Tuesday, October 18, 2011

இச்சைகள்

உலகின் அடிப்படை சக்திகளில் ஒன்று, இச்சா சக்தி. அதாவது எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது செயலுக்கும் முதல் தேவை, அந்த இயக்கம் அல்லது செயலுக்கான ஆசை அல்லது இச்சை – அந்த இயக்கம், அணுவினுள் நியூக்ளியஸைச் சுற்றி வரும் எலக்ட்ரானாக இருந்தாலும், சூரியனை சுற்றி வரும் கோளங்களாக இருந்தாலும், நாம் அறியாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரவெளியாக(Galaxy) இருந்தாலும்! நம் உலகத்தில் உள்ள வாழ்க்கையும், ஒரு முடிவில்லாத இயக்கம் அல்லது செயல் மட்டுமே. நமது இச்சைகளே நம் வாழ்க்கையின் அடிப்படை இயங்குசக்தி. ஆகவே நமது இச்சைகளின் இயல்பு, நம் வாழ்க்கையின் இயக்கத்தில், இயல்பில், இன்றியமையாத இடம் வகிக்க கூடும். நம் வாழ்க்கையின் இயக்கத்தை நம் விருப்பத்தின்படி செலுத்த வேண்டுமானால், நம் விருப்பம் அல்லது ஆசை அல்லது இச்சை, அந்த விருப்பத்தின்படி அமைந்தாக வேண்டும். நம் இச்சைகளில் உள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடு, நம் வாழ்க்கையிலும், ஒத்திசைவாகவோ அல்லது முரண்பாடாகவோ வெளிப்படும். ஆனந்தமயமான வாழ்க்கை என்பது ஒரு ஒத்திசைவுள்ள, முரண்பாடுகளற்ற வாழ்க்கை. நாம் உண்மையிலேயே, ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமயமான வாழ்க்கையை விரும்பினால், நம் வாழ்க்கையின் அடிப்படை சக்தியான இச்சா சக்தியின் கூறுகள் முரண்பாடுகளற்று, ஒத்திசைவுடன் இருந்தாக வேண்டும். நம் இச்சைகளை அறிந்து கொள்வதன் மூலமே, அது சாத்தியமாகலாம்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும், நம் மூளையின் மூலமே இயக்கப்படுகிறது. மூளையின் ஒவ்வொரு இயக்கமும் நம் மனமாக வெளிப்படுகிறது. அந்த மன இயக்கங்கள், நம் மனதின் உணர்வுநிலையிலோ (Conscious) அல்லது உள்ளுணர்வு நிலையிலோ (subconscious) அல்லது, ஆழ்மன நிலையிலோ (unconscious) நிகழலாம். அந்த நிகழ்வு நடைபெறும் மனதின் தளம், நம் விழிப்புணர்வின் ஆழத்தைப் பொறுத்தது – நம் விழிப்புணர்வு அதன் உச்சத்தை அடையும்போது, நம் மனதின் மொத்த இயக்கமும் உணர்வு நிலையிலேயே நடைபெறக் கூடும். நமது இச்சைகளும் நம் மூளையையே ஆதாரமாக கொண்டுள்ளதால், எல்லா இச்சைகளும் நம் மனவெளியில் வெளிப்பட்டே ஆக வேண்டும். – நம் விழிப்புணர்வைப் பொறுத்து, மனதின் ஏதாவது ஒரு தளத்தில்.

நம் மனதின் அடிப்படை இச்சைகள் நம் உடல் சார்ந்ததே. இந்த அடிப்படை இச்சைகளின் இயல்பு, நமது இருப்பை உறுதிச் செய்ய தேவையான மிக அடிப்படையான இயக்கங்களை உருவாக்குவதாகவே இருக்க கூடும். உதாரணமாக பசி என்னும் உணர்வு, உணவு உண்பதற்கான இச்சையை உருவாக்குவதன் மூலம், நம் இருப்பை உறுதிச் செய்கிறது. உடலை பாதுகாப்பதற்கான இச்சையின் மூலம், நம் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான இயக்கங்கள் உருவாகிறது. காமம் என்னும் இச்சையின் மூலம், நம் இனம் அழியாமல் அதன் இருப்பை உறுதிச் செய்வதற்கான இனப்பெருக்கம் என்னும் இயக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு நம் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் அடிப்படையாக, அந்த இயக்கத்திற்கான இச்சை இருந்துகொண்டே இருக்கிறது.

உயிரியல் பரிமாணத்தின் உயர்நிலையில் உள்ள சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களிலும், இந்த இச்சைகளும் இச்சைகளை காரணமாக கொண்ட விளைவுகளும், அந்த உயிரினங்களின் உணர்வுநிலைகளின் இடைவினைகள் (interaction) இல்லாமலேயே நடைபெறுகிறது – அந்த உயிரினங்களுக்கு உணர்வு என்னும் தளம் இருந்தாலும். மனித இனம் தவிர மற்ற உயர்நிலை உயிரினங்களுக்கும், அவை உணர்வுத் தன்மைக்கான சாத்தியங்களுடன் இருந்தாலும், அந்த உணர்வின் மூலம் அதன் இச்சைகளின் இயக்கத்தையும் இயக்கத்தின் தன்மைகளையும் வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதில்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே, இச்சா சக்தி இயக்கமாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படுவதற்கு, ஒரு அனுமதி இயக்கமும் மூளையிலிருந்து தேவைப்படுகிறது. மூளையின் அந்த அனுமதி இயக்கம் அனுமதித்தால் மட்டுமே, இச்சா சக்தி, இயக்கமாகவோ செயலாகவோ வெளிப்பட சாத்தியம் உண்டு. ஆனால் இயற்கையின் விதிப்படி, எந்த வெளிப்பட்ட சக்தியும, எத்தகைய ஒரு இயக்கத்தையும் உருவாக்காமல் அழிய முடியாது. ஆகவே மூளைக்கு உள்ள சாத்தியங்கள், அந்த இச்சைக்கான இயக்கத்தை அனுமதிப்பது அல்லது, அந்த இச்சையை வேறு சாத்தியமான வழிகளில் திரும்பிச்செல்ல அனுமதிப்பது. அதாவது மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களின் விதியை இயற்கையே நிர்ணயிக்கிறது, உயிர்களினுள் இச்சா சக்தியை வெளிப்படுத்துவதுடன் அந்த இச்சையை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம். ஆனால், மனித உயிரில் இச்சையை உருவாக்குவது மட்டுமே இயற்கை, அந்த இச்சா சக்தி ஊடுருவும் பாதையை முடிவு செய்வது, அந்த மனித உயிரின் செயல். அதாவது, மனிதனின் விதியை அந்த தனிப்பட்ட மனிதனே அமைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தை இயற்கை ஒவ்வொரு மனித உயிருக்கும் அளித்துள்ளது.

இச்சை நம் உணர்வுதளத்தில் தோன்றினால், அந்த இச்சைக்கான அனுமதி இயக்கமும், இச்சையின் விளைவான இயக்கமும் நம் உணர்வு தளத்திலேயே நடக்கும். இந்த இயக்கங்களில், காரணமும் விளைவும் காரணம் விளைவாக மாறுவதற்கான அனுமதியும் நம் உணர்வு தளத்திலேயே நடைபெறுவதால், இந்த காரண காரியங்களின் முழு இயக்கத்தையும் நாம் விரும்பினால் நம்மால் அறிய முடியும். ஆனால் நம் உள்மனம் மற்றும் ஆழ்மன நிலைகளில் உருவாகும் இச்சா சக்தியையும் அதன் இயக்கங்களையும், தற்போதைய நம் உணர்வு நிலையில், நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால், நம்மால் உணர்வுநிலையில் ஏற்படும் இந்த இயக்கங்களின் செயல்பாடுகளை விழிப்புணர்வின் மூலம் உணர முடிந்தால், உள்மன, ஆழ்மன நிலைகளில் நடைபெறும் இச்சா சக்தியின் இயக்கங்களை அனுமானிக்க முடியலாம்.

உணர்வு தளத்தில், இச்சா சக்தி, இயக்கமாக மாறுவதற்கான அனுமதி, நம் இயல்பை பொறுத்து, நமது தர்க்க புத்தியின் (Logic) மூலமாகவோ அல்லது மனக்கிளர்ச்சி நிலையின் (Emotion) மூலமாகவோ அனுமதிக்கப்படுகிறது. இதை அறிவது மிக எளிதானது. இவ்வாறே நம் உள்மனம் மற்றும் ஆழ்மன தளங்களில் உருவாகும் இச்சைகளுக்கும், நம் மூளை அனுமதி வழங்கியாக வேண்டும், அது நம் மனதிலும் வெளிப்பட்டாக வேண்டும் – அந்த இச்சை தோன்றும் மனதின் தளங்களிலேயே. நம் மனம் உணர்வு நிலையில் அனுமதி வழங்காத போது, அந்த அனுமதி யாரால் வழங்கப் படுகிறது? அது நம் உள்மனம் மற்றும் ஆழ் மனதின் உள்ளடக்கத்தால் (content) வழங்கப்பட்டிருப்பதுதான் சாத்தியம். அதாவது நம் உள்\ஆழ் மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால் மட்டுமே, அந்த தளத்தில் தோன்றும் இச்சை இயக்கமாக மாறமுடியும். இயற்கை விதிப்படி எந்த ஒரு சக்தியும் அழிய முடியாது – உரு மாற மட்டுமே முடியும். ஆகவே, நம்முள் தோன்றும் இச்சைகள், நமது மனதின் உள்ளடக்கம் அனுமதித்தால், அந்த இச்சை சுட்டும் இயக்கமாக மாறும். அல்லது அந்த இயக்கத்தை நம் உள்ளடக்கம் அனுமதிக்காவிட்டால், அந்த இச்சை, அதனுடன் தொடர்புள்ள வேறு இயக்கங்களாக மாறலாம், உள்\ஆழ் மன உள்ளடக்கத்தின் வழிகாட்டுதலுடன்.

நம் அடிப்படை இச்சைகளை நம் மனம், அதன் வெவ்வேறு தளங்களில், எவ்வாறு இயக்கமாக மாற அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே நம் வாழ்க்கையின் இயல்பு அமைந்துள்ளது. அந்த அனுமதியின் தன்மை, நம் மனதின் உள்ளடக்கத்தை பொறுத்தே அமைகிறது. ஆகவே நம் வாழ்க்கை செல்லும் திசை, நம் மனதின் உள்ளடக்கத்தால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. நம் மனதின் உள்ளடக்கமோ, நம் நம்பிக்கைகள், ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகள், நமது பயங்கள், வன்முறை இயக்கங்கள், நம்மால் அடையமுடியாத விருப்பங்கள், பொறாமைகள், இன்னும் இது போன்ற குப்பைகளாலேயே நிரம்பியுள்ளது. நாம் உண்மையிலையே மனிதர்களாக வாழ விரும்பானால், இயற்கை நமக்கு அளித்துள்ள, நம்மை விலங்குகளிலிருந்து உயர்ந்ததாக இருக்கச்செய்யும் காரணியான உணர்வுநிலையை அடைந்தாக வேண்டும். அந்த உணர்வுநிலையை பெறும் முயற்சி கூட நம்மிடமிருந்து வெளிப்படவில்லையெனில், நாம் உண்மையில் மனிதர்கள் என்னும் போர்வைக்குள் வாழும் விலங்குகளே – அந்தப் போர்வை, உண்மையிலேயே மனிதர்களாக வாழ்ந்தவர்களின் பெருங்கருணையால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது!

தொடர்புள்ள பதிவு; Desire

No comments: