Wednesday, August 24, 2016

உலகமயமாதல்

15-08-2016 அன்று சொல்வனம் இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும் இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம் குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல் அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும் உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.

முதலாவதாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் தொடர் ''பனைமரச் சாலை'' என்னும் தலைப்பில் காட்சன் சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும் பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார்.

இரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ''தி இந்து' தமிழ் நாளிதளில் வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் - அவர்கள் அனைவரும் பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ''பிரெக்ஸிட்'' என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த, கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின் விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன். இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல் (Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.

பொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம் (Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும் இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம் என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும் வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும் குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன் அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம் முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில் ''பிரெக்ஸிட்'' மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன் இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பொருளாதார உலகமயமாக்கம் என்னும் கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினைக்கிறேன். இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல் என்னும் கருத்து, காரி டேவிஸ் (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம் உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம். ''உலகம் யாவையும்'' என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும் எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 1945 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல் திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம் என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத் தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள் லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல் வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன், பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில் உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த வடகிழக்கு இந்தியாவின் வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கிருக்கும் சமூகங்களுக்கு எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டதுதான் நெடுங்காலம் வடகிழக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரும் அமைதியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக் கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல அரசியல், சமூக காரணங்களின் விளைவாக ஏற்பட்ட ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன. ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை - காரணங்கள் ஆய்வுக்குரியவை.

உலகமயமாக்கலில் என்னதான் நிகழ்கிறது? மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் - முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் - இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர! அந்த நிலையில் இயந்திரங்களுடன் மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு, இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.

இந்த நிலையில்தான் காட்சன் சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் பனைமரச் சாலை தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும் மீட்டெடுக்கும் முயற்சி - சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.
இன்று நாம் பெற்றிருக்கும் வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின் பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத் தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா?


இரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக, பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும் அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு! அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி! கனவுதான்! 

blog.change@gmail.com

No comments: