Friday, December 2, 2011

மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்

ஆன்மீகம் என்பது மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் இவை போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறானது. ஆனால் மதங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆன்மீகம் முளை விடுவதற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்க கூடும். ஒரு ஆன்மீகவாதி எப்போதுமே மதவாதியாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் மதங்களாலும் அதைச் சாரந்த நம்பிக்கைகாளாலும் குறியீடுகளாலும் பண்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலுருந்துதான் ஆன்மீகவாதி வெளிப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம்.

மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.

ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.

மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.


தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.

அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.

No comments: