சாதாரண மனநிலையில் வெறுமை என்னும் சொல் பெரும்பாலும் எதிர்மறையான மன அதிர்வுகளையே உருவாக்க கூடும். ஆனால் எப்போதாவது நாம் முழுமையான வெறுமையை எதிர் கொள்ள நேரிட்டிருந்தால் வெறுமையின் எதிர்மறை அர்த்தத்தை கடந்து சென்றிருப்போம். வெறுமை என்பதே இருப்பின் உச்ச நிலை என்பதையும் அறிந்திருப்போம். அந்த அறிதல், நம் ஒவ்வொரு செயலையும், அந்த வெறுமையை நோக்கி நம்மை செலுத்தும் உந்துதலாக மாற்றக்கூடும். எனில் அந்த வெறுமையின் முதல் அநுபவத்தை எவ்வாறு உணர்வது? அந்த முதல்அநுபவமே நம்மை ஆன்மீகத் தளத்தினுள் உந்திச்செல்ல போதுமானதாக இருக்க கூடும்.
மனித இனத்தின் மன இயக்கங்களின் சாத்தியங்களே நம்மை பிற விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த மன இயக்கங்களே நம் எல்லா விதமான துன்பங்களுக்கும் காரணம். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நமக்கு கிடைத்த வரமும் சாபமும் – மனம் நமக்கு வரமா சாபமா என்பது நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தெரிவைப் பொறுத்தது! ஆம், நம் மனதையும், அதன் மூலம் நம் வாழ்க்கையையும் வரமாக ஏற்றுக் கொள்வதோ அல்லது சாபமாக்கி துன்பப்படுவதோ முழுக்க முழுக்க நம்மால் மட்டுமே. நம் மனதையும் வாழ்க்கையையும் வரமாக உணர நேரிட்டால் அதற்காக கடவுள் என நாம் கருதும் ஒன்றிடம் நன்றி கூறுவதோ அல்லது சாபமாக உணர நேரிட்டால், அதே கடவுளிடம் வருந்துவதோ, அதன் ஆழ் நிலையில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்க கூடும். ஆனால், நம் எளிய மன நிலையில் இந்த இரண்டுக்குமே தேவை இருக்கலாம் – இங்கு முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது, நம் மன நிலைக்கும் கடவுள் என்னும் கருத்துக்குமான தொடர்பையே. ஒருவேளை அந்த தொடர்பை, நம் சாதாரண மன நிலையில், நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது, அந்த தொடர்பை அறிய நேரிட்டால் கடவுள் என்னும் கருத்துக்கான தேவை இல்லாமல் போகலாம்.
நம் அறிவின் எல்லை, நம் மன இயக்கங்களின் எல்லையே. நம் உலகத்தின் எல்லை, நம் அறிவின் எல்லையே. நம் மனதால், நாம் இருக்கும் கிராமத்தை அல்லது நகரத்தை தாண்டிச் செல்ல இயலாவிட்டால் நம் உலகமும் நாம் இருக்கும் கிராமம் அல்லது நகரம் மட்டுமே. நம்மால் பூமி முழுவதையும் உணர முடிந்தால், நம் உலகின் எல்லை, பூமியின் எல்லைவரை நீளும். நம்மால் சூரிய குடும்பத்தை அனுமானிக்க முடிந்தால், நம் உலகம் சூரிய குடும்பத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். பால் வெளி (Milky way galaxy) நம் அறிவினுள் நுழைய நேரிட்டால் நம் உலகமும் பால் வெளியை அடக்கியதாக இருக்கும். நம் மனம் பால் வெளியையும் மற்ற கேலக்ஸிகளையும் தாண்டி நிறைந்துள்ள வெற்றிடத்தை, வெறுமையை உணர முடிந்தால், நம் உலகமும் அந்த முடிவில்லாத வெறுமையை உள்ளடக்கியதாக இருக்கும். நாம் அறியும் உலகங்கள் முழுவதும் வெற்றிடத்தில், வெறுமையில் மிதக்கும் சிறு துகள்களே என்பதை அறிய நேரிட்டால், ஒருவேளை, நம் மனதில் நிறைந்திருக்கும் வெறுமையையும் நம்மால் உணர முடியலாம்.
நம் மனதின் வெறுமையை நிரப்புவது பெரும்பாலும் நம் எண்ணங்களும் நினைவுகளும் மட்டுமே – அத்துடன் நம் உணர்வுகளும்! மனம் தர்க்கங்களாலும், தர்க்கங்களின் அடிப்படையான நினைவுகளாலும், தர்க்கத்தின் வெளிப்பாடுகளான எண்ணங்களாலும் நிரம்பி இருக்கும்போது, அதன் உணர்வு நிலை மிக மிக குறைவானதாக இருக்கலாம். அதாவது, மனம் நம் வாழ்க்கையை உணர முடியாமல் போகலாம் – நாம் எதற்காக வாழ்க்கையை உணர வேண்டும்? வாழ்தல் மட்டுமே போதுமானதாக இருக்க கூடாதா? ஆம், வாழ்தல் மட்டுமே போதுமானது. நம் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க, அந்த வாழ்க்கையை உணர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் வாழ்க்கையை உணரும் சாத்தியத்துடன் படைக்கப் பட்டுள்ளோம். வாழ்க்கையை உணரும் அந்த சாத்தியத்தை பயன் படுத்த வேண்டுமா இல்லையா என்னும் தெரிவிலேயே, நம் வாழ்க்கை வரமா சாபமா என முடிவு செய்யும் தெரிவும் அடங்கி உள்ளது.
நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் சங்கிலித் தொடர் போல முடிவில்லாததாக இருந்தாலும், ஒவ்வொரு எண்ணங்களுக்கு நடுவிலும் சிறு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி, நம் மனதில் அடங்கியுள்ள அளவற்ற வெறுமையின் சிறு துளியே. நம் உணர்வுநிலை, இந்த சிறு இடைவெளியை எப்போதாவது உணரத் தேவையான தன்மையுடன் (Sensitivity) இருந்திருக்குமானால், அந்த வெறுமையின் இயல்பை நாம் அறிந்திருப்போம். அந்த அறிதலே, நம் எல்லாவிதமன செயல்களையும், வெறுமையை நோக்கிய நம் தேடுதலின் உபகரணமாக மாற்ற கூடும். அளவற்ற வெற்றிடத்தில் இந்த உலகின் துகள்கள் மிதப்பது போல, நம் மனதின் வெறுமையில் எண்ணங்களும், நினைவுகளும் மிதந்து கொண்டிருக்க கூடும். அந்த வெறுமையை நம்மால் உணர முடிந்தால், நினைவுகளும் எண்ணங்களும், நம் மனதினுள் மிதக்கும் சிறு துகள்களைப் போல மாறக்கூடும். அப்போது எந்த நினைவுகளாலும், எந்த எண்ணங்களாலும் நம்மை துன்புறுத்த முடியாது. இந்த நிலையில் நம் மனதின் அளவற்ற வெறுமையும், அந்த வெறுமையை கொண்டிருக்கும் மனமும், நமக்கு கொடுக்கப் பட்ட வரமாக கூடும்.
நம் இருப்பை, நம் மனதின் இருப்பை, மனதினுள் நிரம்பியுள்ள வெறுமையின் இருப்பை வரமாக அறிய முதல் தேவை, நம் எண்ணங்களின் இடைவெளியையும், அந்த இடைவெளியில் நிரம்பியுள்ள வெறுமையையும் அறிவதே. நம் மனம், அதன் இயல்பான உணர்திறனை திரும்ப பெறுவதன் மூலமே, நம்மால் வெறுமையின் முதல் துளியை சுவைக்க முடியலாம். மதங்களும், கடவுள்களும், நம்பிக்கைகளும், சடங்குகளும் அந்த உணர்திறனை மீட்டெடுக்க உதவலாம். அவ்வாறு உதவாத மதங்களாலும், கடவுள்களாலும், நம்பிக்கைகமளாலும், சடங்குகளாலும் மனிதனுக்கு எந்த விதமான ஆன்மீக உபயோகமும் இல்லை. அந்த உணர்திறனை திரும்ப பெற்றால், அதன் பின்னரும், இந்த கருத்துகளுக்கு எந்த தேவையும் இல்லை. ஆக, கடவுளும், அதைச் சார்ந்தவையும் ஆன்மீகத்தின் சில படிகளை தாண்டி செல்வதற்கு மட்டுமே – அதுவும், அந்த உந்துதல் தேவைப்படும் தடைகள் நம் ஆன்மீகப் பாதையில் இருந்தால் மட்டுமே.
மனதின் உணர் திறன் அதிகரிக்க வேண்டுமென்றால், மனதில் உலவும் எண்ணங்கள் குறைய வேண்டும். அல்லது, உணர்வையும் மனம் அறியும் அளவிற்கு மனம் விரிவடைய வேண்டும். அதாவது, மனதில் நிகழும் எண்ணங்களை குறைப்பதன் மூலம் அல்லது மனதின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் அல்லது இந்த இரண்டின் மூலமும் நம் உணர் திறனை அதிகரிக்க முடியும். நம் மனதின் பரப்பு என்பது, நம் அறிவின் பரப்பே. எனவே, அறிதலின் மூலமும் நம் மனதின் பரப்பை அதிகரித்து, அதன் மூலம் நம் உணர் திறனையும் அதிகரிக்க முடியும். ஆனால், அறிவின் மூலம் பெறும் மன விரிவு, எண்ணங்களையும் அதிகரிக்க கூடும் – இதன் மூலம், உணர் திறனுக்கான சாத்தியம் மனம் அடைந்த விரிவினுள் இல்லாமல் போகலாம். நம் அறிவு, அதன் மூலம் பெறும் மன விரிவை, புதிய எண்ணங்கள் நிரப்புகிறதா அல்லது உணர்வு நிரப்புகிறதா என்பது நாம் பெறும்
அறிவின் இயல்பை சார்ந்து கூட இருக்கலாம்.
நம் மனதில் நிரம்பியுள்ள, நம்மால் அளவிட முடியாத வெறுமையின் சிறு துளியை கூட அநுபவிக்க இயலாத இயலாமையின் கொடும் பிடியில் நாம் இருக்கிறோம். ஆனால் அந்த வெறுமையை அறிவதற்கான எண்ணற்ற சாத்தியங்கள் நம் மனதினுள்ளேயே உள்ளன. அதைப் போலவே அந்த வெறுமையிலிருந்து நம்மை துரத்தும் சாத்தியங்களும் நம் மனதினுள் நிரம்பியுள்ளன. இந்த முரண்பாடுகளின் நடுவில், நம்மால் இயன்றது, நம் அறிவை இடைவிடாமல் பெருக்கி அதன் மூலம் நம் மனதின் பரப்பையும் இடைவிடாமல் அதிகரிப்பது மட்டுமே. நம் மனம் இடைவிடாமல் விரிவடையும்போது, எங்கேயாவது ஒரு புள்ளியில், எண்ணங்கள் உணர்வுக்கு வழி கொடுத்து, சிறிதளவு விலக நேரிடலாம். அந்த விலகலே, நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment