Thursday, October 13, 2011

இருப்பு - Existance

நம் வாழ்க்கையை அதன் உள்ளிலிருந்து எப்போதாவது அறிந்து கொள்ள முயற்சித்திருந்தால், வாழ்க்கையை குறித்த சில அடிப்படை கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நம் கேட்கும் வீரியத்திற்கேற்ப, நம் பார்வையின் ஆழத்திற்கேற்ப, நம் வாழ்வின் இயல்பிற்கேற்ப, கேள்வியை ஆராயும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பதிலை அளிக்கும் கேள்விகள்! ஆம், நம் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கேட்கப்பட்டாக வேண்டிய கேள்வி, அடைந்தாக வேண்டிய பதில் – அந்த பதில் எத்தகையதாக இருந்தாலும். நம் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியையாவது உணர்வு நிலையில் அடைந்திருந்தால் மட்டுமே, அந்த கேள்விகள் நம் மனதில் எழ சாத்தியமுண்டு. அந்த கேள்வியும், பதிலை அடைவதற்கான இச்சையும் கூட நம் உணர்வின் எல்லைகளை விரிவடையச் செய்யும் சாத்திய கூறுகளை தம்முள் கொண்டிருக்க கூடும்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளும் செயல்களால் ஆனது. அந்த செயல்கள் நம்மால் செய்யபடுவதாகவோ அல்லது நம் மூலம் செய்விக்கப் படுவதாகவோ இருக்க்கலாம். அச்செயல்களை, அதன் ஒற்றைத் தன்மையில் ஆராய்ந்தால், அச்செயல்களுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ எந்த ஒரு அர்த்தத்தையும் நம்மால் காண இயலாமல் போகலாம். எனில், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் எதற்காக அல்லது யாருக்காக வாழ்கிறோம் அல்லது வாழ வேண்டும்? நம் வாழ்க்கையின் கூறுகளாகிய செயல்களின் அர்த்தம் என்ன? அந்த செயல்கள் இல்லாது போனால் நம் வாழ்க்கை என்ன ஆகும்? அந்த செயல்களின் அடிப்படை என்ன? அந்த அடிப்படைகள் இல்லாது போனால் அல்லது ஒரு மாய தோற்றமாகிப் போனால், நம் செயல்கள் அல்லது அச்செயல்களால் ஆன நம் வாழ்க்கை என்ன ஆகும்? நம் செயல்களின் அடிப்படை ஒரு மாய தோற்றத்தினால் ஆனதாக இருந்தால், நம் செயல்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு விலக்கிக் கொண்டால், நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது? நாம் பொய் தோற்றத்தை அடிப்படையாக்க கொண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு, புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அந்த புதிய வாழ்வின் அடிப்படையும் பொய் தோற்றங்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கேள்விகள்!

இந்த கேள்விகள், நம்மையே நாம் உணரத் தொடங்கினால் அல்லது உணர வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே எழ சாத்தியமுண்டு. இந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடையை நாம் அணுகும் முறை கூட, நம் வாழக்கையை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ புரட்டிப் போடும் சாத்தியங்களை உடையது. அதாவது, இந்த கேள்விகளை நாம் அணுகும் போது, நம் உணர்வுகளையும் மிக கவனமாக பின் தொடரவேண்டியது அவசியம். அவ்வாறு நம் உணர்வுகளை நம்மால் பின்தொடர இயலாவிட்டால், ஒரு வழிகாட்டி அல்லது குருவின் துணை அவசியப்படலாம். எவர் ஒருவர் நம் இயல்பை உணர்ந்து, நம் ஆன்மீக கேள்விகளுக்கு நாமே விடையை அறிய உதவுகிறாரோ, அவரே ஒரு குருவாக இருக்க முடியும். நம் உணர்வுகளை மிக கவனமாக நம்மால் பின்தொடர இயலுமானால், நம் உணர்வுகளே கூட நமக்கு குருவாக இருக்கூடும்.

வாழ்க்கை குறித்த நம் கேள்விகளின் பதில், நம் தனி மனித இயல்புகளையும் அந்த இயல்புகளின் அடிப்படையான தனிமனித இச்சைகளையும் பொறுத்தே அமையும். ஆக நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறிந்து கொள்வதே ஆன்மீகம் அல்லது நம் வாழ்வு குறித்த அறிதலுக்கு தொடக்கமாக இருக்க முடியும். நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறியாமல், நம் வாழ்வின் அர்த்தத்தை தேடினால், ஒருவேளை அங்கு தெரியும் அர்த்தமின்மை, வாழ்வின் மேல் நம்மை வெறுப்புறச் செய்து, தற்கொலைக்கு கூட தூண்டலாம். சமூக அமைப்பில் அர்த்தமின்மை என்னும் மாயையில் நம்மை தள்ளி, சமூக அமைப்பிலிருந்து நம்மை விலகச் செய்யலாம். இத்தகைய விளைவுகள், நம் இயல்பை நாம் அறியாமல், கற்பனைகள் மூலம் அடையும் முடிவுகளின் காரணமாகவே ஏற்பட்டுகின்றன. இத்தகைய முடிவுகள், மீண்டு வர இயலாத பொறிகளினுள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கலாம். ஆக, ஆன்மீகத் தேடுதலை, நம் இயல்பை அறிவதலிருந்தே தொடங்க முடியும்.

எந்த ஒரு பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அதன் இருப்பை உறுதிசெய்வதே அடிப்படை இச்சையாக இருக்க முடியும். அதன் மற்ற அனைத்து இச்சைகளின் கட்டுமானமும் இந்த அடிப்படை இச்சையை அடித்தளமாக கொண்டே இருக்கும். நாமும் அவ்வாறே! நம் இருப்பின் மேல் கொண்டுள்ள இச்சையையும் அதை சார்ந்து உள்ள அல்லது சார்ந்து உருவாக்கிய இச்சையையும் அறிந்து கொள்ள, நம் இருப்பின் உணர்வு நமக்கு இருந்தாக வேண்டும். ஆனால், துரதிர்க்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையினர், பெரும் மகிழ்ச்சி அல்லது கடும் துன்பத்தில் மட்டுமே நம் இருப்பை உணரும் தன்மையில் இருக்கிறோம். நம் இருப்பைக் குறித்த விழிப்புணர்வே நமக்கு இல்லாத பட்சத்தில், அந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இச்சைகளை அறிந்திருப்பதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது.

ஆனல், மனம் செயல்புரிய வேண்டுமானால் நம் இருப்பை அது உறுதிசெய்தாக வேண்டும் – செயலின்றி மனதால் இருக்க முடியாது. நம் இருப்பின் அடிப்படையை மனதால் உணரமுடியாதபோது, அகங்காரத்தின் துணைகொண்டு நமது இருப்பைக் குறித்த கற்பனைகளை உருவாக்குவதன் மூலம், மனம் அதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. ஆக நம் இருப்பின் அடிப்படை இச்சைகள், மனதால் அகங்காரத்தின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைகளாலான இருப்பின் அல்லது மாயை இருப்பினாலான இச்சைகள் மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது நாம் கணம் தோறும் உணரும் விருப்பங்களில் பெரும்பாலானவை, நம் கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பின் விருப்பங்களே. சில அடிப்படை விருப்பங்கள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து வெளிப்படும். கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பு, அடிப்படை இருப்பின் வெளிப்பாடுளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யலாம் – அது நம் மாயை இருப்பு, அடிப்படை இருப்புடன் கொண்டுள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடுகளை பொறுத்த்து.

நம் இருப்பின் இச்சைகளை அறியவேணைடுமானால், அதை சூழ்ந்துள்ள மாயையை நாம் துளைத்து சென்றாக வேண்டும். எனில், அந்த மாயையின் இயல்பை அறிவது மட்டுமே அத்தகைய ஒரு சாத்தியத்தை நமக்கு அளிக்க கூடும். நம் இருப்பு மற்றும் இருப்பின் இச்சைகள், உண்மையானது. அதாவது, அது பொதீகமானது. ஆனால், நம் கற்பனையால் ஆன இருப்புக்கு அத்தகைய பொதீக இயல்புகள் இருக்க வாய்ப்பில்லை – அந்த கற்பனைகள் நம் மூளையில் ஏற்படுத்தும் சில உளவியல் சார்ந்த வேதி மாற்றங்களைத் தவிர. ஆம், இந்த மாயை அல்லது கற்பனை இருப்பு என்பது முழுவதும் நம் உளவியல் சார்ந்த இருப்பு. நம் எண்ணங்களே அந்த மாயைகளை உருவாக்கி, அந்த எண்ணங்களால் ஆன நம் அகங்காரத்துடன் பிணைத்து அதன் மாயத்தோற்றத்தை உறுதி செய்கிறது.

நம் வாழ்க்கை தளத்தில், நம் மனங்களின் வெளிப்புற கட்டுமானம் முழுவதும் வெறும் எண்ணங்களால் ஆனது. இந்த எண்ணங்களே மாயை இருப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்த எண்ணங்களைத் தாங்கிகொண்டிருக்கம் அந்த மனதின் மூலம் மட்டுமே, அந்த எண்ணங்களைத் தாண்டிச் சென்று, நம் இருப்பின் ஆழத்தையம் அடைய முடியும். இதுவே ஆன்மீகம் மனித இனத்தின் பெரும்பான்மையினரிடம் வெளிப்படாமல் இருப்பதற்கான மூல காரணமாக இருக்க கூடும். மாயையால் மூடப்பட்டுள்ள மனதின் மூலமே அந்த மாயையை அறிந்து, மனதின் ஒருபாகமாக மாறிவிட்ட மாயையை உடைத்தெறிய வேண்டுமென்பது சற்று கடினமான செயலாகத்தான் இருக்ககூடும்.


அறிவின் மூலம் மட்டுமே அந்த தொடக்கத்தை பெறமுடியும். துரதிர்க்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் கல்வி முழுமையாக பொருளியல் சார்ந்த்தாக மாறிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் நம் வாழ்க்கை அறிவு என்பது நிறுவப்பட்ட கல்விக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளியே மட்டுமே பெறமுடியக்கூடிய ஒன்றாகி விட்டது. இந்த பொருளியல் சார்ந்த கல்வி, நம் ஆன்மீகத்தையும், பொருளியல் சார்ந்த கற்பனைகளாக மாற்றி விட்டது. நாமும், நம் சந்ததியினர் நிறுவப்பட்ட கல்விக்கு வெளியே அவர்கள் ஆர்வம் செல்லாதவாறு, அவர்களை நிறுவப்பட்ட கல்வியினுள்ளே முழுமையாக வழிப்படுத்தி, அவர்களும் மாயையினுள் நிரந்தரமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம்.

No comments: