Tuesday, October 4, 2011

சக்தி

நம் பிறப்பு, இருப்பு, இறப்பு ஆகிய அனைத்தின் அடிப்படையும் சக்தியே. தத்துவப்பூர்வமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இந்த உலகத்தின் இருப்பின் அடிப்படை சக்தியே ஆகும் - E = mc^2. நாம் காண்பதும், கேட்பதும், நுகர்வதும், உண்பதும், உணருவதும் அனைத்தும் சக்தியின் வடிவங்களே. ஆயினும், நம் அன்றாட வாழ்க்கைத் தளத்தில் உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. அனைத்துமே சக்தி மயமாக இருந்தாலும், சக்திக்காக இப்போதும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால், அது சக்தியின் உரிமைக்காகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாமும் சக்தியின் வடிவங்களாக இருந்தாலும், நாம் கூட சக்தியின் ஒரு வடிவாக இருந்தாலும், சக்தியின் உரிமைக்காக நாமும், நம் சந்ததியினரும் ஒருவருடன் ஒருவர் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கிறோம் – நம் வாழ்வின் முரண்பாடுகளின் உச்சம்!

உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. நம் வாழ்வின் பெரும்பகுதி, தற்போதைய வாழ்க்கைச் சூழலில், இந்த சக்தியின் வடிவங்களை சார்ந்தே உள்ளது. சக்தியின் போதாமைக்கான காரணங்கள் பல தளங்களை சார்ந்தவை. இந்த அனைத்து தளங்களையும் உணரத் தேவையான ஒரு முழுமையான பார்வையுடையவர்களாக நாம் இருந்தால், அந்த போதாமையைத் தவிர்க்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்து கொண்டிருப்போம் – அதாவது, ஒரு உலகப் போரை தவிர்க்க நம்மால் இயன்றதை செய்து கொண்டிருப்போம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ!.

உலக மக்கள் தொகை, 1960 ஆம் ஆண்டு சுமார் 300 கோடி. 1999 ஆம் ஆண்டு, சுமார் 600 கோடி. இன்று, சுமார் 700 கோடி. 2050 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கப் படுவது, சுமார் 900 கோடி. `1990 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 18 வருட காலத்தில், உலகின் தனி மனித சக்தியின் நுகர்வு சுமார் 10% அதிகரித்துள்ளது. அதாவது, சராசரியாக வருடத்திற்கு 0.53%. இதே கால கட்டத்தில், உலகின் மக்கள் தொகை சராசரியாக வருடத்திற்கு 1.8% அதிகரித்துள்ளது.

இந்த புள்ளி விவரத்தை, ஒரளவேனும் நம்மால் கிரகித்துக் கொள்ள முடிந்தால், நம் முன் உள்ள பிரச்சினையின் விஸ்வரூபத்தை நம்மால் அனுமானிக்க முடியலாம். பிரச்சினை உலகின் உபயோகப்படும் சக்தியின் தேவை மட்டுமல்ல – எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை, மனித உபயோக சக்தியாக மனிதனால் மாற்றப்படும்போது, அந்த மாற்றம், பூமியின் சமன்நிலையில் உருவாக்கும் குலைவும், அந்த சமன்நிலைக் குலைவால் உலக வாழ்க்கையில் (மனிதனின் மற்றும் பிற உயிர்களின் – தற்கால மற்றும் சந்ததியினரின்) வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஏற்படப் போகின்ற எதிர்மறை விளைவுகளும்!

இன்று நம் வாழ்க்கையின் தரம் நிச்சயமாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், சந்தேகமே இல்லாமல், நம்மிடம் உள்ள சக்திதான் – நாம் நுகரும் மற்றும் நாம் உணரும் சக்திகள். ஆனால் நாம் உபயோகிக்கும்\நுகரும் மற்றும் உணரும் சக்திகள், தொடர்ச்சியாக, நம் இருப்பையே அழிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் இல்லாமல், கிடைத்துக் கொண்டிருக்குமா என்பதே நம் கேள்வியாக இருக்க கூடும் – இந்த பிரச்சனையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தால்!

நாம் உணரும் சக்தியை – நம்முள் இருக்கும் சக்தி, நாம் அறியும்போது, நம் படைப்பூக்கத்தை அறியத் தொடங்குவோம். இந்த படைப்பூக்கம் நம்மை முற்றிலும் வேறான தளத்துக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடும். இங்கு சக்தியின் நுகர்வு இல்லை – அதன் உணர்வு மற்றும் இயக்கம், அந்த சக்தியின் இருப்பின் வடிவில் மட்டுமே. எனவே அதன் மூலம் எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த சக்தி, நம் வாழ்வின் தரத்தை உள்முகமாக உயர்த்துகிறது, எதிர்மறை விளைவுகள் எதுவும் இல்லாமலே!

ஆக நம் முன் உள்ள கேள்வி, நம் உபயோகத்தின்\நுகர்வின் மூலம், உலகின் இருப்பின் சமன்நிலை குலைவிற்கு, நாமும் எவ்வாறு ஒரு காரணியாக இருந்து, அதன் எதிர்மற் விளைவிற்கும் எவ்வாறு பொறுப்பேற்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதும், இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க நம்மால் செய்யக் கூடியது என்ன என்பதுமாகவே இருக்க கூடும். நம்மால் சக்தியின் நுகர்வை தவிர்க்க முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வாறு செய்வோமெனில் நம்மால் சமூகத் தளத்தில் வாழவும் முடியாது. ஆனால் சக்தியை வீணாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும் – நமது தேவைகளையும் நுகர்வையும் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்.

உலகில் உள்ள எந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை சார்ந்தே வாழ முடியும். எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு உயிரினத்தை அல்லது உயிரினத்தால் உருவாக்கப்பட்டதையே உணவாக கொள்ள முடியும். தாவரங்களும், நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலமே தங்கள் உணவைப் பெறுகின்றன. மனிதனின் உடலையும், உயிருடன் இருக்கும்போதே, பல நுண்ணுயிரிகள் உணவாக்கிக் கொண்டிருக்க கூடும். ஆகவே உலகின் சமன்நிலை குறையாமல் இருக்க, இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் சமன்நிலையும் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மனித இனம் தன் அறிவின் மூலம், இயற்கையிலிருந்து ஓரளவுக்கு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், இயற்கையின் தன்னைத் தானே சமன் செய்யும் இயக்கங்களிலிருந்தும், தன்னை ஒரு எல்லைவரைக்கும், விடுவித்துக் கொண்டுள்ளது. உலக மக்கட்தொகை பெருக்கத்துக்கு, இது ஒரு வெளிப்படையான காரணம். ஆனால், இயற்கையின் அழிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு நாம் இயற்கையை நமது நுகர்வுக்காக அழிப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை, அல்லது விலக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இயற்கை அழிவிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு, மனித விதைகள் முளைப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை. இதன் மூலம், இயற்கையின் சமநிலை குலைவிற்கு நாமே காரணமாயிருந்திருக்கிறோம்.

கட்டுப்பாடுகளற்ற மக்கட்தொகைப் பெருக்கத்தால் உயிரினங்களின் சமமின்மை ஒரு புறமிருக்க, மனித இனத்தின் நுகர்வும், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது நுகர்வு, தேவைகளிலிருந்து ஆடம்பரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், நம் நுகர்வுக்கு அடிப்படைத் தேவை சக்தி – உபயோகப்படுத்தும் வடிவில் உள்ள சக்தி. நம் நுகர்வு, தேவையை அடிப்படையாக கொண்டிருக்குமானால், அந்த நுகர்வை நம்மால் தடுக்க முடியாது. அதற்கு தேவையான சக்தியை நாம் நிச்சயமாக பெற்றே ஆக வேண்டும் - அதனால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும். அந்த விளைவுகள், பெரும்பாலும், இயற்கையால் சமன் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஆனால் நம் நுகர்வின் பெரும் பகுதி ஆடம்பரத்திற்காக மாறும்போது, உபயோக வடிவில் உள்ள சக்தியின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் எதிர் விளைவுகளை, பேரழிவுகள் இல்லாமல், இயற்கையால் சமன் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

தற்போது உலக அளவில் மின் சக்தியின் பெரும்பகுதி நிலக்கரி(40%), எண்ணை(5%), இயற்கை வாயு(21%) மற்றும் கதிரியக்க அணுக்களின்(13.5%) மூலமே பெறப்படுகிறது. இது தவிர உலகின் இயங்கு சக்தியில் (வாகனங்கள்) பெரும் பகுதி எண்ணையிலிருந்து பெறப்படுகிறது. இந்த புள்ளி விபரம், நம் ஆடம்பரத்திற்காக நாம் எத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கலாம். உலகின் நிலக்கரி இருப்பில் பெரும் பகுதி அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. அந்த நிலக்கரியை உபயோகப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்யப்படுவது, கரியமில வாயுவை உணவாக கொள்ளும் அந்த காடுகளை அழிப்பதே. பின்னர் நிலக்கரியை எரித்து, பெருமளவு கரியமில வாயுவை வெளியிட்டு, உபயேகப்படுத்தும் சக்தியாக்குகிறோம். காரியமில வாயுவை உண்ணும் காடுகளை அழித்ததன் மூலம், இயற்கையின் சமநிலையை உருவாக்கும் ஒரு காரணியை நாமே அழித்து விட்டோம்.

அடுத்தது அணு சக்தி. மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் வந்து விட்டன. இருப்பினும், மற்ற எந்த எந்திரங்களைப் போலவே அணுஉலையும் விபத்துக்கான ஒரு குறைந்தபட்ச நிகழ்வாய்ப்பு உள்ளதாகவே இருக்கும். அவ்வாறு எற்பட்டால் அந்த பகுதி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகி விடும். மேலும் கதிரியக்க அணுவிலிருந்து உபயோகப்படுத்தும் சக்தியை பிரித்தெடுத்த பின்னும், அந்த அணுக் கழிவுகள் நம்மால் உபயோகப்படுத்த முடியாத சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அணுக்கழிவு மேலாண்மையில் ஏற்படும் எந்த குளறுபடிகளும், அது வெளியிடும் உபயோகப்படுத்த முடியாத சக்தியின் மூலம் இயற்கையில் சமநிலையின்மையை உருவாக்கலாம்.


ஆக அன்றாடம் நம் தேவை மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடும் சக்தியின் பெரும்பகுதி, இயற்கையின் சமன்நிலையை தொடர்ச்சியாக குலைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே பெறப்படுகிறது. நம் வாழ்க்கை இன்னும் அதிக பட்சம் 80 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒருவேளை இந்த இயற்கையின் சமன்நிலை குலைவு நம் வாழ்க்கை முடியும்வரைக் கூட நம்மை விட்டு வைக்கலாம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் இயற்கையின் சமன்நிலை குலைவை எந்த வழியிலாவது இயற்கை சமன் செய்தாக வேண்டும். அந்த சமன் செய்யும் இயக்கம், நம் வாழ்க்கை காலத்தில் இல்லாவிட்டாலும், மிக நெருங்கிய நம் சந்ததியினரின் காலத்தில் நிச்சயமாக ஏற்பட்டாக வேண்டும் – அந்த இயக்கம், உலகின் ஒரு பேரழிவாகவே இருக்க முடியும். ஆம், நம் சந்ததியினருக்கு நம் ஆடம்பரம் மற்றும் பேராசைகளின் மூலம் செல்வத்தை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் அழிவையும் அவர்களுக்காக தினம் தோறும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்!

நம்மால் என்ன செய்ய முடியும்? பொருள்களில் உள்ள சக்தியை உபயோகப்படுத்தும் வடிவிலுள்ள சக்தியாக மாற்றி, அதை மீண்டும் நுகரும் பொருளாக மாற்றி, நுகர்ந்து கொண்டிருப்பது நாமேதான் – நாமும் அங்கத்தினராக உள்ள நம் சமூகமத்தின் மூலம். சமூகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த சமூக மனத்தின் இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்க முடியும். அந்த சமூக மனத்தின் இச்சையை முடிவு செய்வது, சமூகத்தின் துளிகளாகிய நம் தனிமனங்களின் இச்சைகளே. நம் ஆடம்பரங்கள் மூலம் நம் சந்ததியினரின் அழிவை நாம் தினம் தோறும் சேமித்துக் கொண்டிருப்பதை உண்மையிலேயே நம்மால் உணர முடியுமானால், நம் மனதினுள், நம் ஆடம்பரத்தைக் குறித்து மிகப்பெரிய மாறுதல் ஒன்று நிகழக் கூடும். அந்த நிகழ்வு, அதன் வீரியத்தைப் பொறுத்து, சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். எந்த ஒரு மாற்றமும் தனி மனித மனதில் உருவாகிய பின்பே சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். அந்த சமூக மாற்றம் ஏற்பட சில ஆண்டுகளோ, சில பத்தாண்டுகளோ, சில நூற்றாண்டுகளோ அல்லது பேரழிவு ஏற்படும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!



No comments: