சிறகு இணையப் பத்திரிகையில் 25-12-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.
எழுத்தறிவை
அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின்
பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல்
வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட
வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து
விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.
வாசிப்பிற்குத்
தேவையான முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறதா? முறைப்பட்ட கல்வியைக் கடந்த வாசிப்பை
சமூகம் ஊக்குவிக்கிறதா? இல்லை என்றே தோன்றுகிறது - முறைப்பட்டக் கல்வியில் அளிக்கப்படும்
வாசிப்பு நுண்தகவல்களை மிக அபூர்வமாகவே அளிக்கிறது.. வாசிப்பை ஊக்குவிக்கும் எந்தக்
காரணிகளும், இந்தியாவில் பெரும்பாலான கல்வித்துறைகளில் இல்லை. எனவே வாசிப்பை இயல்பாக்கிக்
கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இதையும் கடந்து, சுய விருப்பங்களின்
மூலம் வாசிப்பவர்களும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புகளையை நாடுகிறார்கள். அல்லது
வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வாசிப்புகள். காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலத்தில்,
பொழுது போக்குகளுக்குக் குறைவில்லை. காட்சி ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில்
பொழுதுபோக்குக்காக வாசிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பொழுதுபோக்குகளுக்கு குறைவில்லாத
இந்தக் காலத்திலும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்பு பரவலாக இருப்பது ஒரு முரணாகவே தெரிகிறது.
ஆனாலும் வாசிப்பு நிகழ்கிறது என்பது ஊக்கமளிப்பதாக உள்ளது. எளிதான உழைப்புத் தேவையில்லாத
பொழுதுபோக்குகள் மலிந்திருக்கும் சமூகவெளியில், குறைந்தப்பட்ச உழைப்பையாவது கோரும்
வாசிப்பு நிகழ்வது, சமூகத்தின் உள்மனதில் வாசிப்பு இன்னும் முக்கியத்துவத்துடன் உள்ளதை
அறிவிக்கிறது. வாசிப்பு என்னும் இயக்கம் சமூக மனதின் உள்ளடுக்குகளிலிருந்து அழிவதற்கு
முன் அதை மனதின் மேலடுக்கிற்கு, எல்லா எதிரியக்கங்களையும் கடந்து கொண்டு வரவேண்டியிருக்கிறது.
எனெனில் எழுத்தறிவின் அடிப்படைக் காரணி வாசிப்பு. வாசிப்பு அழியும் பட்சத்தில் எழுத்தறிவும்
எனவே கல்வியறிவும் சமூகத்திலிருந்து விலகி விடும். எனவே வாசிப்பை ஊக்குவிக்காத வெறும்
முறைசார்ந்த கல்வி, நெடுங்கால நோக்கில் கல்வி என்னும் இயக்கத்தை அழித்துவிடவும் கூடும்.
வெறும் பொருளாதார நோக்கங்களை மட்டும் கொண்டிருக்கும் இன்றைய கல்வியின் நிலை, கல்வியழிவு
தொடங்கி விட்டது என்றே எண்ண வைக்கிறது.
வாசிப்பு
அறிதலுக்கான மிக முக்கியமான கருவி. ஒருவரின் அனுபவம், வாசிப்பின் மூலம், வாசிப்பவரின்
அனுபவமாக மாற்றப்படுகிறது. அது அறிவியல் அனுபவமாகவோ கலை அனுபவமாகவோ வரலாற்றனுபவமாகவோ
அல்லது வேறு பிற அறிதல்கள் மூலம் நிகழ்ந்த அனுவங்களாகவோ இருக்கலாம். பிற அனுபவப் பரிமாற்ற
முறைகளை ஒப்பிடுகையில் வாசிப்பு குறைவான வேகத்தில் நிகழ்வதாலும் இத்தகைய அனுபவப் பரிமாற்றத்தில்
வாசிப்பவரின் கற்பனைக்கு போதுமான இடம் மற்றும் நேரம் இருப்பதாலும், வாசிப்பின் மூலம்
நிகழும் அறிதல், பிற எந்த விதமான அறிதல்களை விடவும் செறிவுள்ளதாக நிகழ்கிறது.
கல்வியறிவுள்ள
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், மிகமிக சிறுபான்மையிரிடம் மட்டும்தான் வாசிப்பு இன்று
எஞ்சியிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் தனித்த பார்வையில், வாசிப்பை நோக்கி ஒரு சாரர்
தொடர்ந்து நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று வாசிப்பை நோக்கி நகர்பவர்கள்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அளவற்ற பொழுதுபோக்கிகளைத் தவிர்த்துக் கொண்டே செல்ல
வேண்டியிருக்கிறது. அதாவது இன்றைய தேதியில் வாசிப்பை நோக்கி நகர்பவர்கள், முழு விருப்பத்துடன்தான்
அங்கு செல்கிறார்கள். பிற பொழுதுபோக்கிகள் அவர்களைக் கவராததால் அல்லது தங்களின் சுய
தேடுதல்களுக்காக அத்திசையில் நகர்கிறார்கள். எனவே வாசிப்பின் தரம் நிச்சயமாக உயர்ந்திருக்க
வேண்டும். அதன் மூலம் வாசிக்கக் கிடைப்பவைகளின் எண்ணிக்கையும் தரமும் கூட உயர்ந்திருக்க
வேண்டும்.
வாசிப்பின்
அவசியம் என்ன? அது யாருக்குத் தேவை? அன்றாட வாழ்க்கைச் சுழலில் முற்றிலும் நிறைவுற்றிருப்பவர்களுக்கு
வாசிப்பு தேவையற்றது. நிறைவுற்றவர்களுக்கு தேடுதல் என ஒன்று இருக்க வாய்ப்பில்லை. தேடுதலற்றவர்களுக்கு
வாசிப்பும் ஒரு பொழுதுப்போக்கு என்பதைக் கடந்து வேறெதுவும் இருப்பதில்லை. பொழுதுபோக்கிகள்தான்
அளவற்று உள்ளனவே. அத்துடன் வாசிப்பும் எதற்கு? ஆனால் வாழ்க்கையில் ஏதேனும் தருணத்தில்
வாழ்க்கைச் சுழலில் சலிப்படைந்தால், பழகிய வாசிப்பு அவர்களை மேலெடுத்துச் செல்லலாம்.
அவ்வகையில் வாசிப்பு அனைவரும் பழகியிருக்க வேண்டிய முக்கியமான பயிற்சி.
வாசிப்பு
அதன் புறவய இயக்கத்தில் தகவலறிவையும் அகவய இயக்கத்தில் நுண்ணறிவையும் அளிக்கிறது. வாசிப்பின்
மூலம் இவ்விரு அறிதல்களும் நிகழ்ந்தாக வேண்டும். அவ்வாறில்லாத வாசிப்பு குறைபட்ட வாசிப்பே.
அதிலும் நுண்ணறிவை அளிக்காமல் வெறும் தகவலறிவை மட்டும் அளிக்கும் வாசிப்பு, வாசிப்பவரின்
மனதுக்குள் வெறும் எடையை சேர்க்கிறது. அவை குறுகிய கால புறவயமான பயன்களை வாசிப்பவருக்கு
அளித்தாலும், நுண்ணறிவின்றி அவற்றைக் கையாள்வது, ஆன்மீக அழிவையே ஏற்படுத்தும். ஆக வாசிப்பின்
மூலம் அடையும் நுண்ணறிவின் கூர்மைக்கேற்ப, தகவலறிவு சுமையாகவோ அல்லது சுதந்திரத்திற்கான
வழியாகவோ மாறலாம்.
வாசிப்பை
அக அனுபவமாக மாற்றிக் கொள்பவர்களுக்கு, அது தகவலறிவுடன் நுண்ணறிவையும் சேர்த்து வழங்குகிறது.
நுண்ணறிவு, நுண்ணுணர்வாக வெளிப்படுகிறது. நுண்ணுணர்வு மேலும் செறிவான அக அனுபவத்தை
வழங்குகிறது. அவ்வாறு அக அனுபவத்தை அடைய முடியாதவர்களிடம் வாசிப்பு வெறும் தகவலறிவாக
நின்று விடுகிறது. எனவே இங்கு எழும் முக்கியமான கேள்வி, ஏன் சிலரிடம் மட்டும் வாசிப்பவை
அக அனுபவமாக மாறுகிறது? மற்றவர்கள் ஏன் அந்த அக அனுபவத்தை அடைய முடியவில்லை?
வாசிப்பின்
மூலம் அக அனுபவங்களை அடைய வேண்டுமென்றால், உறைநிலையில் இருந்து வாசிப்பை அணுகாமல்,
தேவையென்றால் அந்த வாசிப்பினால் நம் இருப்பும் அகங்காரமும் புரட்டப்படுவதை அனுமதிக்கும்
நெகிழ்வுத்தன்மையுள்ள (Vulnerablity) மனநிலையுடன் அணுக வேண்டும். அத்தகைய நெகிழ்வுத்
தன்மை பெரும்பான்மையான வாசகர்களிடம் காணக்கிடைப்பதில்லை. இன்றைய கல்வியோ சமூகமோ அத்தகைய
நெகிழ்வுத்தன்மையை உருவாக்க முயற்சிப்பதில்லை. பண்பாடுகளை பண்பாட்டரசியலாக உருமாற்றும்
அரசியல் இயக்கங்கள், அத்தகைய நெகிழ்வுத்தன்மையை பண்பாட்டிலிருந்து அகற்றி விடுகின்றன.
முரண்நகையாக, பண்பாட்டிற்குள் நெகிழ்வுத்தன்மையை கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் இயக்கங்களையும்,
எதிர் அரசியல் இயக்கங்கள், நெகிழ்வுத்தன்மையை குலைக்கிறது என்னும் காரணம் காட்டி எதிர்க்கின்றன.
ஜனநாயகத்தின் எதிர்மறை இயக்கங்களில் இதுவும் ஒன்று. அவற்றை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்!
அவற்றைக் கடந்து சென்றுதான் நம் நுண்ணறிவை நிலைநிறுத்தவும் வேண்டும்! நம்மால் அவ்வாறு
கடந்து செல்ல முடிந்தால், ஜனநாயகம் தன்னைத்தானே மறு ஆக்கம் செய்து பண்பாட்டிலிருந்து
அரசியலை விலகியிருக்கச் செய்யலாம்.
வாசிப்பால்
நுண்ணறிவை அடையும் மனம், மேலும் செறிவான வாசிப்பை இயல்பாகவே நாடும். எனவே வாசிப்பவற்றின்
தரமும் வாசிப்பின் தரமும் தொடர்ந்து கூர்மையை அடையும். ஆனால் நெகிழ்வுத்தன்மையில்லாத
வாசிப்பு, நுண்ணுணர்வுகளை, எனவே நுண்ணறிவை அழித்து விடவும் கூடும். இந்த அழிப்பு, வாசிப்பவரின்
அறிதலில் வராமலே நிகழும். வாசிப்பவரின் உறைநிலையும், அதற்குக் காரணமான அகங்காரமும்,
இழக்கும் நுண்ணறிவையும் நுண்ணுணர்வுகளையும் வாசிப்பவரின் கவனத்திலிருந்து விலக்கி வைக்கும்.
இங்கு
நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது என்பது, வாசிப்பவை அனைத்தையும், எவ்வித கேள்விகளுக்கும்
உட்படுத்தாமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வது என்பதல்ல. அதே நேரத்தில், கேட்கும் கேள்விகளுக்கான
விடைகளை வாசிப்பவரின் முன்முடிவுகளுக்கேற்ப அடைவதும் அல்ல. மாறாக வாசிப்பவை முன்வைக்கும்
கேள்விகளை, முன்முடிவுகள் உருவாக்கும் உறைநிலையிலிருந்து விடுபட்டு, நெகிழ்வுத்தன்மை
வழங்கும் சுதந்திரமான பார்வையுடன் வாசிப்பு அளிக்கும் தரவுகளையும் தர்க்கங்களையும்
பரிசீலனை செய்வதன் மூலம் பெறுவது. இது அத்தனை எளிதான ஒன்றாக இருந்தால், வாசிக்கும்
அனைவரும் வாசிக்குந்தோறும் கூர்மையடையும் நுண்ணறிவுடன் இருந்திருப்பார்கள். ஆனால் வாசிக்கக்
கிடைக்கும் வாசிப்புகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாசிப்பவர்களில் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையினர், நுண்ணறிவை இழந்து வருவதைக் காட்சிப்படுத்துகிறது. காரணம், பண்பாட்டரசியல்
பண்பாட்டில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையை இல்லாமல் செய்துவிட்டதால் இருக்கலாம்.
பண்பாட்டரசியல்
இன்று பண்பாடுகளை குலைத்து வருகிறது. கலைஞர்கள், அவர்களின் கலைகளுக்காக பண்பாட்டரசியலின்
மூலம் எதிரிகளாக்கப்பட்டு அவர்களின் கலையையும் சேர்த்து எதிர்க்கப்படுகிறது. இன மத
அடையாளங்களை பயன்படுத்தி குறுகிய அரசியல் லாபங்களுக்காக பண்பாட்டரசியலை முன்னெடுப்து,
சமூகத்தின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு நெகழ்வுத்தன்மையை பண்பாட்டிலிருந்து அகற்றி
விடுகிறது. அதன் மூலம் பண்பாட்டின், நாகரீகத்தின் அடிப்படையைக் குலைக்கிறது. இதன் தொடர்ச்சியாக,
வாசிப்பிலும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் ஆகி விட்டது.
எல்லா
தடைகளையும் மீறி, எல்லா காலகட்டங்களையும் போல. ஒரு குறுகிய வட்டம், தீவிர வாசிப்பில்
அதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பினால் அந்த
வட்டத்தை அறிவதும், அதில் சேர்வதும் இன்றைய இணைய வசதிகள் எளிமையாக்கியிருக்கின்றன.
எப்போதையும் போல, இந்தக் குறுகிய வட்டம், பண்பாட்டை குறைந்தப்பட்ச உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
சமூகம் ஒருவேளை உறைநிலையிலிருந்து விடுபட்டால், அந்த உயிர்பு முழுவீச்சுடன் கிளைவிரிக்கும்.
தீவிர
வாசிப்பில் இருப்பவர்களின் தகவலறிவு, அவற்றை உபயோகப்படுத்தும் நுண்ணறிவு, அவர்களிடம்
ஊற்றெடுக்கும் நகைச்சுவை உணர்வு, பிரச்சனைகளின் வீச்சைக் காணும் நுண்ணுணர்வு போன்றவை
பிரமிக்க வைக்கின்றன. வாசிப்புக்காக அவர்கள் செலவிடும் உழைப்பு அதைவிடவும் பிரமிக்க
வைக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் தொழிலில் வெற்றிக்கரமாக ஈடுபட்டு,
அதன்பின் இருக்கும் நேரத்தையே வாசிப்புக்குச் செலவிடுகிறார்கள்.
வாசிப்பை
எவ்விதத்திலும் ஊக்குவிக்காத கல்விக் கொள்கைகளை உடைய ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முறைசார்ந்த கல்வியின் இந்தப் பெருந்தடையைக் கடந்து, நுகர்வுக் கலாச்சாரம் கூவியழைக்கும்
எல்லாவிதமான பொழுதுபோக்குகளுக்கும் புறம்காட்டி, ஒரு கூட்டம் அறிதலுக்காக வாசித்துக்கொண்டிருக்கிறது.
இவர்களில் பெரும்பகுதியினரை பண்பாட்டரசியல் உறைநிலைக்குத் தள்ளினாலும், இன்னும் ஒரு
பகுதியினர் வாசிப்பு அளிக்கும் அறிதலின் இன்பத்தில் திளைக்கிறார்கள். அவர்களே சமூகத்தின்
உயிர். அவர்களுக்கு என் வந்தனங்கள்!
blog.change@gmail.com
No comments:
Post a Comment