போதும் இருந்ததில்லை. எனினும் இன்று வாழ்க்கையை மனிதர்கள் இழப்பது போல வேறு எந்த கால கட்டத்திலும் இழந்து விட்டதாகவும் தோன்றவில்லை.

வேறு எந்த காலகட்டத்திலும், மனிதர்களில் ஒரு சிறு குழுவினரைத்தவிர மற்ற அனைவருக்கும், தத்தம் அன்றாட வாழ்க்கைத்தேவைகளை அடைவதற்கே அவர்கள் வாழ்க்கை போதுமானதாக இருந்திருக்கவில்லை. அந்த நிலையில், அவர்கள் விரும்பியிருந்தாலும், வாழ்க்கையை அவர்களால் முழுமையாக வாழ்ந்திருக்க முடியாது. தற்போதைய காலகட்டத்தில், அன்றாடவாழ்க்கைத்தேவைகள், மிக மிக எளிதாக அனைவராலும் பெற முடிகிறது. அத்துடன் வாழ்க்கையின் பாதுகாப்பையும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள், வாழ்க்கையை வாழாமல், அன்றாடத்தேவைகள் என்பதன் அர்த்தத்தை விரித்துக்கொண்டே சென்று, தேவைகளை அடையமுடியாத இடத்தில் தங்களை அமர்த்திக் கொள்கிறார்கள். - பொருளாதார நிலையில் அனைத்து தளங்களில் உள்ளவர்களும். அதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதையும் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார்கள் - தாங்கள் மரணிக்கும்வரைக்கும்; வாழும் சாத்தியத்தை முழுமையாக இழப்பதுவரைக்கும். அதற்கு தோதாக மறுபிறவி என்னும் ஒரு கற்பனையையும், அந்த கற்பனையின் மூலம் இன்னொரு பிறவியில் முழுமையாக வாழலாம் என்னும் இன்னொரு கற்பனையையும் தம் மனதுக்குள் விரித்தெடுத்து கொள்கிறார்கள் - மறுபிறவி என்னும் ஒன்று இருந்தால், அது எவ்வாறு நிகழ்கிறது என்னும் அறிதலை சற்றேனும் அடையாமல்.

ஒரு பெருங்கூட்டம், தங்களுக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் சாத்தியத்தை, சுயத்துடன் வாழும் சாத்தியத்தை, இழப்பதை அறியாமலே, புறங்கையால் தள்ளிவிடுவதை காணும்போது, அச்சாத்தியத்தை உணர்ந்த எவரும் தனிமையில் கண்ணீர் விடாமல் கடந்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை. துரதிர்ஷடவசமாக, சுயம் என ஒன்று இல்லாமல் வாழும் எவருக்கும், அவர்கள் வேண்டாம் என தள்ளிவிடுவதன் மதிப்பையும் உணர்த்தமுடிவதில்லை.

ஆம், நாம் மந்தைகளாகவே வாழ்ந்து வருகிறோம். சுயம் என அறிந்திருப்பது உண்மையில் நம் சுயம் அல்ல; மந்தையால் உருவாக்கப்பட்ட அகங்காரத்தையே! நம்மை சுற்றியிருக்கும் மந்தையின் பாகங்களாகிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் என்றும் சான்றோர் என்றும் கூறப்படுபவர்கள், நண்பர்கள், பகைவர்கள், ஆகியோர்களால் பாராட்டப்பட்டும், அவமானிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், சார்ந்து இருந்தும், எதிர்த்து இருந்தும் அகங்காரம் என்னும் நாம் அறியும் சுயம் நமக்குள் உருவாக்கப்பட்டு விட்டது. அந்த அகங்காரம் என்னும் சுயம் ஊக்குவிக்கப்படுவதை இன்பம் என்றும், தாக்குதலுக்குள்ளாவதை துன்பம் என்றும் பிரித்து வைத்து விட்டோம்.

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் என்று கூறுபவர்கள் இரண்டு வகைகளில் இந்த இன்ப துன்பங்களை கடந்திருக்க கூடும். ஒரு சாரர், இந்த இன்ப துன்பங்களை உணரும் தன்மையை இழந்து, மன அளவில் உணர்ச்சியற்று மரத்து போயிருப்பார்கள். அவர்களால் இன்ப துன்பங்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், தாங்கள் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நோக்கி, இயந்திரத்தனமாக முன்னேறிச் செல்ல முடியும். அவர்கள் சந்தேகம் இல்லாமல் தங்கள் நோக்கத்தை அடைவார்கள். ஆனால் அவர்களால் மனித வாழ்க்கையை வாழ முடியாது. அவர்கள் வெறும் இயந்திரங்களே. துரதிர்ஷ்டவசமாக, நாம் நம் குழந்தைகளை இந்த வழியிலேயே ஆற்றுப்படுத்துகிறோம். ஏனெனில் வெற்றிக்கு இன்னொரு வழி இருப்பதை நாமே அறிந்திருக்கவில்லை.

இரண்டாவது வகையினரும் இன்ப துன்பத்தை சற்றேனும் கடந்திருப்பார்கள். அந்த இன்ப துன்பங்களை அனுபவித்தபடி, உணர்ந்தபடி, இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் பாகங்களே, அவற்றை அனுபவிப்பதே வாழ்க்கை என்னும் புரிதலுடன், அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் நோக்கங்களை எந்த வகையிலும் பாதிக்காமல், நோக்கம் என்பதை ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் கொண்டு, அந்த நோக்கத்தை நோக்கி, அனைத்தையும் அனுபவித்தபடி, நெகிழ்வுத்தன்மையுடன் சென்று அடைவார்கள். அவர்களே வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நோக்கமும் வாழ்க்கையைப்போல நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், மிக எளிதாக அந்த நோக்கத்தை அடைந்திருப்பார்கள் - நோக்கத்தை அடையும்வரை எத்தனை இன்பதுன்பங்களை அடைந்திருந்தாலும்! மனிதர்களாக நோக்கத்தை அடைந்தவர்கள்! அவர்களுக்கு என் வணக்கங்கள்!
இன்ப துன்பங்களில் தங்களை இழப்பவர்கள், வாழ்க்கையில் எந்த நோக்கத்தையும் அடைய முடியாது. அவர்களுக்கு நோக்கம் எனவும் ஒன்று இருக்க முடியாது. எனவே வெற்றியும்! துரதிரஷ்டவசமாக, மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த மந்தையிலேயே இருக்கிறார்கள். பெற்றோரால் வெற்றியடையும் இயந்திரமாக உருவாக்கப்படும் பெரும்பாலான, அந்த வெற்றிக்கான திறமை இல்லாத குழந்தைகளும், இந்த மந்தையிலேயே வந்து சேர்கிறார்கள். அல்லது சேர்த்து விடப்படுகிறார்கள்.

தத்துவார்த்த தளத்தில், உடலை 'நாம்' எனக்கொள்ள முடியாது, நம்மில் இருக்கும் ஆன்மீக சாரத்தையே 'நாம்' எனக்கொள்ளமுடியும் என்று கூறப்பட்டாலும், அந்த ஆன்மீக சாரம் நிலைத்திருப்பதற்கு உடலும் மிக அவசியம். அந்த தளத்தில் உடலையும் 'நாம்' எனக்கூறலாம். உடல் ஒரு ஒற்றை இருப்பு அல்ல. அது கோடானுகோடி 'செல்'களால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுத்தொகை. ஒவ்வொரு 'செல்'லும் அதற்கென உயிரும் வாழ்நாளும் கொண்டவை. அதாவது, கோடானுகோடி உயிரினங்களின் கூட்டுத்தொகையே 'நாம்' என அறியப்படுவது. அந்த உயிரினங்களின் கூட்டு ஆன்மீக சாரமே, ஒற்றை இருப்பாக, மனிதன் என அறியப்படும் நம் ஆன்மீக சாரம். அந்த 'செல்'கள் நம் உடலினுள் தங்கள் ஒருங்கிணைப்பை இழக்கும்போது, ஒரு மனித இருப்பாக, நம் உயிரையும் எனவே ஆன்மீக சாரத்தையும் இழந்திருப்போம்.

மனித வாழ்க்கையை வாழ்தல் என கூறும்போது, உடலில் இருக்கும் கோடானுகோடி 'செல்'களும் வாழ்வதே ஆகும். அகங்காரத்தை மட்டும் 'நாம்' எனக்கொள்ளும்போது, அகங்காரம் அடையும் இன்பங்களை அதிகரிப்பதையும், துன்பங்களை குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும்போது, உடலில் வாழும் கோடானுகோடி 'செல்'களை, தம் இருப்பின் மூலம் நம் இருப்பை அளிக்கும் கோடானுகோடி உயிர்களை மறந்து விடுகிறோம். அத்துடன் நம் வாழ்க்கையை வாழ்தல் என்னும் சாத்தியத்தையும் அறிவிலிருந்து விலக்கி விடுகிறோம்.

அகங்காரம் விரும்பும் உணவை, அகங்காரம் விரும்பும் வகையில், நம் இருப்பை உறுதி செய்யும் கோடானுகோடி 'செல்'களாகிய உயிர்களுக்கு அளிக்கிறோம். அளிக்கும் உணவை அந்த உயிர்கள் விரும்புகின்றனவா, ஏற்றுக்கொள்கின்றனவா, போதுமானதாக உள்ளதா என்னும் அறிதல்கள் இல்லாமல், அகங்காரம் விரும்பும்வரை அவற்றுக்கு அளிக்கிறோம். மனித உயிர், அதற்கென ஒரு நோக்கத்தை கொண்டுள்ளதைப்போல, உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் அதன் இயல்பு மற்றும் உடலில் அதற்கு அளிக்கப்பட்டுள்ள தொழிலுக்கேற்ப ஒரு விழைவை கொண்டிருக்கும். மனிதர்களோ உடலின் 'செல்'களின் விழைவிற்கு எத்தகைய மதிப்பையும் அளிக்காமல், அகங்காரத்தின் விழைவிற்கேற்ப, வாழ்க்கைய அமைக்க முயற்சிக்கிறோம். உண்மையில், நம்மை உருவாக்கிய அந்த கோடானு கோடி உயிர்கள் அவற்றின் விழைவை அடையும் போது, அவற்றுக்கான தொழிலை மனித உடலினுள் தங்குதடையின்றி செய்யும் சூழல் அமையும்போது, அவற்றின் தொகுப்பான 'மனிதன்' எனப்படும் நாமும், நம் விழைவை நோக்கி சென்று கொண்டிருப்போம். அகங்காரத்தின் விழைவிற்கேற்ப செல்லும்போது, நம்மை ஆக்கிய உயிர்களின் விழைவிற்கு எதிராக செல்லும்போது 'நம்' இருப்பில் முரண்பாடு ஏற்படுகிறது. அந்த முரண்பாடு வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மை விலக்கி விடுகிறது.

ஆம், வாழ்க்கையை முழுமையாக வாழ, நம்மில் முரண்பாடு களையப்பட வேண்டும் - எல்லா நிலைகளிலும்; மனத்தளத்திலும், உடல் தளத்திலும், செயல்கள் தளத்திலும், உணர்வு தளத்திலும்..... முரண்பாடுகள் களையப்படும்போது, மனித உடலில் உள்ள கோடானுகோடி உயிர்களாகிய 'செல்;'களின் ஒத்திசைந்த இயக்கமே, மனித உயிரின் ஒற்றை இயக்கமாக வெளிப்படும். அந்நிலையில், மனித வாழ்க்கை முழுமையாக நிகழும். ஆனால், அது அத்தனை எளிதான ஒன்றாகவும் தோன்றவில்லை. அந்த ஒத்திசைவை உருவாக்க வேண்டுமானால், நம்மில் நிகழும் முரண்பாடுகளை அறிய வேண்டும். அதுவே சுய அறிதல். அந்த அறிதலில், முரண்பாடுகள் ஒத்திசைவாக மாற்றமடையும். எந்த முரண்பாடுகளையும் இல்லாமல் செய்வதற்கான ஒரே வழி, அந்த முரண்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதே. அப்புரிதல், முரண்பாட்டை, அதுவாகவே முற்றிலும் இல்லாமல் செய்து விடும். முரண்பாடுகளை இல்லாமல் செய்ய முயலும் மற்ற எல்லா வழிகளாலும் செய்ய முடிவது, அதை பொதுப்பார்வையிலிருந்து மறைத்து, உள்ளுக்குள் எடுத்துச் செல்லவதை மட்டுமே. அங்கு அந்த முரண்பாடு தன் இடத்தை நிறுவி, வேறு பல புதிய முரண்பாடுகளுக்கு ஆதாரமாக திகழும்.


எனில் வாழ்க்கையை வாழ்தல் என்பது எதுவாக இருக்க கூடும்? வாழ்வின் எந்தந்த தருணங்களில் எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் முழு ஒத்திசைவுடன், முரண்பாடுகள் இல்லாமல் நிகழ்கிறதோ, அந்த தருணங்கள் மட்டுமே மனிதப்பிறவியாக வாழ்க்கையை வாழும் தருணங்களாக இருக்க கூடும். மனிதனுக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் அழகானது. தனிமனித வாழ்க்கை எந்த கணத்தில் வேண்டுமானாலும் முடிந்து விடலாம். இந்த அரிய வாழ்கையை வாழாமல் இழப்பதைவிட மனிதன் இழப்பதற்கு வேறு மதிப்புடைய எதுவும் இல்லை. ஆனாலும், அந்த மகத்தான வாழ்க்கையை வாழாமல் இழந்து கொண்டிருக்கிறோம் - எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்குமான ஒத்திசைவை இழந்ததன் மூலம்! உயிர் இருப்பின் கடைசி கணம் வரை, அது அடுத்த கணமாக இருந்தாலும், ஒருகணத்திலேனும் முழுமையாக வாழ்வதற்கான சாத்தியம் எல்லா மனிதர்களுக்கும் உள்ளது. அந்த சாத்தியத்தை அறிவோமாக! வாழ்க்கையை வாழ்வோமாக!

blog.change@gmail.com

No comments: