புற உலகில் நாம் எத்தனை உறவினர்கள் புடை சூழ இருந்தாலும், எத்தனை நண்பர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்தாலும் அகத்தளவில் நம்மில் பெரும்பாலானவர்கள் மிக மிக தனிமையானவர்களே.அந்த தனிமையை அறிவது, ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலைப்படியாக இருக்க கூடும். அந்த தனிமையை அறிந்தவர்களின் புற உலகப் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்க கூடும் – சமூக இயக்கத்தின் அடிப்படையை அறிவதன் மூலம். அகத்தனிமை என்றால் என்ன?
நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.
இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.
அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.
புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.
மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.
நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment