Friday, December 30, 2011

பக்தி, ஆன்மீகம்

தற்போதைய காலகட்டத்தில் பக்தி என்பது ஒரு பாவனையாக மாற்றப்பட்டு, அந்த பாவனையுடன் இருப்பதே ஆன்மீகம் என்னும் ஒரு மாயை மிகப் பரவலாக உள்ளது. மேலும் இன்றையப் பொதுத் தளத்தில் பக்தி என்னும் கருத்து மிகவும் திரிவடைந்து உள்ளது – கடவுள் என்னும் கருத்தை நோக்கி வேண்டுதல்களை முன் வைப்பது அல்லது கடவுள் என்னும் கருத்தை நோக்கி சேவைகள் செய்வது. ஆனால் ஆன்மீக தளத்தில் பக்தி என்பதன் அர்த்தம் முற்றிலும் வேறானதாகவே இருக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும், ஆனால் நாம் இழந்துவிட்ட உணர்திறனை வீரியத்துடன் வெளிக்கொண்டு வரும் கருவி. பக்தியின் உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாவிட்டால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை – அது ஒரு உளவியல் அணிகலனாக மட்டுமே இருக்க முடியும், ‘நான்’ என்னும் கருத்தை மெருகூட்டுவதற்காக!


பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.

நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.

ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!

நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.

வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!

நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.

வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.

நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!

No comments: